இந்த வருடத்தின் தொடக்கத்தில் கோயம்புத்தூரில் நின்றபோது அ.ராமசாமி தான் ஆலோசகராக இருக்கும் கல்லூரிக்கு வந்து சந்திக்க முடியுமா என்னை அழைத்திருந்தார். அது இடுக்கியிலிருந்து, சென்னைக்குச் செல்லும் பயணத்தின் குறுகிய இடைத்தங்கல் என்பதால் அவரை அங்கே சந்திக்க முடியாமல் போனது.
அந்தத் தவறவிட்ட சந்திப்பு இப்போது ரொறொண்டோவில் நிகழ்ந்துவிட்டது. அவருடன் 'தலித்', 'மணற்கேணி' போன்ற இதழ்களில் பங்காற்றிய ஜவஹரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியானது. அத்துடன் நான் கனடா வந்ததிலிருந்து திரைப்படங்களை இரவல் எடுக்கும் 'குமரன் விடீயோ' என்ற கடையை நீண்டகாலம் வைத்திருந்து, இப்போது ஒரு குடும்ப நண்பராகவே ஆகிவிட்ட சிவாவின் வீட்டில் இவர்களைச் சந்தித்ததும், எல்லோரும் சேர்ந்து அரசியல், இலக்கியம் என்று இரவிரவாக அவரவர்களுக்குரிய முரண்களுடன் நட்பாகப் பேசியதும் இனிமையானது. இன்றைய காலத்தில் நிதானமாக ஒருவர் பேசுவதைக் கேட்பதற்கான செவிகள் அல்லவா அரிதாகப் போய்விட்டன.
கீழே வருவது அ.ராமசாமியின் பதிவு.
**************
பயணக்காதலன் இளங்கோ
-----------------------------------
மனிதர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பலவிதமான நோக்கங்கள் உண்டு. புனிதப்பயணங்கள், சாகசப்பயணங்கள், இடங்களைப் பார்த்தலும் களித்தலுக்குமான பயணங்கள் என்பதைத் தாண்டி வெவ்வேறு நிலவியலுக்குள் வாழும் மனிதர்களை அறிதலை நோக்கமாகக் கொண்டு பயணித்துக் கொண்டே இருக்கும் நபர் இளங்கோ. டி.சே.தமிழன் என்பதாகவும் அறியப்படும் அவரது புனைகதைகளின் வாசகனாகவும் அவரை அறிவேன்.
ஆ.சி.கந்தராஜாவின் நாவல் வெளியீட்டில் பார்த்த இளங்கோ, நான் தங்கியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில்தான் தனது வீடு இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் காலை வந்து சந்திப்பேன். காலை உணவுக்கு என்னோடு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே வந்தார். வந்தவரோடு சென்றபோது ஒண்டாரியோ ஏரிக்கரையினை ஒட்டி இருக்கும் ஒரு பெரும்பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.
காலைக்காட்சிக்கான பக்கம் என்பதாக அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் கில்டு பூங்காவும் (Guild Park & Gardens) தோட்டமுமான அந்த இடம் முதல் நாள் பெய்த மழையின் குளிர்ச்சியோடு இருந்தது. புதிதாகத் திருமணம் முடிக்க இருக்கும் இணையர்களின் படப்பிடிப்புகள் நடக்கும் இடமாகவும் இருந்தது அந்தப் பூங்கா. நாடக அரங்குகள், இசைக்கச்சேரிகள் நடக்கும் அரங்கத்தையும் உள்ளடக்கிய பூங்காவைக் காட்டினார் இளங்கோ.
டொரண்டோவில் பார்க்க வேண்டிய பூங்காங்கள் பல இருக்கின்றன என்றாலும் வனமாகவும் தோட்டமாகவும் அரங்கக் கூடமாகவும், சிற்பங்களின் காட்சியாகவும் இருந்த அந்த இடத்தை நண்பர் இளங்கோவோடு சேர்ந்து பார்த்தது இந்தப் பயணத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. காலையில் வந்த நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சிவாவுக்கும் நண்பர் என்பதால் பலவற்றையும் பேசிக்கொண்டிருந்த நினைவுகள் எப்போதும் இருக்கும்.
*************
நன்றி: அ.ராமசாமி (https://www.facebook.com/ramasamy.tamil/posts/pfbid02Qn7JWG26pxAG4eJ3QL5yFubzBEdRAh7MhPHGERANdQCqRyV7Zki8VYnz3SHTHwK3l)
0 comments:
Post a Comment