கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நமக்கான கடைசிப்பாடல்

Tuesday, June 28, 2005

காத்திருந்தேன்
முதுகில் குத்தப்பட்ட
கத்தியின் துரோகத்துடன்
ஒரு தொலைபேசி அழைப்புக்காய்

புறக்கணிப்பின் துயருடன்
வளாகவாசல்களில் நூலகங்களில்
உன் சுவடுகள் தேடியலைய
ஓயாதெழும் அலைகளாய்
காதினை உரசுகின்றன
நமது உரையாடல்கள்

இருள்படர்ந்த
நெடும்வனத்தைக் கடந்துவந்தபோது
நினைவுகள் கொல்லும் குளிர்காலம் கரைந்து
அழகாய் விரிந்திருந்தது வசந்தம்

இன்றென் செல்லிடப்பேசி உயிர்ப்புறுகிறது
அந்த இனிமைக்குரலுக்குரிய
அதிர்வெண் மாறவில்லை
எதிர்முனையில் நீ.

எல்லாமே சுழற்சிதான்
நிராகரித்தலும் உச்சிமுகர்தலும்
நேசிப்பின் எழுதப்படாத விதி
உறைந்துபோன இருவிதயங்களுக்கு
உயிர்கொடுக்க முயல்கிறாய்

எதையும் நம்பும்..
உதாசீனத்தை இரசித்து
அனைத்தையும் நேசிக்கும்
குழந்தைமையை தொலைத்துவிட்டிருந்தேன்
அடர்வனம் கடந்த பொழுதில்

இன்று
துரோகத்தை அருந்தி
வன்மத்தை மூச்சாக்கி
மூர்க்கமாய் வளர்ந்த 'ஆண்பிள்ளை'

இனிமேலும் நேசிக்கக்கூடும்
ஆனால் அது நீயல்ல
பதின்மம் கடந்த ஆண்கள்
மீண்டும் மழலைகள் ஆவதில்லை.

18 comments:

-/பெயரிலி. said...

?

6/28/2005 11:18:00 AM
இளங்கோ-டிசே said...

Bro, பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்வதுதானே? இப்படி கேள்விக்குறி எல்லாம் சிம்பாலிக்காய் போடக்கூடாது :-). உச்சிமோர்தலா அல்லது உச்சிமுகர்தலா எது சரி Bro :-(?

6/28/2005 11:31:00 AM
வானம்பாடி said...

:-/

6/28/2005 11:38:00 AM
-/பெயரிலி. said...

ப்ரோ அப்படியாக இல்லை; ஏதாவது சொந்தக்கதை சோகக்கதை "உள்ளே(ன்) தம்பி" என்கிறதா என்று சுருக்கமாகக் கேட்டேன்.

/உச்சிமோர்தலா அல்லது உச்சிமுகர்தலா எது சரி Bro :-(?/
இப்ப பொஸ்ரனில இருக்கிற உச்சிவெயில் வெக்கைக்கு உச்சிமோர்தான் வேணுமெண்டு சொல்லிப்போடுவன். ஆனால், அது சரியெண்டு படேல்லை. எண்டாலும், மோர் எண்டால் முகந்துதான் எடுக்கவேணும் எண்டுமட்டும் சொல்லுவன். ;-) ஆராச்சும் அறிஞ்சவையிட்டக் கேளுங்கோ அண்ணை. ஒருக்கால், இப்பிடித்தான் வண்ணம்/வன்னம் விளக்கம் குடுக்கப்போய் தமிழ்லோஞ்சர் வெடிச்சு பின்னால ஆளின்ரை நெஞ்சநானிலை அடிச்சுப்போட்டுது. ;-)

6/28/2005 11:43:00 AM
இளங்கோ-டிசே said...

பெயரிலி இதென்ன பழக்கம்? சந்தேகம் கேட்டால் இன்னும் முழியை உருட்டுவது போல எழுதுகின்றியள். பயப்பிடவேண்டாம். இது குடும்பத்துக்குள் வந்த சந்தேகம். வெளியில் இருந்து ஒருவரும் லோஞ்சரில்லை 'ஊமற்கொட்டை' கூட எறியமாட்டினம் :-). எது சரியோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு உச்சிமோர்தல்தான் பிடித்திருக்கிறது. எனென்றால் அது மோரைப் போல குளிர்ச்சியான விடயமெல்லோ :-).

6/28/2005 01:57:00 PM
Thangamani said...

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடீ- பாரதி

டி.சே. பயப்படாதீங்க. குழந்தைமையை யாரும் கொன்றுவிட முடியாது. சின்னப் பசங்க பெரிய ஆட்கள் மாதிரி பேசுறது எப்படியோ அப்படித்தான் வளர்ந்த ஆட்கள் தங்களை பெரிய ஆட்கள் என்று நினைத்துக்கொள்கிறதும். எல்லா முகமூடியும் கலைந்த நேரந்தில் குழந்தை ஆடையற்று திரியும்.

ஒரு குழந்தைய வளர்ந்த ஆளிடம் இருந்து வெளிய கொண்டு வர வழியொன்னு இருக்கு. அது இன்னொரு குழந்தை கிட்ட தனிமையில விடறதுதான்..

6/28/2005 02:46:00 PM
-/பெயரிலி. said...

அண்ணா ஆளை விடுங்கண்ணா; சடையனே சரியாக் குழம்பிக்கிடக்கிறான்; நீங்கள் இன்னும் சடையன் தலையில ரஸ்தபாரி பின்னல் போடுவனெண்டு நிக்கிறியள்.

சத்தியமாய் நானும் ஒருக்கால் அறியவேணும்.

6/28/2005 02:48:00 PM
கயல்விழி said...

DJ கவிதை நன்று.

உச்சி மோர்தல் பேச்சுவழக்கு
உச்சி முகர்தல் எழுத்து வழக்கோ.? :)

6/28/2005 03:13:00 PM
இளங்கோ-டிசே said...

பாரதியும், நம்ம தங்கமணியும் சொன்னால் சரியாய்த்தானிருக்கும் :-). நான் மாற்றிவிடுகின்றேன்.

6/28/2005 03:13:00 PM
இளங்கோ-டிசே said...

//உச்சி மோர்தல் பேச்சுவழக்கு
உச்சி முகர்தல் எழுத்து வழக்கோ//
கயல்விழி, அப்படியும் இருக்கலாம்.

6/28/2005 03:49:00 PM
SnackDragon said...

பெயரிலிக்கு தெரியலைன்னு சொன்னா என்னால் நம்ப முடியலை.

டிசே,
முகர்தல்-ஐ மோந்தேன் என்று பேச்சு வழக்கில் பார்த்திருக்கிறேன்.மோப்பம் என்பதை மோந்து பார்த்தல் என்று சொல்வார்கள்.

மோர்தல் என்று பார்த்ததில்லை. மோர்ந்தேன(சரியாக தெரியவில்லை)் என்று வராது என்றும், மோர்தேன் என்றும் வராது என்றும் படுகிறது.

மேலும் தேன் + மோரும் வராது. :-)

6/28/2005 04:38:00 PM
-/பெயரிலி. said...

செர்ரீ,
இதிலே இரண்டு குழப்பங்கள்.
ஒன்று, எழுத்துவழக்கு-பேச்சுவழக்கு சம்பந்தமானது.
இரண்டாவது, இர்ரன்னா இடையிலே வருவது குறித்தது.
முகர்ந்து-முகந்து
மோர்ந்து-மோந்து
அவ்வளவுதான். ;-)

6/28/2005 04:51:00 PM
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

"மோப்பக் குழையும் அனிச்சம்"னு வள்ளுவர் சொல்லி இருக்காரே?

பேச்சுவழக்கில் "மோந்து" என்பது 'நிறைத்து' என்னும் பொருள்பட வரும் என்பதாய் நினைவு.
"நல்லாச் சொம்பு நெறயாத் தண்ணி மோந்து ஊத்துறா" (மொண்டுவின் திரிபு?)

டீசே. மன்னிக்க. கவிதைக்குள் போக இயலவில்லை.

6/29/2005 02:59:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களை எழுத்திலும் படத்திலும் பதிந்த நண்பர்களுக்கு நன்றி :-).
.....
//டீசே. மன்னிக்க. கவிதைக்குள் போக இயலவில்லை//
செல்வராஜ், இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு? பின்னுட்டஙகள் இட்ட முக்கால்வாசிப் பதிவுகளில் நானே அந்தப் பதிவுகளுக்கு தொடர்பில்லாது தான் பின்னூட்டமிட்டிருக்கின்றேன் :-).

6/29/2005 10:45:00 AM
இளங்கோ-டிசே said...

இந்தப்பதிவுக்கோ, பகிரப்பட்ட பின்னூட்டங்களுக்கோ தொடர்பில்லை எனினும், இன்று வாசித்த இரண்டு விடயங்களைப் பகிருகின்றேன். முதலாவது கனடாவில் ஓரினப்பால் திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்படிருக்கின்றன. பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸிற்கு அடுத்ததாக (மூன்றாவது நாடு) கனடாவும் இதைச் சட்டமாக்கியுள்ளது. சென்ற வார இறுதியில்தான் ரொரண்ரோவில் மிகப்பெரிய, gay-lesbian parade நடந்திருந்தது. இர்ண்டாவது விடயம் தீபா மேதாவின் வோட்டர் படம் செப்ரெம்பர் மாதம் நடக்கவிருக்கும் ரொரண்ரோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றது. இந்தப் படத்தை வர்ணாசியில் எடுக்க ஆரம்பித்தபோது RSS, BJP செய்த கூத்துக்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இதன் விளைவாக படம் எடுப்பது நிறுத்தப்பட்டிருக்கின்றது என்று கூறப்பட்டாலும் தீபா மேத்தா அதை ஏதோ ஒருவகையில் எடுத்துமுடித்துவிட்டார் என்பது மகிழ்ச்சியான விடயமே (எங்கே படப்பிடிப்பு நடந்தது என்ற விபரம் தெரியவில்லை). தீபா மேத்தாவின் படங்களுடன் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லாதுவிட்டாலும் அவரது துணிச்சலுக்கு என் பாராட்டு!

6/29/2005 11:06:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

முகர்தல் தான் சரியானது.பரட்டைக்கே சந்தேகம் என்றால் இந்தச் சின்னச் சின்ன சிரட்டைகள் எல்லாம் எங்கே போகும்.

செல்வராஜ் நீரை மோந்து ஊற்றுதல் கூட முகர்ந்து என்பதன் திரிபுதான் ஒழிய மொண்டு என்பதன் திரிபு அல்ல.மோந்து மொண்டு இரண்டுமே முகர்ந்து என்பதன் திரிபு.

டி.சே Bro கவிதையெல்லாம் ஒரு பக்கமாய் இழுக்குது என்னாச்சு

6/30/2005 12:41:00 AM
Kannan said...

டிசே,
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

ஆனால்...

1. ஒரு கவிதை (ஒரு ஓவியத்தைப் போல, இசையைப் போல, சில்லென்ற எங்களூர் கிங்ஃபிஷரின் முதல் மிடறு போல...) நம்முள்ளே ஏற்படுத்தும் சலனம் ஒவ்வொருவருக்கும் மட்டுமேயான அந்தரங்க ஊடாடல் என்ற அளவில் புரிந்து வைத்திருந்தேன். ஆனால் 'கவிதைக்குள் புகுதல்' என்பது பொதுவானது என்றறிய மகிழ்ச்சியாய் இருக்கிறது. செல்வராஜ் போல எனக்கும் கவிதைக்குள்ளே போக முடியவில்லை.

2. //குழந்தைமையை யாரும் கொன்றுவிட முடியாது. சின்னப் பசங்க பெரிய ஆட்கள் மாதிரி பேசுறது எப்படியோ அப்படித்தான் வளர்ந்த ஆட்கள் தங்களை பெரிய ஆட்கள் என்று நினைத்துக்கொள்கிறதும். எல்லா முகமூடியும் கலைந்த நேரந்தில் குழந்தை ஆடையற்று திரியும்.

ஒரு குழந்தைய வளர்ந்த ஆளிடம் இருந்து வெளிய கொண்டு வர வழியொன்னு இருக்கு. அது இன்னொரு குழந்தை கிட்ட தனிமையில விடறதுதான்..//

ஆகா, உள்ளது!

6/30/2005 01:03:00 AM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி ஈழநாதன் மற்றும் கண்ணன்.
.......
சுதர்சன், செல்வராஜ், ஈழநாதன், கண்ணன் போன்றோர்களின் கருத்தை வாசிக்கும்போது 'கவிதை' நிராகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது. ஆனால் சந்தோசமாயிருப்பது நண்பர்கள் நேர்மையாய் தங்களுக்குத் தோன்றியதை முன்வைத்திருப்பது (பொடிச்சியும் முன்பொரு 'கவிதை'யில் தனக்குத் தோன்றியதை நியாயமாய் முன்வைத்திருந்தார்). இந்தப்படைப்பின் தோல்வியை ஒப்புக்கொண்டபடி ஒன்றிரண்டு விடயங்கள் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். முதலில் இந்தக் கவிதையை ஆண் என்று ஒரு பிரிவுக்குள் அடக்காமல், ஆண்/பெண் இருபாலினருக்கும் பொதுவான ஒரு தளத்தில் எழுதித்தான் பார்த்திருந்தேன். கடைசிக்கு முன்வரும் பத்தியான
//இன்று
துரோகத்தை அருந்தி
வன்மத்தை மூச்சாக்கி
மூர்க்கமாய் வளர்ந்த 'ஆண்பிள்ளை'//
இதை இல்லாமல் செய்து, இறுதிப்பத்தியையும்
//இனிமேலும் நேசிக்கக்கூடும்
ஆனால் அது நீயல்ல
பதின்மம் கடந்தவர்கள்
மீண்டும் மழலைகள் ஆவதில்லை.//
என்றெழுதி ஆணோ அல்லது பெண்ணோ இந்தக் கவிதையை பொதுவாய்ச் சொல்வதாய்தான் எழுத நினைத்தேன். பிறகு ஒரு பெண்ணின் மனநிலையில் நின்று பார்ப்பது சரியாய் வருமா என்று தயக்கம் வரவே ஆணுக்குரிய எழுத்தாய் இதை மாற்றியிருந்தேன். முக்கியமாய் //'ஆண்பிள்ளை'// என்பதை நக்கலாய்க் காட்டவே அந்தப் பத்தியை எழுதியிருந்தேன். சமூகம் கூறுகின்ற ஆண் அழக்கூடாதவனாக, துரோகம் செய்யப்பட்டிருந்தால் அதை ஏதோ ஒருவகையில் தானும் செய்து பழிவாங்குபவனாக, மேலும் காதல் பிரிவுக்காய் வருந்துபவன் அல்லாத 'ஆண்மை' உரியவனாக இருக்கவேண்டும் என்ற ஒரு சட்டகத்தை கிண்டலாக்கவே அந்தப் பத்தியைச் சேர்ந்திருந்தேன்.

இரண்டாவது விடயம், அனேக கவிதைகள், காதலித்து நிராகரித்து பிறகு மீண்டும் வரும் உறவுகளை மானசீகமாய் ஏற்றுக்கொள்ளுபவையாக இருந்ததை வாசித்திருந்தேன். ஆகவே அப்படியில்லாது இருக்கவேண்டும் என்று கொஞ்சம் கவனம் செலுத்தித்தான் இப்படி முடித்திருந்தேன். மற்றது இப்படி சில நிகழ்வுகளை எனது வாழ்விலும் சந்திருக்கின்றேன். முக்கியமாய் பதின்மத்தில் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு தோழிக்கு நிகழ்ந்த விடயம். ஒரு காதல் பிரிவால் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகி (கையை வெட்டி இரத்தத்தை சிதறவிட்டு தற்கொலை செய்வதுவரை போனது) பிறகு எல்லாம் இயல்புக்கு வரும்நிலையில், பிரிந்த சென்றவர் அவளிடம் வந்து மீண்டும் காதலை யாசித்து நின்றதைக் கண்டிருக்கின்றேன். அவள் அதை மறுத்தபோதும் மீண்டும் இன்னொருவகையான மன அழுத்தத்துக்குள் போய்க்கொண்டிருப்பதை அவதானித்திருந்தேன். திரும்பவும் அந்த உறவுக்குள் போகப்பிரியப்பட்டவளாகவும் ஆனால் ஏற்கனவே இருந்த வலி அதைச் சாத்தியமின்மையாக்கியும் விட்டிருந்தது. காதல் நிராகரிக்கப்பட்டபோதும் வேதனை, அது பிறகு திரும்பி அழைத்தபோதும் வேதனை. எவ்வளவு சோகமானது அவளது வாழ்வு :-(.

6/30/2005 01:56:00 AM