(கொழும்பில் ஒரு கஃபேயிற்குப் போன என் அனுபவத்தை முன்னர் எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் பாதிப்பில் இனியா கடிதமொன்றை முகநூலில் எழுதினார். அதற்குப் பதில் கடிதம் எழுதப் போக, அது சில மடல்களுக்கு நீண்டன. இந்தக் கடிதங்களுக்குத் தோற்றுவாயான பதிவு இங்கே https://djthamilan.blogspot.com/2023/08/pages-coffee.html)
************
அன்பு இளங்கோவிற்கு,
முன்னொரு போதில், அதாவது மடல்கள் மட்டும் இருந்த காலத்தில் 'பேனா நட்பு' என்று ஒன்று இருந்தது. அதைக் குறித்து
உங்களுக்கு அறிமுகம் இருக்கின்றதா என்று தெரியாது. அதன் கான்செப்ட் என்னவென்றால்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதும் மடல்கள் வழி ஒருவரை
மற்றவருக்கு அறியத் தருவர், அப்படியே நட்பாகுபவர்க்குப் பெயர்தான் 'பேனா நண்பர்கள்'. உங்கள் பதிவுகளின்
வழி உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இனி
பதிவிற்கு வருகிறேன்.
ஜே கே குறித்து சிறு அலசல் நன்றாக இருக்கிறது.
நான் ஜே கே யின் பரம விசிறி. இதை அவர் கேட்டால் மறுபடியும் ஒருமுறை மரித்து விடுவார். ஆனால் அவரை அவ்வளவு பிடித்திருக்கிறது, என்ன செய்வது? என்னால் அவரை
விளங்கிக் கொள்ள முடிந்த அளவு, விளக்கிச் சொல்ல முடியாது. மேலும் என் தோழிகள்
அவரைக் கண்டாலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவார்கள். இதில் நான் விளக்கவும்
முற்பட்டால் அவர்களிடமிருந்து குரட்டையும் வரும்.
'நினைவோ ஒரு பறவை' எனக்கு மிகப் பிடித்திருந்தது. காதலிப்பவர்கள் உல்லாசமாக
உறவு கொள்ளும் போதும், அதைக் குறித்து வெளிப்படையாக பேசிக் கொள்ளும்
போதும் அவர்களுக்குள் ஒரு அலாதியான நெருக்கம் வரும். அதை அழகாக படம் பிடித்திருக்கிறார்.
அதிலும் அவர்களுக்குள் இருக்கும் அந்த 'சட்ட
கிழிஞ்சிருந்தா...' சம்பாஷனை எல்லாம் மிக ரசித்தேன்.
//‘நினைவோ ஒரு பறவை’யில் நாயகி orgasm இன் பொழுது தனக்குள் short term memory loss ஆகி தான் இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைந்துவிடுவதான பிரமை வருகின்றது என்கின்றாள்.// கடந்த ஞாயிறு தோழிகள் மீட்டில் (meet) Orgasm and squirting குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் தோழியொருத்தி, இந்த மாதிரி அதாவது squirting orgasm எல்லா முறையும் நிகழாது, நாம் எதிர் பார்த்தாலும் நடக்காது, ஆனால் அப்படி நிகழும்போது, தான் என்ற பிரக்ஞையே முற்றிலும் இழந்த பரவச நிலையில் ஆழ்ந்து விடுவதாகக் கூறிக் கொண்டு இருந்தாள்.
தி.கு நல்ல அனுபவசாலி என்று நினைக்கிறேன்.
உண்மைக்கு வெகு அருகில் இருந்து படம் பிடித்திருக்கிறார். படம் பார்த்ததும்,
தி. கு வைப் பிடித்துப் போய் அவரது பேட்டியைப்
பார்த்துக் கொண்டிருந்தேன், அவரிடம் ஜித்துவின் தாக்கம் இருப்பதாகவும்
உணர்ந்தேன். நீங்களும் இவர்கள் இருவரையும் ஒரே பதிவில் எழுதியிருப்பது எனக்கு
ஆச்சர்யம் அளிக்கிறது.
//எழுதுகின்றவனா எனக்கேட்டு என் பொழுதுக்கு
வர்ணமூட்டிய இந்தப் கஃபே பெண்ணுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும். ஜேகேயை
வாசித்து, என் அத்தனை குழப்பங்களோடும் நான் அவரைப்
புரிந்துகொள்ள rephrase செய்ததைப் பொறுமையாகக் கேட்ட என் தோழியை
நேசத்துடன் அரவணைக்க வேண்டும். இவையும் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான்.//
அருமை! இன்னும் உங்கள் பயணம் பல பல வர்ணங்களால்
நிறையட்டும்.
அன்புடன், இனியா
************************
அன்பின் இனியா,
பத்திரிகைகளில் பேனா நண்பர்கள் பக்கத்தைப்
பார்த்து வளர்ந்திருந்தாலும், கடிதங்கள் எழுதி பேனா நண்பர்கள் கிடைக்கும்
சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. எமது ஈழப்போராட்டத்தில் அவ்வாறு பேனா
நண்பர்களுக்கிடையில் கடிதம் எழுதி போராடப் போனவர்களும், காதல் வளர்த்தவர்களும் உண்டென அறிந்திருக்கின்றேன்.
நான் ஜேகேயை உங்களைப் போல ஆழமாக வாசித்து
அறிந்தவனல்ல. ஓஷோ, என் ஆசிரியர் தாய் (Thay) ஆகியோரை ஒரளவுக்கு நான் அறிந்ததன் பிறகே ஜேகேயிடம் வந்தவன்.
என் பதின்மங்களில் இருந்து அதிகம் ஈர்க்கும் விசிறி சாமியார் ஜேகேயை சென்னையில்
சந்தித்த பொழுதுகள் பற்றி 'அமரகாவியத்தில்' எழுதப்பட்டிருக்கின்றது. ஒருவர் அறிவாலும், இன்னொருவர் அனுபவத்தாலும் அடைந்த ஞானத்தை, ஓரு சந்தியில் அவர்கள் தரிசித்த இடமென அதை நான் நினைத்துக்
கொண்டேன்.
ஜேகேயை இன்னும் அறிந்துகொள்ளவேண்டுமென, 'கோவிட்கால' தனிமையில் சில நண்பர்களாய் மெய்நிகர் உலகில்
சந்திக்கும் ஒரு மூடிய குழுவில், ஜேகேயை வாழ்நாள் முழுதும் பின்தொடரும் ஒரு
நண்பரை அழைத்து வந்து பேசச் செய்திருக்கின்றோம். அவருக்கு ஜேகேயை மிகப் பிடிக்கும்
என்றாலும், ஜேகே மீது வைக்கப்பட்டிருக்கும்
விமர்சனங்களையும் சேர்த்து அவர் அன்று பேசியது பிடித்திருந்தது. ஓஷோவோ அல்லது
விசிறி சாமியாரோ கூட அந்தவகைப்பட்ட விமர்சனத்திலிருந்து தப்பமுடியாது.
அதற்கப்பாலும் அவர்கள் என்ன நமக்குத் தந்தார்கள்/தந்து கொண்டிருக்கின்றார்கள்
என்கின்ற எமது அகப்பயணமே முக்கியமானது அல்லவா?
தி.குவும், ஜேகேயும் ஒரே புள்ளியில் இந்தப் பதிவில் வந்து சேர்ந்தது
தற்செயலானதுதான். உண்மையில் நாமின்னும் காதலை, காமத்தை ஒப்பனைகளோடுதான் சொல்லிக்
கொண்டிருக்கின்றோம். தி.கு அதை உடைத்துப் பார்ப்பதால் தான் 'நினைவோ ஒரு பறவை' பிடித்திருந்தது.
பெண்கள் காமத்தைத் தங்களுக்கிடையில் பேசுமளவுக்கு ஆண்கள் தங்களுக்குள் அப்படிப்
பேசி பகிர்ந்து கொள்வதில்லையெனவே நினைக்கின்றேன். எல்லாம் தெரிந்த மாதிரியான ஒரு
பாவனையை மட்டும் ஆண்களாகிய நாம் பெரும்பாலும் பிறரிடம் காட்டிக் கொள்கின்றோம்.
திருவள்ளுவர் 'கள்ளுண்ணாமை' என்று ஒரு தனியே ஒரு
அதிகாரம் எழுதியிருக்கின்றார். ஆனால் காமத்துப் பால் எழுதும்போது காதலின் இன்பத்தை
அதிகம் மது அருந்தும் போதையுடந்தான் ஒப்பிடுகின்றார். கள்ளுண்ணாமல் எப்படி அந்தப்
போதை வள்ளுவருக்குத் தெரியும் என்று நான் யோசிப்பதுண்டு. அவ்வாறுதான்
தமிழ்ச்சமூகம் காமம் குறித்தும் சிலவேளைகளில் தேவையில்லாத taboo களுடன் அல்லாடிக் கொண்டு, காமத்தைப் பேசவே வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லியபடி அதை
அனுபவிக்க வேண்டும் என்ற இரகசிய மனதை தனக்குள் வைத்திருக்கின்றதோ என்று
நினைப்பதுண்டு.
வாழ்வில் மட்டுமில்லை, எழுத்தினூடும் ஒத்த அலைவரியில் இருப்பவர்களைச் சந்திப்பது
எனக்கு இப்போது அரிதாகிக் கொண்டே வருகின்றது. அப்படி அரிதாக, வெளிப்படையாகப் பேசக்கூடிய உங்களைப் போன்ற ஒருவரை மெய்நிகர்
உலகில் சந்திப்பதென்பது அருமையானது. நீண்ட ஒரு கடிதத்திற்கு (அப்படிச் சொல்லலாமோ?)
மிக்க நன்றி.
அன்புடன்,
இளங்கோ
(ஆவணி, 2023)
புகைப்படம்: இணையம்
0 comments:
Post a Comment