கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 21

Saturday, September 02, 2023

 

ஒபன்ஹைமர்
********************

னக்கு மிகவும் பிடித்த நெறியாளர்கள் Alejandro Inarritu, Quentin Tarantino என்று சொன்னதில் இப்போதும் மாற்றமில்லை. Tarantino தனது பத்தாவது திரைப்படத்தோடு ஓய்வு பெறப்போவதாகச் சொல்லிவிட்டார். அது 'Movie Critic' ஆக இருக்கும். பாடசாலைப் படிப்பை பதின்மத்தில் துறந்து, வீடீயோ கடையில் வேலை செய்து, ADHDயோடு கஷ்டப்பட்டு குயிண்டன் இன்று வந்து சேர்ந்த இடம் எல்லோராலும் எளிதில் முடியாது. கடந்த வருடம் வெளிவந்த அவரின் நூலான 'Cinema Speculation' 70களின் சினிமா உலகைச் சொன்னாலும், ஒரளவு குயிண்டனின் சொந்த அனுபவங்களைச் சொல்லும் சுயசரிதை எனவும் அதைச் சொல்லலாம்.

இவ்வாறு அலெஜாந்திரோ, குயிண்டன் எனக்குப் பிடித்த இயக்குநர்கள் என்றாலும், இவர்களை விட கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்களைத்தான் அதிகம் தியேட்டருக்குச் சென்று பார்த்திருக்கின்றேன் என்பது சற்று முரண்நகையானது. Inception, Interstellar போன்றவற்றை இங்குள்ள தியேட்டர்களிலும், Dunkirk ஐரோப்பாவிலும் (இடைவேளை விடப்பட்டு ஆங்கிலத்திரைப்படம் பார்த்தது முதல் தடவை) வந்தவுடனேயே பார்த்திருக்கின்றேன். இப்போது கிறிஸ்டோபரின் 'ஒபன்ஹைமரை'யும் பார்த்தாயிற்று.

அறிவியலில் முக்கியமான (அல்லது கோரமான) கண்டுபிடிப்பாகவும், தனி மனிதரின் சிக்கலான வாழ்க்கையையும் சுற்றி அமைக்கப்பட்ட படமானதால் நோலனின் மற்றப் படங்களை விட இது எனக்குச் சுவாரசியமானதாக இருந்தது. ஒருவகையில் கடந்த நூற்றாண்டின் 40/50களை உலகப்போர் பின்னணியில் மீளச்சென்று பார்ப்பது எனக் கூடக் கூறலாம். நோலனின் கதை சொல்லல் முறையை அறிந்தவர்களும், ஒபன்ஹைமரின் வாழ்க்கைச் சரித்திரம் தெரிந்தவர்களும் இப்படத்தில் எளிதில் ஒன்றமுடியும். நோலன் வெவ்வேறு அடுக்குகளில் (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட) சமாந்தரமாகக் கதை சொல்பவர். ஒரு அடுக்குக் கதை உச்சம் பெறுகையில், இன்னொரு அடுக்குக் கதை ஆரம்பிக்கத் தொடங்கும். மற்ற அடுக்கு கதை இடைநடுவில் வந்து நிற்கும்.

இதை ஏற்கனவே வந்த Dunkirk இல் தெளிவாக உணரமுடியும். அவ்வாறே இத்திரைப்படத்திலும் ஒபன்ஹைமரின் மூன்று அடுக்குக் காலம் காட்டப்படுகின்றது. கதைகள் துண்டு துண்டாகச் சொல்லப்படுவதால், அதை நாம் நினைவில் நிறுத்தியாக வேண்டும். ஒருவகையில் ஒபன்ஹைமர் தனது கண்டுபிடிப்பின் கொடுமையை உணர்ந்தபடியால்தான் ஒபன்ஹமர் முக்கியமான ஒரு நபராக வரலாற்றில் இருக்கின்றார்.

மெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களைப் பெரும் ஜனநாயக நாடாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், தங்களின் 'தேசப்பற்றை'க் காரணங்காட்டி எந்த ஒருவரையும் விரும்பினால் சட்டென்று புகழிலிருந்து கீழிறக்க முடியும். ஒபன்ஹைமருக்கு அது நடந்தது. அவ்வாறே பிரிட்டிஷ்காரர்கள் அதிதிறமைமையான கணிதவியலாளரான Alan Turing , அவரின் தற்பால் ஈர்ப்புக்காய் உலகப்போரின் பின்னால் கைவிட்டு, உளவியல்சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி அவரைச் சிதைத்தனர். ஒபன்ஹைமர் அந்தவகையில் ஒரளவு அதிஷ்டம் வாய்ந்தவர். இறுதிக்காலத்தில் விடாத போராட்டத்தின் மூலம் அவரது 'பெருமை'யை மீளப் பெற்றுக் கொண்டவர்.

