பேருந்தில், புகையிரதத்தில், புல்வெளியில் புத்தகங்களை
வாசிக்கும் பெண்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். அவர்கள் புத்தகங்களில்
அமிழ்ந்தபடி அவ்வப்போது சரிந்துவீழும் தலைமயிரை நீவிவிடும்போது நீர்வண்ண
ஓவியங்களைப் போல மாறிவிடுகின்றார்கள். அவர்களுக்கு
முன்னால் மயில்கள் தோகை விரிப்பதையும், அன்னங்கள் நீந்துவதையும், மான்கள்
துள்ளிக்குதிப்பதையும் காண்கின்றேன். நகரம்
என்னும் கட்டடக் குவியல்களினிடையே மூச்சுத்திணறும்
எனக்குள் ஒரு பெருங் காட்டை வளர்த்து,
புத்தகங்களை வாசிக்கும் அவர்களே என்னை
நீலவானில் சிறகடிக்க வைக்கின்றார்கள்.
புத்தகங்களை வாசிக்கும் பெண்ணை நேசிக்கும் ஒருவன் அந்தப் பெண்ணை மட்டுமில்லை, அவளோடு சேர்ந்து அவன் இதுவரை அறியாத உலகையும் தரிசிக்கின்றான். அப்போது அவள் மாயக்கம்பளத்தில் அவனை ஏற்றி, மந்திரவாதிகள் மறைத்து வைத்திருக்கும் ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் தாண்டி ஒரு இருண்ட குகையில் சிறு சுடரில் ஒளிரும் வாசித்தபடியிருக்கும் அருமருந்தன்ன கிளியொன்றைக் காட்டுகின்றாள். அந்த 'வாராது வந்த மாமணி'க் கிளியைக் கண்டவர்களால் பிறகு புத்தகங்களை நேசிக்காமல் இருக்கவும் முடியாது
புத்தகங்களை வாசிக்கும் பெண்ணொருத்தியைக் காதலிப்பவன், இடையில் பிரிவைச் சந்தித்தாலும், அந்தப் பெண்ணை சுடுசொல் பேசி, ஆழுள்ளத்தால் ஒருபோதும் வெறுக்க முடியாது. அவள் அழைத்துச் செல்ல புத்துலகங்களின் நிமித்தம் ஆராதிப்பவனாக மட்டுமின்றி, அவளின் மீதி வாழ்வையும் ஆசிர்வதிப்பவனாகவும் மாறிவிடுகின்றான்.
புத்தகங்களை வாசிக்கும் பெண்களே இவ்வுலகின் பேரழகிகளென உறுதியாக
நம்பும் ஒருவனை நானறிவேன். அவனது ஒவ்வொரு காதலிகளும் புத்தகங்களின் வாசிப்பாலே
அவனுக்கு அறிமுகமானவர்கள். பலருக்கு பாடல்களின் மூலம் அவர்களின் கடந்த காதல்களின்
நினைவுகள் வருவதைப் போல, இவனுக்கு தன் காதலிகள், அவர்களுக்கு மிகப் பிடித்த
புத்தகங்களினூடாக நனவிடை
தோய்தலில் இனிபவர்கள் எனச்
சொல்வான்.
இன்னொருத்தியோ நான் எவ்வளவு முக்கியமான நூலை உனக்காக வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றேன். முட்டாளே உனக்கு கொஞ்சம் கூட ரொமான்டிக்கா இருக்க தெரியாதா, தூங்கிவிட்டாயே என்று வாசித்த புத்தகத்தாலேயே அவனுக்கு அடித்ததிருக்கின்றாள். அவள் அப்போது வாசித்துக் காட்டிக் கொண்டிருந்த புத்தகம், Fifty Shades of Grey.
வேறொருத்தியோ தன் உடலை புத்தகங்களால் மட்டும் மூடி, இந்தப் புத்தகங்களின் கதையைச் சரியாகச் சொன்னால் தனது உடலைத் திறக்கும் மர்மத் தாழ்ப்பாள்கள் திறக்கும் என்று சுவாரசியமான வேறொரு பயணத்துக்கு அவனை அழைத்துச் சென்றிருக்கின்றாள்.
புத்தகங்கள் என்ன பிராண வாயுவா? அவையில்லாது உங்களால் வாழ முடியாதா என வாசிக்கும் எந்தப் பெண்ணிடம் அசட்டுத்தனமாய் வினாவாததால்தான் பெண்களில் பலர் அவனுக்கு நெருங்கிய தோழிகளாகவும் ஆகியிருக்கின்றனர் என அவன் சொல்லியிருக்கின்றான்.
நான் இப்போது இவளுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். எழுதிய
படைப்பாளியும், அதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களும் மறைந்துவிட்டது மட்டுமில்லை
காலம் கூட எங்கையோ நகர்ந்துவிட்டது. ஆனால் மூன்று தசாப்தங்களுக்கு முன் எழுதப்பட்ட
ஒரு புத்தகத்திலிருந்து கடந்தகால வரலாறு விரிகின்றது என்கின்றேன். வாழும்
மனிதர்கள் அழிவார்கள், அவர்கள் நம்பிய மாபெரும் கனவுகள் கலையலாம்., ஆனால்
நம் கைகளில் இருக்கும் புத்தகத்திலிருந்து கடந்தகாலத்து வாழ்வின் பாடல்கள்
உயிர்த்தபடியிருக்கின்றார்கள் என்றேன்.
மேலும், இந்நூலோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களோடு அதை வாசித்த என்
பதின்மத்திலிருந்து நானும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருக்கின்றேன் என இவளிடம்
வியந்து கொண்டிருந்தேன். வாசித்த அந்தப் புத்தகம், அந்தப்
படைப்பாளி சாவெய்திய காலத்தில் அதே நிலத்தில் இருந்தது, இந்தக்
கதையோடு சம்பந்தப்பட்ட முக்கிய ஒருவரைச் சந்தித்தது, 20 வருடங்களுக்கு
பின் இந்நூலை மொழிபெயர்ப்பப் போகின்றவருடன் பழகியதென, இப்போது
ஆறுதலாக இருந்து இந்த ஒவ்வொரு கண்ணியையும் இணைத்துப் பார்க்க அவ்வளவு வியப்பாக
இருக்கின்றது என்றேன்.
சிலவேளைகளில் நாம் சில விடயங்களுக்காக நம்மையறியாமலே
தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்போம் (chosen one). இப்போது
இந்த புள்ளிகளை எல்லாம் காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வைத்து இணைத்துப்
பார்க்கும்போது நீ இந்தப் புத்தகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் போலத்
தெரிகிறாய் என்றாள்.
ஒரு புத்தகம் நம்மைத் தேர்ந்தெடுக்குமா தெரியாது. ஆனால் அப்படித் தேர்ந்தெடுத்தால் அது
அழைத்துச் செல்லும் பாதைகள் என்பது முடிவுறா புதிர் வட்டங்களாய் திகைக்கவே
வைக்கும்.
இப்போது, 'புத்தகங்களை வாசிக்கும் பெண்களை மட்டுமே நேசிக்க முடியும்' என்று
சொன்னவனை என்னால் நன்கு
புரிந்து கொள்ள முடிகின்றது.
அந்தப் பெண்களுக்கு, புத்தகங்களைப் போல அவனும் அப்போது சிறந்த
தெரிவுகளில் ஒன்றாக (அல்லது chosen
one ஆக) இருந்திருக்கக் கூடும். மேலும் சுவாரசியமாக ஒரு புத்தகத்தைப் போல,
அவன் இருந்தவரை அவனை அவர்கள் ஆழமாக நேசிக்கவும் செய்திருக்கக் கூடும்.
எல்லாப் புத்தகங்களும் என்றைக்குமாக வாசிப்பில் நீடித்து
நிலைப்பவையும் அல்ல. அப்படி காலம் முழுதும், பெண்களுக்கு
பிடித்த ஒரேயொரு புத்தகமாக ஒருவன்
மாறுவது என்பது அரிதாக நிகழக்கூடிய ஓர் அதிசயம்.
அதனாலேயே அந்த அதிசயங்களை நிகழ்த்தக்கூடியவர்களை, 'புத்தகம்
வாசிக்கும் பேரழகிகள்' என்று நானும் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகின்றேன்.
**************
ஓவியம்: இயல்
(Jan 10, 2024)
0 comments:
Post a Comment