இசை அழைத்துச் செல்லும் பாதைகள்
1.
இளையராஜாவின் இசைக்கச்சேரியின் ஒரு துண்டை தற்செயலாகப் பார்த்தேன். அதில் சித்ராவும், இளையராஜாவும் 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இடைநடுவில் இளையராஜா பாட்டைத் தவறாகப் பாடிவிடுகின்றார். அதைப் பாடி முடித்துவிட்டு, 'அனைவரும் சரியாகப் பாடிக்கொண்டிருக்கும்போது, நான் குழப்பிவிட்டேன்' என்று அவர் மன்னிப்புக் கேட்கின்றார். இரசிகர்கள் அதை ஏற்று ஆரவாரிக்கின்றனர். அப்போது இளையராஜா, தப்பு தப்பாகப் பாடினாலே இவ்வளவு கைத்தட்டுகின்றீர்களே, நான் நன்றாகப் பாடியிருந்தால் இன்னும் எப்படி கைதட்டியிருப்பீர்களோ என்று சிரித்தபடி சொல்கிறார். 'தவறை பின்னாடி போய் சரி செய்யமுடியாது. நடந்த தவறு தவறுதான். வாழ்க்கையிலும் இப்படி தவறுகள் நிகழு'மென்று கூறி அவையின் முன் அவர் பணிகிறார். அதொரு அழகான தருணம். நிகழ்வில் இல்லாது நிகழ்ந்துவிட்ட அற்புதக் காட்சி!
ஒருநாள் காலையில் மனது ஒருவகைக் கொந்தளிப்பாக இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன். பாடலின் குரல்களிலும், பின்னணி வாத்தியக் கருவிகளின் இசையிலும் அமிழ்ந்திருந்த எனக்குள் இந்தச் சிறு தடங்கல் இன்னுமொரு உயிர்ப்பான கணமாக வந்தமர்ந்தது. எந்த முழுமையிலும் ஒரு சிறு பிசிறு இருப்பதை அழகென்று தீர்க்கமாக நம்புகின்ற எனக்கு இது முக்கியமான ஒரு நிகழ்வாகத் தெரிந்தது. மேலும் இளையராஜா என்கின்ற மேதை, இப்படி தவறை ஒப்புக்கொண்டு திருத்திக்கொண்டு செல்கையில் ஒரு மாமேதையாக எனக்குள் மாறிக்கொண்டிருந்தார்.
மேலும் வாழ்வில் பிற எந்த விடயத்திலும் அதை அனுபவிக்க அதற்குரிய சம தராதரங்களோடு இருக்க நிர்ப்பந்திக்கப்படும் சூழலில், கலையொன்றுதான் அது உருவாக்கப்பட்டபின் எவ்வித தகுதி/தராதரம் இல்லாது எல்லோருக்கும் பொதுவாகிவிடுகின்றது. ஒரு சிற்பத்தையோ/ஓவியத்தையோ/பாடலையோ/புத்தகத்தையோ இரசிக்க நாம் வர்க்கத்திலோ/அதிகாரத்திலோ உயர்ந்து இருக்கவேண்டியதுமில்லை. நாம் வாசிக்கும் ஒரு புத்தகத்தையோ/பாடலையோதான் வர்க்க வித்தியாசத்தில் நம்மைவிட உயர்ந்து நிற்பவரும் கேட்கவோ/வாசிக்கவோ வேண்டியிருக்கின்றது. கலை என்பது இவ்வாறாகத்தான் வர்க்கங்களை தடையுடைத்து ஊடறுத்துச் செல்லும் முதன்மையாக கருவியாகப் பல இடங்களில் இருக்கின்றது.
இப்படி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, நமது இளமைக்காலங்களை நாம் இந்தப் பாடல்களின் மூலம் நனவிடைதோய்தலாக மாற்றிக்கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. நாம் இவ்வாறான பாடல்களின் மூலம் நம் நினைவேக்கங்களை மீளக்கொணர்கின்றோம். அதிலிருந்து நாம் கடந்துவந்துவிட்ட இளமைக்காலத்தை மீண்டுமொரு முறை மலரச் செய்கின்றோம்.
2.
எனது பதின்மங்கள் இளையராஜாவின் பாடல்களோடு அல்ல,ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களோடு பிணைந்து இருப்பதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கின்றேன். மேலும் சொல்வதற்கு வெட்கமாக இருப்பினும், நான் அப்படியொரு தீவிர ரஹ்மான் இரசிகன் என்பதால், இளையராஜாவை பொருட்படுத்தி கேட்கத் தொடங்கியதே 'காதலுக்கு மரியாதை' பாடல்கள் கேட்கத் தொடங்கியபின்னர்தான் என்பதே உண்மை.
இவ்வாறாகப் பாடல்களின் மூலம் நமது இளமைக்காலத்தை நினைவூட்டிக் கொண்டாலும் எனக்கு வேறொரு சிக்கலும் இருக்கின்றது. எனது முதல் 15 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் கழிந்த காலங்களில் நான் கேட்டு வளர்ந்தது இயக்கப்பாடல்களை மட்டுந்தான். இப்போது அந்தப் பாடல்களில் இருந்த அரசியலையும்/பிரச்சாரத்தையும் புரிந்துகொள்ளும் நிலைமை வந்தபின் அந்தப் பாடல்களை எப்படி கேட்பது என்கின்ற முக்கிய கேள்விகளும் எனக்குள் இருக்கின்றன.
ஆனாலும் என் குழந்தை/பதின்மப் பருவங்கள் இந்தப் பாடல்களோடு மட்டுமே பின்னிப் பிணைந்திருக்கின்றன. இன்னும் தெளிவாக யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின்போது நான் அகதியாக ஒவ்வொரு ஊர் ஊராக இடம்பெயர்ந்து திரிந்தபோது அந்தந்த ஊர்களில் கேட்ட இயக்கப்பாடல்கள் கூட அவ்வளவு துல்லிய நினைவுகளாக இருக்கின்றன.
மிலான் குந்தேரா கூறும் 'மறதிக்கெதிரான நினைவின் போராட்டம்' என்பதன் மறுதலையாக இதை நான் எதிர்கொள்வதுண்டு. இந்தப் பாடல்களின் மிகைப்படுத்தப்பட்ட விடயங்களுக்காக இதை மறக்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இந்தப் பாடல்களிலே என் பதின்மம் ஊடாடிக் கொண்டிருப்பதால் அதை எளிதாக விட்டு விலகி வரவும் முடிவதில்லை. சிலவேளைகளில் இந்தப் பாடல்களின் உணர்ச்சித்தளத்திற்குள் போய் என் பதின்ம அனுபவங்களுக்குள் சிக்குண்டு கண்ணீர் விடுவதுமுண்டு. எப்படி இது நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது என்று அறியாமலே, சிலவேளைகளில் ஒரு நாள்முழுவதும் அந்தப் பாடல்களை கேட்டபடியே, அப்பாடல்கள் கிளர்த்தும் நினைவுகளுக்குள் சென்றுவிடுவேன்.
இயக்கத்துக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கு ஒரு கூட்டத்தை நடத்தும்போதும், யாரேனும் சமரில் களப்பலியாகும் போதும், ஏன் ஒரு இராணுவ முகாமை வென்று வெற்றியைக் கொண்டாடுகின்றபோதுமென எந்நேரமும் இவ்வாறான பாடல்களைக் கேட்டபடியே வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். பொதுவெளியில் மட்டுமின்றி மின்சாரமில்லாத அந்தக் காலங்களில் வீட்டில் சைக்கிள் டைனமோவைச் சுழற்றி ரேடியோ கேட்ட காலங்களிலும் நாங்கள் போட்டுக் கேட்கின்ற கேஸட்டுக்கள் இயக்கப்பாடல்கள் மட்டுந்தான்.
நம் சங்ககாலத் தமிழில் அகநானூறு புறநானூறு என்று வீரத்தையும் காதலையும் அகம்-புறமாகப் பிரிக்கின்ற வாய்ப்புக்கூட என்னைப் போன்றவர்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. அகம்-புறமுமாய் அனைத்துமாக வீரத்தையும் சாகசத்தையும் தியாகத்தையும் மட்டுமே கேட்டு வளர்ந்திருக்கின்றோம். இவ்வாறு என் பதின்மத்தின் நினைவேக்கத்தைப் பாடல்களினூடாக மீளக்கொணரும்போது இந்த 'அடையாளச் சிக்கலுக்குள்' போய்விடுவதுண்டு. அன்று கேட்ட இயக்கப்பாடல்களில் இருந்து வெளியே வரவேண்டுமென்கின்ற தவிப்பும், ஆனால் அதைத் தவிர்த்தால் என் பதின்மத்துக்கான அடையாளம் எதுவுமே இல்லையென்கின்ற இயலாமையையும் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.
இப்படி பதின்மத்தில் ஈழத்தில் கேட்ட பாடல்களின் சிக்கல் ஒருபுறமென்றால் பிறகு கொழும்பிலும்/கனடாவிலும் கழிந்த என் பதின்மமும்/இளமைக்காலமும் அண்மையில் வேறொரு சிக்கலை எதிர்கொண்டது. நான் ரஹ்மானின் தீவிர இரசிகன் என்பதால், எனது இந்தக்காலம் ரஹ்மானின் பாடல்களோடு இணைந்து பயணித்தவை. கனடா வந்த தொடக்க காலங்களில் பனி என்கின்ற, சங்ககாலத் திணைகள் பேசா புதுத்திணையை நான் எதிர்கொண்டபோது அவரின் 'புதுவெள்ளை மழை இங்கே பொழிகின்றதை' என்னையறியாமல் என் வாய் ஒவ்வொருபொழுதும் உச்சரிக்கும். அவ்வாறான என் கடந்தகால மகிழ்வான/சோர்வான/கவலையான அனுபவங்களுக்கும் ரஹ்மானின் வெவ்வேறான பாடல்கள் இருக்கின்றன.
ஒருவகையில் இயக்கப்பாடல்களின் இடத்தை பிற்காலத்தில் ரஹ்மான் எனக்குள் நிரப்பிக் கொண்டார். ஆனால் அதற்கும் ஒரு சிக்கல், இந்தப் பாடல்களை அதிகம் எழுதிய ஒரு கவிஞர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதை அறிந்தபோது, அந்தப் பாடல்களை எவ்வாறு எதிர்கொள்வதென்ற குழப்பம் வந்தது. இந்தப் பாடல்கள் என்னை நெகிழ்ச்சியுறச் செய்யும் ஒவ்வொரு தருணமும் அந்தக் கவிஞரின் துஷ்பிரயோகம் வந்து இடையீடு செய்யும்.
இப்படி பாடல்களோடு என் பதின்மங்களும்/இளமைக்காலமும் பிணைந்திருந்தாலும், அவற்றை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியாத இவ்வாறான நெருக்கடிகளுக்குள் சிக்கிக்கொள்வேன். அதாவது எந்தப் பாடலுக்குள்ளும் முழுமையாக அமிழமுடியாத, எனக்கிருக்கும் அறம் சேர்ந்த கேள்விகள் என்பதாக இதைச் சொல்லலாம்.
3.
இளையராஜாவின் பாடல்கள் எனது பதின்ம/இளமைக்காலத்தோடு அடையாளப்படுத்தப்படுவதில்லை. ஆகவே அவரின் பாடல்களை கேட்பது எனக்கு முக்கிய அனுகூலமொன்றைத் தருகின்றது. இந்தப் பாடல்களின் மூலம் நான் எந்த நினைவேக்கத்தையோ/நனவிடைதோய்தலையோ அனுபவிப்பதில்லை. அதையொரு நிகழ்காலத்து பாடலாக மட்டும் கேட்கின்றேன். இன்னும் எளிமையாகச் சொல்வதால் பாடலை பாடலாக மட்டுமாக இரசிக்கின்றேன் (no strings attached).
மேலும் இவ்வாறாக இளையராஜாவின் பாடல்கள் என்னை கடந்தகாலத்துக்கு அழைத்துச் செல்லாததால், அதுகுறித்த எதிர்காலக் கனவுகளைக் கூட அது தேவையற்று கிளர்த்துவதில்லை. ஒருவகையில் தியான அனுபவம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது நான் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கின்றேன் (In the here, in the now).
