நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'
**************
எனக்குப் பயணங்கள் மீது விருப்பு வந்ததற்கு பயணித்தவர்கள் இணையத்தளங்களில் எழுதிய பயணக்கட்டுரைகளாலும், நூல்களாலும் என்று சொல்வேன். 10/15 வருடங்களுக்கு முன் இப்போது போல காணொளிகள் பிரபல்யம் ஆகவில்லை. மேலும் காட்சிகளை விட, எழுத்துக்களை வாசித்து எனக்கான உலகை அதனூடு கற்பனை செய்வது எனக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது.
பிறகு பயணங்களைச் செய்யத் தொடங்கியபோதும், பயணிக்காத காலங்களிலும் என்னை இவ்வாறான பயண நூல்களே பயணங்கள் பற்றிய ஆசைகளை பெருக்கி வைத்திருக்கின்றன. மேலும் ஆண்களை விட, பெண்கள் எழுதிய பயண நூல்களே என்னை அதிகம் கவர்பவை. அவர்கள் சிறு விடயங்களைக் கூட மிகுந்த நுண்ணகியலோடு நேரமெடுத்து விபரிப்பது எனக்குப் பிடித்தமானது. ஆண்களுக்கு இந்த சின்ன விடயங்களின் அழகியல் அவ்வளவு எளிதில் பயண நூல்களில் கைவருவதில்லை.
இவற்றிலிருந்து விதிவிலகாக இருந்தது நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'. ஏனெனில் நர்மி இந்தப் பயணங்களை தனது தனிப்பட்ட அனுபவங்களாக மாற்றுகின்றார். அதேவேளை கல்கத்தாவின் அசலான முகத்தையும், அத்தனை வறுமையையும், குப்பை கூளங்களையும், பாழடைந்த புராதன் வீடுகளையும் நமக்கு விபரித்தபடியே செல்கிறார். ஒரு நகர் அது காட்ட விரும்பாத பக்கங்களைக் காட்டியபின்னும், அந்த நகர் நம்மைச் சென்று பார்க்க வசீகரிக்கின்றதென்றால் அது எழுத்தால் மட்டுமே சாத்தியமானது.
நர்மி தனியே கல்கத்தாவின் புகழ்பெற்ற் இடங்களை மட்டுமில்லை, வங்காளத்தின் பூர்வீகக் குடிகளை, தெருவோரக் குழந்தைகளை, பூக்கள் விற்பவர்களை, சாய்வாலாக்களை, பிச்சைக்கார்களை, கஞ்சாக் குடிக்கிகளை.. என விளிம்புநிலை மனிதர்களாக கைவிடப்பட்டவர்களை நெருங்கிப் பார்க்கின்றார். அவர்களுக்குள் இத்தனை அவதிகளுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கும் அழகான வேறொரு உலகைக் காட்சிப்படுத்துகின்றார்.
ஒரு அத்தியாயம் முழுதும் தேநீர் (சாய்) குடிக்கும் இடங்களைப் பற்றி விபரித்து எழுதிக் கொண்டே போகின்றார். நீங்கள் என்னோடு (எழுத்தில்) வந்தால் சாய்களின் சுவையை அனுபவிப்பீர்களென்று நம் கைகளைப் பற்றி ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறே டார்ஜிலிங்கில் மலையில் தங்கியிருந்த மழைநாட்களில் தினம் தனக்கான பூக்களைப் பறித்துச் சென்று அழகு பார்க்கும் ஒரு நுண்ணுணர்வுள்ள பெண்ணாக நர்மி மாறுவதோடு அங்கேயிருக்கும் நேபாளியப் பின்புலமுள்ள பிள்ளைகளோடு பழகி அவர்களின் வாழ்க்கையையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
வங்காளத்தில் நடக்கும் காளி பூஜைக்கும் துர்க்கா பூஜையும் எப்படி கிராமங்கள்/நகரங்களுக்கேற்ப வேறுபடுகின்றது என்று அப்பூஜை நிகழ்வுகளுக்கு சென்று விபரிக்கின்றார். முதல் தடவை பரவசத்துடன் காளி பூசை பார்த்தற்கும் அதற்கு அடுத்த வருடத்தில் நிதானமாக அதே நிகழ்வைப் பார்த்தற்குமான வித்தியாசங்களை எல்லோரும் எடுத்து சொல்லிக் காட்டப்போவதில்லை. ஆனால் நர்மி அதைச் செய்கின்றார். ஒருவகையில் இந்த பயணங்களை மிக நிதானமாக (slow travel) செய்வதால் இடங்களை மட்டுமில்லை, அங்கிருக்கும் மனிதர்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள நர்மி முயற்சிக்கின்றார்.
தாகூர்பாரியையும், சாந்திநிகேதனையும் பற்றி வெவ்வேறு இரண்டு அத்தியாயங்கள் எழுதப்பட்டாலும், தாகூரின் காதம்பரிக்கு அன்று என்று நடந்திருக்கும் என்ற கேள்விகளை நர்மி எழுப்பச் செய்கின்றார். தாகூரினதும், விவேகானந்தரினதும் வரலாற்று இடங்களை அப்படியே பராமரிக்காது நவீனத்துக்கு மாற்றிவிட்டார்கள் என்றும் அவர் கவலைப்படுகின்றார். தாகூர் இறுதிமூச்சை விட்ட அறையினுள் நின்று கொண்டு, இன்னமும் திறக்கப்படாத காதம்பரி தற்கொலை செய்த அறை மட்டும் என்றேனும் ஒருநாள் திறக்கப்பட்டால், அங்கேதான் தாகூர் வாழ்ந்த அசலான வாழ்க்கையின் சுவடுகள் மிஞ்சியிருக்கும் எனவும் எழுதிச் செல்வது அருமையானது.
எப்படி கல்கத்தாவின் ஒருபக்கத்து வறுமையையும், வெயிலையையும், அழுக்குகளையும், பாழடைந்த வீடுகளையும் சொல்கின்றாரோ அதுபோல வங்காளம் தனித்து வங்காளிகளின் முகத்தை மட்டும் கொண்டதல்ல என்கின்ற அவதானத்தையும் முன்வைக்கின்றார். வங்காளம் வெவ்வேறு குடியேறிகளால் (பீகாரிகள்) மட்டுமில்லை கொஞ்சம் கிராமங்களுக்கு உள்ளே சென்றாலே அங்குள்ள பழங்குடிகள் வேறு மொழியில் பேசி வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களையும் உள்ளடக்கியதுதான் வங்களாத்தின் அசல் முகம் என நமக்குக் காட்டுகின்றார்.
மேலும் இதையெல்லாம் விட ' சனநெரிசலில் இந்த இந்திய ஆண்கள் ஏதோவெல்லாம் ஜாலவித்தை காட்டிவிட்டு மறைவார்கள். நாக்கை நீட்டி ஏதோ அருவருப்பான சைகைகளை எல்லாம் செய்வார்கள். போகின்றபோக்கில் பெண்களின் குண்டிகளைத் தட்டுவதற்காகவே விரைவாக போவதைப் போல பாசாங்கு செய்வார்கள். இல்லையோ, அவர்களது கைகள் மார்பை உரசுவதைப் போல போவார்கள். இந்திய பயணங்கள் முழுதும் நான் எதிர்கொண்ட நெருக்கடி இது' என்று பெண்கள் பயணங்களிடையே எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உள்ளபடி சொல்கின்றார்.
அதுபோல விஷ்ணுபூருக்கு கோயில்களைப் பார்க்கச் சென்றபோது ஆண்களின் வெறித்தனமான பார்வையில் சிக்குக்குப்பட்டு, உரிய அடையாள அட்டைகள் இல்லாது (நர்மி இலங்கையிலிருந்து மேற்படிப்புக்காக கல்கத்தா சென்றவர்) ஒரு அறை எடுத்துக்கூட தங்க விடாது வெளியேற்றப்பட்டு, நள்ளிரவு 2 மணிக்கு நெரிசலில் ரெயிலில் பீரியட்ஸும் தொடங்க நடந்த பயணத்தை அவர் விபரிக்கும்போது ஆண்களாகிய நமது privileges குறித்து வெட்கப்பட மட்டுமில்லை, 'இந்தப் பெண்கள் எல்லாவற்றுக்கும் முறைப்பாடு செய்கின்றார்கள், இங்கே எல்லாமே அவர்களுக்கு சமனாக இருக்கின்றது/கொடுக்கப்படுகின்றதுதானே' என்று எடுத்தவுடனே முன்முடிவுகளை எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே ஒருகணம் நிதானித்துப் பார்க்கவும் நர்மியின் இந்த 'கல்கத்தா நாட்கள்' சொல்கின்றது.
இவ்வாறு யதார்த்தத்தின் இருட்டுத் தன்மையுடன், ஆனால் அதேசமயம் பயணம் மீதான பித்தையும் ஒரு பிரதிக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. மேலும் நானும் கல்கத்தா பற்றி எதிர்மறையான அனுபவங்களையே நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இலக்கியம் சார்ந்ததல்ல, பயணங்களைப் பற்றி எழுதும்போது ஒரு நிதானத்துடன் எழுதக்கூடிய ஜெயமோகனே மேற்கு வங்காளம் ஒரு அசிங்கமான நகர் என்று எழுதியது உள்ளிட வேறு சில நண்பர்கள் அங்கே பயணித்துச் சொல்லியவை அவ்வளவு நேர்மறையானவையல்ல. இவற்றையும் மீறி நர்மியின் இச்சிறு நூலை நான் வாசித்தபோது என்னையறியாமலே என்றேனும் ஒருநாள் கல்கத்தாவுக்குப் பயணிக்கவேண்டும் என்ற பெருவிருப்பு எழத் தொடங்கியது (அதை என் நண்பருக்கும் உடனே சொன்னேன்). மேலும் இந்த நூலில், நர்மி சில்வியா பிளாத், கமலா தாஸ், ஜோவே கிமெரஸ் ரோஸா, கலீல் ஜிப்ரான், தாகூர் என பல படைப்பாளிகளின் எழுத்துக்களை நமக்கு நினைவூட்டிச் செல்வது எனக்கு மிக நெருக்கமாக இருந்தது.
இச்சிறு நூலை வாசிக்கும்போது, நர்மி இதை விரிவாக எழுதுவதற்கான அனுபவங்களும், களங்களும் அவருக்குள் ஊறிக்கிடக்கின்றது என்று அறிந்து கொள்ள முடிகின்றது. இனி வரும் பதிப்பில் அவர் இவற்றை விரித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும். தமிழில் நீண்டகாலத்துக்குப் பேசக்கூடிய பயண நூலாக அது மாறவும் கூடும். அதுபோலவே இவ்வளவு அழகாக கல்கத்தாவின் இருளையும்-ஒளியையும் விவரித்துக் கொண்டுவந்த நர்மி இறுதி அத்தியாயத்தின் ஒரு துர்நினைவோடு முடித்திருக்கத் தேவையில்லை. அது இந்த நூலை ஒரு அந்தரத்தில் அல்லது கல்கத்தாவுக்குப் பயணம் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியோடு நிறுத்திவிடுகின்ற ஆபத்தும் இருக்கின்றது. நிச்சயமாக அது நர்மியின் விருப்பாக இருக்காது என்பதைப் பயணங்கள் மீது பிரியமுள்ள நானறிவேன். ஆனால் ஆரம்பப் பயணிக்கு - முக்கியமாக பெண்களுக்கு- அச்சத்தின் நிமித்தம் கல்கத்தாவிற்கான நுழைவாயிலை சிலவேளைகளில் மூடிவிடவும் கூடும்.
இன்றைக்கு தமிழில் எழுத்தென்பது புனைவாக மட்டுமே குறுகிய எல்லைக்குள் பார்க்கப்படும்போது நர்மி போன்றவர்களின் அல்புனைவுகளை நாம் கவனித்துப் பேசுவதன் மூலம் தமிழில் புதிய செல்நெறிகளைத் திறக்கமுடியும். என் தனிப்பட்ட வாசிப்புத் தேர்வாக நம்மவர்களாகிய நர்மி, பிரசாந்தி (சேகரம்), றின்னோஸ்ஸா, ஷர்மிளா ஸெய்யத் (அவர் புனைவுகள் எழுதினால் கூட) போன்ற பலரின் அல்புனைவுகளை விருப்புடன் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். மேலும் அவர்களின் எழுத்துக்களை பெண் எழுத்து என்றெல்லாம் சுருக்கிவிடத் தேவையுமில்லை.
நர்மியின் இந்த 'கல்கத்தா நாட்களின்' நீட்சிதான், அவரை அண்மைக்காலத்தில் இலங்கையில் பலர் கவனிக்கத் தவறிய இடங்களுக்குச் சென்று விரிவான பயணக்கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கும் திறப்பைச் செய்திருக்கலாமென்று நான் நம்புகின்றேன். பயணத்தை ஒரு மோஸ்தராக்கி அதை எழுத்தில் வைப்பவர்களே இங்கு பெரும்பான்மையினரே. ஆனால் நர்மி போன்றவர்கள் அதை தம் வாழ்வின் பகுதியாக, தமது சந்தோசத்தின், நிம்மதியின், விடுதலையின்,ஆற்றுப்படுத்தலின் ஒரு பாதையாக ஆக்கிக் கொள்வதை அவர்களின் எழுத்தினூடு நாமும் ஒரு பயணியாக மாறும்போது அறிந்து கொள்ள முடியும்.
**********
(Jan 17, 2025)
0 comments:
Post a Comment