நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஒரு புத்தகமும் அது எழுப்பும் பல வினாக்களும்

Sunday, June 19, 2005

(1)

Vanmam

பாமா எழுதிய, 'வன்மம்' நாவலை இன்றுதான் வாசித்து முடித்திருந்தேன். பாமா ஏற்கனவே 'சுருக்கு', 'சங்கதி' என்ற நாவல்களையும், 'கிசும்புக்காரன்' என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். 'வன்மம்' நாவல், கண்டம்பட்டி என்ற ஊரிலுள்ள, பள்ளர் பறையர் என்ற இரு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையிலுள்ள பகைமையையும் நட்பையும் விரிவான தளத்தில் எடுத்துச் சொல்கின்றன. அந்த ஊரிலுள்ள பறையர்களில் அநேகர் கிறிஸ்தவ மதத்தவர்களாகவும், பள்ளர்கள் இந்து சமயத்தவர்களாகவும் இருக்கின்றனர். பறையர்கள் வெளியூர்களுக்குப் படிக்கப்போகவும், பணஞ்காசு சேமிக்கத் தொடங்கவும் அந்த ஊரிலுள்ள ஆதிக்க சாதியினரான நாயக்கர்களுக்குப் பிடிக்காமல் போக பள்ளர்களை உசுப்பி பறையர்களுடன் மோத விடுகின்றனர். இந்தச் சூழ்ச்சியை அறிந்தும் அறியாமலும் பள்ளர்களும் பலியாகிப்போகின்றனர். பறையர்களின் எழுச்சியை சகிக்காது உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்த பள்ளர்கள், தாங்கள் பறையர்கள் கூறிக்கொள்ளும் 'தலித்' என்ற பிரிவுக்குள் வரமாட்டோம் அதையும் விட மேலுயர்ந்த சாதியினர் தாங்கள் என்று கூறிப்பெருமிதங்கொள்கின்றனர். வெளியூருக்குப் படிக்கப்போன பறையர் சாதி இளவட்டப்பயலுகள் தங்கள் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்றெண்ணி 'கழனிக் கலைக்குழு' என்றமைத்து தமது சமூகத்து மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இதன் நீட்சியில் தமது பறையர் தெருச் சாவடியில் அம்பேத்காருக்கு ஒரு சிலை வைக்கின்றனர். இதற்கு பள்ளர்களும் நிதியுதவி ஒத்தாசை செய்கின்றனர். எனினும் பறையர்கள் அம்பேத்காருக்கு சிலை வைத்தால் தாங்கள் இம்மானுவேலுக்கு சிலை வைக்கவேண்டும் என்று பள்ளர் தெரு இளவட்டப்பயலுக்கள் வெளிக்கிட, பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இதுவரை உரசிக்கொண்டிருந்த பகை வன்மமாக உருவெடுக்கின்றது. அதன் தொடர்ச்சியில் பறையர் சாதி ஆண் ஒருவரை ஓட ஒட வெட்டிச் சாய்க்கின்றனர், பள்ளர் சாதி இளவட்டப்பயலுகள். இந்த அப்பாவி உயிர்ப்பலிக்கு உடனேயே வெஞ்சினம் தீர்க்கவேண்டுமென்று உறுமும் பறையர் சாதி இளவட்டப்பயலுகளை அவர்களது நாட்டமையும், பெரிசுகளும் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் இந்தக் கொலையைப் போல முன்பும் பலமுறை பல பறையர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற யதார்த்தம் புரிபட தமது உயிர்களுக்கு எந்த உத்தரவாதமுமில்லை என பறையர் சாதி இளவட்டப்பயலுகளுக்கும் விளங்குகின்றது. இதற்கிடையில் இந்த கொலையைப் பார்த்த பதினமவயது பயலுகள் முன்றுபேர் வீச்சரிவாள் முதுகில் சுமந்துகொண்டு, பள்ளர்களில் ஒருவரையாவது போடாமல் விடுவதில்லையென வெஞ்சினத்தோடு அலைகின்றார்கள். ஒருநாள் பசாரில், ஒருத்தரையல்ல மூன்றுபேரைப் போட்டுத்தள்ளிவிட்டு அந்தப் பதினமவயதுகள் ஊரைவிட்டே ஓடிப்போகின்றார்கள். அந்த ஆத்திரத்தில் பள்ளர்கள், பறையர் சாதி ஆண்கள் ஓடித்தப்பியதால் இரண்டு பெண்களைப் போட்டுத்தள்ளிவிடுகின்றார்கள். இதன் தொடர்ச்சியில் பறையர் தெருக்கள் முழுதுமே இடம்பெயர்ந்து ஊரே வெறிச்சோடிப்போகின்றது. கலவரத்தைத் தடுக்க வருகின்ற பொலிசும் பள்ளர்களுக்குச் சாதகமாக நிற்க, பறையர்கள் பஞ்சத்திலும் உயிர்ப்பயத்திலும் அலைக்கழிகின்றனர். வேறு ஊர்களில் ஒளித்துநின்றாலும் பறையர் சாதி ஆண்களைப் பொலிஸ் தேடி தேடிப் பிடித்து சிறைக்குள் அனுப்புகின்றது. பெண்கள் பொலிசாலும், பட்டினியாலும் சொல்லவொண்ணா துயரங்களைச் சந்திக்கின்றனர். படிப்பதற்குப் போன பிள்ளைகள் பாடசாலைகளுக்குப் போகாமல் நிற்கின்றனர். அத்துடன் பறையர்கள் எங்கு போகவேண்டுமென்றாலும், பள்ளர் மற்றும் ஆதிக்கச் சாதிகளில் தெருக்களைத் தாண்டித்தான் போகவேண்டும் என்பதால் ஒரு நாள் கஞ்சிக்குடிப்பதற்கு உழைக்கக் கூட முடியாமல் தங்கள் தெருக்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்கின்றனர், உயிர்ப்பயத்துடன். இப்படி மூன்று வருடங்களாய் நிகழும் வன்மத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று இரண்டு சாதி நாட்டாமைகளூம் கடுமையாக முயல்கின்றனர். வெட்டிக்கொல்லப்பட்டவர்கள் போய்விட்டனர் இனி நாமாவது பகையில்லாது வாழ்வேண்டும் என்று, பறையரை வெட்டிக்கொன்றவரின் வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது, பறையர்கள் சாட்சி அளிக்காது தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறே பள்ளர்களை வெட்டிக்கொன்ற வழக்கில் தாங்களும் சாட்சி சொல்லமாட்டோம் என்று பள்ளர்களும் உறுதியளிக்கின்றனர். இனி தமது பகைமையை மறந்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று உறுதிப்படுத்துகின்றனர். அதுவரை பஞ்சாயத்து தேர்தலில் பிரசிடெண்டாய் வருகின்ற நாயக்கர்களுக்கு எதிராக பள்ளர்களும், பறையர்களும் ஒன்றாய் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறவும் செய்கின்றனர். 'இனிமேல்பட்டு நம்ம ரெண்டு சாதிகளும் சண்டை சச்சரவு போடாமே, வாழனும். இந்த பஞ்சாயத்துத் தேர்தல்ல செயிச்சது மட்டும் போதாது. சட்டசபை, நாடாளுமன்றம் எல்லா எடத்துலயேயும் நம்ம தலித்துக குரல் ஓங்கி ஒலிக்கனும். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கார் சொன்னதுபோல, அரசியல் அதிகாரத்தைக் கைப்பத்தனும். அதுக்கு இது முதல்படியா இருக்கட்டும்' என்கின்றார் ஒருவர். இறுதியில், 'இனிவரும் தலைமுறையாவது வன்மமில்லாமெ, வன்முறை இல்லாமெ, சண்டை சச்சரவு இல்லாமெ, ஒன்னா மண்ணா இருக்கனும்னு இப்ப உள்ள சனங்க கடுமையா பெராயாசைப்பட்டு, திட்டமிட்டு செயல்பட்டாக. வருங்காலத்தப் பத்திய நம்பிக்கையோடெ, பயமும் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும் மனசுல தெளிவும், தீர்க்கமான உறுதியும் இருந்துச்சு' என்றபடி நாவல் நிறைவுபெறுகின்றது.