அணுகுண்டின் தந்தையென விதந்துரைந்து கொண்டாடப்பட்ட ஒபன்ஹைமர்
, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனைச் சந்திக்கும்போது, 'எனது கைகளில் இரத்தம் இருக்கின்றது' என்று சொல்லும்போதே ஒபன்ஹைமரின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. சாதாரண மக்களுக்குக்குப் புகட்டப்படும் 'அமெரிக்கக் கனவு' மட்டுமில்லை, ஒரு வலிமையான அமெரிக்க ஆணாக இருப்பதையுமே அமெரிக்க அதிகாரம் என்றும் விருப்பும். எனவே தன் கண்டுபிடிப்பால் இரத்தக்கறை கைகளில் வந்துவிட்டதென்று சொல்பவரை எப்படி அதிகாரம் ஏற்றுக்கொள்ளும். அதிலிருந்து ஒபன்ஹைமருக்கு இறங்குமுகந்தான். நீயொரு இடதுசாரி என்று 'நிரூபித்து' அவரது அனைத்து 'பெருமை'களும் பறிக்கப்பட்டு அனைவராலும் கைவிடப்பட்டவராகின்றார்.

விசாரணைக் கமிட்டிகள், விசாரணைகள், வாக்குமூலங்கள் என்று ஒபன்ஹைமர் அலைக்கழிக்கப்பட்டாலும், அது ஒருவகையில் அவருக்கும் Lewis Strauss இற்கும் நிகழும் தனிப்பட்ட பழிவாங்கல் எனவும் சொல்லலாம். இந்தத் திரைப்படத்தில் வெளிப்படையாக்ச் சொல்லவில்லையெனினும், என்ன முரண்நகை எனில் இரண்டு பேருமே யூதப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதாகும். ஒருவர் (Strauss) தன் பின்னணியைப் பெருமிதமாகவும், மற்றவர் (Oppenheimer) தனது பின்னணியை மறைத்தவராகவும் இருந்திருக்கின்றார்.

இன்னொருவகையில் இந்தப் படம், அணுகுண்டின் கோரத்தை விட, ஒபன்ஹைமரின் இந்த 'பெருமை' இழத்தலைத்தான் அதிகம் பேசுகின்றது எனச் சொல்லலாம். ஒபன்ஹைமருக்கு இவ்வளவு நிகழ்ந்தபோதும் அவரது இந்தக் கண்டுபிடிப்புப் பற்றி ஒருபோதும் பொதுவெளியில் மன்னிப்புக் கோரவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அது ஒரு அறிவியலாளருக்குரிய ஈகோ எனச் சொல்லிக் கொள்ளலாமோ எனத் தெரியவில்லை.

அணுகுண்டைக் கண்டுபிடித்த ஒபன்ஹைமர் இதைவிடப் பன்மடங்கு அழிவு தரக்கூடிய H(ydrogen)-Bomb கண்டுபிடிப்பு வேண்டாமென நிராகரித்தவர். அவரது அந்த வேண்டுகோளை நிராகரித்து அமெரிக்கா H-Bomb ஐ தயாரிக்கின்றது. எவ்வாறு அணுகுண்டை (A-Bomb) அமெரிக்கா கண்டுபிடித்தவுடன், ரஷ்யா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தி நிரூபித்ததோ, அதேபோன்று அமெரிக்கா பரிசோதனை நடத்திய H-Bomb ஐ விட பன்மடங்கு வலிமையான குண்டை தனது நாட்டில் ரஷ்யா பரிட்சித்தும் பார்த்தது. ஆகவே ஓபன்ஹைமர் எதிர்வுகூறியது சரியானதுதான். நாம் ஒரு ஆபத்தான விடயத்தைக் கண்டுபிடிக்கும்போது அதைவிட ஆபத்தான கண்டுபிடிப்புக்கள் மற்ற நாடுகளால் முன்னெடுக்கப்படும் என்பது. ஆகவேதான் ஒபன்ஹைமர் நாடுகளுக்கிடையிலான அணுவாயுதங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உலகு தழுவிய ஒப்பந்தங்கள் தேவை என்று பிற்காலத்தில் வற்புறுத்தினார்.

ஓரிடத்தில் உங்களுக்கு அணுகுண்டுக்காய் நோபல் பரிசு கிடைக்குமா என ஒபன்ஹைமரைக் கேட்கும்போது, 'ஏன் கிடைக்கக்கூடாது, நோபல் பரிசே டைனமைட்டைக் கண்டுபிடித்த நோபலின் நினைவால் வழங்கப்படுவது. ஏன் எனக்கு இந்தக் கண்டுபிடிப்பிற்குக் கிடைக்கக்கூடாது' என்று கூறுவார்.

அதுவும் ஒருவகையில் உண்மைதான், நோபல், டைனமைட்டைக் கண்டுபிடிக்கும்போது அவரது காலத்தில் அதுதான் கொடுமையான வெடிகுண்டுக் கண்டுபிடிப்பு. ஒபன்ஹைமர் காலத்தில் பின்னர் அது இன்னும் பன்மடங்கு வீரியமான அணுகுண்டாக மாறிப்போனது.

மனிதர்களின் ஆசைக்கு ஒரு அளவில்லாது இருப்பதைப் போல, அழிவு வேலைகளைச் செய்து பார்ப்பதற்கும் மனிதர்க்கு இந்தப் பூமி மட்டும் போதாது போலும்.

******************


(July 29, 2023)

0 comments: