கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 16

Monday, August 14, 2023

 

'பர்தா' தமிழில் அண்மையில் வெளிவந்த முக்கியமான ஒரு அரசியல் புனைவு என்பேன். ‘பர்தா’ என குறிப்பிடுவதால் அதை ஒரு குறிப்பிட்ட மத/இன அடையாளத்துக்குள் மட்டும் அடைக்கத் தேவையில்லை. ‘பெண்களின் ஆடைகளின் அரசியல்’ என்ற விரிந்த எல்லைக்குள்ளும் வைத்துப் பார்க்கக்கூடியதாக இருப்பதால்தான் ‘பர்தா’ வாசிப்பில் முக்கியமாகின்றது. தமக்கான ஆடைகளைத் தேர்வு செய்வதென்பதில் முஸ்லிம் பெண்கள் மட்டுமில்லை, தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட பலரும் சிக்கல்களை எதிர்நோக்கியபடி இருக்கின்றார்கள். இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பெண்கள் சேலை மட்டும் அணியவேண்டும் என்று சொல்லப்பட்ட்திலும், தமிழகத்தில் ‘துப்பட்டா போடுங்கள் தோழி’ என்ற சொல்லாடல்களின் பின்னும் ஆடைகளின் அரசியலே இருந்திருக்கின்றது.

இங்கு ஒரு பெண் பர்தா/ஹபாயாவோ, சேலையோ, துப்பட்டவோ அணிய வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. எந்த ஆடையானாலும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் பெண்களுக்கு அவர்கள் இருக்கும் சூழலில் இருக்கின்றதா என்பதே முக்கியமான கேள்வியாகும் பெண்களாக இல்லாத ஆண்களாகிய நாம் அந்தத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காய் பெண்களுக்கு தோழமையுணர்வுடன் இருக்கலாமே தவிர, ஆண்களாகிய நாம் இன்னின்ன ஆடைகள் சரியா/தவறா என்று விவாதிக்கும் எல்லைக்குப் போவதில் அர்த்தமேதும் இருக்கப்போவதில்லை. அதையேதான் ‘ஆடைகளின் அரசியல்’ என்ற என் ஒரு கட்டுரையில் முன்னொரு பொழுது விவாதித்திருக்கின்றேன். இலங்கை/இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமில்லை, கனடா போன்ற மேற்கத்தைய நாடுகளிலும் இந்தச் சிக்கல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. யோர்க் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்புப் பற்றிய கலந்துரையாடலில் ஒரு பொலிஸ் அதிகாரி ‘slut மாதிரி ஆடைகள் அணிந்தால் பாலியல் வன்முறை நடக்கத்தான் செய்யும்’ என்ற கூறியதற்கு எதிராகப் பெண்கள் கிளர்ந்தெழுந்து அதே பெயரில் (Slut Walk) எதிர்ப்புப் பேரணிகளை நடத்திக் காட்டியிருந்தனர்.

ஓர் அரசியல் பிரதியை, பிற இனங்களினால் ஒடுக்குநிலையாக்கப்பட்ட சமூகம் தனக்குள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை, அதன் வீரியத்தோடும், அதேசமயம் தன் சமூகத்தை பிறரிடமும் விட்டுக்கொடுக்காது நிதானமாய் எழுதுவது என்பதை மாஜிதாவின் இந்த ‘பர்தா’ நாவல் நமக்குக் கற்றுத் தருகின்றது. இன்றைக்கு ஈழப்போராட்டம் சார்ந்து எழுதும் பல படைப்பாளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய புள்ளியும் இதுவென்பேன். ஈழத்தமிழரின் அரசியல்/சாதிப் போராட்டங்களைப் பற்றி எழுதப்படும் பல பிரதிகள், ஈழத்தமிழரை ஒருபோதும் அநியாயம் செய்யாத தமிழராகவோ அல்லது முற்றிலும் அநியாயம் செய்தவர்களாவோ நிதானமற்று எழுதப்படும்போது பிரதிகளின் நம்பகத்தன்மை மட்டுமின்றி, இந்த உண்மைகளை நன்கு அறிந்த நமக்கு எரிச்சலும் வந்துவிடுகின்றது.

கிழக்கில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் எப்படி பர்தா உள்நுழைந்து அதனோடு சேர்ந்து ஹபாயாவும் பிற்காலத்தில் இணைகின்றதென்பதை துண்டு துண்டான காட்சிகள்/சம்பவங்களினூடாக ‘பர்தா’ முன்வைக்கின்றது. அதை எப்படி முஸ்லிம் பெண்கள் எதிர்கொண்டார்கள் / ஏற்றுக்கொண்டார்கள் / எதிர்ப்புக்காட்டினார்கள் என்பதை நாம் இதை வாசிப்பதனூடாக அறிந்துகொள்கின்றோம். இந்நாவலின் கதைசொல்லியான சுரையாவின் பெற்றோரான பீவியையும், ஹாயத்து லெப்பையையும் கூட அவர்கள் பர்தா/ஹபாயாவை சுரையாவின் மீது திணிக்கின்றவர்களாக இருந்தாலும், அவர்களையும் நாம் காலவோட்டத்தின் இயல்பில் வைத்துப் புரிந்துகொள்கின்றோம். 


சுரையா, அவரின் உம்மா பீவி, புலம்பெயர்ந்த நாட்டிலே பிறந்த சுரையாவின் மகள் ராபியா மூவருமே பர்தா/ஹபாயா பற்றி வெவ்வேறு விதமான பார்வைகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருந்தாலும், இந்த மூன்று தலைமுறைப் பெண்களும் அது பர்தாவோ இல்லை வேறெந்த உடையோ அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தமக்கு நிச்சயம் வேண்டுமெனத்தான் வெளிப்படையாகவோ அல்லது உள்மனதிலோ விரும்பியிருப்பார்கள் என்பது வாசிக்கும் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

‘பர்தா’வை வாசித்துக் கொண்டிருக்கும்போது,  வேலைக்குப் போனால் இலங்கையில் கட்டாயம் சேலை அணிந்து செல்லவேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகவே புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு வர விரும்பிய என் தோழியொருவர் நினைவுக்கு வந்தார் (அவ்வாறே இலங்கை பஸ்களில் நடந்த பாலியல் சுரண்டல்களால், அதைக் கடைசிவரை பாவிக்காத பல தோழிகளின் கதைகள் நானறிவேன்). அதேபோல் என் நெருங்கிய தோழிகளில் இருவர் சேலையை ஒருபோதும் அணிய விரும்பாதவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. இந்த என் தோழிகளைச் சமூகம் வற்புறுத்தி அணியச் சொல்லியிருந்தால் அவர்களுக்கும் சேலை இன்னுமொரு பர்தாவாகவே நிச்சயம் ஆகியிருக்கும். ஆகவேதான் நான் 'பர்தா' என்ற இந்தப் புனைவை ஒரு மதத்திற்குள் அடக்காது, ‘பெண்களின் ஆடைகளின் அரசியல்’ என்ற விரிவான தளத்தில் வைத்து உரையாட முடியும் எனச் சொல்கின்றேன்.

இந்தப் புனைவில் இலண்டனில், இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு எதிர்ப்பும், பலியானவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கும் நிகழ்வொன்றோடு தொடங்கின்றது. எந்த அடிப்படைவாதமும் முதலில் பெண்களின் உடல்கள்/ஆடைகள்/நடமாட்டங்களைக் கண்காணிப்பதோடு தொடங்கி மனிதவுயிர்களைக் காவு கொள்கின்றதாகக் கூட மாறக்கூடுமென்பதை மறைமுகமாக மாஜிதா நாவலின் உள்ளே, பர்தா/ஹபாயாவை அணிய வற்புறுத்தும் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களின் செயற்பாடுகள் ஊடாகச் சொல்லவும் செய்கின்றார். இன்று அவ்வாறான ஒரு அடிப்படைவாதத்தை இறக்குமதி செய்ய இந்தியாவின் ஆர்,எஸ்.எஸ்/பிஜேபி சார்பானவர்கள் இலங்கை மண்ணில் வந்திறங்குவதையும் நமக்கான எதிர்கால எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும்.

இந்தப் புனைவில் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த சுரையாவின் மகளான ராபியாவிற்கு பர்தா/ஹபாயா என்பது வேறு ஒரு அர்த்தத்தை இறுதியில் கொடுக்கின்றது. அவ்வாறான ஒரு கலாசார அடையாளத்தை, புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு, என் தோழிகளைப் போல ‘சேலையின் அரசியல் தெரியாது’ புதிய அடையாளத்தையும் பெருமையையும் கொடுப்பதைப் பார்த்திருக்கின்றேன். இங்கே நாம் எந்த ஆடை சரி/பிழை என்று விவாதிப்பதைவிட, இந்த ஆடைகளின் அரசியலைத் தெரிந்து தமக்கான தேர்வுகளைப் பெண்கள் எடுக்கும் வெளிகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றியே நாம் விரிவாக உரையாடவேண்டும்.

அந்தவகையில் மாஜிதாவின் 'பர்தா' பல்வேறு உரையாடல்களை நாம் நிதானமாகச் செய்வதற்கான வெளிகளைத் தருகின்றது. முக்கியமாய் பலநூறு பக்கங்களில் எழுதிக்கூட நம் மனதைத் தீண்டாத எத்தனையோ நாவல்கள் இருக்கும்போது, மிகக் கச்சிதமாக 130 பக்கங்களில் எழுதப்பட்ட ‘பர்தா’ நம்மை எங்கெங்கோ யோசிக்க சிந்தனைகளை இழுத்துச் செல்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

********************


(Feb 18, 2023)

பவளமல்லிப்பூ குறிப்புகள்

Wednesday, August 09, 2023

 

 

ரமேஷ் பிரேதனிடம் மார்க்சிசம், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, தெரிதாவின் "Specters of Marx" பற்றிப் பேச்சு வந்தது. அநேகமான பின்னமைப்பியல்வாதிகள் மார்க்ஸை ஏற்றுக்கொண்டு அவரைத் தாண்டி, அவருக்குப் பிறகான காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை முன்வைத்து தமது சிந்தனைகளை விரித்தெடுத்திருந்தனர். ஆனால் இன்றைக்கும் இவற்றை நன்கு தெரிந்தும், தமிழ்ச்சூழலில் இருக்கும் மார்க்சியர்கள் தெரிதா, ஃபூக்கோ, பார்த் போன்ற பின்னமைப்பியல்வாதிகளை மார்க்ஸியத்துக்கு எதிர்முனையிலே வைத்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர். எனது ஸென் ஆசானான தாய் (Thich Nhat Hanh) மிக இளவயதிலேயே துறவு பூண்டாலும், இறுகிப்போன புத்தயிஸத்தைக் கண்டு மடாலயத்தில் இருந்து வெளியேறி இன்றைய காலத்துக்கேற்ற Engaged Buddhismஐ முன்வைத்தவர். அதன் தீ அணையாமல் இறுதிவரை பார்த்ததோடல்லாது அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தியவர். அவ்வாறு ஒரு Engaged Marxism தான் நமக்கு இப்போது வேண்டியிருக்கிறது. அதற்கான ஆரம்பப் புள்ளிகளை ஃபிராங்க்போர்ட் மார்க்ஸியர்கள் (Frankfurt School) செய்ய முயன்றிருந்தனர்.

