நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

இரண்டு சஞ்சிகைகள்

Wednesday, June 08, 2005

அற்றம்

Attam

'அற்றம்' இதழ் பெண்களை ஆசிரியர்களாகக் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி) கொண்டு பெண்களின் ஆக்கங்களை மட்டும் கொண்டு முதல் இதழ் வெளிவந்துள்ளது. சந்திரமதி கந்தசாமி, செல்வநாயகி, தான்யா, நிருபா, பொடிச்சி என்று நமக்கு ஏற்கனவே வலைப்பதிவுகளில் அறிமுகமான பலர் எழுதியிருக்கின்றனர். 'பெண்ணியத்தை அறைகூவி விற்பதற்கல்ல. எழுத்தில் ஆர்வத்துடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமையுடன், யாவருக்கும் பொதுவான இதழாகவே அற்றம் தொடரும்' என்று ஆசிரியத்துவத்தில் கூறுகின்றனர். மற்றும், 'பெண்கள் என்றால் கவிதை மட்டும் எழுதுபவர்களாகவே பொதுவாக நோக்கப்படுகின்றது. மாறாக, அற்றம், அவரவர் தேடலனுபவத்துக்குட்பட்ட பிற இலக்கிய வடிவங்களை பரிசீலிப்பதற்குரிய
தளம்'
என்ற ஆசிரியத்துவத்தில் கூறப்பட்டமாதிரி, கவிதை தவிர்த்தும் பிற விடயங்கள் எழுதிய பெண்களின் குரல்கள் இந்த இதழில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 'ஒரினச் சேர்க்கையாளர்களைப் புரிந்துகொள்ளல் பற்றி...' பற்றி பொடிச்சி எழுதியுள்ள கட்டுரையும், 'அனுபவம், பகிர்வு, எதிர்வுறல்' என்ற அதீதாவின் ஆளுமை மிக்கப் பெண்கள் பற்றிய கட்டுரையும், 'இருட்டைக் கிழிக்கும் ஒரு ஒளிக்கீற்று'' என்ற செல்வநாயகியின் Black திரைப்படம் பற்றிய விமர்சனமும் முக்கியமானவை. 'அட!' என்ற தலைப்பில் பெண் படைப்பாளிகளின் பெண் விடுதலை, பெண் உடல் குறித்த பல்வேறு இதழ்களில் வந்த பெண் பார்வைகளைத் தொகுத்து எழுதியிருப்பது நன்றாக இருக்கின்றது. அவ்வாறே பெண்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிய சிறு விமர்சனக்குறிப்புக்களும் நல்லதொரு அறிமுகத்தை வாசிப்பவரிடையே தருகின்றது.

பெண் உடலை மட்டுமே பெண்ணாகப் பார்க்கும் பார்வையை தான்யாவின் கவிதையொன்று வலியுடன் சொல்ல விளைகின்றது. 'வெறி கொண்ட ஆன்மா/ இன்பத்தைத் தூண்டும்/ எல்லா உறுப்புக்களையும்/ அறுத்தெறிய முனைகின்றது/' என்பதின் பின்னால் பொதிந்துள்ள வடுவை ஆண்களால் அவ்வளவு இலகுவில் உணர்ந்துகொள்ள முடியாது. இந்த இதழில் உள்ள சில படைப்புக்கள் சில ஏற்கனவே வலைப்பதிவுகளிலும் வந்திருக்கின்றது என்பதால் சிலவேளைகளில் அவற்றை இரண்டாம் முறை வாசிப்பது போலத்தோன்றுகின்றது. ஆசிரியர்கள் இவ்வாறான கட்டுரைகள் அச்சிலும் பரவலான வாசிப்புப் பெறவேண்டும் என்பதற்காய் சேர்த்திருக்கக்கூடுமென்றாலும், வலைப்பதிவுகள் தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு சிலசமயம் இது அலுப்பைத் தரலாம். இனித் தொடர்ந்து வரும் இதழ்களில் ஏற்கனவே வலைப்பதிவுகளில் பிரசுரமான ஆக்கங்களை இயன்றளவு தவிர்த்து வலைப்பதிபவர்களிடமே புது ஆக்கங்களை அற்றம் குழு வாங்கிப்பிரசுரித்தால் நன்றாக இருக்கும். மற்றபடி, முதலாம் இதழ் என்றவகையில் 'அற்றம்' மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றது. தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து அற்றம் பல்வேறு தளங்களில், எழுத ஊடக வாய்ப்பில்லாத பெண்களை முதன்மைப்படுத்தி வெளிவரவேண்டும். கனடாவிலிருந்து பெண்கள் தனித்துவமாக ஒரு சஞ்சிகையைக் கொண்டுவருகின்றார்கள் என்றவகையில் என்னளவில் மிகுந்த மகிழ்ச்சியே.

'அற்றம்' இதழ் குறித்த தொடர்பாடலுக்கு: attamm@gmail.com


மற்றது


File0002

கற்சுறாவையும், ஜெபாவையும் ஆசிரியர்களாகக் கொண்டு 2004 ஆண்டில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. 'வன்முறை அரசியலைக் காவி நிற்கின்றது ஈழத்து இலக்கியம். இந்தியப் பார்ப்பனீய அரசியலுடன் மெல்ல மெல்லக் கரைகின்றது புலம்பெயர் இலக்கியம். எழுத்ப்படும் வரலாறுகளோ எழுதப்படுவோரது வரலாறாக மட்டும் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வார்த்தைகள் எங்கிலும் மிக நுணுக்கமாய்ப் புதைந்து கிடக்கிறது யாழ்ப்பாண மையவாதம். அதன் தொடரோட்டமாய் புகலிடத்திலும் கொண்டாடப்படுகின்றது சமயமும் சாதீயமும்' என்று இந்த இதழ் ஆசிரியத்துவத்தில் சொல்வதை அவ்வளவு இலகுவில் புறக்கணிக்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. இந்த இதழில், 'உடல் வதையும் உள வதையும்: கனடியத் தமிழ்ச் சூழலில் பெண்கள்' என்ற தலைப்பில் கற்சுறா, உளநோய் ஆலோசகராக பணியாற்றும் பார்வதி கந்தசாமியுடன் உரையாடியாடியதைப் பதிவாக்கியது மிக முக்கியமானதொன்று. இந்த உரையாடலை வாசித்துப்பார்க்கும்போது கனடாவிலும் எவ்வளவு தூரத்துக்கு பெண்கள் உடல்/உளரீதியாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்பது தெரியவரும். அசுரா எழுதியுள்ள, 'மட்டக்களப்புத் தமிழகம்: நூலின் வரலாற்றுப் பதிவுகளும் அதன் விளைவுகளும்' மட்டக்களப்பு பற்றிய விரிவான அறிதலை பல்வேறு பின் தளங்களினூடு தருகின்றது. பதிலீடுகள்: தமிழ்த் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் பார்வையாளர் உறவு' என்று எஸ்.வி.ர·பேல் எழுதியுள்ள கட்டுரையில் வரும் ஒரு பகுதியான, 'கார்ட்டூனும் ரஜனிகாந்தும்: ஒற்றுமை ஒப்புநோக்கு' கட்டாயம் வாசிக்கவேண்டியதும் சிந்திக்கவேண்டியதுமான பகுதி. பெண்கள் பருவமடையும்போது ஏற்படும் உளவியல் சிக்கல்கள், சமூகம் கொடுக்கும் அழுத்தங்கள் (உ+ம் அக்கா இருக்கும்போது தங்கை பருவமடைந்தால் அந்தக்குடும்பம்/பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்) பற்றி ஜெபா எழுதியுள்ள கட்டுரை முக்கியமானது. மிக இயல்பான நடையோட்டத்தில் ஊரில் நடந்தவற்றை ஜெபா பதிவாக்கியுள்ளார். குளிக்கும்போது மதகிலிருந்து ஒளித்திருந்து பார்க்கும் பெடியன்களின் காமப்பார்வைகளிலிருந்து தப்புவது, இரவு படுக்கும்போது நல்ல கால்முட்ட உடுப்புக்கள் போட்டுப் படுப்பது, வீட்டில் தனியாக இருக்கும்போது நல்ல உடுப்புப்போட்டுக் கொண்டு நிற்காதிருக்க கட்டளையிடப்படுவது என்று ஜெபாவின் கட்டுரைகளில் வரும் பெண்கள், ஆண்களின் வக்கிரங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனையோ செய்கின்றார்கள். இவற்றையெல்லாம் மீறிக்கூட, யாரோ ஒரு பெண் அவளின் தகப்பனினாலேயே கொடுமையான பாலியல் வன்முறைக்குட்படுத்தப்ப்பட்டு கழுத்தில் தூக்குமாட்டிச் செத்துப்போகவும் செய்கின்றாள் என்பது எவ்வளவு கொடுமையான விடயம்.

'கற்கால இருளில் அறைபடும்
குளம்பொலி வரிசை
பின்னெதிர் ஓடி உறையும்
கருங்குருதிப் பனிமை.
தெளிவுறாப் புலனில்
மாறி எதிர்வுறும் சூல்
விடுக்கெனப் பரவி வெளித்தள்ளும்
பெண்பருவச் சிறகின் முதல் ஒலி'
என்ற கற்சுறாவின் (?) (எனது வாசிப்பில்) பெண் பருவமடைவதைச் சொல்லும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்தாலும், அதற்கப்பாலுள்ள பெண்களின் துயரை ஆண்களால் எவ்வளவு தூரத்துக்கு உணரமுடியும் என்பதுவும் யோசிக்கவேண்டிய விடயமே. முழுத்தொகுப்பாய் பார்க்கும்போது, 'மற்றது' நல்லதொரு சஞ்சிகையாகத் தெரிகின்றது. இதுவும் 'அற்றம்' போலத் தொடர்ச்சியாக வந்து பரவலான தளங்களில் உரையாடலை நிகழ்த்தவேண்டும்.

