கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 72

Thursday, February 13, 2025

 

 அனோஜனின் 'தீக்குடுக்கை'
****************************

ஈழப்போராட்டப் பின்னணியை முன்வைத்து சமகாலத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கு, அவை தாண்டி வரவேண்டிய ஒரு பெரும் சவால் இருக்கின்றது. ஏற்கனவே இந்தப் பெரும்யுத்தத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புனைவும்/புனைவல்லாத நூல்களிலிருந்து விலத்தி எப்படி தனித்துவமாக அதை எழுதுவதென்பதாகும். ஏனெனில் ஒரு வாசக மனதானது எவ்வாறானாயினும் ஏற்கனவே வாசித்த நூல்களோடு புதிய படைப்புக்களை ஒப்பீடு செய்யவே விரும்பும். மேலும் என்னைப் போன்ற இந்த ஈழயுத்தத்தோடு வாழ்ந்தவர்களும், அதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் பின் தொடர்ந்தவர்களும் கடந்தகால வாசிப்பால் மட்டுமின்றி, அனுபவங்களாலும் இவ்வாறான நூல்களை ஒப்பிடவும், அதன் இழைகளை பிரித்து அறியவும் விரும்புகின்றவர்களாக இருப்போம்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியாததால்தான் கடந்த சில வருடங்களாக ஈழப்போராட்டத்தை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட பல நூல்கள் தனித்துக் கவனம் பெறமுடியாமல் போயிருக்கின்றன. சொல்வதற்குக் கதைகள் நிறைய இருந்தாலும் அதை தனித்துவமாகச் சொல்ல முடியாமல் 'வழமையாக சொல்லப்பட்ட பாதைகளில்' பயணிப்பவையாக மாறி அவை அலுப்பூட்டவும் செய்திருக்கின்றன. கதைகளைச் சொல்லவேண்டும் என்கின்ற பெருந்தவிப்பு இருக்கின்றதே தவிர, அதை ஒரு சிறந்த படைப்பாக மாற்றவேண்டிய சிருஷ்டிகளுக்குள் நுழைய நமது படைப்பாளிகள் பலர் பஞ்சிப்படுகின்றனர்.

அனோஜனின் 'தீக்குடுவை'யும் ஈழப்போராட்டப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த ஆதன் என்கின்றவன் ஈழப்போராட்டத்தின் இறுதியுத்தத்தில் பங்குபெறச் செல்வதும், அங்கே அவனுக்கு நிகழ்வதும், அவனைச் சுற்றியுள்ளவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதுவுமே இந்நாவலின் சாராம்சம் என எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ஆதனும், அவனது இங்கிலாந்துக் காதலியான எரிக்காவை விட வரும் மற்ற எல்லோரினதும் வாழ்க்கை, நமக்கு ஏற்கனவே எழுத்துக்களினூடாக பரிட்சயமானவை. மேலும் ஈழப்போராட்டக் களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும்போது அறிந்த உண்மைகளை மாற்றி எழுதிவிடவும் முடியாது. எவ்வளவு கற்பனையை நாம் விரித்துப் பறந்தாலும், நாம் 'நடந்த சம்பவங்கள்' என வரும்போது தரையை நோக்கி எழுத்தைக் கொண்டு வந்துவிடவும் வேண்டியிருக்கும். ஆகவே அந்த பறத்தலில்தான் எமது எழுத்தின் சாத்தியங்களை விரித்துக் கொள்கின்ற வெளி இருக்கின்றது.

'தீக்குடுக்கை'யில் பல பாத்திரங்கள் வந்து போனாலும், ஆதன், எரிக்கா, காந்தன், ரிமாஸ் போன்றவர்களே நாவல் முடியும்வரை தொடர்ந்து வரும் பாத்திரங்களாக இருக்கின்றன. காந்தன் பாத்திரம் தொடக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக வரப்போகின்றதென்று நம்பும்போது, அது இடைநடுவில் இரண்டாம் பாத்திரமாக (secondary character) மாறிவிடுகின்றது. இப்படியொரு உப பாத்திரமாக வரும் ரிமாஸின் பாத்திரமே ஒரளவு முழுமையாக இருக்கின்றது. ஆதனின் கதை என்றாலும், எரிக்காவின் பாத்திரமும் அதற்கு நிகராகக் கொண்டு வந்திருக்கக் கூடிய வெளி இருந்திருக்கின்றது. ஆனால் அது நம் அகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது ஒரு புறவயமான பாத்திரமாகவே நின்று விடுகின்றது. எனவே இந்த நாவலென்பதே ஆதன் என்கின்ற ஒரு தனிப்பாத்திரத்தால் மட்டுமே தாங்கிக் கொள்ளவேண்டிய ஒன்றாக மாறிவிடுகின்றது.

இந்த நாவலில் எனக்கு ஈழத்தில் நடக்கும் விடயங்களை விட, இங்கிலாந்தில் ஆதன், எரிக்காவிற்குள் நடக்கும் நிகழ்வுகளே அதிகம் பிடித்திருந்தன. ஆதன் ஈழத்துக்குப் போய் புலிகளோடு இணைந்ததிலிருந்து நடைபெறும் அனைத்துக்கும் எனக்கு ஏற்கனவே வாசித்தவைகளின் references கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்ததால் என்னால் அதற்குள் பெரிதாக ஒன்றமுடியவில்லை. அதை இப்படைப்பின் பலவீனமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எமது ஈழப்போராட்டம் குறித்து அவ்வளவு அறியாதவர்க்கு இது வேறொரு வாசிப்பைத் தரக்கூடும். இதைத் தாண்டி அனோஜனுக்கு கதைகளைச் சொல்லும் ஒரு படைப்பு மொழி வாய்த்திருக்கின்றது. அவர் காலத்தைய பலருக்கு அது எளிதில் சாத்தியமாவதில்லை (அவர்களின் பெயர்கள் வேண்டாம்).

இந்த நாவலின் தனித்துவமே ஆதன் என்கின்ற இங்கிலாந்தில் பிறந்து, புலம்பெயர் தமிழ்ச் சூழலில் இருந்து அந்நியமாகி, தனது வாழ்க்கையை ஓர் ஆங்கிலேயன் போல அமைத்துக் கொண்டவன், ஏன் சட்டென்று ஈழத்துக்கு அவ்வளவு உக்கிரமான சண்டைக்களத்துக்குப் போராடப் போகின்றான் என்பதாகும். ஆனால் அதே தனித்துவமே, ஆதன் இப்படியொரு பெரும் முடிவை எடுக்கின்றான் என்பதற்கான பின்னணியை வாசகர்களுக்கு ஆழப்பதிக்காமல் எழுதப்பட்டிருப்பதால் ஒரு பலவீனமாகவும் ஆகியிருக்கின்றது.

இந்த நாவலில் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதையும் அவை வாசிப்பையும் உறுத்திக் கொண்டிருப்பதையும் சொல்லியாக வேண்டும் (உதாரணம் கண்ணிவெடி, 'கன்னி வெடி' என்று எல்லா இடங்களிலும் எழுதப்பட்டிருக்கின்றது). ஒரு நாவல் எழுதுவதற்காய் ஒரு படைப்பாளி எவ்வளவு உழைப்பைக் கொடுக்கின்றார். அதைப் போல பதிப்பகங்களுக்கு கொஞ்ச நேரமெடுத்தேனும் கவனமெடுத்து இவ்வாறான படைப்புக்களுக்கு ஒரு மதிப்பை நிச்சயம் கொடுக்க வேண்டும் (அனோஜனின் இந்த நாவலில் என்றில்லை, இம்முறை வாங்கிய பல புதிய நூல்களில் கண்களை உறுத்துமளவுக்கு நிறைய எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன).

'தீக்குடுக்கை' என்பது குண்டுகளுக்கான அழகான பழந்தமிழ்ச் சொல். இந்த நாவலில் கூட வான்படையை புலிகள் வெற்றிகரமாக அமைத்தபின் பொட்டம்மான் 'தீக்குடுக்கைகளை வானிலிருந்து வீசும் நேரம் வந்துவிட்டது' என்று சொல்வதாகத்தான் வரும். அவ்வாறான 'தீக்குடுக்கை'க்கு நெருப்புப்பெட்டியாலும், எரிந்துபோன குச்சுகளாலும் ஏன் ஒரு முகப்பை அமைத்தார்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இவ்வாறான சில பலவீனங்கள் இருந்தாலும் -இவற்றைக் கூட அனோஜனை தொடர்ந்து வாசித்து அவரின் படைப்பு மொழி மீது அதிக நம்பிக்கை இருப்பதால்தான் குறிப்பிடுகின்றேனே தவிர- இந்நாவல் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் இன்று அழகியலும், அரசியலும், ஆழமும் இல்லாது ஈழப்போராட்டத்தை பின்னணியாக வைத்து எழுதப்படும் சில படைப்புக்கள் அளவுக்கதிகமாக தமிழ்ச் சூழலில் விதந்தேற்றப்படுகின்றன. அந்தவகையில் அனோஜனின் 'தீக்குடுக்கை'யை மொழியின் வசீகரத்தாலும், சொல் முறையாலும் அண்மையில் வெளிவந்தவற்றில் கவனிக்கத்தக்கதொரு படைப்பாகவே என் வாசிப்பில் நான் கொள்வேன்.

************

 

(Jan 23, 2025)

0 comments: