கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 113

Tuesday, September 23, 2025

 

நான் கனடாவிற்கு வந்து உயர்கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த காலங்களில் இங்கே இரண்டு பெரிய தமிழ் வன்முறைக் குழுக்கள் (Gangs)இருந்தன. இலங்கையின் இரண்டு பிரதேசங்களைக் கொண்டு அவை இயங்கினாலும், அதில் பிரதேசவாதம் இல்லாது வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருந்தார்கள். நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில்தான் ஒரு குழுவின் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒரு கேந்திர நிலையமாக  கோப்பிக் கடை இருந்தது. அந்த கோப்பிக் கடையைத்தாண்டித்தான் நான் ஒவ்வொருநாளும் பாடசாலைக்குப் போக வேண்டியிருக்கும். அன்று அந்தக் கடையைச் சுற்றியிருந்த அடுக்கங்களில் நிறையத் தமிழர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அந்தக் கோப்பிக் கடையை மையமாக நிறையச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கும். அந்தச் சம்பவங்களைப் பற்றி அதைவிட நிறையக் கதைகள் கற்பனைகளோடு பேசப்படும். எனவே இவையெல்லாம் எங்கள் பாடசாலையிலும் எதிரொலிக்காது விடுமா என்ன?


எங்கள் பாடசாலையில் இருந்தும் பலர் இப்படி வன்முறைக் குழுக்களோடு ஜக்கியமானார்கள். ஆனால் எங்கள் பாடசாலையில் சண்டைகள் இந்தப் பெரும் குழுக்களால் நிகழ்ந்ததில்லை.  பெரும் மன்னர்கள் இருக்க குறுநில மன்னர்கள் புஜத்தைக் காட்டுவதைப் போல இவர்கள் ஏதேனும் சின்னக்குழுக்களோடு சண்டைபிடித்து விட்டுவர பாடசாலையில் மற்றக்குழு வந்து சேர சண்டை நடக்கும். பெரும்பாலும் ஆயுதங்களில்லாது சண்டை நடக்கும். துப்பாக்கிகள் எங்கள் பாடசாலையில் சீறியதில்லை. ஒருமுறை கத்திச் சண்டை நடக்க, ஒரு அப்பாவியான நண்பன் இதைத் தடுக்கப் போக அவனுக்குக் கத்திக்குத்து விழுந்திருந்தது.

அன்று சண்டைக்குக் காரணமானவன், நான் பின்னர் பல்கலைக்கழகத்துப் போன காலங்களில், பெரிய 'பிஸ்தா'வாக மாறி, இந்த நாட்டில் இருக்க முடியாத வன்முறையாளன் எனத் திருப்பவும் இலங்கைக்கு திருப்பியனுப்பட்டான். இப்போதும் இலங்கையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த பெரும் குழுக்களில் இருந்த இன்னொருவரும் எங்களுக்கு முன்னரான வகுப்புக்களில் படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் அவர் இந்த குழுக்களில் இருக்கின்றாரா என்றே நம்ப முடியாதவளவுக்கு 'நோஞ்சனாக' இருப்பார். என்னைப் போன்றவர்களோடு அவ்வளவு அன்பாகவும் நடந்து கொண்டிருப்பார். அந்தக் காலங்களில் இந்தக் குழுச்சண்டையால் சில அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இந்தச் சண்டைகள் நடக்கும்போது இடைநடுவில் மாட்டிய பாவப்பட்டவர்களாக இருப்பார்கள்.

சிலவேளைகளில் இலக்கு வைத்தவர்கள் வேறு இருக்க, இவர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள். அப்படி அன்றைய காலத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட -எந்தக் குழுவிலோ/வன்முறையிலோ ஈடுபடாத- ஒரு இளைஞனின் கொலையில் மேலே குறிப்பிட்ட இந்த 'நோஞ்சான்' தான் துப்பாக்கி triggerஐ  இழுத்தார் என்று ஒரு கதையை 20 வருடங்களின் பின் கேள்விப்பட்டேன்.

எனது சகோதரர் ஒரு கிரிக்கெட் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். என்னையும் அவர் இழுத்துக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்வார். அன்று விளையாடிய சில இளைஞர்கள் இந்தக் குழுவோடு தொடர்பில் இருந்தார்கள். அன்று ஒருவர் ஒரு பழைய காரை வைத்திருப்பதென்பதே பெரிய விடயம். அண்ணா தனது பழைய காரில் விளையாடும் இரண்டு மூன்றுபேரை ஏற்றிக்கொண்டு வருவார். ஒருமுறை எங்களோடு காரில் வந்தவர் வெள்ளை டவலுக்குள் எதையோ சுற்றி வைத்துக்கொண்டு வந்தார். அந்த டவல் அப்படியே காருக்குள் இருக்க நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். இடைநடுவில் மற்றக் குழு இவர்களைத் தேடி கிரவுண்டை நோக்கி வருகின்றது என்று மைதானம் அமளிப்பட்டது.

அப்போதுதான் எங்களோடு காரில் வந்தவர், 'அவங்கள் வரட்டும், எதற்கும் ரெடியென்றுதான் சாமானோடு வந்திறங்கினேன்' என்று சொல்லத்தான் அவர் டவலுக்குள் சுற்றிக்கொண்டு வந்து துப்பாக்கி என்பது விளங்கியது. என் சகோதரருக்கும், எனக்கும் பயம் வந்துவிட்டது. இவங்கள் சுடுபடப்போகின்றாங்கள் என்பதைவிட, பொலிஸ் வந்துவிட்டால் எங்களின் ஆட்டம் அவ்வளவுதான்.

நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அன்றைய நாள் முடிந்தது. அதற்குப் பிறகு நான் கிரிக்கெட்டுக்காகப் போகும்போது ஏறும் நபர்கள் கையில் என்ன வைத்திருக்கின்றோம் என்பதில் அவதானமாக இருந்தோம். இப்படி எதற்கும் தயாராக 'வீரம் விளைந்தவர்கள்' ஒருபுறம் என்றால், இன்னொரு இடத்தில் படங்காட்டுபவர்களுக்கும் குறையில்லாது இருக்கும். இந்த வன்முறை குழுக்களோடு சம்பந்தப்பட்ட ஒருவர் எப்போதும் 'பீலா' காட்டிக் கொண்டிருப்பவர்கள். எங்கள் பக்கமாய் மற்றக்குழு வந்து வாணவேடிக்கை காட்டிவிட்டுப் போக, எங்கள் பக்கக் குழு 'அசெம்பிள்' ஆகி அவர்களைத் துரத்திக்கொண்டு போவதாய் 'ரீல்'ஸ் காட்டும். அதில் முன்னணியில் இருப்பவர் இவர். அதாவது துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு படங்காட்ட வருவார். இவர் இருந்த குழுக்காரரே, 'இவன் சண்டை நடக்கும்போது எங்கையோ ஒளிந்துகிடப்பான், ஆனால் எல்லாம் முடிந்தபின் துவக்கோடு படங்காட்ட வந்துவிடுவான்' என்று நக்கலடிக்குமளவுக்கு இவர் அவ்வளவு பிரபல்யம்.

ஆனால் என்ன பரிதாபம் என்றால், இப்படி படங்காட்டி ஒரு நாள் இருந்தபோது, பொலிஸ் இவரைத் துப்பாக்கியோடு சிறைக்குள் போட்டிருந்தது. இவர் இப்போது என்ன செய்கின்றார் என்று கேட்கக்கூடாது. அவர் இன்று மில்லியன்கணக்கில் பணம்புரளும் ஒரு முக்கிய வணிகர் . ஆக இன்று படங்காட்டிக் கொண்டிருக்கும் யூ-டியூப்பர்ஸ்க்கு இவரொரு முன்னோடி/influencer என்றும் சொல்லலாம்.

*

ந்தக் காலப்பகுதியிலே நான் எழுத வந்தவன் என்பதால், என் கவிதைகளில் பெரும்பாலும் இந்த வன்முறை பேசுபொருளாக இருந்திருக்கின்றது. கவிதைகள் மட்டுமில்லை, என் முதல் சிறுகதை கூட இந்த வன்முறையைப் பேசுவதாகவே எழுதப்பட்டது. 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பை வாசிப்பவர்கள் இதன் சுவடுகளை பல கவிதைகளில் எளிதாகப் பார்க்க முடியும்.

அன்று எங்களோடு ஒருவன் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். நாங்கள் ஆண்களும், பெண்களுமென ஏழெட்டுப் பேர்களைக் கொண்ட குழுவாக அன்றிருந்தோம். வன்முறைக்கும் எமக்கும் எந்தத் தொடர்புகளுமில்லை.  அப்போதுதான் கனடாவுக்குள் காலடி வைத்தவர்கள் என்ற ஒற்றைக் காரணமே எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்திருந்தது.

இவனுக்கு வயது மூத்த சகோதரர்களும் எங்களோடு படித்துக் கொண்டிருந்தனர். இவர் மிக அப்பாவியானவன். உயரத்திலும், வயதிலும் (2 வயது) எல்லோரையும் விட குறைவானவாக இருந்தான். எனவே எப்போதும் இளைய சகோதரன் போன்ற வாஞ்சை அவனோடு எமக்கு இருக்கும்.

நான் பல்கலைக்கழகத்துக்குச் சென்றதோடு அவனடோன தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் காதல் என்ற பெருங்கடல் நட்பை ஒரு சிறுகுளமாக ஆக்கியதால், நண்பர்களோடு நேரம் செலவளிக்காமல் பின்னர் போய்விட்டது. நெடும் வருடங்களின் இந்தச் சகோதரர்களிடையே சண்டை எனக் கேள்விப்பட்டேன்.

ஒன்றாக சினிமாத் தியேட்டர்கள் நடத்தி வந்தவர்களிடம் இருந்து இவன் தனித்து படங்களை வாடகைத் தியேட்டர்களை திரையிடச் செய்திருக்கின்றான். அதனால் கோபமடைந்த மற்றச் சகோதர்கள் இவன் திரையிட்ட அரங்குகளின் திரைகளைக் கிழித்தும், பார்வையாளர்களுக்கு பெப்பர் ஸ்பிரே செய்து குழப்பி படங்களைத் திரையிடாது தடுத்தார்கள் எனவும் கேள்விப்பட்டேன். சகோதர்களிடையே இப்படி ஒரு கடும் வன்மம் உருவாகுமா என்று திகைப்பாக இருந்தது.

அப்படி ஒரு monopoly யாக திரையிடப்படுவதை கையகப்படுத்திய எங்கள் நண்பனின் சகோதர்கள் பிறகு வெவ்வேறு வியாபாரங்களிலும் கால்களை ஆழப்பதிக்க, மீண்டும் குழுக்களிடையே வன்முறை என்ற செய்திகள் வரத் தொடங்கின. இந்நகரத்தில் இப்போது நடக்கும் சம்பவங்களோடு இவர்களைத் தொடர்புபடுத்தி செய்திகள் நிஜமும்/கற்பனையுமாக சிறகடித்துப் பறக்கத் தொடங்குகின்றன. ஏன் இந்த நகரில் குறிப்பிட்ட திரையரங்குகளை விட வேறெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படாது இருக்கின்றதென்பதற்கான, ஊற்றுக்கள் கூட இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.

இப்படியாக பாடசாலை காலத்திலிருந்தே வன்முறையோடு Thugs Life ஐ பார்த்து வளர்ந்த என்னைப் பார்த்துத்தான், இன்னமும் பெண்களின் காலடியில்தான் தனது உலகம் சுழல்வதாக வாழ்கின்றான் என்று இந்தச் சமூகம் சபிக்கின்றது என்பது எவ்வளவு அவலமானது!

*****

(Jun 02, 2025)

கார்காலக் குறிப்புகள் - 112

Sunday, September 21, 2025

 

சில வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நான் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது சுவிஸில் சூரிச் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கண்காட்சியொன்று நடைபெறுவதை அறிந்து அங்கே போயிருந்தேன். அது ஈழத்தில் இறுதியுத்தம் நடைபெற்றபோது அமரதாஸ் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி. வளாகத்தில் திறந்தவெளி அரங்கின் மையத்தில் அவை  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

என்னால் ஒருபோதும் போர்க்கால அழிவுகளின் புகைப்படங்களை நிதானமாகப் பார்க்க முடிவதில்லை. இந்தப் புகைப்படங்கள் இயன்றளவு கோரத்தை மறைக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களாக இருந்தபோதும் அவற்றில் இருந்து விலகிப் போகவே விரும்பினேன். ஆகவே உயர்ந்துபோய்க்கொண்டிருந்த படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்து புகைப்படங்களை அல்ல, அவற்றைப் பார்க்கும் மனிதர்களின் உணர்ச்சிநிலைகளை அவதானித்துக் கொண்டிருந்தேன்.

அமரதாஸ் எனக்கு அறிமுகமான நண்பர் என்கின்றபோதும், அவருக்கு என் வரவை அறிவிக்காதே சென்றிருந்தேன். நான் சென்றிருந்த நேரம் அமரதாஸ் இருக்கவில்லை. இப்படி புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றேன் என இன்னொரு நண்பரான புகைப்படக் கலைஞரான ஜெயந்தனிடம் சொன்னபோது அவர் அங்கே நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

இதற்கு முன் நடந்த இவ்வாறான புகைப்படக் கண்காட்சியில் இது நடந்திருக்கின்றது. புகைப்படங்களை காட்சிப்படுத்திய ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு மூதாட்டி வந்து கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவர் ஏன் தினம் வருகின்றார் என்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கின்றது. விசாரித்தபோது, யுத்தத்தில் காணாமற்போய் விட்ட தனது மகன் இந்தப் புகைப்படங்களில் இருக்கின்றாரா எனத் தேடியிருக்கின்றார்.

இத்தனை காலத்துக்குப் பிறகு மகன் உயிரோடு இருக்கமாட்டார் என்று அவரின் உள்மனது அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவர் தனது மகனைத் தேடிக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் போரின் நிமித்தம் அனைத்தையும் தொலைத்து தனது மகனின் புகைப்படம் எதுவும் கூட அவரின் கையில் இறுதியில் எஞ்சாமலும் போயிருக்கலாம். ஆகவே நிஜத்தை மீண்டும் நினைவில் கொண்டுவர வந்திருக்கலாம். இன்னொருவகையில் இவ்வாறு புகைப்படங்களைப் பார்த்து ஒருவகையான ஆற்றுப்படுத்தலை அவர் செய்வதாகக் கூட இருக்கலாம். அதாவது தனியொருத்தியின் துயரமாக அல்லாது, ஒரு கூட்டுச் சமூகத்தின் இழப்பாக தன் துயரத்தைக் கரைத்துவிட அவர் முயன்றிருக்கலாம்.

அமரதாஸின் இந்த புகைப்படங்கள் பின்னர்  தொகுக்கப்பட்டு ஒரு புகைப்பட நூலாக 'Through The Fire Zones' என்ற பெயரில் வந்திருக்கின்றது. அந்தப் புகைப்படங்களைப் பற்றிய ஒரு சர்ச்சையும் அந்தக் காலங்களில் எழும்பியிருக்கின்றது. அதை இப்போதைக்கு விடுவோம்.



நேற்று இப்படியான, இறுதி யுத்தங்களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொகுக்கப்பட்ட 'போரின் சாட்சியம்' என்ற நூல் வெளியீடு இங்கே நடைபெற்றது. இந்த நூலை சுரேன் கார்த்திகேசு என்று யுத்தகாலங்களில் ஊடகவியலாளராக இருந்தவர் வெளியிட்டிருக்கின்றார். மேலும் புகைப்படங்களுக்கு அவற்றோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் எழுத்தாகவும் பதிந்திருக்கின்றார்.

இந்த நிகழ்வில் உருப்படியாக பேசிய ஒருவரென்றால் பா.அ.ஜயகரன் என்று சொல்வேன். நூலின் தலைப்பு 'போரின் சாட்சியம்' என்றால், ஒருவர் சாட்சியம் சொல்ல வந்தால், அதற்குக் குறுக்கு விசாரணைகள் இருக்கவும் செய்யும், அதையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதன் மூலம், நாம் நமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும்போது, நமது கரங்களில் படிந்திருக்கும் இரத்தக்கறைகளை நோக்கியும் பார்வையைச் செலுத்தவேண்டும் என்பது மறைமுகமான உணர்த்தலாக இருந்தது. மேலும் அறம் என்பது, தன்னைப் போன்றவர்கள் ஏன் நம்மவர்கள் அனுராதபுரத்தில் சிங்கள மக்களைக் கொலை செய்கின்றார்கள், சுழிபுரத்தில் இளைஞர்களைக் கொன்று புதைக்கின்றனர் என்று அன்று எழுப்பிய கேள்விகளைப் போன்று இருக்கவேண்டும் என்று ஒருசார்பாகவே பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்த அந்தச் சபையில் ஜயகரனின் கேள்விகள் முக்கியமானவை. அதேவேளை இந்த நூலுக்கு இருக்கும் பெறுமதியின் கனத்தையும் குறைக்காது அவரது பேச்சு காத்திரமாக அமைந்திருந்தது.

எனக்கு இந்த நூலாசிரியரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. முகநூலில் நண்பரும் இல்லை. ஆனால்  ஒருகாலத்தில் ஏதோ ஒரு சர்ச்சையின் நிமித்தம் இவர் பெயரும் அமரதாஸைப்போல அடிபட்டதாகக் கொஞ்சம்  நினைவிருக்கிறது. நிகழ்வில், சுரேன் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்றபின் கனடாவுக்கு வந்த கப்பலில் இருந்த ஒருவரெனச் சொன்னார்கள். இற்றைக்கு 15 வருடங்களான பின்னும், இன்னும் அவரின் அகதி நிலைக்கோரிக்கை  ஏற்காது ஓர் ஏதிலியாக இருக்கின்ற அவலமும் இருக்கின்றது. அன்றைய காலங்களில் இரண்டு கப்பல்களில் வந்தவர்களில் 60% இற்கு மேலானவர்கள் அகதி நிலை கனடாவில் அங்கீகரிக்காத துயரத்தோடு இங்கே வாழ்ந்தபடி இருக்கின்றார்கள் என்பது இன்னும் துயரமானது. இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சாரோன் பாலா 'Boat People' என்கின்ற கவனிக்கத்ததொரு புதினத்தை எழுதியிருக்கின்றார்.

இப்போது சுரேனின் முகநூலை, இப்பதிவை எழுதுவதற்கு முன்னர் சும்மா எட்டிப் பார்த்தேன். கனடாவின் வலதுசாரி எதிர்க்கட்சித்தலைவரின் ( Sun Sea கப்பல் வந்த நினைவின் நிகழ்வொன்றுக்கான) செய்தியைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் இதே வலதுசாரி மிதவாத அரசுதான்  அன்று கப்பலில் சுரேன் போன்றவர்கள்  வந்தபோது ஆட்சியதிகாரத்தில் இருந்தது. அப்படி இவர்கள் ஏதிலிகளாகக் கனடாவுக்குள் வந்தபோது பொதுவெளியில் போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டி அவர்களைப் புறக்கணித்துமிருந்தது.

அதுமட்டுமில்லாது ஒருவர் கனடாவின் நில/நீர் எல்லைகளுக்குள் வந்து அகதியென தன்னை அறிவித்தால் அவர்களை எவ்விதக் கேள்விகளுமில்லாது அகதியென ஏற்றுக்கொள்ளவேண்டுமிருந்த கனடாச் சட்டங்களையெல்லாம், இந்தக் கப்பலில் நிமித்தம் வந்தர்களை முன்னிட்டு Bill C-31 என்ற அகதிகளுக்கெதிரான  புதிய சட்டத்தை  அன்றைய வலதுசாரி அரசு இயற்றியுமிருந்தது. இப்படி பல அநீதிகளைச் செய்த இந்த மிதவாத அரசிடமிருந்துதான் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பெற்றிருக்கின்றார் சுரேன்.  அப்படியாயின் இவரைப் போன்றவர்கள் -அதுவும் ஊடகவியலாளராக இருப்பவர்கள்- பெற்றிருக்கும்  உண்மையான அரசியல் அறிவு என்பதுதான் என்ன?

மற்றும்படி இந்த நூல் ஈழத்தில் இறுதிக்காலத்தில் நடந்தவற்றைப் பதிவாக்கின்ற முக்கியமான ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சுவிஸில் கறுப்பு வெள்ளை புகைப்படங்களைப் பார்ப்பதையே தவிர்த்த நான், இதில் வர்ணங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்ற நூலை நிதானமாக இருந்து புரட்டப்போவதில்லை. இந்த நூலை வாங்கி வந்திருந்தாலும் அது குறித்த பதற்றத்தினால், வீட்டுக்கு வந்திருந்த அண்ணாவிடமே நீங்கள் கொண்டுபோய் வாசியுங்களென உடனேயே கொடுத்துவிட்டேன். இவ்வளவு பாரங்களை என்னால் சுமக்க முடியாதென்கின்றபோது நேரடியாக இந்தச் சம்பவங்களைப் பார்த்த சுரேன் போன்றவர்களின் உளவடுக்கள் ஆற ஒரு வாழ்க்கைக் காலம் போதுமா தெரியவில்லை.

இந்த நிகழ்வுக்குப் போகமுன்னர் முள்ளிவாய்க்காலின் கடைசிநாள் வரை இருந்து தப்பி வந்த ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அப்போது பதின்மம். அவரிடம் போர் குறித்த நினைவுகளை நான் ஒருபோதும் கேட்பதில்லை. சிலவேளைகளில் நான் ஈழப்போர் குறித்த நூல்களை வாசித்துவிட்டு அவரிடம் பகிரும்போது அவர் தன் நினைவுகளை இயல்பாகப் பகிரத் தொடங்குவார். அவர் நந்திக்கடலைக் கடந்துவந்தபோது அவரது கால்களில் தட்டுப்பட்ட உடல்கள் இன்னமும் கனவில் வந்தபடி இருக்கின்றதென்றார். தினம் 40-50 சாவுகளை நேரடியாகப் பார்த்தவள் என்றவகையில், இப்போது யாரும் விபத்தில் நான்கைந்து பேர் இறந்திருக்கின்றார்கள் என்று சொன்னால்கூட அது தனக்கு உறைப்பதில்லை என்றும், அதையிட்டுக் கவலையுறாத தன்னைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியடைவதையும் சொல்லிக் கொண்டிருந்தார். பல வருட கால நட்பென்றாலும், இன்னமும் என்னிடம் கூடப் பகிரமுடியாப் பல கதைகள் அவரிடம் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்.

நாம் எல்லா நேரமும் மெளனமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக எந்நேரமும் அரசியல் சரி/பிழைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கவும்  தேவை இல்லை. எந்தத் தரப்பாயினும் உணர்ச்சியரசியலைவிட்டு அருகிலிருப்பவர்களைக் கொஞ்சம் பரிவுடன் பார்க்கவும், அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்கவும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

*********

(Aug 30, 2025)

கார்காலக் குறிப்புகள் - 111

Saturday, September 13, 2025

 

ருமுறை தமிழக எழுத்தாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, தனது படைப்பொன்றின் பெயரைக் குறிப்பிட்டு, இதையே என் வாசகர்கள் தன் படைப்புக்களில் Magnum Opus என்று குறிப்பிடுகின்றனர் எனச் சொன்னார். எனக்கு அவரது படைப்புக்களில் சிறுகதைகள் பிடித்தவளவுக்கு நாவல்கள் கவர்ந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள்ளேயே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பாத்திரங்களைப் படைக்கின்றார் என்று ஒரு வாசகராக எனக்கு விமர்சனம் இருந்தாலும், சில எழுத்தாளர்கள் தாம் எழுதும் அனைத்துப் படைப்புக்களும் சிறந்ததே என்கின்ற அதீதமான obsessed உடன் இருக்கும்போது, இதுதான் தன் சிறந்த படைப்பு என்று அவர் தரம் பிரித்துச் சொன்ன விதம் பிடித்திருந்தது.

ஒரு எழுத்தாளர் நிறைய நூல்களை பிரசுரித்தாலும், அவர்களுக்கு மிகப்பிடித்த படைப்பு என்று ஒரு சிலவேனும் அவர்களின் அந்தரங்கத்திலாவது இருக்கும். ஆனால் அதைவிட வாசகர்கள் தமக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புக்களில் சிறந்ததென  Magnum Opus என ஒன்றை வைத்திருப்பார்கள். ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', எஸ்.பொவின் 'சடங்கு', சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' என்று எனக்குச் சொல்லிக் கொள்ள நீண்டதொரு -Magnum Opus- பட்டியல் இருக்கின்றது.

அவ்வாறே ஒரு படைப்பாளி/கள் பிடித்துவிட்டால் ஒவ்வொரு வகைமையிலுமே பிடித்த படைப்புக்கள் ஒரு வாசகருக்கு இருக்கும். உதாரணத்துக்கு நான் ரமேஷ்-பிரேம் இரட்டையர்களாக இருந்து எழுதிக் கொண்டிருந்த காலத்திலே அவர்களின் தீவிர வாசகன். நாவலுக்கு அவர்களின் 'சொல் என்றொரு சொல்', கவிதைக்கு 'சக்கரவாளக்கோட்டம்', சிறுகதைகளுக்கு 'மகாமுனி' என்றொரு பட்டியல் என்னளவில் வைத்திருக்கின்றேன்.


நமது சூழலில் Magnum Opus என்ற சொல்லைவிட, classic என்ற வார்த்தைதான் அதிகம் சித்திரவதை அடைந்திருக்க வேண்டும். ஒரு படைப்பு, செவ்வியல் என்ற வடிவத்தை, அதற்கான காலத்தையும், அந்த வகைமையில் அடையும் முக்கியத்தையும் கொண்டு செவ்வியலாவது இயல்பானதாகும். சமகாலத்தில் ஒரு படைப்பு வெளிவரும்போதோ 'செவ்வியல்' என்ற அடைமொழி கொடுத்து வெளியிடும் அபத்தம் நம் தமிழ்ச்சூழலில் மட்டுமே நடைபெறக்கூடியதென நினைக்கின்றேன். கடந்தகாலத்தை எழுதுவதால் மட்டுமே 'செவ்வியல்' தன்மை அடைந்துவிடுமென்றால், சாண்டியல்யன், கல்கி போன்றோர் தமது கல்லறைகளிலிருந்து எழுந்து வந்து 'எம் படைப்புக்கள் செவ்வியல் இல்லையா' என்று நியாயம் கேட்கமாட்டார்களா என்ன?

கடந்த பத்தாண்டுகளில் வந்த நாவல்களை அட்டவணைப்படுத்திய குணா கந்தசாமி, அவற்றை முன்வைத்து சமகால நாவல்களைப் பற்றிய குறிப்புகளை பெங்களூருவில் நடந்த இலக்கிய நிகழ்வில் வாசித்திருக்கின்றார். அதில் கடந்த 10/20 வருடங்களில் ஏன் தமிழில் Magnum Opus  எனச் சொல்லக்கூடிய நாவலொன்றும் வரவில்லையென்பதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றார். அவர் சொல்வதில் இந்தப் பகுதி முக்கியமானதாக எனக்குப்பட்டது;

"தமிழில் விமர்சனத்துறையையும் இணைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது இன்றைய தமிழ் இலக்கிய விமர்சனத்தில் கறார்த்தன்மை குறைவாகவும் மதிப்பீடுகள் இளக்கமானவையாகவும் மாறிவிட்டன. பெரும்பாலும் நாம் படைப்புகளை நிராகரிப்பதில்லை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று சொல்லப்பழகிவிட்டோம்.சிற்றிதழ் இயக்கத்துக்கு நேர்ந்துவிட்ட தளர்வின் விளைவு இது. சென்ற தலைமுறையின் வலுவான நாவல்கள் பலவற்றுக்கு தமிழ்ச் சிற்றிதழ் மரபும் சமரசமற்ற விமர்சன இயக்கமும் பங்களித்தன என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை" என்கிறார்.

அதாவது விமர்சனத்துறையும், சிற்றிதழ் மரபும் முன்வைத்த கறார்த்தன்மை கிட்டத்தட்ட இப்போது தமிழில் மறைந்துவிட்டது என்று சொல்வதை நாம் கவனித்தாகவேண்டும்.  கடந்தகாலத்துக்கு மட்டுமில்லை கடந்தகால நினைவேக்கத்துக்கும் போவதில் எனக்கு அவ்வளவு பிரியமில்லைத்தான். அன்றைய சிற்றிதழ் இலக்கியத்தின் தீவிரத்தன்மையை, இன்றைய சமூக ஊடகப் பரம்பல்/உலகமயமாக்கலுக்கு எதிராக மீண்டும் கட்டியெழுப்புவது என்பதும் கடினமானது.

ஆனால் விமர்சனத்துறையைக் கறாராகத் தமிழில் மீண்டும் கொண்டுவரமுடியும். மனிதர்கள் பகுத்தறியும் தன்மை உடையவர்கள் என்பதால் இயல்பிலே நாமெல்லோரும் விமர்சகர்கள்தான். பல்வேறு துறைசார்ந்து இன்னும் Critical Studies பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்விப்புலங்களில் இருக்கின்றது.

தமிழில் மேலே சொன்ன சமகால 'செவ்வியல்' போன்ற அபத்தங்கள் இருப்பதுபோல, ஒருபக்கம் புகழ்ச்சியை மட்டும் அல்லது மறுபக்கம் காழ்ப்புணர்வை மட்டுமே கொண்டதாக பல விமர்சனங்கள்/விமர்சகர்கள் இருக்கின்றனர். நமக்கு சிலரின் அரசியல் இன்ன்பிற விடயங்கள் பிடிக்காது இருக்கலாம். அதற்காக அவர்களின் படைப்புக்களை முற்றாக நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் கலையின் நிச்சலமான அடியாழத்திற்கு ஒருபோதும் சென்றடைய முடியாது.



ழப்போராட்டத்தை முன்வைத்து தமிழில் அல்லாது எழுதப்பட்ட புதினங்களைப் பற்றிய என் வாசிப்பை 'எழுநா' விரைவில் வெளியிட இருக்கின்றது.  அந்த நூலுக்கான திருத்தங்களைச் செய்ய 'எழுநா' ஒருவரை அணுகியிருந்தது. அவர் எனக்கும் நண்பரென்பதால், 'உனது நூலை ஓருநாளிலே இரண்டு முறை திருத்தங்களைச் செய்து கொடுத்தேன்; அவ்வளவு சுவாரசியமாக இருந்தது' என்றார். மற்றப் புத்தகங்களுக்கு நிறைய நாள் திருத்தங்கள் செய்ய எடுக்கும் நண்பர் இதை ஒரு நாளிலே செய்துகொண்டிருந்ததால் 'எழுநா' நண்பர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கின்றது. அதுவல்ல விடயம்.

அதில் அனுக் அருட்பிரகாசத்தின் படைப்புக்களை பற்றி எழுதியதை வாசித்த அவருக்கு அனுக்கைச் சந்திக்க வேண்டும் போலத் தோன்றியிருக்கின்றது. அனுக்கின் 'வடக்கிற்கான பயணம்' நாவலில் வரும் கதாபாத்திரம் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குப் போவது போன்று தனக்கு அனுக்கோடு உரையாடியபடி ஓர் ரெயின் பயணம் செய்யவேண்டும் போல இருக்கின்றது என்றார். ஆக இவ்வாறு வாசிக்கும் ஒருவரை நமக்குப் பிடிக்கும்  படைப்பாளியை நோக்கி ஈர்க்கக்கூடியதாக எழுதுகின்றோம் என அறியும்போது வருவது ஒருவகைப் பரவசமே.

நான் இந்த மகிழ்வை பெரும்பாலும் புனைவுகளிலே அடைகின்றவன் என்றாலும், அவ்வாறில்லாது அல்புனைவுகளில் அசோகமித்திரன், சாருநிவேதிதா (இப்போதில்லை, தொடக்ககால கோணல் பக்கங்கள்), உமா வரதராஜன் உள்ளிட்ட பலரின் பத்தி எழுத்துக்களில் உணர்ந்திருக்கின்றேன். அதிலும் முக்கியமாக முருகேச பாண்டியனின் 'இலக்கிய நண்பர்கள்' என்ற நூல் என் வாசிப்பின் தொடக்க காலத்தில் தந்த பரவசம் இப்போது நினைவில் நீங்காத இருக்கின்றது. அதுபோல சிலவருடங்களுக்கு முன் வாசித்த வ.அ.இராசரத்தினத்தின் 'இலக்கிய நினைவுகள்' என்கின்ற ஈழ எழுத்தாளுமைகளை இராசரத்தினம் சந்தித்த அனுபவங்களைப் பற்றிய நூலும் எனக்குப் பிடித்தமானது. இவை என்னைப் பொறுத்தவரை அவர்களின் magnum opus.

ஆக, ஒவ்வொரு படைப்பாளியும் இந்த classic, magnum opus போன்ற வெறும் அடைமொழிகளுக்குள் தமது படைப்புக்கள் நுழைவதைப் பற்றி அதிகம் யோசிக்காது, எழுதுவதை நேர்மையாகவும், விருப்பத்துடனும், மொழியின் வசீகரத்தில் மட்டுமில்லாது அதை வாசகரின் மனதில் விரித்துச் செல்லும் ஆழத்துக்குச் செல்வதற்குமாக தமது எழுத்தை குவிப்பது நல்லதாக இருக்கும். மேலும் இன்னொன்று ஒருவர் ஒரு படைப்பை எழுதி வெளியிட்டுவிட்டால் அதில் obsessed ஆகி, அதையே தொங்கிப்பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஏன் இது classic ஆகவில்லை,  ஏன் இதை  எவரும் என் படைப்புக்களில் magnum opus என்று  சொல்லவில்லை என பதற்றப்படக் கூடாது. அது இறுதியில் அவர்களுக்கு மட்டுமில்லை, அவர்களின் படைப்புக்களை வாசிக்கும் நமக்கும் சித்திரவதை தரகூடிய ஒரு துயரச் செயலாக மாறிவிடும் அபாயமிருக்கின்றது.

*****





கார்காலக் குறிப்புகள் - 110

Thursday, September 04, 2025

 

 
னது ஸென் ஆசிரியரான தாயிடம், யாரோ ஒருவர் 'நீங்கள் அமைதியையா அல்லது பெளத்தத்தையா, எதை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள்' எனக் கேட்கும்போது, தாய் எவ்வித சலனமுமின்றி அமைதியைத் தான் தெரிவு செய்வேன் என உறுதியாகக் கூறியிருக்கின்றார். கேள்வி கேட்டவரோ, தாய் சிறுவயதில் புத்த மடலாயத்தில் இருந்து வந்தவர் என்பதோடு, புத்தரை நெடுங்காலமாகத் தீவிரமாகப் பின்பற்றி, பெளத்தத்தோடு இரண்டறக் கலந்தவர் என்பதை அறிந்தவர்.  ஆகவே தாய் இப்படி பெளத்தத்தைத் தவிர்த்து அமைதியைத் தெரிவுசெய்வேன் என்று கூறியது அவருக்கு வியப்பாக இருந்தது.

இப்படி அமைதியைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று சொன்னதன் பிறகு, தாய் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கின்றார். மனதின் அமைதியை அடைவதுதான் பெளத்ததின் அடிநாதம்.  அமைதி இல்லாத பெளத்தம் என்பது பெளத்தமே அல்ல. அசலான பெளத்தம் என்பது மனதின் அமைதியை மட்டுமில்லாமல், புறவுலகிற்கான அகிம்சையையும் போதிப்பது. அவ்வாறான பெளத்தத்தில் பயிற்சியின் மூலம் அமைதியைக் கொண்டுவருவதே முக்கிய கூறாக இருக்கின்றது என்று தாய் பதிலளிப்பார்.

நான் சென்று கொண்டிருக்கும் மடலாயத்தில் தியானம் நடந்து கொண்டிருக்கும்போது வந்திருப்பவர்கள் அடிக்கடி எழுந்து செல்வார்கள். வெளியே யாரேனும் கதவைத் திறக்கும் பூட்டும் சத்தங்கள் கேட்கும். சிலவேளை காலை கறுவாத் தேநீரோ, மதியத்து சுவையான உணவோ சுவையின் நரம்புகளை அருட்டி மனதோடு விளையாடும். இவ்வாறு கவனக்கலைப்பான்கள் பல நிகழ்ந்து கொண்டிருக்கும். இதைவிட நம் மனம் பல நூற்றுக்கணக்கான எண்ணங்களில் சிக்கித் திணறி நம்மை மேலும் அலைக்கழிக்கும்.

இந்தளவுக்குப் பிறகும் தியானத்தின் மூலம் அமைதி வருகையில், இடைவெளியில் யாரோ ஒருவர் இன்னொருவரைப் பற்றி 'கோள்' சொல்லிக் கொண்டிருப்பார்; வேறொருவர் இன்றைக்கு தந்த மதியவுணவு அவ்வளவு உருசியில்லையென மற்றவருக்கு முறைப்பாடு செய்து கொண்டிருப்பார். இது போதாதென்று, ஒரு முழுநாள் தியானம் என்றால், நான்கைந்து புத்தபிக்குகள் வந்து தம்ம உரைகளையோ, பாளியில் எழுதப்பட்டவற்றுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கும்போதோ சிலவேளைகளில் நமது மனதுக்கு உவப்பில்லாதவற்றைச் சொல்வார்கள். அப்போது எழும் எரிச்சலும், கோபமும் இருக்கின்றதே, அதை அடக்காமலோ, கடந்துபோகாமலோ, இது ஏன் இப்படி எழுகின்றது என்று மனதோடு 'அறுவைச் சிகிச்சை' செய்யவும் வேண்டியிருக்கும்.


ருமுறை ஒரு மாணவர், ஸென் ஆசிரியர் பாங்கியிடம், 'ஆசிரியரே என்னிடம் அடக்கமுடியாத கோபம் இருக்கின்றது, அதை  எப்படி நான் குணப்படுத்துவது?' என்று கேட்பார். அதற்கு பாங்கி, 'உன்னிடம் ஏதோ ஒன்று விசித்திரமாக இருக்கின்றது. சரி, அதைக் காட்டு' என்று கேட்பார். 'என்னால் இப்போது காட்டமுடியாது' என்று மாணவர் சொல்ல, பாங்கி 'எப்போது உன்னால் அதைக் காட்ட முடியும்' என்று வினாவுகிறார். 'அது (கோபம்)  எதிர்பார்க்காதபோது எழுகின்றபோது மட்டுமே காட்டமுடியும்' என்று மாணவர் சொல்வார்.  

அதற்கு பாங்கி, 'அப்படியெனில் அது உன்னுடைய உண்மையான  குணாதிசயம் அல்ல. அப்படி அசலான உன் குணமாக இருந்தால், நீ எப்போது வேண்டுமானாலும் எனக்குக் காட்டியிருக்க முடியும். நீ பிறக்கும்போது அதனோடு பிறந்தவன் அல்ல. உனது பெற்றோரும் இதை உனக்குத் தந்தவர்களும் அல்ல. ஆகவே இதைப் பற்றி யோசி' என்கின்றார் பாங்கி.

இதன் நீட்சியில் வருவது, புத்த குணாதிசயம் (Buddha-Nature). நாமெல்லோரும் இப்படியான புத்த குணாதிசயத்தோடு வருபவர்கள். அப்படியெனில் ஒரு முக்கியமான கேள்வி பலரிடமிருந்து வரும். நாம் இயல்பிலே புத்த குணாதிசயத்தோடு இருப்பவர்கள் என்றால் ஏன் நாம் கஷ்டப்பட்டு தியானம் அது இதுவென்று செய்யவேண்டும் என்று. நம்மிடம் இது இருக்கின்றது என்று அறியாமல் இருப்பவர்கள் நாம் என்று ஸென் சொல்கின்றது. அதை எளிதாக தூசு படிந்த கண்ணாடியிற்கு அவ்வப்போது ஸென் ஒப்பிடும். தூசி படிந்த கண்ணாடி நம்மைப் பிரதிபலிக்கும். நமது அசலைப் பார்க்க தூசி படிந்த கண்ணாடியைத் துடைக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறு துடைத்தல்தான் தியானம். அப்போது நமது சிறிய மனது அமைதியடைகின்றது. சிறிய மனது அமைதியாக புத்த குணாதிசயம் என்கின்ற பெரிய மனது செயற்படத்தொடங்குகின்றது. நம் சிறிய மனதும், புத்த குணாதிசயமும் ஒன்றிணையும்போது நமக்கு விழிப்படைவதன் சுவை தெரியத் தொடங்குகின்றது. ஆனால் அதுவே 'பரிநிர்வாணமடைதல்' என்று நம்பவும் இந்தச் சிறிய மனது நம்மை முயற்சிக்கத் செய்யும்.

அதுவல்ல பரிநிர்வாணமடைதல். ஒரு பாலைவனத்தில் பாதை தொலைந்து போய் அலையும்போது சிலவேளைகளில் சிறு தண்ணீர் ஊற்றைக் காணும்போது மனது மகிழ்ச்சியில் திளைக்கும். ஆனால் நீங்கள் அந்தத் நீரூற்றில் தங்கிவிடமுடியாது. நீங்கள் அடைய வேண்டிய பாதை வேறெங்கோ இருக்கின்றது. எனவே தொடர்ந்து நடக்கவேண்டும். அவ்வாறே தியானத்தின்போது அவ்வப்போது நீரூற்றுக்களைப் போல இதமான விழிப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் போகவேண்டிய பரிநிர்வாணம் என்கின்ற பாதை நெடியது. தொடர்ந்து தியானம் செய்துகொண்டிருங்கள் என்கின்றது ஸென்.

கோபம் எங்களுடைய புத்த குணாதிசயம் அல்ல என்றாலும் நாம் கோபம் என்கின்ற உணர்ச்சி நிலைக்கு எளிதில் ஆளாகக் கூடியவர்கள். பலர் 'பரிநிர்வாணமடைதல்' என்பதை நாங்களாகக் கற்பனை செய்துகொண்ட சொர்க்கமாக எமக்குள்ளே வைத்திருக்கின்றோம். உண்மையில் அது அப்படி அல்ல. பரிநிர்வாணமடைந்தவர்கள் கோபம் அடையமாட்டார்கள் என்றெல்லாம் நம்பத்தேவையில்லை. அவர்களுக்கும் கோபம் என்கின்ற உணர்ச்சி வரும். ஆனால் விழிப்படைந்தபின் வரும் கோபம் என்பதை ஒருவர் கையாள்வது என்பது மட்டுமே வேறுவிதமாக இருக்கும். அதாவது கோபம் என்பது ஓர் உணர்வே என்கின்ற தெளிவு வந்து, அந்த உணர்ச்சியிலிருந்து சட்டென்று தன்னைத் துண்டித்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு வாய்த்திருக்கும்.

ஆசிரியர் பாங்கி சொன்னதுபோல, கோபம் என்பது ஒருவரின் புத்த குணாதிசயம் அல்ல, அதை எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். அதனோடு ஒன்றிணைந்து அதற்கு மேலும் எண்ணெய் ஊற்றி எரிக்கவேண்டும் என்கின்ற உணர்வு வராதபோது, நாம் அந்த உணர்விலிருந்து எளிதில் விடுபட்டு, வெளியில் நின்று அந்த உணர்ச்சியைப் பார்க்கின்றவர்களாக ஆகிவிடுகின்றோம்.


னக்குத் தெரிந்த நண்பரொருவர் உறவுச்சிக்கலின் ஆழத்தில் இப்போது இருக்கின்றார். அவரைப் போன்ற நிலையில் நான் 10 வருடங்களுக்கு முன் இருந்தவன். எனவே அந்த துயரமும், கையாலாகத்தனமும், தவறிழைப்புக்களும், மன்றாடல்களும், குறைகூறல்களும் எனக்குப் புதியவை அல்ல. இன்று அந்நிலையிலிருந்து மீண்டு, வேறொருவராக நான் அந்தக் காலங்களைப் பார்க்கும்போது ஒரு புன்னகை வந்தாலும், அன்றைய காலங்களில் மிகக் கஷ்டப்பட்டிருக்கின்றேன்; ஒருபோதுமே கடக்கமுடியாத காலத்தில் சிக்கி மூச்சுத்திணறுவதாய் என் மனம் கற்பனை செய்திருக்கின்றது. ஆனால் கோபத்தைப் போலத்தான், அந்த உணர்வுகளும் என் அசலான உணர்ச்சிகள் அல்ல என்று பின்னர் புரிந்தது.

இல்லாவிட்டால் இப்போது நினைத்தாலும், அதே கோபம், வெறுமை, இழப்பெல்லாம் ஒருசேர வந்திருக்கவேண்டுமே; அப்படியில்லாது அந்த உறவின் இனிய நினைவுகள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. எப்போதாவது அந்த கடிய காலம் அருட்டும்போது, சேற்றில் மலர்வதுதான் தாமரை, சேறில்லாமல் எப்படி தாமரையில்லையோ, அப்படியே துயரத்தின் படிப்பினைகள் இல்லாது காதலின் அருமை புரிவதில்லை என்று என் புதிய காதலை அரவணைத்துக் கொள்வேன்.

நண்பரே, உங்கள் மனதிலும் புதிய தாமரை மலரட்டும். நாம் உறவின் நிமித்தம் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று சபதமிட்டுச் சொல்கின்ற நம் காதலிகளின் மனங்களிலும் இதே அழகிய தாமரைகள் விரியட்டும். அவர்களின் வாழ்வும் செழிக்கட்டும்!

*****


(Aug, 2025)

கார்காலக் குறிப்புகள் - 109

Monday, September 01, 2025

 

ங்கிருக்கும் ஒரு புத்த மடாலயத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த மடாலயத்துக்கு எனது மச்சான் ஒருவர்  தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தவர். அவர் சிலாபத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சிங்களப் பாடசாலையில் படித்தவர். அவருக்குத் தமிழ் எழுத/வாசிக்கத் தெரியாது.

அந்த மடாலயத்தில் இருந்த ஒரு புத்த பிக்குவுக்கு, மடாலயத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணோடு காதல் மலர்ந்திருந்தது. ஒருநாள் துறவங்கி உள்ளிட்ட எல்லாவற்றையும் களைந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு அருகிலிருந்த அமெரிக்காவுக்குப் போய்விட்டார் என்று சொன்னார்.

உண்மையில் பிரமச்சாரியத்தில் இருப்பதென்பது மிகக் கடினம். அதுவும் பிரச்சினையில்லா பிரமச்சாரியத்தில் இருப்பது என்பது இன்னும் சிக்கலானது. எனது ஆசிரியரான தாயினது பிளம் விலேஜ் இந்தப் பிரமாச்சரியத்தில் மிகவும் இறுக்கமான விதிகளைக் கொண்டது. இத்தனைக்கும் பிரான்சிலிருக்கும் மடாலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நிரந்தரமாக வசித்தபடி இருக்கின்றனர். தாயினது வழிவந்தவர்கள் தொடர்ச்சியாக இந்த பிரம்மாச்சாரிய வாழ்வு குறித்தும்,  அவர்களுக்குள் எழும் sexual enerngy குறித்தும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இயன்றளவு பதில் சொல்லியபடி இருக்கின்றனர்.

இப்படி தாயுட்டபட பல புத்த பிரிவுகளில், நிர்வாணம் அடைவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக பிரம்மாச்சரியம் இருந்தாலும், அமெரிக்காவுக்கு ஸென் பெளத்தம் வந்தபோது அது வேறுவகையாக இருந்தது. அதனால்தான் அது எளிதில் அமெரிக்காவுக்குள் நுழையுவும், பரவவும் முடிந்தது.

பெளத்தத்திற்கும் அழகும் தனித்துவம் என்னவென்றால் அது அந்த நிலப்பரப்புக்குரிய பெளத்தமாக மாறிவிடுவதாகும். அதனுடைய அடிநாதமாகிய சாரம்சாம்சத்தைக் கைவிடாது, மிகுதி அனைத்தையும் அது மாறுவதை ஏற்றுக்கொள்கின்றது. அதனால்தான் பெளத்தம் இந்தியாவில் தோன்றினாலும், பின்னர் சீனாவுக்கோ, ஜப்பானுக்கோ, வியட்நாமுக்கோ, திபெத்துக்கோ, ஏன் இலங்கைக்குப் போனபோதோ அது அந்த மண்ணுக்குரிய பெளத்தமாக மாறியிருக்கின்றது. அவ்வாறு அது மாறியபடியால்தான் மூல பெளத்தம் இந்தியாவில் செல்வாக்கிழந்து போனபோதும், புத்தருக்குப் பிறகான 2600 ஆண்டுகளிலும் பல்வேறு நிலப்பரப்புக்களில் உயிர்ப்புடன் இருக்கின்றது. ஒருவகையில் பின்னாளில் நமது மார்க்சியர்களில் ஒருபகுதியினர், 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' என்று பேசத் தொடங்கியதை, பெளத்தம் அது எப்போதோ 'மண்ணுக்கேற்ற பெளத்தம்' என்று  கைகொள்ளத் தொடங்கிவிட்டதெனச் சொல்லலாம்.

அமெரிக்காவிற்கு பெளத்தம்/ஸென் வந்தபோது அது ஏன் மாறுபட்டதாக இருந்ததென்றால், அமெரிக்காவுக்கு 50/60களில் வந்த ஸென் ஆசிரியர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில் 50களின் பிற்பகுதியில் வந்து, ஒரு பெரும் ஸென் மரபை ஏற்படுத்தியவராகக்  கருதப்படுகின்ற  Shunryū Suzuki இற்கு  (அவரின் மாணவர்களால் Suzuki Roshi என்று அழைக்கப்படுகின்றவர்) மனைவி, பிள்ளைகள் இருந்தனர். சூஸூகி ரோஸி அமெரிக்காவில் வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள் மட்டுமே, ஆனால் அதற்குள் சிறப்பான அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கியிருந்தார். அவரின்  'Zen mind, beginner's mind' மிக முக்கியமான நூல்.  நான் அவரின் மற்ற நூலான 'Zen is right now' உள்ளிட்ட அவரின் நேரடிய மாணவர்களாகிய Jakusho Kwong, Sojun Mel Weitsman போன்றோரின் நூல்களையும் வாசித்திருக்கின்றேன்.

எல்லா ஆசிரியர்களுக்கும், மடாலயங்களுக்கும் நிகழ்வதைப் போல சூஸுகி ரோஸியின் மரணத்துக்குப் பின்னும் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. நான் அதற்குள் இப்போது அதிகம் போகப் போவதில்லை. என்னை நேரடியாகத் தத்துவங்களை/கொள்கைகளை/வழிகாட்டுதல்களைக் கூறும் நூல்கள் அதிகம் ஈர்ப்பதில்லை. எனக்கு இவற்றை யாரேனும் ஒரு கதைபோல, முக்கியமாக தமது சொந்த அனுபவங்களினூடாகச் சொல்லும்போதே அதிகம் கவரும். உதாரணத்துக்கு சூஸூகியின் மாணவரான Sojun Mel Weitsman எழுதிய 'Seeing One Thing Through' எனக்குப் பிடித்தமைக்கு, ஸோஜூன் அதன் முதல் பகுதியில் அவர் 60களில் தியானத்துக்குள் நுழைந்ததைப் பற்றியும், தனது ஆசிரியரான சூஸூகியுடனான அனுபவங்களை விபரித்தமையும் மிக முக்கியமானது.

ஒரு ஸென் மடமும், தியானப் பயிற்சியும் புதிதாகத் தொடங்கும்போது அது அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. சூஸூகி ரோஸியை ஒரு மரபான ஜப்பான் மடலாயத்தினரே அமெரிக்காவுக்கு அழைக்கின்றனர். ஆனால் ரோஸியின் வழிமுறையோ வேறுவிதமானது. ஆகவே மரபான மடலாயத்தின் வழிபாட்டு நேரங்களைத் தவிர்த்து, விடிகாலை 5 மணிக்கு தியானத்தைத் தொடங்குகின்றார். அதற்கு பலர் வரத்தொடங்க அதை மாலை நேரத்துக்கும் செய்யத் தொடங்குகின்றார். இந்தச் ஸென்னைத் தேடி விருப்புடன் வந்தவர்கள் அந்தக்காலத்தில் ஹிப்பிகளாக இருந்த பலர். அலங்கோலமான கோலத்துடனும், ஒழுங்காய்க் குளியல்களும் இல்லாமலும் வந்தவர்களை எப்படி ரோஸி discriminate செய்யாமல் அரவணைத்துக் கொண்டார் என்பதை அவரது மாணவர் அழகாக விபரிக்கின்றார்.

இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே, இவர்களுக்கென சொந்த இடம் கிடைத்து அது இன்னும் வளர்ச்சியடைகின்றது. என்னை அதிகம் கவர்ந்த விடயம் என்னவென்றால், எவ்வித எதிர்பார்ப்போ, எந்த உறுதிமொழியோ இல்லாது எப்படி ஓர் ஆசிரியருடன் நம்பிக்கையுடன் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதுதான். தியானத்தின் மூலம் எதுவும் அடையவோ, மாயங்கள் நடைபெறவோ சாத்தியமில்லை என்கின்றபோது அப்படி ஒரு தலைமுறை தன் வாழ்க்கையை கொடுத்திருக்கின்றது என்பது இப்போது நமக்குத் திகைப்பாக இருக்கக்கூடும்.
 
ரோஸி எப்படி ஹிப்பிகள் உள்ளிட்ட எவரையும் வித்தியாசம் பார்க்காமல் அரவணைத்தாரோ, அப்படியே அவரிடையே இருந்த மாணவர்களிடையே இருந்த உடல்சார்ந்த உறவுகளையும் உள்ளபடியே ஏற்றுக்கொண்டவர். அங்கும் அவர் எவ்வித discriminate செய்யாது இருந்தவர். அதனாலேயே அந்தத் தலைமுறையில் தியானத்திற்கும், விழிப்படைவதற்கும் வந்த பலர் காதலர்களாகவும், இணையர்களாகவும் பின்னர் மாறியிருந்தனர்.

ஆனால் இப்படி சர்ச்சைகள் இல்லாது இருந்த ரோஸியின் மடாலயம் அவரின்  மரணத்தின் பின் அதை நடத்திய Richard Bakerயின் பெண் சகவாசத்தால் சிக்கலுக்குள்ளானது. ரோஸி அவரின் வாழ்க்கைக் காலத்தில் Dharma transmission செய்ய ஒரேயொரு நபர் ரிச்சர்ட் ஆவார். Dharma transmission செய்யப்பட்டாலே ஒருவர் ஆசிரியராகும் தகுதியை அடைவார். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் ஒரு புத்த மரபின் நீட்சியென (lineage) கொள்ள, அவரை அந்த மரபின் ஆசிரியர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். குருவுடன் உடனுறைந்து பத்து/பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகக் கூடியது.

*

வ்வாறு பெண்கள் விடயத்தில் பலவீனமாகப் போகும் புத்த துறவிகள் பற்றி யோசித்தபோது, இது இப்போதல்ல புத்தரின் காலத்திலிருந்தே நடக்கின்றதென்பது புரிந்தது. புத்தர் தனது சீடர்களாக இருந்த ஆனந்தா உள்ளிட்டவர்களை பிட்சை கேட்டு ஊர்களுக்கு அனுப்புவார். அவர்களுக்குக் கிடைக்கும் தானம் எதுவாயினும் அதை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தனது சீடர்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்றும் புத்தர் விரும்பியிருந்தார். இவ்வாறு ஒருமுறை பிட்சைக்குப் போன ஆனந்தா, ஒரு தாசியின் வீட்டுக்குப் போகின்றார். அந்த தாசி ஆனந்தாவின் மனதை மாற்றி படுக்கையறைக்குள் அழைத்துக்கொண்டு போய்விடுகின்றார். இதையறிந்த புத்தர், தனது இன்னொரு மாணவரான மஞ்சுசிறியை அனுப்பிவைக்கின்றார். அவர் ஒருமாதிரியாக ஆனந்தாவை மீட்டு வருகின்றார்.

அப்படி மீட்டுக்கொண்டு வரப்பட்ட ஆனந்தா அவமானத்தில் குன்றி நின்றபோதே, புத்தர் அவரின் பிரபல்யம் வாய்ந்த 'சுரங்காம சூத்திரத்தை' (Surangama Sutra) உபதேசிக்கின்றார்.  இந்த 'சுரங்காம சூத்திரத்தை' முன்வைத்து, தன் அனுபவங்களையும் சேர்த்து ரோஸி, ஸோஜனின் வழிவந்த ரொபர்ட்  ரோஸன்பம் 'That Is Not Your Mind!' என்ற பெயரில் ஒரு சுவாரசியமான புத்தகத்தை எழுதியிருக்கின்றார். நமது சங்கப்பாடல்களை ஒருவர் வரிவரியாகப் பிரித்து சுவாரசியமாக விளங்கப்படுத்துவதைப் போன்று இந்த நீள் சூத்திரத்தை ரொபர்ட் அலசுகிறார்.

இத்தனைக்கும் ரொபர்ட் ஒரு Neuropsychologist ஆவார். இதில் கலாநிதிப் பட்டம் பெற்றபின் இந்தியாவிலிருக்கும் National Institute of Mental Health and Neuroscience தொடக்கத்தில் பணிபுரிந்தவர். அவருக்கு நல்ல வேலை, மனைவி, குழந்தைகள் என்று இனிதாக எல்லாம் அமைந்தபோதும், மகிழ்ச்சியின் வெற்றிடம் இருந்தது. இதன்பின்னரே அமெரிக்காவுக்குத் திரும்பி, ஸோயூனின் மடாலயத்தில் சேர்கிறார். இதற்கு முன்னர் யோகா பழகியிருந்தபோதும், நல்லதொரு நெடுந்தொலைவு ஓட்டக்காரராக இருந்தபோதும், 5 நாள் தொடர் தியானப்பயிற்சியின்போது அவர் பட்ட கஷ்டங்களை விபரிக்கும்போது, தியானத்தின் ஆரம்பநிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே, நாம் தனியர்கள் இல்லை என்று கொஞ்சம் நிம்மதி வரும்.

*

இவ்வாறு ஆசிரியர்களாவும், மாணவர்களாகவும் தமது வழியில் தீவிரமாக இருந்தபோதும், பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததை புத்தர் காலத்தில் இருந்து, அண்மையில் புத்த அங்கியைக் கழற்றிவிட்டு தனக்குப் பிடித்த பெண்ணோடு வாழத்துணிந்த துறவி வரை சொல்லிவிட்டு, இலக்கியப் பக்கம் போகாமல் இருக்கமுடியுமா என்ன?

அங்கேயும் நிறைய எழுத்துவகைகள் இருக்கின்றன. ஆனால் என் ஆசிரியரான எஸ்.பொவின் 'சுவடு' கதையை ('அவா' தொகுப்பு) வாசித்தவர்க்கு இந்தத் துறவிகளின் பெண் ஈர்ப்பு நன்கு தெரிந்திருக்கும். ஒரு புத்த மடாலயத்தில் இருந்த விலகி வந்த ஒருவனுக்கு திருமணம் நடக்க இருக்கின்றது. அவன் தனது முதல் திருமண அழைப்பிதழை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றபோது தனது குருவை நினைத்துக்கொள்கின்றான். அது அவன் தியானம் பழகிய குருவல்ல. ஒரு பெண். அவளை அவன் 'குருத்தினி' என்று அழைத்து நனவிடை தோய்கின்றான்.

அவன் புத்தமடாலயத்தில் இருக்கும்போது ஒரு பெண்ணோடு பழக்கம் வருகின்றது. அவள் பாலியல் தொழிலைச் செய்கின்ற பெண். இவன் எவ்வளவு உறுதியாக இருக்கின்றபோதும் அவள் இவனின் 'பிரம்மச்சாரிய' மனதை கலைத்துவிடுகின்றான். அவனோடு உறவு கொள்கின்றபோது அவள் சொல்கின்றாள், உன் குருவே என்னைத் தேடி வருகின்ற ஒரு 'வாடிக்கையாளர்'தான் என்று. அத்தோடு அவனது துறவுக் கனவு கலைந்து சாதாரண மனிதனாகிவிடுகின்றான். இப்போது அவனுக்குத் திருமணம் நடக்கப்போகின்றது. அந்தப் பெண்ணை நன்றியுடன் நினைத்துக் கொள்வதாகக் கதை நீண்டு முடியும்.

இப்போதெல்லாம் நான் போகும் புத்த மடாலயத்தில், பிரமச்சாரிய துறவிகள் பெண்களுடன் பேசுவதைப் பார்க்கும்போது எனது மனம் பதறுகிறது. எந்தத் துறவி எந்தப் பெண்ணில் மயங்கி துறவியங்கியைக் களையப்போகின்றார் என்று என் கள்ளமனது அந்தரிக்கின்றது. நான் தியானத்தின் மூலம் நிர்வாணமடைவது ஒருபுறமிருக்கட்டும், இந்தத் பெண்களிடமிருந்து துறவிகளைக் காப்பாற்றி கரைசேர்க்கும் 'கடமை'யை நான் விழிப்பாகச் செய்ய வேண்டியிருக்கின்றது. இதுதான் எனக்கு புத்தர் வழங்கவிருக்கும் 'தம்மமாக'வும் இருக்கக் கூடும்.  

பெயரில் மட்டுந்தான் எனக்கு ஒரு பழந்துறவின் பெயர், நினைப்பெல்லாம் எப்போதும் பெண்கள்தான்..!

****


(Aug 2025)

கார்காலக் குறிப்புகள் - 108

Friday, August 29, 2025

 

ண்பரொருவரின்  bounded script ஐ வாசித்துக் கொண்டிருக்கின்றேன். திரைக்கதை நூறு பக்கங்களுக்கு மேலே நீண்டது. அடுத்த வருடம் இதைத் திரைப்படமாகுவதற்கான காலமும் குறித்தாயிற்று. நான் வாசிக்கும் பிரதி நான்கு முறைக்கு மேலாக திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது. அந்தளவு உழைப்பு இதில் செலுத்தப்பட்டிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.


எனது சிறுகதைத் தொகுப்பையும் நண்பர் வாசித்திருந்தார். அவருக்கு அதில் இருந்த 'முள்ளிவாய்க்கால்' சிறுகதை மிகப் பிடித்திருந்தது. அதன் நீட்சியில் இலங்கையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பற்றி உரையாடல் சென்றது.


இலங்கை சினிமா வரலாற்றில் இளங்கோ ராமின்  'நெலும் குளுண' (Tentigo), நூறு நாட்களுக்கு மேலாக ஓடிப் பெருஞ்சாதனையை செய்திருப்பதைப் பற்றிப் பேசினோம். ஒரு தமிழர், ஒரு சிங்களப் படத்தை எடுத்து இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றியாக ஆக்கியிருப்பதை எம்மைப் பொறுத்தவரை ஒரு பெரும் நிகழ்வு. அது தமிழில் பின்னர் 'பெருசு' என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தாலும், சிங்களத்தில் பார்த்தபோது இருந்த நெருக்கமும், நகைச்சுவையும் தமிழில் வராததைக் கண்டிருந்தேன். தமிழில் எடுக்கப்பட்ட 'பெருசு' என்னால் முழுதாகப் பார்க்க முடியாதளவுக்கு அவ்வளவு அறுவையாக இருந்தது. எனினும் இளங்கோ ராம் எடுத்து வைத்திருப்பது முக்கிய காலடி. இலங்கையில் மட்டுமில்லாது இந்தியாவிலும் அது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வு. இப்போது இந்தி ஸ்பானிஷ் உள்ளிட்ட பலமொழிகளில் அது திரைப்படமாக்கப்படப் போகின்றது என அறிகின்றேன்.


இலங்கையில் இத்திரைப்படம் இலங்கை மதிப்பீட்டில் 400 மில்லியனுக்கு மேலாக பணத்தை ஈட்டியிருக்கின்றது. அப்போதுதான் இந்த நண்பர், அஷோக ஹந்தகமவின் 'ராணி' திரைப்படமும் 250 மில்லியனுக்கு ஓடியிருக்கின்றது என்ற தகவலைச் சொன்னார்.  'ராணி' திரைப்படம் 'நெலும் குளுண' போன்ற வெகுசன சினிமா அல்ல. பிரேமதாசா இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது, இலங்கை அரசால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ரிச்சர்ட் டீ சொய்ஸா என்ற பத்திரிகையாளரைப் பற்றிய படம். அதற்கும் மிகுந்த வரவேற்பை சிங்கள இரசிகர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அது நிச்சயம் பாராட்ட வேண்டியதுதான்.


இவ்வாறாகப் பேசிக் கொண்டிருந்த எம் இருவருக்கும் வந்த கேள்வி என்னவென்றால், இவ்வாறு நாம் ஈழத்திலும்/புலம்பெயர்ந்த தேசங்களிலும் எமக்கான திரைப்படங்களுக்கான பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருக்கின்றோமா என்பது பற்றியது. நம்மிடையே குறிப்பிடத்தக்க நெறியாளர்கள் இருக்கின்றார்கள். நானறிந்து லெனின் சிவம் (கனடா), பிரதீபன் (பிரான்ஸ்), சதா பிரணவன் (பிரான்ஸ்), மதி சுதா (இலங்கை), சோமீதரன் (இந்தியா), ஹசின் (இந்தியா) போன்றவர்கள் தொடர்ந்து திரைத்துறையில் இயங்கியபடி இருக்கின்றார்கள். இவர்களுக்கு கைகொடுக்க நாம் எந்தளவுக்கு முன்னிற்கின்றோம் என்பது நமக்கு முன்னாலிருக்கும் முக்கிய வினாவாகும்.
 

த்தனைக்கும் 'லைக்கா', 'ஐங்கரன்' போன்ற பெருநிறுவனங்கள் ஈழத்தமிழர்களைப் பின்னணியாகக் கொண்டவை.  அவர்கள் பெரிய பட்ஜெட்களில் கூட எடுக்கத் தேவையில்லை. சிறிய ரகப் படங்களுக்கான பட்ஜெட்டில் கூட ஏன் ஈழத்தமிழர்களை நெறியாளர்களாகக் கொண்டு படங்களை எடுக்க அவர்கள் முன்வருவதில்லை. 'ராணி' என்கின்ற அஷோக ஹந்தகம்வின் திரைப்படத்தைத் தயாரித்தது லைக்காதான். அது நல்ல விடயம். அப்படி ஏன் ஈழ/புலம்பெயர் தமிழர்களின் திரைப்படங்களைத் தயாரிக்க இவை முன்வருவதில்லை. இப்படியான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டுமென அவர்களோடு தொடர்புடையவர்கள் கூட ஒரு கோரிக்கையாக இதுவரைகாலமும் முன்வைக்கவில்லை என்பது எவ்வளவு அவலமானது.


மேலும், சதா பிரணவன் இயக்கிய 'வெள்ளிக்கிழமை & வெள்ளிக்கிழமை..' திரைப்படத்தைக் கூட இன்னும் ஜபிசி நிறுவனம் பொதுவெளியில் வெளிவிடாது தடுத்து வைத்திருக்கின்றது என நினைக்கின்றேன். இத்தனைக்கும் அவர்கள் நடத்திய ஒரு திரைப்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் சதா பிரணவன் இதை இயக்கியிருந்தார்.  நான் அத்திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றேன். நம் மத்தியில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அது ஒரு முக்கியமான திரைப்படமே. அதுபோலவே, ஒரு திரைப்படமாக (ஐபோனில் எடுக்கப்பட்டதும் கூட) ஒரு முழுமையான அனுபவத்தைத் தராதபோதும், மதி சுதாவின் 'வெந்து தணிந்தது காடு' கவனிக்கத்தக்கதொரு முயற்சி. அதற்கும் புலம்பெயர் தேசத்தில் நம்மவர்கள் கொடுத்த தலையிடிகளை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
ஆக தயாரிப்பாளர்களாகவும், இரசிகர்களாகவும் நம் திரைப்படங்கள் சார்ந்து நாம் நீண்டதூரம் போக வேண்டியிருக்கின்றது. ஒரளவு தமிழகத்தில் நம்மவர்களின் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றவராக கார்த்திக் சுப்புராஜ்ஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தைச் சொல்லலாம். அவர்களே இளங்கோ ராமின் 'பெருசு'வை தயாரித்து வெளியிட்டனர். அதுபோவே சோமீயின் இன்னமும் வெளிவராத 'நீளிரா'வையும் அதே நிறுவனமே தயாரித்திருக்கின்றது.


நாம் நமது தோழமைச் சக்திகளைப் புரிந்துகொள்வதைவிட,  எப்படி எதிரிகளை  எளிதாக உருவாக்குவது என்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் அரசியலில் மட்டுமின்றி கலை இலக்கியம் திரைப்படம் போன்றவற்றிலும் மிகவும் பின்னோக்கிச் செல்கின்றவர்களாவும் இருக்கின்றோம். 


எல்லாவற்றிலும் அரசியல் இருக்கின்றது என்பது அடிப்படையான புரிதல். ஆனால் எல்லாவற்றையும் அரசியலாக மட்டும் பார்த்தால், நாம் எந்த ஒரு உருப்படியான விடயத்தையும் செய்ய முடியாது. மேலும் அரசியலை விட, இலக்கியமும், நாடகமும், சினிமாவும் நெடுந்தூரத்துக்குச் செல்லக் கூடியவை. எதிர்த்தரப்புக்களோடும் நிதானமாக உரையாடக் கூடிய வலு இவற்றுக்கு மட்டுமே உள்ளன. 


நான் சொல்லும் நேரடி அரசியலின் குறுந்தூரத்தை நீங்கள் நம்பாவிட்டால், கடந்த இருபது/முப்பது வருடங்களில் அரசியல் குறித்து எழுதப்பட்ட/பேசப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நிதானமகாபப் பாருங்கள். நாம் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றுதான் இந்த அரசியலைப் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்ற வேதனையான புள்ளிக்கு எளிதாக வந்து சேர்வோம். அது சோர்வானது மட்டுமில்லை, ஒரு சமூகமாக எமக்கு அவலமானதும் கூட.


புதிய சிந்தனைச் செல்நெறிகளை உருவாக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை, அவ்வாறு புதிய திசைகளை நோக்கி போக விரும்புகின்றவகளையாவது இழுத்துப் பிடித்து விழுத்தாது, அவர்களைப் பறக்கவாவது நாங்கள் விடவேண்டும். அதுவே ஒரு சமூகமாக நமக்கு நன்மை பயக்கும். அதற்கு முதலில் நிதானமாக நம்மை நாமே சுயவிமர்சனம் செய்யப் பழக வேண்டும்.


***

 

(Aug 2025)

கார்காலக் குறிப்புகள் - 107

Wednesday, August 27, 2025

 

கோடை என்றால் இங்கே தெருவிழாக்கள் அமோகமாக நிகழும். இப்போது ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் விழாக்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். என்னை இந்தத் தெருவிழாக்கள் அவ்வளவாக கவர்வதில்லை. பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை, அங்கே கூடும் சனங்களின் நெருக்கம் என்னை மூச்சுவிட திணற வைக்கும்.

நேற்று ஒரு தெருவிழாவுக்குப் போகவேண்டுமென நண்பர் விரும்பியிருந்தார். அதற்கு இந்நிகழ்வுக்கு பாடகர் பிரதீப் குமார் வருவதாக விளம்பரப்படுத்தியிருந்தனர் என்பதும் ஒரு காரணம். இன்னொரு நண்பரை நீண்டகாலமாக சந்திக்க விரும்பியும் இதுவரை சாத்தியமில்லாமல் இருந்தது. அவரையும் அவரின் வேலை முடித்து அங்கே சந்திக்க வரச் சொல்லியிருந்தேன்.

தமிழர்களின் தெருவிழாக்களில் இருக்கும் தன்முனைப்புக்கள்/அரசியல்/குழிபறிப்புகள் குறித்து விரிவாக எதுவும் பேசப்போவதில்லை. அது ஒரு பெருங்கடல்; அது குறித்து 24/7 சூடாய்ப் பேசுவதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர்.

பிரதீப்குமார் நண்பருடன் குழுவினராய் வந்து இறங்கியிருந்தனர். அவர்கள் Oorka என்கின்ற சுயாதீன இசைக்குழுவை நீண்டகாலம் நடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் தமது சுயாதீனப் பாடல்களைப் பாடினார்கள். எனக்கு இதில் இருந்த வியப்பு என்னவென்றால், பிரதீப்குமார் பிரசித்த பெற்ற பாடகர்/இசைக்கோர்ப்பாளர் என்று வளர்ந்தபின்னும், ஒரு சுயாதீன இசைக்குழுவின் ஒரு 'பேஸ் கிட்டாராக' அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். இந்தக் குழுவின் இசைக்கோர்ப்பாளர்/பாடகராக முக்கியமாக இருப்பவர் பாரத் சங்கர்.

நேற்றைய நிகழ்வில் பிரதீப்குமார் எதுவும் பாடப்போவதில்லை என்றுதான் பாரத் சங்கர் கூறினார். அதுபோலவே பிரதீப் குமார் எதையும் பாடவில்லை. பொதுவாக சினிமா/இசைச்சூழலில் ஒருவர் அதில் பிரபல்யமானபின், தன்னை முதன்மை ஆளுமையாக முன்வைப்பார்கள்; அதில் துளி ஆணவமும் இல்லாது பிரதீப் குமார் நேற்று மற்றவர்கள் பாட, கூட ஒரு பக்கவாத்தியக் கலைஞராக மட்டும் இருந்தார். இது அவ்வளவாக எவருக்கு சாத்தியமாகாது. அந்தவகையில் பிரதீப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்போதும் சினிமாப் பாடல்களை பாடும் இவ்வாறான நிகழ்வுகளில், ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைத்து வந்து பாட வைத்த விழாக்குழுவினருக்கும் நன்றி சொல்லவேண்டும்.

இப்போது நான் இதை எழுத வந்ததற்கான காரணத்துக்கு வருகின்றேன். இதை நான் என் பள்ளி/பல்கலைக்கழகத்திலிருந்து பேசி வருகின்றோம். நம்மவர்களுக்கு இருக்கும் இந்த இந்தியச் சினிமா/சினிமா மோகம் பற்றியது. கோடம்பாக்கம் திரையுலகு எவ்வளவு பிரமாண்டம்/இராட்சத்தனம் என்பது பற்றி பேசவேண்டியதில்லை. சினிமா/ இசைக்கலைஞர்களை இங்கு அழைப்பது, மனம்குளிர 'கொடுத்து' திருப்பி அனுப்பிவைப்பது குறித்தும் கவலையில்லை. அவரவர் அவரவர்க்கான விருப்பம்.

ஆனால் பாருங்கள், இப்போது ஒரு சுயாதீன இசைக்குழுவை அழைக்க முடிந்தவர்களால், நம்மவர்களிடையே இருந்து முகிழ்ந்த சுயாதீன இசைக்குழு ஒன்றை அழைக்கவேண்டும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்காது. இத்தனைக்கும் கனடாவிலே நான்றிய சிறந்த சுயாதீனப் பாடர்களென தென்னிந்தியா சினிமா உலகே பாராட்டும் NavZ-47, Shan Vincent de Paul போன்ற பலர் இருக்கின்றனர்.

ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் பாடமுடியும் என்றாலும், தமிழில் மட்டுமே பாடுவோம் என்று இங்கிருக்கும் நவனீ போன்று நோர்வேயில் 9 grader nord என்ற இசைக்குழுவை நடத்தும் மீரா/தீபா சகோதரிகள் தமிழிலேதான் பாடுகின்றனர். இப்படி எண்ணற்ற நம்மவரிடையே இருக்கும் 'சுயாதீன இசைக்குழு'வைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இப்போது ஈழத்தில் இருந்து நன்றாகப் பாடும் வாகீசன் குழுவினரைக் கூடக் கூப்பிடலாம்.


மேலும் இங்கே தெருவிழாக்களை யார் நடத்துகின்றோம் என்று போட்டியிடும் குழுக்கள் கூட, எவரை அழைக்கவேண்டும்/எவருக்கு தளங்களை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது குறித்து ஒருபோதும் பொதுவில் விவாதிப்பதில்லை. இங்கே இப்போது தெருவிழா சார்ந்து அடிவாங்கும் ஒரு நிறுவனம் கூட, நம்மவர்கள் ஒரளவு பிரபல்யம் அடைந்தபிறகுதான், எம்மிடம் வாருங்கள் என்று தங்கத்தம்பாளம் வைத்து வரவேற்று பாராட்டுவார்கள். தமது தனித்துவமான கலைத்திறமைகளால் வளர்ந்துவரும் கலைஞர்களை இவர்களைப் போன்றவர்கள் ஒருபோதும் அரவணைப்பதில்லை. அந்தக் கலைஞர்களுக்கு ஏதோ ஒருவகையில் அங்கீகாரம் கிடைத்தபின்னேதான் நம்மவர்கள் எனப் பாராட்ட முன்வருவார்கள்.

உங்களுக்குச் சந்தேகம் இருப்பின், அவர்கள் கடந்தகாலத்தில் கெளரவித்தவர்களின் பட்டியலைப் பாருங்கள். ஆனால் வெளியில் என்னவோ ஈழத்தமிழர் சமூகத்திற்காக உடல்/பொருள்/ஆவியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக களமாடி கொண்டிருப்பார்கள். நாங்கள்தான் தமிழ்ச்சமூகத்தை அடையாளப்படுத்துபவர்கள் என்ற ஏகபோக உரிமையை தாமாகவே எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு சமூகமாக எல்லோரையும் உள்ளடக்கும்போது அந்த சமூகம் உங்களை அரவணைப்பார்கள். விடுகின்ற தவறுகளைக் கூட, செய்து முடித்த/செய்து கொண்டிருக்கும் நல்ல விடயங்களை முன்வைத்து சமூகமாக மக்கள் மன்னிக்கக் கூடத் தயாராக இருப்பார்கள்.

ஆனால் அது ஊர்ச்சங்கமாக இருந்தாலென்ன, பாடசாலைச் சங்கமாக இருந்தாலென்ன, ஏன் சமூகச் சங்கமாக இருந்தாலென்ன, தலைமைக்கான போட்டியில் அடிபடுவார்கள், ஒருவரையொருவர் இழுத்து விழுத்துவார்கள், பிறகு நாங்களே நல்லவர்கள்/வல்லவர்கள், எங்களுக்கு நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று அழுதபடி சமூகத்திடம் வந்து நீதி கேட்பார்கள்.

ஆகவே இங்கிருக்கும் ஒவ்வொரு சமூக நிறுவனங்கள் மட்டுமில்லை, தனிப்பட்ட ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட விருப்பு/தன்முனைப்புகளைத் தவிர்த்து ஒரு சமூகமாக நாம் முன்னேற/உருப்பட ஒரு சிறு கல்லையாவது எடுத்துப் போட்டிருக்கின்றோமா என்று கேள்வி கேட்கவேண்டும். அந்த அடிப்படை அறத்தோடே சமூகக் களங்களுக்கு பணியாற்ற வாருங்கள். இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். ஆகக்குறைந்தது பொதுவில் வந்து நீதி கேட்கும் முன், நீங்கள் இதுவரை காலம் எவ்வளவு ஜனநாயகத்தன்மையுடன் செயற்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

***


(Aug 10, 2025)

கார்காலக் குறிப்புகள் - 106

Friday, August 22, 2025

 

ன்னுடைய 13/14 வயதுகளில் எனக்குத் தெரிந்த விஞ்ஞான ஆசிரியர்கள் காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னுடைய ரீயூட்டரி ஆசிரியர்கள். அந்தக் காலத்தில் படித்த பாடசாலை யுத்தத்தால் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. புதிய ஊர்களில் பாடசாலையை மீண்டும் தொடங்க ஒரு குறிப்பிட்ட காலமளவுக்கு எடுக்கும்.  இப்படி என் பள்ளிப்படிப்பு நிறுத்தப்படுவதும், தொடங்குவதும் என சீரற்று இருக்க, பக்கத்தில் இருக்கும் ரீயுட்டரிகளுக்குப் போகத் தொடங்கினேன்.

அநேகமான ரீயூஷன் ஆசிரியர்களும் ஏதோ ஒரு பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு விஞ்ஞான ஆசிரியர்,  எங்களுக்கு உதைபந்தாட்டத்தில் கடும் போட்டி தந்துகொண்டிருந்ந்த பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அந்தப் பாடசாலை எங்களை உதைபந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் வெல்ல, அவர் வீட்டில் வைத்தே அந்த அணிவீரர்களுக்கு வெற்றி விருந்தும் கொடுத்திருந்தார். அவர் படிப்பிப்பதோ விஞ்ஞானம்,  ஆனால் விளையாட்டில் வென்றதற்கு வீட்டில் வைத்து ஒரு விருந்தா என்று எங்களைப் போன்றோருக்கு எரிச்சல் இருந்தது.

இப்படி அவர் மீது நிறையக் கடுப்பு இருந்தது. அப்போது அவரிடம் நான் ரியூசன் போகவில்லை. ஆனால் எங்கள் பாடசாலையைச் சேர்ந்த பலர் அவரிடம் போய்க் கொண்டிருந்தனர். நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்தபோது, அவரும் எங்கள் பாடசாலை ஆசிரியரும் சேர்ந்து ஒரு ரியூட்டரியைத் தொடங்கினார்கள். எங்கள் பாடசாலை ஆசிரியர் (விஞ்ஞானம் கற்பிப்பவர் அல்ல) மீதும் ஒரு மறைமுகக் குற்றச்சாட்டு பரவலாக இருந்தது.

அந்த ஆசிரியரின் மகன் எங்களை விட நான்கு வயது கூடியவராக இருந்தார். அவரோடு சேர்ந்து நான்கைந்து அதே வகுப்புப் பெடியங்கள் இயக்கத்துக்குப் போய்ச் சேர்ந்திருந்தனர். பதினாறு வயதில் இயக்கத்துக்குப் போய் இணைவதென்பது எங்கள் காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்படிப் போன பெடியங்களில் எப்படியோ இந்த ஆசிரியர் தன் மகனை இயக்கத்திலிருந்து வெளியே இழுத்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். மற்றவர்கள் போனது போனதுதான். தன் பிள்ளையை மட்டும் காப்பாற்றிக் கொண்டுவந்த தந்தை என்று இவர் மீது மறைமுகமான குற்றச்சாட்டு அன்று பலரிடம் இருந்தது.

ஆகவே நான் இந்த ஆசிரியரும், நம்முடைய கால்பந்தாட்ட 'எதிரி' விஞ்ஞான ஆசிரியரும் இணைந்து நடத்திய ரீயூட்டரிக்குப் போக அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் பாடசாலையில் எம்மோடு பேசாத பெண்களெல்லாம் அந்த ரீயூட்டரியில் நிறையப் பேசுகின்றார்கள் என்று மற்றப் பெடியங்கள் வந்து சொல்லும்போது மட்டும் பொறாமைத் தீ பற்றியெரியும்.

பிறகு நானும் வெட்கம்/மானத்தைக் கைவிட்டு அந்த விஞ்ஞான ஆசிரியரிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர் ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக எங்கள் பாடசாலை ஆசிரியரிடமிருந்து பிரிந்து வந்திருந்தார். ஆம், ஒரு பக்கத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்தாலும், மனிதர் மனிதர்கள் இல்லையா. எல்லாவிதமான போட்டி பொறாமை கோபம், வன்மம் எல்லாம் எங்களுக்குள் அப்போதும் இருந்தது.

