கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மூன்று தீவுகள் (இறுதிப்பகுதி)

Wednesday, April 18, 2012

(முதல் பகுதியிற்கு...)

ரொப‌ர்ட் த‌ப்புவ‌த‌ற்கு க‌ச்சித‌மாய் ஒரு திட்ட‌த்தைத் தீட்டிவிட்டு, த‌ன‌க்கு ந‌ம்பிக்கைக்குரிய‌ சில‌ரைத் தேர்ந்தெடுத்துத் த‌க‌வ‌ல் அனுப்பியிருந்தார். சில‌ர் இங்கேயே நீண்ட‌கால‌ம் வாழ்ந்துவிட்ட‌தால், தாங்க‌ள் வ‌ந்த‌ நாட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ண‌த்தைக் கை கழுவியிருந்த‌ன‌ர். வில்லிய‌ம்ஸ் இங்கிருந்து த‌ப்பிப் போவ‌தா, இல்லை தொட‌ர்ந்து இருப்ப‌தா என்ற‌ இருத‌லைக்கொள்ளி எறும்பாய்த் த‌வித்தார். அருகில் தூங்கிக்கொண்டிருந்த‌ அசுந்தாவைப் பார்த்த‌போது அவ‌ருக்கு ய‌சோத‌ராவைக் கைவிட்டுப் போன‌ புத்த‌ரின் நினைவுதான் வந்த‌து. இறுதியில் இந்த‌ ம‌ர‌ம், வ‌ந்த‌ ம‌ண்ணில் வேரிற‌க்காதென‌த் தீர்மானித்து ரொப‌ர்ட்டோடு த‌ப்பிச் செல்வ‌தென‌ முடிவெடுத்தார்.

குறிக்க‌ப்ப‌ட்ட‌ நாளின் மூன்றாம் சாம‌த்தில் வில்லிய‌ம்ஸ் இர‌வோடு இர‌வோய்க் க‌ரைந்து, ந‌க‌ர் விட்டு நீங்கியிருந்தார். இச்செய்தி அறிந்த‌போது அசுந்தாவிற்கு அடுத்து என்ன‌ செய்வ‌தென‌த் திகைப்பாயிருந்த‌து. இன்னொரு ப‌க்க‌த்தில் அர‌ச‌ருடைய‌ ப‌டைக‌ள் இந்த‌த் த‌ப்புத‌லுக்கு அசுதாவின் உத‌வியும் இருந்திருக்குமென‌ ச‌ந்தேகித்து நெருக்குத‌ல்க‌ள் கொடுக்க‌த் தொட‌ங்கினார்க‌ள். ஊரும், ஒரு வெள்ளைக்கார‌னோடு வாழ்ந்த‌வ‌ளென‌ ஒதுக்கி வைக்க‌த் தொட‌ங்க‌ அசுதாவின் ச‌ந்தைக்குக் கூட‌ப்போகாது வீட்டுக்குள் ஒதுக்க‌த் தொட‌ங்கினாள்.

ஒருநாள் அசுந்தாவும் ந‌க‌ர் நீங்கி அட‌ர் வ‌ன‌ம் சூழ்ந்திருந்த‌ வ‌ட‌க்குத் திசை நோக்கி ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினாள். அர‌ச‌ரின் விசுவாசுக‌ளும் சன‌ங்க‌ளும் அவ‌ள் வில்லிய‌ம்ஸோடு இணைய‌த்தான் போயிருக்கின்றாள் என‌ நினைத்துத் தூற்ற‌த் தொட‌ங்கின‌ர். அசுதா ச‌ன‌ம் குறைந்த‌ காட்டுப் ப‌குதியில் ஒரு குடிலை அமைத்து வாழ‌த் தொட‌ங்கினாள். அந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பு இன்னொரு அர‌ச‌னுக்குச் சொந்த‌மாக‌ இருந்த‌து. அவ்வ‌ப்போது அர‌ச‌னின் ப‌டைவீர‌ர்க‌ள் அந்த‌ப் ப‌குதியில் காவ‌ல் ந‌ட‌வ‌டிக்கைக்காய் வ‌ந்து போவார்க‌ள். அப்ப‌டி வ‌ந்த‌ ஒரு ப‌டைவீர‌னுக்கு அசுதா மீது மைய‌ல்வ‌ந்து அசுதாவோடு சேர்ந்து வாழ‌த் தொட‌ங்கினான். தொட‌க்க‌த்தில் அவ‌ன் பேசும் மொழியை அறிந்துகொள்ள‌ அசுதா க‌ஷ்ட‌ப்ப‌ட்டாலும் சில மாத‌ங்க‌ளில் கொச்சையாக‌வேனும் பேச‌க் க‌ற்றுக்கொண்டுவிட்டாள்.

காலியிலும், கொழும்பிலும் கோட்டைகளைக் கைப்ப‌ற்றிய‌வ‌ர்க‌ளுக்கு இந்நில‌த்து ம‌ன்ன‌ன் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்தான். அட‌ர்ந்த‌ காடு அவ‌னுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து அர‌வ‌ணைத்துக் கொண்டிருந்த‌து. அவ‌னோடிருந்த‌ ப‌டைவீர‌ர்க‌ளும் த‌ம் ம‌ன்ன‌னுக்காய் உயிரைக் கொடுக்க‌வும் த‌யாராக‌ இருந்த‌ன‌ர். ஒருநாள் அந்நிய‌ர்க‌ளின் ந‌டமாட்ட‌ங்க‌ளைக் க‌ண்காணிப்ப‌த‌ற்கென‌ அசுந்தாவோடு இருந்த‌வ‌னும் போயிருந்தான். அந்த‌ வேளையில் அசுதா நிறைமாத‌க் க‌ர்ப்பிணியாக‌ இருந்தாள். விரைவில் வேலை முடித்து உன்னிட‌ம் மீள‌வ‌ந்து விடுவேன் என‌ அவ‌ன் கூறிச் சென்றான். அசுந்தா உயிருட‌ன் அவ‌னைப் பார்த்த‌ க‌டைசி நாளாக‌ அது இருந்த‌து. அவ‌னும் அவ‌னோடு சென்ற‌ ஏழுபேரும் காட்டுக்கு வெளியே த‌ந்திர‌மாக‌ வ‌ர‌வ‌ளைக்க‌ப்ப‌ட்டு அந்நிய‌ர்க‌ளால் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டார்க‌ள். தாம் கைதுசெய்ய‌ப்ப‌ட்டால் த‌ம‌து அர‌ச‌ன் ம‌றைந்திருக்கும் இட‌த்தின் இர‌க‌சிய‌ங்க‌ளை அந்நிய‌ர்க‌ள் அறிந்துவிடுவார்க‌ளென்ற‌ அச்ச‌த்தில் அந்த‌ ஏழுபேரும் த‌ம‌து குறுவாள்க‌ளால் க‌ழுத்தைக் கீறி தற்கொலை செய்து கொண்டார்க‌ள்.

கால‌ங்கால‌மாய் த‌ன் ம‌ர‌பில் த‌ற்கொலைச் ச‌ட‌ங்குக‌ள் நிக‌ழும்போது க‌ண்க‌ளைத் திற‌க்கும் வ‌ற்றாப்ப‌ளை அம்ம‌னும் ஒரு முறை விழிவிரித்து சோக‌த்தை உள்வாங்கிக்கொண்டாள். இத‌ன்பின் ஒன்றிர‌ண்டு மாத‌ங்க‌ளில் அந்நில‌த்து அர‌ச‌னும் க‌ற்சிலைம‌டுக்க‌ருகில் த‌ந்திர‌மாய் கொல்ல‌ப்ப‌ட, அந்நில‌ப்ப‌ரப்பே பெரும் கொந்த‌ளிப்பில் கொதிக்க‌த் தொட‌ங்கிய‌து. எல்லாத் துய‌ர‌ங்க‌ளையும் அசையாய்ச் சாட்சியாய்ப் பார்த்துக்கொண்டிருந்த‌ அம்ம‌னைப் போல‌, நாட்டில் ந‌ட‌க்கும் விப‌ரீத‌ங்க‌ளை அசுந்தாவும் த‌ன் குழ‌ந்தையோடு இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவையெல்லாம் நிக‌ழ்ந்து சில‌ ஆண்டுக‌ளின் பின், இடைவிடாது சில நாட்க‌ள் பொழிந்த‌ ம‌ழையின் கார‌ண‌மாய் அசுந்தா நோயுற்றாள். தொற்று நோய் ப‌ர‌வி நிறைய‌ப் பேர் அங்குமிங்குமாய்ச் செத்துக் கொண்டிருந்தார்க‌ள். த‌ன் குழ‌ந்தைக்காக‌வேனும் உயிர் வாழ‌வேண்டுமெனும் நினைப்பில், ம‌த‌ம் ப‌ர‌ப்ப‌ வ‌ந்த‌ வெள்ளைக்கார‌ப் பெண் தொற்று நோயிற்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த‌ ஓலைக் குடிசையொன்றில் அசுந்தா த‌ன் குழ‌ந்தையோடு போய்த் த‌ங்கினாள். ஒரு சில‌ நாட்க‌ளில் நோய் முற்றி அசுதா இற‌க்க‌, க‌வ‌னிக்க‌ எவ‌ருமேயில்லாத‌ அசுதாவின் குழ‌ந்தையின் அழ‌கில் ம‌ய‌ங்கி அந்த‌ வெள்ளைக்கார‌ப் பெண் த‌ன் நாட்டுக்கு, வ‌ள‌ர்க்க‌ எடுத்துச் சென்றிருந்தார்.

க‌ட்டிலில் உட்கார்ந்திருந்த‌ அவ‌ளின் ம‌டியில் ப‌டுத்திருந்த‌ நான் 'உன் முக‌ அமைப்பு என‌க்கு ஒரு கீழைத்தேய‌ப் பெண்ணை நினைவுப‌டுத்துகிற‌து' என்றேன். 'இன்ன‌மும் நீ உன் ப‌ழைய‌ காத‌லியின் நினைவிலிருந்து வெளியே வ‌ர‌வில்லைப் போலும்' என‌ச் சிணுங்கிக்கொண்டு அவ‌ள் சொன்னாள். 'இல்லை உண்மையாக‌வே நீ என‌க்கு ஏதோ நெருக்க‌மான‌வளைப் போன்று தோன்றுகிறாய்' என்றேன். 'யாருக்குத் தெரியும், எங்க‌ளின் மூதாதைய‌ர் யாருக்கோ இல‌ங்கையோடு தொட‌ர்பிருக்கிற‌தென‌ எங்க‌ளின் கிராண்ட் கிராண்ட்மா கூறுவார். அந்த‌வ‌கையில் சில‌வேளைக‌ளில் நீயென‌க்குச் சொந்த‌க்கார‌னோ தெரியாது' என‌ச் சிரித்த‌ப‌டி சொன்னாள். 'என்றாலும் நீதானே கூறினாய் உன‌து பூர்வீக‌ம் டவ‌ர‌ன்ஹில்லில் இருந்து தொட‌ங்குகிற‌தென‌... ' நான் இழுத்தேன்.

இறுதியில் நான் அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரைச் சேர்ந்த‌வ‌ன‌ல்ல‌ என்ற உண்மையைக் கூறாவிட்டாலும், என‌க்கு ஒழுங்காய் நீந்த‌த் தெரியாதென்ப‌தை ம‌ட்டும் அவ‌ளுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் 'எங்க‌ள் அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரைக்குச் சொந்த‌மாய் ஒரு பொய்கை இருந்த‌தென்றும் அத‌ற்கு கீரிம‌லைக் கேணி என‌ப் பெய‌ர் என‌வும், அது ஒழுங்காய்ப் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டாத‌தால் அங்கே முத‌லைக‌ள் இருந்த‌தால் என் பெற்றோர் என்னை நீச்ச‌லடிக்க‌ அனும‌திப்ப‌தில்லை' என‌வும் சொன்னேன். 'அதனாலென்ன‌ உங்க‌ளுக்குத்தான் பெருங்க‌ட‌லே இருக்கிற‌தே அங்கே நீச்ச‌ல் ப‌ழ‌கியிருக்க‌லாமே' என‌த் திருப்பிக் கேட்டாள். 'இந்து ச‌முத்திரத்தில் ப‌ழ‌கியிருக்க‌லாந்தான், ஆனால் நானொரு அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரையைச் சேர்ந்த‌வ‌னென்ப‌தால் கண்ட‌கிண்ட‌ இட‌ங்க‌ளிலெல்லாம் நீராட‌ முடியாத‌ல்ல‌வா?' என அத‌ற்கும் ம‌றுமொழிந்தேன். என்னுடைய‌ விச‌ர்க்க‌தையால் அவ‌ளுக்கு எரிச்ச‌ல் வ‌ந்திருக்க‌வேண்டும். You are right என‌ச் சொல்லிவிட்டு First Accept your mistakes, then only you can learn more என்றாள். எங்க‌ள் த‌மிழ்ப்ப‌ர‌ம்ப‌ரையிற்கும் இத‌ற்கும் எட்டாப் பொருத்த‌ம் என‌ ம‌ன‌துக்குள் கூறிக்கொண்டேன்.

அவ‌ள் மேலே அணிந்திருந்த‌ மெல்லிய‌ ஆடைக‌ளைக் க‌ளைந்துவிட்டு நீச்ச‌லுடைக்கு மாறியிருந்தாள். என்னையும் இழுத்துக் கொண்டு க‌ட‌லுக்குள் இற‌ங்க‌த் தொட‌ங்கினாள். நான் உப்புத்த‌ண்ணீரைக் குடித்து குடித்து நீருக்குள் மூழ்குவ‌தும் எழுவ‌துமாக‌வும் இருந்தேன். நாங்க‌ள் நீந்தி முடிந்து வெளியே வ‌ந்த‌போது, ப‌சித்த‌ வ‌யிற்றுக்குத் திற‌ந்த‌ வெளியில் ப‌டைத்து வைத்திருந்த‌ ம‌திய‌ உண‌வு தேவார்மித‌மாய் இருந்த‌து. அன்றைய‌ மாலை அவ‌ள் இன்னொரு பெருங்க‌ட‌லைத் த‌ன‌க்குள் நிர‌ப்பி என்னை நீந்த‌விட்டாள். இந்த‌க் க‌ட‌லில் எப்ப‌டி நீராடுவ‌தென்ப‌தில் என‌க்கு எந்த‌ச் சிக‌க‌லுமிருக்க‌வில்லை. அத‌ன் ஆழ‌ அக‌ல‌ங்க‌ளுக்குள் நான் ஒரு க‌ண்டுபிடிப்பாள‌னைப் போல‌ குதூக‌ல‌த்தோடு செல்வ‌தும் மீள்வ‌துமாக‌வும் இருந்தேன். அவ‌ள் ஒரு பொழுது பேர‌ல‌லையாக‌ எழுந்து என்னை உள்ளிழுத்த‌போது என் அம்ப‌னை இராச‌தானியையே காணிக்கையாக‌க் கொடுக்க‌த் த‌யாராக‌ இருந்தேன்.

க‌ன‌டாவிற்கு நான் புற‌ப்ப‌ட‌ ஒருநாள் முன்ன‌ர், அவ‌ள் இங்கிலாந்திற்கு வெளிக்கிட‌ ஆய‌த்தமாகிக் கொண்டிருந்தாள். கியூபாவில் என் நாட்க‌ளை அழ‌காக்கிய‌த‌ற்காய் அவ‌ளை அணைத்து இறுதியாய் முத்த‌மிட்ட‌போது அவ‌ள‌து பாஸ்போர்ட் மேசையிலிருந்து த‌வ‌றிக் கீழே விழுந்திருந்த‌து. அதையெடுத்துக் கொடுத்த‌போது, அவ‌ள‌து புகைப்ப‌ட‌ம் இருந்த‌ ப‌க்க‌த்தில் -அவ‌ளின் பெய‌ருக்க‌ருகில்- குடும்ப‌ப் பெய‌ராக‌ 'அசுந்தா' என‌ எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து.

000000000000000000000000000
Nov, 2011
ஓவியம்: Nicole Helbig & Darly Urig 
(நன்றி: தீராநதி, ஏப்ரல் 2012)

மூன்று தீவுகள்

Tuesday, April 17, 2012

சில‌ நிக‌ழ்வுக‌ள் த‌ற்செய‌லைப் போல‌த்தான் நிக‌ழ்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ற்றிற்கான‌ விளைவுக‌ளை அறிந்துகொள்ள‌ சில‌ச‌ம‌ய‌ம் ஆயுட்கால‌த்தையே விலை கொடுக்க‌வும் வேண்டியிருக்கும். பிரித்தானிய‌ அர‌சியின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ நாடொன்றிலிருந்து அவ‌ர்க‌ள் ப‌ன்னிரெண்டுபேர் புற‌ப்ப‌ட்டார்க‌ள். ம‌ல‌பார் தேச‌த்தில் முளைத்தெழும் ஒவ்வொரு ம‌ர‌ஞ்செடியிலும் வாச‌னைத் திர‌விய‌ங்க‌ள் காய்த்துக் குலுங்குவ‌தான‌ எண்ண‌ற்ற‌ க‌தைக‌ளைக் கேள்விப‌ட்டுத்தான் இக்க‌ட‌ற்ப‌ய‌ண‌த்தை ஆர‌ம்பித்தார்க‌ள். கீழ்த்திசை நாடுக‌ளிலிருந்து க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ந்திற‌ங்கிக் கொண்டிருந்த‌ வாச‌னைப் பொருட்க‌ள், செல்வ‌த்தை மேற்கு நாடுக‌ளில் வாரியிறைத்துக் கொண்டிருந்த‌ன‌. வானில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் மீதும், கையில் இருக்கும் பைபிளின் மீதும் ந‌ம்பிக்கை வைத்தப‌டி, திர‌விய‌ம் தேடும் க‌ட‌ற்ப‌ய‌ண‌த்தை ஓர் எளிய‌ கிராம‌த்திலிருந்து இவ‌ர்க‌ள் தொட‌ங்கினார்க‌ள்.

நன்ன‌ம்பிக்கைமுனையைத் தாண்டும்வ‌ரை ப‌ய‌ண‌ம் எளிதாக‌வே இருந்த‌து. ம‌ட‌க‌ஸ்காரை நெருங்கும்போது க‌ரும் மேக‌ங்க‌ள் திர‌ள‌த் தொட‌ங்கின‌. ஏதோ ஒரு ப‌ருவ‌க்காற்றின் நிமித்த‌ம் வ‌ரும் ம‌ழையென‌ ஊகித்து அவ்வ‌ள‌வு க‌வ‌லைப்ப‌டாது சூரிய‌ன் எழும் திசை நோக்கிக் க‌ப்ப‌லைச் செலுத்திக் கொண்டிருந்தார்க‌ள்.. அன்றைய‌ இர‌வு எங்கிருந்து எப்ப‌டி வ‌ந்த‌தென‌த் தெரியாது க‌ட‌ல் மூர்க்க‌மாய்க் கொந்த‌ளிக்க‌த் தொட‌ங்கிய‌து. பெரும் சூறாவ‌ளிக்கான‌ ஆயத்த‌ம் இதுவென‌ அங்கிருந்த‌ கட‌லோடிக‌ளில் மூத்த‌வ‌ர் த‌ன் அனுப‌வ‌ அறிவை வைத்துச் சொன்னார். அசுர‌த்த‌ன‌மான‌ காற்று. க‌ப்ப‌ல் தான் அடைய‌வேண்டிய‌ திசையை விட்டு காற்றின் திசைக்கேற்ப‌ அலைய‌த் தொட‌ங்கிய‌து. கட‌லின் கொந்த‌ளிப்போ, இப்போதே க‌ப்ப‌லைக் க‌விழ்த்து இந்த‌ப் பன்னிரண்டு பேரின் உயிரையும் காவெடுத்துவிடுவேன் போல‌ சாவின் மொழியைப் பேசிக்கொண்டிருந்த‌து. ம‌ல‌பார் தேச‌ம் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், எங்கேயாவ‌து ஒரு க‌ரையைக் க‌ண்டாலே போதுமென‌க் க‌டவுளை நோக்கி அவ‌ர்க‌ள் பிரார்த்திக்க‌த் தொட‌ங்கினார்க‌ள்.

புய‌லில் ஒதுங்கி ஒரு க‌ப்ப‌ல் நிற்ப‌தை அந்த‌த் தீவு ம‌க்க‌ள் க‌ண்டு, அதைத் த‌ங்க‌ள் ப‌குதிக்கு பொறுப்பான‌ த‌லைவ‌ருக்குத் தெரிய‌ப்ப‌டுத்தினார்க‌ள். அந்த‌த் த‌லைவ‌ரும் த‌ங்க‌ள் ம‌ன்ன‌ருக்கு செய்தியை அறிவிக்க‌ச் சொல்லி ஒருவ‌ரை அனுப்பிவிட்டு முப்பத்தைந்து வீர‌ர்க‌ள் உள்ள‌ த‌ன் ப‌டையோடு காத்திருந்தார். க‌ரைக்குப் போன‌ இவ‌ர்க‌ள் தாம் போர் செய்ய‌வோ நில‌ம் பிடிக்க‌வோ வ‌ர‌வில்லை, ம‌ல‌பார் தேச‌த்திற்கு வியாபார‌த்திற்காய் ம‌ட்டுமே வ‌ந்த‌வ‌ர்க‌ள் என‌ தெரிய‌ப்ப‌டுத்த‌ விரும்பினார்க‌ள். அதை ந‌ம்ப‌ அந்த‌த் த‌லைவ‌ன் த‌யாராக‌ இருக்க‌வில்லை. அர‌ச‌னிட‌மிருந்து வ‌ரும் செய்தி அறிந்த‌பின்னால்தான், த‌ன்னால் முடிவுக‌ளை எடுக்க‌முடியும் என‌க் கூறினான். இவ்வாறு பெருந்தொகையான‌ அந்நிய‌ர்க‌ளைச் சிறை வைப்ப‌த‌ற்கான‌ வ‌ச‌திக‌ள் அந்த‌க் க‌ரையோர‌ப் ப‌குதியில் இருக்க‌வில்லை. ஒவ்வொருவ‌ரின் கால்க‌ளும் க‌யிற்றால் பிணைக்க‌ப்ப‌ட்டு மூன்று மூன்று பேராக‌ நான்கு வீடுக‌ளில் த‌ங்க‌ வைக்க‌ப்ப‌ட்டார்க‌ள். குடிப்ப‌த‌ற்கு நீரும், இர‌வுச் சாப்பாடாய் சோறும், ம‌ர‌வ‌ள்ளிக்கிழங்கில் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌றியும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

அடுத்த‌ நாள் அர‌ச‌னிட‌மிருந்து செய்தி ஒன்று வ‌ந்து சேர்ந்த‌து. கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ இவ‌ர்க‌ளை அர‌சன் வ‌சிக்கும் அதிபாதுப்புடைய‌ பிர‌தேச‌த்திற்கு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுக் கொண்டுவ‌ர‌வேண்டாம் என்றும், இந்த‌ அந்நிய‌ர்க‌ளை முத‌லில் தீவிர‌ விசாரிக்கும்ப‌டியும் அந்த‌ச் செய்தியில் கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் இவ‌ர்க‌ளை முன்னே அனுப்பி நில‌வ‌ர‌ங்க‌ளை அறிந்துவிட்டு, பெரும்ப‌டையுட‌ன் அந்நிய‌ர்க‌ள் எம் தேச‌த்தில் ப‌டையெடுக்கும் அபாய‌மும் உள்ள‌தால், அவ‌ர்க‌ளைத் தொட‌ர்ந்து க‌ண்காணிப்பில் வைத்திருக்கும்ப‌டியும் ப‌ணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆனால் அவ‌ர்க‌ளை அர‌ச‌ கைதிக‌ளைப் போல‌ ம‌ரியாதையாக‌ ந‌ட‌த்தும்ப‌டியும் அர‌ச‌ன் வ‌லியுறுத்தியிருந்தான். இவ‌ர்க‌ள் தாங்க‌ள் புற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நாட்டு அர‌சின் அனுச‌ர‌ணையில் வ‌ந்த‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ளாக‌வோ அல்ல‌து ப‌டைவீர‌ர்க‌ளாக‌வோ இல்லாத‌தால், த‌ம்மைத் தேடி எவ‌ரும் வ‌ந்து காப்பாற்ற‌ப் போவ‌தில்லையென‌ எண்ணி வ‌ருந்தினார்க‌ள். ஒரேயொரு வ‌ழி தாங்க‌ளாக‌வே ஒரு வ‌ழியைக் க‌ண்டுபிடித்துத் த‌ப்பிச் செல்வ‌தே. ஆனால் இப்போது கைதியாகிருக்கும் இந்த‌ நாடு ஒரு தீவாக‌ இருப்ப‌தால் க‌ப்ப‌லின் துணையின்றித் த‌ப்பிப் போக‌வும் முடியாது. அப்ப‌டித் த‌ப்புவ‌தாக‌ இருந்தாலும், ஏற்க‌ன‌வே புய‌லில் சேத‌ம‌டைந்த க‌ப்ப‌லை முத‌லில் திருத்தியாக‌வும் வேண்டும். ஆனால் சேத‌ம‌டைந்த‌ க‌ப்ப‌லோ இங்குள்ள‌ ம‌க்க‌ள் செறிவாக‌ வ‌சிக்கும் ஒரு க‌ட‌ற்க‌ரைப் பிர‌தேச‌த்திற்கு இழுத்துக் கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டு இருந்த‌து. என்ன‌ செய்வ‌தென‌ ந‌ம்பிக்கை த‌ரும் எந்த‌த் திசையும் தெரியாது இவ‌ர்க‌ள் திண்டாடிக் கொண்டிருந்தார்க‌ள்.

மாத‌ங்க‌ள் ப‌ல‌ உருண்டோடிக் கொண்டிருந்த‌ன‌. இவ‌ர்க‌ளைக் காப்பாற்ற‌ வெளியிலிருந்து எவ‌ரும் வ‌ராத‌தைப் போல‌வே, இந்நாட்டின் அர‌சிட‌மிருந்தும் ஒரு உருப்ப‌டியான‌ செய்தியும் வ‌ந்து சேர‌வில்லை. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் த‌ம் சொந்த‌ நாடு திரும்பிச் செல்லும் ந‌ம்பிக்கையை இழ‌க்க‌த் தொட‌ங்கின‌ர். ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் வித்தியாச‌மாக‌ நிற‌த்தில் இவ‌ர்க‌ளிருந்த‌தால் நின்று அவ‌தானித்த‌ ம‌க்க‌ளும் இப்போது அந்த‌ப் பிரக்ஞை இல்லாது ந‌ட‌மாடிக் கொண்டிருந்த‌ன‌ர். மேலும் இவ‌ர்க‌ள் எங்கே சென்றாலும் இவ‌ர்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ந்து கொண்டிருந்த‌ ப‌தினைந்து காவ‌லாளிக‌ளும் இப்போது இவ‌ர்களைப் பின் தொட‌ர்ந்து வ‌ருவ‌தையும் நிறுத்தியிருந்தார்க‌ள். இவ‌ர்க‌ளும் உள்ளூர் ம‌க்க‌ளைப் போல‌ வேலை செய்து கொஞ்ச‌ம் காசு சேக‌ரித்து கால்ந‌டைக‌ளை வாங்கி வ‌ள‌ர்க்க‌த் தொட‌ங்கினார்க‌ள். த‌ங்க‌ளுக்கென்று த‌னிக்குடில் வேண்டுமென‌ அந்த‌ப் பிர‌தேச‌த் த‌லைவ‌ரிட‌ம் விண்ண‌பித்து அனும‌தியும் வாங்கினார்க‌ள். குடிலைச் சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் த‌ம‌து உண‌வுக்குத் தேவையான‌ காய்க‌றிக‌ளை வ‌ள‌ர்க்க‌வும் தொட‌ங்கினார்க‌ள்.

ஒரு ந‌ம்பிக்கைக் கீற்று எங்கேயாவ‌து இருந்து வ‌ராதா என‌ ஏங்கிக் காத்திருந்து வ‌ருட‌ங்க‌ள் நான்கு க‌ழிந்துவிட்டிருந்த‌ன‌. ப‌ல‌ர் முற்றிலுமாய் ந‌ம்பிக்கை இழ‌ந்து விட்டிருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளில் ஒரு சில‌ர் உட‌லுழைப்பிற்கான‌ வேலை தேடிச் ச‌ற்றுத் தொலைவுக்கு இட‌ம் பெய‌ர‌த் தொட‌ங்கினார்க‌ள். வேறு சில‌ர் இந்நாட்டுப் பெண்க‌ளைத் திரும‌ண‌ம் செய்துகொண்டு த‌ம‌க்கான‌ குடில்க‌ளை அமைத்து வாழ‌வும் தொட‌ங்கியிருந்த‌ன‌ர். இறுதியில் இவ‌ரும் ரொப‌ர்ட்டும் ம‌ட்டுமே திரும‌ண‌ஞ் செய்யாது மிஞ்சியிருந்த‌ன‌ர். ரொப‌ர்ட்டு த‌ன்னோடு கூட‌விருந்த‌ பைபிளை தின‌மும் ம‌ன‌ன‌ம் செய்து செய்து, த‌ன் வாழ்வு முழுவ‌தையும் இயேசுவிற்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்த‌வ‌ர் போல‌ வாழ்ந்துகொண்டிருந்தார். இவ‌ர்க‌ள் இருவ‌ருமே இப்ப‌டித் த‌னியே வாழ்ந்துகொண்டிருந்த‌தால், ம‌க்க‌ளில் சில‌ருக்கு இவ‌ர்க‌ள் இருவ‌ரும் த‌ப்பியோடுவ‌த‌ற்கான‌ திட்ட‌த்தில் இருக்கின்றார்க‌ள் என‌த் த‌ங்க‌ளுக்குள் பேசிக் கொண்டார்க‌ள். ம‌க்க‌ள் நினைத்த‌தில் அவ்வ‌ள‌வு பிழையுமில்லை. உண்மையில் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அப்ப‌டியான‌ ஒரு திட்ட‌த்தை இர‌வுக‌ளில் வ‌ள‌ர்த்துக் கொண்டுதானிருந்தார்க‌ள். இந்த‌க் க‌ட‌லோர‌த்தால் த‌ப்ப‌முடியாது என்ப‌தால் நாட்டின் உள்ப‌குதியிற்குச் சென்று வேறொரு க‌ட‌ற்க‌ரையால் த‌ப்பியோடுவ‌தே இவ‌ர்க‌ளின் திட்ட‌மாக‌வும் இருந்த‌து. இந்நாட்டுக்கு வ‌ட‌க்கே ம‌ல‌பார் நாடு இருப்ப‌தையும், அத‌ற்குச் ச‌ற்று வ‌ட‌கிழ‌க்கில் போனால் ம‌த‌றாஸ‌ப் ப‌ட்டின‌த்திலுள்ள‌ கிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியோடு தொட‌ர்பு கொள்ள‌லாம் என்ப‌தையும் க‌ண்டுபிடித்திருந்தார்க‌ள். ஆனால் இந்நாட்டின் உள்ப‌குதிக‌ளுக்குள் போவ‌தென்ப‌து க‌டின‌மாக‌ இருத‌து. அர‌ச‌னின் ப‌டைக‌ள் முள்வேலிக‌ள் அடைத்து, அத‌ற்கு முன் நீண்ட‌ அக‌ழிக‌ளை அமைத்து தீவிர‌மான‌ காவ‌ற்ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். நாட்டின் உட்ப‌குதியிற்குள் செல்ப‌வ‌ர் எவ‌ராயினும் மூன்று வெவ்வேறு காவ‌ற்கோபுர‌ங்க‌ளைத் தாண்டியே போக‌வேண்டியிருக்கும். அண்மைக்கால‌மாய் ம‌லைக‌ள் சூழ‌ந்த‌ இந்த‌ அர‌சனின் பிர‌தேச‌ங்க‌ளைப் பிடிக்க‌ அந்நிய‌ர்க‌ள் சில‌ர் அடிக்க‌டி போர் தொடுத்தும் கொண்டிருந்தார்க‌ள்.

த‌னிமையையும், தாய்நாடு திரும்புவ‌த‌ற்கான‌ ஏக்க‌மும் அதிக‌ரித்து அதிக‌ரித்து ம‌ன‌ம் பித்தாகிப் பிற‌ழ்ந்து போன‌ ஒரு பொழுதில்தான் ரொப‌ர்ட் ஒரு திட்ட‌த்தை முன்வைத்தார். இவ‌ர்க‌ள் பன்னிரண்டு பேரும் ஓரிட‌த்தில் சேர்ந்து ஒருசில‌ நாட்க‌ளைக் க‌ழிந்தால், த‌ம‌து க‌ட‌ந்த‌கால‌ வாழ்க்கையைக் கொஞ்ச‌மாவ‌து அசைபோட்டு ம‌ன‌தை ஆற்றிக்கொள்ள‌லாம் என்று ரொப‌ர்ட் கூறினார். ஒவ்வொருத்த‌ரும் ஒவ்வொரு திக்கில் இருந்தாலும் ஒருவ‌ரை ஒருவ‌ர் அறிந்த‌வ‌ர் மூல‌மாக இச்செய்தி அறிவிக்க‌ப்ப‌ட்டு எல்லோரும் கிறிஸ்ம‌ஸ் தின‌த்தில் ச‌ந்திப்ப‌தாக‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து. நிறைய‌ப்பேர் இந்த‌ ஏழு வ‌ருட‌ங்க‌ளில் மாறிப் போயிருந்த‌ன‌ர். சில‌ர் தம‌து மனைவிய‌ரோடு வ‌ந்திருந்த‌ன‌ர். சில‌ருக்குக் குழ‌ந்தைக‌ள் கூட‌ இருந்த‌ன‌. அவ‌ர்க‌ளில் அநேக‌ர் புதுச் சூழ‌லுக்கும் வாழ்க்கைக்கும் த‌ம்மை மாற்றிய‌துபோல‌ க‌ல‌க‌ல‌ப்பாக‌ இருந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் எல்லோரும் சென்ற‌பின், இன்னும் த‌னிமை அதிக‌ம் சூழ‌ந்திருப்ப‌தாய் இவ‌ருக்குத் தோன்றிய‌து. ஒருநாள் த‌ங‌க‌ள் வீட்டில் வ‌ள‌ர்த்த‌ கோழிக‌ளின் முட்டைக‌ளை அருகில் கூடும் சிறு ச‌ந்தைக்கு விற்ப‌த‌ற்குச் சென்றிருந்தார். அந்த‌ச் ச‌ந்தையில் ப‌ண‌ம் போன்ற‌வை பெரிதாக‌ புழ‌க்க‌த்தில் இருப்ப‌தில்லை. ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை வாங்கும் ப‌ண்ட‌மாற்றே ந‌ட‌க்கும். த‌ன‌து கோழி முட்டைக‌ளைக் கொடுத்து ஒரு ப‌லாக்காயை வாங்கினார். இதுவ‌ரை நாள் ச‌ந்தையில் காணாத‌ ஒரு புதிய‌ பெண் ப‌லாக்காய்க‌ளை விற்றுக்கொண்டிருப்ப‌தையும் அவ‌தானித்திருந்தார். இந்த‌ ஏழு ஆண்டுக‌ளில் இந்நாட்டு ம‌க்க‌ளின் சுதேசி மொழியையும் ஒர‌ள‌வு க‌ற்றிருந்தார். அடுத்த‌ முறை ச‌ந்தைக்குக்குப் போகும்போது, 'இதுவ‌ரை நான் உன்னை இங்கே காண‌வில்லை, நீ இந்த‌ச் ச‌ந்தைக்குப் புதிதா?' என‌ அந்த‌ப் பெண்ணிட‌ம் வினாவினார். எவ்வாறு உன்னை அழைப்ப‌தென‌க் கேட்ட‌போது அசுந்தா எனத் த‌ன் பெய‌ரை அவ‌ள் கூறினாள் தனிமைத்தீவில் ப‌ல்லாண்டுக‌ளாய்த் த‌வித்துக்கொண்டிருந்த‌ வில்லிய‌ம்ஸிற்கு அசுந்தா இவ‌ரைக் காப்பாற்ற‌ வ‌ந்த‌ ஒரு ப‌ட‌கு போல‌த் தெரிந்தாள். அசுந்தாவைச் ச‌ந்திப்ப‌த‌ற்கென‌வே -பொருட்க‌ளை விற்க‌வோ வாங்க‌வோ அவ‌சிய‌மில்லாத‌ பொழுதுக‌ளில் கூட‌- அடிக்க‌டி ச‌ந்தைக்கு செல்ல‌த் தொடங்கினார். நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ அது அசுந்தா மேல் காத‌லாக‌ மாற‌, த‌ன்னைத் திரும‌ண‌ஞ்செய்ய‌ ச‌ம்ம‌த‌மா என‌ இவ‌ர் அசுந்தாவிட‌ம் கேட்டார். எல்லாம் சுமுக‌மாக‌ ஆன‌த‌ன்பின் அசுந்தாவும் இவ‌ரும் திரும‌ண‌ம் செய்வ‌த‌ற்காய் முறையான‌ அனும‌தியை அந்த‌ப் ப‌குதியின் த‌லைவ‌ரிட‌ம் சென்று கேட்டார்க‌ள். 'இப்போதாவ‌து திரும‌ண‌ம் செய்ய‌ முடிவு செய்தீர்க‌ளே, ந‌ல்ல‌ விட‌ய‌ம், ச‌ந்தோச‌மாக‌ இருவ‌ரும் வாழுங்க‌ள்' என‌ அந்த‌த் த‌லைவ‌ர் வாழ்த்தினாலும், அவ‌ருக்கு உள்ளுக்குள், இனித் திரும‌ண‌ம் செய்தால் வில்லிய‌ம்ஸ் இங்கிருந்து த‌ப்பியோட‌மாட்டார் என்ற‌ நிம்ம‌தியே ஏற்ப‌ட்ட‌து. இவ்வ‌ள‌வுகால‌மும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்த‌ ரொப‌ர்ட்டைப் பிரிவ‌துதான் இவ‌ருக்கு க‌ஷ்ட‌மாய் இருந்த‌து. ரொப‌ர்ட்டும் 'இறுதியின் நீயும் எல்லோரையும் போல தாய் நாடு திரும்பிப் போகும் க‌ன‌வைக் கைவிட்டு விட்டாயா?' என‌க் க‌வ‌லையுட‌ன் கூறித்தான் விடை கொடுத்தார். இவ‌ரும் அசுந்தாவும் த‌ங்க‌ளுக்கென‌ குடிலை அமைத்து காட்டுக்கு அண்மையாக‌ வாழ‌த் தொட‌ங்கினார்க‌ள்.

சுனைக‌ளில் நீராடி, ம‌ல‌ர்க‌ளை எப்போதும் சூடுவ‌தில் பிரிய‌ம் கொண்ட‌ அசுந்தாவின் உட‌ல் எப்போதும் சொற்க‌ளால் விப‌ரித்து முடியா புதுவித‌ உண‌ர்வுக‌ளை இவ‌ருக்குக் கொடுத்துக் கொண்டிருந்த‌து. க‌ர்த்த‌ரில் ந‌ம்பிக்கை வைத்து பெறுகின்ற‌ ஆன்மீக‌ விடுத‌லையை, உட‌ல்க‌ளினூடாக‌வும் புல‌ன்க‌ளினூடாக‌வும் கூட‌ப் பெற‌முடியும் என‌ நினைத்துக்கொண்டார். தொட‌க்க‌த்தில் த‌ன‌து உட‌லை ஒரு ஆணுக்கு இய‌ல்பாக‌த் திற‌ந்துவைக்க‌த் த‌ய‌ங்கிய‌ அசுந்தா, போக‌ப்போக‌ த‌ய‌க்க‌ங்க‌ளைக் க‌ளைந்து த‌ன்னுட‌லை ஒரு ந‌தியாக‌ப் பெருக‌ச் செய்து இவ‌ரை ஒரு பெருவிருட்ச‌மாக‌ உள்ளிழுத்துக் கொண்டாள். ஆணிவேரும் அறுப‌ட, முடிவுறாதோடிய‌ காம‌ந‌தியில் அமிழ்ந்த‌ இவ‌ர் த‌ன் ஆன்மாவின் க‌ட்டுண்டுகிட‌ந்த‌ க‌யிறுக‌ளை அசுந்தாவின் அல்குள் அறுத்து விடுத‌லை செய்வ‌தை உண‌ர்ந்தார். அதை அசுந்தாவிட‌ம் சொல்ல‌வும் செய்தார். உட‌ல்க‌ள் ச‌ங்க‌மிக்கும் பொழுதுக‌ளில் ம‌ட்டும் ஆண்க‌ள் எவ்வ‌ள‌வு அன்பான‌வ‌ர்க‌ளாக‌வும், உள‌றுப‌வ‌ர்க‌ளாக‌வும் மாறிவிடுகின்றார்க‌ள் என‌ எண்ணிய‌ப‌டி அசுந்தா இவ‌ரைத் தாப‌த்துட‌ன் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

நான் கியூபாவில் சென்று இற‌ங்கிய‌போது ந‌ன்கு ம‌ழை பெய்துகொண்டிருந்த‌து. இர‌வுண‌வைக் கொஞ்ச‌மாய்ச் சாப்பிட்டு பாரில் இருந்து குடித்துவிட்டு, கொண்டுபோன‌ பிளாஸ்கில் இன்னும் கொஞ்ச‌ வைனை நிர‌ப்பிக்கொண்டு அறைக்குத் திரும்பியிருந்தேன். க‌ட‌ற்க‌ரையைப் பார்க்கும்ப‌டியாக‌ என் அறை இருந்த‌து. திரைச்சீலையை வில‌த்தினால் அலைய‌லைய‌டித்துக் கொண்டிருந்த‌ அத்திலாந்திக் ச‌முத்திர‌ம் விரிந்து கிட‌ந்த‌து. இந்த‌ ம‌ழைக்குள்ளும் யாரோ ஒருவ‌ர் க‌ட‌ற்க‌ரையில் இருந்து குடித்துக் கொண்டிருப்ப‌து தெரிந்த‌து. அவ‌ருக்கும் என்ன‌ க‌வ‌லையோ தெரியாது. பிளாஸ்கிலிருந்த‌ வைனும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் என்னைய‌றியாம‌லே குறைந்துகொண்டிருந்த‌து. இந்த‌ அறையிலிருந்த‌ப‌டி எத்த‌னைபேர் எத்த‌னைவித‌மான‌ உண‌ர்வுக‌ளோடு இந்த‌க் க‌ட‌லைப் பார்த்த‌ப‌டி இருந்திருப்பார்க‌ள் நினைத்துப் பார்த்தேன். மெல்ல‌ மெல்ல‌மாய் நீண்ட‌நாள் வ‌ர‌ ம‌றுத்த‌ நித்திரையும் என்னை அர‌வ‌ணைக்க‌த் தொட‌ங்கிற்று.

ந‌ள்ளிர‌வில் ச‌ட்டென்று விழிப்பு வ‌ர‌, ஏதோ ஒரு பொருளின் அசைவும், பெண்ணொருவ‌ரின் சிணுங்க‌லும் த‌லைக்க‌ருகாமையில் கேட்ப‌து போல‌த் தோன்றிய‌து. எலிவேற்ற‌ரில் இர‌வுண‌விற்காய் காத்திருந்த‌போது, ப‌க்க‌த்து அறைக்குப் புதிதாய் வ‌ந்திற‌ங்கிய‌ அந்த‌ இணைக‌ளின் காத‌ல் ச‌ர‌ச‌ம் போலுமென‌ நினைத்துக்கொண்டேன். பெண்ணின் குர‌ல் இப்போது கீச்சிட‌லாய் உச்ச‌த்தில் ஒலிக்க‌த் தொட‌ங்கியது. இது இய‌ல்பென‌த் தெரிந்தாலும் தூக்க‌த்தைக் க‌லைத்த‌ கோப‌த்தில் அவ‌ர்க‌ளைத் திட்டிக்கொண்டிருந்தேன். இனியும் இவ‌ர்க‌ளின் த‌ழுவ‌ல்க‌ளின் மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தால் எதையெல்லாம் ம‌ற‌க்க‌வேண்டுமென‌ கியூபாவிற்கு வ‌ந்தேனோ அதையெல்லாம் மீள‌ நினைக்கும்ப‌டியாகிவிடும் என்ற‌ அச்ச‌த்தில், ப்ளாஸ்கையும் எடுத்துக்கொண்டு இருப‌த்து நான்கு ம‌ணிநேர‌மும் திற‌ந்திருக்கும் பாருக்குச் செல்ல‌த் தொட‌ங்கினேன்.

இர‌வு விழித்திருந்து நீண்ட‌நேர‌ம் குடித்த‌தால் அடுத்த‌ நாள் நேர‌ம் பிந்தியே என்னால் எழும்ப‌முடிந்திருந்த‌து. ப‌த்த‌ரைக்கு காலையுண‌வை மூடிவிடுவார்க‌ள் என்ற‌ அவ‌ச‌ர‌த்தில் உண‌வுப்ப‌குதியிற்கு ஓடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவ‌ளைப் பார்த்தேன். அவ‌ளின் நிற‌த்தை வைத்து எந்த‌ நாட்டிலிருந்து வ‌ந்திருப்பாளென்று ம‌ட்டுக்க‌ட்ட‌ முடியாம‌ல் இருந்த‌து. ஏதோ வெவ்வேறு நாடுக‌ளின் க‌ல‌வையில் உதிர்த்த‌வ‌ள் என்ப‌து ம‌ட்டும் உறுதியாய்த் தெரிந்த‌து. என்னைப் பார்த்துச் சின்ன‌தாய்ப் புன்ன‌கைத்தாள். காலை உண‌விற்கு வ‌ரும்போதோ ட‌வ‌லையும், ஒரு பையையும் கூட‌வே கொண்டுவ‌ந்திருந்தாள். நீச்ச‌ல் செய்த‌பின் மாற்றுவ‌த‌ற்கான‌ ஆடைக‌ள் பையினுள் இருக்க‌க்கூடும் என‌ நினைத்துக்கொண்டேன். நான் மிச்ச‌மாயிருந்த‌ காலையுண‌வை அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் ஒரு பீங்கான் கோப்பையில் போட்டுக்கொண்டு அவ‌ள் எங்கே போகின்றாள் என‌ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

க‌ட‌ற்க‌ரைக்கு அண்மையில் இருந்த‌ ஓலையால் வேய‌ப்ப‌ட்டிருந்த‌ பாருக்குள் போவ‌து தெரிந்த‌து. நானும் என் உண‌வோடு பாரை நோக்கி ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன். பீனா கால‌டாவிற்கு ஓட‌ர் கொடுத்துவிட்டு அவ‌ள் காத்திருப்ப‌து தெரிந்த‌து. என்னைக் க‌ண்ட‌தும், 'Are you following me?' எனச் சிரித்த‌ப‌டி கேட்டாள். உண்மை அதுதான் என்றாலும், 'இல்லையில்லை, ச‌முத்திர‌த்தைப் பார்க்க‌ வ‌ந்தேன்' என‌ச் ச‌மாளித்தேன். 'நான் ரொறொண்டோவிலிருந்து வ‌ருகின்றேன்,ஆனால் இல‌ங்கைதான் பூர்வீக‌ம்' என‌ அறிமுக‌ம் செய்ய‌, தான் இங்கிலாந்திலிருந்து வ‌ந்திருக்கின்றேன் என்றாள். 'க‌ன‌டாவின் க‌டுங்குளிரிலிருந்து த‌ப்புவ‌த‌ற்கு இப்ப‌டி வ‌ந்தால் ம‌ட்டுமே முடியுமென‌'க் க‌ட‌லைப் பார்த்த‌ப‌டி சொன்னேன். கியூபாவின் இசை ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக்காய் வ‌ந்த‌ மாண‌வி என‌ அவ‌ள் கூற‌, 'இசை என்ன‌ இங்கிலாந்து ம‌காராணி மாதிரி ப‌க்கிங்காம் அர‌ண்ம‌னைக்குள்ளா இருக்கும்? இப்ப‌டிச் சுற்றுலா விடுதியில் இருந்துகொண்டு அதை எப்ப‌டி ஆராய‌முடியும்' என‌ கேலியாக‌க் கேட்டேன். 'அது என‌க்கு ந‌ன்றாக‌வே தெரியும், க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாய் கியூபாவின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளுக்கு அலைந்திருக்கின்றேன். உட‌லுக்கு ச‌ற்று ஓய்வு வேண்டும் போலிருந்த‌து. அதுதான் இங்கே ஒரு வார‌ம் த‌ங்க‌ வ‌ந்திருக்கின்றேன்' என்றாள். பிற‌கு 'இங்கிருக்கும் இசை வ‌கைமைக‌ளை விட‌ இளைஞ‌ர்க‌ள்தான் இன்னும் சுவார‌சிய‌மான‌வ‌ர்க‌ள்' என‌ ஒரு க‌ண்ணை சிமிட்டிச் சொன்னாள். 'அப்ப‌டியெனில் ஆய்வின் முடிவுக‌ளும் த‌னித்துவமாய்த்தான் இருக்கும் போல‌' என‌ச் சிரித்த‌ப‌டி கூறினேன்.

நான் காலையுண‌வை முடித்து, என‌க்கொரு கோப்பியையும் அவ‌ளுக்கு இன்னொரு பீனா கொலாடாவையும் எடுத்துக்கொண்டு வ‌ந்தேன். 'Why dont you swim with me? என‌ அவ‌ள் கேட்க‌, என்ன‌ ப‌தில் கூறுவ‌தென்று என‌க்குக் குழ‌ப்ப‌மாயிருந்த‌து. இலங்கை போன்ற‌ ஒரு தீவு நாட்டைப் பூர்வீகமாய்க் கொண்ட‌வ‌னுக்கு நீந்த‌த் தெரியாதென்று ஒரு அந்நிய‌த் தேச‌ப்பெண் அறிவ‌து எவ்வ‌ள‌வு அவ‌மான‌மான விட‌ய‌ம். அதை ம‌றைத்துக்கொண்டு 'I don't feel like swimming right now' என‌ச்சொல்லிவிட்டு 'வேண்டுமென்றால் நீ நீந்தும்போது க‌ரையில் நான் காவ‌லிருக்கின்றேன்' என்றேன். 'என‌க்கு எவ‌ரும் துணைக்குத் தேவையில்லை. நானே என்னைக் க‌வ‌னித்துக் கொள்வேன். ஆனால் உன‌க்கு வேறு வேலையில்லையென்றால் என் ஆடைக‌ளுக்கு காவ‌லிரு' என்றாள்.

அடுத்த‌ நாளிர‌வு என் அறையில் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் அம்ப‌னையின் அர‌ச‌ ப‌ர‌ம்ப‌ரையைச் சேர்ந்த‌வ‌ன் என‌ அவ‌ளுக்குச் சொன்னேன். ஐம்ப‌து குடும்ப‌ங்க‌ளை விட‌க் குறைவான‌ ஒரு கிராம‌த்தை, ஒரு இராச‌தானியின் அள‌வில் வைத்து க‌தைக‌ளைப் புனைந்து கொண்டிருந்தேன். பிளாஸ்கிலிருந்த வைன் குறைய‌க் குறைய‌ இன்னும் உற்சாக‌ம் என‌க்குள் த‌ட‌ம்புர‌ண்டோட‌த் தொட‌ங்கிய‌து. ஒரு நாள் போரின் நிமித்த‌ம், ப‌துங்குகுழி வெட்டிய‌போது ஆற‌டி நில‌த்துக்கீழே புதைந்துபோன‌ ஒரு ப‌ழ‌ங்கால‌க் க‌ட்ட‌ட‌த்தின் தூண்க‌ளைக் க‌ண்டெடுத்தோம் என‌வும், அங்கு கிடைக்க‌பெற்ற‌ ம‌ண்க‌ல‌ங்க‌ளும் செப்புத் த‌க‌டுக‌ளும் எங்களின் மூதாதைய‌ர் முன்னோர் கால‌த்தில் முக்கிய‌மான‌வ‌ர்களாய் இருந்திருப்பார்க‌ளென‌வும் க‌தையை இன்னும் வ‌ள‌ர்த்தேன். வாழ‌ ஒரு துண்டு நில‌ம் கூட‌ இல்லாது துர‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌ன் த‌ன் சோக‌த்தைச் சொல்கிறான் போலுமென‌ அவ‌ள் என்னை அணைத்துக்கொண்டு முதுகைத் த‌ட‌விய‌ப‌டி ம‌வுன‌மாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். அன்றிர‌வு நாங்க‌ள் ந‌ம்முட‌ல்க‌ள் மேல் நிக‌ழ்த்திய‌ ஆய்வில் ப‌க்க‌த்து அறைக்கார‌ர்க‌ளுக்கு நித்திரையே வ‌ந்திருக்காது. இதைத்தான் த‌மிழில் 'உன்னை அவ‌மானப்ப‌டுத்தியவ‌னுக்கு அவ‌ன‌து முற்ற‌த்திலேயே வைத்து ப‌தில‌டி கொடு' என்று சொல்கிறாக‌ள் போலும். காலை விடிந்த‌போது நான் வேறொருவ‌னாக‌ இருந்தேன். ஆடைக‌ள் எதுவும‌ற்றுக் கிட‌ந்த‌ எங்க‌ள் உட‌ல்க‌ளை இர‌வில் ஒழுங்காய் மூடியிராத‌ திரைச்சீலைக‌ளின் ஊடாக‌ சூரிய‌ன் புதின‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌து. நான் அவ‌ச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய் என‌து ஆடைக‌ளையெடுத்து அணிய‌த்தொட‌ங்கினேன். என்ன‌தான் இர‌வில் இட‌க்குமிட‌க்காய் இருந்தாலும் ஒரு நாட்டு அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரைக்குரிய‌வ‌ன் பிற‌ர் பார்வையில் இப்ப‌டித் தெரிய‌க்கூடாத‌ல்லவா?

(இன்னும் வரும்)
நன்றி: தீராநதி (ஏப்ரல், 2011)

ஓவியம்: தீராநதியிலிருந்து பிரசுரிக்கப்படுகிறது. (ஓவியரின் பெயர் வேல் எனத்தொடங்குவது அவரின் கையெழுத்திலிருந்து தெரிகிறது. முழுப்பெயர் அறிந்தவர் கூறினால் இங்கே நன்றியுடன் இணைத்துக்கொள்வேன்)

இலங்கையின் கொலைக்களங்களும், இன்னபிறவும்

Tuesday, April 10, 2012

ப்போது ‘இலங்கையின் கொலைக்களங்கள்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் (Sri Lanka, Killing Fields: War Crimes Unpunished)’இரண்டாவது பகுதியாக பிரித்தானியாவின் சனல்4ல் வெளிவந்திருக்கின்றது. முதலில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள் (Sri Lanka, Killing Fields) ஆவணப்படத்தைப் பார்க்காததைப் போலவே இந்த இரண்டாம் பகுதியையும் பார்க்கவில்லை. அதற்கான மனோதிடம் என்னிடமில்லை என்பதால் தவிர்த்திருந்தேன். எனினும் நண்பர்கள் முகப்புத்தகங்களில் இவற்றைப் பகிர்ந்தபோது அதைத் தாண்டிப் போகவும் கடினமாயிருந்தது. இந்த இரண்டாவது ஆவணப்படம் ஒளிபரப்பாகிய அன்று எழுதப்பட்ட சில கட்டுரைகளை வாசித்தே, அன்றைய இரவு தூங்கமுடியாது நினைவுகள் அலைக்கழிந்து கொண்டேயிருந்தன.

போருக்குள் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் நாளாந்தம் பார்ப்பதாய் இருந்திருக்கும். எனக்கு இவ்வாறான போர்க்குற்ற அசையும்/அசையாய்ப் படங்களை பொதுவில் வைப்பதிலும் சிக்கலுமுள்ளது. தமிழகத்து நண்பரொருவர் இவ்வாறான சலனக்காட்சிகளை வெளிப்படையாக முன்வைத்தால் மட்டுமே மேற்குலகின் முகத்தில் அறைந்து நீதி கேட்பது போல இருக்கும் என்றார். இன்னொரு ஈழத்து நண்பரொருவர் எங்களுக்கு எப்போதோ இவற்றைப் போன்று பலவற்றை நேரில் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது என்றார். இந்தியா,சீனாவிலிருந்து மேற்குலகுகின் பல நாடுகள் வரை ஈழத்தின் இறுதிப் போரின் இரத்தத்தில் கை நனைக்காதவர்களென எவரும் இல்லையென்றேதான் கூறவேண்டும். இன்றைய காலத்தில் வடிக்கப்படும் இந்த நாடுகளின் நீலிக்கண்ணீர் பற்றியும் ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நன்கு தெரியும், எனினும் இழப்புக்களையும், வடுக்களையும், காயங்களையும் மறந்து தொடர்ந்து வாழ, அவர்களுக்கு யாரிடையதோ பெருங்கருணையும் ஆதரவும் தேவையாய் இருக்கின்றது.

எங்கள் ஊரில் வைரவர் கோயிலுண்டு. அங்கு பூசை செய்துகொண்டிருந்தவர் என் மீது பிரியமாய் இருந்திருக்கின்றார். 5ம் ஆண்டு புலமைப்பரிசுப் பரீட்சையின் நிமித்தம் மேலதிக வகுப்புக்களுக்காய் சில கிலோமீற்றர்கள் மாலை நேரங்களில் நடந்து போய்க்கொண்டிருப்பேன். அப்போது தெருவில் இடைநடுவில் நடந்துவரும் என்னைக் காணும்போதெல்லாம் அவர் தன் சைக்கிளில் ஏற்றிக்கொள்வார். ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் அப்போது வேலை செய்துகொண்டிருந்தார். இறுதிப் போரின் காலங்களில், காலில் ஷெல் துண்டுபட்டு வெளியேறிய இரத்தத்தை நிறுத்த முடியாது இறந்து போயிருந்தார். சாதாரண மருத்துவ வசதி அன்றிருந்தாலே எளிதாகத் தப்பக் கூடிய காயந்தானென -அவரின் இறப்பு வீட்டுக்கு இங்கே சென்றபோது- அவரின் உறவுக்காரர்கள் கூறியிருந்தனர். நினைவுகள் தொடர்ந்து துயரத்தில் அமிழ்த்தியபடியே இருக்கின்றன. எவற்றை மறக்கவேண்டும் என நினைக்கின்றோமோ அவை ஞாபகங்களைப் பலமடங்களில் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றன.

இன்று ஈழத்தமிழர்களில் தங்களின் உறவுகளில் ஒருவரையோ அல்லது அயலவர்களில் ஒருவரையோ போருக்குப் பலிகொடுக்காத யாரையேனும் காண்பது என்பதே அரிதாகத்தானிருக்கும். எல்லாவற்றையும் மறந்துவிடலாமென்றால் எங்கிருந்து தொடங்குவது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றாவது தென்படுதா எனப் பார்த்தால் கூட, பெரும் வெறுமையே அவர்களைச் சூழ்வதாய் இருக்கிறது. இது போதாதென்று வென்றவர்கள் தோற்றவர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்வார்கள் என்றால் இவ்வாறான படுகொலைகள் எதுவுமே நடக்கவில்லையென வென்றவர்களில் ஒருசாரார் கொழும்பில் நின்று ஆர்ப்பாட்டஞ் செய்கின்றார்கள். போர் முடிந்துவிட்டது என்கிறார்கள், ஆனால் இன்னமும் போர் இலங்கையிலுள்ள மக்களில் மனங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாய்த்தான் தோன்றுகின்றது. எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்த்திசையிலிருப்பவர்களைப் பார்த்தே கையைக் காட்டுகின்றார்களே தவிர எவருமே தங்கள் தவறுகளை உணர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதே இன்றைய கசப்பான யதார்த்தம்.

டி.எச்.லோறன்ஸின் ‘The Lady's Chatterley's Lover’ நாவல் முதலாம் உலகப் போர் முடிந்து மிகப் பெரும் 'அழிவின் பின் சிறு நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கின்றது; எனினும் எத்தனை முறை வானம் இடிந்து வீழ்ந்தாலும் நாம் தொடர்ந்து வாழத்தான் வேண்டும். போகும் பாதை எளிதானதாயில்லாதபோதும் தடைகளைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டும்' எனத் தொடங்குகின்றது. இந்தப் புதினம், அது பேசும் விடயங்களுக்காகவும், எழுதப்பட்ட மொழியிற்காகவும் ஒருகாலத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டதோடு பல்வேறு நாடுகளில் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டும் இருக்கின்றது.  நாவலில் காமம் ஒரு முக்கிய இழையாக இருந்தாலும் அதையும் தாண்டி கைத்தொழில் புரட்சியிற்கு எதிரான கருத்துக்களும், உயர்வர்க்கத்தின் போலி ஆடம்பர வாழ்வு குறித்த எள்ளலும் கூர்ந்த கவனிக்கத் தக்கவை. பெண்ணின் காமம் குறித்து மிக நுட்பமாக டி.எச்.லோறண்ஸ் கவனித்து அதை ஆழமாக முன்வைத்திருக்கின்றார். மேலும் உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்/ நடுத்தர குடும்பத்தினர்/ கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென பாத்திரங்களைப் படைக்கும்போது அவர்கள் பேசும் மொழியை ஒவ்வொருவருக்குமென வித்தியாசப்படுத்தி தனித்துவமாய் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பல 'கெட்ட வார்த்தைகள்' நேரடியான பேசுமொழியில் பாவிக்கப்படுவதால் இந்நாவல் எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கும் ஒருவருக்கு சிலவேளைகளில் அதிர்ச்சியைத் தரவும் கூடும்

இந்நாவல் காமத்தை மட்டுமின்றி மனிதர்களின் உளவியலை, முதலாம் உலகப்போரின் பின்பான நிலைமைகளை, தொழிற்புரட்சியினால் ஏற்படும் விளைவுகளை மிக விரிவாகப் பார்ப்பதாலும், எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவற்றை முன்வைப்பதாலும் கவனிக்கத்தக்கதொரு புதினமாயிருக்கின்றது. டி.எச்.லோறண்ஸ் இதையெழுதிய கடைசி நான்காண்டுகளில் வெவ்வேறு விதமாய் மூன்று தடவைகள் எழுதிப் பார்த்திருக்கின்றார் என்கின்றபோது இப்படைப்பிற்காய் அவர் செலவிட்ட உழைப்பை நினைத்து வியக்காமலும் இருக்கமுடியவில்லை.
.
கொலம்பஸ் 'அமெரிக்கா' என்னும் புதிய உலகைக் கண்டுபிடிக்கும்போது அவர் அந்நிலப்பரப்புக்களில் இருந்த பூர்வீக மக்களுக்கு நிறைய அநியாயங்களைச் செய்திருக்கின்றார். 15ம் நூற்றாண்டில் நடந்த இந்த விடயங்களை ஒரு பாதிரியார் குறிப்பாய் எழுதி வைக்க, அதை ஆதாரமாகக் கொண்டு சமகாலத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஒரு குழு பொலிவியாவிற்குப் புறப்படுவதோடு Even the Rain திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஏனைய நாடுகளை விட ஏழ்மையான மக்கள் பொலிவியாவில் இருப்பதால், குறைந்த செலவில் இப்படத்தை எடுக்காலாமென்பது தயாரிப்பாளரின் திட்டம். தேர்ச்சி பெற்ற நடிகர்களோடு உள்நாட்டிலேயே இன்னும் அழிபடாது எஞ்சியிருக்கும் பூர்வீக மக்களையும் சேர்த்துத் திரைப்படத்தில் நடிக்க வைக்கின்றனர். படப்பிடிப்பு நடக்கும் காலத்திலேயே பொலிவியாவின் தண்ணீர் ஊற்றுக்களைப் வேறு நாடுகளிலிருந்து வரும் பெரும் நிறுவனங்கள தமக்குரியனவையாக வளைத்துப் போட முயற்சிக்கின்றன. இதற்கு எதிராக அங்கிருக்கும் பூர்வீக மக்கள் போராடத் தொடங்க, அதற்குத் தலைமை தாங்குபவரே -இத்திரைப்படத்திலும் பூர்வீகமக்களின் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவராக இருக்கின்றார். இவர் போராட்டத்தில் பங்குபெறுவதால் திரைப்படத்தைத்தொடர்ந்து எடுக்க முடியாது அந்தரப்படும் நிலை படக்குழுவினருக்கு ஏற்படுகின்றது.

ஒரு திரைப்படம் என்கின்ற விம்பத்திரையும், யதார்த்தில் நடைபெறும் போராட்டமுமென மாறி மாறிக் காட்சிகள் இப்படத்தில் விரிந்து கொண்டேயிருக்கின்றன. பொலிவியாவிற்கு வந்த திரைப்படக்குழுவினர் ஒழுங்காய்ப் படத்தை எடுத்து முடித்தார்களா, தண்ணீருக்கான போராட்டத்திற்கு என்ன நடக்கின்றது என்கின்ற பதற்றங்களோடே கதை நகர்கின்றது. தண்ணீருக்குக் கூட அரசியல் இருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை உரத்துக் கூறுவதாய், அதற்காய்க் கூட இரத்தம் சிந்த வேண்டியிருக்கின்றது என்பதை இத்திரைப்படத்தின் பெண் இயக்குனரான இசியர் போலைன் பார்ப்பவருக்குள் பதியும்படி எடுத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி கொலம்பஸ் வந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்ததிலிருந்து, இற்றைவரை அந்தப் பூர்வீக மக்கள் இன்னமும் பல்வேறு வழிகளால் சுரண்டப்பட்டு அவர்களின் இயற்கையோடு இயைந்த இயல்புவாழ்க்கை குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதையும் இப்படம் ஒளிவுமறைவின்றி முன்வைக்கின்றது. எப்போதும் ஒடுக்குமுறைகளோ சுரண்டல்களோ தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை, என்றோ ஒருநாள் அவற்றுக்கெதிரான போராட்டங்கள் வெடித்தெழும்பும் என்பதைக் கடந்த கால வரலாறுகளிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். எனினும் அதற்கான விலைகளையும், இழப்புக்களையும் பற்றி யோசிக்கும்போது வரும் சோர்வு மிகப்பெரியது. பிணங்களின் மேலே நின்று அரசியல் செய்ய ஒடுக்குபவர்களினால் முடியும். ஆனால் ஓடுக்குமுறைக்கு எதிராய்க் கொதித்தெழும்புவர்க்கு இழப்பின் பெறுமதியும் துயரமும் நன்கு தெரியும். ஒவ்வொரு போராட்டமும், உள்ளே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் எதையோ கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் முடிவை அடைகின்றன. இத்திரைப்படத்தின் இறுதியில் வெளிநாட்டிலிருந்து வரும் தயாரிப்பாளருக்கு, பூர்வீகக் குடியொருவர் சிறுபோத்தலில் நினைவாகக் கொடுக்கும் தண்ணீரும் அவ்வாறே பல கதைகளைச் சொல்லாமற் சொல்லி நிற்கின்றது. யதார்த்ததிலும், 2000ம் ஆண்டுகளவில் பொலிவியாவின் Cochabambaவில் தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரமாய் நடந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ணையம் பற்றி விரிவாகப் பேசவேண்டிய அவசியமல்ல. அதன் எல்லைகளற்ற 'எல்லை'கள் பற்றியும், நம்மை அறியாமலேயே நாம் கண்காணிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் நாமனைவரும் அறிவோம். இணையத்தின் மூலம் சாத்தியமாகிய அரபுப் புரட்சிகளின் பின் அதிகாரமிக்க எல்லா நாடுகளும் இணையத்தை இன்னுமின்னும் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. தனி நபர் ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் சட்டங்களை இன்னுமின்னும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன.

அதேபோன்று எப்படிச் சாதாரண சமூகம்  வெளியில்இருக்குமோ அப்படியே இணையமும் எல்லாம் கலந்து கட்டியே இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. எனவே சேர்க்கவேண்டியதைச் சேர்ந்து விலத்த வேண்டியதை விலத்த வேண்டியது தனிப்பட்ட ஒவ்வொருவரின் பொறுப்பே தவிர, இணையம் இப்படி கரடுமுரடாய் இருக்கிறதென எவரும் ஒப்பாரி வைக்க முடியாது. தமிழ்ச் சூழலில் இணையத்துக்கு வரும் படைப்பாளிகளில் அநேகர் 'ஏன் இணையம் இப்படிப் போர்க்களமாய்' இருக்கின்றதெனக் கூறியபடிதான் இணையத்திற்கு வந்திருக்கின்றனர். பிறகு தங்களுக்கான வாசகர்கள் அதிகரித்தவுடன், இணையமே கதியென இயங்கி தங்களுக்கான வாசகர் வட்டங்களை உருவாக்கி கணகணப்பு அடுப்புக்களின் முன்னால் குளிர்காய்ந்துகொண்டுமிருக்கின்றார்கள். அவரவர்க்கானதை அவரவர் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இணையத்திலும் உண்டென அவர்களுக்கு விளம்பி, 'இணையமென்றாலே அக்கப்போர் நிகழும் இடம் மட்டுந்தானா?’ என அவர்களின்  தொடக்ககால விசனங்களுக்கு இப்போது என்னவாயிற்றென நினைவுபடுத்த வேண்டியுமிருக்கின்றது.

இணையத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு பேர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் பெரும்பாலும் பின் தொடர்ந்து வாசிப்பவர்கள் இலக்கியம்/திரைப்படம்/அரசியல்/தத்துவம் போன்ற விடயங்களை எழுதுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். இது என் தனிப்பட்ட தேர்வு. தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து இணையச் சூழலின் வெகுசனக் கடலில் அல்லுப்பட்டுப் போகாது இன்னமும் தங்கள் போக்கில் தீவிரமாய் எழுதிக்கொண்டிருக்கும் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் இருவரை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். கரிசல்  என்கின்ற பெயரில் வலைப்பதிவு எழுதும் சன்னாசி. இற்றைவரை தனது சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டு எவ்வித அலட்டலுமில்லாது எழுதிக்கொண்டிருப்பவர். ஆழமான வாசிப்பும், கவனிக்கப்படாத திரைப்படங்கள் மீதான தன் கவனங்களைக் குவித்தும் எழுதிக்கொண்டிருப்பவர். இன்று மேற்குச் சூழலில் அதிகம் பேசப்படும் ரொபர்த்தோ பொலானோவை (2666, The Savage Detectives) தமிழில் மிக விரிவாக முதன்முதலில் அறிமுகஞ்செய்து வைத்தவர் சன்னாசி. அது மட்டுகின்றி இணையச் சூழலிலிருந்து பதிப்புச் சூழலுக்குப் போகும் பலரைப் போலவன்றி, தனது கவிதைகளையும்(‘தோட்டா’), சிறுகதைகளையும் (‘பேய்களின் ஒத்திகை’) தொகுத்து இணையத்திலேயே முதன் முதலாய் வெளியிட்டவரும் கூட. அண்மையில் அவ்வாறு தன் கவிதைத் தொகுப்பை  இணையத்தில் வெளியிட்ட இன்னொருவர், தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் அநேகருக்குப் பரிட்சயமான எம்.டி.முத்துக்குமாரசுவாமி.

மற்றொருவர் தனிமையின் இசை என்ற வலைப்பதிவு எழுதும் அய்யனார் விஸ்வநாத். இணைய உலகில் நிதானமாக நுழைந்து, பிறகான காலங்களில் வாசிப்பில் ஆழமாய்ச் சென்று, தனக்கான தனித்துவமான ஒரு மொழிநடையைத் தன் படைப்புகளில் கொண்டுவர முயற்சிக்கும் ஒருவர். கோபி கிருஷ்ணணையும், நகுலனையும் தனக்குப் பிடித்த முன்னோடிகளாய் வரித்துக் கொண்டவர். இதுவரை நான்கு தொகுப்புக்களை அச்சில் வெளியிட்டிருக்கின்றார். அண்மையில் வம்சி பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தது 'இருபது வெள்ளைக்காரர்கள்' என்கின்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. 

நல்ல படைப்புக்கள் எப்போதும் ஆர்ப்பாட்டங்களில்லாது, நீரின் அடியில் இருக்கும் என்கின்ற கூற்று பலரால் சொல்லப்படுவதுதான். ஒவ்வொரு வாசகருக்கும் இன்றைய சூழலில் உள்ள முக்கியமான சவால், அவ்வாறான நல்ல படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே. இரைச்சல்களின் ஒலியிலும், ஜிகினா வெளிச்சங்களிலும் நம் தேடலைத் தொலைக்காது, நிதானமாய் எல்லாத் திசைகளிலும் நம் வாசிப்பின் சிறகுகளை பறப்பதற்கான சுதந்திரத்தை நாம் கொண்டிருந்தால், நல்ல படைப்புக்களை அவ்வளவு எளிதில் தவறவிடமாட்டோம் எனத்தான் நினைக்கின்றேன்.
0000000000000000000000000

(அம்ருதா, ஏப்ரல்,2012)

ரெயின்

Monday, April 02, 2012


ஒளியைச் சுருட்டியபடி
விரையும் ரெயினின்
இழுபடும் பெட்டிகளில்
வாழ்வு ஓலமிடுகிறது
ஒரு ரூபாய் நாணயத்தை
தண்டவாளத்தில் வைத்துவிட்டு
புளியம்பூவை சுவைத்து நின்ற நாட்களும்
பிறகு ரெயினே வராத
நிராதரவான தண்டவாளங்களில்
சிலிப்பர் கட்டை பெயர்த்து
பங்கர்கள் சமைத்தபோதுகளில்
நம் கண்களின் முன்னே
ரெயினொரு வரலாற்றுப் பொருளாகிக் கடந்துபோனது.
நின்று நிதானித்து
ஏறிப் பயணிக்கவோ விடுப்புப் பார்க்கவோ
எந்த இரெயினும் பிறகு வாய்த்ததுமில்லை

கடந்த காலங்களின் முன் மண்டியிடும்போது
வந்துசேரும் பதற்றத்திற்குள்
எப்போதும் ஒரு ரெயின் ஓடிக்கொண்டேயிருக்கிறது
வெயிலூறும் ஒழுங்கைகளில் செருப்பில்லாது
கள்ளிவேலிகளைக் கடந்த
சிறுவர்களை மீண்டும் உயிர்ப்பிக்காதவரை
எந்த ரெயினில் ஏறினாலும்
குழந்தமையைக் கொன்றுவிடும்
கொடுங்காலத்திற்குள் சென்றுவிடுமெனும் அச்சத்தில்
சிலிப்பர்கட்டைகளை மாற்றிமாற்றி
அடுக்கியபடியிருக்கின்றேன் தண்டவாளங்களில்லாது.

Apr 02, 2012

சில 'அரசியல்' பிரதிகள்

Wednesday, March 07, 2012

1,
உலக வரைபடத்தை விரித்து வைத்தால் அதிலொரு சிறு தீவாக மிதக்கும் இலங்கை, பலருக்கு இதமான காலநிலையுள்ள கடற்கரைகள் கொண்ட ஒரு நாடாகத் தெரியலாம். .   ஆனால் இதைப் பூர்வீகத் தாயகமாய்க் கொண்ட  -என்னைப் போன்றவர்களுக்கு-  இலங்கை விதைக்கும் நினைவுகளோ வேறுவிதமானவை. அது போர் என்கின்ற, எதைக் கொண்டு கரைக்கவோ அழிக்கவோ முடியாத, சிவப்பும் கறுப்புமான வர்ணங்களைக் கொண்ட மாபெரும் துயரச் சித்திரம். இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து 1948ல் விடுதலைபெற்றதிலிருந்தே ஒரு கொந்தளிக்கும் எரிமலையாக இருந்து வந்திருக்கின்றது. எப்போது தணலடங்கிய குழப்பாய் இருக்கும், எப்போது சாம்பல் விலத்திக் கொதித்தெழும் என்பதை எவருமே அவ்வளவு எளிதாக எடைபோட்டும் விட முடியாது.

1956ல் தனிச்சிங்களமே கற்கலாமென்கிற சட்டமும் அதன் நிமித்தம் 58ல் நிகழ்ந்த கலவரமும் ஆங்கிலேயர் அகன்றபின்னும் இலங்கை அமைதியாய் இருக்கப் போவதில்லையென்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தியது. அதன்பின் 1977ல் நிகழ்ந்த கலவரமும், உச்சக்கட்டமாய் 83 கலவரமும் இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பைக் கேள்விக்குரியதாக மாற்றியது. தனிச்சிங்களச் சட்டம் மூலம் வளர்க்கப்பட்ட சிங்களத் தேசியத்திற்கு எதிர்வினையாக முன்வைக்கப்பட்ட அன்றையகால தமிழ்த்தேசியமும் ஒற்றைப் படையாக இருந்ததால், நாம் இன்றும் 50 ஆண்டுகளுக்கு முன் எம் உரிமைகளுக்காய்த் தொடங்கிய அதே இடத்திலிருந்து இன்னமும் நகரமுடியாது உலகிலுள்ள எல்லோரிடமும் கருணையை யாசித்துக் கொண்டிருக்கின்றோம். 1983 கலவரம் பெரும் உணர்ச்சிப்பிளம்பைத் தமிழ் இளைஞர்களிடம் ஏற்படுத்த, வீங்கி வெடித்த இயக்கங்களுக்கு எல்லாம் இந்திய அரசு ஆயுதங்களைக் கொடுத்து தன் 'பெருங்கருணை'யைக் காட்டியது கடந்தகால வரலாறு.

ஒரு சிறு தீவில் ஆயுதங்களைப் பெறுவது என்பதே கடினமாயிருக்க, அளவற்ற ஆயுதங்களோடு திரிந்த இயக்கங்கள் தங்களில் வல்லவர் யாரென்ற போட்டியில் தங்களுக்குள்ளேயே ஜனநாயகமில்லாது அடித்துக் கொண்டதும், முந்திக்கொண்டவர் தப்பிக்கொண்டாரென விடுதலைப் புலிகள் தனிப்பெரும் இயக்கமாக ஈழத்தில் வளர்ந்ததும், பிறகு நடந்தவைகளும் நாம் அறிந்தவையே. என்றும் போல மக்கள் தனிமைப்பட்டுப் போனார்கள், எல்லா அதிகாரங்களுக்கு இடையில் அல்லாடி அல்லாடி நாளாந்த வாழ்வையே ஒரு யுகமாய்க் கழிக்கவேண்டிய இருண்ட காலம் இன்னமும் ஈழத்தில் இருந்து கொண்டுதானிருக்கிறது.

இப்போது நேரடியான ஈழத்து அரசியலை சற்று விலத்தி, அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட புனைவைகளைப் பார்ப்போம். இதில் என்னை வசீகரித்த மற்றும் என்னால் வாசிக்கப்பட்ட பிரதிகளைப் பற்றியே பேசப்போவதால் விடுபடல்கள் நிச்சயமிருக்கும் என்பதை முன்னரே நினைவூட்ட விரும்புகின்றேன். முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தினால் மட்டுமின்றி 1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது உட்பட பல நிகழ்வுகளால் நம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையையும் அரசியல்மயப்பட்டிருக்கின்றது.. ஆகவே ஈழத்தமிழர்களாகிய நாம் எழுதும் பிரதிகளும் அரசியலை நேரடியாகவோ மறைமுகமோ பேசும் என்பதை கூறித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.

2.
1960ம் ஆண்டு எழுதப்பட்ட மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவல், ஈழத்தில் சிங்களவர்Xதமிழர் இனமுரண்பாடுகள் தொடங்குகின்ற புள்ளிகளை முன்வைக்கின்றது. இந்த நாவலின் பின்னணியில் தனிச்சிங்களச் சட்டமும், 1958ம் நடந்த சிங்கள -தமிழ்க் கலவரமும் இருந்திருக்க்கின்றது. இப்பிரதியில் முக்கிய பாத்திரமான சிங்கராசன் 'நான் போராடுவேன், இல்லை நாம் போராடுவோம். நம் சந்ததியார் எல்லோரும் போராடுவோம். நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தர மறுத்தால் ஒரு தனிநாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ்நாட்டின் கூட்டாட்சியாவது அமைக்கவேண்டும். அதற்காகவது போராடுவோம்' என நாவலில் இறுதியில் கூறுகின்றார். இந்த வாக்கியங்களை நாவல் எழுதப்பட்ட அன்றைய காலத்தில் வைத்துப் பார்க்கும்போது எவ்வளவு விரைவாக இத்தகைய இறுதி முடிவுக்குப் படைப்பாளி வருகின்றார் என்பது சற்று வியப்பு ஏற்படத்தான் செய்கிறது. முக்கியமாய் ஒவ்வொரு விடயத்தையும் மிக நிதானமாய் முன் வைக்கக்கூடிய மு.தளையசிங்கத்திடமிருந்து வருகின்றது என்பதை அவதானிக்கும்போது எத்தகைய நெருக்குவாரத்திலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கவேண்டும் என்பதை உணரமுடியும். எனினும் மு.தளையசிங்கம் 60களின் பிற்பகுதியில் இனவாத சிங்களத் தேசியத்திற்கு எதிராக எழுந்த தமிழ்த் தேசியமும் ஒருவகை ஒற்றைத்தன்மைக்குள் போவதைத் தனது 'மெய்யுள்' கட்டுரைகளில் பின்னாட்களில் எச்சரித்தாலும் 60களில் அவர் எழுதிய 'ஒரு தனி வீடும்', அவரது வேறு சில சிறுகதைகளும் இருவேறு தேசிய இனங்களின் இருப்புக்கள் இனி அமைதியாக இருக்கமுடியாது என்பதைக் கட்டியங்கூறுவதாய் அமைகின்றன.

மு.தளையசிங்கத்திற்கு சற்றுப் பின்னராக நாவல் உலகினுள் நுழைகின்ற கே.டானியல் வர்க்கப் போராட்டங்களினூடே இந்த இனச்சிக்கல்கள் தீர்க்கமுடியுமென்கிற அவதானங்களைத் தனது நாவல்களான 'பஞ்சகோணங்க'ளிலும், 'போராளிகள் காத்திருக்கின்றனர்'களிலும் வைக்கின்றார். கே.டானியலின் பிரதிகளில் அவர் நம்பிய கருத்தியல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதனூடு அவர் முன்வைக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் எவராலும் எளிதாக ஒதுக்கித்தள்ளவே முடியாதவையே.

1977ம் ஆண்டு கொழும்பு வரை சென்று தீண்டிய கலம்பகத்தைத் தொடர்ந்து 'லங்காராணி' என்கின்ற கப்பலில் யாழை நோக்கிச் செல்லும் கொடும் பயணத்தை அருளர் எழுதுகின்றார். இலங்கை என்ற நாட்டில் தமிழர்களின் இருப்பென்பது எப்போதும் நிச்சயமற்றதாய் இருக்கின்றது என்பதை அகதிகளை ஏற்றிச் செல்லும் கப்பலிலிருக்கும் பாத்திரங்கள் பதிவு செய்கின்றன. கப்பல் பயணம் முடியும்வரை அதிலிருப்பவர்கள் பத்திரமாகப் போய்ச் சேர்வார்களா என்ற பதற்றத்தைத் தந்தபடி நகர்கிறது 'லங்காராணி'யின் பயணம்.

1983ல் கறுப்பு ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து பல்வேறு ஆயுத இயக்கங்கள், இந்திய அரசின் ஆயுத வழங்கல்களுடன் புற்றீசல்களாய் எழுவதும், அவை காலப்போக்கில் தன்னளவில் உள் ஜனநாயகமற்றுப் போனதும் கடந்த கால வரலாறு. அந்தவகையில் ஒருகாலகட்டத்தில் பெரும் இயக்கமாய் இருந்த புளொட்டின் இன்னொரு முகத்தைக் காட்ட கோவிந்தன் 'புதியதோர் உலகத்தை' எழுதுகின்றார். தமிழ்மக்களுக்காய்த் தனிநாடு பெறப் போராட புறப்பட்ட இயக்கம் எப்படி தனக்குள்ளேயே ஜனநாயகமற்றுப் போவதையும், தமிழ்நாட்டில் இயங்கிய புளொட்டின் சித்திரவதைக் கூடங்களையும், அவற்றுள் பலியாகிப் போனவர்களையும், தப்பிப் பிழைத்தவர்களையும் கோவிந்தன் 'புதியதோர் உலகத்தில்' ஆவணப்படுத்துகின்றார்.

செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பு'களில்,  எப்படி ஓர் இயக்கத்தைச் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சேர்ந்த மூன்று நண்பர்கள் இன்னொரு இயக்கத்தால் (விடுதலைப்புலிகளால்) கொல்லப்படுவதற்குத் தேடப்படுகின்றார்கள் என்பதை மிகுந்த பதற்றமான சூழ்நிலையில் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அந்த மூன்று நண்பர்களுக்கும் தப்பிப் பிழைக்கும் ஒவ்வொரு நாளும் யுகங்களாய் மாறுவதை வாசிக்கும் நம்மாலும் உணரமுடிகின்றவளவுக்கு செழியன் இப்பிரதியில் மாதம்/திகதியிட்டு எழுதியிருப்பார். அண்மையில் இப்பிரதியில் விடுபட்ட சில நிகழ்வுகளையும் இணைத்து 'வானத்தைப் பிளந்த கதை'யாக செழியன் கனடாவில் வெளியிட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதே காலத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த மலரவன் எழுதுகின்ற 'போருலா' என்கிற பிரதி வெளிவருகின்றது. இதில் மணலாறிலிருந்து மாங்குளம் இராணுவ முகாமைத் தாக்குவதற்காய் காடுகளினூடு நகர்கின்ற போராளி/களின் வாழ்வு முறை பதிவு செய்யப்படுகின்றது. பின்னர் 2001ல் ஈழத்தில் இருந்த சமாதானக் காலத்தில் மலைமகள் உள்ளிட்ட சில பெண் போராளிகளால் தொகுக்கப்பட்ட 'விழுதுமாகி வேருமாகி' ஆயுதப்போராட்டத்தில் பெண்களின் வகிபாகத்தைப் பதிவு செய்கின்றது. ஜெயசுக்குறு எனப் பெயரிடப்பட்டு -இலங்கை இராணுவம் வவுனியாவிலிருந்து யாழ் நகரை இணைக்க- ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றுவதற்கென பல்வேறு திசைகளில் தொடங்கிய இராணுவ நகர்வுகளை முறியடித்த சம்பவங்கள் இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல், போராட்டத்திற்கு தன் பிள்ளைகளைக் காவுகொடுத்து தன்னையும் போராட்டத்தில் இணைந்துகொள்கின்ற ஒரு தாயின் மனோநிலையில் எழுதப்பட்டது என்றவகையில் முக்கிய பிரதியாகின்றது.

தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரமும்', ஜந்து பெரும் பகுதிகளாய் வெளியிடப்பட்ட 'கனவுச் சிறை'யும் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலங்களிலிருந்து அண்மைக்காலம் வரை  (1981-2001)விரிகின்ற நாவல்களாகவும், வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்கள் விரிவாக வாசிப்பதற்கு உதவக்கூடியதாகவும் இருக்கின்றன. எவ்வித ஆர்ப்பாடமுமோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்போ அற்ற தேவகாந்தனின் படைப்புக்களுக்கு அதற்குரிய இடம் இன்னமும் தமிழ்ச்சூழலில் வழங்கப்படவில்லையென்பது வருந்தப்படக்கூடிய ஓரு விடயமே. புலம்பெயர்ந்து எழுதத்தொடங்கிய ஷோபாசக்தியின் 'கொரில்லா' மற்றும், 'ம்'  புனைவுகள் அது எழுதப்பட்ட விதத்தில், இன்னொரு தளத்திற்கு நகர்த்தக் கூடியதான அழகியலும் எள்ளலும் கொண்டதாக அமைந்தவை. இதேபோல புலம்பெயர்ந்து நடேசன் எழுதிய 'வண்ணாத்திக்குளம்' சிங்கள-தமிழ் உறவை முன்னிலைப்படுத்தி அரசியலைப் பேச முயன்றாலும் இத்தளத்தின் பின்னணியில் எழுபதுகளில் அருள் சுப்பிரமணியம் 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' என்பதை எழுதியிருக்கின்றார் என்பதையும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

இதே காலகட்டத்தில் இலண்டனிலிருந்து விமல் குழந்தைவேல் 'வெள்ளாவி'யையும், அண்மையில் 'கசகறணத்தை'யும் எழுதி இருக்கின்றார். இரண்டுமே அரசியல் பிரதிகளாகவே இருக்கின்றன. முக்கியமாய் கசகறணம் கிழக்கில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இருந்த அன்னியோன்னிய உறவையும் அது எவ்வாறு பின்னாட்களில் வன்மமாக மாறுகின்றன என்பதையும் பேசுகின்றது. எனினும் ஒரு நாவல் என்றவளவில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தாது  சிலவிடயங்களை மட்டும் ஆவணப்படுத்துகின்றது என்பதோடு இறுதியில் சுருங்கிப்போவதையும்  குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் காலங்களிடையே எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ) 'மாயினி' என்கிற நாவலை வெளியிடுகின்றார். ஈழத்து எழுத்தாளர்களிடையே தனித்துவமான மொழியையும், தன் புனைவுகளில் பெரும் பாய்ச்சல்களையும் ஏற்படுத்தியவருமான எஸ்.பொ, 'மாயினி'யை ஒரு தமிழ்த்தேசியப் பிரச்சார நாவலாக கருத்துக்களையும் சம்பவங்களையும் கோர்த்து மட்டும் எழுதியிருப்பது வாசிப்பவருக்கு ஏமாற்றத்தையே கொடுக்கச் செய்யும்.

இதேசமயம் நூறு பக்கங்களுக்குள் அடங்கக் கூடியதாக வந்திருந்தாலும் மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' உள்ளடங்கிய குரலில் கறாரான அரசியலை மிகுந்த அழகியலோடு முன்வைக்கின்றது. இதுவரைகாலமும் அவ்வளவு விரிவாக முன்வைக்கப்படாத நாட்டின் உள்ளேயே அகதியாக இடம்பெயரும் வாழ்க்கையின் துயரப்பாடுகளை 'வேருலகு' முன்வைக்கின்றது மட்டுமின்றி எவ்வித இயக்கதையும் சேராத ஓர் அகதியின் பார்வையிலிருந்தும் இக்குறுநாவல் எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இறுதியில் அண்மையில் வெளிவந்த சயந்தனின் 'ஆறா வடு' இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வருகின்ற 87 காலப்பகுதியிலிருந்து 2001ல் சாத்தியமான சமாதானக்காலம் வரை பதிவு செய்கின்றது. இது ஒரு கடற்பயணத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், யாழில் 1995ல் நிகழ்கின்ற பெரும் இடப்பெயர்வு பதிவு செய்யப்படுவதோடு சமாதானக் காலத்தில் இராணுவம் சூழ்ந்த யாழில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போராளிகளையும், அவர்களின் மனங்களில் சமாதானக்காலம் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் உன்னிப்பாக முன்வைக்கின்றது. இதுவரை சொல்லப்பட்ட கதைகளைத் தாண்டி, எண்பதுகளுக்குப் பின், வரும் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு தளத்திற்கு நகர்ந்திருக்கின்றது என்பதற்கு 'ஆறாவடு' நல்லதொரு உதாரணம். எனினும் இந்நாவல் நகர்கின்ற காலப் பகுதியில்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள் என்பதையும், அது 'ஆறா வடு'வில் பதிவு செய்யப்படவில்லையென்பதையும் பலவீனமாகக் கொண்டுதான் இந்நாவலைப் பற்றிய ஒரு வாசிப்பைச் செய்யமுடியும்.

3.
போர்க்காலச் சூழ்நிலைக்குள் வாழாத பலருக்கு மேற்குறித்த பிரதிகள் புலம்பல் இலக்கியமாகவோ, பிரச்சார அறிக்கைகளாகவோ அல்லது அழகியலற்றதாகவோ தெரியவும் கூடும். ஆனால் யுத்ததிற்குள் வாழ்ந்த ஒருவருக்குத் தப்பிப் பிழைத்தல் என்பது எவ்வளவு சாகசமென்பது தெரியும்.  சொல்லப்படும்  கதைகள் ஒவ்வொன்றின் பின்னாலும், சொல்லாமல் விடப்பட்ட கதைகளின் துயரமும் அதற்குள் கவிழ்ந்திருக்கக் கூடிய மவுனமும் நன்கு புரியும். மூன்று தசாப்த போருக்கிடையில் அல்லாடிய தலைமுறைகள் ஒவ்வொன்றும் மரணத்திற்குள்ளும் வாழ்வதற்கான சிறு பொறியை நம்பிக்கை தளராது தொடர்ந்தேந்தியே வந்திருக்கின்றது. மரணத்தை விட இந்த வாழ்வு மகத்தானது எனக் கூறவே இந்த ஒவ்வொரு புனைவுகளும் முயற்சித்திருக்கின்றன.

எத்தனையோ பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகிப் பலியாகி காலத்தில் காணாமற்போய்விட இன்னமும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருப்பது என்பது ஒரு பெரும் கனவைப் போலத்தான் தோன்றுகின்றது.  தங்களது துயரங்களை, ஆற்றாமைகளை, நம்பிக்கைகளை, துரோகங்களை, தியாகங்களை, நட்டாற்றில் விடப்பட்டதைத் தனக்குரித்தான மொழியில் எழுத விழையும்போது அவை 'புலம்பல்' இலக்கியமாகவே சிலருக்கு இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சிறுவயதிலிருந்தே போரையும் இழப்பையும் அகதி வாழ்க்கையையும் அறிந்த என்னைப் போன்றவர்களுக்கு, இன்னமும் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாதென தோள் மீது கரம்போட்டு வரும் தோழமையைப் போல இந்த பிரதிகளில் சில இருக்கின்றன.

சிலவேளைகளில் இவை பனிபொழியும் பின்னிரவுக் காலங்களில், கடந்த காலங்களை நினைவூட்டி, யன்னலினூடு நிசப்தமான தெருவை நீண்டநேரமாய் வெறித்துப் பார்க்கச் செய்பவையாகவும் ஆக்கிவிடுகின்றன. நடந்துசெல்லும் ஒவ்வொருவரின் காலடித்தடங்களையும் பெரும்பனி அழித்துவிட்டுச் செல்கின்றமாதிரி எனக்குப் பிரியமான மனிதர்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் போரின் நிமித்தம் இவ்வாறுதான் சடுதியாய்க் காணாமற்போயிருக்கின்றனர். இதன் நீட்சியில் கவிழும் துயரிலிருந்தும் வெறுமையிலிருந்தும் விடுபடல் என்பது அவ்வளவு சுலபமானதும் அல்ல.


(பெப்ரவரி 12,2012)
நன்றி: அம்ருதா (மார்ச், 2012)
நன்றி: நாவல்களின் முகப்பு கூகுள் தேடல் மற்றும் அவற்றிற்குரிய தளங்கள்

பால் சக்கரியாவின் கதைகள்

Sunday, February 19, 2012

1.
பால் சக்கரியாவின் 'இதுதான் என் பெயர்' கதைகளின் தொகுப்பில் அவரின் பிரபல்யமான இதுதான் என் பெயர் குறுநாவலும் ஏனைய பன்னிரண்டு சிறுகதைகளும் தமிழில் கே.வி.ஜெயசிறியால் 2001ல் மிக அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. 'இதுதான் என் பெயர்' குறுநாவல் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு 'அகரம்' பதிப்பகத்தாலும் வந்திருக்கின்றது. காந்தியைக் கொல்கின்ற கோட்சேயின் மனோநிலையை காந்தியின் மரணத்தின் பின்னால் தொடர்ந்து செல்வதே 'இதுதான் என் பெயர்'. வித்தியாசமான நடையிலும் உள்ளடக்கத்தாலும் தமிழில் கூட மிக சிலாகித்துப் பேசப்படும் ஒரு படைப்பாக இக்குறுநாவல் இருந்திருக்கின்றது.

இத்தொகுப்பிலிருக்கும் பன்னிரண்டு சிறுகதைகளிலும் பெண்களே முக்கியபாத்திரங்களாக, அவர்களின் தளங்களில் வைத்துப் பேசப்படுகின்ற கதைகளாக ஜெயசிறியால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்திற்கென சில உறைந்துவிட்ட அடையாளங்கள் இருக்கின்றன. 'கதறக் கதறக் கண்ணீர்' விடச் செல்லி உணர்ச்சிகளின் குவியல்களுக்குள் அமிழவைத்து தம்மை முன்னிறுத்தும் படைப்புக்கள் அவற்றில் ஒருவகை.

இப்படிக் கதறக் கதற அழவைத்து மனித தரிசனங்களையோ/அறங்களையோ அள்ளித் தருவதை விடுத்து, அதிக உணர்ச்சிக்குவியலில்லாது பால் சக்கரியா தன் கதைகள் மூலம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின்றார் என்பதற்காகவேனும் நாம் இத்தொகுதியை வாசித்தாக வேண்டும். அது மட்டுமில்லை கதைகளின் உள்ளே எளிய வசனங்கள் மூலம் வாசிப்பவரை இன்னும் எவ்வளவு உச்சங்களுக்கு அழைத்துச் செல்கின்றாரென்பதையும் கவனிக்கவேண்டும்.

2.
'யாருக்குத் தெரியும்' கதை, யேசுவின் பிறப்பானது, எரோது அரசனுக்கு கெட்ட காலத்தைக் கொணரும் என காலத்தைக் கணிக்கும் ஒருவன் கூறியதுடன், ஏரோது அரசன் இயேசு பிறந்த அதேகாலத்தில் பெத்லகேமில் பிறந்த குழந்தைகளை எல்லாம் கொல்லச் சொல்கிறான். இக்குழந்தைகளை அளவுக்கணக்கில்லாது கொல்லும் ஒரு படைவீரனுக்கும் ஒரு பாலியல் தொழிலாளிக்கும் இடையில் நடக்கும் கதையேயிது. அந்தத் தொழிலாளி தொடர்ந்து படைவீரனின் மனச்சாட்சியை உலுக்கும்படியாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். ஓரிடத்தில் 'நீங்கள் கொன்ற குழந்தைகளுக்கு நீங்கள் அவர்களைக் கொல்லப் போவது முன்பே தெரியுமா?' எனக் கேட்கிறாள். அதற்கு அந்தப் படைவீரன், 'எனக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு மரணமுண்டா? அவர்களுக்கு மரணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தெரியுமா?' எனப் பதிலளிக்கிறான்.

இன்னோரிடத்தில் படைவீரன் கூறுகின்ற இடம் மிக நுட்பமானது. யேசுவிற்கான ஒரு விமர்சனமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியினூடுதான் ஒரு இரட்சகன் வருகின்றானா?' எனக் கேட்கிறான். எவ்வளவு கூர்மையான பார்வை. அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் பாலியல் தொழிலாளி கூறுகிறாள், 'ஓர் இரட்சகன் மகிமையோடுதானே வரவேண்டும்? அந்தக் குழந்தை இந்தக் குருதிச் சிதறல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? அவன் எப்படி இந்தக் கடனை அடைப்பான்?" என்கிறாள்.

இப்படி நீளுமோர் உரையாடலில், 'அவனை நீங்கள் அடையாளம் கண்டிருந்தீரேனில், நீங்கள் முதல் கொன்றது அவனையாயிருந்தால், மற்றக் குழந்தைகள் சாக நேர்ந்திருக்காது' என அந்தப் பாலியல் தொழிலாளி கூறுகின்றார், அதற்கு அந்தப் படைவீரன், 'ஆனால் அப்போது இரட்சகனின் வரவு சம்பவித்திருக்காது. இனியாவது, சாத்தியமுண்டு அல்லவா' என்கிறான்.

இந்த உரையாடல் இயேசுவின் பிறப்பிற்கு மட்டுமில்லை, இன்னும் எத்தனையோ பேருக்கும் வரலாற்றில் பொருந்தக் கூடியதாகவல்லவா இருக்கிறது. எத்தனையெத்தனை அரசர்கள் தங்கள் பெயரை நிலைநாட்ட தங்களை இரட்சகராக வேடம்பூண எவ்வளவு கொடும் விடயங்களை நிகழ்த்திப் போயிருக்கின்றனர். இந்தக் கதை முடியும் தருணம் கூட ஓர் அற்புதமான இடம். பாலியல் தொழிலாளிகள் தங்களிடம் வைத்து இயேசுவைக் காப்பாற்றித் தப்பச் செய்கின்றனர். தங்களால் பிரதியுபகாரம் செய்யவில்லையே யேசுவின் பெற்றோர் வருந்தும்போது, 'உங்கள் மகன் வளர்ந்து ராஜாவாகும்போது, நாங்கள் வேசிகள் என்றாலும் எங்களையும் காப்பாற்றச் சொல்' என்கின்றாள்.

'மந்திரவாதம்' என்கின்ற கதை மிகுந்த சுவாரசியமானது. பாலக்காட்டிலிருக்கும் அய்யர் குடும்பத்தைச் சேர்ந்த ராமானுஜம் சென்னையில் ஐ.ஐ.டியில் படிக்கப்போய் அங்கும் திறமைச்சித்தி பெற்று அமெரிக்காவிற்கு மேற்படிப்புப் படிக்கப்போகின்றார். சென்னைக்குப் போகும்போது ராமானுஜம், சுகுமாரன் அழீக்கோட்டின் 'தத்வமஸி' படித்துக் கொண்டுபோகின்றார். ராமனுஜத்தின் ஆய்வு கடந்தகாலத்திற்கு சென்று பார்ப்பதும், பிற ஜீவராசிகளுடனும் தொடர்பு கொள்வதும் எப்படியெனப் பார்ப்பது. அமெரிக்காவில் ஒரு யூதப் பெண் ராமானுஜத்துடன் நட்பாகின்றாள். ஒருநாள் அவள் , 'ராமு, நான் என்னுடைய பாப் நடனம் செய்யும் கால் விரல்களால் உன்னுடைய குண்டலினியை உணரவைக்கிறேன். என் அறைக்கு வா, உன்னுடைய லட்சியத்தை அடைய நான் உதவுகிறேன்' என்கிறாள்.உடல் விட்டு உடல் பாய்கின்ற வித்தை தெரிகின்ற மெலிசா, 'டியூனர் நான் தருகிறேன். ரீஸிவராவதற்கான வழி நீ கண்டுபிடி. மந்திரங்களின் நாட்டிலிருந்து வரும் நீதானா ஆத்மீய டியூனர் இல்லையென்று சொல்கிறாய்? ஒரே ஒரு மந்திரம் போதாதா, அடைப்பதற்கும் திறப்பதற்கும், வேறுபடுத்திக் காட்டவும்? அதை நான் உனக்குத் தருகிறேன்!' என்கிறாள்.

ஒருநாள் ராமானுஜத்தால் கடந்தகாலத்திற்குப் போக முடிகிறது: அவன், 'மெலீசா, எனக்குப் பயமாயிருக்கு. நான் பயந்தது சம்பவிக்கத் தொடங்கிவிட்டது. எனக்குள்ளே பாய்ந்து வரும் சப்தங்களின்மீது எனக்கொரு கட்டுப்பாடுமில்லை. இறந்த காலத்திலிருந்தும், நிகழ் காலத்திலிருந்தும் சப்தங்கள், கலைக்கப்பட்ட கூட்டின் தேனீக்களைப் போல என்னைச் சுற்றி அழுத்துகிறது மெலீசா. வெள்ளப் பெருக்கில் ஒழுகிவரும் மரமும், ஜடமும், இலையும், கொடியும், கவிழ்ந்த படகும், தகர்ந்த வீடும் போல அவை வந்து கொண்டேயிருக்கிறது. பிரபாகரனின் கடமையை நிறைவேற்ற சென்ற அந்தப் பெண் மனித வெடிகுண்டு தனக்குள்ளேயே முணுமுணுப்பதைக் கேட்டேன். ஹிட்லர் தற்கொலை செய்வதற்குமுன் தன் நாய் ப்ளோண்டியை வெடிவைத்த போது அவன் காதலி ஈவா ப்ரெளன் விம்மி விம்மி அழுவதைக் கேட்டேன். பாபர் மசூதியின் மகுடத்தைத் தாங்கியபடி ராமர் விக்கிரகத்தின்மீது விழுந்து இறந்த கரசேவகரின் கடைசிக் கூச்சலைக் கேட்டென்...

மரணமடைந்த சிறிகிருஷ்ணனின் மனைவிகளை அர்ச்சுனன் பாதுகாப்பு இடத்திற்குக் கொண்டு போகும்போது, அவர்களைக் காமுகர்களான தஸ்யூக்கள் கவர்வதன் கூச்சலைக் கேட்டேன். வாஸ்கொடகாமா கேரளக் கடற்கரையை வந்தடைந்தவுடன் சிறுநீர் கழிப்பதும், கெட்ட வாயுவை வெளியேற்றும் சத்த்ததையும் கேட்டேன், அப்போது அவர் 'ஈஸ்வரா' என்றார். மார்க்ஸ் வீட்டு வேலைக்காரியிடம், 'வேகம்! வேகம்! அவள் இப்போது வந்திருவாள்' என்று ரகசியமாகச் சொல்வதும் கேட்டேன். இந்திரா காந்தி வெடியேற்றவுடன் சொல்வதைக் கேட்டேன். என்னையா...! என்னையா..! அய்யோ!'

இது மட்டுமில்லை சுவாரசியமான பகுதி, மெலீசா பாண்டிச்சேரியின் அம்மாவின், 'கேள்விகளும் பதில்களும் - 1995' எடுத்து 166ம் பக்கம் வாசித்துப் பார். சரீரத்தை விட்டிறங்கி உலாவினால் பலவற்றையும் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.' என ராமானுஜத்தின் பதற்றங்களுக்கு இப்படிப் பதில் கூறுவதுதான்..

இத்தகைய ஆய்வுகளோடு அமெரிக்காவில் அலையும் ராமானுஜத்திற்கு ஏதோ நடந்துவிட்டதென இந்தியாப் பெற்றோர் அவரை அழைத்து திருமணம் ஒன்றைச் செய்ய முயல்கின்றனர். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் அலையக்கூடிய மனோநிலையைக் கொண்ட ராமானுஜத்திற்கு மெலீசா சொல்லிக்கொடுத்த மந்திரம் இந்தியா வரும்போது மறந்துவிடுகின்றது. ஒரே சத்தங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது ராமானுஜத்தின் உலகம். தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று மணம் முடிக்கின்ற நாயர் பெண்ணிடம் கூறுகின்றார். அந்தப் பெண்ணோ, 'இந்தப் பைத்தியம் பரவாயில்லை. நான் நினைச்சேன், சில மலையாள ஆம்பிளைகளுக்குள்ள sexual vulgarity ஏதாவதாய் இருக்குமென்று'  எனப் பயப்பிட்டதாய் கூறுகின்றார்.

கட்டிலில் முயங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண் சப்தங்களால் திணறிக்கொண்டிருந்த ராமானுஜத்தைப் பார்த்து ' என் பிரியமான பைத்தியக்காரா, நான் உன்னை sound proof ஆக்குகிறேன்' என்கிறாள். நாங்கள் இருவருமே இப்போது பைத்தியந்தான் இப்போது ஏதும் வித்தியாசமிருக்கா எனச் சொல்லும் அந்தப் பெண் 'இந்த அவஸ்தையை சம்ஸ்கிருதத்தில் என்னவென்று சொல்வாங்க தெரியுமா' என்கிறாள். என்ன என ராமானுஜம் கேட்க, 'தத்வமஸி!' என அவள் கூற இப்போது ராமானுஜம் துள்ளிக் குதிக்கிறான். இதுதான் அவன் மறந்துபோன மந்திரம். மிகுந்த சுவாரசியமான பல விடயங்களை கேள்விக்குள்ளாகும் இந்தக் கதை இத்தொகுப்பிலே பிடித்தமான சிறுகதைகளில் ஒன்று.

3.
'ஒரு கிறிஸ்மஸ் கதை', ஒரு பாலியல் தொழிலாளியைத் தமது அறையிற்கு அழைத்துச் செல்லும் இரு நண்பர்களின் கதை. தன்னைப் புணர்ந்த அவர்களிடம் நான் உங்களுக்கு என்ன அடையாளமாய் த் தெரிகின்றேன் என்கிறாள் அந்தப் பெண். '...நான் வேசி. இதன் அர்த்தம் என்ன? நான் எங்கிருந்தோ வந்து உங்கள் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்க வேண்டாமா? இதன் பொருள் என்னவென்று? நான் வேசியாகாதிருந்தால் என்னவாக இருந்திருப்பேன்? எனக்கிது புரியவில்லை. நான் யார்? மனைவியா, மகளா, அம்மாவா, சகோதரியா, அண்ணியா, தங்கச்சியா, காமுகியா, வேசியா? எனக் கேட்க இவ்விரு நண்பர்களும் திணறுகிறார்கள்.

அவளில் பரிதாப்பட்டு 'உன் பெயர் என்ன?' என இவர்கள் கேட்கும்போது, 'இப்போதுதான் என் பெயரை விசாரிக்கத் தோன்றியதா? இவ்வளவு நேரமும் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்? யாருடன் படுத்துக் கொண்டிருந்தீர்கள்?' என அந்தப் பெண் கேட்கும் கேள்விகள் கூர்மையானவை. இறுதியில் அந்தப் பெண்ணைப் புணர்ந்தபோது அவள் ஏற்கனவே கர்ப்பமாயிருக்கின்றாள் என உணர்கின்றபோது இவ்விருவர்களுக்கும் குற்ற உணர்வு பெருகத் தொடங்குகின்றது. ஒரு பாலியல் தொழிலாளி எப்போதும் புணர்ந்துகொண்டிருப்பவள் என கட்டியமைத்துக்கொண்டிருக்கும் விம்பங்களுக்கு அப்பால் அவளும் எல்லோரையும் போல சாதாரண இயல்புகளுடைய பெண்தான் என, அந்தப் பெண்ணின் கேள்விகளைக் கொண்டே நுட்பமாய் சக்கரியா எழுதிக்கொண்டுப்போகும் இந்தக் கதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதொன்று.

இன்னொரு கதையான, 'அன்னம்மா டீச்சர்: சில நினைவுக் குறிப்புகளில் அன்னம்மா ரீச்சர் தன் குடும்பத்தைத் தாங்கும் ஒருவராய் தன் 39 வயதுவரை வாழ்வதைக் கூறுகின்றது. இயேசுவே ஒரேயொரு துணையாய் அவருக்கு இருக்கின்றது. 33 வயதைக் கடக்கும்போது அவர் இயேசுவிடம் தன் தம்பியாக இருக்க வேண்டிக்கொள்கிறார். எனெனில் இயேசு 33 வயதில் இறந்துபோகின்றார். இறுதியில் அவர் மரணங்கூட மர்மமாய் முடிந்துபோகின்றது மட்டுமின்றி, இதுவரை அவர் தாங்கிவந்த குடும்பத்திற்கே பெறுமதி இல்லாதவர் போல ஆகிப்போவதை மிக இயல்பாய் சக்கரியா சித்தரித்திருக்கின்றார். அதுவும் இறுதியில் அன்னம்மா ரீச்சரை ஒளிந்திருக்கும் பார்ப்பவர் அன்னம்மா ரீச்சரின் பிரமைக்குள் வரும் இயேசுவா அல்லது ரீச்சரின் சொந்தத் தம்பியா என மயக்கத்தோடு முடித்த இடம் அருமையானது.

இந்தத் தொகுப்பில் 'மந்திரவாதம்' போல குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொருகதை, 'இரண்டாம் குடியேற்றம்'. இவ்வளவு நுட்பமாய் தாய் வீட்டிலிருந்து மணமாகிப் போகப் போகும் ஒரு பெண்ணின் மனது ஆணொருவர் சித்தரிக்கவில்லையெனத்தான் கூறவேண்டும். மிகுந்த கடவுள் பக்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா மேத்யூ, ஒரு மனோதத்துவ நிபுணருக்கு எழுதும் கடிதமே இந்தக் கதை. எல்லோருக்கும் இனியவராக, எந்தச் சோலி சுரட்டைகளுக்கும் போகாத ஆஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்து ஒருவரைத் திருமணம் செய்கின்ற காலத்தை நேரும்போதுதான் ஆஷாவிற்கு ஒரு யோசனை வருகிறது. இவ்வளவு காலமும் இருந்த வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குப் போகும்போது தனக்கு அவர்களைப் பற்றி அந்த வீட்டைப் பற்றி, அங்குள்ள மனிதர்களைப் பற்றி, அவர்களுக்கு பிற ஜீவராசிகளுடன் உள்ள உறவைப் பற்றி என்ன தெரியுமென யோசிக்கிறார்.

அவருக்கு தான் ஏதோ பாதாளத்திலிருந்து விழுவது மாதிரி இதைப் பற்றி யோசிக்கும்போது கனவு வருகின்றது. ஆஷாவின் தாத்தா ஒரு நாத்திகார் ஆயினும், வீட்டிலுள்ள மிகுதி அனைவரும் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவர்கள். எனவே இவ்வாறு இதுவரை தெரியாத வீட்டில் இனிச் சாகும்வரை வாழவேண்டும் என்றால், திருமணத்திற்கு முன் ஒருமாத காலமாகினும் தான் -திருமணம் செய்யும் ஜோயியின் வீட்டில்- தங்கவேண்டும் என்பதே ஆஷாவின் நிபந்தனை. அதை வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் கேலி செய்கின்றார்கள். பைத்தியம் பிடித்துவிட்டதென்கிறார்கள். தாத்தா மட்டுமே, 'மகளே நான் உன்பக்கம்தான், ஆனால் உனக்கும் எனக்குமான கால இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நான் கிழவனும் நாத்திகனுமாயிருக்கிறேன். உனக்கொரு ரக்ஷா மார்க்கம் சொல்லித்தர என்னால் முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். உன்னை ஆண்டவன் காப்பாராக' என்கிறார். ஆண்டவன் பெயரை நாத்திகரான தாத்தா கூறுகின்றாரேயென 'ஆண்டவனா?' என ஆஷா திகைக்க, 'ஆம் மகளே. அந்தக் கடைசி வைக்கோல் துரும்பாவது உனக்கிருக்கட்டும்' எனத்தாத்தா கூறுகின்ற இடம் மிக நெகிழ்வானது. இறுதியில் அந்தக் கடிதத்தில் ஆஷா, 'ரக்ஷா மார்க்கம் உண்டா? என் தேவைகள் தவறானவையா? நானொரு மனநோயாளி தான?' என மனோதத்துவருக்கு எழுதும் கடிதத்தை முடிக்கின்றார். ஆனால் பதில்கள் இன்னும் தெரியாது ஆஷாவைப் போன்ற பலரின் பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் காற்றில் பறந்தபடியே இருக்கின்றன. இதே போன்ற இத்தொகுப்பிலிருக்கும் 'குழியான்களின் பூந்தோட்டம்' மற்றும் 'கன்னியாகுமரி' கதைகளும் நினைவில் நிற்கக்கூடியவையே. எப்படி ஆண்களின் நிறங்களற்ற வாழ்வைப் பெண்கள் வர்ணமயமாக்கிவிடுகின்றனர் என்பது மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சக்காரியாவின் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவர் மொழியின் மீதும் வரலாற்றின் மீதும் செய்யும் பரிசோதனைகளே மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன. அதற்கோர் எளிய உதாரணமாக 'இதுதான் என் பெயரை' எப்படி எழுதியிருப்பாரென வாசித்துப் பார்த்தாலே நன்கு புலப்படும். மேலும் சக்காரியா தன் கதைகளில் ஒரு தெளிந்த முடிவை அள்ளிக்கட்டிக் கொடுத்து வாசகர்களை இவ்வளவும் போதுமென அனுப்பிவிடுவதில்லை என்பது குறிப்பிடவேண்டியது. மயக்கந்தரும் தொனியில் முடியும் சக்கரியாவின் கதைகள் உங்களுக்குப் பிடித்தமான முறையில் வாசித்தும் ஆராய்ந்தும் பார்ப்பதற்கான வெளிகளைத் தருகின்றன. மேலும் பெண்களைப் பற்றி கூறும்போது அவர்கள் இயல்பாய் இருக்கின்றார்கள். அளவுக்கதிகமான உணர்ச்சிக்குவியல்களாகவோ கண்ணீர் சிந்துபவர்களாக சித்தரிக்கப்படாதது நிம்மதியைத் தருகின்றது. இச்சிறுகதைகளில் வரும் ஆண்கள் கூட தங்கள் பாத்திரங்களைத் தாண்டி மனோரதியவெளியில் அவ்வளவாய்ப் பறப்பதுமில்லை. எல்லாவற்றையும் விட பொதுவெளியில் தன் மேன்மையையும் அதிகாரத்தையும், மமதையும் காட்டத் துடிக்கின்ற ஆண்களைக் காமத்தின் கணங்களில் எளிதாய்க் கைப்பற்றி அவர்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடுகின்ற நுட்பமான பெண்களையும் இந்தக் கதைகளில் தரிசித்தும் கொள்ளலாம்.

Feb 18, 20212 - At 2.12a.m
(நான் கடந்துசெல்லும் கடினகாலங்களில் துணையிருக்கும் நண்பருக்கு...)

வர்ணங்களில் தெறிக்கும் வாழ்க்கை : வின்சென்ட் வான்கோ

Friday, February 03, 2012

1.
தான் உருவாக்க‌ விரும்பிய‌ க‌லைக்கும், உள்ம‌ன‌தின் கொந்த‌ளிப்புக்க‌ளுக்கும் இடையில் அல்லாடிய‌ ஒரு க‌லைஞ‌ன் வான்கோ. ஒல்லாந்தில் பிற‌ந்து, பிரான்சில் கோதுமை வ‌ய‌லுக்குள் த‌ன்னைத்தானே சுட்டு வீழ்ந்து கிட‌ந்த‌ வான்கோவின் வாழ்வு முழுவ‌தும் ஒழுங்குக‌ளைக் குலைத்த‌வை, உல‌கோடு ஒட்டாது த‌ன‌க்கான‌ வெளியைக் க‌ண்டுபிடிக்க‌ முய‌ற்சித்த‌வை. ஆக‌வேதான் தான் நேசித்த‌ (க‌ர்ப்பிணியாக‌ இருந்த‌) பாலிய‌ல் தொழிலாளியை வீட்டுக்கு கொண்டு வ‌ந்து த‌ங்க‌ வைக்க‌ வான்கோவினால் முடிந்த‌து; இன்னொரு ச‌ம‌ய‌த்தில் ச‌க‌ ஓவிய‌னோடு வாக்குவாத‌ப்ப‌ட்டு, த‌ன் காதை அறுத்து ஒரு பெண்ணிட‌ம் அவ‌ரால் கொடுக்க‌வும் முடிந்திருந்த‌து. அநேக‌ க‌லைஞ‌ர்க‌ளைப் போல‌ உய‌ரிய‌ படைப்பு நிலைக்கும் பித்த‌ நிலைக்கும் இடையிலிருக்கும் நூலிழையின் த‌ருண‌ங்க‌ளுக்குத் த‌ன்னையே தாரை வார்த்து, இள‌வ‌ய‌திலேயே ம‌ர‌ணித்துபோன‌ ஒரு ப‌டைப்பாளிதான் வான்கோ.

இன்றைய‌ ம‌திப்பில் மில்லிய‌ன் டொல‌ர்க‌ளுக்கும் மேலாக‌ விற்க‌க்கூடிய‌ ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்திருக்கும் வான்கோ, த‌ன‌து வாழ்க்கைக்கால‌த்தில் ஒரேயொரு ஓவிய‌த்தை ம‌ட்டுமே விற்க‌ முடிந்திருக்கின்ற‌து என்ப‌து கச‌ப்பான க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாறு. 'ப‌டைப்பைப் பார் ப‌டைப்பாளியைப் பார்க்காதே' என்கிற‌ கால‌க‌ட்ட‌த்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், வான்கோவின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வை அறியும்போது அவ‌ர‌து ஓவிய‌ங்க‌ளின் அட‌ர்த்தி ந‌ம‌க்கு இன்னும் அதிக‌ நெருக்க‌த்தையும் நெகிழ்வையும் த‌ருப‌வையாக‌ மாறிவிட‌வும் செய்கின்ற‌ன‌. த‌ன‌து வாழ்வின் க‌ச‌ப்புக்க‌ளையும், பிற‌ழ்வுக‌ளையும் வ‌ர்ண‌ங்க‌ளில் குழைத்து த‌ன் சுய‌த்தை விடுத‌லை செய்ய‌ முய‌ன்ற‌ ஒரு க‌லைஞ‌னாக‌வும் வான்கோவை நாம் அடையாள‌ங் க‌ண்டு கொள்ள‌ முடியும். 'என‌து ப‌டைப்புக்க‌ளே என‌து வாழ்க்கை' என‌க் குறிப்பிடும் வான்கோ, 'ப‌டைப்பாளி ஒவ்வொருவ‌ரின‌தும் உன்ன‌த‌ ப‌டைப்புக்க‌ளின் அர்த்த‌ங்க‌ளை விள‌ங்குவ‌த‌ன் மூல‌ம் க‌ட‌வுளை நோக்கி நாம் ந‌க‌ர‌முடியுமென‌' த‌ன் ச‌கோத‌ரான‌ தியோவிற்கு எழுதும் க‌டித‌மொன்றிலும் குறிப்பிடுகின்றார்.

வான்கோ அவ‌ர் வ‌ரைந்த‌ ஓவிய‌ங்க‌ளின் அள‌வுக்கு, நிறைய‌க் க‌டித‌ங்க‌ளையும் எழுதியிருக்கின்றார் என்ப‌தை நீண்ட‌கால உழைப்பின் பின், அண்மையில் ஆய்வாள‌ர்க‌ள் உல‌கிற்கு வெளிக்கொண‌ர்ந்திருக்கின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ ஆறு தொகுதிக‌ளாக‌ வெளிவ‌ந்த‌ க‌டித‌ங்க‌ளின் பெரும் தொகுப்பில் வான்கோவை இன்னும் நெருக்க‌மாக‌ உண‌ர்ந்து கொள்ள‌வும் முடியும்.. வான்கோ தான் வ‌ரைந்து தியோவிற்கு அனுப்பிய‌ ஒவ்வொரு ஓவிய‌த்தோடும், அவை பற்றிய த‌ன‌து நீண்ட‌ குறிப்புக்க‌ளையும் எழுதி அனுப்பியிருக்கின்றார் என்ப‌து கூடுத‌ல் செய்தி. அது ம‌ட்டுமில்லாது, இந்த‌க் க‌டித‌ங்க‌ளை ஆதார‌மாக‌க் கொண்டு, வான்கோவின் விரிவான‌ வாழ்க்கை வ‌ர‌லாற்று நூல் (Van Gogh: The Life) சென்ற‌ ஆண்டு வெளியிட‌ப்ப‌ட்டும் உள்ள‌து.

2.
சென்ற‌ வ‌ருட‌த்தின் இறுதியில் ஜ‌ரோப்பாவிற்குப் போகும் என் ப‌ய‌ண‌த்தில் சில நாட்க‌ள் ஹொல‌ன்டில் க‌ழிக்க‌லாமென‌ நானும் ந‌ண்ப‌ரும் திட்ட‌மிருந்தோம். குறுகிய‌கால‌ த‌ரித்த‌லில் முக்கிய‌மாய் ஆம்ஸ்டடாமில் எதைப் பார்க்க‌வேண்டுமென‌ எண்ணிய‌போது முதலில் நினைவுக்கு வ‌ந்த‌து வான்கோ மியூசிய‌ம். வான்கோவின் அசலான 200ற்கு மேற்ப‌ட்ட‌ முக்கிய‌ ஓவிய‌ங்க‌ளையும் 400ற்கு மேற்ப‌ட்ட‌ கோட்டோவிய‌ங்க‌ளையும் அங்கே த‌ரிசிக்க‌ முடியுமென்ப‌து மிக‌வும் கிள‌ர்ச்சியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. மிக‌வும் சொற்ப கால‌மே (37வ‌ய‌துவ‌ரை) வாழ்ந்த‌ வான்கோ, ஓவிய‌ங்க‌ளை வ‌ரைய‌த் தொட‌ங்கிய‌தே த‌ன‌து இருப‌துக‌ளின் பிற்ப‌குதியில் என்ப‌தை ந‌ம்மில் ப‌ல‌ர் அறிந்துமிருப்போம். ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கும் குறைவான‌ கால‌ப் ப‌குதியில் முறையான‌ ஓவிய‌க் க‌ற்கையே இல்லாது எப்ப‌டி வான்கோவினால் உச்ச‌த்தை அடைய‌ முடிந்திருக்கின்ற‌து என‌ப‌து என‌க்குள் எப்போதும் சுவார‌சிய‌மூட்டுகின்ற‌ வினாவாக‌ இருந்து கொண்டிருக்கின்ற‌து. தொட‌க்க‌த்தில் இருண்ட‌ வ‌ர்ண‌ங்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ வான்கோ (உருளைக்கிழ‌ங்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ள் : Potato Eaters), பிரான்சுப் ப‌ய‌ண‌த்தின்பின் பிர‌காச‌மான‌ நிற‌ங்க‌ளைத் தேர்வு செய்து கொள்ள‌த் தொட‌ங்குகின்றார். அத‌னால்தான் வான்கோவின் பிர‌ப‌ல்ய‌மான‌ சூரிய‌காந்திக‌ள் ம‌ட்டுமின்றி, அட‌ர்ந்த‌ இர‌வில் தெறிகும் நில‌வு கூட‌ (The Starry Night) சூரிய‌னைப் போன்று பிர‌காச‌மாய் இருக்கின்ற‌து. த‌ன‌து ச‌கோத‌ர‌ரான‌ தியோவிற்கு குழ‌ந்தை பிற‌ந்துவிட்ட‌து என‌ அறிந்து அப்பிள்ளையின் நினைவாக‌ அவ‌ர் அனுப்பி வைக்கின்ற‌ பூக்க‌ள் நிர‌ம்பிய‌ அல்ம‌ண்ட்ஸ் (Almond Blossom) ஓவிய‌த்தில் கூட‌ அந்த‌ப் பிர‌காச‌த்தை அனுப‌விக்க‌ முடியும்.

ஆம்ஸ்ட‌டாமில் அமைந்திருக்கும் 'வான்கோ மியூசிய‌ம்' சுவார‌சிய‌ம் மிகுந்த‌தாக‌ இருந்த‌து. அங்கே வான்கோ வ‌ரைந்த‌ ஓவிய‌ங்க‌ளை ம‌ட்டுமின்றி, வான்கோவைப் பாதித்த‌ ய‌ப்பானிய‌ ஓவிய‌ங்க‌ள், வான்கோவின் பாதிப்பில் அவ‌ரைப் பின்ப‌ற்றி வ‌ரைந்த‌ ஓவிய‌ர்க‌ளின் ஓவிய‌ங்க‌ள், வான்கோவின் வாழ்க்கை வ‌ர‌லாறு என‌ப் ப‌ன்முக‌ப்ப‌ட்ட‌ காட்சிய‌றைக‌ளுட‌ன் அந்த‌ மியூசிய‌ம் இருந்த‌து. எந்த‌ உய‌ரிய‌ க‌லைஞ‌னும் வான‌த்திலிருந்து வ‌ந்து குதிப்ப‌வ‌ன‌ல்ல‌ என்ப‌த‌ற்கிண‌ங்க‌ வான்கோ ந‌க‌ல் செய்து வ‌ரைந்து ப‌ழ‌கிய ஓவிய‌ங்க‌ளும், அத‌ன் அச‌ல் பிர‌திமைக‌ளும் இந்த‌ மியூசிய‌த்தில் காண‌க்கிடைப்ப‌தென்ப‌தும் சுவார‌சிய‌மான‌து. வான்கோவின் ஓவிய‌ங்க‌ள் அவ‌ர‌து ம‌ர‌ண‌த்தின் பின் பிர‌ப‌ல்ய‌ம‌டைய‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌ தியோவின் மனைவியின் புகைப்ப‌ட‌ங்க‌ளிலிருந்து, வான்கோவின் அரிதான் ஒரு புகைப்ப‌டமும் இங்கே காண‌க்கிடைக்கின்ற‌து. அந்தக் க‌றுப்பு வெள்ளைப் புகைப்ப‌ட‌ம் தொலைவிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து; வான்கோ த‌ன் தோழியொருவ‌ருட‌ன் உரையாடிப‌டி நீண்டு விரியும் தெருவில் ந‌ட‌ந்துகொண்டிருக்கின்றார்.

பிரான்சிலிருந்த‌ கால‌ப்ப‌குதியில் வான்கோ இம்பிர‌ஸனிச (Impressionism) பாதிப்பில் ஓவிய‌ங்க‌ளை வ‌ரைய‌த் தொட‌ங்கினாலும், அவ‌ரின் ஓவிய‌ங்க‌ள் இம்பிர‌ஸனிசத்தின் பிறகான‌ கால‌த்துக்குரிய‌தாக‌ (Post Impressionism) விம‌ர்ச‌க‌ர்க‌ள் வரைய‌றுக்கின்றார்க‌ள். வான்கோ ப‌ய‌ன்ப‌டுத்தும் தூரிகையின் கீற‌ல்க‌ள் த‌னித்துவ‌மான‌வை. ஓவிய‌ங்க‌ளுக்கு அருகில் நெருங்கி நின்று பார்க்கும்போது அலைய‌லையாய், சுருள்சுருளாய் வான்கோவின் தூரிகை நிக‌ழ்த்தும் மாய‌ஜால‌ங்க‌ளை அறிந்துகொள்ள‌லாம். அதேச‌ம‌ய‌ம் எந்த‌வொரு ஓவிய‌த்தைப் பார்க்கும்போதும் அத‌த‌ற்கான‌ இடைவெளியில் நின்று பார்க்க‌வேண்டும் என்ப‌தை, வான்கோவின் 'கோதுமைவ‌ய‌லில் காக‌ங்க‌ள்' எம‌க்கு உண‌ர்த்தியிருந்த‌து. அருகில் நின்று பார்க்கும்போது சாதார‌ண‌ 'வ‌ர்ண‌ப்பூச்சாய்'த் தெரிந்த‌ இந்த‌ ஓவிய‌ம், இடைவெளியை அதிக‌ரித்த‌போது மிக‌த் த‌த்ரூப‌மான‌ ப‌டைப்பாய் ம‌ன‌தில் வியாபித்த‌தையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

முக்கிய‌மாய் அவ‌ர் உள‌விய‌ல் சிகிச்சை பெற‌த் தொட‌ங்கிய‌ கால‌த்தின் பின் அவ‌ர‌து ஓவிய‌ங்க‌ள் பெரும் மாற்ற‌த்தை அடைந்திருக்கின்ற‌ன‌. ஒரு க‌டித‌த்தில் 'நான் தூரிகையால் அல்ல‌ என‌து இத‌ய‌த்தால் வ‌ரைப‌வ‌ன்' என‌ எழுதுகின்ற‌ வான்கோவின் தூரிகையின் அலைவுறும் வ‌ர்ண‌ங்க‌ள், அவ‌ருக்குள்ளே கொந்த‌ளித்துக் கொண்டிருக்கின்ற‌ ம‌ன‌தைப் பிர‌திப‌லிப்ப‌வையாக‌க் கூட‌ இருந்திருக்க‌லாம். எப்போதும் த‌ன‌க்குள்ளிருக்கும் திற‌மையைப் பிற‌ருக்கும் ப‌கிர்ந்து கொள்ள‌வேண்டுமென‌ ஆசைப்ப‌டுகின்ற‌வ‌ராய் இருந்த வான்கோ ஓவிய‌ம் வ‌ரைவ‌த‌ற்கான‌ தாள்க‌ள்/தூரிகைக‌ள் போன்ற‌வ‌ற்றை இள‌ஓவிய‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கியிருக்கின்றார்; மேலும் தான் வ‌ரையும் ஓவிய‌ங்க‌ளை பிற‌ரும் பார்க்க‌ வேண்டுமென்ப‌த‌ற்காய் த‌ன் வீட்டு ய‌ன்ன‌ல்க‌ளில் காட்சிக்காய் வைத்துமிருக்கின்றார். அது ம‌ட்டுமின்றி ப‌ல‌ ஓவிய‌ர்க‌ளை இணைத்து கூட்டாக‌ வாழும் முறையை பிரான்சிலிருந்த‌போது ந‌டைமுறைப்ப‌டுத்த‌ முய‌ன்றிருக்கின்றார்.

இறுதியில் அவ‌ரின் க‌ன‌வுக்கு இண‌ங்கி அவ‌ர‌து இட‌த்திற்கு இன்னொரு பிர‌ப‌ல்ய‌மான‌ ஓவிய‌ரான‌ போல் காகெயின் (Paul Gaugain) வ‌ந்திருக்கின்றார். அந்த‌க் க‌ன‌வு முய‌ற்சி எப்ப‌டித் துய‌ர‌ முடிவுக்கு வ‌ந்த‌து என்ப‌தும், அத‌ன் நீட்சியில் வான்கோ த‌ன் காதை வெட்டி ஒரு பாலிய‌ல் தொழிலாளிக்குக் கொடுத்தார் என்ப‌தும் இன்னொரு கிளைக்க‌தை. காகெயின் வ‌ந்து த‌ங்கியிருந்த‌ கால‌ப் ப‌குதியில் -காகெயின் அறையை அழ‌காக்க‌த்தான்- வான்கோ த‌ன் பிர‌ப‌ல்ய‌ம் வாய்ந்த‌ சூரிய‌காந்திக‌ளை வ‌ரைய‌ந்தொட‌ங்கினார் என்ப‌தையும் நாம் நினைவு கூர்ந்துகொள்ள‌லாம்.