(2)
vanmam2

பாமாவின் மண்வாசனைகுரிய மொழியில் இந்த நாவலை வாசிக்கும்போது நாமும் மனங்குளிர நனைந்துவிடமுடிகின்றது. வட்டார மொழி வழக்கு சிலவேளைகளில் வாசிப்பு ஓட்டத்தை சற்று நிறுத்தி நிதானித்து ஒடச்செய்தாலும் நாவலோடு ஒன்றிவிட்டால் அது பெரிய விடயமாகத் தெரியாது. பாமாவின் இந்த நாவலை நான் வாசிக்கும்போது நான் வியந்த விடயம், பாமா ஆண்களின் உலகை அழகாய்ப் பதிவு செய்தது. பாமா என்ற பெயரைப் போடாது விட்டிருந்தால் ஒரு ஆணே எழுதியிருக்ககூடியதாக ஆணின் உலகை மிக இயல்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார். முக்கியமாய் இளவயதுப் பயலுகள் எப்படிக் கதைப்பார்கள், நடமாடுவார்கள் என்பதை எழுதிய இடங்கள் எனக்கு வியப்பாக இருந்தது. அத்தோடு இல்லாமல் பெண்களின் படைப்புக்களில் அவ்வளவு இயல்பான ஆண்பாத்திரங்கள்/உரையாடல்கள் வருவதை வாசித்தில்லாதபடியால் இது எனக்கு முக்கிய விடயமாகத் தெரிந்தது. பாமாவோ அல்லது வேறெவரோ மறுத்தாலும், இது பறையர் சாதியினருக்கு ஆதரவாக எழுதப்பட்ட நாவல் என்று ஆரம்பத்திலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். பொதுப்படையாக நடப்பதாக அல்லது, ஒரு ஊரில் மட்டும் இந்தக் கதை நடப்பது என்று வாசிப்பில் தெரிந்தாலும், பள்ளர் சாதியினர் மீது பலவிடங்களில் stereo-typeல் பல கருத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நிச்சயம் பறையர்கள் பள்ளர்களால் ஒடுக்கப்பட்டிருந்தாலும் எழுத்தில் பொதுவான தளத்தில் வைக்கும்போது இவை குறித்து அவதானமாக இருக்கவேண்டும் போலத் தோன்றியது. இதையெல்லாவற்றையும் விட தலித்துக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டிய இன்னொரு முக்கிய புள்ளி உண்டு. இவ்வாறான ஒடுக்கப்பட்டவர்களுக்கிடையிலான முரண்கள் பகைகள் வெளியே கூறப்படும்போது அவர்களுக்கும் மேலேயுள்ள ஆதிக்கசாதிகள் இவற்றை தங்கள் வசதிக்கேற்ப திரித்து எழுதி தலித்துக்களை இன்னவும் ஒடுக்கவும் கூடும். தமக்குச் சாதகமான கருத்துக்களை மட்டும் எடுத்து எழுதிப்போட்டு தலித்துக்களை நோக்கி நக்கல் சிரிப்பு சிரிக்க காத்திருக்கின்றன பனங்காட்டு நரிகள் என்பதை அவ்வளவு இலகுவில் ஒதுக்கிவிடமுடியாது. பாமாவின், 'வன்மம்' இன்றைய பொழுதில் எழுதப்பட்டிருக்ககூடாது என்ற விமர்சனங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். என்னால் அந்தக் கருத்துடன் உடன்படமுடியாதுவிட்டாலும், ஒரு சென்சிட்டாவான விசயத்தை எழுதும்போது பாதிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து அது எதிரான திசையில் திசை திரும்பாமலிருக்க, பாமாவைப்போன்றவ்ர்கள் இந்த நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் குறித்து தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்தியபடி இருக்கவேண்டும். இந்த நாவலில் இறுதி இரண்டு அத்தியாயங்களைத் தவிர, மிகுதி அனைத்திலும் பள்ளர்கள் பறையர்களுக்கு எதிராளிகளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கிடையிலுள்ள வன்மத்தைச் சொல்வதற்கு எடுத்த அவகாசத்தை அவர்களைத் தூண்டிவிடும் சக்திகளுக்கும் செலவழித்திருக்கவேண்டும். முக்கியமாய் இன்றைய பொழுதில் பாமாவின் நாவல்கள் வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும்போது, தலித் பிரச்சினைகள் என்பதே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் மட்டும் இடையிலானதொன்று என்ற தோற்றத்தை இதுகுறித்து அவ்வளவு அறியாதவர்களிடம் இந்த நாவல் கொடுக்கக்கூடிய அபாயமும் உண்டு.

(3)
இந்த நாவலை வாசித்துக்கொண்டுபோகும்போது, எனக்குப் பதின்மத்தில் வாசித்த கே.டானியல், செ.கணேசலிங்கத்தின் நாவல்கள் நினைவுக்கு வந்தன. எங்கேயும் ஒடுக்கப்பட்டவர்களில் மொழியும் துயரமும் ஒரேமாதிரிதான் இருக்கும் போல. இந்த நாவலை ஈழத் தேசியப்போராட்டத்துடன் ஒப்பிட்டுக்கொண்டு போக முடிந்தது. இளம்பெடியன்கள் அநியாங்களைச் சகிக்காது தங்கள் உரிமைக்காக தாங்களே போராவேண்டும் என்று கூறும்போது ஒரு வயசானவர் கூறுவார், 'இன்னைக்குக் குடிக்க கூழு இருக்கான்னு பாருங்கடா. அதுக்கே வழி இல்ல. இவனுக பெரிய போராட்டம் நடத்துவாங்களாம்...." என்று கூற, 'குடிக்கக் கூழு இல்லைல? ஒங்கப்பங் காலத்துலயும் இல்ல. ஒம் பாட்டங்காலத்துலயும் இல்ல. ஒங்காலத்துலயும் இல்ல. இனி ஒம் மகே காலத்துலயேயும் இருக்காது. இது எதுக்கன்னாலன்னு யோசிச்சுப் பாத்தியா, வருசக்கணக்குல இப்படியே கெடக்கப்போய்த்தான் ஒரு பெய மதிக்க மாட்டேங்கா" என்பதை ஈழப்போராட்டத்தின் ஆரம்பகால வரலாற்றுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம் போலத் தோன்றியது. இன்றைக்கு இந்தியா டூடே, குமுதம் போன்றவை எப்படி ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்த 'மாற்றுக்கருத்தாளர்கள்' என்று பிரகடனப்படுத்துகின்றவர்களைத் தேடித் தேடி நேர்காணல் கண்டு வெளியிடுகின்றதோ அவ்வாறு பாமா போன்றவர்களும் ஆதிக்கசக்திகளின் பாஸிச கரங்களுக்குள் பலியாகாமல் இருக்கவேண்டும். இதை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற மாற்றுக்கருத்துப் புத்தக்கத்தை எழுதியவர் மற்றும் தன்னை நடுநிலையாளர் என்று பிரகடனப்படுத்தியவர்தான் (பிறகு தீராநதியில் பேட்டிகொடுத்தவர்) சுகனையும், தேவதாசையும் போட்டுத்தள்ள பிஸ்டலோடு பாரிஸ் தெருக்களில் திரிந்தவராம். அது போதாதென்று தலித்துகளுக்கு புத்தகம் வெளியிடுகின்றேன் என்ற சோபாசக்திதான் தன்னை வெள்ளாளன் என்று அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்கின்றவர் என்று 'மாற்றுக்கருத்தாளர்களின்' தளத்திலுள்ள கட்டுரைதான் கூறுகின்றது. ஒரு புத்தகம் வெளியே வந்தவுடனேயே பலரது உண்மை முகங்கள் வெளுக்கத்தொடங்கியுள்ளன. எனவே பிற மாற்றுக்கருத்தாளர்களும் புத்தகங்களை வெளியிடவேண்டும். இவ்வாறானவர்களிடம் இருந்துதான் மாற்றுக்கருத்துகான அடித்தளம் இடப்படுகின்றதென்றால், இன்று கறைபட்டிருக்கும் ஈழப்போராட்டத்துத் தலைமைகளை விட இவை இன்னும் அச்சமூட்டுபவையாகவே புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து ஈழத்து/புலம்பெயர் இலக்கியத்தை அறியமுனையும் என்னைப்போன்றவருக்கு இருக்கும்.

29 comments:

-/பெயரிலி. said...

டிஜே
விரிவாக எழுதியிருக்கின்றீர்கள். பாமாவின் எழுத்து மீதிப்பெண் எழுத்தாளர்களிலிருந்து விலகித் தன் குரலைப் பதிவு செய்கின்றதற்கு அவருடைய தலித் அனுபவமும் காரணம். இந்த நூலை நான் வாசிக்கவில்லை. ஆனால், முடிவு பிடித்திருந்தபோதும், வலிந்து தரப்பட்டதாக - ஒற்றுமையுடன் போராடுவதாக - இருப்பதுபோல உணர்வு. வாசிக்கும்போது, அப்படியேதும் தோன்றியதா?

6/19/2005 06:42:00 PM
Anonymous said...

பதிந்தது:இளைஞன்

நன்றி DJ.

20.6.2005

6/19/2005 06:48:00 PM
Shakthi said...

GOOD ONE DJ

6/19/2005 07:17:00 PM
Anonymous said...

பதிந்தது:கரிகாலன்.

நன்றாக சொன்னீர்கள் டீ.ஜே
நன்றிகள்.

19.6.2005

6/19/2005 07:30:00 PM
அப்டிப்போடு... said...

பாமாவின் நூலைப் படிக்கவில்லை., உங்கள் விமர்சனம் படிக்கத் தூண்டுகிறது.

\\இவர்களுக்கிடையிலுள்ள வன்மத்தைச் சொல்வதற்கு எடுத்த அவகாசத்தை அவர்களைத் தூண்டிவிடும் சக்திகளுக்கும் செலவழித்திருக்கவேண்டும//.

தூண்டிவிடும் சக்திகளும், செயல்களும் உள்ளங்கை நெல்லிக்கனி., அதைப் பற்றிய பதிவுகளும் அதிகம். அவர்களுக்கிடையே உள்ளதை அடையாளம் காண வேண்டியது மிக்க அவசியம்., தனது உழைப்பை அரசியல் கட்சிகளுக்களித்து அவர்கள் வளர உதவினார்களேயன்றி இவர்கள் வளர்ந்ததெங்கே?., நகரத்தோடு, கிராமங்களை ஒப்பிடமுடியாது., படித்தவர்கள் கணிசமாக உயர்ந்திருக்கிறார்கள் என்ற ஒன்றைத்தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. படித்தவர்களும் தங்கள் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டு போய் விடுவதால்தான்.,

//'இன்னைக்குக் குடிக்க கூழு இருக்கான்னு பாருங்கடா. அதுக்கே வழி இல்ல. இவனுக பெரிய போராட்டம் நடத்துவாங்களாம்...." //

இந்த நிலை. இன்னும் போராட்டம் நடத்தும் நிலைதான் பாப்பா பட்டிகளிலும்., கீரிப்பட்டிகளிலும்.

//சட்டசபை, நாடாளுமன்றம் எல்லா எடத்துலயேயும் நம்ம தலித்துக குரல் ஓங்கி ஒலிக்கனும். //

வெகுதூரம் இல்லை இதற்கு அவர்கள் தன்னையுணர்ந்து கொண்டால். தவிர அவர்கள் நலனில் அக்கரை கொண்ட அனைத்து கண்களும் நீலிக்கண்ணீர் பொலிவதில்லை. ஆனால் அவர்களில் உள்ள உறுதியான கரங்கள் மட்டுமே., அவர்களுக்கான அரசியல் மாற்றத்தை எழுத வேண்டும் வேறு எவரையும் சார்ந்தில்லாமல்.

//பாமா போன்றவர்களும் ஆதிக்கசக்திகளின் பாஸிச கரங்களுக்குள் பலியாகாமல் இருக்கவேண்டும்//.

கிராமப்புறங்களில் பிறந்து வலியுணர்ந்த எவராலும் முடியாது இது.

6/19/2005 07:58:00 PM
Thangamani said...

நல்ல பதிவு டிஜே. நான் வாசிக்கவில்லை ஆனால் வாசிக்கவேண்டியதென்ற வரிசையில் உள்ளது. நன்றிகள்

6/19/2005 09:00:00 PM
தான்யா said...

பாமாவின் எல்லாக்கதைத்தளமும் ஒன்றுதான் ஆனால் அவரின் சங்கதி ஒரு தலித் பெண்ணின் பார்வையிலிருந்து பெண்விடுதலைக் கருத்துக்கள் போகும் அதனாலோ என்னவே எனக்கு அது நெருக்கமாயும் வன்மத்தைவிடவும் இயல்பாயும் இருந்துது. ராஜ்கொளதமனின் சிலுவைராஜ் சரித்திரம் வாசித்த காலத்தில் வன்மம் வாசித்தேன் இரண்டிலும் ஒரே பாத்திரங்கள் வரும். இதில் வரும் படித்த இளைஞர்அதிலும் வரும். பாமா கதையில் வரும் அண்ணாதான் ராஜ்கொளதமன் எனும் போது ஒரு நெருக்கமான உணர்வு வரும். இரண்டையும் ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்க்கலாம்.
நல்ல அறிமுகம்

6/19/2005 09:50:00 PM
Kannan said...

நல்ல விமர்சனம்.

நன்றி டிசே.

6/19/2005 11:20:00 PM
Anonymous said...

பதிந்தது:வெங்கட்

டிசே - நல்ல பதிவு. இந்த நாவலை எங்கே வாங்கினீர்கள்? நான் இன்னும் கருக்கு நாவலையே படிக்கவில்லை (வாங்கி, ஊரில் தங்கிவிட்டது).

பாமா ஆண்களின் உலகை நுணுக்கமாக எழுதியிருப்பதில் வியப்பில்லை. பிற அடுக்குகளில் இருப்பதைப்போன்ற ஆண்-பெண் பிரிவினை தலித்துகளிடையே மிகவும் குறைவு எந்தத் தொழிலாக இருந்தாலும் இருவரும் சமமாகப் பகிர்ந்துகொண்டு செய்வதைக் காணலாம். அதேபோல உழைத்து முடிந்து களிக்கும் வேளையிலும் சமமாக உட்கார்ந்து குடிப்பதும் களிப்பதும் காணக்கிடைக்கும்.

சமீபத்தில் பத்மநாப ஐயரை திருமாவளவன் வீட்டில் சந்தித்தபொழுது நான் இதைத்தான் கூறினேன்; உடலுழைப்பை முன்னிருத்தும் எந்த சமூகத்திலும் பெண் ஆணுக்கு இளைத்தவளாக இருக்கமாட்டாள். தலித்துகள் சமூகத்தில் வலி இருவருக்கும் பொதுவானது. வெள்ளைக் காலர் சட்டை வேலை செய்யும் சமூகத்தில் பெண்களின் உலகு வேறு, தலித்துகளிடையே அப்படியில்லை. - வெங்கட்

19.6.2005

6/19/2005 11:58:00 PM
பிச்சைப்பாத்திரம் said...

நல்ல பதிவு டிஜே. சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த நாவல் இது.

இரு பிரிவனருக்கு இடையே ஏற்படும் ஜாதி தகராறு எனில் நம் மனதில் சில பிரிவினர்களே வந்து நிற்குமாறு செய்தி ஊடகங்களும், சில வரலாற்றுச் சாட்சியங்களும் நம்மிடையே ஏற்படுத்தி வைத்திருக்க, தாழ்த்தப்பட்ட இரு பிரிவினரே தம்முள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்தக் களம் - என்னைப் பொறுத்த வரையில் - புதிது. தீராத சண்டைகளுக்கிடையில் வீறுகொண்டு எழும் இளைய தலைமுறையினருக்கும் பொறுத்து போகச் சொல்லும மூத்த தலையினருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள் முக்கியம் வாய்ந்தது.

6/20/2005 04:12:00 AM
இளங்கோ-டிசே said...

//முடிவு பிடித்திருந்தபோதும், வலிந்து தரப்பட்டதாக - ஒற்றுமையுடன் போராடுவதாக - இருப்பதுபோல உணர்வு. வாசிக்கும்போது, அப்படியேதும் தோன்றியதா?//
பெயரிலி, வாசிக்கும்போது (முதல் வாசிப்பில்) சற்று அப்படித்தான் தோன்றியது. எப்படி இவ்வளவு வன்மத்துடன் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்துபோகின்றார்கள் என்று. எனினும் பாமா இரண்டு விடயங்களைத் தெளிவாக நாவலில் முன்வைத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். முதலாவது, இந்த ஊரின் நெடுங்கால வன்மம் அவ்வளவு இலகுவில் ஓய்ந்துபோகாது என்ற் வாசிப்பையும் அதையும் மீறி ஒடுக்கப்பட்டவர்கள் என்றரீதியில் அவர்கள் ஒன்று சேர்வதற்கான நம்பிக்கையையும் விட்டு செல்கின்றார். இரண்டாவ்து முக்கிய குறிப்பாக எனக்குப்பட்டது. இது எல்லா ஊருக்கும் பொதுப்படையான ஒன்றல்ல. நாவலில் அடிக்கடி பல பாத்திரங்கள், பிற ஊர்களில் பள்ளர்களும் பறையர்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று அடிக்கடி பேசுகின்றனர். அத்துடன் கலவரம் வந்து வேறு ஊர்களில் தஞ்சம் புகுகின்ற பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் மற்ற ஊர் பள்ளர்களும் பறையர்களும் இது தேவையில்லாத பிரச்சினை என்றுதான் கூறி இந்த கலவரத்துடன் எந்த விதத்திலும் பங்கு பெறுவதைத் தவிகின்றனர். அவ்வாறு மற்ற ஊர்களில் பள்ளர்களும் பறையர்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்றால் ஏன் கண்டம்பட்டி ஊரில் பள்ளர்களும் பறையர்களும் எதிர்காலத்தில் ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று இந்த நாவலின் முடிவு வலிந்து எழுதப்பட்டிருகின்றது பொலத் தெரிகின்றது என்ற கேள்விக்கு இந்த நாவலின் ஊடாகவே பதிலளிக்கமுடியும் என்று நம்புகின்றேன். கே.டானியலின் நாவல்களுக்கும் 'அழகியலைத்' தேடும் வித்தகர்களால் இவ்வாறான விமர்சனங்கள் வைகப்பட்டதாய் நினைவு.
ஒரு படைப்பினூடாக அதன் எழுச்சி வீழ்ச்சியை மதிப்பிடவேண்டுமே தவிர, தாம் ஏற்கனவே தீர்மானித்த விமர்சன சடட்கங்களுக்குள் வராதவை எல்லாம் படைப்புகளே அல்ல என்கின்ற கோட்பாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

6/20/2005 09:40:00 AM
இளங்கோ-டிசே said...

////பாமா போன்றவர்களும் ஆதிக்கசக்திகளின் பாஸிச கரங்களுக்குள் பலியாகாமல் இருக்கவேண்டும்//.
கிராமப்புறங்களில் பிறந்து வலியுணர்ந்த எவராலும் முடியாது இது.
//
உண்மைதான் அப்படிப்போடு. எனக்கும் பாமா போன்றவர்கள் மீது உங்களைப்போலவே நம்பிக்கை உண்டு. ஆனால் அதேவேளை இன்று இளையராஜா போன்றவ்ர்கள் போன திசையைப் பற்றியோ அல்லது இரவிக்குமார், ராஜ்கெளதமன் போன்றோர் எங்கே ஒதுக்கியிருந்து யாருககாக வக்காளத்து வாங்குகின்றார்கள் என்பதையும் நினைவில் கொள்ளததான் வேண்டும் :-(.

6/20/2005 10:31:00 AM
இளங்கோ-டிசே said...

தான்யா, நீங்கள் 'வன்மம்' நாவலுடன் 'சிலுவை ராஜ் சரித்திரம்' வாசித்திருப்பதால் இன்னும் விரிவான தளத்தில் நிரம்ப எழுத முடியும். அத்தோடு, பாமாவின் பிற நாவல்களையும் வாசித்திருக்கின்றீர்கள். ஆகவே நீஙகள் முழுதாய் தொகுத்து எழுதும்போது பாமாவின் ஆளுமையை நாங்களும் அறியக்கூடியதாகவிருக்கும். அலுப்பைப் பாராது எழுதுங்களேன்.
........
வெங்கட், எனக்கு இந்தப் புத்தகம் எனது தோழியர் மூலமாகவே இரவலாக கிடைக்கப்பெற்றது. அவர்களும் தமிழகம் சென்றபோது, நீயு புக்லாண்ட்ஸ் இல்தான் வாங்கியிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

6/20/2005 02:01:00 PM
கறுப்பி said...

டீ.சே "வன்மம்" நான் இன்னும் படிக்கவில்லை. கிடைக்கவுமில்லை. "கருக்கு" "சங்கதி" மட்டும்தான் வாசித்திருக்கின்றேன். அதுக்குத் தான் "காலம்" செல்வத்திடம் சொன்னனான் புத்தகங்களை விக்காமல் பேசாமல் ஒரு லைபிரறி திறவுங்கோ எல்லோரும் எல்லாம் வாசிக்கலாம் எண்டு கேக்கிறார் இல்லை.

6/20/2005 02:26:00 PM
Anonymous said...

பதிந்தது:சினேகிதி

எனக்கு இப்படிப்பட்ட புத்தகங்கள் கிடைப்பதில்லை.ஈழத்தில் கூட புலி மாமாக்களின்ர ஆதிக்கம் இல்லாத ஊர்களில் பள்ளர் நளவர்களை கோயில்களுக்குள் விடுவதில்லை.இப்ப நிறைய மாற்றங்கள் ஏற்பட்டபருக்க் கூடும்.

20.6.2005

6/20/2005 03:54:00 PM
இராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு! இன்னும் 'கருக்கு'வையே வாங்கவில்லை :( என்றேனும் அதனுடன் இதையும் வாங்கி வாசிக்க வேண்டும். நன்றி!

6/20/2005 05:44:00 PM
ROSAVASANTH said...

டீஜே, இரண்டு வாரங்கள் கழித்து வலைபதிவுகளுக்கு வந்து வாசித்த முதல் பதிவு இதுதான். நல்ல விதத்தில், சிறிய இடைவேளைக்கு பின்னான என் வாசிப்பை தொடங்கி வைத்ததற்கு நன்றி.

6/20/2005 06:46:00 PM
இளங்கோ-டிசே said...

