-தேவ அபிரா
இறுதியாக முதலாவது கதையான ஹேமா அக்கா என்ற
கதையைக் கவனிப்போம்
ஆரம்பத்தில்
பத்து வயதிற்குப்பட்ட சிறுவனின் பார்வையில் இருந்து கதை சொல்லப்பட்டு இடையிடை கதாசிரியரின் பார்வையாகவும் இறுதியில் பதின்மவயதுச்சிறுவனின் பார்வையிலும் கதை சொல்லப்பட்டு முடிகிறது.
கதை சொல்லியான சிறுவனின் மனதுக்குப்பிடித்த
ஹேமா அக்காவின் காதல் வாழ்வு மரணம் ஆகிய மூன்றும் இக்கதையில் எங்கள் முன் வைக்கப்படுகின்றன. இக் கதையை வாசித்து முடிக்கும் போது ஏற்படும் அதிர்வு பெரியது. ஹேமாவின் காதல் வளர்ந்த வகைமையையும்
அதற்கு இடையூறு வந்த போது அவர் செய்த தற்கொலை முயற்சியையும் அவர் காப்பாற்றப்பட்ட வகைமையையும் பின்னர்
இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்த போது அவருக்கு நிகழ்ந்த கொடுமையையும்
அம்பனை என்ற கிராமத்தின் பின்னணியில் வைத்துச் சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.
ஹேமா அக்காவின் சசியுடனான காதல் மறுக்கப்பட்டபோதும் இந்திய இராணுவம்
போன பின்னர் மீண்டும் சசி (ஹேமா அக்காவின் காதலன்) வந்து ஹேமாவைப் பெண் கேட்கிறார். குடும்பத்தினர் மறுக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ஹேமா தான் காதலித்த சசியுடன் ஓடிப்போய்த் தனது வாழ்க்கையைக் கிளிநொச்சிக் கிராமத்தில் அமைத்துக்கொள்கிறார். 1995 நிகழ்ந்த இடப்பெயர்வின் போது பதின்ம வயதடைந்த கதைசொல்லியான சிறுவனும் அவனது அம்மாவும்
கிளிநொச்சிக்குச் செல்கின்றனர். ஹேமா அக்காவுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது. ஹேமா அக்காவின்
சிறுவனின் மீதான அன்பும் வாஞ்சையும் முன்புபோலவே இருக்கின்றன. சிறிய வயதில் எங்கள் மனதுள் தங்கி விடுகிற அக்காக்கள்
பற்றிய நினைவுகள் எப்பொழுதும் எங்களுக்குள்
உயிர் வாழ்பவை. ஹேமா அக்கா வீட்டிற் சில காலம் தங்கிப் பின் வேறு ஒரு வீட்டிற்குப் போனாலும் அச்சிறு வாலிபன் அவர்களுடன் உரையாடுபவனாக இருக்கிறான். அரசியல் நிலைப்பட்டு இந்திய இராணுவ வருகையைத் தமிழர்கள் தமது வாய்ப்பாக்கி இருக்க வேண்டும் என நினைக்கிற சசி அண்ணணுடன் ஏற்பட்ட அரசியல் வாக்குவாதமொன்றில் கடும் கோபமுற்று ஹேமாக்காவைக் கெடுத்த இந்திய இராணுவத்துக்குச் சார்பாக இருக்கிறியளே எனச் சொல்லி விடுகிறான்
ஹேமா தனக்குளேயே புதைத்து வைத்திருந்த பெரும் கொடுமையை, துன்பத்தை எடுத்து அவளின் கணவனின் முன் சிறுவன் அவனையும் அறியாமலேயே வைத்து விடுகிறான். சிறுவனின் இந்திய இராணுவத்தின் மீதான வெறுப்பின் மூலமும் அதுதான். அது அவனுக்குள்ளும் உறைந்து கிடந்த கொடூரம்.
தான் நேசித்த தனது அக்காவுக்கு நிகழ்ந்த கொடூரம் அது. ஹேமா இந்திய இராணுவத்தால் பாலியல்வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமையை அவர் யாருக்கும் சொன்னதில்லை. சசியுடன் வாழ்ந்த காலத்தில் அவர் அதைச் சசிக்குக் கூடச் சொல்லவில்லை. யாருக்கும் சொல்லக்கூடிய ஒரு விடையமாக அது அன்றைக்கு இருந்ததும் இல்லை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட கற்பு தூய்மை போன்ற பண்பாட்டுச் சுமைகளை மீறி இத்தகைய விடையங்களை உடல் உளக்காயங்களாக மட்டும் பார்க்கும் அளவுக்கு அன்று சமூகம் வளர்ந்திருந்ததா? சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத துயரத்தைத் தாங்கி ஹேமா அடைந்த மனவலிமை எத்தகையது! வாழ்தலைத் தேர்ந்தெடுத்த அவரது துணிவு எப்பேர்ப்பட்டது!
அவ்வளவு கால அவரது மனப் போராட்டம்தாம் என்ன? இது போன்ற பல கேள்விகள் எங்களுக்குள் உணர்வுப்போராட்டமாக எழுகின்றன.
சசி மீதான காதலைக் குடும்பம் மறுத்த போது தற்கொலை செய்ய முயன்ற ஹேமாவுக்கு, இந்திய இராணுவம் அவரைப்பாலியல் வன்முறைக்குள்ளாக்கி உண்டாக்கிய காயத்தை சசியுடனான காதலுடன் மீண்டும் வாழ்வதன் மூலம் ஆற்றிக் கொண்டதாக நினைத்திருந்த ஹேமாவுக்கு “இந்திய இராணுவம் உம்மைக் `கெடுத்ததை` ஏன் எனக்குச் சொல்லவில்லை” எனச் சசி கேட்ட போது வாழ்க்கை முடிந்து போகிறது. இப்பொழுது
குளத்துள் விழுந்து தற்கொலை செய்கிறார். ஹேமா பாலியல் வன்முறைக்குட்பட்டதில் இருந்து சசியுடன் வாழ்ந்து இறுதியில் தற்கொலை செய்து கொண்ட காலம் வரையும் அவர் அடைந்திருக்கக் கூடிய எல்லா வகையான உணர்வுகள் குறித்தும்
ஒரு சொல் கூடக்கதையில் இல்லை. அவ்வாறு ஒரு சொல் இருந்திருந்தாற் கூட இக்கதை வலுவிழந்திருக்கும். சொல்லாமல் விடப்பட்டு எமக்குள் கிளர்த்தப்படுவதுதான் கதை.
இக்கதையின் ஆழத்தைக் இன்னும்
கூட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தைக் கதாசிரியர் தவற விட்ட இடம் ஒன்றும் இங்கே உள்ளது. ஹேமாவின் காதலை அவரது குடும்பம் மறுத்ததற்குக் காரணம் சாதிதான் என்பதைக் கதாசிரியர் தகவலாக எங்கள் முன் வைக்கிறார். இதனைக்கூடச் சொல்லாமற் சொல்லக்கூடிய வாய்ப்பு ஒன்று கதையின் ஆரம்பத்தில் வருகிறது’ “எங்கள் ஊரின் சனம் சாதி பாக்கிற மாதிரி
எங்கள் ஊரின் மண் சனத்தைப் பிரித்துப் பார்ப்பதில்லை” என்று ஒரு வரி வரும் அந்த வரி தந்த மனப்பதிவை வளர்த்துத் தூண்டுவதன் மூலம் சாதிப்பிரச்சனையையும் இக்கதையுள் வலிமையாகப் பொதித்திருக்க முடியும்.
பத்து அல்லது அதனை அண்டிய வயதுடைய சிறுவனின் பார்வையிற் கதை சொல்லப்படும் போது அவனின் எண்ணங்களின வீச்சு எல்லை குறித்த கவனம் கதாசிரியருக்கு இருந்திருக்கலாமோ என நினைக்கும் இடங்களும் உள்ளன.
மொழிப்பிரயோகம்
● ஹேமாக்கா
வாங்கோ! வெளியே வாங்கோ! வெளியே வாங்கோ! என்று நாங்கள் கிணத்துக்கட்டைச் சுற்றிக் குஞ்சைப் பருந்திட்டை பறிகொடுத்த கோழி மாதிரிக் கத்திக் கொண்டிருந்தோம் -அழகான மிக எளிமையான
ஆனால் ஆழமான உணர்வைத் தரும் வசனம். -தாய்க் கோழியின் பரிதவிப்பை உவமானமாகும் வரிகள்
● மலைகளும் நதிகளும் இல்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள்தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி என்றொரு வசனம் வருகிறது. மலைகளும் நதிகளும் இல்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் அமுத சுரபி என மட்டும் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
யாழ்க்குடா நாட்டில் அன்றைக்கு இருந்த பெரும்பாலான கிணறுகள் பங்கு கிணறுகள் அல்லது அனுமதியுடன் பலரும் பயன்படுத்தும் கிணறுகள். பல கிணறுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்ட பொதுக்கிணறுகளாக இருந்திருக்கின்றன. கிணற்றடி வைரவர் கிணற்றடிப் பிள்ளையார் எனக் கிணறுகளை அண்டிச் சிறு வழிபாடுகளும் நிகழ்ந்தன. இக்கிணறுகளைச் சுற்றிப் பல பண்பாட்டுக் கோலங்கள் இருந்தன. காதல் காமம் பங்குச்சண்டை தற்கொலைகள்
கொலைகள்
எனப்பலவிடையங்கள்
இக்கிணறுகளைச் சூழ நிகழ்ந்தன.
