கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ - 02

Tuesday, September 12, 2023


-தேவ அபிரா 



சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்துபோனவன்.

 

இந்திய இராணுவம் இலங்கைக்குள் நுழைந்து புரிந்த கொலைகளின் பாதிப்பைச் சொல்லும் கதை. தனது கண்ணுக்கு முன்னாலேயே இந்திய ராணுவத்தினால்  தனது தாய் சுட்டுக்கொல்லப்படுவதைப் பார்த்த சிறுவனுள் ஏற்படும் காயங்கள் பிற்பாடு அவனது வாழ்வைப் பாதித்து அவனைத் தற்கொலை வரை இட்டுச் செல்கின்றன.  போருக்குப் பின்னான மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படாத மனிதர்கள் இன்னும் எமது சமூகத்தில் உள்ளனர். ஒருவர் சிறு வயதில்  அடைந்த ஆழமான மனக்காயம்   அவர் வாழ்வின் பல்வேறு நிலைகளுக்குள்ளும் செல்லும் போதும் கூடவே சேர்ந்து செல்கிறது. கதையின் நாயகன் பிறந்து வளர்ந்த இடத்தில் வாழ முடியாமற்  புலம்பெயர்கிறான். வேற்றுக் கலாசாரம் வேறுமொழி உருவாக்கும் அன்னியத்துள் கொல்லப்பட்ட அம்மாவின் குரல் அவனுள் பெருகுகிறது.  வேலை செய்கிறான். நண்பி ஒருத்தியைக் கண்டடைகிறான். காதலிக்கிறான் ஆனாலும் எல்லா வாழ்வு நிலைகளுக்குள்ளும் அம்மா கொல்லப் பட்டமையும் அவளின் இன்மையும் அவளுடனான உரையாடலும் அவனைத் தொடர்ந்து வருகின்றன. அவனது ஆரம்பகாலத்தில்  ஊரில் அவனது பாடசாலையின் அதிபராக இருந்த ஒருவர் அவனுக்கு அன்றில் இருந்தே  ஆதுரம் காட்டி அன்பு செய்கிற ஒருவராக இருக்கிறார்.  புலம் பெயர்ந்த பின்னும் அவருடன் தொடர்பில் இருக்கிறான். ஆனால் இவை எதுவும் பலன் அளிக்காமல்  கடைசியில் அவன் தன்னைத்தானே எரித்துக் கொள்கிறான்.  இக் கதையில்  நாயகனின் அக உலகப் போராட்டம் விபரிக்கப்படுகின்றமை முக்கியமான பண்பாகும். மனக்காயங்கள் தொழில்முறை ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதைச் சொல்லாமல் செல்லும் கதை இது.

 

துரோகி

 

இக்கதை சமூகத்தின் விளிம்பு நிலையை அடைகிற இளைஞர்களைப்பற்றியது. அவ்விளைஞர்கள் சண்டைக்குழுக்களாக மாறி வேறு இனச் சண்டைக்குழுக்களுடன் மோதிக்கொள்வதையும் பின்னர் தமக்குள்ளே மோதிக்கொள்வதையும் இக்கதை காட்சிப்படுத்துகிறது. இக்குழுக்களுக்குள்ளே இருக்கிற உறுப்பினர்களுடைய நடத்தைகள் அவர்கள் தம்மையொத்த இளம் பெண்களின் மீது புரிகிற வன்முறையுள் இருக்கிற    காமம் காதல்  போன்றவற்றையும் இக்கதை முன்வைக்கிறது..

 

பனி

 

இக்கதை புலம்பெயர்ந்தவர்கள் பற்றி இருக்கக்கூடிய மாய விம்பங்களை உடைக்கும் கதை. புலம்பெயர்ந்த ஒருவன்  உடலும் உள்ளமும் வலிக்க வேலை செய்து புலம்பெயர்வதற்குப் பட்ட கடன்களை அடைத்துத்  தங்கைமார்களுக்கும் வாழ்க்கை அமைத்துக் கொடுத்து  தான் விரும்பிய பெண்ணத் திருமணம் செய்வதைத் தவிர்த்துப்  பேசி நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து அந்த மணவாழ்க்கையும் முறிந்துவிட வேலை இழந்து வீடிழந்து விளிம்புநிலை மனிதனாகி வீதியில் வாழ்பவனாகி விடுகிறான். கிட்டத்தட்ட இதனை ஒத்த மனநிலை கொண்ட இன்னொருவன் அவனது நிலையைப் பார்த்துத் தெளிவடைந்து வீடு திரும்பிச் செல்கிறான்.

 

கள்ளி

 

சன நெருக்கம் நிறைந்த ஒரு இடத்தில்  தனக்குள் நுழைந்த  நறு மணத்தை  அது யாரில் இருந்து வந்திருக்கும் என யோசித்துத் தேடி அத்தேடலிலேயே ஆழப் புதைந்து   விடும் ஒருவன் அவனைப் போலவே வாசத்தைத்  தேடும் இன்னொருத்தியைச் சந்திக்கிறான். இங்கே  வாசம் அல்லது நறுமணம் என்பது ஒரு குறியீடு.  மனதுக்குப் பிடித்தமான நறுமணத்தை கொண்டிருக்கக்கூடிய பெண்ணை அவன்  தேடத்தொடங்க வாசம் என்பது இக்கதையில் வேறு பல குறியீடுகளை எடுத்துக்கொள்கிறது.   மனதுக்குப் பிடித்தமான பெண், மூளைக்குள் பதிந்து விட்ட இளமைக்கால உணவு,   வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்த கடந்த காலம், அது நிகழ்ந்த நிலம்,  அதில் விளைந்தவைகள்  போன்றவற்றைத் தேடுவது நினைப்பது எல்லாமே வாசத்தை தேடுதல் என்பதினூடகக் குறிக்கப்படுகிறது.  

 

அவன் சந்தித்த அப்பெண் தொலைபேசியூடாகப் பாலியற் கிளர்ச்சியை விற்பவளாக இருக்கிறாள். அதன் காரணமாகவே அவள் அவளது குடும்பத்தினால் கௌரவக் கொலை செய்யப்படுகிறாள். அவள் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன் இவனிடம் அடைக்கலம் கோருகிறள் இவனைப்போலவே அவளும்  வாசங்களைத் தொடர்பவளாக  இருந்த போதும் அவளின் தொழில் காரணமாகவும்  அவனுக்கொரு காதலி இருக்கின்றமையாலும் ( அதனால் வரக்கூடிய பிரச்சனைகளைக் கருத்திற் கொண்டு) அவளுக்கு   அடைக்கலம் கொடுக்க மறுத்துவிடுகிறான்.

 

அருமையான இக்கதையின் பலவீனம் சொல்லாமற் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த கதையில்  அதனை விளங்கப்படுத்தும் விதமாகப் பல பகுதிகள்  வருகின்றன. அவை கதையின் கனதியைக் குறைத்து விடுகின்றன.

 

கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்

 

கனடாவில் இருந்து ஊருக்குத் திரும்பிச் செல்கிற ஒருவன்  வவுனியாவில் தனது மச்சாளின் வீட்டில் தங்கிச் செல்கிறான். மச்சாளின் கணவன் சிவா பொட்டம்மனின் உளவுப்பிரிவில் இருந்த  முக்கியமான முன்னாள் போராளி. மச்சாளின் வீட்டில் தங்கி நிற்கும் போது கணவாய்க்கறி சாப்பிட்டதால் வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது . வைத்தியரிடம் செல்கின்றனர். அப்பொழுது கதைநாயகனின் மச்சாள் அவனுக்கு வைத்தியரின் மகளின் காதல் கதையைச் சொல்கிறாள். வைத்தியர் தனது மகளின் தீராக்காதலை முடித்து வைக்க வேறு இடத்தில் திருமணம் பேசி விடுகிறார். இதனை அறிந்த காதலன் கபிலன் கோபமுற்று கோபிகாவின் கால்களை வெட்டுகிறான்.அவளின் தாய்க்கு கைகளில் வெட்டு. கபிலன் சாகசம் நிறைந்த  காதலன். கோபக்காரன்.  சுத்துமாத்துக் கதைகளைக் கதைக்கக்கூடியவன். நேரான சிந்தனை அற்றவன். விடுதலைப் போராட்டக்குழு ஒன்றுக்குத்  தேவைப்படுகிற தன்மைகள் எதுவும் அற்றவன். ஆனாலும் இவன் இச்சம்பவத்துக்குப் பிறகு புலிகளில் சேர்ந்து விடுகிறான்.

 

அப்படிப்பட்டவனைக் கண்காணிக்கும் பொறுப்பு அன்று சிவாவுக்கு வருகிறது. பிற்பாடு கபிலன் இயக்கத்திற்குச் சுழித்து விட்டு இந்தியா செல்கிறான். அவனைக்கண்காணிப்பதில் தவறு  செய்ததால் சிவாவுக்குத் தண்டனை கிடைக்கிறது. இதற்கிடையில் வைத்தியரின் மகளுக்கு திருமணம் நிகழ்ந்து பிள்ளையும் பிறக்கிறது.  ஓர் நாள் வைத்தியரின் மகள் கடிதம் எழுதி வைத்து விட்டுப்  பிள்ளையுடன் இந்தியாவுக்குச் சென்று விடுகிறாள் இங்கு முரண்அணி என்ன வென்றால்  அவள் கபிலனுடன் இணைந்து வாழவே அங்கு செல்கிறாள்..  கோபிகா கபிலனுடன் கொண்ட காதலை தமிழ் மக்கள் புலிகளுடன் கொண்டிருந்த காதலுடன் ஒப்பிட்டுக் கதை முடிகிறது. இக்கதையை வாசித்து முடித்துச் சிந்திக்கும்  அதன் உள் அடுக்குகள் அழகாகப் பிரிந்தும் சேர்ந்தும் வருகின்றன. விடுதலைப் போராட்டத்தின் மீதான  முரணணியான விமர்சனங்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றன.

 

கதை ஒன்றினுள் வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும் ஒன்றுகொன்று வலிமை  சேர்ப்பவையாகவும்  அமையும் பொழுது சிறுகதை என்கிற வடிவம் செம்மை பெறுகிறது. சிலவேளைகளில் கதைகளில் புகுத்தப்படும் சம்பவங்கள் நம்பத்தகுந்தவை போல இல்லாவிடினும் அவை புனைவே என்ற உணர்வுடன் வாசிக்கும் போது அவை நிகழக்கூடிய தர்க்க ரீதியான சாத்தியத்தை மறுக்க முடியாதிருக்கும். கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்  என்கிற கதை அப்படியானதொன்று.

 

மாறாக இத் தொகுப்பில் உள்ள  சில கதைகளில் வருகிற சம்பவங்கள் அக்கதைகளின் அடி இடையில் நிலவுகிற சனநாயக உறவு முறையையும் ஒப்பிடுவதற்காகவே அவர் அப்பகுதியை நாதத்திற்கு வலுச் சேர்ப்பவையாக இல்லை. அச்சம்பவங்கள் இல்லாமலும்  அக்கதைகள் அவற்றின் ஆழத்தை அல்லது செறிவை அடைந்திருக்க கூடும்.

 

உதாரணமாக சிறகு வளர்த்த குரல்களுடன் பறந்து போனவன் என்ற கதையில் வரும் கணித வாத்தியார்கள் பற்றிய பகுதி. இலங்கையின் கல்வி முறையை பீடித்திருக்கும் பிரபுத்துவ எச்சங்களையும் மேற்கத்தைய நாடுகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அங்கே சேர்த்திருக்கிறார்.


(இன்னும் வரும்)


0 comments: