அன்பு இளங்கோவிற்கு,
உங்கள் மடலை நான் பல முறை வாசித்துவிட்டேன். இது கொடுக்கும் ஆனந்தம் அபரிமிதமாக இருக்கிறது. நான் முதல் முறை வாசிக்கும்போது நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் அவசரமும் ஆர்வமுமாக வாசித்தேன். பிறகு நிதானமாக... எவ்வளவு வருடங்களாயிற்று இப்படி மடல்கள் வரைந்து. இது ஒரு ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்கிறது.
மேலும், ஒரு நாள் எனக்குத் தோன்றியது, இந்த பூமி ஒரு உருண்டை அவ்வளவு தானே? இதில் ஏன் நாம் இத்தனை கோடுகளைக் கிழித்து வைத்திருக்கிறோம்? ஏன் நாம் இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் அனுமதி கோர வேண்டும்? பூமி எல்லோருக்குமானது தானே. பறவைகள் அப்படித்தானே பறந்து திரிகின்றன. இப்படியெல்லாம் கிளரும் சிந்தனைகள் சரியான திக்கில் தான் செல்கின்றன என்று எனக்கு reaffirmation கிடைத்தது ஜே கே விடம் இருந்து தான். So my connection/relationship with him is more in the lines of understanding myself, life and the world i.e., through him/his teachings.
இன்னும் உங்களுக்கு நிறைய எழுதத் தோன்றுகிறது. ஆனால் உறக்கம் இமைகளை மூடுகிறபடியால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.
உங்களைக் கண்டெடுத்தது தான் இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். And I think the feeling is mutual. இந்த உணர்வோடேயே உறங்கப் போகிறேன்.
அன்புடன், இனியா
**************
அன்பின் இனியா,
நாம் இவ்வாறான கடிதங்களைத் தனிப்பட்டு இரண்டு பேருக்கிடையில் எழுதிக் கொள்ளலாம். அதைத்தாண்டி இவ்வாறு ஏன் பொதுவெளியில் எழுதிக் கொள்கின்றோம் என்றால், எந்தளவுக்கு ஒரு தனிநபரால் மனந்திறந்து பேச முடிகின்றது என்று பார்ப்பதற்காக என்று நான் நினைக்கின்றேன். நீங்களும் அவ்வாறு நினைப்பீர்களென்றே நம்புகின்றேன்.
ஒரு பரிட்சார்த்த முயற்சி, அது எந்தளவுக்கு முன்னே போகமுடியும் என்று முயற்சித்துப் பார்ப்பதாக இந்தப் பொதுவெளி கடிதங்களை எடுத்துக் கொள்கின்றேன். இன்னொருவகையில் எம்மைப் போன்ற அலைவரிசையில் இருப்பவர்கள் தங்களுக்கிடையில் கடிதங்களை எழுதிக் கொள்ள இது உந்துதலைக் கொடுக்கவும் கூடும்.
பேனா நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதாதபோதும், நண்பர்களுக்கும் காதலிகளுக்கும் நிறையக் கடிதங்களை எழுதியிருக்கின்றேன். எமது நாட்டின் போர் காரணமாகவும், வெவ்வேறு இடம்பெயர்வுகளாலும் பலருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். சிலவேளைகளில் அருகில் இருந்தாலும், பேசுவதற்கான வெளி இல்லாத இடங்களில் கடிதங்கள் எழுதி நண்பர்களிடையே பகிர்ந்து இருக்கின்றோம்.
யாராக இருந்தாலும் எனக்கு எழுதப்பட்ட கடிதங்களை எப்போதும் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களைப் போல பத்திரமாக்கி வைத்திருக்கின்றேன். வாசிப்பு, இலக்கியம் என்று வந்தபோது மைக்கேல், (கவிஞர்) திருமாவளவன் (காலமாகிவிட்டார்) போன்றோர் தூர இடங்களிலிருந்து எனக்குக் கடிதங்கள் எழுதி நான் செல்லும் திசைகளை ஆற்றுப்படுத்தியவர்கள். அதிலும் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மைக்கேல் எழுதிய கடிதங்களை ஒரு காதலி அனுப்பும் கடிதங்கள் போல மனம் சிலிர்த்து வாசித்திருக்கின்றேன்.
பின்னாட்களில் இலக்கியக் கடிதங்கள் குறைந்து, காதலிகளுக்கு எழுதும் கடிதங்களாய் மாறியும் இருக்கின்றன. அதுபோலவே காதல் பிரிவுகளின்போது துயரத்தை ஆற்ற எழுதி அனுப்பமுடியாக் கடிதங்களை எனக்காக நிறைய எழுதியிருக்கின்றேன். ஒருவகையில் கடிதங்கள் என்பது நம்மோடு நாம் உரையாடுவது கூட அல்லவா?
இதைத்தான் புத்தர் சொன்னவர் என்கின்றார் தாய். ஒரு விடயம் தோன்றுவதற்கான புறச்சூழல் இருக்கும்போது அது தன்னியல்பிலே தோன்றும். எனவே நம் வாழ்வில் நாம் நினைத்தவையோ அல்லது திட்டமிட்டவையோ நடக்காமலோ அல்லது இடைநடுவில் நின்றுவிட்டாலோ இவ்வாறு பார்க்கும் பார்வையை வளர்த்துக் கொண்டால் வருந்தாது, பிறர் மீது தேவையற்ற காழ்ப்புணர்வின்றி இந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க முடியுமென நினைக்கின்றேன்.
உங்களைக் கண்டடைந்ததோ, இப்போது பேசிக் கொண்டிருப்பதோ இவ்வாறு எல்லாச் சூழ்நிலைகளும் பொருந்தும்போது வந்தடைந்த ஒரு புள்ளியாகக் கூட இருக்கலாம். அதே சமயம் எல்லாமே எப்போதும் மாறிக் கொண்டிருப்பதைப் பற்றி புத்தர், தாய் உள்ளிட்ட எல்லோருமே எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த 'மாறுதல்' பற்றிய பிரக்ஞை, நாம் நிகழ்காலத்தில் நமக்கு அருளப்பட்ட விடயங்களைத் தவறவிடக்கூடாதென்பதற்காய் அவர்கள் சொல்லியிருக்கின்றனர் போலும்.
கனடாவின் காலநிலை அவ்வப்போது வருத்தினாலும், எமக்குத் தெளிவான நான்கு காலநிலைகள் ஒவ்வொரு வருடமும் இருக்கும். ஒவ்வொரு பருவமும் அதனதன் அழகைக் கொண்டிருக்கும் ( of course சிலவேளைகளில் கடினமாகவும் இருக்கும்). அந்தந்த பருவத்தை அப்போதே அனுபவித்துவிட வேண்டும். அவை எப்போதும் நிலைத்திருக்காதவை. அதேமாதிரியான நான்கு மாதக் காலநிலையை உணர பிறகு ஒரு முழுவருடம் நாம் மீண்டும் காத்திருக்க வேண்டும்.
கனடா வந்த புதிதில் நான்கே நான்கு மாதங்கள் வரும் கோடைக்காய் வீட்டின் முன்புறங்களில் பூத்தோட்டங்கள் வைத்து அதற்காய் கடினபட்டு உழைத்து பிறர் பராமரிப்பதை சிரிப்புடன் பார்ப்பதுண்டு. வருடம் முழுதும் வெயில் உலர்த்திக்கொண்டிருக்கும் ஒரு வெப்பவலய நாட்டில் இருந்து வந்தவனுக்கு நான்கு மாதங்களுக்கு இப்படி பூத்தோட்டத்துக்காய் கஷ்டப்பட்டவர்களைக் கண்டால் சிரிப்புத்தானே வரும். ஆனால் பிறகான காலங்களில் வாழ்வின் நிலையாமையும், கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்த பின், இந்த மனிதர்களை விளங்கிக் கொள்ளமுடிந்தது. அவர்களின் மனோநிலையை அள்ளி அரவணைக்க முடிந்தது.
இன்று காலை அவ்வளவு வெம்மையாக இருந்தது. பின்னர் சட்டென்று முகில்கள் மூடி மழை பொழிந்தது. இப்போது இதை எழுதும் இந்த மாலையில் தண்மையான வெயில் மினுங்கிக் கொண்டிருக்கின்றது. காற்று மென்மையாக வீசிக் கொண்டிருக்கின்றது. மனதைக் குழப்பும் சில சம்பவங்கள் நடந்தாலும், இந்த நாள் எனக்கு மிக அழகாகவே இருக்கின்றது. இன்று என்பது எனக்காக அருளப்பட்டதாகவே தோன்றுகின்றது.
எதையோ எழுத வந்து எங்கேயோ எழுத்து அலைபாய்ந்து போய்விட்டது.
அன்புடன்,
இளங்கோ
************
0 comments:
Post a Comment