● அடுத்த நாள் விடிய அம்மா " டேய் தம்பி எழும்படா ஹேமாக்கா
குளத்துக்குள்ள குதிச்சிட்டா எண்டு சனம் சொல்லுது. ஓடிப்போய் என்ன நடந்ததெண்டு
பாத்திட்டு வா " பட பட வென்று கையால தட்டி எழுப்புகிறா. நான் முன்பு வோர்டன் என்னப் பிடிக்க முயன்ற பொழுது ஓடியதை விடவும் வேகமாக 'என்ன நடந்தது'
என்று அறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடுகிறேன். ஹேமாக்காவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாதென எங்கள் ஊர் வைரவரை நேர்ந்த படி சைக்கிளை உழகுகிறேன்.
என்ன நடந்தது என்று அறிதல் ஒரு வகையான விடுப்பு பார்த்தல்
என்னும் உணர்வைத் தருவது. அவ்வரியை விடும் போது பந்தி தரும் கருத்தின் ஆழம் அதிகரிக்கிறது.
பொதுவில் இளங்கோவின் கதைகளில் வெளிப்படுகிற சில முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்..
●
விடுதலைப் போராட்டம் பற்றி அதீத காட்டுருக்கள் எதுவும் இல்லை.
கொட்டியா என்ற கதை முழுவதும் போராட்டத்தில் இருந்து அந்நியமான ஒருவனைப் பற்றியதுதான். போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்திலே அதில் இருந்து அன்னியப்பட்ட மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது சொல்லப்படுவது முக்கியமானது. தமிழர்கள் எல்லோருமே புலிகள் என்ற காட்டுரு நிலவிய காலத்தில் தான் அப்படியானவன் அல்ல என்பதை இக்கதையின் கதாநாயகன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
●
யாழ்பாணீயம் மற்றும் தமிழ்ப்புத்தி மீதான கிண்டல்கள் பலகதைகளிலும் விரவிக்கிடக்கின்றன.
●
ஆண் மனநிலையை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்கள் பேசும் வகை. உ+ம்:
1.
“உன்னை அவமானப்படுத்தியவனுக்கு
அடுத்த அறையில் வைத்துப்பதிலடி கொடு”
2.
“உடலின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளைக் கிளர்த்தி
என்னுடன் தன் உடலைப் பகிர்ந்தவள் அவள் என்கிற உணர்வை தன்னுள் பத்திரப்படுத்திக்கொண்டான்”
3.
“கட்டிலில் தன் திருவிடையாடலைக் காட்டினான்”
(யாழ்ப்பாணியின் சோக வாக்கு மூலம் என்ற கதையில் இவ்வாண் மன நிலை முரண் அணியாகக் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.)
●
காமம் துய்த்தல் முதன்மைப்படல்
●
உறவுகளிடம் இருந்த தன்னை அந்நியப்படுத்தல்
●
ஆங்கில கலாசாரத்துக்கு வெளியே உள்ள பெண்கள் மீதான ஈர்ப்பு
●
அங்கதம் அல்லது கிண்டல் தொனியுடன் கூடிய மொழி நடை இது சில சந்தர்ப்பங்களில் கதைகளின் ஆழத்தைக் குறைப்பததாகவும் சில சந்தர்ப்பங்களில் கதைக்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளது.
கருத்தூன்றி வாசிப்பவர்களின் கையில் உள்ள எந்தப்படைப்புக்கும் வயதாவதில்லை. இத் தொகுப்பு வெளிவந்து பத்து வருடங்கள் ஆகின்றன ஆனாலும் இதனை எடுத்து வாசிக்கும் போது இது தொட்டுச் சொல்லும் விடையங்கள் இன்னும் எங்களைச் சுற்றி நிகழ்பவைகளாகவோ அல்லது நிகழ்ந்தவைகளின் அழியாத ஞாபகங்களைப் பற்றியதானவையாகவோ இருக்கின்றன.
ஈழத்தமிழர் வாழ்வின் இரண்டு முக்கியமான அதிர்வு மையங்களாக இருப்பவை விடுதலைப் போராட்டமும் புலம் பெயர்வும் ஆகும். இவ்விரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.
மூன்று தலைமுறைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குக் காவிச் செல்லப்படப்போகின்றன. அது போல் புலம்பெயர்வு தரும் சமூக பொருளாதார மற்றும் அடையாள அதிர்வுகளும் தலைமுறைகள் கடந்தும் நீடிக்கவே செய்யும்.
இப்பின்னணியில் இளங்கோவின் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
***********************************
சித்திரை 2023
நன்றி: 'அம்ருதா', ஆடி, 2023
0 comments:
Post a Comment