இன்றைக்கும் ஒடுக்கப்படும் இனங்களை/விளிம்புநிலையினரை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை மார்க்ஸிலிருந்தே ஏற்றோ/முரண்பட்டோதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. ஒரு படைப்பாளியாக நாம் நெருக்கம் கொள்ளவும், நட்புடன் கைகோர்த்துச் செல்லக் கூடியதாக இருப்பதும் மார்க்ஸிசமே. ஆகவே செங்கொடி என்பது நமக்கோர் முக்கியமான அடையாளமே. ஆனால் நான் இங்கே இறுகிப்போன மரபு மார்க்ஸியர்களையோ, இடதுசாரித்துவம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களைப் பற்றியோ பேசவில்லை. 

0000000000

 

குப்பிளான ஐ.சண்முகன்


“அவன் தனிமையான வாழ்வையே விரும்பினான். இந்த உலகின் பாசங்கள், நேசங்கள், சோகங்கள், உணர்ச்சிக் குமுறல்கள் எல்லாவற்றினின்றும் ஒதுங்கி வாழ முற்பட்டு தனிமையில் இன்பங் காண விழைந்தான்” என்று கருணாகரனை, கதைசொல்லி ‘அவனுக்கென்று ஓர் உலகம்’ (1969) கதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கருணாகரன் இயற்கையில் தோய்ந்து தனிமையில் வாழ விரும்புகின்றவன். அவ்வாறு இருக்க விரும்புகின்ற கருணாகரனுக்கு ஒரு காதல் வந்து அதில் திளைத்தும் வாழ்கின்றான். பின்னர் வர்க்க நிலையால் காதல் பிரிவும் வருகின்றது. ஏழையென்பதால் குடும்பம் அவனை வற்புறுத்த, வேலை தேடி வேற்றூருக்குச் செல்கின்றான். அங்கே போனவன் இயற்கையையும் தனிமையையும் விரும்பி வேலையை விட்டுவிட்டு எங்கேயோ காணாமற் போகின்றான் என்பதோடு இந்தக் கதை முடியும். எளிமையான கதை ஆனால் அவ்வாறிருக்க விரும்பும் மனிதர்களுக்கு இந்த உலகம் எதை வெகுமதியாகக் கொடுக்கின்றது என்பதற்கு 50 வருடங்களுக்கு முன் வினா எழுப்பப்பட்டிருக்கின்றது. இன்றும் ஒரு மனிதன் இயல்பாக இருக்க முடியாது, அலைக்கழிக்கப்பட்டபடி, தனக்கான வாழ்வை வாழ முடியாதேயிருக்கின்றான்.

‘அரியத்தின் அக்காவுக்கு (1971) கதை ஒரு கடிதம் வடிவிலானது. கதிர்காமத்துக்கும், மாணிக்கக் கங்கைக்கும் போய் இயற்கையில் திளைத்த இளங்கோவும், அவனது நண்பர்களும், மீண்டும் இயந்திரத்தனமான நகர வாழ்விற்குத் திரும்பவேண்டுமா என சலித்தபடி பஸ் ஏறுகின்றார்கள். அந்தப் பயணத்தின்போது அரியம் என்று சிறுமியின் பெயர் தெரியாத அக்காவின் மீது இளங்கோவுக்கு மையல் வருகின்றது பஸ் அம்பாந்தோட்டை, மாத்தறை என கடும் வரட்சிப் பிரதேசத்தில் பயணித்தாலும், அரியத்தின் அக்கா மீது ஏற்படும் நேசம் இளங்கோவுக்கு மகிழ்வளிக்கிறது. எனினும் பஸ் தரித்து நிற்கும்போது அரியத்தின் அக்கா இளங்கோவின் நண்பனோடு பேச, அரியத்தின் அக்காவுக்கு தன் மேல் காதலில்லை என்று நினைத்து அவளோடு பேசாது, ஓர் ஊடலோடு அந்தப் பஸ் பயணம் மட்டுமில்லை, பிறகு மாத்தறையில் இருந்து கொழும்புக்கான ரெயின் பயணமும் முடிந்துவிடுகின்றது. காலம் பிந்தி அரும்பிய காதலும் கருகிப்போக இளங்கோ எழுதுகின்ற ஓர் மடலே கதையாகின்றது.

அதுமட்டுமின்றி ‘ரெயில் பயணம்’ (1968), ‘பிரிவதற்குத்தானே உறவு’ (1969), ‘உணர்ச்சிகள்’ (1970) என இந்தக் கதைகளில் வருகின்ற கதைசொல்லி பெண்களைத் தற்செயலாகச் சந்திக்கவோ அல்லது சந்தித்தாலும் மெளனத்தால் கடந்துசெல்கின்ற ஒருவராகவே இருக்கின்றார். ஆனால் இப்பெண்கள் மீது மென்காதல் வயப்படுகின்றார். பிறகு அதே மென்சோகத்துடன் அந்த அனுபவங்களைக் கடந்து போகவும் செய்கின்றார். இவ்வாறான மென்னுணர்ச்சிகளுக்கு மிக முக்கியம் கொடுத்து எழுதிய ஒரு அழகியல் படைப்பாளியாக குப்பிழான் ஐ.சண்முகனை நான் கொள்வேன்.

50 ஆண்டுகளுக்கு முன் இயற்கையிலும், ஏகாந்தத்திலும், மனோரதிய மனோநிலையிலும் வாழ விரும்பிய ஆண் பாத்திரங்கள், இப்போது வாசிப்பவர்களையும் எழுத்தின் வழி ஈர்ப்பதென்பது அவ்வளவு எளிய விடயமல்ல.

‘கோடுகளும் கோலங்களும்’ என்ற தலைப்பில் 1976இல் அலை வெளியிட்ட பத்துக் கதைகளும், பிறகு அந்தப் பத்துக்கதைகளோடு மிகுதிக் கதைகளையும் சேர்த்து 1983இல் வெளிவந்த ‘சாதாரணங்களும், அசாதாரணங்களும்’ கதைத் தொகுப்பும், குப்பிழான் ஐ.சண்முகத்தின் முக்கிய படைப்புக்கள் என்பேன். பின்னரான காலங்களில் வந்த ‘ஒரு பாதையின் கதை’ போன்றவை என்னை அவ்வளவு வசீகரிக்கவில்லை.

குறைந்தளவு எழுதினாலும், பாதிக்கக்கூடியவற்றை எழுதினால் எப்போதும் நினைவில் நிறுத்தக்கூடிய ஓர் மரபு ஈழத்துக்கு உரியதென்று பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருப்பேன். குப்பிழான் ஐ.சண்முகத்தை அவரின் 'கோடுகளும், கோலங்களும்’ மற்றும் ‘சாதாரணங்களும், அசாதாரணங்களும்’ ஆகிய தொகுப்புக்களின் மூலம் நான் என்றும் நினைவுகூர்வேன்.

அவருக்கு என் அஞ்சலிகள்!

0000000000


பிரமிள் வாழ்ந்த வீடு...

பிரமிள் தனது பெற்றோருடன் திருக்கோணமலையில் வாழ்ந்தவர். அவரின் தகப்பன் சுருட்டு வியாபாரியாக இருந்திருக்கின்றார். பண நெருக்கடி காரணமாக பிரமிளின் தாயார் இந்த வீட்டை (இப்போதிருக்கும் வீடல்ல) அன்றைய கால மதிப்பில் 5,000 ரூபாயிற்கு ஈடு வைத்திருக்கின்றார். ஒழுங்கான ஈட்டுப் பத்திரம் இல்லாததாலோ என்னவோ, இந்த இடம் அடகு வைக்கப்பட்டவர்களால் பின்னர் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. இப்போது இது ஒரு தனியார் வைத்தியசாலையாக இயங்குகிறது. பிரமிள், சிவராமலிங்கம் என்றே இங்கே இருப்பவர்களால் நினைவு கூரப்படுகின்றார். அவரின் தாயார் அன்னலட்சுமி பின்னர் யாழ்ப்பாணத்தில் சிலகாலம் வாழ்ந்து காலமாகியிருக்கின்றார்.

பிரமிள் இங்கு இருக்கும்போதே ஓவியராகவும், சிற்பக் கலைஞராகவும் மிளிர்ந்திருக்கின்றார். அவர் மிக நுட்பமாக குறைந்த வளங்களை வைத்து சிற்பங்களைச் செதுக்குவதைப் பலர் கண்டிருக்கின்றனர். வீட்டு வளவு நிறைய பூமரங்கள் இருந்திருக்கின்றது. வீதியால் போகின்றவர்கள் (அருகில் காளி கோயிலும் இருக்கின்றது) தாகந் தீர்ப்பதற்காய் ஒரு பெரியபானையில் தினமும் பிரமிள் தண்ணீர் வைப்பாராம். தனது வீட்டை விட்டு வெளியே போகப் பிரியப்படாத, எப்போதும் நான்கு முழ வேட்டியணியும் பிரமிள், சிலவேளைகளில் தலைகீழாக (யோகா?) நின்றெல்லாம் காட்டி ஒரு eccentric வாழ்க்கையும் வாழ்ந்திருக்கின்றார்.

இவை அனைத்தும் அவரைப் பார்த்த, அவரோடு பழகிய எங்கள் சித்தப்பா சொல்லக் கேட்டது.

**********


Pages & Coffee

Monday, August 07, 2023

 

சில ஊர்களின் தனித்துவப் பெயர்கள் என்னைக் கவர்ந்திழுப்பதுண்டு. அப்படித்தான் இந்தக் கஃபேயின் பெயரும் என்னை அப்படி ஈர்த்திருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்த கஃபேயிற்குப் போகும்போது மூடிவிடுவார்கள். ஒரு கஃபேயை மாலை ஏழு மணிக்குள் கதவடைப்பது என்பது மிக்க அநியாயம். இவர்களுக்கு ‘இரவு என்பது ஏழு மணிக்குப் பிறகுதான் இன்னும் இளமையாக இருக்கும்’  என ஒருவரும் சொல்லியிருக்க மாட்டார்கள் போலும். இறுதியில் உள்ளே நுழையும் சந்தர்ப்பம் நேற்று அமைந்தது. கஃபேயின் பெயரைப் போல நிறையப் புத்தகங்கள் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன.


சில இடங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் அதிர்வுகள் நமக்குப் பொருந்தாதிருக்கும்.  எந்தக் கணத்தில் என்றாலும் எம்மை அமைதியிழக்கச் செய்து வெளியேற்றிவிடும் பதற்றத்தை அவை தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த கஃபேயிற்குள் நுழைந்தபோது வேறொரு அதிர்வு வந்திருந்தது. கொழும்பில் சில கஃபேயிற்குள் சேகுவரா, மார்க்ஸ், முகமது அலி, ஜான் லெனன் என நமக்குப் பிடித்தவர்களைக் கொண்டு அலங்கரித்திருப்பார்கள். முன்னர் இவர்கள் உண்மையான இடதுசாரிப் பின்னணியில் வந்திருப்பார்களோ என்ற தோற்றமயக்கமுற்று கஃபேக்களை நிறுவியவர்களின் பின்னணியை அறிய ஆவலுறுவதுண்டு. இப்போது கப்பிட்டஸிஸ்ட் மட்டுமில்லை, மார்க்சியர்கள் கூட இறுதியில் நவ தாராளவாதத்தில் வந்து சேரும் நுட்பமான இடங்களைக் கண்டு ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொண்டாயிற்று. மேலும் நாமென்ன புரட்சி செய்யவா கஃபேக்களுக்குப் போகின்றோம், முதலீட்டியத்தின் முக்கிய கூறான நுகர்வோரின் ஓர் அங்கமாக எப்போதோ ஆகியும் விட்டோம் அல்லவா?

Latte & Waffle இற்கு உத்தரவு கொடுத்துவிட்டு அங்கிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூலொன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஜே.கே நம்மைச் சரியாக நமது பின்னமைப்பியல்வாதிகளின் நூல்களைப் போலக் குழப்புவார். ஆனால் சரடொன்றைக் கண்டுபிடித்துவிட்டால் நமக்குச் சுவாரசியமாகிவிடுவார். நான் எடுத்து வாசிக்கத் தொடங்கிய பக்கங்களில் ‘விடுதலை/விடுபடுதல்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பேசுவதற்கு முன் நமது ‘பயங்களை’ப் பற்றி பேசுதல் முன்நிபந்தனை என்றபடி எங்கோ இழுத்துக் கொண்டு சென்றார்.

பின்னர் சட்டென்று எவற்றிலிருந்து விடுதலையை நமது மனம் வேண்டுகின்றது என்று கேள்வி கேட்கத் தொடங்கினார். நமது மனதுக்கு உவப்பான சந்தோசம், பேருவுகை போன்றவற்றிலிருந்து விடுதலையை நாம் ஒருபோதும் கேட்பதில்லை. துயரம், வலி போன்ற நமக்குப் பிடிக்காத உணர்ச்சிகளில் இருந்து மட்டுமே நாம் விடுபடுதலை வேண்டுகின்றோம். அப்போது நாம் ஒரு பக்கத்தை எடுத்து மற்றதை விலத்துகின்றோம். ஆனால் மகிழ்ச்சியும், துயரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. ஒன்றைத் தக்கவைத்து, மற்றதில் விடுபடுதல் சாத்தியமானதுமல்ல, அது உண்மையான விடுதலையுமல்ல. மனதில் எதுவும் எஞ்சியிருக்காத தனிமையிலிருந்து வருவதே விடுதலை என்கிறார். ஹிப்பிக்கள் இந்தச் சமூகத்திலிருந்து வெளியேறி அலைந்து திரிந்தது முக்கிய நிகழ்வென்றாலும், அவர்கள் அதை தாங்கள் வாழும் சமூகத்திலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்று நினைப்போடு செய்ததால் அது முழுமையான விடுதலை இல்லை, ஏனெனில் அங்கே ஏதோ ஒன்று இன்னும் மிஞ்சியிருக்கின்றது என்கின்றார் ஜேகே.



இவ்வாறு வாசித்து மனம் விடுதலையை அலசிக் கொண்டிருந்தபோது, வாங்கிய Latteஇற்காக பணம் செலுத்தப் போனேன். அங்கு நின்ற பெண், ‘நீங்கள் எழுதுகின்றவரா?’ எனக் கேட்டார். முதன்முதலாக ஒரு கஃபேயில் randomமாக ஒரு பெண் இப்படிக் கேட்கின்றாரே என வியப்பாக இருந்தது. அத்தோடு நிறுத்தாமல் என்ன எழுதுவீர்கள், புத்தகங்களின் பெயர்கள் என்ன என்றெல்லாம் கேட்டார் (இதற்காகவே இந்தக் கஃபேக்கு 7 மணிக்கு முன்னர் அடிக்கடி வரவேண்டுமென நினைத்தேன்).

நான் இப்படி அன்போடு அந்தப் பெண் ‘குசலம்’ விசாரித்ததில் கரைந்து போய் நிற்பதை, மறுகரையில் இருந்த என் தோழி மோப்பம் பிடித்திருக்க வேண்டும். ஜே.கேயின் விடுதலையை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவருக்கு Modern Love Chennai இன் ‘மார்கழி’யை என் அலைபேசியில் Amazon Prime ஊடு பார்க்கக் கொடுத்திருந்தேன். என்னையும் கூடச் சேர்ந்து அதைப் பார்க்கக் கேட்டபோது, என் மருமகளின் வயதில் இருப்பவர்க்கான எபிசோட்டை நான் பார்க்கமாட்டேன் என நிராகரித்திருந்தேன். ஆனால் அவ்வப்போது வாசிப்பின் இடையில் எட்டிப் பார்த்தபோது அதன் மலை/மழை பின்னணி, அந்த அப்பாவித்தனமான பதின்மக்காதல், எதிர்ப்பால் உடல் மீது வரும் முதன்முதலான ஈர்ப்பு எல்லாம் நாமெல்லோரும் கடந்து வந்திருக்கக் கூடியதுதான் என நினைத்துக் கொண்டேன்.

Modern Love Chennai  இல் வரும் நம்மாளின் எபிசோட் பார்ப்பதென்றால், வேண்டுமெனில் நானும் சேர்ந்து பார்க்கின்றேன் என்றேன். அது தியாகராஜன் குமாரராஜா. எனக்கு அவரின் திரைப்படங்கள் பிறரைப் போல அவ்வளவு கவர்ந்ததில்லை. ஆனால் அவரின் எளிமையும், ஒருவகை நாடோடித்தன்மையும் பிடிக்கும். அண்மையில் மிஷ்கின் கூட நானொரு குழந்தமையைக் கொண்ட ஒருவனைச் சந்தித்தேன், அவன் பின்னர் கொண்டு வர மறந்ததேனெனச் சொல்லி தான் வரைந்த ஓவியத்தை அனுப்பினான் என்று குமாரராஜா பற்றிச் சொல்லியிருப்பார்.

கஃபேயில் ஒலித்த ஒரு எப்ஃ.எம்மில் consensual sex பற்றிய உரையாடல் போகும்போது ‘நினைவோ ஒரு பறவை’ பார்க்கத் தொடங்கினோம். இலங்கையில் ஆங்கில வானொலிகள் மிக முன்னோக்கிய நிலையில் இருந்ததை வேறு சந்தர்ப்பங்களிலும் கண்டிருக்கின்றேன். கனடாவிலிருக்கும் நம் தமிழ் வானொலி ஆட்கள் இவற்றைப் பார்த்தாவது உருப்படியான நிகழ்ச்சிகளை அலுப்பில்லாது செய்வது எப்படியெனக் கற்க வேண்டும். 

நம்மாள் ஏமாற்றவில்லை, ஆனால் இந்தளவுக்குக் காதலை இழுத்திருக்கத் தேவையில்லை. காதல் இப்படி அவ்வளவு அழகாக எல்லோருக்கும் வாய்க்குமா தெரியவில்லை. ஆனால் கற்பனைகள் விரிய விரிய எல்லாவற்றுக்கும் அழகு கூடிவிடுகின்றன. நாம் அதற்குள் நுழையும்போது ஒரு படைப்பின் பாத்திரங்களாய் நாங்கள் உணரவும் தொடங்கிவிடுவோம். அப்போது அந்தக் காதலை நாங்களும் வாழத் தொடங்குகின்றோம்.

மற்ற எபிசோட் போலில்லாது இது நீண்டதென்பதால், இது முடிவதற்குள் கஃபேயை மூடிவிடப்போவதாகச் சொன்னார்கள். நல்லவேளையாக அதன் ஒருபகுதியாக வெளியே தேமாப்பூ மரம் சூழ சில பெஞ்சுகள் இருக்க நாம் அங்கே போய் அதை முழுதாய்ப் பார்த்தோம்.

பிறருக்கு தேமாப்பூ, எனக்கு அது வெள்ளையாக இருக்கும்போது பாதிரிப்பூதான். மரத்திலிருந்து உதிர்ந்த சில பாதிரிப்பூக்களை எடுத்து தோழிக்குக் கொடுத்தேன். அவர் அதைச் சூடிக்கொண்டு நான் உனக்கு, உன் பிரியமுள்ள புத்தரா என்றார். நீங்கள் புத்தரென்றால், நான் இன்னமும் ‘பாவங்கள்’ செய்தபடி புத்தரின் காலடிக்கு வந்துவிடாத ஆமிரபாலி என்றேன்.

இவ்வாறு இந்த மாலை/இரவு ஒருவகைப் பேருவுகையைக் கொண்டு வந்திருந்தது. புத்தகங்கள் சூழ, யன்னலுக்குள் மரங்கள் அசைவதைப் பார்த்து, ஜேகேயின் நூலை வாசித்து அசைபோட்டபடி, ‘நினைவு ஒரு பறவை’யாக அவ்வப்போது சிறகடிக்க நான் அமைதியையும் உணர்ந்தேன்.

சிலவேளைகளில் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான் எனக்கு வாய்த்திருக்கின்றதோ என்னவோ. ஓஷோ தியானத்தில் வரும் Valleys and Peaks ஐ, சிலவேளைகளில் நாங்கள் love making இன் போது அந்தக் கணநேரத்து Peaks களை உணரமுடியும் என்கின்றார். ‘நினைவோ ஒரு பறவை’யில் நாயகி orgasm இன் பொழுது தனக்குள் short term memory loss ஆகி தான் இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைந்துவிடுவதான பிரமை வருகின்றது என்கின்றாள்.

ஏதோ ஒருவகையில் நாம் நமது நாளாந்த நெருக்கடியிலிருந்து கொஞ்சப் பொழுதாவது விடுதலையாக வேண்டும்.

எழுதுகின்றவனா எனக்கேட்டு என் பொழுதுக்கு வர்ணமூட்டிய இந்தப் கஃபே பெண்ணுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும். ஜேகேயை வாசித்து, என் அத்தனை குழப்பங்களோடும்  நான் அவரைப் புரிந்துகொள்ள rephrase செய்ததைப் பொறுமையாகக் கேட்ட என் தோழியை நேசத்துடன் அரவணைக்க வேண்டும். இவையும் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான்.


இந்த இரவு இன்னும் இளமையாகவே இருக்கின்றது!

*************************************


(May, 2023)


பாவாவின் (Geoffrey Bawa) 'லுனுகங்க'

Wednesday, August 02, 2023

 

பாவாவின் வடிவமைப்புகளுக்கு ஒரு தனித்துவம் இருப்பதுபோல, அவருக்கு தேமாப்பூக்கள் அளவிறந்த ஈர்ப்பு இருக்கின்றது. அவர் வடிவமைத்த கட்டடங்கள் ஓவ்வொன்றின் அருகாமையிலும் இந்த தேமாப்பூ மரங்கள் விரிந்து நிற்கும். இவ்வாறே பாவாவின் சகோதரரான Bevis Bawa வின் பெந்தோட்டையில் இருக்கும் வீட்டிற்கும், தோட்டத்திற்கும் போனபோது, இந்த தேமாப்பூ மரங்களே தனித்து அந்த வீட்டுக்கு முன்னாள் நின்றன. ஜிப்ரி பாவாவைப் போல அவரது சகோதரரும் தோட்டக்கலை வல்லுனர் ஆவர் (Landscape Architect).


ஜிப்ஃரி பாவா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக (1948-1998) லுனுகங்காவோடு தொடர்புபட்டவர் எனவே தொடர்ச்சியாக இந்த வீட்டின் அமைவிடங்களை மட்டுமில்லை, அது சூழ்ந்திருந்த நிலப்பரப்பையும் மாற்றிக்கொண்டேயிருந்தவர். பாவாவிற்கு எப்போதும் பாவித்து எறியப்படும் பொருட்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்திருக்கின்றது. அவரின் தோட்டத்தை அழகுபடுத்தும் பெரும்கலயங்கள் ஏற்கனவே ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட சீனத்துப் பொருட்கள். அவ்வாறே முன்பு புகையிரத நிலையங்கள் பாவிக்கப்பட்ட மரப்பெஞ்சுகளையும் எடுத்துக் கொண்டு வந்து பாவித்திருக்கின்றார்.

 

Geoffrey Bawa ஒரு தலைசிறந்த architect என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அவர் 1919இல் இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் 2ம் உலக மகாயுத்தகாலத்தில் இலங்கைக்கு வந்து சட்டத்துறையில் வேலை பார்க்கின்றார். எனினும் தாயாரின் மறைவையடுத்து, தனது தொழிலைக் கைவிட்டு ஐரோப்பா, அமெரிக்கா எனப் பயணிக்கத் தொடங்கினார். இத்தாலியில் வீடு வாங்கி அங்கேயே வாழ நினைத்த பாவாவை இலங்கை மீண்டும் இழுத்துக் கொண்டு வருகின்றது.


அப்போது (1948) இல்,  பெந்தோட்டைக்கு அருகில் இந்த  15 ஏக்கர் நிலப் பரப்பை வாங்குகின்றார். அதற்கு லுனுகங்கா என பாவா பெயரிடுகின்றார். சிங்களத்தில் உப்பு ஆறு என்று அர்த்தம் வரக்கூடியது. பாவா இந்த இடத்தில் இத்தாலியன் தோட்டமொன்றை வீடொன்றுடன் சேர்த்து அமைக்க முயல்கின்றார். எனினும் காடு அடர்ந்த இந்த இடத்தில் அவரது முயற்சி, அவருக்கு தோட்ட/வீடு வடிவமைக்கும் அறிவு இல்லாததால் தோல்வியடைகின்றது. பின்னர் பாவா மீண்டும் இங்கிலாந்துக்கு architecture படிக்கச் சென்று, பட்டத்துடன் தனது 38வது வயதில் இலங்கைக்குத் திரும்புகின்றார்.

பாவாவின் வடிவமைப்பில் இருக்கும் பல கட்டடங்கள் இப்போது பொதுமக்களின் பார்வைக்கு இல்லை. அவை இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசான விடுதிகளாக இங்கே மாற்றப்பட்டிருக்கின்றன. பாவா அன்றைய காலத்தில் 15 ஏக்கராக நிலத்தை வாங்கியபோது, அதற்கான வருடாந்த வரியை நிறையச் செலுத்தவேண்டியிருந்தது. எனவே இந்த நிலத்தை ஒரு பண்ணையாக மாற்றியிருக்கின்றார். வேளாண்மை செய்யும் நிலத்துக்கு வரி குறைவு. அன்று கோழிப்பண்ணையாக இருந்த இடம், பின்னர் கண்காட்சிக் கூடமாக இருந்து, இப்போது பயணியர் தங்கும் விடுதியாகிவிட்டடது.

இந்த நிலப்பரப்பைப் போல 10 ஏக்கர் நிலப்பரப்பை அருகிலுள்ள வாவிக்கு நடுவிலும் வாங்கியிருக்கின்றார். இன்றுவரை அதில் எதுவும் நிர்மாணிக்காமல் பறவைகளுக்கான காடாக அதை அப்படியே விட்டு வைத்திருப்பது மகிழ்வு தரக்கூடியது.

 

எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் (ஒரு தமிழர்) பாவாவிற்கு விருப்பமான இடங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தார். பாவா காலையில் தேநீர் அருந்தும் இடத்துக்குத் தொலைவில் வாவி இருந்தாலும் அதைப் பார்க்கும்படியாக்க நிலப்பரப்பை அவர் மாற்றி அமைத்திருக்கின்றார். அதுபோலவே இன்றும் நிறையத் தேமாப்பூக்கள் அழகு சேர்க்க, நெல் விதைக்கும் நிலன்கள் இருக்கின்றன. பாவா உள்ளே அமைத்திருக்கும் குளம் வண்ணத்துப்பூச்சியின் வடிவிலானது. இந்த நிலப்பரப்பு ஒருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டமாக இருந்தாலும் பாவா நிறைய பழமரங்களை நட்டு வளர்த்திருக்கின்றார். அந்தப் பராம்பரியம் பாவா காலமாகி 20 வருடங்களான பின்னும் தொடர்கின்றது.  எனவே போகும் வழியெங்கும் ஏதேனும் ஒரு பழத்தை நாங்கள் சுவைத்துக் கொண்டு போகமுடியும். நான் நாவல்பழம், வெரலு, ஈச்சம்பழம் இன்னும் பெயர் நினைவில் நிற்கா சில சிங்களப்பெயருள்ள பழங்களைச் சுவைத்துப் பார்த்தேன்.

பாவா இறுதிவரை திருமணம் செய்யாதிருந்தவரென்றாலும், அவருக்கு இருபாலினரிலும் காதலர்கள் இருந்திருக்கின்றனர் என எமது வழிகாட்டி சொன்னார். பாவா தன் காதலர்களுடன் தனிமையில் இருக்கும் இடத்தோடு எமது லுனுகங்கா பயணம் முடிந்தது. பாவா கடைசிக்காலங்களில் ஸ்ட்ரோக் வந்து கோமாவிற்குள் போனவர்.   லுனுகங்காவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடைசி சில வருடங்கள் இந்தச் சிக்கலுடன் உயிர் வாழ்ந்தவர்.


அவரின் இறுதிவிருப்பப்படியே அவரின் அஸ்தி லுனுகங்காவில் வீசப்பட்டது. அதற்கென ஒரு சிறு அடையாளம் ஒரு மரத்தின் கீழ் எவ்வித பெயர்/வாசகமின்றி இருக்கின்றது. அந்த மரத்தின் (பெயர் மறந்துவிட்டேன்) பூக்கள் அவ்வளவு வாசனையானது. அந்த வாசத்தைப் போல பாவாவும் நீண்டகாலம் மக்களின் மனங்களில் இருந்து மறையாது வாழக்கூடும்.

 

********************


(May, 2023)

 


கார்காலக் குறிப்புகள் - 15

Tuesday, August 01, 2023

 

'ஒரு அறிவுஜீவியின் பகல்நேர வேடம்'

1.


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வளாகத்தில் கற்கும் சகமாணவியைப் பற்றிய செய்தியொன்று அப்போது பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அவர் சட்டக்கல்லூரி மாணவர். கல்விச் செலவுக்காக நிர்வாண விடுதியில் நடனம் ஆடிக் கொண்டிருப்பதாய் அதில் சொல்லியிருப்பார். அவர் வெளிப்படையாக தனது புகைப்படத்துடன் தன்னை அந்தப் பத்திரிகையில் முன்வைத்தது எனக்கு ஒருபக்கம் அதிர்ச்சியாகவும், இன்னொருபக்கம் வியப்பாகவும் இருந்தது. பிறகான காலத்தில் வளாகங்களில் படித்த சில பெண்கள் தங்களுக்கு sugar daddyக்கள் இருக்கின்றார்கள் என்று வாக்குமூலம் கொடுத்த செய்திகளை வாசித்தெல்லாம் எளிதாகக் கடந்து வந்திருக்கின்றேன். சமூகம்/வறுமை/குடும்பப் பொறுப்பு/தனிப்பட்ட விருப்பு என்று எத்தனையோ காரணங்கள் பின்னிப்பிணைந்து இதன் பின்னணியில் இருப்பதை இவை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தால் நமக்குப் புலப்படும்.

கே.மீராவின் ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலில், ஒரு சட்டத்துறை மாணவியான ராதிகா வாசகர்க்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார். அவரின் சிக்கலான பின்னணி இங்கே விபரிக்கப்படுகின்றது. ராதிகா எப்போது நினைத்தாலும் அவரைப் பைத்தியம் வைக்கச் செய்யும் பத்து வயது நினைவொன்று அவருக்குள் உண்டு. சித்திரம் வரைதலில் ஆர்வமுள்ள ராதிகாவை, அவர் பத்து வயதில் இருக்கும் அவரின் தந்தை இன்னொரு ஊருக்கு ஓவியப்போட்டிக்காய் அழைத்துச் செல்கின்றார். போட்டி முடிந்து வரும் ராதிகாவை தெருவின் மூலையில் நிற்கச் சொல்லிவிட்டு, தந்தை சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டு வருவதாகச் சொல்கிறார். ஆனால் அவர் பாருக்குச் சென்று குடித்து, அந்த ஊரின் பிரபல்யமான பரத்தையான பார்வதியைத் தேடிப் போகின்றார். அந்தவேளையில் நிகழும் பொலிஸ் சுற்றிவளைப்பால், ராதிகாவின் தந்தையைப் பொலிஸ் பிடித்துக்கொண்டு போகின்றது. தனித்து தெருவில் பரிதவித்து நிற்கும் பத்துவயதுச் சிறுமியை ஒரு மரம்வெட்டி தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கின்றான். கஞ்சியும் மரவள்ளியும் சாப்பிடக் கொடுத்துவிட்டு, ராதிகா அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அந்த மனிதன் பாலியல் வன்புணர்வைச் செய்கின்றான்.

பிறகான காலத்தில் தகப்பன் ராதிகாவுக்கு இவ்வாறு நிகழ்ந்தது அறிந்து பைத்தியமாகின்றார். அவரால் வேலை செய்ய முடியாததால், ராதிகாவையும், அவளின் தம்பியையும், நோயுற்ற கணவனையும் காப்பாற்ற ராதிகாவின் தாய் இன்னொரு ஊருக்கு வேலைக்குப் போகின்றார். ராதிகா சட்டம் இரண்டாமாண்டு படிக்கும்போது தாய் சடுதியாக இறந்து போகின்றார். தாய் செய்துகொண்டிருந்த பொறுப்பு அனைத்தும் இப்போது ராதிகாவின் தலைமீது விழுகின்றது. தம்பி, தந்தை எல்லோரையும் காப்பாற்றவேண்டிய பாரிய சுமை. தாயின் மரணத்துக்குப் பின்னரே தாய் செய்துகொண்டிருந்தது பாலியல் தொழில் என்பது தெரிகின்றது. ராதிகாவும் தொடர்ந்து படிப்பதற்காகவும், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தாய் செய்த அதே தொழிலுக்குச் செல்கின்றார்.

அங்கேதான் முதன்முதலில் கிறிஸ்டியைச் சந்திக்கின்றார். ராதிகாவின் முதல் வாடிக்கையாளர் கிறிஸ்டி, ஆனால் அவ்வளவு மூர்க்கமாக அவன் ராதிகாவோடு நடந்துகொள்கின்றான். அடுத்த செமஸ்டரில் சட்டக்கல்லூரியில் கிறிஸ்டியை மீண்டும் காண்கின்றாள். கிறிஸ்டி அதே கல்லூரியில் பெரிய இயக்கமொன்று நடத்துபவனாக இருக்கின்றான். திரைப்பட விழா நடத்த பணம் கேட்க ராதிகாவிடம் வருகின்றான். உன்னை எங்கையோ பார்த்திருக்கின்றேன் என்று கிறிஸ்டி ராதிகாவிடம் சொல்கின்றான். அவனுக்கு இப்போது ராதிகா யாரென்பது நினைவுக்கு வருகின்றது. தன்னிடம் கொடுப்பதற்கு பணமில்லை என ராதிகா சொல்கின்றபோது ‘ ஒரு வேசியின் ஒழுக்கம்’ எனத் திட்டுகின்றான். அதற்கு ராதிகா, ‘ஒரு அறிவுஜீவியின் பகல்நேர மரியாதை வேடம்’ எனச் சுள்ளெனப் பதிலளிக்கின்றாள்.

ராதிகாவால், பரத்தையான பார்வதியைப் போல ஆக முடியாதென்பது அவளுக்குத் தெரிகின்றது. சட்டப்படிப்பைக் கைவிட்டு வீட்டு வேலைகளுக்குப் போகத் தொடங்குகின்றாள். கல்லூரிக்கு வருவதை நிறுத்திய ராதிகாவைத் தேடி, கிறிஸ்டி வருகின்றான். நீ எப்படியெனினும் படிக்கவேண்டும் என்று ராதிகாவைத் தொடர்ந்து படிக்க வைக்கின்றான்.



2.


இப்போது ராதிகா ஒரு வழக்கறிஞர். அவள் அஜித் என்கின்ற அவளின் தகுதிக்குப் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்துவிட்டாள். 1989இல் சட்டக்கல்லூரியில் படித்த அப்பாவியான ராதிகா இப்போது கதை நிகழும் காலமான 2005இல் இல்லை. அவளைத் தேடி கிறிஸ்டி ஒரு விசித்திரமான வழக்கைப் பதிவுசெய்யவேண்டுமென வருகின்றான்.

பழைய நினைவுகள் ராதிகாவிற்குள் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்டி அவளின் நேசத்துக்குரிய காதலனாகவும் இருந்திருக்கின்றான். அப்போது எவருடனும் பகிரமுடியாத சிறுவயது துர்நினைவை பத்து வருடங்களின் பின் ராதிகா கிறிஸ்டியோடு மட்டுமே பகிர்ந்துகொள்கின்றாள். நான் அன்று ‘ஒரு மரம் போல குளிர்ந்து மரத்துப் போனேன்’ என்று அத்துர்நினைவின் ஒரு துளியும் மறக்காது ராதிகா நினைவுகூர்கின்றாள்.

கிறிஸ்டி நல்லதொரு காதலனாக இருக்கின்றான்; ஆனால் அவனுக்குள்ளும் மூர்க்கமான ஓர் ஆண் ஒளிந்திருக்கின்றான். காதலும் காமமுமாக கிறங்கிய வாழ்வில், ஓர் நாள் ராதிகா கருவுருகிறாள். எவ்வளவு சொன்னாலும் கிறிஸ்டி ஒரு குழந்தைக்குத் தன்னால் தந்தையாக முடியாது என்று அடம்பிடிக்கின்றான். நீ எது சொன்னாலும் எனக்குக் குழந்தை வேண்டும் என்கின்ற ராதிகாவை விட்டுப் பிரிகின்ற கிறிஸ்டி, ஒருநாள் சடுதியாகத் தோன்றி ஒரு மலைப்பிரதேசத தேவாலயத்தில் அவளை மணம் முடித்துக் கொள்கின்றான். ஆனால் திரும்பிவருகையில் கிறிஸ்டி மூர்க்கமாகி ராதிகாவின் ஆடைகளைக் கிழித்து மோசமாக புணர்கின்றான். ‘அவன் ரம்பம் போல எனக்குள் நுழைந்தான்’ என்கின்ற மாதிரியான மோசமான அனுபவம் ராதிகாவுக்கு நிகழ்கின்றது. அத்தோடு ராதிகாவை விட்டுப் போனவந்தான் இப்போது நீண்டகாலத்தின் பின் திரும்பியிருக்கின்றான்.

இந்த கிறிஸ்டி முற்றிய உளவியல் பிரச்சினைக்குரியவன். அதற்கு சிகிச்சையும் பெறுகின்றவன். ஓர் எழுத்தாளனாகி விட்ட கிறிஸ்டியின் கதைகளின் முழுத்தொகுப்பை ஒரு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அந்தப் பெருந்தொகுப்பை ராதிகாவுக்குக் கொண்டுவந்து கிறிஸ்டி கொடுக்கின்றான். அதன் முதற்பக்கத்திலேயே ‘என் ராதிகாவுக்கு, எங்கள் காதலுக்கு, எங்களின் திருமண நாளுக்கு’ என சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது. இன்னொரு நாவல், ‘ராதிகாவின் கருவில் முளைத்த என் மகன் 2ம் அரிஸ்டாட்டிலுக்கு’ சமர்ப்பணம் செய்யப்பட்டிருகின்றது. ராதிகாவுக்கு உலகே சுற்றுகின்றது. என்ன செய்வதென்ற அதிர்ச்சியில் அனைத்து நூல்களையும் வெறியுடன் கிழித்து எறிந்து தீயில் போட்டெரிக்கிறாள்.

கிறிஸ்டி தன்னை மோசமாகப் புணர்ந்து கைவிட்டு சென்றதன்பின்னே, இனி அவனைப் போல இந்தக் குழந்தையும் வேண்டாமென கருக்கலைப்பு செய்கின்றாள் ராதிகா. இதற்கான அனைத்து அவமானங்களையும் தாண்டித்தான் பின்னர் அஜித்திடம் எல்லாவற்றையும் சொல்லி அவனை திருமணமும் செய்கின்றாள்.

கிறிஸ்டி உளவியல் சிக்கலுக்கு ஆழமாகிப் போய்விட்டவன். தன் ஞானஸ்தான பெயரைப் பாதிரியாரும் தேவாலயமும் மாற்றச் சதி செய்கின்றார்கள் என்றும் அதற்கு வழக்குப் பதிவு செய்யும்படியுமாக ராதிகாவை வற்புறுத்துகின்றாள். அவனை ராதிகா எந்தளவுக்கு வெறுக்கின்றாளோ, அந்தளவுக்கு ஏதோ ஒருபக்கத்தில் மனம்பிறழ்ந்த கிறிஸ்டி மீது ராதிகாவுக்கு சொல்லமுடியாத பிரியமும் இருக்கின்றது.

கிறிஸ்டியின் சகோதரர்களை அழைத்து அவனுக்கு உரிய வைத்தியம் பார்க்கமுடியாதா எனக் கேட்கின்றாள். கிறிஸ்டி சட்டக்கல்லூரியின் கடைசிப் பரிட்சையும் எழுதாமல் மூன்றாண்டுகளாக இந்தியாவின் வடக்கில் அழைந்து கிட்டத்தட்ட முழுப்பைத்தியமாக இருந்தபோது கண்டெடுத்து கூட்டிக்கொண்டு வந்தோம் என்று கிறிஸ்டியின் சகோதரர்கள் கூறுகின்றார்கள். ஒரு அந்தரங்கமான பொழுதில் ராதிகாவுடன் இருக்கும்போது, தான் இயேசு கிறிஸ்துவைப் போல ராதிகாவுக்குச் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமக்க அந்த மூன்று வருடங்களும் சென்றேன் என்கின்றான்.

ராதிகாவின் வாழ்வில் தொடர்ந்து துயரங்களே வழித்துணைக்கு வந்தபடி இருக்கின்றன. ஆனாலும் அதற்குள்ளும் வாழ்ந்தபடி இருக்கின்றாள். அவள் சந்தித்த ஆண்களெல்லாம் தகப்பனைப் போல, கிறிஸ்டியைப் போல, கையாலகாத கணவன் அஜித்தைப் போலத்தான் இருக்கின்றனர். அவள் தேடுகின்ற நேசமோ, கருணையோ அவள் எதிர்பார்க்கின்றமாதிரிக் கிடைக்காதபோதும் இந்த ஆண்களை அரவணைத்தே கொள்கின்றாள். இறுதியில் கிறிஸ்டியைத் தேடி ராதிகா போகின்றாள். அது அவளுக்குத் தப்பமுடியாத பெருந்துயரைக் கொடுப்பதுடன் நாவல் முடிகின்றது.

மீராவின் பெண்பாத்திரங்கள் எப்போதும் சிக்கலானவை. இவ்வாறான protagonistகளை ஆண்களால் ஒருபோதும் படைக்கமுடியாது என்பதை மீராவின் நாவல்கள் ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது உணர்வதுண்டு. சிறுவயதில் பெருந்துயர் அனுபவித்து, இளமையில் காதலன் எனப்பட்டவனால் கைவிடப்பட்டு, பின்னர் ஒருவனைத் திருமணம் செய்து நிறைவான வாழ்வில்லாதுவிட்டாலும் ஒரளவு நிம்மதியான வாழ்வு வாழும் ராதிகா, அந்தப் பைத்தியக்கார எழுத்தாளனான கிறிஸ்டி மீது ஏன் இவ்வளவு நேசத்துடன் இருக்கின்றாள், ஏன் அவனின் கைவிடல்களையும், வன்முறையையும் மறந்து ஒவ்வொருபொழுதும் அவன் மீது வசீகரிக்கப்படுகின்றாள் என்பதுதான் புதிர். அதுவே நம் சிலருக்கு வாழ்க்கையும் ஆகின்றது. எவர் மீதும் அதிக குற்றம் சாட்டாது, இந்த கருணையற்றவர்களின் வன்முறைகளின் மேல் நின்று வாழ்கின்ற ராதிகா என்கின்ற பெண்ணொருத்தியின் கதையில், அவளை எப்படிப் புரிந்துகொள்வதென்ற திகைப்பும், நெகிழ்வும், அச்சமும் ஒருசேர வருவதால், நமக்கும் இந்நாவல் நெருக்கமானதாகின்றது.

*******************


'அந்த மரத்தையும் மரத்தையும் மறந்தேன் நான்' - கே.ஆர். மீரா, தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்.


(May 08, 2023)

சென்னையில் சூரிய உதயம்

Sunday, July 30, 2023

 


அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்வதுபோல இன்று விடிகாலையில் துயில் எழும்பியதால் சூரிய உதயம் பார்க்கலாம் என்று எலியிட்ஸ் கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமானேன். ஓட்டோ ஓடிக்கொண்டு வந்த தமிழ்ச்செல்வி அக்கா, ‘ விடிகாலையிலே ஊபரில் என்னைய்யா கிரடிட் கார்ட்டைப் போட்டிருக்கிறாய் காசிற்கு மாற்று இல்லாவிட்டால் சவாரியை நடுரோட்டில் நிறுத்திவிடுவேன்’ என்று வெருட்டினார். தமிழ் ஒரு அமிழ்தமொழி (நன்றி: தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம்), ‘அக்கா நான் காசாகவே ஊபர் கேட்டதை விட 50 ரூபாய் கூட்டியே தருகிறேன், சூரிய உதயத்திற்கு மட்டும் அழைத்துச் செல்லாது விடாதீர்கள்’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

எலியட்ஸ் பீச்சில் பொங்கல் நிமித்தமோ என்னவோ நிறையக் கடைகள் போட்டிருந்தார்கள். குப்பை அளவுகணக்கில்லாது இருக்க, சுத்தமான மணலில் கால் வைத்து நடக்கவே இடமில்லாது இருந்தது. துப்பரவுப் பணியாளர்களை இன்னும் வதைக்க நாமெல்லோரும் நன்கு மும்முரமாக வேலை செய்கிறோமென எண்ணிக் கொண்டேன்.  கடற்கரையோரமாக நீண்ட புற்களை காயவைத்து, அழகான யானைகளை வடிவமைத்திருந்தார்கள்.  பார்த்துக் கொண்டிருந்தால் அலுப்பே வராத தத்ரூபமான சிற்பங்கள் போல அவை காட்சியளித்தன.  சூரிய உதயம் பார்த்து முடித்து அருகில் ஒரு செவ்விளநீர் வாங்கிக் குடிக்கப் போனேன்.   அந்த இளநீர் கடையில் நல்ல வியாபாரம் போனதால், பக்கத்து இளநீர் கடைக்காரர் '..த்தா, உனக்கொரு அரைப்போத்தல் வாங்கித் தருகிறேன், வண்டியை எடுத்து தூரப் போயிடு, இங்கே நிற்காதே' என்று சத்தம் போட்டார். சென்னைக்காரர்கள் சண்டையில் கூடக் கோபத்தை மூர்க்கமாய்க் காட்டாது எவ்வளவு அழகியலாகச் செய்கின்றனரே, ‘விஷ்ணுபுர’க்காரர்களின் இரசனை விமர்சனம் தெரியாது இது அவருக்குச் சாத்தியமாயிருக்காதென நினைத்துக் கொண்டேன்.


பின்னேரம் சென்னை வந்த சாட்டுக்கு என் புத்தகத்தை வெளியிட்டு வைக்க செல்வத்தாரையும், தளவாய் சுந்தரத்தையும் அழைத்திருந்தேன். செல்வத்தார் இனி நான் சர்வதேச எழுத்தாளன்,  உன்னை மாதிரி தரை லோக்கலுக்கெல்லாம் நேரம் ஒதுக்கமாட்டேன் என்று சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தார். இனி இவரோடெல்லாம் கெஞ்ச முடியாதென, 'பின் தொடரும் நிழலின் குரல்' புகழ் சியாமளா அக்காவிற்கு ஓர் அழைப்பெடுத்தேன். அதற்குப் பிறகு மகுடிக்கு அடங்கிய பாம்பு போல சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்து செல்வத்தார் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். ஆனால் சென்ற முறை "மெக்ஸிக்கோ"வை வெளியிட்டு வைத்து என்னைப் புகழ்ந்து நான்கு வார்த்தை பேசியது போல இம்முறை ‘தாய்லாந்து’க்குப் பேசமாட்டேன் என்றார். ஏன் என்று கேட்டதற்கு முதல் நாளிரவு மிஷ்கினோடு சேர்ந்து தானும் பின்னணி பாடியதால் குரல் கட்டி விட்டதென்றார். 


எங்களைத்தான் இலக்கியத்துக்கு இழுத்துவந்து கெடுத்தது காணாதது என்று, தமிழகத்தில் ஒரளவு பார்க்கக் கூடிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த மிஷ்கினையும் பாடகராக்கிக் கெடுத்து விட்டீர்களா எனக் கேட்டேன். 'டேய் சும்மா இருடா, மிஷ்கின் இசையமைக்கும் படத்தில் நானும் பாடுகின்றேன் என்றார். எப்படி அது ஆ..ஈ..ஊ எனறு மாயா என்றப் பாடகியை அனிருத் 'விக்ரம்' படத்தில் பாடப் பயன்படுத்தியது போலவா எனக் கேட்க விரும்பினேன். கேட்கவில்லை.

புத்தகக் கண்காட்சியில் வைப்பதற்கு 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்', 'பேயாய் உழலும் சிறுமனமே' பிரதிகளை தளவாய் சுந்தரம் கொண்டு வந்திருந்தார். அதை இலங்கைப் படைப்புக்கள் கிடைக்கும் சஃப்ரியின் " புது உலகம்' அரங்கிற்குக் கொடுத்துவிட்டிருந்தேன். ‘மெக்ஸிக்கோ’வை எனது நண்பர்கள் வாசிக்கக் கேட்டபோது, ' பணமெல்லாம் இப்போது வேண்டாம், தோழர் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்' என்று கேட்டவர்களுக்கு அனுப்பி வைத்து என்னை மிக நெருக்கமாக உணர வைத்தவர் சஃப்ரி. அவரிடம் பத்தினாதனின் 'அந்தரங்கம்' நூலை வாங்கிக் கொண்டு வெளியே வர, பொது அரங்கில் பவா செல்லத்துரை "ஆடு ஜீவிதம்" பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

நான் காணொளி கதைசொல்லல்/புத்தக விமர்சனங்களுக்கு மறுபுறத்தில் இருப்பவன். ஆனால் பவா போன்றோர்க்கு மிகப்பெரிய காணொளி வாசகர்கள் இருப்பதை நானறிவேன். புத்தகங்களை அவ்வளவு வாசிக்கப் பிரியப்படாத பலருக்கு இவ்வாறே பல படைப்பாளிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். மாற்றம் என்பதே மாறாதது. எழுத்தாளர் ஒரு படைப்பை எழுத,  அவரைத் தவிர அந்த நூலோடு தொடர்புடையவர்க்கு ஏதேனும் வெகுமதிகள் கிடைப்பது போல இதுவென நினைத்துக் கொண்டேன். இமையமும் அந்த மேடையில் அடுத்துப் பேச இருந்தார். சென்றமுறை ஏனடா உன் புத்தக வெளியீட்டுக்கு அழைக்கவில்லை என குறைபட்டுக் கொண்டார், இம்முறையும் அவரை அழைக்க மறந்துவிட்டேன் என்பதும் நினைவுக்கு வந்தது.

புத்தகக் கண்காட்சியில், ஏதோ புலம்பெயர் இலக்கியவாதிகள் தமிழகப் பரப்பில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக ஓர் ஈழத்துப் படைப்பாளி பிறரிடம் குறைபட்டுக் கொண்டதாய் ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன். பின் அமைப்பியல்/ பின் நவீனத்துவம் அறிந்த ஒருவர் இந்த இருமைகளை/ துவிதங்களை நிராகரிக்கவே செய்வர். தமிழ் என்ற பெருங்கடலில் புலம்பெயர் இலக்கியம் ஒரு சிறு துளி. அதுவெல்லாம் தமிழுக்குத் தலைமை தாங்கும் என்ற எஸ்.பொவின் கனவே உதிர்ந்து நெடுங் காலமாயிற்று.

50 வருடங்களுக்கு முன் கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் நடந்த முற்போக்கு அணியினரின் மாநாட்டில் அவமதிக்கப்பட்டு, சூடோடு சூடாக மட்டக்களப்பில் தமிழ்விழாவெனப் பல படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஆரவாரத்துடன் எஸ்.பொ, தன் எதிர்ப்பை நிகழ்த்திக் காட்டினார். பின்னர் நற்போக்கு இலக்கியத்துக்கு ஒரு கொள்கை விளக்க நூல் கூட அவர் வெளியிட்டும் இருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் அந்தளவுக்கு ஆளுமையுடையவர்களாகவோ, தொடர்ச்சியாகவோ இயங்காதபோது புலம்பெயர் இலக்கியம் தமிழகச் சூழலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது எவ்வளவு வலுவான வினா என்பது கேள்விக்குரியது. எனினும் எல்லா வகையான உரையாடல்களும் நடப்பது நல்லது. அதுவே அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதைக் குலைக்கச் செய்பவை.

புத்தகக் கண்காட்சியில் 'அடையாளம்' சாதிக்கை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். எனது முதலாவது கவிதை நூலான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ அவரிடமிருந்தே வெளிவந்தது. நான் எழுத வந்த காலங்களில் 'அடையாளம்', ' விடியல்' போன்றவற்றுக்கு  பெரும் மதிப்பிருந்தது. அவர் அன்று தன் விருப்பில் அனுப்பி வைத்ததால் "ஏலாதி" இலக்கிய விருது அந்தமுறை என் தொகுப்புக்கும், தமிழச்சி தங்கபாண்டியனின் 'வனப்பேச்சி'க்கும் கிடைத்திருந்தது. ஏதேனும் புதிய நாவல் எழுதுங்கள், எங்களிடம் நல்ல எடிட்டர்கள் இருக்கின்றார்கள். நன்றாகக் கொண்டு வரலாம் என்றார். முயற்சிக்கின்றேன் எனச் சொல்லவும் பயமாக இருந்தது. நமது ப்யூகோவ்ஸ்கி "Don't try" என்று தன் கல்லறையிலேயே எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான் அல்லவா?

சாதிக், ஒருநாள் மதியமோ இரவோ சாப்பிடப் போவோம் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தக வெளியீடுகளை விட விருந்துண்ணலே முக்கியம், அதைத் தவறவிடமாட்டேன் எனச்சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன். கூடவே கண்காட்சியில் என்னோடு அலைந்து கொண்டிருந்த நண்பர், நீ எல்லோராலும் அணுக முடியாது ஆமை போல ஓட்டிற்குள் சுருண்டு கொள்கின்றவன், ஆனால் பத்தினாதன், 'காலம்' செல்வம், 'அடையாளம்' சாதீக், தளவாய் சுந்தரம் போன்ற சிலரோடு பேசும்போது மட்டும் ஓர் உயிர்ப்பு உன் உரையாடல்களில் வந்துவிடுகின்றதென்றார். அப்படி இருப்பின் எனது சென்னை கிரஷ்கள் (எனக்குத்தான் அவர்கள் கிர்ஷ்கள், நான் அவர்களுக்கு இல்லை), அழைத்து அவர்களோடு மெரீனா பீச்சில் கடலை கொறித்துக் கொண்டிருப்பேனே. அதுதான் நடக்கவில்லையே, அணில் படமா, ஆமைப் படமா முதலில் கவிழ்ந்தென்ற முகநூல் வெட்டி விவாதங்களில் சிக்கியிருக்கின்றேன், பார்க்கத் தெரியவில்லையா எனச் சலித்துவிட்டு பிரியாணிக் கடையைத் தேடத் தொடங்கினேன்.

இன்றைய ஆண்டிரியா ஆனாலென்ன, அஞ்சலி பட்டீலாலென்ன, எப்போதும் இருக்கும் என் நித்திய காதலி அஸினுக்கு சேர நாட்டுப் பராம்பரியத்தில் இருந்து வந்தவென நம்புகின்ற ஒருவனின் பொங்கல் வாழ்த்து -அனைவர்க்கும்- உரியதாகட்டும்.

**************

 

(Jan 17, 2023)

கொழும்பு - Gallery Cafe

Wednesday, July 26, 2023

 

தேமாப்பூ மீது மாமழை பொழிகிறது


கடும் வெயிலில் நெரிசல் நிறைந்த தெருக்களில் நடந்தபடி இருக்கின்றேன். கொஞ்ச நேரத்திலே உடல் Steam Bath எடுத்தது போல வியர்வையில் நனைந்துவிடுகின்றது. மேலைத் தேசங்களில் உள்ளறைக்குள் சூட்டைக் கூட்டி கஷ்டப்பட்டு hot yoga பழகுபவர்கள், இங்கே சும்மா நடந்தாலே போதும். வெயில், வியர்வைச் சுரப்பிகளை ஆலிங்கனம் செய்யும். தெருக்களின் சமதரையற்ற தரை, யோகாவின் அனைத்து ஆசனங்களையும் வளைவு சுழிவுகளுடன் எளிதாய்க் கற்றுத் தரும்.

எனினும் நான் இந்த நகரை, நாட்டை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நேசிக்கின்றேன். வானில் அலைந்து திரிந்த பறவையொன்று தரைக்கு வந்து ஓய்வெடுப்பதைப் போல நான் இந்த நாட்களை ஆறுதலாக அனுபவிக்கின்றேன். எனக்கும், கழிவுநீரோடும் கான்களுக்கும் எந்த ஜென்மத்து உறவோ தெரியாது. இந்நகருக்கு முதன்முதலில் பதின்மத்தில் போரின் நிமித்தம் இடம்பெயர்ந்து வந்தபோது இந்த கழிவுநீர் கான்களோடு தொடங்கிய உறவு இன்னும் அறுபடுவதாய்க் காணோம். அன்று ஒவ்வொரு முடக்கிலும் நிற்கும் இராணுவத்தைத் தாண்டிப் போகும் பயம் ஒருபுறம் என்றால், மறுபுறம் வாடகை வீட்டின் தெருவோடு சமாந்தரமாக ஓடும் கழிவாற்றிலிருந்து எந்தக்கணம் விடுபடுவேனோ என்ற பதற்றத்தோடு விடுவிடுவென நடப்பதுண்டு.

கழிவு நீராறு இருப்பின் நுளம்புகளின் தொலை இன்னும் மிகுதியாகவும் இருக்கும். இன்றும் எத்தனையோ இரவுகள் கொசுவலையைப் போட்டும், விடிகாலைவரை நித்திரை வராத நாட்கள் நிறைய இருக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து கிடக்கின்றது. விலைவாசியோ விமானமேறி தினம் தினம் வானத்தில் வைகுண்டம் தேடிப் பறக்கின்றது. இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடென்று காண்பவர்களில் பலர் சொல்கின்றார்கள். கொதி அரசியலை மட்டுமல்ல, மென் நகைச்சுவையைக் கூடச் சகிக்காது கலைஞர்களை சிறைக்கு அனுப்புகின்றார்கள். இவ்வாறு அரசியலிலும், பொருளாதாரத்திலும் இரும்புத் திரைகள் ஒன்றன்பின் ஒன்றாக நாட்டை மூடியபடி இருக்கின்றன.

அப்படியெனில் எதனால் இந்த நாட்டில் இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றேன். ஒரு அந்நியனாக மாறிவிட்டதால்தான் இவை எல்லாம் அந்தந்த நேரத்துப் பிரச்சினைகள் போல உதறிக்கொண்டு தாமரை இலை நீர் போல எடுத்துக் கொள்கின்றேனா? நான் இங்கே பிறந்து பதின்மம் வரை அதன் அத்தனை கசடுகளோடும், இரத்த ஆறுகளோடும் வளர்ந்திருக்கின்றேன் என்பது ஓர் உதிர்ந்து போன கனவா?


நேற்று ஒரு ஓட்டோக்காரரைச் சந்தித்தேன். அவிசாவளையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் தந்தையார் ஒரு கடையில் அடிநிலைப் பணியாளராகத் தொடங்கி, பின் அந்தக் கடையை சொந்தமாக வாங்கி நடத்தியிருக்கின்றார். 83 தமிழின அழிப்பில் பக்கத்துக் கடை எரிக்கப்பட, இவரின் தந்தையாரின் கடை அரைகுறையாக எரிவதில் இருந்து தப்பித்திருக்கின்றது. ஒரு குழு கடையை எரிக்க, இன்னொரு குழு கடைக்குள் இருந்த உடைமைகளைச் சூறையாடிச் சென்றது என்றார். பின்னர் கிடைத்த பணத்துக்கு கடையை ‘அடிமாட்டுக்கு’ விற்கவும், தன் தந்தையார் இந்தத் துயரத்தால் நோய்வாய்ப்பாட்டு இறந்தார் என்றார். பக்கத்துக்குக் கடை அனலைதீவுக்காரருக்குரியது. அவரின் கடை எரிந்தபோது, கடையென்ன கடை உயிரல்லவா முக்கியம் தப்புவோம் என்றபோது, எனக்குத் தெரிந்த இந்தச் சுற்றமும் நட்பும் தன்னைப் பாதுகாக்கும் என்றவரை அந்த ஊர்க்காரர் யாரோதான் எரியூட்டிக் கொன்றனர் என்றார்.

இப்படி எனக்குச் சொன்னவருக்கு இன்னும் துயரம் முடியவில்லை. திறந்த விஸா இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்க்கென இங்கிலாந்து கொடுக்க, இவரின் மூத்த சகோதரர் அடுத்த ஆண்டில் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். சென்ற சகோதரர் ஏதோ நோயின் நிமித்தம் 2 வருடங்களில் இங்கிலாந்தில் இறக்க இன்னொரு சோகம் இவரின் குடும்பத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றது. இவை நிகழ்ந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாகி விட்டன. இன்னமும் அந்தத் துயரங்களைக் கைவிடமுடியாத ஒருவரின் தடயங்களை அவரின் முகத்தில் நான் பார்த்தேன்.

ஒவ்வொரு காதல் பிரிவின்போதும் நமது வேதனைதான் உலகின் மகத்தான வேதனையென நாம் எண்ணிக்கொள்வோம். அதுபோல் இந்த வாழ்வில் நம்முடைய வாழ்க்கைக் கதைதான் சோகமானது என்று எண்ணி மறுகும்போது, இன்னொருவர் வந்து அப்படியில்லையென தன் கதையால் எட்டியுதைப்பார்.



நான் அலைந்து கொண்டிருக்கும் பறவை போல என்னை உருவகித்திருந்தேனோ? ஒரு பறவை தன் பாதங்களை பனி மலையில் கொஞ்ச நேரம் விட்டுச் செல்வது போலத்தான் இந்த வாழ்வும் மரணமும் என்று ஸென் கூறுகின்றது. ஆனாலும் அந்த சொற்ப நேரச் சுவட்டுக்குள்ளேயே நாம் வாழ்வென நினைத்ததில் பெருமளவு இருப்பது துயரத்தின் அழியாக் கோலங்களே. எம் எல்லோர்க்கும் கிடைத்த அனுபவங்களைப் பார்த்தால், சித்தார்த்தருக்கு முன்னரே புத்தனாக நாட்டையும், வீட்டையும் விட்டு வெளியேறுகின்றவர்களாக நாங்கள்தான் இருக்கவேண்டும்.

என்னால் எதையும் மாற்றமுடியாது என்பதால் மட்டுமில்லை, என்னையே என்னால் எளிதாக மாற்றமுடியாது என்று தெரிந்தும் நான் இந்த நாட்டையும், இந்த வாழ்வையும் அதன் அத்தனை பலவீனங்களோடும் நேசிக்கின்றேன்.

இப்போது இந்நகருக்குரிய மாலைநேர மழை பொழியத் தொடங்குகின்றது. மிகுந்த மனோரதியமான ஓரு கஃபேயிலிருந்து நீர்த்தாரைகள் வீழ்வதைப் பார்க்கின்றேன். நீர்வண்ணங்களில் வரையப்பட்ட ஒரு கலைஞரின் ஓவியங்கள் சுற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுருட்டப்பட்ட இலைகளில் பொதியப்பட்ட கறிகளோடு, சுடுசோறும், வாயில் வைத்தால் கரைந்துபோகின்ற இங்கே இதுவரை சாப்பிட்டிராத அவ்வளவு உருசியுடைய மாட்டிறைச்சியைச் சுவைக்கின்றேன்.

ஓர் ஒரத்தில் மண்ணிற வர்ணத்தில் தியானத்தில் இருக்கும் புத்தரை சாப்பிட அழைக்கின்றேன். நான் மாமிசம் சாப்பிடுபவனல்ல என்று தெரிந்தும் என்னை அழைக்கும் உன் குறும்புத்தனம் பிடித்திருக்கின்றதென அவர் தன் அசையா விழிகளால் சொல்கின்றார்.

தேமா மரங்களின் மீது இப்போது மழை சோவெனப் பொழிகிறது. காற்றின் துணையுடன் மரத்தில் இருந்து இறங்கி வரும் ஒரு தேமாப் பூவை நிலத்தில் விழாது நான் கையில் ஏந்துகின்றேன்.

அதை புத்தருக்கு முன் வைத்து, ‘புத்தர்’ என மனம் முழுதும் நிறைத்து வைத்திருக்கும் என் அனைத்துக் கற்பிதங்களையும் இல்லாமற் செய்ய வேண்டுகின்றேன். இப்போது நிறைந்து நிற்கும் என் மனதில் பொழியும் மழை தேமாப்பூவையும், புத்தனையும் ஆரத்தழுவிப் போகின்றது.

இவ்வுலகில் என் இருப்பு என்பது இக்கணத்தில் கடந்து போகின்ற ஒரு வாசனை. அவ்வளவேதான்!

*********************************


(Jun 07, 2023)


எஸ்.பொவின் 'வரலாற்றில் வாழ்தல்'

Monday, July 24, 2023


 -இரண்டாம் பாகம்-


எஸ்.பொவின் ‘வரலாற்றில் வாழ்தல்’ இரண்டாம் பாகத்தின் அரைவாசிப் பாகம் புலம்பெயர் இலக்கியமே இனி தமிழிலக்கியத்தை முன்னெடுக்கும்’ என்கின்ற அவரின் சுவிஷேசத்தைப் பற்றியே பேசுகின்றது. அந்தவகையில் அவர் 2000களின் ஓர் உலகப்பயணத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கொண்டார். அவற்றை இங்கே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார் என்கின்றபோதும், அந்தப் பயணத்தின் பெறுபேறுகள் அவருக்கு அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. ‘பனியும் பனையும்’ என்கின்ற 39 புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகளின் அச்சடிக்கப்பட்.ட்தே 300 பிரதிகளே என்கின்றபோதும் அவையும் முழுமையாக விற்பனை போகாது இருக்கின்றதென்ற அவலத்தை எஸ்.பொ இந்நூலில் பதிவு செய்கின்றார். ஆனால் தன்னைத் தமிழுக்கு ஊழியம் செய்கின்ற படைப்பாளியாக முன்வைக்கின்ற எஸ்.பொ சலிக்காது இறுதிவரை தமிழ் இலக்கியத்தினூடாகப் பயணித்திருக்கின்றார் என்பதும் வரலாறுதான்.