'மற்றது' இதழ் குறித்த தொடர்பாடலுக்கு: matrathu@hotmail.com

7 comments:

Narain Rajagopalan said...

சென்னையில் கிடைக்குமா என்று விசாரியுங்கள். இருந்தால், எங்கு கிடைக்குமென்பதையும் ஒரு வரி மடலெழுதுங்கள். படித்துப் பார்க்கிறேன்.

6/08/2005 02:03:00 AM
இளங்கோ-டிசே said...

நரேன், தமிழகத்தில் எங்கே/எப்படி இந்த இதழ்கள் கிடைக்கும் என்று விசாரித்துக் கூறுகின்றேன். நீங்களும் இயலுமாயின் மேலேயுள்ள மின்னஞ்சல்களுக்கு மெயில் தட்டிவிடவும்.

6/08/2005 11:06:00 AM
கறுப்பி said...

டீசே, "அற்றம்" சஞ்சிகை பற்றிய உங்கள் விமர்சனத்தில் எனக்கு சிறு முரண்பாடு உள்ளது. இச் சஞ்சிகையில் வந்த படைப்புக்கள் பல வலைப்பதிவுகளில் ஏற்கெனவே வந்தவையாக இருப்பினும் தரமான கட்டுரைகளே அவை. வலைப்பதிவைப் படிக்காதவர்களுக்கு அது உதவியிருக்கும். ஆனால் வலைப்பதிவில் வராத இரு புதிய படைப்புக்களில் ஒன்றான அதீதாவின் "அனுபவம், பகிர்வு, எதிர்வுறல்" எனும் கட்டுரையில்; எங்கே ஆளுமை மிக்க பெண்களைப் பற்றிக் கூறுவதாகக் கண்டீர்கள் என்று சொல்வீர்களா? பெண்களின் ஆளுமையைக் கூறுவதுபோல் பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றார் அதை எழுதியவர். சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கும் எம்பெண்களின் ஆளுமை இதுதானா? அதுவும் எழுதியவரின் எழுத்து நடை, வார்த்தைப் பிரயோகம் என்பவற்றில் சிறிது நாகரீகம் கூட இல்லை. முற்போக்குவாதி என்றால் எல்லா தூஷண வார்த்தையையும் சரளமாகப் பிரயோகிக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றார்கள் போலும்.
பத்மா அரவிந்தனின் கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். எந்த அளவிற்கு அவை மனதைப் பாதிப்பவையாக இருக்கின்றன. அதே வேளை பெண்களின் வேதனையைக் கூறுவதாகவும் ஆளுமையைக் கூறுவதாகவும் கூறிக்கொண்டு அவர்களை கேவலப்படுத்தும் அதீதா போன்றோரின் எழுத்தை ஏன் "அற்றம்" பிரசுரித்தது என்று எனக்குப் புரியவில்லை. தரமாக கட்டுரைகளில் அதையும் ஒன்றாகத் தாங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எழுதியவர் ஆசிரியர்களில் ஒருவரா இல்லையா எனக்குத் தெரியாது. அந்தக் கட்டுரையைப் பிரசுரித்து "அற்றம்" தன்னைக் கேவலப்படுத்தியிருக்கின்றது.

அடுத்து இரண்டாந்தரப் பத்திரிகைகள் போல் கிசுகிசு பாணியில் இவளுக்கு இவனோடு தொடர்வு அவனுக்கு யாரோடு தொடர்பு என்பது போல் ஒரு போட்டி நிகழ்ச்சி.

எழுத வேண்டாம் என்ற முதலில் எண்ணினேன். ஆனால் நானும் கனடாவில் வாழும் பெண்களில் ஒருத்தி. கனேடியச் சஞ்சிகை பற்றிய தரத்தில் எனக்கும் அக்கறை இருக்கிறது. இரண்டாந்தரச் சஞ்சிகை என்று அடையாளப்படுத்தப்பட்டால் அது எனக்கும் வேதனையே.

தவறாகவோ தனிப்பட்டோ எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுதான் என் கருத்து. ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் ஆசிரியர்களின் விருப்பம்.

6/08/2005 02:11:00 PM
இளங்கோ-டிசே said...

கறுப்பி, 'அற்றம்' இதழ் குறித்து உங்கள் பார்வையை வைத்துள்ளீர்கள் நன்று. விமர்சனங்களை செவிமடுப்பவர்களாக அற்றம் ஆசிரியர்கள் குழுவில் உள்ளவர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
நிற்க.
மற்றது இதழையும், அற்றம் இதழையும் நீங்கள் வாசித்தால், அதை எழுதியவர் யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். எனெனில் இரண்டிலும் ஒரே தலையங்கம் ('அனுபவம் பகிர்வு எதிர்வுகூறல்') இடப்பட்டுள்ளது. மற்றதில் இந்தக் கட்டுரையை எழுதியவரின் பெயர் நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதானே. மற்றதில், அற்றத்திலும் பல்வேறு பெண் ஆளுமைகளை அதீதா வெளிக்கொணர்வதாய் எனக்குத் தெரிந்தது. மொழியின் கொச்சை குறித்து நீங்கள் பார்த்த பார்வையை, நான் ஒரு வட்டார வழக்கின் இயல்பென நினைத்து இயல்பாய்த்தான் எடுத்தேன். 'ஆளுமையுள்ள பெண்கள்' என நான் குறிப்பிட முனைந்தது. ஆண்களின் அடக்குமுறைக்கு எதிராய், சமுகம் விதிக்கும் சட்டகங்களுக்கு உட்படாது நம்து ஊர்களில் வாழ்ந்த பெண்களை அறிமுகப்படுத்திய விதத்தைத்தான். இப்படிக்கூறுவது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளும் பிரயத்தனத்துக்காக அல்ல. இது எனக்குத் தோன்றிய பார்வை. கோணலாகவும் இருக்கலாம். ஒரு பெண் என்றவகையில் நீங்கள் ஒரு பெண்ணின் ஆளுமையை (எனது ஆண் பார்வைக்கு புறம்பான) வேறொருவகையில் பார்க்கவும்கூடும் என்பதையும் நினைவில் கொள்கின்றேன். நன்றி.

6/09/2005 11:56:00 PM
கறுப்பி said...

மன்னிக்க வேண்டும் டீசே, நான் "மற்றது" சஞ்சிகையை இன்னும் படிக்கவில்லை. நான் வாங்கிய அன்றே என் நண்பன் கடன் வாங்கிப் போய் விட்டான் இன்னும் திரும்பவில்லை.
படித்து விட்டுக் கூறுகின்றேன்.

ஆணாதிக்க சமுதாயத்தில் தனித்து வாழும் பெண்களின் துணிவு பதியப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் அதீதா செய்ய முயற்சித்திருக்கின்றார். ஆனால் வட்டார வழக்குப் பேச்சு என்று விட்டு எதையும் எழுதில் கொண்டு வரலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலச்சுவடு வெளியீட்டின் மூலம் இந்தியப் பெண்களின் பயிலரங்குப் பட்டறையில் சேகரித்த தகவல்களைத் தொகுத்து இரு தொகுதியாக வெளியிட்டிருக்கின்றார்கள். இந்தத் தொகுதிகளின் நோக்கமும் அதுவே. அம்மை பல பெண்களைப் பேட்டி கண்டுள்ளார். இப்படியான தொகுதியாக தரமாக வர வேண்டிய பதிவுகள் வாசிப்பதற்குச் சங்கடமான வார்த்தைப் பிரயோகத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் என் கருத்து. எனது கருத்தோடு எல்லோரும் உடன் படவேண்டுமென்று இல்லைத்தானே. என் விமர்சனம் மட்டுமே.

6/10/2005 12:02:00 PM
இளங்கோ-டிசே said...

பதிந்தது:ஆதவன் தீட்சன்யா

நண்பரே,
வணக்கம்.
அற்றம், மற்றது இதழ்களுக்கு தங்களின் அறிமுகம் பொருத்தமானது. புதுவிசை.காம் இதழ் குறித்து தாங்கள் எழுதவேண்டும்.
14.6.2005
...........
வேறொரு பதிவில் இந்தப்பின்னூட்டம் ஆதவன் தீட்சண்யாவினால் இடப்பட்டிருந்தது. சரியான பதிவில் வெட்டி ஒட்டிய வேலை என்னுடையது.

6/15/2005 10:26:00 AM
இளங்கோ-டிசே said...

ஆதவன் தீட்சண்யா, வரவுக்கு நன்றி.
....
புது விசை குறித்து வலைப்பதிவுகளில் பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றது. நான் வாசித்தளவில் நண்பர்கள் சுதர்சன், நரேன் போன்றவர்கள் புது விசை இதழ் குறித்தும், அதில் வந்த விடயங்கள் குறித்தும் பதிவுகள் எழுதியுள்ளனர். நானும் வலைப்பதியும் பல நண்பர்களைப் போல புது விசை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். நேரங்கிடைக்கும்போது எனது பார்வையையும் எழுதுவேன். நன்றி.

6/15/2005 10:30:00 AM