//தீராத சண்டைகளுக்கிடையில் வீறுகொண்டு எழும் இளைய தலைமுறையினருக்கும் பொறுத்து போகச் சொல்லும மூத்த தலையினருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள் முக்கியம் வாய்ந்தது.//
சுரேஷ் கண்ணன், உண்மைதான் இதை பாமா அழகாய் காட்சிப்படுத்தியிருக்கின்றார். இந்த உணர்வுநிலைகளை கே.டானியலும் தனது நாவல்களில் விரிவான உரையாடல்களாய் எழுதியிருந்ததாய் நினைவு.
//பாமா ஆண்களின் உலகை நுணுக்கமாக எழுதியிருப்பதில் வியப்பில்லை. பிற அடுக்குகளில் இருப்பதைப்போன்ற ஆண்-பெண் பிரிவினை தலித்துகளிடையே மிகவும் குறைவு எந்தத் தொழிலாக இருந்தாலும் இருவரும் சமமாகப் பகிர்ந்துகொண்டு செய்வதைக் காணலாம். //
வெங்கட் நீங்கள் கூறும் அவதானம் சரியானதுதான். ஆனால் இந்த நாவலிலும் பெண்கள் ஒருவிதமாய் ஒதுக்கப்படுகின்றார்கள் என்று ஆரம்பத்தில் பாமா வெளிப்படுத்தியிருப்பார். முக்கியமாய் கலை நிகழ்வுகள் இன்னபிறவுக்கு உதவிக்கு ஒத்தாசைக்கு பெண்களைக் கூப்பிடும் ஆண்கள், சில கூட்டங்களைக் கூடி, முடிவுகள் எடுக்கும்போது பெண்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவது குறிப்பிடப்படுகின்றது. எல்லாத்துக்கும் எங்கள் உதவிவேண்டும் நிற்கும் இவன்கள் இதுக்கு மட்டும் நாங்கள் இருக்கக்கூடாதாம் என்று பொருமிக்கொண்டுதான் பெண்கள் வீட்டுக்குப் போகின்றார்கள். மற்றும் சில இடங்களில் (தெருச்சாவடிகளில்) பெண்களுக்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் அதை நெருங்குவதில்லை. தொலைவிலிருந்தே அதையெல்லாம் பார்க்கின்றனர். அவ்வாறான சாவடியில் நிற்கும் தங்கள் குடும்பத்து ஆண்களை சில குழந்தைகளைக் கொண்டு அழைப்பிக்கின்றார்களே தவிர தங்கள் காலடிகள் அங்கே வைக்கமுடியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இதே பெண்கள் பிறகு எழுச்சியடைகின்றார்கள். சும்மா பொய்க்காரணம் சாட்டி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்களை சிறையில் இருந்துவ் வெளியே எடுப்பதும் இந்தப்பெண்கள்தான். கலவரத்தின்பின் ஆண்கள் ஒளிந்துகொண்டபின் எப்படியோ எல்லாம் சமாளித்து தங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்வதும் இவர்கள்தான். கலவரப்பூமியில் பிணமாகிப்போனவர்களை தாங்களாகக் குழிகள்வெட்டி புதைப்பவர்களும் இந்தப்பெண்கள்தான். இப்படி ஒடுங்கியிருந்த பெண்கள் எழுச்சிகொள்வதைக் கண்டு தலித் இளவட்டப்பயலுகள் மகிழ்ச்சியடைவதைக் கூட பாமா இந்த நாவலில் பதிவு செய்திருக்கின்றார்.

6/20/2005 11:58:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்கள் இட்ட, பெயரிலி, இளைஞன், சக்தி, கரிகாலன், அப்பிடிபோடு, தங்கமணி, தான்யா, கண்ணன், வெங்கட், சுரேஷ் கண்ணன், கறுப்பி, சினேகிதி, இராதாகிருஷ்ணன் மற்றும் ரோசாவசந்துக்கு நன்றி.
.....
ரோசாவசந்த், சுற்றுலா முடித்து வந்திருக்கிறீர்கள். இனி நிரம்ப எழுதலாந்தானே :-).

6/21/2005 12:04:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

டி.சே நூலகத்தில் இந்த நூல் இருந்தும் அதுபற்றிய அறிமுகமின்மையால் வாசிக்கவில்லை.உங்கள் அறிமுகத்துக்கு நன்றி.டானியலின் நாவல்களில் அங்கதமாக எழுப்பப்படும் போர்க்குரலை பாமாவின் குரலுடன் ஒப்பிட்டிருக்கிறீர்கள் நல்லதொரு அவதானம்.

6/21/2005 12:19:00 AM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், நீங்களோ அல்லது வேறு எவரெனினும் டானியலின் நாவல்க்ள் குறித்து உங்கள் வாசிப்புக்களை எழுதினால் நன்றாகவிருக்கும். என்னிடம் தற்சமயம் டானியலின் எந்த நாவலும் இல்லை. டானியல் அ.மார்க்ஸிற்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்திருப்பதாய் அறிந்தேன். வாசித்திருக்கின்றீர்களா?
.......
பின்னூட்டத்துக்கு நன்றி ஈழநாதன்.

6/21/2005 03:50:00 PM
NambikkaiRAMA said...

விளக்கமான விரிவான விமர்சனத்திற்கு நன்றி அன்பரே!

6/24/2005 01:06:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

ஈழத்து பஞ்சமர் எழுத்துக்களின் பிதாமகரை வாசித்திருக்கிறேன் விரிவாகப் பதிகிறேன்.அவாரது கடிதங்கள் தொகுப்பு இருக்கிறது படித்துவிட்டு மொத்தமாகப் பதிகிறேன்.

6/24/2005 02:05:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி positiveRAMA.

6/24/2005 11:41:00 AM
இளங்கோ-டிசே said...

//ஈழத்து பஞ்சமர் எழுத்துக்களின் பிதாமகரை வாசித்திருக்கிறேன் விரிவாகப் பதிகிறேன்.அவாரது கடிதங்கள் தொகுப்பு இருக்கிறது படித்துவிட்டு மொத்தமாகப் பதிகிறேன்.
//
கட்டாயம் ஈழநாதன் இதை விரைவில் செய்யுங்கள். மற்றது, டானியலை தமிழ்நாட்டு தலித் படைப்புக்களுக்கும் முன்னோடியாக முன்வைத்து எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் வாசித்திருக்கின்றேன். டானியலில் என்னை ஆகார்சிக்கும் இரண்டு விடயங்கள் உண்டு. முதலாவது, தலித்தியம் என்பது இன்றையப் பொழுதைப் போல பேசப்படாத சூழலில் தன்னை வெளிப்படையாக பஞ்சமர் என அறிவித்து பஞ்சமருக்குமான படைப்புக்களை எழுதிய துணிச்சல். இரண்டாவது எழுதுவதோடு மட்டுமில்லாமல் பஞ்சமர் நடத்திய/பஞ்சமருக்காய் நடத்தப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் நின்று போராடியது.

6/24/2005 11:51:00 AM
சுந்தரவடிவேல் said...

அக்காவின் சாயல் தெரியும் பெண்ணைப் பற்றிய கவிதைக்குப் பிறகு இப்போதுதான் இங்கே வந்து மேய்ந்தேன். டொராண்டோ தமிழ் நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பு அசர வைக்கிறது. வாழ்த்துக்கள்.
இந்தப் புதினத்தைப் பற்றிய விமர்சனம் நன்று. நுணுக்கமாய்ப் பதிந்திருக்கிறீர்கள்.

6/25/2005 06:36:00 AM
Chandravathanaa said...

நல்ல பதிவு.
ஆனால் எனக்கு இன்னும் இப்புத்தகங்கள் கிடைக்கவில்லை.
(சுவிஸ் றஞ்சி, பத்மனாபஐயர் போன்றவர்கள் அனுப்பி வைத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய
ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். அதனால் அனேகமான வெளியீடுகள் என்னை வந்தடைவதில்லை)
சுருக்கு அல்ல கருக்கு.
பாமாவின் கருக்கு, சங்கதி இரண்டையும் தொகுத்த தழும்புகள் காயங்களாகி பற்றி எழுத எண்ணமுண்டு.

டி.சே நீங்கள் குறிப்பிட்டது போல
வட்டார மொழி வழக்கு சிலவேளைகளில் வாசிப்பு ஓட்டத்தை சற்று நிறுத்தி நிதானித்து ஓடச்செய்தாலும் பாமாவின் எழுத்துக்களோடு ஒன்றி விட்டால் அது பெரிய விடயமாகத் தெரிவதில்லை..

6/25/2005 07:26:00 AM
-/பெயரிலி. said...

/டொராண்டோ தமிழ் நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பு அசர வைக்கிறது./
சுவ, நீரேன் பேசாமல் படகோட்டப்போகக்கூடாது? என்ரை bro வைச் சும்மா பப்பாசியில ஏத்துறீர். உது நல்லதுக்கில்லை பாரும். சும்மாவே அடிக்கிற ஆனிக்காத்துக்கு ஆடிக்கொண்டிருக்கிறவருக்கு நீர் தேவையில்லாம உசார் குடுக்கிறீர். உது உமக்கு, எனக்கு, வலைக்கு நல்லதுக்கில்லை. அவ்வளவுதான் சொல்லுவன்

6/25/2005 08:34:00 AM
இளங்கோ-டிசே said...

உங்கள் பகிர்தலுக்கு நன்றி சுந்தரவடிவேல், சந்திரவதனா.
........
//சும்மாவே அடிக்கிற ஆனிக்காத்துக்கு ஆடிக்கொண்டிருக்கிறவருக்கு நீர் தேவையில்லாம உசார் குடுக்கிறீர்.//
பெயரிலி நீங்கள் இப்படிக்கூறத்தான், நானும் சுந்தரவடிவேலும் அமெரிகாவிலிருந்து தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் கட்டுமரத்தில் பயணிக்கும் திட்டம் நினைவுக்கு வந்தது. இந்த மாத முடிவில் ஏலேலோ ஐலசா கூறுவதாய் இருக்கின்றோம். நீங்களும் சேர்ந்துகொண்டால் உங்களின் இயற்கைத் துறைமுகத்தையும் பார்க்கலாம். ஆனால் கடல்நடுவில் வந்துவிட்டு, ஐயையோ இன்றைக்கு படமும் பதிவும் போடமறந்துவிட்டேன் கட்டுமரத்தை கரையை நோக்கித் திருப்புங்கடா என்றெல்லாம் அழுது ஒப்பாரி வைக்கக்கூடாது :-).

6/27/2005 10:07:00 AM