காதலுக்கான முடிதுறப்பும், நாஸிக்களின் மீதான காதலும்!
***
என்னுடைய
பத்தோ,பதினொராவதோ வயதில் மஹாகவியின் 'கோடை' பாநாடகத்தைப்
பார்த்திருந்தேன். அது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால், நகருக்குச்
சற்றுத் தொலைவிலிருந்த எங்கள் ஊர்ப் பாடசாலையில் நிகழ்ந்திருந்தது.
மஹாகவி
உருத்திரமூர்த்தி தனது நாற்பத்து நான்காவது வயதில் காலமாகியிருந்தவர்
(1927-1971). எங்கள் ஊர்ப் பாடசாலையிலே படித்தவர் என்பதாலோ என்னவோ 'கோடை'
நாடகத்துக்கு இரண்டு காட்சிகள் அன்று நடத்தப்பட்டன. ஒன்று எங்களைப் போன்ற
பாடசாலை மாணவர்க்குரியது. மற்றது பொதுப் பார்வையாளர்க்குரியது.
எங்கள்
வீட்டையும், பாடசாலை மதிலையும் பிரிப்பது ஒரு குச்சொழுங்கைதான். நான்
பாடசாலை நேரத்தில் 'கோடை'யின் முதல்காட்சியைப் பார்த்துவிட்டு, பிறகு
மாலையில் நடந்த மற்றக்காட்சியையும், வீடு பக்கத்திலிருந்ததால் பார்த்தேன்.
கதை
மேள/நாதஸ்வரக் கலைஞர்களின் பின்னணியில் நிகழ்வது. நாயனக்கார ஆசான்
மாணிக்கத்திடம் சிஷ்யனாக சோமு இருக்கின்றார். ஆசான் மாணிக்கத்தின் மகளான
கமலிக்கு, சோமு மீது காதல். அந்தக் காதல் ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி
நிகழ்கின்றதா இல்லையா என்பதுதான் நாடகம்.
எனக்கு அந்த வயதில்
இப்போது 'கறைபட்ட மனசு' வந்திருக்கவில்லை. ஏன் இந்தக் கதையின் ஆழம் கூட
அப்போது விளங்கவில்லை. கமலியின் குறும்புக்கார தம்பியாக வரும் சிறுவன்
கணேசு மீதுதான் அந்தப் பத்து வயதில் முழுக்கவனமும் இருந்தது. அவன் சும்மா
கிடக்கும் தவிலை எடுத்து அடிப்பான். அக்கா 'சைட்' அடிக்கும் சோமுவோடு
தனவுவான். அவனது சேஷ்டைகள் எனக்கு அந்த வயதில் நான் வாசித்த
குட்டிக்குரங்கு கபிஷை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
நாடகத்தில்,
சிறுவன் கணேசு படித்துக் கொண்டிருக்கும்போது (கதை 1937இல் நிகழ்கிறது),
பாடப்புத்தகத்தில் 'இங்கிலாந்து தேசத்தில் எங்கள் மன்னர் இருக்கிறார்.
இவரது பேர் ஐந்தாம் யோர்ச்சாம்' என்று வாசித்துவிட்டு, 'என்ன இதெல்லாம்
பழசாய் இருக்கே? அம்மன்னவர் செத்து மறு ஆளும் வந்து, போய்விட்டாரே! என்ன
விசர்ப் புத்தகம் இது ?' என்று கூறி, ஒரு பாட்டைப் பாடத் தொடங்குவான்.
அது:
"எட்டாம் எற்வேட்டை எனக்குத் தெரியும்! அவர்-
முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!
ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணுற்றைந்திலே
அவதரித்த எங்கள் வெள்ளை அரச வள்ளலே
ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தாறிலே
அரசை விட்டு மணமுடித்தார் - அதுவும் நல்லதே!
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!"
எனக்கு
'கோடை' நாடகத்தில் மிகவும் நினைவில் நின்ற பாடலாக இதுவே நெடுங்காலத்துக்கு
நின்றது. அந்தச் சிறுவன் இந்த பாட்டைப் பாடி சிறப்பாக நடித்த விடயம்
மட்டுமில்லை, ஒரு அரசனாக முடிசூட இருந்த இங்கிலாந்து இளவரசன் காதலுக்காக
முடி துறந்திருக்கின்றானே என்ற வரலாறு இதில் இருந்ததும் சுவாரசியமாக
இருந்தது.
நான் 'முடிதுறந்தானே மன்னன் முடிதுறந்தானே எட்டாம்
எட்வேர்ட் முடிதுறந்தானே' என்று அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தது
ஞாபகத்தில் இருக்கின்றது. இந்தப் பாடலில் வந்த சிம்ப்சன் தான் அவரின் காதலி
(பின்னாளில் மனைவி) என்றறிய எனக்கு மேலும் சில வருடங்கள் எடுத்தது
வேறுவிடயம்.
அன்றைய ஐக்கிய இராச்சியத்தில் அரசனாக வரவேண்டிய எட்டாம்
எட்வேர்ட், அமெரிக்கப் பெண்ணான சிம்ப்சன் (Wallis Simpson) மீது
காதல்வயப்படுகின்றார். ஓர் அரசன் இன்னொரு அரச தகுதியுள்ள பெண்ணெடுப்பதே
வழமையாக இருந்த காலத்தில் அதற்கு எவ்விதப் பொருத்தமும் இல்லாத சிம்ப்சனை
எட்வேர்ட் காதலித்தது மட்டுமின்றி, சிம்ப்சன் ஏற்கனவே திருமணமாகி
இருந்ததுதான் இன்னும் சிக்கலாக இருந்தது.
சிம்ப்சன் ஏற்கனவே
திருமணமாகி விவாகரத்தாகி, இரண்டாம் திருமணம் விவாகரத்துக்குப் போய்க்
கொண்டிருந்தகாலத்தில் எட்வேர்ட் சிம்ப்சன் மீதான காதலில் விழுந்ததார். ஒரு
முடிக்குரிய அரசர் இப்படி திருமணமான பெண்ணை மீண்டும் திருமணம் செய்வது
என்பதற்கு அரசவிதிகளில் நடைமுறை இல்லை.
சட்டென்று எட்வேர்ட்டின்
தகப்பனும் அடுத்த முடிசூட்டவேண்டியவர் எட்வேர்ட் இருக்கும்போது,
பிரித்தானியா அவருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தன.
(1) காதலி சிம்ப்சனைக் கைவிட்டு முடிசூடுவது
(2)
அன்று இருந்த இங்கிலாந்து பாராளுமன்றம், அவர் அரசராக இருக்கும் கனடா,
ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டிஷ் பேரரசு அரசோச்சிய இந்தியா, இலங்கை
நாடுகளின் விருப்புக்கெதிராக காதலி சிம்பசனை திருமணம் செய்தல். இதனால்
இங்கிலாந்துப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீள தேர்தல் நடைபெறும்.
(3) முடிக்குரிய வாரிசாக இருப்பதை கைவிடுதல் (Abdication)
நமது
ஆள் இலேசுப்பட்ட ஆளா என்ன? முடியைத் துறந்து துறவறத்துக்குப் போன
இளங்கோவடிகள் போல, காதலில்தான் மோட்சம் இருக்கின்றதென்று முடியைத் துறந்த
காதலி சிம்ப்சனைக் கைபிடித்தார்.
இப்படி அன்றைய கால ரோமியோ-ஜூலியட்,
லைலா-மஜ்னு போல நாம் நவீன காதலுக்கு எட்வேர்ட் -சிம்ப்சன் காதலை உதாரணம்
சொல்லலாம் என்றாலும், எட்வேர்க்கு நமக்கு அன்று சொல்லப்படாத இன்னொரு இருண்ட
பக்கமும் இருக்கின்றது.
அது எட்வேர்ட் தீவிர நாஸி ஆதரவாளராக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இருந்ததாகும்.
எட்வேர்ட்
இப்படி காதலின் பொருட்டு தனது அரச குடும்பத்தாரால் பழிவாங்கப்பட்டார் என்ற
கோபத்தாலோ அல்லது அதற்கு முன்னரோ அவருக்கு நாஸிகள் மீது காதல் வந்ததா
என்று சரியாக கண்டுபிடிக்க முடியவில்லையெனினும், அவர் முடியைத் துறந்தபின்
1937 இல் ஹிட்லரைப் போய் ஜேர்மனியில் சந்தித்திருக்கின்றார். நாஸிகளின்
அணிவகுப்பை ஏற்று அந்தப் பிரபல்ய ஹிட்லர் சல்யூட்டும் அடித்திருக்கின்றார்.
இது
இங்கிலாந்து ஜேர்மனியோடு போருக்குப் போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
நிகழ்ந்திருந்தாலும், பிறகு நடந்தவைகள்தான் இன்னும் சுவாரசியமானவை.
*
இங்கிலாந்து
ஜேர்மனியோடு போரைப் பிரகடனப்படுத்தியபோது, எட்வேர்ட் தனது குரலில்
ஜேர்மனியோடு நாம் சமாதானத்துக்குப் போகவேண்டும் என்று பதிவுசெய்து
பிபிஸியில் ஒலிபரப்ப அனுப்பியிருக்கின்றார். பிபிஸி அதை ஒலிபரப்பக்கூடாது
என்று அடிக்கோடிட்டு தமது ஆவணகத்தில் சேகரித்து வைத்திருப்பது
தெரியவந்துள்ளது.
இப்படி எட்வேர்ட் உதவியதால், அவரின் பிரான்ஸ் அரண்மனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாதென்று பிரான்ஸை ஜேர்மனி கைப்பற்றியபோது நாஸிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. இதைவிட அதிர்ச்சியான இன்னொருவிடயம். யுத்தத்தால் உலகமே பட்டினிக்குள் போய்க்கொண்டிருந்தபோது, எட்வேர்ட் பின்னாளில் லிஸ்பனில் இருந்தபோது நாஸிக்களே அவருக்கும் சிம்ப்சனுக்குமான உணவுப்பொருட்களை அனுப்பியதாகத் தெரிய வந்துள்ளன. அத்தோடு சமகாலத்தில் ஈரானில் போரைத் தொடங்கிவிட்டு சொகுசாக கோல்ஃப் விளையாடும் டிரம்ப் போல, எட்வேர்ட்டும் ஒருபக்கம் யுத்தம் நடக்கும்போது கோல்ஃப் ஆட்டம், இரவு விருந்துகள் என்று ஆடம்பரமாக வாழ்ந்தும் கொண்டிருந்திருக்கின்றார்.
எட்வேர்ட் தனக்குள் ஜேர்மனிய இரத்தமே ஓடியது என்று எண்ணவும் தொடங்கியிருந்ததவர். ஒருகட்டத்தில் 'இங்கிலாந்தைப் பணிய வைக்கவேண்டுமென்றால், நீங்கள் இன்னும் விமானத் தாக்குதலை பக்கிங்காம் அரண்மணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரமாக நடத்தவேண்டுமென' நாஸிகளுக்கு கடிதமும் எழுதியிருக்கின்றார்.
எட்வேர்ட் எழுதிய கடிதங்களை, அவர் லிஸ்பனில் இருந்த ஜேர்மனியத் தூதராலயம் ஊடு அனுப்பிய தந்திகளை, நேசப்படைகள் ஜேர்மனியைக் கைப்பற்றியபோது கண்டெடுத்த ஆவணங்களில் இருந்து வெளிவந்திருக்கின்றது. இந்த முக்கிய ஆவணங்களை ஜேர்மனியர்கள் யுத்தத்தின் முடிவில் அழிப்பார்கள் என்றே நினைத்திருக்கின்றனர். ஆனால் காலம் அதைக் கைப்பற்றி கவனமாக வைத்திருந்திருக்கின்றது.
எட்வேர்ட்டின் இந்த நாஸிக்காதல் இங்கிலாந்துக்காரருக்கு தெரியாமலில்லை. ஆனால் அவர் அரசபரம்பரைக்காரயாயிற்றே, எளிதில் அவரைக் கைவிடவும் முடியாது. அப்போதைய பிரதமர் வின்ஸன்ட் சேர்ச்சில் ஒருமுறை இப்படியே நாஸில்காதலில் இருந்தால் எட்வேர்ட் மீது இராணுவத்தின் court-martial பிரயோகிக்கப்படுமென்று எச்சரித்ததும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அரசர்களின் வழக்கில் அங்கே பிரச்சினைக்குரிய குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துவதுதானே வழமையாக இருந்தது. அப்படி வட இந்தியாவில் துஷ்டனாக இருந்த விஜயனை படகிலேற்றி அனுப்பியததால்தானே இலங்கையில் நாமெல்லாம் இப்போதுவரை கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. அப்படித்தான் நாஸிக்காதலர் எட்வேர்டையும் இப்படியே ஐரோப்பாவுக்குள் வைத்திருந்தால் சிக்கல் என்று, தொலைதூரத்திலிருந்து பஹாமாஸிற்கு கவர்னர் ஜெனரலாக பதவி இறக்கி அனுப்பி வைத்து அவரின் கதையை இங்கிலாந்து அடக்கி வைத்தது.
அதன்பிறகு பஹாமாஸில் இருந்து பிரான்ஸில் எட்வேர்ட் இறக்கும்வரை வாழ்ந்தாலும், அவர் ஒருபோதும் இங்கிலாந்துக்குப் போய் வாழ விரும்பியதில்லை. அவர் அதன் பிறகும் ஆடம்பர வாழ்க்கையை பிரான்ஸ், அமெரிக்கா என்று வாழ்ந்திருக்கின்றார்.
நாஸிக்களின் ஆவணங்களில், நாங்கள் போர் தொடுக்கும்போது எட்வேர் மன்னனாக இருந்திருந்தால் இங்கிலாந்துடனான போர் எளிதில் வென்றிருக்க முடியும் என்று எழுதப்பட்டிருக்கின்றது. மேலும், நாஸிக்கள் இங்கிலாந்தை வென்றபின், அதை ஆளும் தகுதியுடய ஒருவராக எட்வேர்ட்டே பிரேரிக்கப்பட்டும் இருப்பதாகச் சொல்கின்றார்கள்.
அவர் இப்படியொரு நாஸிக்களின் தீவிர விசுவாசியாக, தனது நாடு/குடும்பம் அழிந்தால் கூட பரவாயில்லை, குண்டை வீசுக என்று கடிதம் எழுதி ஒரு 'பயங்கரவாதி'யாக இருந்தாலும், நல்லதொரு காதலனாகவே இருந்திருக்கின்றார் போலும். கடைசிவரை அவர் சிம்ப்சன் மீதான காதலில் அந்த திருமண வாழ்க்கையிலே இருந்து காலமாகியிருக்கின்றார்.
நான் சிறுவயதுகளில் பாடிய அதே பாடலைத் திரும்பப் பாடுவேன்,
'முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!'
ஆனால் இத்துடன் இன்னொன்றைச் சேர்ப்பேன்.
'சிம்ப்சனைப் போல நாஸிக்களையும் காதலித்து
கடைசியில் நாசமாய்ப் போனாரே
நம் எட்டாம் எட்வேர்ட் மன்னன்!'
***



0 comments:
Post a Comment