இந்த விஞ்ஞான ஆசிரியர் புது இடமொன்றை தற்காலிகமாகத் தேர்ந்தெடுத்து இருந்தார். அந்த வகுப்பில் எப்போதும் வயல்காற்று வீசியபடி இருக்கும். ரீயூசன் ஓலைக்கொட்டகை என்பதால் எல்லாப் பக்கத்தாலும் காற்று வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ஒரு அழகான கோயில் வயல்களுக்கு நடுவில் இருந்தது. எனக்கு அந்தக் கோயிலுக்குப் போய்ப் பார்க்க விரும்பமிருந்தது. ஆனால் எம் இயக்கங்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான இருவரை அங்கேதான் சுட்டுப்போட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து அந்தப் பக்கம் போகப் பயமாகவும் இருந்தது.

பிறகு வழமைபோல யுத்தம் நெருக்கித்தள்ள நாங்கள் வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்தோம். எங்களைப் போல இந்த விஞ்ஞான ஆசிரியரின் ரியூசனும் இடம்பெயர்ந்தது. நம் தமிழ் அரசியல் கட்சிகள் போல, எம் ஆசிரியரும் இப்போது புதுக்கூட்டுச் சேர்ந்து, வந்த இடத்தில் ரியூசனைத் தொடங்கினார். அது ஒரு மரம் அரிகின்ற இடம். நிறைய மரத்துண்டுகளுக்கு இடையில்தான் வகுப்பு நடக்கும்.  சில வகுப்பறைகளின் நடுவில் மரம் அரிகின்ற  பெரிய அரம் இருக்கும்.
கவனமாக காலை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு இன்னொரு சிக்கல். இந்த மரச்சீவலுக்குள் நுளம்புகள் பெரும் இராட்சியமே அமைத்திருக்கும். அதன் கடிகள் தாங்கமுடியாது இருக்கும். பதினாறு வயது வரை நீள்காற்சட்டை போடமுடியாத யாழ் 'பராம்பரியம்' இருந்ததால், அரைக்காற்சட்டையோடு. தொடை தெரிய இருப்போம். நுளம்புகள் கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உருட்டுவது போல, கொடுக்குகளால் எங்களை அடித்துத் துவம்சம் செய்யும்.

இவ்வாறு எல்லா 'தாக்குதல்களையும்' சமாளித்து ரியூசனுக்குச் சென்ற காலத்தில்தான் எங்கள் அந்த விஞ்ஞான ஆசிரியர் காணாமற் போனார். இயக்கத்தால் எதற்கு அழைத்துச் செல்லப்பட்டார், இனி அவர் திரும்பி வருவரோ என்கின்ற பதற்றத்தோடு நாங்கள் ரீயூசனுக்கு போய்க் கொண்டிருந்தோம். நல்லவேளையாக ஓரிரு மாதங்களுக்குப் பின் அவர் திரும்பி வந்தார். ஆனால் முன்புபோல அவரிடம் கலகலப்பு இருக்கவில்லை. ஏதாவது விசாரணைக்குக் கூப்பிட்டு பங்கருக்குள் போட்டு அனுப்பினார்களா, இல்லை ஏதேனும் யுத்தத்திற்கான ஆயுதத் தயாரிப்புக்கான தொழில்நுட்ப அறிவைப் பெற அழைத்துச் சென்றார்களா என நாங்கள் அறியமுடியாத இரகசியமாக அந்த காணாமற்போதல் இருந்தது.

புலம்பெயர் தேசத்திற்கு வந்தபின், ஒருவரிடம் வயது, சம்பளம், திருமண உறவு உள்ளிட்ட எதையும் நாமாகக் கேட்கக்கூடாது, அது அநாகரீகம் என்பதைப் போல, எங்களுக்கு சின்ன வயதிலே இப்படி இயக்கத்தோடு சம்பந்தப்படும் எதையும் வாய்திறந்து கேட்கக்கூடாது என்பது எவரும் சொல்லாமலே தெரிந்திருந்தது. கடைசிவரை அவர் எதற்காய் அழைத்துச் செல்லப்பட்டார், பலருக்கு நிகழாததுபோல எப்படி அதிசயமாய்த் திரும்பி வந்தார் என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.


*


ப்படி இன்னொரு விஞ்ஞான ஆசிரியரும் காணாமற் போயிருந்தார். அப்போது நான் அவரிடம் ரியூசனுக்குப் போகவில்லை. அவர் ஓரிரு மாதங்கள் அல்ல, கிட்டத்தட்ட ஒரு வருடம் காணாமற் போயிருந்தார். அவரை இயக்கம் பின்னர் திருப்பியனுப்பியபோதுதான் அவரிடம் நான் ரீயுசனுக்குப் போயிருந்தேன்.

அதை ரீயூசன் என்றல்ல. தனிப்பட்ட வகுப்பு எனத்தான் சொல்ல வேண்டும். நான் ஏதோ அந்தக்காலத்தில் கொஞ்சம் படிக்கின்றவன் என்பதால் அவர் என்னை வற்புறுத்தி தன்னிடம் படிக்க வரச்சொல்லி என் பெற்றோரிடம் சொல்லியிருக்கின்றார். ஒருவகையில் அவர் தூரத்து உறவினராகவும் எமக்கு இருந்திருக்க வேண்டும்.

நானும், என் உறவுக்காரனும், இன்னும் சிலரும் அவரிடம் விஞ்ஞான வகுப்புக்காய் ரீயூசனுக்காகச் செல்வோம். அவர் மரபான பாடசாலைக் கற்றலைச் செய்யமாட்டார். ஏன் எங்கள் பாடப்புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று பார்த்துக்கூட எங்களுக்குப் போதிப்பதில்லை. ஏதேனும் ஒரு விஞ்ஞானப் புத்தகத்தைத் தந்து வாசியுங்கள், கலந்துரையாடுவோம் என்பார். தமிழில் என்றால் கூட, பரவாயில்லை ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டி வாசித்து கொஞ்சமாய் கிரகிக்கும் மனோநிலையில் இருந்த எங்களுக்கு ஆங்கில விஞ்ஞானப் புத்தகங்களை அள்ளியள்ளித் தருவார். அதில் ஒரு நல்ல விடயம் என்னவென்றால் அவற்றில் அழகான வர்ணப் படங்கள் இருக்கும். படம் பார் கதை சொல் என்கின்றமாதிரி கொஞ்சம் வாசித்தமாதிரி நடிக்கச் செய்வோம்.

உதாரணத்துக்கு ஒரு பெரு மரம், அதில் பல்வகை உயிர்மை வகை என்றால், இது சூழலியலைப் பற்றிப் பேசுகின்றது என்று ஊகிக்க முடியும் அல்லவா? அப்படி அவரிடம் முறைசாரா கற்றலைக் கற்றோம்.நியூட்டன் அப்பிள் மரத்தடியில் இருந்து புவியீர்ப்பு விசையை கண்டறிந்ததுபோல, பாடப்புத்தகங்களைத் தாண்டிய விஞ்ஞானிகளை  எங்களிடையே உருவாக்க வேண்டுமென இந்த ஆசிரியர் நம்பியிருக்கக் கூடும்.

இவரும் இயக்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டு பங்கருக்குள் போடப்பட்டிருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு நீண்டகாலமாகவே இருந்தது. அவர் சும்மாவே அமைதியானவர். அத்தோடு இதற்கு முன்னர் ஏதோ வெளிநாட்டில் கல்விகற்கவோ கற்பிக்கவோ சென்றவர். பிள்ளைகள் வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் கல்வி கற்றதால் அவர்களின் தமிழ் கொஞ்சம் தமிழாக அழகாக இருக்கும்.

ஆசிரியர், இயக்கம் தன்னை அழைத்துச் சென்றபோது என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் ஆசிரியரின் மகன் கொஞ்சம் சொன்னான். அது உண்மையா, கற்பனையா என்று அப்போதும் தெரியவில்லை, இப்போதும் தெரியவில்லை. ஆசிரியரின் ஒரு மகனுக்கு ஒரு வயது என்னைவிடக் குறைவாக இருந்தது. ஆகவே அவனும் எங்களோடு இருந்துதான் படிப்பான். அதனால் நல்ல பழக்கமாகிவிட்டான்.

அவன் தான் சொன்னான்: எங்களின் அப்பாவை இயக்கம் அழைத்துச் சென்றது, இயக்கத்துக்கு ஹெலி செய்வதற்கு என்றான்(அப்போது எமக்கு எல்லாமே ஹெலிகொப்டர் தான், இயக்கத்தில் கடைசிக்காலத்தில் இருந்ததென்னவோ சிறிய ரக விமானங்கள்). எங்களால் அதை நம்ப முடியாதிருந்தது. இலங்கை இராணுவத்தின் ஹெலி, பொம்மர், இந்திய இராணுவத்தில் மிராஜ், சுப்பர்சொனிக் போன்ற எல்லாவற்றாலும் போதும் போதுமென்ற அடி வாங்கிய அனுபவத்தில் இயக்கத்தில் ஒரு விமானம் திருப்பியடிக்க இருக்கின்றது என்பதைக் கற்பனை செய்வதே வியப்பாக இருந்தது.

இப்படியெல்லாம் அவன் சொல்லிவிட்டு, நீங்கள் நம்பாவிட்டால் சொல்லுங்கள். நானே திருட்டுத்தனமாக ஓரிடத்துக்குப் போய்க் காட்டுகின்றேன். அங்கேதான் உருமறைப்புச் செய்து வைத்திருக்கின்றனர் என்று ஒரு இயக்க முகாமைப் பற்றியும் சொன்னான்.

எனக்கு அதைச் சென்று பார்க்க ஆசையாகவும் இருந்தது. ஆனால் இயக்கத்திற்கு இப்படி உளவு வேலையில் ஈடுபடுகின்றோம் என்று தெரிந்துவிட்டால்,  அவர்கள் என்னமாதிரியான ஒறுப்பு (தண்டனை) தருவார்கள் என்பதை நினைக்க அதைவிடப் பயமாகவும் இருந்தது.

தகப்பனும் மகனும் சேர்ந்து இயக்கத்துக்கு விமானம் செய்கின்றார்களோ இல்லையோ, என்னைப் போன்றவர்களை எப்படியேனும் சிக்கலில் மாட்டவைத்து இயக்கத்தின் பங்கருக்குள் அனுப்பவிடமாட்டார்கள் என்ற எச்சரிக்கையில் அந்த ஆசிரியரிடம் போவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

அம்மாதான், அந்த மனுஷன் உன்னை ரீயூசன் படிக்க, அவரது வீட்டுக்கு வரச் சொல்லி ஆசையாய்க் கேட்டவர், நீ ஏன் ஒழுங்காய்ப் போவதில்லை என்று அவ்வப்போது கவலையாய்க் கேட்பார். நான் மனதுக்குள், இயக்கம் ஒவ்வொரு அரசாங்கம் மாறி சமாதானப் பேச்சுக்கு போகும்போது, 'சமாதானம் என்பது தற்காலிகத் தீர்வு, எங்களின்  தனிப்பெரும் இலட்சியம்  தனித் தமிழீழம் அடைவதுதான்' என்று எங்களுக்குச் சொல்வதுபோல, இந்த ஆசிரியரின் தற்காலிக இலக்கு விஞ்ஞானம் படிப்பிப்பது, தொலைதூர இலட்சியம் எங்களை விஞ்ஞானிகளாக்கி இயக்கத்தில் சேர்த்துவிடுவதுதான்' என்று சொல்லிக் கொள்வேன்.

*****

 

 ஓவியம்: Melancholy by Edward Munch

( Aug 06, 2025)

சிறுகதைத் தொகுப்பு நிகழ்வு குறித்து..

Tuesday, August 19, 2025


ழுத்து என்பது ஒருவகையில் எனக்கு அந்தரங்கமானது. ஆகவே என் அகமனதோடான உரையாடல் என்றும் அதைச்ஃ சொல்லிக் கொள்ளலாம். எழுதுவது இதமானது என்றால் நூலைப் பதிப்பிப்பது, நூல் வெளியீட்டு நிகழ்வு நடத்துவது என்பது போன்றவை பதற்றத்தைத் தரக்கூடியது. ஒருவகையில் அப்போது மட்டுமே புறவுலகத்தோடு தொடர்பு கொள்வதால் அது என்னளவில் அவ்வளவு உவப்பானதாக ஒரு செயலாக இருப்பதில்லை.

 

இதனாலேயே 2 வருடங்களுக்கு முன்னர் வெளியான 'தாய்லாந்து' குறுநாவலுக்கு எந்த வெளியீட்டு நிகழ்வையும் செய்யாமல் இருந்தேன். இப்போது 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் அதில் அவ்வளவு ஆர்வங்காட்டாதே இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. அது என் நண்பரான தளவாய் சுந்தரத்தின் முயற்சியால், அவர் அப்போது பொறுப்பாக இருந்த 'கயல்கவின்' பதிப்பகத்தால் வெளிவந்தது. என் கெட்டகாலமோ இல்லை தமிழுலகின் நல்லகாலமோ என்னவோ, அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தபோது 'கயல்கவின்' பதிப்பகமும் மூடும் நிலைக்கு வந்திருந்தது. எனவே அவ்வளவு வெளியில் தெரியாத தொகுதியாக அது போயிருந்தது.

 

எந்த நூலாயினும் அது தகுதியுள்ளதாயின் காலம் அதற்கென ஓரிடம் வழங்குமென்பதில் நம்பிக்கையுடையவன் நான். இந்த 12 வருடங்களில் 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' குறித்து புதியவர்கள் அதை வாசித்து மதிப்புரை எழுதினார்கள். நாஞ்சில் நாடன் போன்றவர்களின் கண்களில்/கரங்களில் தற்செயலாய்ப் போய்ச் சேர்ந்து, அன்று நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவன் என்றவளவில் விகடன் நேர்காணலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றேன். 'எங்கள் வாப்பாவுக்கு ஓர் ஆனையிருந்தது' என்று பழங்கதைகள் பேசுவதில் என்ன பயன்? சமகாலத்தில் எம் எழுத்து என்னவாகும் இருக்கும் என்பதை நேரடியாகச் சந்திப்பதுதானே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் முன்னால் இருக்கும் பெரும் சவால்.

 

ஒருவகையில் நம்மால் தொடர்ந்து இதே வகைமைக்குள் எழுதமுடியுமா என்று நம்மை நாமே கத்தி தீட்டிப் பார்ப்பதற்கான வழிதான் கதைகளைத் தொகுத்து நூலாக்குவது என்பது என்னுடைய வழியாகும். ஆகவேதான் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டபின், அதற்கான விருது/மதிப்பீடுகள் கிடைத்தபோதும், இன்னொரு தொகுப்பை நூலாக்கும் எண்ணம் வரவில்லை. அதற்காக அதன்பிறகு கவிதைகள் அதன்பிறகு எழுதவில்லை என்றல்ல அர்த்தம். ஏற்கனவே எழுத்து அந்தரங்கமானது என்று குறிப்பிட்டதுமாதிரி, எழுதியவை வெளியிடப்படாதவரை அவை என்னோடு அந்தரங்க உரையாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

சிறுகதைகளைக் கூட இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவ்வளவாக எழுதவில்லை. இந்தத் தொகுப்புக்காக எழுதியவற்றிலிருந்து 10 கதைகளைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆக ஒருவருடத்துக்கு ஒரு கதை கூட எழுதவில்லை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதில் குறையேதுமில்லை, ஆகக்குறைந்தது தேர்ந்தெடுத்து நூலாக ஆக்க 10 கதைகளாகவது இருக்கின்றனவே என்கின்ற நிறைவே இருக்கின்றது.

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' நூல்கள் கைகளை அடைந்து மாதங்களாகிவிட்டபோதும், புத்தக வெளியீட்டு நிகழ்வு நடத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. நெருக்கமான சிலர் உந்தித்தள்ளியதால் சரி ஒரு வெளியீட்டு நிகழ்வைச் செய்யலாம் என்று முடிவு செய்தாலும், வழமையான செய்யும் அரங்கிற்கான இடமும் கிடைக்கவில்லை. அரங்கு கிடைத்தபோது கிட்டத்தட்ட 10 நாட்களில் செய்யவேண்டிய நிலைமை. இந்தக் குறுகிய காலத்தில் நூலை வாசித்து கருத்துரைப்பவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. மேலும் இங்கு இப்போது இரண்டுமாத பாடசாலை விடுமுறை/கோடைகாலம் என்பதால் எல்லோரும் குடும்பம்/பிள்ளைகள் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.

 

ஒரளவு வாசிப்பதில் ஆர்வம் இருக்கும் நானே இப்படி யாரேனும் கேட்டால் முடியாது என்றுதான் உடனேயே மறுத்திருப்பேன்.ஆனால் நான் விரும்பிக் கேட்டேன் என்பதற்காக மைதிலி, ஜயகரன், அரசி, செல்வம், இலங்கதாஸ் என அனைத்து நண்பர்களும் குறுகிய காலம் என்கின்றபோது நூலை வாசித்து பேசச் சம்மதித்தார்கள். அவர்கள் இல்லாதுவிடின் இந்த நிகழ்வு நடந்திருக்கவே மாட்டாது.

 

வழமையான மரபான நிகழ்வில் இருந்து மாற்றவேண்டுமென நிரோஜினியிடம் கதையின் ஒரு பகுதியை வாசிக்கக் கேட்டேன். அவர் சம்மதித்தார். அதுபோலவே இம்முறை கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜூவனிட்டா நாதனை அழைத்திருந்தேன். அவர் அரசியல்/சமூக செயற்பாட்டாளாராக இருந்தாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். அண்மையில் தமிழில் முதுமாணி பட்டத்தை இங்குள்ள மனோன்மணியம் பல்கலைக்கழகத்தினூடு பெற்றுமிருந்தார். கனடிய நீரோட்டத்தில் மட்டும் கால்பதிக்காது, தமிழ்த்துவத்திலும் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தில் நேரமிருப்பின் நிகழ்வுக்கு வருகை தர அழைத்தேன். அவர் நூலை வெளியிட்டதோடு எனது புதிய இணையத்தளமான www.elankodse.com  அறிமுகம் செய்து வைத்தார்.

 

********

 

 (Jul 25, 2025)

கார்காலக் குறிப்புகள் - 105

Sunday, August 17, 2025

 

ண்பரொருவரின் தந்தையாருக்கு விருப்பம் என்பதால் லியோ டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்', பதினான்கு தொகுதிகளாக இருந்த புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தேன். இதை சீர் வாசகர் வட்டம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது என நினைக்கின்றேன். இலங்கையிலிருந்த ஒரு புத்தக விற்பனை நண்பரிடம் நல்லவேளையாக ஒரு தொகுதி 'போரும் வாழ்வும்' புத்தகங்கள் கைவசம் இருந்தன.

புத்தகங்களைப் பெற்றுக் கொண்டவர் அவ்வளவு நன்றியுடன் பதிலை அனுப்பியிருந்தார். புத்தகங்களை நேசிப்பவராக ஒருவர் இல்லாதுவிடின் இப்படி நெகிழ்ந்து சொல்லியிருக்கமாட்டார் என்று தோன்றியது. அவருக்காக இரண்டு வருடங்களுக்கு முன் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நின்றபோது 'போரும் வாழ்வும்' வாங்கிக் கொண்டுபோய் இலங்கையில் கொடுக்க விரும்பிருந்தேன். ஆனால் அதன் பெருஞ்சுமை காரணமாக அது சாத்தியமில்லாது போயிற்று.

டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா' அவ்வளவு பெரும் நூலாக முதன்முதலாக கண்ட ஞாபகம் இப்போதும் ஞாபகத்திலிருக்கின்றது. நாங்கள் அப்போது போரின் நிமித்தம் யாழ்ப்பாணத்துக்குள் சங்கானைக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போது அப்பாவின் நண்பரொருவர் (அவர் ஒரு கிராம சேவகர் என்று நினைவு) வீட்டுக்குச் சென்றிருந்தோம். அன்று எனக்கு 12/13 வயதுகள் இருக்கும். என் வயதொத்தவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு அலுமாரியின் லாச்சியைத் திறந்தபோது 'அன்னா கரீனா' முகப்பில் சிரித்துக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் நான் அந்த வயதுக்குள் எங்கள் வீட்டில் இருந்த கடல்புறா (1,2,3), யவனராணி (1,2) போன்ற பெரிய நூல்களை வாசித்து முடித்திருந்தேன். இருந்தபோது. அன்னா கரீனா அதன் பெயரில், முகப்பட்டையால் என்னை நீண்டகாலத்துக்கு விடாது துரத்தியபடி வந்தார். சிலவேளைகளில் அடையமுடியாத விடயங்களில் ஈர்ப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது போல, வாசித்துவிடாத புத்தங்களின் மீது மோகம் கூடிக்கொண்டே போகும் போலும்.

மற்றவர்களின் அலுமாரியைத் தார்செயலாகத் திறந்து பார்க்கும்போது புத்தகங்கள் தெரிந்தால் பரவாயில்லை. ஆனால் வேறேனும் இரகசியமான விடயங்கள் வந்துவிட்டால் கதி என்னவாவது? இப்படித்தான் நான் படிக்கும் காலத்தில் நான் காதலித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அவரின் தந்தையின் அறை லாச்சியைத் திறந்து பார்த்திருக்கின்றார். அங்கே condom பாக்கெட்டைக் கண்டுபிடித்து, தன் தந்தைக்கு யாரோ எவரோடு affair இருக்கிறது, அது யாரென்று கண்டுபிடித்துதர வேண்டும் என்று என்னை நெருக்கியபடி இருந்தார்.

அதெல்லாம் குடும்பத்துக்குள் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்று நான் எவ்வளவு சொன்னாலும் அவர் கேட்கவில்லை. எனக்கு அப்போது இருந்த துப்பறியும் அறிவு என்பது சுஜாதாவின் கணேஷ்-வசந்த் மற்றும் தேவிபாலாவின் பரத் -சுசீலாவை வாசித்த கைம்மண்ணளவுதான். அதை வைத்து எப்படி நான் துப்பறிய முடியும். அத்தோடு அந்தக் காதலியின் தந்தையார் வேலையின் நிமித்தம் ஒவ்வொரு நகர் நகராகச் சுற்றிக் கொண்டிருந்தவர்.

துப்பறியும் கதைகளை எழுதிய சுஜாதாவையோ, தேவிபாலாவையோ வாசிக்கும்போது நான் எங்கே மர்மம் துலக்கும் பகுதிகளை கருத்தூன்றி வாசித்தேன். நான் ஆழ வாசித்தது வசந்தும், பரத்தும் பிற பெண்கள் மீது செய்யும் காதல் சில்மிஷங்களை மட்டுமே என்று நான் எப்படி என் காதலிக்கு விளங்கப்படுத்த முடியும்.

இவற்றுக்குப் பிறகு அலுமாரிகளுக்குள் தங்கப்புதையல் இருந்தால் கூட எவருடைய லாச்சியையும் திறந்துபார்க்கக்கூடாது என்ற பேருண்மையை அறிந்துகொண்டேன்.

*

ன்று மாலை நண்பரொருவரைச் சந்தித்தபோது, ஏதோ கதையில் ரஷ்ய இலக்கியங்கள் தனக்கு pessimistic ஆக இருக்கின்றதென்றார். அவருடைய கருத்துக்குள் குறுக்கிடாமல் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ரஷ்ய பேரிலக்கியங்களை விட போரிலக்கியங்களையே விரும்பி வாசித்திருக்கின்றேன். 'வீரம் விளைந்தது', 'இவான் டொனிசோவ்வின் வாழ்வில் ஒருநாள்' என்று ரஷ்யப் புரட்சியைப் பின்னணியாக எழுதியவையே என்னைக் கவர்ந்தவை, எனக்குள் உரையாடல்களை உருவாக்குபவை. அதற்காய் ரஷ்யாவின் இலக்கிய 'மாஸ்டர்களை' மதிக்கவில்லை என்றோ, கீழிறக்கின்றேனோ என்று அர்த்தமல்ல. மாஸ்டர்கள் மீது பெருவிருப்பும், அதைவேளைஅவர்களைத் தாண்டிச் செல்லவேண்டும் என்கின்ற விழைவும் உந்தித்தள்ள, மார்க்வெஸ் போன்ற மாஸ்டர்களை எள்ளல் செய்து விலத்தியபடி ரொபர்தோ பொலானோ, அலெஜாண்டோ ஸாம்பிரா போன்ற சமகாலத்தைய இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் எழுந்தார்களில்லையா? அதுபோலத்தான் ரஷ்ய மாஸ்டர்களைக் காலத்தின் முன் நழுவவிட்டு, என்னை சமகாலத்தவர்களின் எழுத்துக்கள் அதிகம் வசீகரிக்கின்றனவோ தெரியவில்லை. சிலவேளைகளில் தமிழில் ரஷ்ய மாஸ்டர்களைப் போதும் போதுமென்ற அளவுக்கு பிழிந்து எடுத்துவிட்டதால் வந்த ஒருவகைச் சலிப்புத்தான் இதற்கு மறைமுகமான காரணமாக இருக்குமோ தெரியாது.

ஐரோப்பிய மூலமொழியில் இருந்து (ஆங்கிலம் அல்ல) நேரடியாக ஒரு படைப்பை தமிழாக்கிய நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு படைப்பின் மூலமொழியோடு பரிட்சயமாகும்போது அந்தப் படைப்பு எவ்வளவு வாசிப்புச் சாத்தியங்களைத் தருகின்றதென்று வியந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மொழியாக்கும்போது பெற்ற சுவாரசியமான அனுபவங்கள், ஒரு சொல்லின் மூலத்தைத் தேடிச் செல்லும்போது மொழிக்குள் நடக்கும் முகையவிழ்ப்புகள் என பலதைப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் படைப்பாளி மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தால் இத்தனை சிரத்தையாக இந்த தமிழாக்கத்துக்காய் உழைத்திருப்பார் என்று எனக்குள் எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.

மொழியால்தான் சிந்திக்கின்றோம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இந்த நண்பர் எந்த மொழியால் சிந்திப்பார் என்று யோசித்தேன். ஏனெனில் அவர் தமிழை அவரது பதின்மங்களில்தான் முறையாகக் கற்றுக் கொண்டார். சிறுவயதில் கற்றுக்கொண்ட மூலமொழிதான் சிந்திப்பின் முதன்மை மொழியாக இருப்பின், அவர் சிந்திப்பில் எந்த மொழி முதல் மொழியாக வந்து நிற்குமென நினைத்துப் பார்ப்பது எனக்குச் சுவாரசியமாக இருந்தது.

 
*


டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்' பெற்றுக்கொண்டவர், நான் பிரார்த்தித்துவிட்டு வாசிக்கப் போகின்றேன் என தனது பிள்ளையிடம் சொல்லியிருக்கின்றார். கடவுள் நம்பிக்கையே இல்லாத அவரை, ஒரு புத்தகம் பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்வது என்பது எவ்வளவு அழகானது. மேலும் நண்பர் சொன்னார், எனது அம்மம்மா ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகின்றார் என்றால், கோயிலில் படையலிட்டு வழிபட்டு விட்டுத்தொடங்குவார் என்று. ஒரு புத்தகத்துக்கு/ புத்தக வாசிப்பிற்கு இவ்வளவு மரியாதை கொடுக்கும் காலம் ஒன்று இருந்திருக்கின்றது போலும்.

இப்போது நூல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. நாங்களே எழுதுகின்றவர்களாகவும் மாறிவிட்டோம். ஆனால் ஒருகாலத்தில் நூல்கள் சாதாரண மக்களுக்குக் கிடைப்பதென்பது அரிதாகவும், வாசிப்பதென்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமேயென இறுக்கமான விதிகளுடன் இருந்திருக்கும் அல்லவா?

புத்தகங்களை வாசிக்கும் பெண்களைப் போன்று இவ்வுலகில் அழகானவர்கள் எவருமில்லை என்பது எப்போதோ என்னைப் போன்றவர்களால் உறுதியாக எழுதப்பட்டுவிட்ட தீர்ப்பாகும். மேலும் வாசிப்பவர் யாராயிருப்பினும், அவர் எம் கேளிர் என அவர்களை அரவணைத்துக் கொண்டாடச் செய்வோம்.

***********

 

 நன்றி:புகைப்படம் - இணையம்

( Aug 03, 2025)