சித்ரா, பாடலில் 'மழை மேகம் பொழியுமா/ நிழல் தந்து விலகுமா' என்று பாடியபின் இளையராஜா 'இனிமேலும் சந்தேகமா' எனப்பாடி அந்தப் பாடலை நிறைவு செய்யவேண்டும். ஆனால் அவர் அந்த வரிகளைத் தவறவிட்டுவிட்டார். நாம் அந்த சிறுதவறின் ஒரு சாட்சியமாக மாறுகின்றோம். ஒரு உன்னதக் கலைஞர் தன் தவறை ஒப்புக் கொள்வதைப் பார்க்கின்றோம்.
தவறுகளே இல்லாமல் மேன்மையான கலைகளோ/கலைஞர்களோ இல்லை. கலையில் மட்டுமில்லாது தனிப்பட்ட வாழ்விலும் எப்போதும் பிறரைக் காயப்படுத்தக்கூடிய சமூகவிலங்காகத்தான் நாம் இருக்கின்றோம். ஆனால் மனமுவந்து நம் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதன் மூலம் தவறு இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குவதை மட்டுமில்லை, நம் நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் பெரும்பாரங்களிலிருந்தும் விடுதலையடைய முடியும். அதுவே நம்மை மேன்மக்களாக ஆக்குகின்றது.
இளையராஜா தன் பாடலின் தவறை திருத்துவதன் நெகிழ்வான தருணத்தை எவ்வளவு அழகாக உருவாக்குகின்றார். இதையே அந்தக் கவிஞரும், 'ஆம் அன்று நான் அதிகாரப்போதையிலும் உணர்ச்சியின் பிரவாகத்திலும் அப்படித் தவறிழைத்தேன். மன்னித்துவிடுங்கள்' என்று பொதுவெளியில் பாதிக்கப்பட்டவர்களின் முன் தன்னை முன்வைத்திருந்தால், வரலாறு என்றென்றைக்குமான அவருக்குச் சுமத்தப்போகும் பழியிலிருந்து தப்பியிருக்கலாம்.
அவ்வாறு நம் இலக்கியச் சூழலிலும் பலர் தமது எழுத்தின் அதிகாரத்தால் செய்த துஷ்பிரயோகங்களை ஒப்புக்கொள்வதன் மூலம் தமக்கான Resurrection ஐ செய்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் செய்வதோ தமது அநியாங்களை மூடிமறைக்க இன்னுமின்னும் தவறுகளை அதன்மேல் அடுக்கிக் கொண்டு செல்வதே. அது ஓரு முடிவுறாத பாதை என்பதை அறியும்போது அவர்களுக்குப் பிறர் கொடுத்திருக்கும் மதிப்பின் காலம் முடிந்து போயிருக்கும்.
கொலைகாரராக இருந்த ஆமிரபாலியை புத்தர் தன்னோடு சேர்த்து ஞானமடைய வைக்கிறார். பாலியல் தொழில் செய்த பெண் மீது கல்லெறிந்தபோது, உங்களில் இதுவரை தவறு செய்யாதவர் முதல் கல்லை வீசுங்களென கூட்டத்தைப் பார்த்து இயேசு சொன்னார். இவ்வாறு நாம் எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்தாலும் நமக்கு மீளுயிர்ப்பும், பாவமன்னிப்பும் இருக்கின்றன எனச் சொல்வதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
நாம் எதைத் தேர்ந்தெடுக்கப்போகின்றோம் என்பதில்தான் நமக்கான உண்மையான விடுதலை இருக்கின்றது. மேலும் ஒருகாலத்தில் நமக்கு நெருக்கமாக இருந்தவர்களிடமும், நம்மை நெகிழச் செய்தவர்களிடமும், நாம் இழைத்த தவறுகளை ஒப்புக்கொண்டு அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும் பிரியத்தின் இன்னொரு வடிவமன்றோ?
***************
ஓவியம்: சாய்
(நன்றி: 'காலம்' இதழ் 62 & 63)
1 comments:
Thank you
2/25/2025 02:55:00 AMPost a Comment