3.
வான்கோ மியூசிய‌த்தில் ஒரு ப‌குதியில், வான்கோ பிரான்சில் தான் இருந்த‌ அறையை வரைந்த‌ மாதிரி (Bedroom in Arles) அமைத்திருக்கின்றார்க‌ள். இந்த‌ அறையை -சிறுசிறு மாற்றங்களுடன் - மூன்றுவித‌மான‌ வ‌டிவங்களில் வான்கோ வ‌ரைந்திருக்கின்றார். அத‌ன் முத‌ல் பிர‌திமை ஆம்ஸ்ட‌டாம் மியூசிய‌த்திலும் ஏனைய‌வை பாரிஸ், சிகாகோ போன்றவ‌ற்றிலும் இருக்கின்ற‌ன. அன்றைய‌ கால‌த்தில் கான்வாஸ் தாள்க‌ளின் விலை கார‌ண‌மாக‌ அநேக‌ ஓவிய‌ர்க‌ள் தாம் ஏற்க‌ன‌வே வ‌ரைந்த‌ ஓவிய‌ங்க‌ளின் மேல் வேறு ஓவிய‌ங்க‌ளை செலவைக் குறைப்ப‌த‌ற்காய் வ‌ரைந்திருக்கின்றார்க‌ள். வான்கோவும் அவ்வாறு ஒரேதாளில் ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்திருக்கின்றார். அந்த‌ ஓவிய‌ங்க‌ளை இன்றைய‌ ந‌வீன‌ தொழில்நுட்ப‌ வ‌ச‌திக‌ளுட‌ன் எப்ப‌டிப் பிரித்தெடுத்தார்க‌ள் என்ப‌தை விரிவான‌ ப‌டிமுறையுட‌ன் வான்கோ மியூசிய‌த்தில் காட்சிப்ப‌டுத்தியிருந்தார்க‌ள். இந்த‌ விட‌ய‌த்தை விய‌ந்து சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் பேசிக்கொண்டிருந்த‌போது ஏற்க‌ன‌வே வ‌ரைந்த‌ ஓவிய‌ம் அவசியமில்லையென‌த்தானே அத‌ன் மேல் இன்னொரு ஓவிய‌த்தை வான்கோ வ‌ரைந்திருப்பார், அவ்வாறு ம‌றைந்து கிட‌க்கும் ஓவிய‌த்தைக் க‌ண்டுபிடிப்ப‌தென்ப‌து  ஓவிய‌ர் ஒருவரின் த‌னிப்ப‌ட்ட‌ உரிமையை மீறுவ‌தாக‌ அல்ல‌வா இருக்கிற‌தென‌ ஒரு ந‌ண்ப‌ர் கேட்டிருந்தார். ந‌ண்ப‌ரின் வாத‌மும் ஏற்றுக் கொள்ள‌க்கூடிய‌துதான். ஆனால் விதிவில‌க்குக‌ளும் இருக்கின்ற‌துதான் அல்ல‌வா? இல்லாதுவிட்டால் த‌ங்க‌ள் ப‌டைப்புக்க‌ளைத் தம் ம‌ர‌ண‌த்தோடு எரித்துவிட‌வேண்டும் என்று கூறிய‌ காஃப்காவையோ சிவ‌ர‌ம‌ணியையோ நாம் இன்று வாசித்துக் கொண்டிருக்க‌ முடியாத‌ல்ல‌வா?

இறுதியாய் 'ஸ்ராரி நைட்' (இது ஆம்ஸ்டடாமில் இல்லை) ப‌ற்றியும் 'கோதுமை வ‌யலில் காக‌ங்க‌ள்' ப‌ற்றியும் குறிப்பிடாம‌ல் இருக்க‌முடியாது. 'கோதுமை வ‌ய‌லில் காக‌ங்க‌ள்' வான்கோவின் இறுதிக்கால‌ங்க‌ளில் வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. மேற்கு வாழ்வில் காக‌ங்க‌ள் ம‌ர‌ண‌த்தின் குறியீடு என்ப‌தும் வான்கோ த‌ன் ம‌ர‌ண‌ம் நெருங்குவ‌தைத்தான் இவ்வோவிய‌ம் மூல‌ம் குறிப்பால் உண‌ர்த்த‌ விரும்புகின்றார் என‌வும் நாம் விள‌ங்கிக் கொள்ள‌லாம். உய‌ரிய‌ க‌லைக்கும் பித்த‌ நிலைக்கும் எப்போதும் தொட‌ர்பு இருப்ப‌து என‌று கூற‌ப்ப‌டுவ‌துபோல‌ ம‌ன‌தின் பெரும் கொந்த‌ளிப்பால் த‌த்த‌ளித்த‌ வான்கோ த‌ன் 37 வ‌ய‌தில் த‌ன்னைத் தானே சுட்டுக் கொல்கிறார். ஆனால் சூரிய‌காந்திக‌ளில், கோதுமைவ‌ய‌ல்க‌ளில், ந‌ட்ச‌த்திர‌ இர‌வுக‌ளில் த‌ன் த‌னித்துவ‌த்தை உண‌ர்ந்திப் போந்த‌ ஒரு க‌லைஞ‌ன், த‌ன் ம‌ர‌ண‌த்தின் ஒரு நூற்றாண்டு தாண்டியும் இன்றும் பிர‌காசித்துக் கொண்டிருக்கின்றான்.

------------------
நன்றி: அம்ருதா (பெப்ரவரி/2012)
ஓவியங்கள்: வான்கோ

ஒரு க‌விதை: மூன்று த‌மிழாக்க‌ம்

Wednesday, November 16, 2011

Midwinter
by Thomas Transtromer

A blue glow
Streams out from my clothes.
Midwinter.
A clinking tambour made of ice.
I close my eyes.
Somewhere there's a silent world
And there is an opening
Where the dead
Are smuggled over the border.

[Translated from the Swedish by Robert Bly]

இடைப‌னிக்கால‌ம்

ஒரு நீல‌ ஒளிர்வு
என‌தாடைக‌ளிலிருந்து பிர‌வாகித்து வ‌ருகிற‌து.
இடைப‌னிக்கால‌ம்.
க‌ணீரெனும் ராம்போரின் ப‌னியாலான‌து
நானென‌து விழிக‌ளை மூடுகின்றேன்
எங்கேயோ இருக்குமோர் நிச‌ப்த‌ உல‌கில்
ஓரு திற‌ப்புள‌து
அங்கே இற‌ந்த‌ உட‌ல்க‌ள்
எல்லை தாண்டிக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.
..............

இம்மாத‌க் கால‌ச்சுவ‌டை இணைய‌த்தில் மேய்ந்து கொண்டிருந்த‌போது த‌ற்செய‌லாய் சுகுமார‌ன் மொழிபெய‌ர்த்திருந்த‌ தோம‌ஸ் (டி)ரான்ஸ்ரோம‌ரின் (Thomas Transtromer)க‌விதைக‌ளை வாசித்தேன். சுவீட‌னைச் சேர்ந்த‌ க‌விஞ‌ரான‌ ரான்ஸ்ரோம‌ர் இம்முறை இல‌க்கிய‌த்திற்கான‌ நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். சுகுமார‌னின் மொழிபெய‌ர்ப்பை வாசித்த‌போது, இக்க‌விதைக‌ளில் சில‌வ‌ற்றை ஏற்க‌ன‌வே த‌மிழில் வாசித்த‌ நினைவு வ‌ர‌ ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தைத் தோண்டினேன். அங்கே கார்த்திக் என்ப‌வ‌ரும் ஏற்க‌ன‌வே மொழிபெய‌ர்த்திருந்த‌தை ஜெய‌மோக‌ன் ப‌கிர்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்தேன்.

சுகுமார‌ன், கார்த்திக் இர‌ண்டு பேரின‌தும் த‌மிழாக்க‌ங்க‌ளை வாசித்த‌பின், இந்த‌க் க‌விதையை நான் த‌மிழாக்க‌ம் செய்தால் எப்ப‌டியிருக்குமென‌ முய‌ற்சித்துப் பார்த்தேன். பிற‌கு அந்த‌ த‌மிழாக்க‌த்தை என‌து ந‌ண்ப‌ருக்கு வாசிக்க‌ச் சொல்லி அனுப்பியிருந்தேன். அவ‌ர் சில‌ திருத்த‌ங்க‌ளை செய்திருந்தார். அதைவிட‌ இன்னொரு சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம் அவ‌ரும் இப்போது சுவீட‌னில்தான் இருக்கின்றார்.

உண்மையில் க‌விதைக‌ளைத் த‌மிழாக்க‌ம் செய்த‌தைவிட‌, க‌விதையை முன்வைத்து எங்க‌ளுக்கிடையில் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல் இன்னும் சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. ஒரு கவிதை -முக்கிய‌மாய் வேறொரு மொழி/க‌லாசார‌ப் பின்ன‌ணியில் வ‌ருகின்ற‌ ப‌டைப்பு- ப‌ல்வேறு வ‌கையில் வாசிக்க‌க் கூடிய‌தாக‌ இருப்ப‌து..., அதைத் த‌மிழாக்க‌ம் செய்கையில் ந‌ம் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலைக்கு ஏற்ப‌ எவ்வாறு வேறுப‌ட‌க்கூடுமென‌... ப‌ல்வேறுபுள்ளிக‌ளில் நின்று யோசிக்க‌ முடிந்திருந்த‌து.

இந்த‌ 'இடைப‌னிக்கால‌ம்' என்கின்ற‌ க‌விதை முற்றுமுழுதாக‌ ஒரு ப‌னிக்கால‌ப் பின்ன‌ணியைக் கொண்டுவ‌ருகின்ற‌து.  இந்த‌ப் பனிக்கால‌ம் எந்த‌ உண‌ர்வை சுகுமார‌னுக்கோ, கார்த்திக்கிற்கோ கொடுக்கின்ற‌தோ தெரியாது அதை ஒவ்வொரு வ‌ருட‌மும் அனுப‌விக்கும் சூழ‌லில் வாழும் என‌க்கு அது என் வாழ்வில் ஒரு ப‌குதியை பிர‌திப‌லிப்ப‌து போல‌த் தோன்றிய‌து.

ப‌னிக்கால‌ம் என்ப‌தே அநேக‌ம் இருளாக‌வும் -கோடைகால‌த்தைப் போன்ற‌ல்லாது- மிக‌ அமைதியாக‌வும் இருக்கும். அப்ப‌டியெனில் ஏன் ஒரு ராம்போரின் ஒலியை இங்கே க‌விஞ‌ர் கொண்டுவ‌ருகின்றார் என‌ யோசித்தேன். அதுவும் முக்கிய‌மாய் அடுத்த‌டுத்த‌ வ‌ரிக‌ளில் நிச‌ப்த‌ உல‌கைப் பேசும் க‌விஞ‌ர் ஏன் 'ஒலி'யைக் கொண்டுவ‌ருகின்றார் என‌  நானும் ந‌ண்ப‌ரும் விவாதித்திருக்கின்றோம். தோல் வாத்திய‌வ‌கையைச் சேர்ந்த‌ ராம்பூரில் எப்ப‌டி 'Clinking ' ஓசை வ‌ருகின்ற‌து என்ப‌து இன்ன‌மும் யோசிக்க‌வைத்த‌து. உலோக‌வகை வாத்திய‌ங்க‌ளில் அல்ல‌வா 'Clinking' ச‌த்த‌ம் பொதுவாக‌க் கேட்கும்.

என‌க்கு மிருத‌ங்க‌த்தில் இருக்கும் சொற்ப‌ அனுப‌வ‌த்தை வைத்து, பிற‌கு  இதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.. மிருத‌ங்க‌த்தின் தொட‌க்க‌ப் பாட‌மாய் என‌க்கு க‌ற்பித்து த‌ந்த‌ 'தா/தீ/தொம்/ந‌ம்' இல் வ‌ரும் 'ந‌ம்' ற்கு நாம் சுட்டுவிர‌லால் அடிக்கும்போது, தொட‌ர்ந்து அதிரும் ஒரு ஒலி வ‌ரும். ஆக‌, தோல் வாத்திய‌த்தில்கூட‌ இந்த‌ க‌ணீரென்று ஒலிக்கும் ச‌த்த‌த்தைக் கொண்டுவ‌ரலாம் என‌ நினைக்கின்றேன். இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌தென்றால் முக்கிய‌மாய் இந்த‌க் க‌விதைக‌ளை தொட‌க்க‌த்தில் ஜெய‌மோக‌னின் த‌ள‌த்தில் வாசித்திருக்கின்றேன் என்ப‌தால், அவ‌ரைச் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ இந்த‌ உதார‌ண‌த்தை எடுத்துக் கொள்கின்றேன்.  நாம் 'ஓம்' என்று உச்ச‌ரிக்கும்போது 'ம்' ஐ நீண்ட‌நேர‌த்திற்கு உச்ச‌ரித்தால் ஒரு ஒலி வ‌ருமே.  அவ்வாறு ச‌ட்டென்று ஒரு அடி அடித்துவிட்டு கைக‌ளை ராம்போரிலோ/த‌பேலாவிலோ இருந்து எடுத்துவிட்டால் தொட‌ர்ந்து அதிர்ந்துகொண்டிருக்கும்.அதைத்தான் இங்கே க‌விஞ‌ர் உண‌ர்த்துகின்றார் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ அதிர்வும் சூழ்ந்திருக்கும் ப‌னிக்கால‌நிலையும் அவ‌ர‌து க‌ண்க‌ளை மூடி ம‌ன‌தைப் பார்க்க‌ வைக்கின்ற‌து.

அடுத்து 'Opening' என்ப‌த‌ற்கு 'திற‌ப்பு' என்ப‌தை பாவித்திருக்கின்றேன், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 'விரிச‌ல்', 'பிள‌வு' என்ப‌தைப் பாவித்திருக்கின்றார்க‌ள்.  அது ம‌ர‌ண‌த்திற்கு பின் ந‌ம‌க்கு என்ன‌ நிகழ்கிற‌து என்ப‌து தெரியாத‌தால் 'திற‌ப்பு' என‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தல் பொருத்த‌மாய் இருக்கும் என்ப‌து என் துணிபு.    இந்த‌ அடிப்ப‌டையிலேயே என் த‌மிழாக்க‌ம் இருந்த‌து.  நிச்ச‌ய‌ம் நான் வாசிப்ப‌துபோல‌த்தான் இந்த‌க் க‌விதை இருக்க‌வேண்டுமென்றில்லை. நான் எப்ப‌டி வாசித்தேன், எத‌ன‌டிப்ப‌டையில் த‌மிழாக்கினேன் என்பத‌ற்கே இந்த‌க் குறிப்பு.

இறுதியில் இவ்வாறு இந்த‌க் க‌விதையை விரிவாக‌ வாசிக்க‌ உந்தித்த‌ள்ளிய‌ சுகுமார‌ன் ம‌ற்றும் கார்த்திக்கின் மொழிபெய‌ர்ப்புக்க‌ளுக்கு ந‌ன்றி. இந்த‌க் க‌விதையை நாங்க‌ள் மூன்று பேரும் வாசித்து விள‌ங்கிக்கொண்ட‌து போல‌வ‌ன்றி நீங்க‌ளும் வேறுவ‌கையில் வாசிக்க‌லாம்/வாசித்திருக்க‌லாம்.

இக்க‌விதையை த‌மிழாக்க‌ம் செய்த‌போது, ஒரு சிறுக‌விதை எவ்வ‌ள‌வு விரிவான‌ வாசிப்பைத் த‌ருகின்ற‌து என‌த்தான் விய‌ந்தேன். மேலும் இப்போது இங்கும் ப‌னிக்கால‌மாய் இருப்ப‌தால் இந்த‌க் க‌விதை இன்னும் நெருக்க‌த்தை உண‌ர்த்திற்றோ தெரிய‌வில்லை.


நன் பனிக்காலம்
-தமிழாக்க‌ம்; சுகுமார‌ன்

ஒரு நீல வெளிச்சம்
என் ஆடைகளிலிருந்து கதிர்வீசுகிறது
நன்பனிக் காலம்
பனிக்கட்டிகளின் டாம்போரின்களின்* ஓயாத பேச்சு
என் விழிகளை மூடுகிறேன்

மரித்தவர்கள்
எல்லை தாண்டிக் கடத்தப்படும்
பிளவு இருக்கிறது அங்கே
அங்கே இருக்கிறது ஓர் ஒலியற்ற உலகம்.

* டாம்போரின் - கஞ்சிரா போன்ற தாளவாத்தியம்.
.....

இடைகுளிர்காலம்(Midwinter)
-த‌மிழாக்க‌ம்: கார்த்திக்

என் உடைகளிலிருந்து
நீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது
இடைகுளிர்காலம்

பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு

கண்களை மூடிக்கொள்கிறேன்
அங்கொரு நிசப்த உலகுண்டு
இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்
ஒரு விரிசல் இருக்கிறது

டாம்பொரின்* கஞ்சிரா போன்றது

.............
ஆங்கில‌த்தில் ரான்ஸ்ரோம‌ரின் க‌விதைக‌ளையே மொழிபெய‌ர்த்த‌  Robert Blyன்   க‌விதைக‌ளையே என‌து த‌மிழாக்க‌த்திற்கு எடுத்துக் கொண்டேன். சில‌வேளைக‌ளில் சுகுமார‌னோ, கார்த்திக்கோ வேறு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பிலிருந்து த‌மிழாக்க‌ம் செய்திருக்க‌லாம் என்ப‌தையும் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.
.................

முத‌ல் க‌விதையைத் த‌மிழாக்கிய‌போது வ‌ந்த‌ உற்சாக‌த்தில் இக்க‌விதையையும் த‌மிழாக்க‌ம் செய்தேன்.

April and Silence
 by Tomas Tranströmer

Spring lies abandoned.
A ditch the color of dark violet
moves alongside me
giving no images back.

The only thing that shines
are some yellow flowers.

I am carried inside
my own shadow like a violin
in its black case.

The only thing I want to say
hovers just out of reach
like the family silver
at the pawnbroker’s.

~ from The Winged Energy of Delight, Selected
Translations, Robert Bly (Perennial, 2004)


இள‌வேனிலும் அமைதியும்

வ‌ச‌ந்த‌ம் கைவிட‌ப்ப‌ட்டுக் கிட‌க்கிற‌து.
அட‌ர்ந்த‌ ஊதாக் கால்வாய்
எதையும் பிர‌திப‌லிக்காது
ந‌க‌ர்கிற‌து என்னோடு.

ஒளிர்வ‌ன‌
சில‌ ம‌ஞ்ச‌ட் பூக்க‌ள் ம‌ட்டுமே

க‌றுப்புப் பெட்டிக்குள்
வைக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ய‌லினைப் போல‌
என‌து நிழ‌லுக்குள் நான் காவ‌ப்ப‌டுகின்றேன்.

நான் கூற‌விரும்பும் ஒரேயொரு விட‌ய‌மும்
அட‌குக்க‌டையில் வைத்த‌
வீட்டு வெள்ளி போல‌
அடைய‌முடியாத் தூர‌த்தில் மின்னுகின்ற‌து.

ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்'

Friday, November 04, 2011

After Dark by Haruki Murakami

1.
ஹ‌ருக்கி முர‌காமியின் 'இருளின் பின்' (After Dark), ஒருநாளின் ந‌ள்ளிர‌விலிருந்து விடியும் வ‌ரை ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளைக் கொண்ட‌ ஒரு நாவ‌லாகும். இந்நாவ‌லில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப‌படும் எல்லாக் க‌தாபாத்திர‌ங்க‌ளும் அவ‌ர்க‌ள் அறிந்தோ அறியாம‌லோ இன்னொரு பாத்திர‌த்தை/நிக‌ழ்வைப் பாதிக்கின்ற‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். இக்க‌தையில் மேரி, எரி என்கின்ற‌ இரு ச‌கோத‌ரிக‌ளைச் சுற்றியே க‌தை நிக‌ழ்கின்ற‌து. மேரி என்கின்ற‌ 19வ‌ய‌து இளைய‌ ச‌கோத‌ரி, ரோக்கியோவின் க‌ளியாட்ட‌ப் ப‌குதியுள்ள‌ ஓர் உண‌வ‌க‌த்தில் யாருக்காவோ/எத‌ற்காக‌வோ காத்திருப்ப‌துட‌ன் தொட‌ங்கும் க‌தை,  இறுதியில் மேரி அடுத்த‌ நாள் காலை த‌ன் வீட்டுக்குத் திரும்புவ‌துட‌ன் முடிவ‌டைகிற‌து. இந்த‌ இடைவெளியில் அவ‌ர் ச‌ந்திக்கும் ம‌னித‌ர்க‌ள் ம‌ற்றும் நிக‌ழும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் மிகுந்த‌ சுவார‌சிய‌மாக‌ இந்நாவ‌லில் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து.

மேரிக்கு எரி என்கின்ற‌ மூத்த ச‌கோத‌ரி ஒருவ‌ர் இருக்கின்றார். அவ‌ரைப் போன்று தான் மிகுந்த‌ அழகில்லை என்கின்ற‌ எண்ண‌மும் மேரிக்கு இருக்கின்ற‌து. த‌ம‌க்கை வ‌ச‌தியான‌ ஜ‌ப்பானிய‌ர்க‌ள் ப‌டிக்கும் க‌ல்லூரிக்குக் க‌ற்க‌ப்போக‌, அங்கே க‌ற்ப‌து பிடிக்காத‌ மேரி சீன‌க்குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பியிருக்கும் ப‌குதியிலுள்ள‌ ஒரு சீனக்க‌ல்லூரிக்குப் ப‌டிக்க‌ப் போகின்றார்.  அழ‌கான‌ எரி த‌ன் இள‌ம்வ‌ய‌திலேயே ப‌தின்ம‌ர்க‌ளுக்கான‌ ச‌ஞ்சிகைக‌ளில் மொட‌லிங் செய்ப‌வ‌ராக‌, ரிய‌லிட்டி ரீவிக்க‌ளின் நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ராக‌ புக‌ழ்பெற்று விடுகின்றார். சீன‌ப் ப‌ள்ளிக்குப் போகும் மேரி சீன‌மொழியில் பேசுவ‌தில் வ‌ல்ல‌வ‌ராய் இருப்ப‌துட‌ன், த‌ன் த‌ம‌க்கைக்கு நேர் எதிரான‌ குண‌ங்க‌ளுடைய‌வ‌ராக‌ இருக்கிறார்.

த‌ன் வீட்டை விட்டு ஓடிவ‌ந்திருக்கின்றாரா அல்ல‌து யாரையாவ‌து ச‌ந்திக்க‌ வ‌ந்திருக்கின்றாரா என்கின்ற‌ எவ்வித‌த் தெளிவும் இல்லாது, க‌ஃபேயில் ஆறுத‌லாக‌ புத்த‌க‌ம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவ‌ராக‌ மேரி, ஹ‌ருக்கி முர‌காமியால் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். அங்கே த‌ற்செய‌லாய் ஓரு இளைஞ‌னை மேரி ச‌ந்திக்கின்றார். அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரியை அறிந்த‌வ‌ன். மேலும் மேரியையும், எரியோடு சேர்த்து சில‌வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் நேர‌டியாக‌ச் ச‌ந்தித்துமிருக்கின்றான். ஆனால் மேரிக்கு இந்த‌ இளைஞனை அவ்வ‌ள‌வு ஞாப‌க‌ம் இல்லை. இளைஞ‌ன் மேரியோடு பேசுவ‌தில் ஆவ‌லாக‌ இருப்ப‌வ‌னாயிருப்பினும் மேரிக்கு அவ‌னோடு அள‌வ‌ளாவுவ‌தில் அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை. இளைஞ‌ன், எரி இப்போது எப்ப‌டி இருக்கின்றார் என‌க் கேட்கிறார். மேரி, தன் ச‌கோத‌ரி நீண்ட உற‌க்க‌த்தில் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் இருக்கின்றார் என்கின்றார்.  இதைக் கேட்கும் அந்த‌ இளைஞ‌னுக்கு ம‌ட்டுமில்லை, வாசிக்கும் ந‌ம‌க்கும் எப்ப‌டி ஒருவ‌ர் இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் -கோமாவும் இல்லாம‌ல்- நீண்ட‌ உற‌க்க‌த்திலிருக்க‌ முடியும் என்ற‌ விய‌ப்பு ஏற்ப‌டுகிற‌து.

இப்போது க‌தை மூத்த‌ ச‌கோத‌ரியான‌ எரியை நோக்கித் திரும்புகின்ற‌து. அவ‌ர் மேரி கூறிய‌தைப் போல‌வே நீண்ட‌ தூக்க‌த்திலேயே இருக்கின்றார். வாசிக்கும் எம்மை ந‌க‌ரும் விடீயோக் க‌ம‌ராவைப் போல‌ எரியை அவ‌தானிக்கும்ப‌டி முர‌காமி அழைத்துச் செல்கின்றார். எரியுட‌ன் அவ‌ரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ம‌னித‌னும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றான். அவ‌னுக்கு வாசிக்கும் எங்க‌ள் வ‌ச‌திக்காய் 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்' (The man without face ) என‌ ஒரு பெய‌ரை முர‌காமி த‌ருகின்றார்.  ஏன் எரி இப்ப‌டி நீண்ட‌ தூக‌த்தில் இருக்கின்றார்? யார் அந்த‌ 'முக‌மில்லாத‌ ம‌னித‌ன்'?  நாவ‌ல் முடியும்வ‌ரை அவை சுவார‌சிய‌மான‌ புதிர்க‌ளாய் அவிழ்க்க‌ப்ப‌டாம‌ல் இருக்கின்ற‌ன‌.

இப்போது மீண்டும் க‌தை, க‌ஃபேயிலிருக்கும் மேரியை நோக்கித் திரும்ப‌ தொட‌ங்குகின்ற‌து.  வ‌ந்த‌ இளைஞ‌ன், தான் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்ந‌ள்ளிர‌வு முழுக்க‌ இசைநிக‌ழ்வுக்காய் ப‌யிற்சி எடுக்க‌ப்போகின்றேன் என‌வும் பயிற்சியின்போது இன்னொரு இடைவெளி எடுக்கும்போது மேரி க‌ஃபேயிலிருந்தால் வ‌ந்து தான் ச‌ந்திப்ப‌தாக‌வும் கூறி விடைபெறுகின்றான். நேர‌ம் ந‌ள்ளிரவைத் தாண்டியும் விட்ட‌து. ந‌க‌ரிலிருந்து புற‌ப்ப‌டும் க‌டைசி ரெயினும் போய்விட்ட‌து. இனி விடிகாலை வ‌ரை மேரி த‌ன் வீட்டுக்குத் திரும்ப‌முடியாது என்ப‌தும் அந்த‌ இளைஞ‌னுக்குத் தெரியும்.

மேரி இப்போது ஏற்க‌ன‌வே தான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்த‌க‌த்தில் ஆழ்ந்துவிடுகின்றார். அப்போது அசாதார‌ண‌ உய‌ர‌மும், எடையும் கொண்ட‌ ஒரு பெண்ம‌ணி மேரியைத் தேடி அந்த‌க் க‌ஃபேயிற்கு வ‌ருகின்றார். மேரியிட‌ம், தான் ஒரு சிக்க‌லில் மாட்டிக்கொண்டிருக்கின்றேன், உன‌க்குச் சீன‌மொழி பேச‌முடியுமென‌ உன்னை ஏற்க‌ன‌வே ச‌ந்தித்துச் சென்ற‌ இளைஞ‌ன் கூறியிருக்கின்றான். உன்னால் என‌க்கொரு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ இருந்து உத‌வ‌முடியுமா? என‌க் கேட்கின்றார். இத‌ற்கு முன் அறிமுக‌மேயில்லாத‌ பெண்ணோடு மொழிபெய‌ர்ப்பாள‌ராக‌ச் செல்வ‌தா அல்ல‌து வேண்டாமா என‌ மேரி முத‌லில் யோசித்தாலும் ஹ‌ரோக்கி என்கின்ற‌ அப்பெண்ம‌ணியோடு அவ‌ர் நிர்வாகிக்கும் 'ல‌வ்' ஹொட்ட‌லுக்குச் செல்கின்றார்.

போகும் வ‌ழியில் ஹ‌ரோக்கி தான் ஒரு ம‌ல்யுத்த‌ வீராங்க‌னையாக‌ (Wrestler)  இருந்த‌தாக‌வும் போட்டிக்களுக்காய்ப் ப‌ல‌ நாடுக‌ளுக்குச் சென்ற‌தாக‌வும், ஒரு நிக‌ழவில் த‌ன் முள்ள‌ந்த‌ண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து போட்டிக‌ளில் தொட‌ர்ந்து ப‌ங்குபெற‌ முடியாம‌ல் போய்விட்ட‌து என்கின்றார். இப்போது வ‌ருமான‌ம் ஏதுமில்லாம‌ல், இந்த‌ ல‌வ் ஹொட்ட‌லை நிர்வகிப்ப‌வ‌ராக‌ வேலை செய்கின்றார் என‌வும் கூறுகின்றார் ஹ‌ரோக்கி. மேலும், 'இந்ந‌க‌ரில் ந‌ள்ளிர‌வில் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றாய்?' என‌ மேரியிட‌மும் கேட்கின்றார். மேரி மெள‌ன‌மாய் இருப்ப‌தைப் பார்த்து, 'உன்னைப் போன்றே பதின்ம‌ங்க‌ளைத் தாண்டியே நானும் வ‌ந்திருக்கின்றேன். உன்னைப் போன்ற‌ பெண்க‌ள் இக்க‌ளியாட்ட‌ப் பிர‌தேச‌ங்க‌ளுக்கு ந‌ள்ளிர‌வுக‌ளில் வ‌ர‌க்கூடாது. எதுவுமே ந‌ட‌க்க‌லாம். ப‌க‌லில் பார்க்கும் இட‌ம் போல‌ இது இர‌வில் இருப்ப‌தில்லை. இர‌வில் இத்த‌கைய‌ இட‌ங்க‌ள் இன்னொரு முக‌மூடியை அணிந்துகொள்கின்ற‌ன‌' என்கிறார் ஹ‌ரோக்கி. மேலும் தான் நிர்வாகிக்கும் ல‌வ் ஹோட்ட‌ல்க‌ளில் அநேக‌மாய் இர‌வைக் க‌ழிக்க‌ இணைக‌ளும், பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளுமே வ‌ருவார்க‌ள் என‌வும் கூறுகின்றார்.

2.
ல‌வ் ஹொட்ட‌லின் நான்காம் மாடியில், சீன‌மொழி ம‌ட்டும் பேச‌க்கூடிய‌ பெண் அடிவாங்கி இர‌த்த‌க் காய‌ங்க‌ளோடு மூலையில் ஒடுங்கிக்கிட‌க்கிறார்.  மேரி, தான் பொலிஸின் ஆளில்லை, த‌ன்னை ந‌ம்பிக் க‌தைக்க‌லாம் என்கின்ற‌போதும் முத‌லில் அந்த‌ச் சீன‌ப் பெண் த‌ய‌ங்குகின்றார். இறுதியில் அந்த‌ப்பெண் தான் இந்த‌ நிலைக்கு வ‌ந்த‌ நிலைமை ப‌ற்றிக் கூறுகின்றார். பாலிய‌ல் தொழில் செய்வ‌த‌ற்கென‌ ஜ‌ப்பானில் இய‌ங்கும் ஒரு சீன‌க்குழுவால் அவ‌ர் ஜ‌ப்பானுக்கு க‌ள்ள‌மாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். அந்த‌ப் பெண்ணுக்கும் மேரியின் வ‌ய‌தே இருப்ப‌தால் மேரிக்கும் அவ‌ர் மீது ஒருவித‌ப் ப‌ரிவு வ‌ருகிற‌து.

அன்று வாடிக்கையாள‌ரோடு வ‌ந்த‌ இப்பெண்ணுக்கு மாதாந்த‌ உதிர‌ப்பெருக்கு ஏற்ப‌ட்டுவிட‌, வாடிக்கையாள‌ ஆண் கோப‌த்தில் இவ‌ரைத் தாக்கிவிட்டு இவ‌ர‌து உடைக‌ள் உட்ப‌ட‌ அனைத்து உடைமைக‌ளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கின்றார். உடைகளை எடுத்துச் சென்ற‌துகூட‌ -இந்த‌ வ‌ன்முறையை- உட‌னேயே வேறு யாருக்குத் தெரிவித்து எவ‌ரும் வ‌ந்துவிட‌க்கூடாது என்கின்ற‌ முற்பாதுகாப்பிற்காக‌வே ஆகும். ஆடைக‌ளில்லாதுவிடின் உட‌னேயே வெளியே ஓடிப் போய் இப்பெண் எவ‌ரிட‌மும் உத‌வி கேட்க‌முடியாத‌வ‌ல்ல‌வா?

இறுதியில் அப்பெண்ணுக்கு மாற்றுடை கொடுத்து, அவ‌ர் யாருடைய‌ க‌ட்டுப்பாட்டில் இருக்கின்றாரோ அந்த‌ச் சீனக்குழுவுக்கும் செய்தி கொடுக்க‌ப்ப‌ட்டு அப்பெண்ணை அந்த‌க்குழு பொறுப்பெடுத்துக் கொள்கின்ற‌து. த‌ன‌து ஹொட்ட‌ல் அறைக்கு உரிய‌ ப‌ண‌ம் த‌ராத‌ற்கு ம‌ட்டுமின்றி, ஒரு பெண்ணின் மீது மூர்க்க‌த்த‌ன‌மாய் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌த‌ற்குமாய் அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென‌ வீறாப்பில், ஹ‌ரோக்கி பாதுகாப்புக் க‌ம‌ராக்க‌ளை பின்னோக்கிச் சுழ‌ற்றி அந்த‌ வாடிக்கையாள‌ரைக் க‌ண்டுபிடித்து ப‌ட‌த்தைப் பிர‌தி எடுத்தும் கொள்கின்றார். மேலும் சீன‌க்குழுவிற்கும் தொலைபேசி அழைத்து அந்த‌ வாடிக்கையாள‌ர் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்ப‌த‌ற்காய் அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தையும் அவ‌ர்க‌ளிட‌ம் ஹ‌ரோக்கி கொடுத்துவிடுகின்றார்.

இத‌ற்கிடையில் மேரியைக் கொண்டுபோய் க‌ஃபேயில் மீண்டும் விட்டுவிடும் ஹ‌ரோக்கி, இர‌வில் த‌ங்குவ‌த‌ற்கு ஓரிட‌ம் வேண்டுமென்றால் த‌ன் ஹொட்ட‌லுக்கு எந்த‌ நேர‌மும் வ‌ர‌லாம் என‌ அழைப்பையும் விட்டுச் செல்கின்றார். மீண்டும் தேநீரும்,பாட‌லும், புத்த‌க‌ம் வாசிப்ப‌துமாய் மேரி இருக்க‌, இசைப் ப‌யிற்சிக்குப் பின்பான‌ இடைவேளையில் முத‌லில் மேரியைச் ச‌ந்திக்க‌ அந்த‌ இளைஞ‌ன் வ‌ருகின்றான். அவ‌ன், தான் இனி இசைக்குழுவை விட்டு முற்றுமுழுதாக‌ வில‌கி, விரைவில் ச‌ட்ட‌ம் ப‌டிக்க‌ப் போவ‌தாய்க் கூறுகின்றான். அதைத் தேர்ந்தெடுத்த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளையும், த‌ன் எதிர்கால‌க் க‌ன‌வுக‌ளையும் மேரியுட‌ன் ப‌கிர்கிறான். மேரி முத‌ற் ச‌ந்திப்பைப் போல‌வ‌ன்றி, இப்போது அவ‌னோடு அளவ‌ளாவ‌த் தொட‌ங்குகின்றார். அப்போதுதான், அவ‌ன் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ஒருநாள் த‌ன்னோடு சில‌ த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌கிர்ந்தாள் என்கின்ற‌ விட‌ய‌த்தைக் கூறுகின்றான். அத்துட‌ன் அவ‌ள் நிறைய‌ மாத்திரைக‌ளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றாள் என்ப‌தையும் தெரிவிக்கின்றான். மேரிக்கு த‌ன் த‌ம‌க்கை எளிதில் வெளிவ‌ர‌முடியாத‌ பெரும் சிக்க‌லில் மாட்டியிருக்கின்றாள் என்ப‌து விள‌ங்குகின்ற‌து.

3.
க‌தை இப்போது சீன‌ப்பெண்ணை மூர்க்க‌மாய்த் தாக்கிய‌ வாடிக்கையாள‌னைச் சுற்றி ந‌கர‌த்தொட‌ங்குகின்ற‌து. அவ‌னொரு மென்பொருள் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கின்றான். அதிக‌மாய் இர‌வில் த‌ன் வேலைத்த‌ல‌த்தில் த‌ங்கி நெடுநேர‌ம் வேலை செய்யும் ஒருவ‌னாக‌ இருக்கின்றான். அன்றும் த‌ன‌க்குக் கிடைத்த‌ இடைவெளியில்தான் சீன‌ப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு ல‌வ் ஹொட்ட‌லுக்குப் போயிருக்கின்றான். மீண்டும் த‌ன் வேலைத்த‌ள‌த்திற்கு வ‌ரும் அவ‌ன் நிதான‌மாக‌ வேலையை முடித்து, யோகா செய்து ச‌வ‌ர‌ஞ்செய்து வீட்டுக்குப் புற‌ப்ப‌டுகின்றான். போகும்வ‌ழியில் ம‌னைவி பால் வாங்கி வ‌ர‌ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. பால் வாங்கும் க‌டையின் முன்னாலிருக்கும் குப்பை போடும் இட‌த்தில், தான் அப‌க‌ரித்து வ‌ந்த‌ சீன‌ப்பெண்ணின் ஆடைக‌ள் தோற்பை உள்ளிட்ட‌ எல்லாவ‌ற்றையும் வேறொரு பையினுள் பாதுகாப்பாய்ப் போட்டு வைத்துவிடுகின்றான். ஆனால் அந்த‌ப் பெண்ணின் கைத்தொலைபேசியை ம‌ட்டும் வேண்டுமென்றே க‌டையிலுள்ள‌ விற்ப‌னை பொருட்க‌ளிடையே ம‌றைத்து வைத்தும் விடுகின்றான்.

மேரியோடு க‌தைத்துக் கொண்டிருந்த‌ இளைஞ‌ன் மீண்டும் இசைப்ப‌யிற்சி செய்வ‌த‌ற்காய்த் திரும்புகின்றான். மேரியை காலைச் சாப்பாட்டுக்காய்க் கூட்டிக்கொண்டு போக‌ விரும்புவ‌தாய்க் கூறிவிட்டுப் போகின்றான். அவ‌னும் சில‌ பொருட்க‌ளை வாங்க‌ வேண்டி க‌டையொன்றுக்குப் போக, அந்த‌க்க‌டையில் ம‌றைத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கைத்தொலைபேசி ஒலிக்க‌, யாரோ த‌வ‌றவிட்டுச் சென்றுவிட்டார்க‌ள் போலும், போனைத் தேடுகின்றார்க‌ள் போலும் என‌ தொலைபேசி அழைப்பை எடுக்கின்றான். எதிர்முனையில், 'நீ என்ன‌ செய்துவிட்டுப் போனாய் என்று எங்க‌ளுக்குத் தெரியும், இத‌ற்கான‌ விலையை நீ ஒருநாள் கொடுப்பாய்' என‌ அச்சுறுத்தும் குர‌ல் கேட்கின்ற‌து. இந்த‌ இளைஞ‌னுக்கு விய‌ப்பாயிருக்கிற‌து. த‌ன் நிலையை விள‌ங்க‌ப்ப‌டுத்த‌வும் அவ‌னுக்கு எதிர்முனையில் பேசிய‌வ‌ன் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுக்க‌வில்லை. ப‌ய‌த்தோடும் ப‌த‌ற்ற‌த்தோடும் அந்த‌க்க‌டையை விட்டு இந்த‌ இளைஞ‌ன் ந‌க‌ர்ந்து செல்கின்றான்.

...இவ்வாறாக‌ நாவ‌ல் இன்னும் நீளும். ஹ‌ருக்கி முர‌காமியின் நாவ‌ல்க‌ளில் வ‌ரும் முக்கிய‌ ஆண்பாத்திர‌ங்க‌ள் அநேகமாய் த‌னிமைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாய் அல்ல‌து த‌னிமையை விரும்புவ‌ர்க‌ளாய் இருப்ப‌வ‌ர்க‌ளாய் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தைப் போல‌ இதில் வ‌ரும் இளைஞ‌னும் இருக்கின்றான். முக்கிய‌மாய் பெண்க‌ள் மீது ஈர்ப்பிருப்பவ‌ர்க‌ளாய் இருப்பினும் அவ‌ர்க‌ளை க‌வ‌ர‌முடியாத் தாழ்வுண‌ர்ச்சியுட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளாய் முர‌காமியின் அநேக ஆண்பாத்திர‌ங்க‌ள் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கும். இந்நாவ‌ல் ந‌ள்ளிர‌வில் தொட‌ங்கி விடிகாலையில் முடியும் குறுகிய‌ கால‌ப்ப‌குதிக்குரிய‌ க‌தை என்றாலும் ஹ‌ருக்கி முர‌காமி த‌ன் எழுத்தால் எம்மையும் அந்த‌ச் சூழ‌லுக்குள் ஒரு பார்வையாள‌ரைப் போல‌ ஆக்கிவிடுகின்றார்.

மேரி ஒவ்வொரு பாத்திர‌த்தையோ, ச‌ம்ப‌வ‌ங்க‌ளையோ ச‌ந்திக்கும்போது ந‌ம‌க்கு அடுத்து என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகின்ற‌தோ என்கின்ற‌ ப‌த‌ற்ற‌ம் வ‌ந்துவிடுகின்ற‌து. அதேபோல் மேரியின் ச‌கோத‌ரியான‌ எரி ப‌ற்றி விப‌ரிக்கப்ப‌டும்ப‌குதிக‌ள் முழுதுமே ஒருவித‌ மாய‌ ய‌தார்த்த‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருக்கும். மேரி, எரி த‌ங்க‌ள் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார் என‌த்தான் கூறுகின்றார். அப்ப‌டியாயின் அவ‌ர் தூங்குவ‌தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த‌ 'முக‌ம‌ற்ற‌ ம‌னித‌ன்' யார்? அதும‌ட்டுமில்லாது ஒரு அத்தியாய‌த்தில், தூக்க‌த்திலிருந்து ச‌ற்று விழிக்கும் எரி, நில‌த்திலிருக்கும் ஒரு பென‌சிலை எடுக்கின்றார். பிற‌கு பார்த்தால் அதே பென்சிலே சீன‌ப்பெண்ணைத் தாக்கிய‌ வாடிக்கையாள‌ன் வேலை செய்யும் மேசையில் இருப்ப‌தாய்க் கூற‌ப்ப‌ட்டிருக்கும். இவ்வாறாக‌ எரியின் உற‌க்க‌மே ப‌ல்வேறு வித‌மான‌ விசித்திர‌ப்புதிர்க‌ளால் நெய்ய‌ப்ப‌ட்டிருக்கும். இருநூறு ப‌க்க‌ங்க‌ளுக்கும் குறைவான‌ நாவ‌ல் என்றாலும் வாசிப்புச் சுவார‌சிய‌த்திற்கு குறைவே இல்லாத‌து.

ஹ‌ருக்கி முர‌காமிக்குப் பிடித்த‌மான‌ பூனைக‌ள் இந்நாவ‌லிலும் முடிவ‌த‌ற்கு சில‌ அத்தியாய‌ங்க‌ள் முன் பூங்காவில் தோன்றுகின்ற‌ன‌. மேரியும், அந்த‌ இளைஞனும் ரூனா மீனை அப்பூனைகளுக்கு சாப்பிட‌க் கொடுத்து அவைக‌ளை வ‌ருடிய‌படி இருக்கின்ற‌ன‌ர். ஒருவ‌கையில் பார்த்தால் இந்த‌ப் பூனைக‌ளைப் போல் நாமும் வாழ்வில் யாருடைய‌தோ அர‌வ‌ணைப்புக்காக‌ காத்திருக்க‌வோ அல்ல‌து அலைக்க‌ழிய‌வோ வேண்டியிருக்கிற‌து அல்ல‌வா?
............

Photos: Thanks to Google Images (search words: after dark, haruki murakami)