ப்ரூஸ்
ஸ்பிரிங்ஸ்டீனின் வாழ்வின் ஒரு காலகட்டத்தை விவரிக்கும் திரைப்படமான
'Springsteen: Deliver Me from Nowhere ஐ அண்மையில் பார்த்திருந்தேன். இது
ஸ்பிரிங்ஸ்டீன் அவரது முதல் இசைக் கச்சேரிகளைப் பல்வேறு நகரங்களில்
வெற்றிகரமாக நடத்திவிட்டு மிகுந்த சலிப்புடனும், சோர்வுடனும் திரும்புகின்ற
காலத்தைப் பற்றியது. அவரது தயாரிப்பாளர்கள் இந்த வெற்றியின் சூட்டோடு
சூட்டாக அடுத்த ஆல்பத்தைத் தயாரிக்கச் சொல்கின்றனர். ஆனால் அவரோ
ஆரவாரத்தையும் புகழையும் தவிர்த்துவிட்டு அவரது சொந்த நகரில் ஒரு வீட்டை
வாடகைக்கு எடுத்துத் தங்குகின்றார். வீடு திரும்புதல் என்பது
ஸ்பிரிங்ஸ்டீன் எளிதாக அமைவதில்லை. அவருக்கு அவரின் தந்தையார் தாய் மீது
நிகழ்த்திய குடும்ப வன்முறைகள் நினைவுக்கு வருகின்றது.
இவ்வாறு
கடந்தகால உளவடுக்களோடும், தனிமையிலும் உழலும் ஸ்பிரிங்ஸ்டீன் தனது
படுக்கையறையில் இருந்து மிகக் குறைந்த இசைக்கருவிகளை வைத்துப் புதிய
பாடல்களை உருவாக்கின்றார். அவற்றை வழமைக்கு மாறாக ஆடியோ காஸெட்டுக்களில்
பதிவு செய்துகொள்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு உணவகத்தில் வேலை
செய்யும் பெண்ணோடு உறவு முகிழ்கிறது.
காஸெட்டுக்களில்
பதிவு செய்யப்பட்ட பாடல்களை மேலும் இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்த்து
ரெக்கார்டிங் நிலையத்தில் பதிவு செய்யும்போது ஸ்பிரிங்ஸ்டீனுக்கு அந்த
வடிவம் பிடிக்கவில்லை.
எனவே எப்படி அவர் சாதாரண காஸெட்டுக்களில் பாடல்களைப் பதிவு செய்தாரோ அதன் வடிவத்திலே புதிய ஆல்பமாக வெளிவருகின்றது. அதுவே 1980களில் வெளிவந்த 'Nebraska' ஆல்பம். இதை வெளியிட்டபோது அன்றைய கால வழமைக்கு மாற்றாக ஆல்பத்தின் முகப்பில் தனது புகைப்படம் வெளிவரக்கூடாது என்பதோடு, இந்த ஆல்பத்துக்காக எந்த விளம்பரப்படுத்தல்களோ, இந்த ஆல்பத்தை முன்னிலைபப்டுத்தும் எவ்விதமான இசைக்கச்சேரியையும் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக ஸ்பிரிங்ஸ்டீன் இருந்திருக்கின்றார். இவற்றைத் தாண்டியும் அது ஒரு வெற்றிகரமான இசைத்தட்டாக அன்றைய்காலத்தில் மாறியிருந்தது.
எனவே எப்படி அவர் சாதாரண காஸெட்டுக்களில் பாடல்களைப் பதிவு செய்தாரோ அதன் வடிவத்திலே புதிய ஆல்பமாக வெளிவருகின்றது. அதுவே 1980களில் வெளிவந்த 'Nebraska' ஆல்பம். இதை வெளியிட்டபோது அன்றைய கால வழமைக்கு மாற்றாக ஆல்பத்தின் முகப்பில் தனது புகைப்படம் வெளிவரக்கூடாது என்பதோடு, இந்த ஆல்பத்துக்காக எந்த விளம்பரப்படுத்தல்களோ, இந்த ஆல்பத்தை முன்னிலைபப்டுத்தும் எவ்விதமான இசைக்கச்சேரியையும் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக ஸ்பிரிங்ஸ்டீன் இருந்திருக்கின்றார். இவற்றைத் தாண்டியும் அது ஒரு வெற்றிகரமான இசைத்தட்டாக அன்றைய்காலத்தில் மாறியிருந்தது.
