குணா கந்தசாமியின் 'டாங்கோ'
***************
பெளத்தத்தில் நிரந்தரத் துக்கம், அன்றாடத் துக்கம் என வகுத்துக் கொள்ளும் பார்வை இருக்கின்றது. மகிழ்ச்சியை அப்படி வகுத்தெல்லாம் எவரும் அனுபவிப்பதாகச் சொல்வதில்லை. நமது நினைவுகளால்தான் இந்த துயரங்களும், துன்பங்களும் என்றும் பெளத்தம் சொல்லும். சிலவேளை ஆறறிவொன்று இருப்பதால்தான் மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடத் தெரியாமல் இருக்கின்றோமோ தெரியவில்லை.
அவன் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களைத் துய்ப்பதற்கான அத்தனை வழிகளிலும் திறக்கப்பட்ட ஓர் அந்நிய நிலத்திலும், தனித்தலைபவனாகவும், தனித்திருப்பவர்களின் மீது விருப்புக் கொண்டு நட்புக் கொள்கின்றவனாகவும் இருக்கின்றான்.
பெற்றோரை சிறுவயதில் இழந்தும், மாமா/அத்தையினால் வளர்க்கப்பட்ட ஆனந்துக்கு அவனது கடந்தகாலம் தாண்டி வர முடியாதது. அவன் தனது இருபதுகளின் மத்தியில் தனக்கான வசதியான வாழ்வை மென்பொருள் கல்வியினால் அமைத்துக் கொண்டாலும், அவனது மனது கீழைத்தேய கிராமமொன்றில் அடைபட்டு விடுதலை பெறத்துடிக்கும் ஒரு பறவையைப் போல இருக்கின்றது.
அவனது சிக்கல் என்பது, அவனுக்கு இந்த இன்பங்களை அனுபவிக்க ஆசையும், அதேவேளை அவற்றை நோக்கிச் செல்லும்போது அவனறியாத கண்ணிகளால் அவன் இழுத்து வீழ்த்தப்படுகின்றவனாகவும் இருக்கின்றான். ஆனால் எல்லாமே மனம் போடுகின்ற வேடங்கள்தான் என அவன் தன்னிலை அறிகின்றபோது எதையெல்லாம் வேண்டாம் என்று தனது சமூகத்தின்/ஒழுக்கத்தின் நிமித்தம் மறுத்தானோ அவையெல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்கின்றான்.
இன்றைய நவீன மனிதனின் பெரும் சிக்கலே, அவனு(ளு)க்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைத்தபின்னும் எஞ்சுகின்ற பெரும் வெறுமை. அறிவைப் பெறுவதையும், செல்வத்தைப் பெருக்குவதையும், கொண்டாடங்களில் திளைப்பதையும் சொல்லித் தருகின்ற இந்த நவீன வாழ்வு நம் அகத்தில் பொங்கும் வெறுமையையும் தனிமையையும் எப்படிக் கையாள்வது என்று சொல்லித் தருவதில்லை.
இதன் நிமித்தம் இன்னுமின்னும் இன்றையகாலத்து மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிலிருந்தும் அந்நியமாகின்றோம். அது சாதாரண நமக்கு மட்டுமான சிக்கல் இல்லை, இன்று அவ்வளவு பிரபல்யமாக இருந்தும் தற்கொலையை நாடிச் செல்கின்ற/தம்மை அழித்துக் கொள்கின்ற, வசதி படைத்தவர்க்குமான பொதுப் பிரச்சினையாக இது இருக்கின்றது.
குணா 'டாங்கோ' வில் வரும் ஆனந்தின் மூலம் ஒரு வரைபடத்தை விரித்துக் காட்டுகின்றார். அது நம் தமிழ் மனதுக்கு பழக்கமில்லாத புதிய நிலப்பரப்பில், றாம்பலாவின் வீதிகளிலும், உருகுவேயின் கடற்கரைகளிலும் சந்திக்கும் மனிதர்களில் இருந்து, காந்திச் சிலையோடு தனித்து அளவாளவதுவரை என அழகாக காட்சிப்படுத்தப்படுகின்றது. அங்குள்ள மத்திய தர வர்க்கத்தினூடாக மட்டுமில்லாது, விளிம்புநிலை மனிதர்களினூடாகவும் நமக்கு வேறொரு உலகை குணா அவ்வளவு நெருக்கமாகக் காட்டுகின்றார்.
'யாதும் ஊரை யாவரும் கேளிர்' என்று நினைக்கும், அதன் தாற்பர்யத்தை ஸ்பானிய நண்பருக்கும் எடுத்துச் சொல்லும் ஆனந்ததால் ஏன் கீழைத்தேய மனநிலையைத் துறந்து ஓரு 'வேரற்ற' மனிதனாக அகமும்/புறமும் சார்ந்து மாறமுடியவில்லை என்ற கேள்வியிலிருந்து நமது இருத்தலியம் சார்ந்த சிக்கல்களும், அந்நியமாதலின் பிணக்குப்பாடும் துல்லியமாகின்றன. ஒருவகையில் நவீனம் கடந்த பின்னவீனத்துவ வாழ்க்கையை வாழ்வதாக நம்பும் நாமின்னும் கடந்தகாலத்தில்தான் உறைந்து போய் இருக்கின்றோமா என ஆனந்தனின் இருப்பு நமக்குச் சுட்டிக் காட்ட முயல்கின்றன.
இன்றைக்கு குடும்பம் என்ற அமைப்பும், ஆண்-பெண் உறவுகளும் எவ்வாறு நாளுக்கொரு தடவை மாறி சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன என்பது நாம் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனந்த் ஒரு புதிய நிலப்பரப்பில் வாழ்கின்றபோதும் அவனால் சில அடிப்படைகளைத் துறக்க முடியவில்லை. முரண்நகையாக அவன் குடிக்கு மட்டுமில்லை, கஞ்சாவுக்கும் அடிமையாகின்ற நிலைமைக்கு வந்துவிட்டான்; ஆனால் அவன் விரும்பும் பெண்ணோ குடும்பம் என்ற அமைப்புக்குள்ளும், அவனால் ஏற்பட்ட கருவுக்குத் தாயாகாவும் ஆகவேண்டும் என்/ரும் தீவிரமாக நம்புகின்ற ஒருவனாகவே இருக்கின்றான். ஒருவகையில் ஆனந்தில் பிரதிபலிப்பது சமகாலத்து பெரும்பாலான தமிழ் ஆண்களின் மனதென்பதால் அவனை விலத்தி வைத்து தூற்றவெல்லாம் தேவையில்லை.
மேலும் இன்று முற்போக்கு பேசும் ஆண்களில் அரைவாசிப்பேர் இப்படி மரபுகளோடும் சடங்களோடும் தம்மைப் பிணைத்தபடியே குடும்பம் என்ற அமைப்புக்குள் அடைக்கலம் பெறுகின்றவர்களாகவே இருக்கின்றனர். ஒருவகையில் பார்த்தால், சந்தியா திருமணம் செய்த விவாகரத்துப் பெற்ற அவளின் முதல் கணவனுக்கும், ஆனந்துக்கும் கூட பெரும் வித்தியாசமில்லை என்ற எண்ணம் ஒருகணம் வந்து நம்மைத் திடுக்குறச் செய்கின்றது. அதாவது நாளை சந்தியா ஆனந்த்தைத் திருமணம் செய்தால் அவனும் ஏற்கனவே மணம்புரிந்த அந்தக் கணவனைப் போல ஆகிவிடமாட்டானா என்ன?
ஆனந்துக்கு ஒரு Redemption நடக்கின்றது. ஒருவர் தன்னை உடைத்துப் பார்க்கும்போது உடைந்த இடத்தில் வீழும் ஒளி அவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பது போல அவன் இந்த இயற்கையைத் தன் நெருங்கிய துணையாகக் கொள்கின்றான். அவனுடைய பாவங்களுக்கு மட்டுமில்லை, தன்னிலை உணர்தல்களுக்கும் சாட்சி ரியோ தெ லா பிளாட்டா நதிதான். ஆகவேதான் அவன் இறுதியில் அங்கு நீராடும்போது அவன் அதைப் புனித நதியாக உருவகித்துக் கொள்கின்றான்.
