1.
கடந்தகாலத்தினதும். எதிர்காலத்தினதும் பொறிகளில் அடிக்கடி அகப்படாதவர் மிகச் சிலரே. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு, இந்தப் பூமியில் மனிதர்கள் வாழாது, தாவரங்களும், விலங்குகளும் மட்டும் இருந்தால் கடந்தகாலம்/எதிர்காலம் என்பது இருக்குமா? என்று யோசித்துப் பார்க்கலாம். அதாவது 'நேரம்' என்பதை அர்த்தமுள்ள முறையில் பேசமுடியுமா? இப்போது என்ன நேரம் என்றோ அல்லது என்ன திகதி என்றோ பேசுவதற்கு அர்த்தம் ஏதுமிருக்குமா? ஒரு மரத்திடமோ அல்லது ஏதேனும் விலங்கிடமோ, 'என்ன நேரம்?' என்று கேட்டால், அவை இந்த நேரம் என்பது இப்போதுதான் (Now), வேறென்னவாக இருக்கப் போகின்றது? என்றுதானே சொல்லக்கூடுமே தவிர, கடந்தகாலம்/நிகழ்காலத்தை முன்வைத்து காலத்தை நம்மைப்போலக் கணிக்கப் போவதில்லை.
ஸென்னில், நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் அசலான முகம் எதுவாக இருந்தது என்று ஆழமான கேள்வியொன்று இருக்கின்றது. இந்தக் கேள்வி நேரடியாகப் பதிலை அறிவற்குக் கேட்கப்படுவதில்லை. காலம்/வெளி என்கின்றவற்றை ஊடறுத்து நம்மை இந்தக் கணத்தில் இருக்க வைப்பதற்காய் நம்மிடம் கேட்கப்படுவது. இவ்வாறு கேட்பதன் மூலம் நாம் தன்னிலை உணர்தலையும் அடையமுடியும் என்று ஸென் கூறுகின்றது. இந்தக் கேள்வியுடன் தமது அசலான முகத்தைத் தேடத் தொடங்கி ஞானமடைந்தவர்களின் எழுநூறுக்கும் மேற்பட்ட கோவன்கள் (Koans) ஸென் மரபில் இருக்கின்றன .
ஒருவர் ஆறுவருடங்களில் பனி மலைகளில் தியானம் இருந்தவர் ஒருநாள் விடிவெள்ளியைப் பார்க்கும்போது ஞானமடைகின்றார். இன்னொருவர் பனியில் உறைந்துபோன கையை வெட்டும்போது ஞானமடைகின்றார். அவரே போதிதர்மரின் சீன மரபில் வரும் ஸானில் இரண்டாம் பரம்பரை ஆசிரியராக இருக்கின்றார். இன்னொருவர் தனது முகத்தின் விம்பத்தை நீரில் பார்க்கும்போது தன்னிலை அடைகின்றார். இவ்வாறு எண்ணற்ற கதைகள் அசல் முகம் எதுவாக பிறப்பதற்கு முன் இருந்தது எனத் தேடியபோது நடந்தவையென ஸென் மரபில் இருக்கின்றன.
எனக்குக் காலத்தை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் கற்பனைகள் அடிக்கடி வருவதுண்டு. அதாவது கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் தோன்றிய/தோன்றும்/தோன்றபோகும் அனைவரையும் ஒரு நேர்கோட்டுத் தெருவில் நடந்துபோகின்றவர்களாகக் கற்பனை செய்வதுண்டு. கடந்தகாலத்தில் காலமாகிப் போனவர்கள் இப்போதும் நடந்து கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது நடக்கும் நாங்கள் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் அதே பாதையில் நடமாடிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பதுண்டு.
மேலும் காலம் உறைந்து போகுமா அல்லது காலம் என்னவாகும் என்ற கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சத்திரசிகிச்சைக்காக மயக்கத்தில் ஆழ்த்தியபோது எனக்குள் எழுந்திருந்தது. சில மணித்தியாலங்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி சத்திரசிகிச்சை செய்தபோது எழுப்பியபோது, அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. எனக்கு அப்போது இந்த உலகத்தில் நிகழ்ந்தது எதுவுமே தெரியாது. அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. அந்த மணித்தியாலங்களில் எனக்கு கடந்தகாலமோ நிகழ்காலமோ, ஏன் நிகழ் என்பது கூட என் மனதுக்கு இருந்திருக்காது. அதை ஒரு 'பற்றற்ற மனோநிலை' எனச் சொல்லலாமா?
சிலவேளைகளில் ஞானமடைந்தவர்கள் இவ்வாறு ஒரு கடந்தகால/எதிர்காலமற்ற ஓர் அந்தரமான வெளியில்தான் தமது நிகழ்காலத்தைத் தரிசிப்பார்களோ என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் மீண்டும் 'மயக்க நிலையில் இருந்து மீள்வேன்' என்பதால் எவ்வித பதற்றமுமில்லாது என் சுயம் உறக்கத்திலிருந்தோ, அப்படித்தான் மரணத்தின்போதும் -இந்த வாழ்வை முழுமையாக ஏக்கங்களோ/ஏமாற்றங்களோ இல்லாது வாழ்ந்துவிட்டுப் போனால் - மரணங்கூட இப்படியான நிம்மதியான நிலையாயிருக்குமோ என்று எண்ணுவதுண்டு.
2.
எனக்குத் தெரிந்த சிலர் அவர்களுக்குத் தமது கடந்தகால வாழ்வு நன்கு தெரியும் என்று சொல்வார்கள். எனது நண்பர் ஒருவர் தான் கடந்த பிறப்பில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன் என்று உறுதியாகச் சொல்வார். அவர் எங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டாலும் ஆழமாக அவற்றை இரசிக்கத் தொடங்கி விடுவார். நான் யாரென்றோ, எங்கே இருக்கின்றேன் என்ற பின்புலமோ தெரியாமலே அவர் என்னோடு முதன்முதலாகப் பேசத் தொடங்கியதே, ஒரு வண்ணத்துப்பூச்சியை நான் எடுத்த புகைப்படத்தின் மூலந்தான்.
எனக்கும் இப்படியான பல 'பைத்தியக்காரத்தனங்கள்' இருப்பதால் அவரை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் ஒருநாள் அவரது துணைவரோடும், குழந்தையோடும் நடந்து போனபோது அந்த மரத்தைக் கண்டு நெகிழ்ந்ததைப் பற்றி என்னோடு பகிர்ந்திருந்தார். அவர்களுக்கு அது சற்று வியப்பாக இருந்ததாகவும், அந்த மரத்தை தான் அணைத்துக்கொண்டதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவும் இருந்தது என்றும் சிரித்தபடி சொன்னார்.
அவரைப் போன்றவர்கள் எளிதில் தியானத்தில் அமிழமுடிவதையும் அவதானித்திருக்கின்றேன். அவரோடு பழகிய காலங்களில் அவருக்கு அறிமுகமான ஒரு தியான நிலையத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வார் (அதன் பெயர் வேண்டாம்). அவர்கள் கடவுள் என்ற எதையும் அடையாளப்படுத்திச் சொல்வதில்லை. தியானத்தின்போது மெளனமாகச் சுவரைப் பார்த்து இருக்க வேண்டியதுதான். ஆனால் தியானம் முடிந்தபின் வெவ்வேறுவகையான பின்-தியானச் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒன்று வட்டமாக சுற்றி நடந்தபடி ஒவ்வொருவரின் முகத்தைப் பார்ப்பது.
சும்மாவே எனக்கு எவரின் கண்களை நேரடியாகப் பார்க்கும் சிக்கல் சிறுவயதுகளில் இருந்தே இருக்கின்றது. அதுவும் அறிமுகமற்ற மனிதர்களின் முகத்தை உற்று சில நொடிகள் பார்ப்பதும் பிறகு நடப்பதும் என்றால் எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால் இந்தப் பயிற்சியின்போது என் நண்பரின் முகத்தை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னையறியாமலே சிரிப்பு வந்துவிடும் (நம்புங்கள் நண்பர்களே, சும்மா பொழுதில் சிரிக்கவே அடம்பிடிப்பவனுக்கு அப்போது சிரிப்பு நிறைய வந்தது). இதையேன் சொல்கின்றேன் என்றால், தியானத்தை விட, தியானத்துக்குப் பிறகான செயற்பாடுகளில் நான் நிகழில் நிறைய இருந்திருக்கின்றேன் என்று குறிப்பிடுவதற்காகத்தான்.