*
எனது பதிமங்களில் ஸ்பிரிங்ஸ்டீன், 'The boss' ஆக அறிமுகமாகியிருந்தார். அவரின் பாடல்களை விட கிட்டாரை வானத்தை நோக்கி உயர்த்தி நிற்கும் அவரின் அந்த கம்பீரமே என்னை அப்போது வசீகரித்திருந்தது. இப்போது ஸ்பிரிங்ஸ்டீனைப் பற்றிப் பேச விழைந்தது அவரின் பாடல்களுக்காக அல்ல. அவர் இசையோடு எப்படி தனது அரசியலை வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்கேயாகும். அன்றைய வியட்னாமிய போருக்கு எதிராக மட்டுமின்றி, தொடர்ச்சியாக அமெரிக்காவிற்குள் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர் ஸ்பிரிங்ஸ்டீன்.
அண்மைக்காலமாக அமெரிக்காவில் குடியேறிகளின் மீது அமெரிக்க அரசும் அதன் கொடும் அமைப்பான ICE ம் பெரும் வன்முறையைப் பிரயோகித்தபோது அதை எதிர்த்து நின்ற ஒரு பெண்ணும், இன்னொரு ஆண் தாதியும் (Renee Good and Alex Pretti) மினோஸ்டாவில் கொல்லப்பட்டிருந்தார்கள்.
அது
பெரும் அதிர்ச்சியையும், எழுச்சியையும் அமெரிக்காவில்
ஏற்படுத்தியிருந்தது. அப்போது 'மினியப்பாலிஸின் தெருக்கள்' (Streets of
Minneapolis) என்ற அமெரிக்க அரச அதிகாரத்தை எதிர்க்கும் பாடலோடு
ஸ்பிரிங்ஸ்டீன் வந்திருந்தார்.
முதலீட்டிய நாடாகவும், பெரும் நிறுவனங்களின் இராட்சதக் கரங்களால் நடத்தப்படும் அரசாகவும் அமெரிக்கா இருந்தாலும், அதன் மறுபக்கம் என்று ஒன்றிருக்கின்றது. அப்படி அதிகாரத்துக்கு அடிபணியாத ஒரு தரப்பு மிக உறுதியாக இருப்பதால்தான் அமெரிக்கா ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி அடிப்படை உரிமைகள் சார்ந்து நகராத ஓர் இடத்தில் இருக்கின்றது. இல்லாதுவிட்டால் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களால் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து எளிதில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரி நிலையை எளிதில் அடைந்துவிட முடியும்.
அமெரிக்காவின் இந்த மறுபக்க தரப்பின் எதிர்ப்பு, தலைமுறை தலைமுறையான சனநாயகத்துக்கான அவர்களின் தொடர் போராட்டம், அமெரிக்கா முற்றுமுழுதாக ஓர் வலதுசாரி நிலைக்குப் போகாது எப்போதும் காப்பாற்றியபடி இருக்கின்றது.
அதுவே ஒடுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடச் செய்தது. வியட்னாமிய போருக்கெதிரான பெரும் அலையாக எழ வைத்தது. எந்த வெள்ளையின பெரும்பான்மை நாட்டிலும் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாத ஓர் கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவும் செய்தது.
இன்றைக்கு டிரம்பின் அரசு சர்வாதிகாரத்திலும் போர்வெறியிலும் (குடிவரவாளர்கள் உள்ளிட்ட விடயங்களில்) நிறவெறியிலும் மிதந்து கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் உள்ளேயிருந்து எழும் குரல்கள் அவ்வளவு தீவிரமானவை.
இன்று மில்லியன்கணக்கான அமெரிக்க மக்கள் ஐம்பது மாநிலங்களிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈரானில் நடத்தப்படும் போருக்கும், உள்நாட்டில் குடியேறிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கும் எதிராக 'No Kings' ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருக்கின்றனர். இந்தப் பெயரில் கடந்த வருடம் டிரம்ப் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தார்கள். No Kings என்பது எந்த அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் அரசியல் சட்ட சாசனதுக்கு மேலானவர் அல்ல என்பதை வலியுறுத்துவதாகும். நீங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் அமெரிக்கச் சட்டத்தை ஏற்று நடக்கவேண்டும், சர்வாதிகாரியாக அல்ல என்ற இந்த 'கோஷம்' இன்றைய நாளில் இரண்டாவது பெரும் ஆர்ப்பாட்டத்தை மில்லியன்கணக்கான மக்களை பல்வேறு நகர்களின் தெருக்களுக்கு அழைத்து வந்திருக்கின்றது.
இன்றும் ஸ்பிரிங்ஸ்டீன் தனது 77 வயதிலும் மக்களுக்காக தெருவுக்கு வந்து அமெரிக்க அரசுக்கெதிரான பாடலை மினோஸ்டாவில் No Kings பேரணியில் பாடிக் கொண்டிருந்தார்.
அதனால்தான் அவர் என்னைப் போன்றவர்க்கு The Boss!
***



0 comments:
Post a Comment