மேலும் அவன் முதல் முத்தம் பெற்ற அவனின் மாமாவின் மகளான தீபாவைத் திருமணம் செய்து அவன் அகமனது அவாவும் குடும்பம் என்ற அமைப்புக்குள் அடங்கிக் கொள்வானா என்பது ambiguity ஆக இருப்பது இந்த நாவலின் பிறபகுதியில் அழகாகப் பொருந்திக் கொள்கின்றது.
நம் சமகாலத் தமிழ்ச் சூழலில் சரளமான வாசிப்பு மொழியில் எழுதப்பட்டால் அது ஆழமற்றதென நம்பும் 'கெட்ட வாசிப்பு' பழக்கமொன்று இருக்கின்றது. அதுபோலவே சில பாத்திரங்களோடு மட்டும் நாவல் இருந்தாலும் அது தட்டையானது என்ற பார்வையும் பலருக்கும் இருக்கின்றது. என்னைப் போன்றவரை ஒரு புனைவு பாசாங்கு செய்யாது genuine ஆக எழுதப்பட்டு என்னை உள்ளிழுத்துக் கொண்டாலே அது நல்லதொரு நாவலாகிவிடும்.
உண்மையில் புனைவின் சரளமான மொழியல்ல, அந்தப் புனைவு நம்மை உள்ளிழுத்து நாம் எளிதில் அதில் அமிழ்ந்துவிட்டதால்தான் நமக்கு வாசிப்பு எளிதாக இருக்கின்றதென்பது பலருக்குப் புரிவதில்லை. நான் குணாவின் 'டாங்கோ' வாசித்துக் கொண்டிருந்தபோது, எனது 'மெக்ஸிக்கோ' நாவலுக்கு வந்த விமர்சனங்களை குணாவும் எதிர்கொள்வார் என்றே நினைத்தபடியிருந்தேன். அதேவேளை எனக்கு 'மெக்ஸிக்கோ' நான் எதிர்பார்க்காத திசைகளிலிருந்து புதிய வாசகர்களைக் கொண்டு வந்தது சற்று வியப்பாக இருந்தது. அதுபோல குணாவின் 'டாங்கோ'வை நோக்கி அவரை இதுவரை வாசிக்காத புதிய வாசகர்கள் அவரிடம் வந்து சேர்வார்கள் என்று நம்புகின்றேன்.
பலர் இந்நாவலில் உண்மையிலே ஆனந்துக்கு என்னதான் பிரச்சினை, அப்படி ஒரு பெரும் பிரச்சினை இருந்தால் ஏன் குணா, அதை விவரிக்கவில்லை என்று கேட்கக்கூடும். ஆனால் என்னைப் பொருத்தவரை இவை சொல்லப்படாததன் இடைவெளிதான் இந்த நாவலை ஒரு முக்கிய புனைவாக்குகின்றது எனச் சொல்வேன். அந்தக் காரணங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தால் அது தனித்து ஆனந்துக்குரிய வாழ்க்கைச் சிக்கலாக சுருங்கிப் போயிருக்கும். அவை சொல்லப்படாததால்தான் வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஆனந்தாக இருந்து நம் தனிமையையும், வெறுமையையும் உற்றுநோக்கும் ஒரு சந்தர்ப்பம் இங்கே வாய்க்கின்றது.
ஆக குணா, ஆனந்த் ஊடாக நம்மிடம் ஒரு முக்கிய வினாவை முன்வைக்கின்றார்; இன்றைக்கு நீங்கள் பரபரப்புடன் தேடி ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும், என்றேனும் ஒருநாள் கிடைத்துவிட்டால், உங்களால் இந்த வாழ்வை அகம் ஊறி சந்தோசத்தில் திளைக்க முடியுமா? அல்லது ஆகக்குறைந்தது உங்கள் மனப்பிசாசை அடக்கி அமைதியாக மிஞ்சியுள்ள வாழ்க்கையை நிறைவாக வாழமுடியுமா என்பதுதான்.
***********
(Jan 20, 2025)
0 comments:
Post a Comment