நாள் - 00
ஜூலை -22 - புதன்கிழமை
***
விபாஸனா தியானம் வியாழக்கிழமை தொடங்குகின்றது என்றாலும் எம்மை முதல் நாளான புதன்கிழமை வரச் சொல்லியிருந்தார்கள். நாம் எமது விபரங்களைப் பதிவு செய்து எம்மைத் தயார் செய்வதற்கு முதல் நாளே நாம் செல்ல வேண்டியிருந்தது.
நான்
இருந்த நகரிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த விபாஸனா
நிலையம் இருந்தது. போகும்போது இன்னும் இரண்டு பேரை என் காரில் ஏற்றிச்
சொல்வதாக உறுதியளித்திருந்தேன் (விபாஸானா தொடங்கும் வரை காத்திருக்காமல்
எமது meritsஐ ஜாடிக்குள் முன்னரே சேகரித்தல் எனவும் இதைச் சொல்லிக்
கொள்ளலாம்). நாம் விபாஸனாவிற்கு வருகின்றோம் என்று பதிவு செய்யும்போது,
உங்கள் வாகனத்தில் வேறு யாரை ஏற்றி வரமுடியுமா (ride) எனக் கேட்பார்கள்.
நான்
என் வாகனத்தில் இரண்டு பேரை ஏற்றிக் கொண்டேன். ஒரு பெண் இத்தாலியப்
பின்புலத்தைச் சேர்ந்தவர். மற்றவர் மலேசியக்காரர், ஆனால் மூன்று
தலைமுறைகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த சென்ற தமிழ்ப் பரம்பரையைச்
சேர்ந்தவர்.
ஒருவர் என்னைப் போல தியான வகுப்புக்கும், மற்றவர் எமக்கு உணவு சமைப்பதற்கும் வந்திருந்தார். தியானத்துக்குப் போவதைப் போல, Serving செய்வதும் விபாஸனாவில் மிக முக்கியமானது. இதை இன்னொரு பொழுது விரிவாகப் பார்ப்போம்.
*
இருவரும் விபாஸனாவுக்கு என்னைப் போன்ற புதியவர்கள் அல்ல. ஏற்கனவே விபாஸனா பழகிய அனுபவசாலிகள். ஆகவே அவர்கள் விபாஸனாவுக்கு புதியவனாக வரும் எனக்கு என்ன அறிவுரை சொல்லுவீர்கள் என்று கேட்டேன். அறிவுரை எல்லாம் உனக்குத் தேவையில்லை, நீ வெற்றி வாகை சூடி வருவாய் என்று மட்டும் உற்சாகப்படுத்தினார்கள்.
போர்க்களத்துக்குப் போவதற்கு முன்னரே கால்கள் எனக்கு நடுங்குகின்றனவே. பத்து நாள் குருஷேத்திரத்தில் இரண்டு நாள் தாக்குப் பிடிப்பேனா, மாமியார் முன் மருகும் மருமகன் போல வெட்கித்து நிற்க, என்னை விபாஸனாவில் இருந்து மூன்று நாளில் 'நீ இன்று போய் விபாஸனாப் போருக்கு அடுத்துமுறை தயாராகி வா' என்று இராவணனைப் போல அவமானப்படுத்தி அனுப்புவார்களா என்றெல்லாம் என் உள்மனம் கதறுகிறது என்பதை எப்படி இவர்களுக்குச் சொல்வது? எனவே என் நடுக்கத்தை வெளிக்காட்டாது காரின் ஸ்டீரியங்கை இறுக்கிப் பிடித்து என்னை நிதானப்படுத்திக் கொண்டேன்.
இத்தாலியன் பெண் கொஞ்சம் இரக்கப்பட்டு, 'உனக்கு பத்தாவது நாளின்போது அந்த அமைதி (noble silence) கலையும்போது உடனே சத்தங்களின் உலகிற்கு வர சிலவேளைகளில் கஷ்டமாக இருக்கும். அதற்கு மட்டும் கொஞ்சம் உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்' என்றார்.