3.
நாம் கடந்தகாலத்தைக் காவிக் கொண்டிருவதால், நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, எதிர்காலத்தை பற்றித் திட்டமிடுகின்றோம். ஆகவேதான் தேவையற்ற நிறைய விடயங்களைக் கற்பனை செய்து கொள்கின்றோம். ஒருவகையில் நமது கடந்தகாலம் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பாடங்களைக் கற்பிப்பதாக மனம் நினைத்துக் கொள்கின்றது.
எனது ஆசிரியரான தாயிடம் இளவயதில் சென்று இப்போது பிரான்சிலிருக்கும் மடாலயத்தை நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் Brother Phap Huu. அவர் கனடாவுக்கு தப்பிவந்த வியட்னாமிய அகதிகளின் மகன். நான் இருக்கும் நகரிலேயே வளர்ந்தவர். அவர் தாயிடம் சேரும்போது, தொடக்க காலங்களில் தான் அவ்வளவு விரைவாகவும் நிறையவும் சாப்பிடுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.
எல்லா ஸென் இடங்களைப் போல, சாப்பிடுவது கூட தாயினுடைய இடத்தில் ஒரு தியானம் போன்றது. அவ்வளவு மெதுவாகவும், அமைதியாகவும் சாப்பிடவேண்டும். இது Phap Huuவை மிகக் கஷ்டப்படுத்துகின்றது. அவர் எவ்வளவு தன்னால் முயன்றபோதும் நிதானமாகச் சாப்பிட முடியவில்லை என்கின்றார். பின்னர் அவர் இதை ஆழமாக யோசித்தபோதுதான், அது தனது பெற்றோரிடமிருந்து வந்ததென்று கண்டுபிடிக்கின்றார். போர்க்காலத்தில் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதும் முக்கியமானது. நாளைக்கு உணவிருக்குமா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக அங்கே இருக்கும். அதுவே தாங்கள் கனடாவுக்கு வந்தபோதும் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது என்கின்றார். ஒருவகையில் உணவென்பது போரின் மிச்சங்களைக் காவிக் கொண்டிருக்கின்றது; அதைக் கண்டுபிடிக்க தனக்கு நிறைய நாட்கள் எடுத்ததென்கின்றார்.
இவ்வாறு நாம் பல கடந்தகால விடயங்களை அச்சத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களாகிய நம்மில் பலர் கையில் சிறு சேமிப்பு கூட இல்லாது போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துவிட்டு, அந்த அச்சம்/எதிர்காலப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போது தமது வாழ்நாளையே பணம் சம்பாதிப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நாட்டில் ஒரளவு உழைப்புடன் எளிய வாழ்வை - நாம் யுத்ததில் இருந்ததைவிட நிம்மதியாக- வாழலாம் என்றாலும் எங்களில் பெரும்பாலானோர்க்கு அது முடிவதில்லை. எங்களில் பலர் நாளைக்கு நாம் எமக்கு விருப்பமான வாழ்வை வாழமுடியும் என்று கனவுகளுடன் இன்றைய பொழுதுகளை தமக்குரியதாக வாழமுடியாது அந்தரப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதையும் அறிவேன். இன்றில் வாழமுடியாது போனால், நாளை நமக்கு எதனைத்தான் அப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டுவரப் போகின்றது?
ஆகவே நாமெல்லோரும் 'எமது அசலான முகம் நாம் பிறப்பதற்கு முன் எதுவாக இருந்தது?' என்று கேட்டுப் பார்ப்பது நல்லது. அது நம்மை மீண்டும் மீண்டும் நிகழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த உடலும் மனமும் இந்தக் கணத்துக்குரியதே. இந்தப் பொழுதில் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றோமா அல்லது நிம்மதியும் சந்தோசமும் நாளை வந்துவிடும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கின்றோமா அல்லது கடந்தவந்த காலங்கள் பொற்காலமென ஏங்கிக் கொண்டிருக்கின்றோமா என்று நிகழில் நின்று நிதானித்துப் பார்ப்பது அனைவர்க்கும் நன்மை பயக்கக் கூடியது.
***********
(Jan 07, 2025)
0 comments:
Post a Comment