எஸ்.பொவின் இந்த ‘வரலாற்றில் வாழ்தலில்’ அவரின் நைஜீரியா அனுபவங்களை முதன்மையாகச் சொல்வேன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆபிரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த செழிப்பான அனுபவங்களைக் கொண்டவர் எஸ்.பொ. இன்னும் இந்த அனுபவங்களை விரித்து இங்கே விரித்து எழுதியிருக்கலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு எஸ்.பொ இந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார். 70/80களில் ஆபிரிக்காக் கண்டங்களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அநேகரைப் போல எஸ்.பொவும் தனது குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருப்பார் என்று இதுவரை எண்ணிய எனக்கு அவர் தனித்தே நைஜிரியாவில் இருந்திருக்கின்றார் என்பது புதுசெய்தி.

இந்த ‘வரலாற்றில் வாழ்தலில்’ எஸ்.பொ அவர் கூறி வந்தவற்றையே தன் எழுத்தால் தானறியாமலேயே உடைத்திருக்கின்றார். எஸ்.பொ இப்படி புலம்பெயர்ந்தற்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களின் பழிவாங்கல்களே முக்கிய காரணம் எனத்தான் சொல்லித் திரிந்திருக்கின்றார். ஆனால் எப்போதும் ஆசிரியராகவே இருந்த எஸ்.பொ ஒருகட்டத்தில் ஒரே தொழிலைச் செய்வதால் அலுப்படைகிறார். இத்தனைக்கும் அவரின் ஆசிரிய தொழிலில் பெரும்பாலான பாடசாலைகளில் அவரைப் புரிந்துகொண்ட அதிபர்கள் இவருக்கு இலகுவான நேரசூசிகையையே போட்டுக்கொடுக்கின்றனர். அதன் நிமித்தம் எழுதவோ, வாசிக்கவோ, நாடகங்கள் போடவோ இவருக்கு நிறைய நேரம் கிடைக்கவே செய்கின்றது. எனினும் எஸ்.பொவுக்கு ஒன்றேயே திரும்பத் திரும்பச் செய்வதில் அலுப்பு வருகின்றது. 


அது எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் தமிழராய்ச்சி மாநாடு நடக்கும்போது எஸ்.பொ இது பங்குபெறும்போதே, தமிழகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். அவருக்கு வேலையொன்றும் தர எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் உறுதியும் கொடுக்கின்றார். எஸ்.பொவின் இந்தச் சலிப்பை விளங்கிக்கொண்ட ஏ.ஜே.கனகரட்ன, மு.நித்தியானந்தனின் வழிகாட்டலுடன் நைஜிரியாவுக்குப் புலம்பெயர்கின்றார். ஆக எஸ்.பொ ஊதிப்பெருப்பித்து நமக்குச் சொன்ன சிவத்தம்பி, கைலாசபதியின் பழிவாங்கலால்தான் புலம்பெயர்ந்தார் என்கின்ற வாதம் அவ்வளவு வலிமையானது இல்லையென்பதை இதை வாசிப்பதினூடாக நாம் உணர்கின்றோம்.


இந்தப் பாகத்தில் எஸ்.பொ, தனது மனைவியாரோடு பிணக்கு வந்து நீண்டகாலம் தனித்து அலைந்த பகுதி குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடர் குடிகாரராக இருந்த எஸ்.பொ, இந்தப் பிரிவின் பின் பெருங்குடிகாரராக ஆகின்றார். ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகி, நினைவு தெரியாது மயங்கிக்கிடந்து நண்பர்களின் முயற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இனி குடித்தால் ஆபத்து என்று வைத்தியர் எச்சரித்து அனுப்பியபோதும், 2 வாரங்களுக்குள் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கின்றார். கிட்டத்தட்ட ப்யூகோவ்ஸ்கியை நினைவுபடுத்தும் பகுதிகள் போல எஸ்.பொவின் இந்த அனுபவங்களை நான் வாசித்தேன். ஆனால் அப்படி இருந்த எஸ்.பொ கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகள் குடியிலிருந்து விலகியிருக்கின்றார். அதற்குப் பெரிய காரணம் எதுவுமிருக்கவில்லை. பிள்ளைகள் உயர்தரத்தில் படிக்கின்றார்கள், வீட்டுச் செலவீனங்கள் கூடிவிட்டதென குடியைக் கைவிடுகின்றார். பின்னர் மீண்டும் ஆரம்பிப்பது அவரின் மகனான மித்ர புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கடலிலே மரணமாகின்ற போதாகும்.

தந்தையர் கண்முன்னே தனயர்கள் இல்லாமற் போவது பெருஞ்சோகம். எஸ்.பொ மித்ரவை இழந்ததைப் போல பின்னர் அவரின் மற்ற மகனான புத்ரவை இந்தியாவில் இழக்கின்றார். இரண்டு மகன்களின் இறுதிச் சடங்குகளின்போது கூட (மித்ர எனப்படும் அர்ஜூனாவின் உடல் கடலிற்குள் போனது) எஸ்.பொவால் அந்தந்த இடங்களுக்குப் போகமுடியாத சூழல். ஒருவகையில் இந்த இழப்புக்கள் எஸ்.பொவை சோரவைக்கின்றது. ஆகவேதான் ‘வரலாற்றில் வாழ்தலை’யும் தனது மகனான புத்ரவின் மரணத்தோடு முடிக்கவும் செய்கின்றார்.

ஓரிடத்தில் எஸ்.பொ எழுதுவார், ‘வாசிக்கும் நீங்கள் நினைக்கக்கூடும், என் பெரும்பகுதி இனிய நினைவுகளாக இருக்கின்றதென்று. அவ்வாறில்லை, இதைவிட மூன்றுமடங்கான துயர நினைவுகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் எழுதித்தான் என்ன நடக்கப்போகின்றது’ எனச் சொல்லிக் கடந்துபோகின்றார். இந்த வரலாற்றில் வாழ்தலில் ஒரு சிறந்த கதைசொல்லியை, தமிழ் ஊழியத்தில் ஓர்மமுள்ள படைப்பாளியை, தன் ஈகோ சீண்டுப்படுகையில் இன்னும் மேலே ஏறி பிறரைச் சீண்டிப் பார்க்கும் எஸ்.பொவை பார்த்தாலும், இன்னொருபுறத்தில் சோர்வில் அவ்வப்போது உழலும், துயரங்களை மறைத்து உள்ளே கேவியழக்கூடிய ஓர் ஆத்மாவான எஸ்.பொவையும் காண்கின்றோம். அதுவே இயல்பானதும், அழகானதும் கூட.

இன்றைய காலத்தில் சில எழுத்தாளர்கள் தாம் மகிழ்ச்சியாகவும் சோர்வில்லாதும் இருக்கின்றோம் என அடிக்கடி குறிப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு பிரகடனப்படுத்துபவர்கள்தான் பிறர் மீது சீண்டல்களையும், காழ்ப்புக்களையும், அவமதிப்புக்களையும் செய்பவர்களாக இருக்கின்றபோது, இவர்களின் மகிழ்ச்சியினதும், சோர்வற்றதன்மையினதும் உண்மையான அர்த்தம் என்ன என்று எனக்குள் அடிக்கடி கேள்விகள் எழுவதுண்டு. எஸ்.பொவைப் போல எல்லாச் சறுக்கல்களும், சலிப்புக்களும் கொண்டவர்கள் மீதும், அதை அப்படியே எழுத்தில் முன்வைப்பவர்கள் மீதுமே என்னால் இன்னும் நெருக்கம் கொள்ள முடிகின்றது.

இந்த வரலாற்றில் வாழ்தலில் இறுதி அத்தியாயமாக ‘தவம்’ என்ற பகுதி இருக்கின்றது. தமிழ் மொழி மீதான தன் காதலை எஸ்.பொ இதில் அறிக்கையிடுகின்றார். புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழ்ப்படைப்பு தொடரும் என்கின்ற நம்பிக்கையை முன்வைக்கின்றார். அதேவேளை புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்கள் மொழி அடையாளத்தையும், மத அடையாளங்களையும் குழப்பி வருவதாகத் தோன்றுகின்றது என்று எஸ்.பொ எழுதுகின்றார். ‘மத அடையாளங்கள், இன்றைய நிலையில் தங்களுடைய ஆன்மீகப் பலத்தினை முழுவதுமாக இழந்துள்ளன. இந்துத்துவத்தின் ஓங்காரம், தமிழ் உணர்வுகள் மீது ஆதிக்கஞ் செலுத்தும் ஓர் உள அர்த்தத்தினை மறைத்து வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. இந்த ஓங்காரம் தமிழின் செழுமைக்கு உகந்ததல்ல’ என்று நம்மை எச்சரிக்கின்றார். இன்றைக்கு 20 ஆண்டுகளின் பின் இது புலம்பெயர்ந்த தேசத்துக்கு மட்டுமில்லை, ஈழத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

2000களின் தொடக்கத்தில் கனடா வந்த சுந்தர ராமசாமி, புலம்பெயர் தேசங்களில் இனி தமிழ் வாழாது என்கின்ற நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருக்கின்றார். ஒருவகையில் அது தேய்ந்து போய்க்கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால் எஸ்.பொ புத்தாயிரத்துக்கு (2000) அப்பாலும் தமிழ் புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்குமென்று புத்தாயிரத்தில் எதிர்வு கூறினார். இற்றைக்கும் ஏதோ ஒருவகையில் புலம்பெயர் தேசங்களில் தமிழ் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களை சொற்பமானவர்கள்தான் வாசிக்கின்றார்கள்/எழுதுகின்றார்கள் என்றாலும் (அது எல்லாத் தேசங்களிலும் இயல்புதானே) புலம்பெயர் தேசத்து எழுத்தாளர்களுக்கும் தமிழில் இன்னும் இடம் இருந்து கொண்டேதானிருக்கின்றது. ஆகவேதான் அந்த புலம்பல்/அலட்டல் அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் சலசலப்புக்குள்ளானது. ஒருவகையில் அது எஸ்.பொ கண்ட கனவின் நீட்சி எனக்கூடச் சொல்லலாம்.

‘என் எழுத்து ஊழியம் என் தவமாக இனிக்கின்றது’ என்ற வரிகளுடன் எஸ்.பொ, ‘வரலாற்றில் வாழ்தலை’ முடிக்கின்றார். நமக்கோ எஸ்.பொவின் இலக்கிய இருப்பு, அவரின் எல்லாப் பலவீனங்களை மீறியும் பெருமிதப்பட வைக்கின்றது. ஆகவேதான் அவர் என்னைப் போன்றவர்களுக்கு ஓர் ஆளுமையுள்ள முன்னோடியாகத் திகழ்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

*********************


(Mar 13, 2023)