அவர் ஏற்கனவே தத்துவியலில் பிஎச்டி பெற்றிருந்தவர். இப்போது அந்தத் துறையை உதறிவிட்டு Psychoanalysis இல் dissertation எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்றார். இந்தப் பேராசிரியைமார்களுக்கு எல்லாம் என்னைப் போன்ற 'தற்குறி'களின் நிலைமை எங்கே விளங்கப் போகின்றது?
விபாஸனாப் பேச்சு இனி வேண்டாம் என்று நாங்கள் உலக அரசியலைப் பேசி கடைசியில் தமிழ்நாட்டு விஜய் அரசியலுக்கு வந்து சேர்ந்தோம். மலேஷியத் தமிழர் மிகப்பெரிய விஜய் இரசிகர் போல. எனவே பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தாலியப் பெண்ணின் துணைவர் ஈரானைச் சேர்ந்தவர் என்பதால் போகும் வழி முழுவதும் டிரம்புத் தாத்தா மீது அப்படி அன்பைப் பொழிந்தபடி நாம் அனைவரும் சென்று கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில் நாங்கள் தியானத்துக்குப் போகின்றோமா இல்லை ஏதேனும் அரசியல் ஊர்வலத்துக்குப் போகின்றோமா என்று சந்தேகம் வந்து அமைதியாகி வெளிச்சூழலை வேடிக்கை பார்த்தபடி விபாஸனா நிலையத்தைப் போய்ச் சேர்ந்தோம்.
இனி நாம் அனைவரும் இறுதிப் பத்தாம் நாள்தான் காண்போம்/பேசுவோம், அப்படிச் சந்தித்து சேர்ந்து மீண்டும் ஒரே வாகனத்தில் திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டு எங்களிடையே விடைபெறச் செய்தோம்.
*
இத்தாலியன் பெண், பெண்களுக்கான காபினுக்குச் செல்ல, மலேஷியக்காரர் உணவு பரிமாறுபவர்களின் பகுதிக்குப் போக, நான் வேள்விக்குத் தயாராகும் கிடாயைப் போல எனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றேன்.
விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன் என்று வீட்டுக்கு அறிவிக்கக்கூட அந்த நிலையத்துக்குள் என் தொலைபேசிக்கு network கிடைக்கவில்லை. கொஞ்சம் ஒதுக்குப்புறமாக காடுகளின் சூழலில் இருந்தாலும் இப்படி விபாஸனாக்காரர் 'அநியாயம்' செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே மீண்டும் காரை எடுத்து ஐந்தாறு கிலோமீற்றர்கள் ஓடி coverage கிடைத்த இடத்தில் வைத்து வீட்டுக்கு சந்திரனுக்கு நீல் ஆம்ஸ்ரோங் காலடி வைத்த சந்தோசத்தைப் போல விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன், இனி பத்து நாளுக்கு என் மூச்சு இல்லை பேச்சுக்கூட கேட்காது நிம்மதியாக இருங்கள் என்று அறிவித்தேன்.
பிறகு விபாஸனா நிலையத்துக்குத் திரும்பி வந்து 'போறாளே பொன்னுத்தாயி/ விபாஸனாக் காட்டில் மனச விட்டு/உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு' என்று கண்ணீர் விடாத குறையாக நிர்வாகத்தினரிடம் என் அலைபேசியைக் கையளித்தேன்.
இனி பத்து நாட்களுக்கு அலைபேசியோடு உறவு முற்றாக இல்லை என்று நினைக்க பரவசமா, நிம்மதியா, பதற்றமா எது வந்தது என்று சொல்ல முடியாத குழப்ப நிலையில், என்னோடு வேள்விக்கு வந்த மற்றப் பலியாடுகளை அவதானிக்கத் தொடங்கினேன்.
அப்படி ஒருவரோடு கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. அவர்தான் எங்கள் குழுவில் வயதில் மூத்தவராக இருந்தார். எழுபதைத் தாண்டியவர். இரண்டாவது முறையாக விபாஸனாவுக்கு வந்திருந்தார். என்னிடம், 'இப்படி விபாஸனாவை சிரத்தையாக தொடர்ச்சியாகச் செய்பவர்களிடம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள் என்று கேட்பேன். ஒருவரும் ஒழுங்காக இதற்குப் பதில் சொல்வதில்லை. ஒரு நண்பர் மட்டும், விபாஸனாவுக்கு வந்தபின் தனக்கு மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்ததுவிட்டது என்று மட்டும் சொன்னார்' என்றார். அறிமுகமில்லாத மனிதர் முன் எங்கள் மனதை உடனே திறந்து வைத்தால் சிலவேளைகளில் பிறகு ஆபத்தாகிவிடும் என்பதால், 'மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்துவிட்டால், அந்த மனிதருக்கு வாழ்வின் சந்தோசம் ஒரு மடங்கும், அவரின் மனைவிக்கு மகிழ்ச்சி இரண்டு மடங்கும் வந்துவிடுமே, அது போதுமே இந்த வாழ்க்கையை ஒருவர் இனிதாகக் கொண்டு செல்ல என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
*
அன்று மாலை விபாஸனாக்காரர் நிகழ்வுகளுக்கான ஓர் அறிமுகத்தைத் தந்துவிட்டு, இன்றைக்கு உங்களுக்கு கொஞ்சம் மாலையுணவு தருகின்றோம் என்றார்கள். என் மனமோ இயேசு கடைசியாக சாப்பிட்ட 'இறுதி விருந்து' மாதிரி, புத்தரே நீருமா என்னைக் கைவிடுகின்றீர் என்று கலங்கியபடி கடைசி இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தேன்.
ஒவ்வொரு நாளும் விடிகாலை நான்கரை மணிக்கு தியானம் தொடங்கிவிடும். நான்கு மணிக்கு மணியை அடித்து, தூக்கத்திலிருந்து விழிக்க எச்சரிக்கை தருவார்கள் என்றனர். நான் இரவு ஒரு மணி இரண்டு மணியெல்லாம் இயல்பாக விழித்திருக்கக்கூடியவன். ஆனால் என்னால் விடிகாலையில் எவ்வளவு முயற்சித்தாலும் இப்படி எழும்ப முடியாதே, எந்தக் கடந்தகால காதலி என்னை சபித்தாரோ, இப்படி நிலைமை ஆகிவிட்டதே என்று உறைந்து போய் நின்றேன்,
அது மட்டுமில்லை, நாளை காலை அல்ல, இன்றிரவு எட்டுமணியோடே noble silence தொடங்கிவிடும் என்று போன முதல் நாளே வாயிற்கு ஆணியடித்து திகைக்க வைத்தார்கள்.
தூக்குமேடைக்கு வந்துவிட்ட பிறகு, கில்லட்டினால் வெட்டினால் என்ன, தூக்குக்கயிற்றை சுருக்கி இழுத்தால் என்ன, முடிவு ஒன்றுதானே என்று என்னை இந்தப் பலிக்களத்துக்குத் தயார்ப்படுத்தினேன்.
ஆனால் நானே ஆச்சரியப்படுமளவுக்கு இந்த பத்து நாட்களில் ஒருநாள் கூட நான் விடிகாலை நான்கரை மணித் தியானத்துக்குப் போகத் தவறியதில்லை என்று நினைக்க இப்போது வியப்பாய்த்தான் இருக்கின்றது.
ஆக இதெல்லாம் முடியாது என்பதெல்லாம் மனது செய்யும் செப்படி வித்தையே தவிர, சூழல் அவ்வாறு நிர்ப்பந்திக்கும்போது நாம் இயல்பாக அந்தச் சூழல் வேண்டுவதைச் செய்யத் தொடங்கிவிடுவோம் என்று சொல்வது உண்மைதான் போலும்.
இப்படியாக என் விபாஸனா ஆயத்தப்படுத்தல் என்னும் திகில் அனுபவங்கள் தொடங்க, அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதென யன்னலுக்கு அப்பால் விரிந்த சிறு காட்டில் எழுந்த வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டபடி படுக்கையில் வெவ்வேறு கோணங்களில் படுத்து நித்திராதேவியே தயவுசெய்து நேரத்துக்கு வந்து என்னை அணைத்துக் கொள்க என்று மன்றாடிக் கொள்ளத் தொடங்கினேன்.
****
(இன்னும் வரும்)


0 comments:
Post a Comment