ஷர்மிளா ஸெய்யத்தின் 'சிவப்புச் சட்டை சிறுமி'
**************
மரணத்துடன் ஒரு புனைவு தொடங்குவதை வாசிப்பது அந்தரமாக இருக்குமல்லவா? அப்படித்தான் ராணி என்கின்ற மர்ஜானி தனது இறப்பைப் பற்றிப் பேசுவதுடன் ஷர்மிளாவின் 'சிவப்புச் சட்டை சிறுமி' நாவல் தொடங்குகின்றது. வெவ்வேறு காலத்தில், ஒருபோதும் சந்தித்திருக்காத மர்ஜானி மற்றும் அய்லி என்கின்ற இரண்டு சிறுமிகளினதும் கதைகள் இதில் சொல்லப்படுகின்றன.
அய்லிக்கு அவள் குடும்பத்தில் அவள் வாழ்ந்திராத கடந்தகாலம் உள்ளுணர்வினால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அவள் மூலம் அந்தக் குடும்பத்தில் வெளிப்படையாகப் பேசப்படாது மூடிப் புதைக்கப்பட்ட இரகசியம் ஒன்று வெளியாகின்றது. அந்த இரகசியம் மட்டுமின்றி, அய்லி தொடர்ச்சியாக அவள் வளர்த்தெடுக்கப்படும் மதம் பற்றிய கதைகளில் மறைக்கப்பட்டோ/மறக்கடிக்கப்பட்டோ போன பெண்களின் வகிபாகம் பற்றியும் மற்றக் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றாள்.
90களின் மத்தியில் அய்லி பதின்மத்தில் இருக்கும்போது நூலகத்தில் அவளின் குடும்பத்து இரகசியத்தோடு சம்பந்தப்பட்டசரைத் தற்செயலாகச் சந்திக்கின்றாள். அதுவரை தனது ஆண் பெருமையில் 'தலைநிமிர்ந்து' வாழும் அவர் முதன்முறையாக அய்லியினூடாக வெளிப்படுத்தப்படும் இன்னொரு கடந்தகால உருவத்தின் முன் திகைத்து நிற்கின்றார். அவரின் அத்தனை ஆணவமும் கரைந்து கண்ணீர் மல்கி அய்லியின் முன் நிற்பதுடன் ஒருவகை 'பாவமன்னிப்பை' அவர் தன்னளவில் அடைந்திருக்கக்கூடும். ஆனால் அவர் 20 ஆண்டுகளின் முன் நிகழ்த்திவிட்ட பாவத்தினால் இழந்துபோனது எதுவும் ஜெய்நூரின் குடும்பத்துக்குத் திருப்பி வரப்போவதில்லை என்பது யதார்த்தம்.
அய்லிக்குள் ஒலிக்கும் குரல் இந்த மனிதரை மட்டுமில்லை, அதுவரை காலமும் தனக்குள் இந்தத் துயரத்தைப் புதைத்து மறுகிக்கொண்டிருக்கும் அய்லியின் உம்மம்மாவான ஜெய்நூருக்கும் ஒருவகை விடுதலையை அளிக்கின்றது. இந்த விடுபடலினால், அதுவரை எவ்வளவு முயற்சிகள் செய்தும் பூத்துக் காய்க்காத அய்லி வீட்டு முற்றத்துப் பலாமரம் முதன்முறையாகப் பூக்கின்றது. அந்த வீடு தனக்கான துயரத்திலிருந்து ஏதோ ஒருவகையான ஆற்றுப்படுத்தலை இவ்வாறாக 20 வருடங்களின் பின் பெற்றுக்கொள்கின்றது. பலாமரத்தை கட்டியணைப்பதன் மூலம் அந்த வீட்டுப் பெண்கள் அதுவரைகாலமும் மூடிவைத்திருந்த இரகசியத்திலிருந்து விட்டு விடுதலையாகின்றனர்.
இந்த நாவலை ஒருவகையில் வயதுக்கு வரும் (Coming of Age) பருவத்து நாவல் எனவும் சொல்லலாம். சிறுமியாக இருக்கின்ற அய்லி பதின்மத்தில் வருகின்றபோது இந்த நாவல் முடிகின்றது. எனக்கு இந்த நாவலில் ஷர்மிளா ஸெய்யித் எழுதிச் செல்கின்ற மொழி பிடித்தமாக இருந்தது. சிலவேளைகளில் நாவல் மெதுவாக நகர்வது போல தோற்றமளித்தாலும், இந்த வகை நடையே இப்படிப்பட்ட நாவலுக்குப் பொருத்தமானது என்பேன். தமிழ் நாவல்களில் - குறிப்பாக ஈழத்து நாவல்களில்- அரிதாகச் சித்தரிக்கப்படுகின்ற முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை மிக அழகாக ஷர்மிளா இங்கே சித்தரித்துச் செல்கின்றார்.
மேலும் இஸ்லாமிய தொல்மரபுகளில் இருந்து சமகாலத்துக் கதையோடு சமாந்திரமாக பல்வேறு கதைகளை ஷர்மிளா அய்லியினூடாக தொட்டுச் செல்வது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அதில் ஒரு கதையில் பல்கீஸ் ராணியை, சுலைமான் நபி முஸ்லிம் மதத்திற்கு மாறும்படி சொல்லும் ஓரிடம் வருகின்றது. இத்தனைக்கும் பல்கீஸ் ராணியிடம் பெரும் படை இருந்தபோதும், சுலைமான் நபிகளின் ஆணைக்கு உடன்படுகின்றார். அதற்கு பல்கீஸ் ராணி, 'அரசர்கள் ஒரு நகரத்துள் நுழைவார்களானால் நிச்சயமாக அதைச் சீரழித்துவிடுவார்கள். கண்ணியமிக்கவர்களை இழிவானவார்களாக்கிவிடுவார்கள்' எனச் சொல்லி போரொன்றை நிகழ்த்தித் தனது மக்களின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பாதிருக்கின்றாள். ஒரு பெரும் படையை வைத்திருக்கும் பல்கீஸ் இப்படி போருக்கு எதிரான பிரகடனத்தை அன்றே செய்திருக்கின்றார் என்பது எத்தகை வியப்பானது. அதுபோலவே ஏமானில் ராணிகளாக இருந்த அஸ்மா, அர்வாவின் கதைகளும் சுவாரசியமானது. இந்தக் கதைகளை ஷர்மிளா இந்த நாவலோடு இணைத்திருக்கும் இடங்களும் அழகாக பொருந்திக் கொள்கின்றன.
இவையெல்லாவற்றையும் விட ஷர்மிளா, ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆளுமையை நேரடியாகப் பெயர் சொல்லியே எழுதிச் செல்லும் வியப்பும் (ஒருவகையில் அதிர்ச்சியும்) எனக்கு இதை வாசிக்கும்போது வந்துகொண்டிருந்தது. எந்த ஒரு நபரும் விமர்சனதுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒருவர் ஒரு துறையில் பிரகாசித்துக் கொண்டிருந்தால், எல்லா விடயங்களிலும் 'மாமனிதராக' இருக்க வேண்டும் என்கின்ற பொதுப்புத்தி நம்மிடம் இருக்கின்றது. அவ்வாறெல்லாம் நாம் மெளனமாக இருக்கத்தேவையில்லை என ஒரு முக்கிய ஈழத்து ஆளுமையின் இன்னொரு பக்கத்தை ஷர்மிளா நமக்கு இனங்காட்டியிருக்கின்றார். இந்த நாவல் ஒருவகையில் நாம் புனிதம் பூசி வைத்திருக்கும் பலரின் மற்றப்பக்கங்களை மறுவாசிப்புச் செய்யும் உந்துதலை எங்களில் பலருக்கு கொடுக்கும் என நம்புகின்றேன். அதுபோல கடந்தகாலத்தில் மனிதர்கள் இழைத்துவிட்டுப் போகும் தவறுகளுக்கு, மன்னித்தலையும், தண்டனை கொடுத்தலையும், ஆற்றுப்படுத்தலையும் பல்வேறு வகையில் இதில் விரிவாக எழுதி ஷர்மிளா விவாதிப்பதும் கவனிக்கத்தக்கது.
ஒருகாலத்தில் தேங்கிப்போன ஈழத்துக் கவிதைகளின் தேக்கத்தை உடைத்தவர்களாக ஈழத்துப் பெண் கவிஞர்கள் இருந்தார்கள். அதுபோலவே ஈழத்து நாவல்கள் என்றாலே போரின் பின்னணியின் எழுதப்படவேண்டும் என்கின்ற மறைமுகமான அழுத்தத்தில் இருந்து (அவ்வாறு எழுதுவது பிழையில்லை; ஆனால் அவற்றை மட்டுமே ஈழத்து புனைவுகளாக கொள்ளவேண்டியதில்லை), நம் பெண்களே அதையும் மீட்பார்கள் என்ற நம்பிக்கை இப்போது வருகின்றது.
மாஜிதாவின் 'ஃபர்தா', ஷர்மிளாவின் 'சிவப்புச் சட்டை சிறுமி', தில்லையின் 'தாயைத்தின்னி' (இதை இன்னும் வாசிக்கவில்லை) போன்ற புனைவுகள் இதற்கான தொடக்கமாக அமையும் என்பதில் நம்பிக்கை கொள்கின்றேன். இவர்களின் புனைவுகளோடு முழுதும் நாம் உடன்படவேண்டும் என்கின்ற அவசியம் கூட இல்லை. ஆனால் இந்தப் பிரதிகள் நமக்குள் உரையாடல்களை கிளர்த்தெழச் செய்கின்றவை. இதுவரை சொல்லப்பட்ட எழுத்துகளுக்கு மாற்றான குரல்களில் நமக்கான கதைகளைச் சொல்லவேண்டும் என்ற உந்துதலை இந்தப் பெண்களின் பிரதிகள் நமக்குள் ஏற்படுத்துகின்றன.
மேலும், கடந்தகாலங்களில் பெண்களின் குரல்களை உற்றுக் கேட்காது, கலாசார/பண்பாட்டு/வன்முறை அழிவுகளுக்குள் நம்மை அழைத்துச் சென்ற மோசமான பாதைகளை மறுதலிக்கவேனும் நமக்கு இவ்வாறான வகை எழுத்துக்கள் நிறையத் தேவையாகவும் இருக்கின்றன.
**************
(Feb 07, 2025)
0 comments:
Post a Comment