இன்று இரண்டு நூல்களை வாசித்து முடித்திருந்தேன். ஒன்று புனைவு மற்றொன்று அ(ல்)புனைவு. இரண்டுமே எழுபது/எண்பது பக்கங்களுக்குள் முடிந்து போகின்றவை. நர்மியின் 'கல்கத்தா நாட்களை' வாசித்தபோது, இடைநடுவில் என் நண்பரிடம் கொல்கத்தாவுக்குப் போகவேண்டும் என்று சொல்லுமளவுக்கு இந்நூலிற்குள் அமிழ்ந்திருந்தேன். புறவயமாக சுற்றுலாப் பயணி போல நின்று எழுதாதது மட்டுமின்றி, நான் விரும்பும் Slow-travel ஊடாக அந்நிலப்பரப்பையும், மக்களையும் அணுகியதோடு, பலவேறு எழுத்தாளர்களையும் பயணக்குறிப்பிடையே நினைவூட்டியபடி நர்மி எழுதியிருப்பது இதற்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றது. தமிழில் வெளிவந்த நல்லதொரு பயண நூல்களிலொன்றெனத் தயங்காமல் இதைச் சொல்வேன்.
மற்றது வயலட்டின் 'இதோ நம் தாய்'. அவ்வளவு நெகிழ்ச்சி தந்த ஒரு படைப்பு. எல்லாமே ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டிருக்கின்றதென புத்தர் சொன்னார் என்றால், ஏன் ஒருவரது உடல் தம்மியல்பிலே மாற்றமடைவதை, மற்றமைகளால் உணர முடியாது இருக்கின்றது என்ற கேள்வியுடன் அன்னை மேரியின் தாய்மையையும் சொந்தத் தாயுடனான உறவையும் இணைத்து புரிந்துகொள்ள விழைகின்ற ஒரு திருநங்கையினது அந்தரங்கமான உரையாடல்கள் என்று இப்புனைவை ஓர் எளிமைக்காக சொல்லிக் கொள்ளலாம்.
"நாம் ஒரேயொரு நாள் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றால், அதற்காக ஆயிரமாயிரம் நாட்கள் வெறுமனே சேர்ந்திருக்கும் துயரத்தை ஏற்பாயா? என்று இப்புனைவில் ஆனந்தியிடம் கேட்கப்படுவது நம் எல்லோருக்குமானது. மிகக் குறைந்த பக்கங்களிலும், எளிமையான சொற்களாலும் எழுதப்பட்டிருந்தாலும் நமது வாழ்வை மட்டுமில்லை, நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் எந்தளவுக்கு புரிந்துகொண்டிருக்கின்றோம் என்கின்ற குழப்பங்கள் நம் இருத்தலை/இருப்பை 'கடவுளற்ற' கடவுளிடம் நிராதரவாக மண்டியிடச் செய்கின்றன. அது 'இதோ நம் தாய்' எனவும் ஆகின்றது!
0000000000000
'காதல் என்பது பொதுவுடமை' போன்ற திரைப்படங்கள் பொதுவெளியில், அதுவும் தியேட்டர்களில் வெளியிடப்படுவது பாராட்டப்பட வேண்டியது. நம் சக மனிதர்களை, அவர்களின் காதலை/உணர்ச்சிகளை காட்சி ஊடகங்களில் காட்டுவதைக் கூட ஏதோ 'வித்தியாசமாக'ச் செய்வதாகச் சொல்லித்தான் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பது, நாம் ஒரு முன்னேறிய சமூகமாக முன்னே செல்வதற்கு இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கின்றது என்பதைத்தான் காட்டுகிறது.
'காதல் என்பது பொதுவுடமை' தற்பாலினர் பற்றி தமிழில் வெளிவரும் முதல் திரைப்படம் அல்ல. இதற்கு முன் நண்பர் சொர்ணவேல் (Swarnavel Eswaran) 'கட்டுமரம்' என்ற திரைப்படத்தை கடல் பின்னணியில் வைத்து எடுத்திருக்கின்றார். அது பல திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியிருக்கின்றது. மிஷ்கின் போன்றவர்கள் நடித்துமிருக்கின்றனர். மேலும் 'காதல் என்பது பொதுவுடமை' டிரெயிலரைப் பார்க்கும்போது, நகரத்தின் பின்னணியில் இருக்கும் இரண்டு பெண்களின் காதலைச் சித்தரிப்பது போலத் தோன்றுகின்றது.
'கட்டுமரம்' திரைப்படம் சூனாமி ஆழிப்பேரலை நடந்த ஒரு கிராமத்தில் வாழும் பெண்ணுக்கும், புகைப்படம் எடுத்து அலைந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்குமான காதல். அவ்வாறான கலாசார/வர்க்க/மொழி வித்தியாசமுள்ள காதல்கள் இன்னும் சிக்கலானவை என்பது நமக்கு நன்கு புரியும்.
'கட்டுமரம்', 'காதல் என்பது பொதுவுடமை' போன்ற நிறையத் திரைப்படங்கள் தமிழில் வரவேண்டும். ஆனால் எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கின்றது. இன்றைக்கு லெஸ்பியன் காதல்களைச் சொல்கின்ற துணிவு ஒரளவு தமிழ்ச்சூழலுக்கு வந்துவிட்டது; ஆனால் எப்போது இரண்டு ஆண்களுக்கிடையிலான காதலை இயல்பாகச் சொல்லும் காலம் நம் தமிழ்த்திரைப்படச் சூழலுக்கு வரும்?
**********
0 comments:
Post a Comment