கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அனுக் அருட்பிரகாசத்தோடான நேர்காணல்

Sunday, February 12, 2017


 டிசே: உங்களைப் பற்றி சிறு அறிமுகம் மற்றும் நீங்கள் எழுத வந்த சூழல் பற்றிச் சொல்ல முடியுமா?

அனுக்: நான் கொழும்பில் 1988 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலியை சேர்ந்தவர்கள். சிறு வயதாக இருக்கும் போது, நான் இரண்டு வருடங்கள் தாயாரோடும் தங்கையோடும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆங்கிலத்தில் படித்தபடியால் நான் இலங்கைக்கு திரும்பி வந்த பிறகு எனது படிப்பு ஆங்கிலத்தில்தான் தொடர்ந்தது. 18 வயதில் எனக்கு அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலைத்தேய தத்துவத்தில் பட்டம் வாங்கிய பிறகு, ஒரு வருடமாக தமிழ் நாட்டில் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்தேன். அங்கேதான் நான் ஊக்கத்தோடு எழுதத் தொடங்கினேன். ஒரு வருடத்திற்குப் பிறகு நான் திரும்ப அமெரிக்காவிற்குப் போய் தத்துவத்தில் கலாநிதி பட்டத்திற்குப் (PhD) படிக்க ஆரம்பித்தேன். எனது ஆய்வேட்டை எழுத வேண்டியிருந்த நேரத்தில் தான் நான் இந்த நாவல் எழுதினேன்.


டிசே: The Story of a Brief Marriage என்ற நாவலை எழுத உங்களுக்கு எழுத எது உந்துதலாக இருந்தது? 

அனுக்: 2009 இல் போர் முடிந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் இலங்கையர் யாரோடும் பழக்கம் இல்லாமல் தனியாகப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த அந்நிய சூழலில் ஒவ்வொரு நாளும் இலங்கையிலிருந்து வெளி வந்த செய்திகளை வாசிப்பேன், ஆனால் உண்மையைச் சொன்னால் 2011 இல் வெளி வந்த Sri Lanka's Killing Fields என்ற ஆவணப்படத்தைப் பார்த்துத்தான் போரின் இறுதிக் காலத்தில் வன்னியில் நடந்த கொடுமைகளைப் பற்றி தெளிவாக அறிந்துக்கொண்டேன். அது என்னை கடுமையாகப் பாதித்தது. இதெல்லாம் நடக்கும் போது, நான் எல்லா வசதிகளோடும் தத்துவம் படித்துக்கொண்டிருந்தேனே என்று வருந்தினேன். அந்தக் குற்ற உணர்ச்சியோடுதான்  இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். வரலாறு எனக்கும் எனது குடும்பத்திற்கும் கொடுத்த அதிர்ஷ்டத்தால் வன்னியில் இருக்கின்ற மக்களின் நிலை எனக்கு நேரவில்லை. நான் அனுபவிக்காத -- ஆனால் வன்னி மக்கள் அனுபவித்த -- அவலங்களைப் புரிந்து கொள்வதற்காகத்தான் இந்தப் புத்தகத்தை எழுத முயற்சித்தேன். 


டிசே: இந்த நாவல் குறித்த அளவில், நீங்கள் ஒரு அபுனைவாக (non fiction)  எழுதச் சேகரித்த விடயங்களை புனைவாக (fiction) மாற்றி பிறகு எழுதியதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அப்படி மாற்றும்போது நீங்கள் என்னவகையான சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்?

அனுக்: ஒரு எழுத்தாளராக எனது பாத்திரங்களின் மனநிலை பற்றி எழுதுவதுதான் எனது பிரதானமான நோக்கம். ஆனால் வன்னி வாழ்க்கையோ, போர் சூழலலோ நான் ஒரு நாளும் அனுபவிக்காதவை. அப்படி இருக்க போரின் இறுதிக் காலத்தில் சிக்கியிருந்த மக்களின் மனநிலை பற்றி தன்னம்பிக்கையோடு எழுத எனக்கு ஒரு தகுதியும் இல்லை. எத்தனை ஆவணப்படங்கள் பார்த்தாலும், எத்தனை பேரோடு கதைத்தாலும், எத்தனை மனத்தத்துவ கட்டுரைகள் வாசித்தாலும், பாதிக்கப்படாதவனுக்கு பாதிக்கப்பட்டவரின் நிலை விளங்காது. உறுதியில்லாமல் கற்பனை செய்துதான் விளங்கிக் கொள்ள  முயற்சிக்கலாம். ஆன படியாற் தான் நான் இந்த விடயங்கள் பற்றி புனைவாக எழுதினேன். இது பற்றி என்னால் புனைவாக மாத்திரமே எழுத முடிந்தது.


டிசே: தமிழில் போர் பற்றி வந்த நூல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருந்ததா?

அனுக்: எனது சிறுவயதில் நான் ஒரு வருடம் மட்டும் தமிழில் படித்தபடியால் தமிழில் வாசிப்பது எனக்கு சவாலாக இருக்கின்றது. போர் பற்றி தமிழில் வெளி வந்த படைப்புகளில் நான் வாசித்தவை மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்: ஷோபாஷக்தியின் கொரில்லாவும் சேரனுடைய சில கவிதைகளையும் படித்திருக்கின்றேன்.  


டிசே: ஒரு நேர்காணலில், ஆங்கிலத்தில் எழுதினாலும் ஆங்கிலம் ஒரு காலனித்துவ மொழி அது குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன் எனக்கூறியிருக்கின்றீர்கள்.  Chinua Achebe போன்றவர்கள் ஒருகாலத்தில் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தம் தாய் மொழிகளுக்குத் திரும்பியிருக்கின்றார்கள். உங்களுக்கும் அப்படி தமிழில் நாவல்களை எழுதும் விருப்பம் இருக்கின்றதா?

அனுக்: தமிழில் நாவல்கள் அல்லது கட்டுரைகள் எழுத வேண்டும் என்றொரு ஆசை நிச்சயம் இருக்கின்றது. என்னைப் பொறுத்தளவில் ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி. ஆங்கில எகாதிபத்தியத்தின் காரணமாக இன்றைக்கு உலகத்தில் எங்கும் ஆங்கில மொழிக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருக்கின்றது. ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளருக்குத்தான் கூடுதலான பரிசும் புகழும் சேர்கின்றது. தென்னாசியாவில் ஆங்கில மொழி கதைக்கக்கூடியவர்கள் மிகக் குறைவாக இருந்தும் வெளியுலகத்திற்கு தென்னாசியா பற்றிச் சொல்ல ஆங்கிலத்தில் எழுதும் தென்னாசிய எழுத்தாளருக்குத்தான் செல்வாக்கு அதிகம். இப்படியொரு நிலையில் ஒரு தமிழனாக இருந்தும் நான் தமிழ் மொழியிலன்றி ஆங்கிலத்தில் மட்டும் எழுதுகின்றேன் என்பது வெட்கப்படக் கூடிய விடயம். தமிழ் மக்களும், தமிழ் மொழியும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நான் தமிழில் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் நான் திடீரென தமிழில் எழுத ஆரம்பிக்க முடியாது. தமிழுக்குத் தக்க மரியாதையைக்  கொடுக்க வேண்டும். தமிழில் எழுத வேண்டும் என்றால் முதல் தமிழ் இலக்கிய மரபில் பரீட்சயமாக வேண்டும். எழுதத் தொடங்க முன்னர், அந்த மரபுக்குள் ஓரளவுக்காவது மூழ்க வேண்டும், இல்லாவிட்டால் நான் தமிழில் எழுதுவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட எழுத்து மாதிரித்தான் இருக்கும. நான் தமிழில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் இலக்கிய மரபில் அவ்வாறு மூழ்கப் பல வருடம் செல்லும் என்று நினைக்கின்றேன்.

டிசே: இலங்கையில் நடந்த யுத்தம் பற்றியும், அதன் பிறகான காலம் பற்றியும்  Still Counting the Dead (Frances Harrison),  The Cage (Gordon Weiss), The Seasons of Trouble (Rohini Mohan) போன்ற பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை எப்போதும் வெளியாட்களின் பார்வை போன்ற உணர்வையே தந்திருந்தன. உங்களது நம்மிடமிருந்து எழும் ஒரு குரல் போலத் தோன்றியது. முக்கியமாய் நீங்கள் 'புலிகள்' என்று எந்த இடத்திலும் பாவிக்காது, 'இயக்கம்' என்றே பாவிக்கின்றீர்கள். அது போலவே  போர்ச்சூழலின் சிறுசிறு விபரிப்புக்கள் கூட மிக நுட்பமாக எழுதப்பட்டிருக்கின்றது. அதற்கு முதலில் நன்றி.

இனி இலங்கையில் அரசியல் எப்படி இருக்கும்? போருக்குப் பின்பாக தமிழர்களின் எதிர்காலம் எப்படியிருக்குமென நினைக்கின்றீர்கள்?

அனுக்: உங்களது நல்ல வார்த்தைகளுக்கு நன்றி. இலங்கையில் அரசியல் அல்லது தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல எனக்கு தகுதி ஒன்றும் இல்லை. நாளில் அரைவாசி நேரம் நான் எனது அறையில் இருந்து எனது உள்ளத்தில் இருப்பதை எழுத்தால் வெளிப்படுத்த முயற்சிப்பேன். எனது உள்ளத்தைப் பற்றித்தான் எனக்குத் தெரியும். வேறு விடயங்கள் பற்றி சொல்லப் போனால் நான் கற்பனை செய்துதான் சொல்ல வேண்டும். தெரிந்தவர்கள் அந்த விடயங்கள் பற்றி கதைக்கட்டும்.

(நன்றி: 'அம்ருதா' - மாசி/2017)


பனாமா

Sunday, February 05, 2017

பயணக்குறிப்புகள் - 14

El Valle எனப்படும் இந்த இடம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எரிமலையாக இருந்திருக்கின்றது. இப்போது அப்படியான கொந்தளிக்கும் எந்த தடயங்களுமில்லை. மழைக்காடுகளுக்குரிய மரங்களும் ஆங்காங்கே வீடுகளும் உள்ள இடமாய் மாறிவிட்டது. நானும் நண்பரும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து இந்த இடத்துக்குப் போயிருந்தோம். பனாமா தங்கநிறத் தவளைகளுக்குப் பிரசித்தமானது. முக்கியமாய் இந்த பள்ளத்தாக்கில் அவை நிறைய இருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது என்கின்றபோதும் எங்களுக்கு அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒருகாலத்தில் இங்கிருந்த பூர்வீகமக்கள் வேட்டையாடுவதற்கு மிகவும் விசம் வாய்ந்த இந்தத் தவளைகளின் தோலை தமது அம்புகளில் பாவித்திருக்கின்றனர்.
இந்த பள்ளத்தாக்கில் பகலிலேயே காரையோட்டுவது மிகவும் கஷ்டமாயிருந்தது. அந்தளவிற்கு நிறைய வளைவுகள். அப்படியே தொடர்ந்து பள்ளத்தாக்கிற்குப் போனபோது அதை ஓரிடத்தில் நிதானமாய்ப் பார்ப்பதற்கு இடமொன்று அமைத்திருந்தனர். மற்ற இடங்களில் ஒரு காரை வீதியிலிருந்து ஓரமாய் நிறுத்துவதற்கே இடமில்லாது மிக குறுக்கலான பாதைகளாக இருந்தன. எங்களுக்கு முன்னர் ஒரு ஸ்பானிய குடும்பம் ஒன்று நின்று பள்ளத்தாக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அநேகமாய் எந்த இலத்தீன் அமெரிக்கா நாட்டுக்குச் சென்றாலும் என் போன்றவர்களின் தோல் நிறத்தைக் கண்டு ஸ்பானிசிலேயே கதைக்கத்தொடங்கிவிடுவார்கள். பனாமா போனபோதும் தொடக்க நாட்களிலேயே இந்த அனுபவங்களே ஏற்பட்டிருந்தன. அவர்கள் எதைச் சொல்லத்தொடங்க முன்னரே 'நோ அவளோ எஸ்பஞோல்' எனச் சொல்லிவிடுவதைப் பார்த்து நண்பர் அப்படி உடனே சொல்லவேண்டாம், அவர்களைக் கொஞ்சம் கதைக்கவிட்டால்தான் நாங்களும் எஸ்பஞோலைக் சற்றேனும் கற்கலாமெனச் சொல்லியிருந்தார். அந்த ஞாபகத்தில் பள்ளத்தாக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஆண் அதை எங்களுக்கு சுட்டிக்காட்டி கதை சொல்லத்தொடங்கியபோது குறுக்கிடாது முதலில் அமைதியாக கேட்டேன். அவர் நிறையத் தொடர்ந்து கதைக்கத்தொடங்கியபோது எங்களுக்கு மொழி தெரியாச் சிக்கலைச் சொன்னபோது சில ஆங்கிலவார்த்தைகள் பேசத்தெரிந்த மகளை அருகில் அழைத்துவந்தார். ஆனால் பேசும்மொழிகளை விட சைகை மொழி பெரிதல்லவா? அவர் சொல்லச் சொல்ல நான் இது குறித்து வாசித்த விடயம் நினைவுக்கு வரத்தொடங்கியது.
இந்த மலைகளை உற்றுப் பார்த்தால் அதில் ஒரு பெண் படுத்திருப்பதுபோன்று தெரியும். அதை அவர்கள் Sleeping Indian Girl என அழைக்கின்றார்கள். இதன் பின்னணியில் ஒரு கதையும் இருக்கிறது. ஒரு பூர்வீகப் பெண்ணை இன்னொரு பழங்குடியில் இருக்கும் இளைஞன் நேசிக்கின்றான். பெண்ணின் தந்தை இந்தக் காதலை அங்கீகரிக்கவில்லை. எனவே அவள் தன் பழங்குடியின் கெளரவத்திற்காய் அந்த இளைஞனின் காதலை மறுக்கின்றாள். அதன் நிமித்தம் அவள் கண்முன்னாலே அந்தக் காதலன் தற்கொலை செய்கின்றான். அந்தத் துயரம் தாங்காது இந்த மலைகளுக்குள் தொலைந்து இறந்துபோகின்றாள் அந்தப் பெண். அவளின் நினைவுகளைச் சுமந்தவாறு இந்த மலைத்தொடர் நிற்கின்றது. அவளாலேயே இந்த மலைகளில் மரங்களும் பூக்களும் தளிர்க்கவும் பூக்கவும் செய்கின்றது என இன்னமும் இம்மக்கள் நம்புகின்றனர்.
தொடர்ச்சியாக காரில் பயணம் செய்து, El Chorro Macho என்கின்ற நீர்வீழ்ச்சியைப் பார்க்கப்போனோம். அதைப் பார்ப்பதற்காய் ஒரு சிறு மழைக்காட்டினூடாக நடந்து போகவேண்டியிருந்தது. இப்போது பனாமாவில் கடும்கோடைக்காலம் என்பதால் நீர் அவ்வளவாக அருவியினூடாகப் பாயவில்லை. ஆனால் அந்த அருவி ஓடிப்போகின்ற ஓரிடத்தை இயற்கையாக குளிக்கும் இடமாக மாற்றியிருந்தனர். நாங்கள் போயிருந்த நேரம் மழை வருவதைப் போல விளையாட்டுக் காட்டிக்வ்கொண்டியிருந்தது. அவ்வளவு ஆட்களிருக்கவில்லை. ஒரு சிறுபையனுடன் வந்திருந்த குடும்பமும்,வேறொரு இளைஞனும் மட்டுமே அந்தச் சிறு குளத்தினருகில் இருந்தார்கள்.
நண்பர் என்னோடு எதையும் பேசாமல் கொஞ்ச நேரம் விடு தியானத்திற்குள் இருக்கப்போகின்றேன் என்றார். நான் நண்பரையும் தனித்திருந்த அந்த இளைஞரையும் மாறிமாறி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். தனிமையை எப்படி இரசிக்கவேண்டும் என்பதை அந்த இளைஞரிடம் கற்றுக்கொள்ளலாம் போலிருந்தது. நாங்கள் போனபோது அவர் நீந்திக்கரையேறிக்கொண்டிருந்தார். பிறகு ஈரம் காய்ந்தபடி, ஒரு பிளாஸ்கிலிருந்து நீரையோ/தேநீரையோ நிதானமாக அருந்தினார். பின்னர் கூடவே கொண்டுவந்திருந்த இரண்டு மூன்று மாம்பழங்களைச் சாப்பிடத்தொடங்கினார். சரி இனி ஆடைகளின் ஈரம் காய்ந்திருக்குமே வெளிக்கிடப்போகிறார் என்று பார்த்தால், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வானத்தை பார்த்தபடி பெஞ்சில் மல்லாந்து படுத்து வாசிக்கத் தொடங்கினார். கற்றவர்க்கு சென்றமிடமெல்லாம் சிறப்பு என்றமாதிரி, தனிமையை இரசிக்கத் தெரிந்தவர்க்கு எந்த இடமாயினும் இனிமைதான் போல என எண்ணிக்கொண்டேன்.
நண்பர் நீருக்குள் இறங்கப்போவதில்லை என்றார். கொஞ்சம் குளிர்ந்தாலும் நான் ஆசை தீரக் குளித்தேன். பின்னர் இக்காட்டினுள் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டபோது எங்களைப் போன்ற மூன்றுபேர் அவ்வளவு வாகனங்கள் இல்லாத வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து, உங்களுக்கு ride வேண்டுமா எனக் கேட்டோம். இரண்டு பெண்களும், ஒரு ஆணும் மகிழ்ச்சியுடன் ஏறிக்கொண்டனர். அவர்கள் ஹொலண்டிலிருந்து El Valle வந்திருக்கின்றனர். ஒன்றரை மாதங்கள் இங்கே தங்கப் போகின்றனர் எனச் சொன்னார்கள். ஒரு மார்க்கெட்டிற்கு அருகில் இறங்கிக்கொண்டார்கள். நான் அந்தச் சந்தையில் மாம்பழங்களைக் கண்ட சந்தோசத்தில் அவற்றை வாங்கினேன். கத்தியில்லாவிட்டாலும் ஊரில் பற்களைக் கத்தியாக்கிய வித்தை தெரியுமென்பதால் நடந்துபோகின்றவர்கள் விநோதமாய்ப் பார்த்தாலும் அதை ருசித்து சாறு ஒழுக ஒழுகச் சாப்பிட்டேன்.
அருகில் இயற்கையான வெந்நீர்க்குளியல் இடமிருக்கிறதென ஏற்கனவே வாசித்து வைத்திருந்தேன். எங்களோடு காருக்குள் ஏறியவர்கள் ஏற்கனவே அங்கு போயிருந்தார்கள். நான் அதை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் போல எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர்களைக் கூறியதைக் கேட்டபோது அது எங்களை அவ்வளவாய்க் கவர்ந்திழுக்கவில்லை. அதுபோலவே அருகிலிருந்த மிருகக் காட்சிசாலைக்கும் போக விரும்பவில்லை. அதையதை அதன் அதன் இடங்களில் விடவேண்டும் என்பதே இயற்கையானது என்ற எண்ணம் கூடிக்கொண்டிருப்பதால் மிருகக்காட்சிச் சாலைகள் மீதும் ஒருவித இடைவெளி இப்போது வந்துவிட்டது போலும்.
தங்கத் தவளையைக் கண்டால் பிடித்துக்கொண்டு போகலாம் என நண்பர் பிரியப்பட்டார். எனக்கும் தங்கநிறத்தில் மினுங்கிக்கொண்டிருந்த உள்ளூர் ஸ்பானிய பெண்களை இன்னும் கொஞ்சநேரம் இருந்து இரசிக்கட்டுமோ எனக் கேட்க விருப்பமாயிருந்தது. ஆனால் வாய்திறந்து கேட்கவில்லை.

Road Trip - 01 (Canada)

Saturday, February 04, 2017

பயணக்குறிப்புகள் - 14

கனடா பத்து மாகாணங்களையும் 3 territoriesகளையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இங்கு நீண்டகாலமாய் வசித்தாலும் இதுவரை இரண்டு மாகாணங்களை மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது சற்று அவமானமான விடயந்தான். பத்து மாகாணங்கள் என்றாலும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் ஒவ்வொரு மாகாணங்களும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருக்கின்றன. கனடாவில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்குப்போவதற்குள், ஐரோப்பா என்றால் நாம் இன்னொரு நாட்டைப் பார்த்துவிடமுடியுமென எங்களுக்குள் கதைப்பதும் உண்டு.

Sea Caves, New Brunswick
(நானிருக்கும்) ஒன்ராறியோ மாகாணமும், அருகிலிருக்கும் -பிரெஞ்சு பெரும்பான்மையாகப் பேசும்- கூபெக் மாகாணமும் சனத்தொகையில் கூடியது. ஆகவே பெரும்நகரங்களின் எல்லா அடையாளங்களையும் நெருக்கடிகளையும் இவற்றில் எளிதில் பார்க்கலாம். பெருநகர்களில் உலாவித்திரியப் பிடிக்குமே தவிர, ஒருபோதும் அங்கே வசிக்கவேண்டும் என்று விருப்பம் அவ்வளவு இருந்ததில்லை. ஆகவேதான் ரொறொண்டோ போன்ற பெருநகரம் போலவிருக்கும் நியூ யோர்க்கையோ, சிக்காக்கோவையோ இங்கிருக்கும் அநேகர் தேடித்தேடிப் போகும்போது அமெரிக்கா என்னை அவ்வளவு வசீகரித்ததில்லை. அமெரிக்காவிற்குள் காலடி வைப்பதற்கு அங்கிருக்கும் நண்பர்களும், நிலப்பரப்புக்களும் மட்டுமே காரணமாயிருந்திருக்கின்றது.

கனடாவில் கிழக்குக் கரையோரமும், மேற்குக்கரையோரமும் (வன்கூவர்) என்னை எப்போதும் அழைத்துக்கொண்டிருப்பவை. அதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் சமுத்திரமும், மறுபுறத்தில் பசுபிக் சமுத்திரமும் இருப்பதே. இந்து சமுத்திரத்தோடு பிறந்த ஒருவனை பிற கடல்கள் ஈர்க்காமல் இருந்தால்தான் யோசிக்கவேண்டியிருக்கும். ரொறொண்டோ போன்ற நகரில் வசிப்பவர்க்கு ஐம்பெரும் வாவிகள் அருகில் இருந்தாலும், பெரும் சமுத்திரத்திரங்களைக் காண்பதிலும், கால் நனைப்பதிலும் வேறுவகையான சந்தோசம் இருக்கிறது அல்லவா?

Quebec City
வளாகப் படிப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருடமும் கனடாவின் கிழக்கு மாகாணங்களுக்கு Road Trip செய்வது கனவாக இருந்தது. ஒருமுறை அவ்வாறு நண்பருடன் புறப்பட்டுமிருந்தேன். அப்போது நானொருவன் மட்டுமே தனியொருவராக வாகனத்தை ஓட்டக்கூடியவராக இருந்தபடியால் கூபெக்கின் தலைநகரம் மட்டுமே போகமுடிந்தது. இடையில் நித்திரையின் நிமித்தம் சிறு விபத்தும் நடந்துமிருந்தது. இம்முறை என்னைவிட அதிதூரம் காரோட்டக்கூடிய நண்பர் இருந்ததால் முழுமனதுடன் Road Trip செல்லத் தயாரானேன். மேலும் இரண்டு நண்பர்கள் எங்களுடன் இணைந்துகொள்ள உற்சாகம் கூடியது.

ஒரு நீண்ட வாரவிறுதிநாள் வந்தபோது நானும் நண்பரொருவரும் எங்கே போவதென வரைபடத்தில் ஓரிடத்தைக் குத்திவிட்டு 2013ல் பயணித்திருந்தோம். இரண்டு இரவுகள் மூன்று நாட்கள் கிட்டத்தட்ட 5000 கிலோமீற்றர்கள் காரில் பயணித்து South Dakota 'Badlands'ற்குப் போயிருந்தோம். அது ஒரு வெறிப்பிடித்த காரோட்டம். ஐந்தாறு மணித்தியாலங்கள் நித்திரை கொள்வதற்காய் ஓய்வெடுத்தததே தவிர எப்போதும் காரை ஓட்டிக்கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு வெறித்தனமான ஒரு பயணத்தைச் செய்ததால் எங்கேயெனினும் எப்படியெனினும் Road Trip அமெரிக்காவிற்குள்ளோ கனடாவிற்குள்ளோ செய்யலாமென்ற நம்பிக்கை வந்திருந்தது.

New Brunswick
கனடாவின் கிழக்குத்திசை நோக்கிய பயணத்தில் கிட்டத்தட்ட 5 மாகாணங்களைப் பார்த்திருந்தோம். இதுவரை நான் பார்த்தேயிராத 3 புதிய மாகாணங்கள். எட்டு நாட்கள், ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்திலென (நன்றி Airbnb) தங்கியிருந்தாலும் மிக நிதானமாகவே இந்தப் பயணம் அமைந்திருந்தது. நீண்ட நிலப்பரப்புக்களையும், கடலுணவுகளையும், 'அந்நியர்களின்' பயணிகள் மீதான அக்கறையையும் பற்றி விரிவாக வேறொரு பொழுதில் எழுதவேண்டும்.

எப்போதும் பேசிக்கொண்டிருக்க விரும்பாதவன் மட்டும் அல்லாது. எனது மெளனங்களைக் குழப்புகின்றவர்கள் மீதும் அவ்வப்போது கோபங்கொள்கின்ற -ஒருவகையில் கூறுவதென்றால் உள்ளொடுங்கிய பேர்வழி நான். மேலும் விடிகாலையில் எழும்புவதைப் போன்ற சித்திரவதை வேறொன்றும் இல்லையென நம்புகின்றவனும் கூட. எனக்குள் சட்டென்று விழுகின்ற மெளனங்களைச் சகித்துக்கொண்ட, அதிகாலையில் புறப்படும் பயணங்களில் எனக்காய் பொறுமையாய்க் காத்திருக்கவும் முடிந்த நண்பர்கள் இந்தப் பயணத்தில் கிடைத்தது பெரும்பேறு.

Montmorency Falls, Quebec
எந்தக் கூட்டுமுயற்சியென்றாலும் அது படைப்புச் சார்ந்து இருந்தாலென்ன, பயணம் சார்ந்து இருந்தாலென்ன, அவை முடிவடையும்போது நிம்மதியாக நிறைவுறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. அவ்வப்போது வந்த தடங்கல்களையும், பயணத்திட்டங்களின் மாறுதலையும் பொறுத்துக்கொண்டு பயணித்த நண்பர்கள் என்றும் அன்புக்குரியவர்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 5 மணிக்கு road trip தொடங்கியபோது நண்பரொருவர் முதல்நாள் மட்டுமே 1500km போகவேண்டியிருக்கிறதென GPSல் போட்டு படமெடுத்து, அனுப்பியபோது, அவருக்கு 'A long journey starts with a single step' என லா-சூ சொன்னதை பதிலாக அனுப்பியிருந்தேன்.

ஆம், எதுவென்றாலும் முதலடியில் இருந்துதானே எல்லாமே ஆரம்பிக்கின்றது.

சில மலையாளத் திரைப்படங்கள்

Thursday, February 02, 2017

கலை என்பதைப் பல்வேறு வகையில் நாம் வரையறுத்துக்கொள்ளலாம். கலை குறித்து பல்வேறுதரப்பட்டவர்கள் கூறிய கருத்துக்களும் நம்முன்னே நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. ஒரு படைப்பு அது தரும் அனுபவங்களினாலே நம்மோடு தொடர்ந்து பயணிக்கச் செய்கின்றது. செவ்வியல் ஆனாலென்ன, தற்காலப் படைப்புக்கள் ஆனாலென்ன அவை நமக்குள் கிளர்த்தும் உணர்வுகளே மறக்கமுடியாத ஒன்றாக நமக்குள் தம்மை நிலை நிறுத்திக்கொள்கின்றன.
திரைப்படம் என்பது கூட்டுழைப்பால் மட்டுமில்லை, பல்வேறு நுட்பங்களின் அற்புதமாக சேர்க்கையினால் உருவாகின்ற ஒன்று. அவ்வாறே, ஒரு திரைப்படம் தன் வசம் கொண்டிருக்கும் பல்வேறு கூறுகளின் உட்கிடக்கையினால் நம்மைக் கவர்ந்திழுக்கக்கூடும் என்கின்றபோதும் எப்போதும் திரைக்கதை என்ற முக்கியமான அடித்தளத்தை மறந்த திரைப்படங்கள் அவ்வளவு எடுபட்டதில்லையென்பதும் யதார்த்தமாகும். அண்மையில் தொடர்ச்சியாகப் பார்த்த சில மலையாளப்படங்கள் தந்த அனுபவமும் இதையே இன்னுமொரு முறை உறுதியாக்கியிருந்தது.
கிஸ்மத் (Kismath), அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) ஜக்கோபின்ரை சுவர்கராஜ்ஜியம் (Jacobinte Swargarajyam), ஒரு வடக்கன் செல்ஃபி (Oru Vadakan Selfie) போன்ற திரைப்படங்களை அவதானித்துப் பார்த்தால், அவற்றில் பெரிதாக எந்தக் கதையுமில்லை என்பது உடனேயே விளங்கிவிடும். மிகச் சாதாரண கதைகளை நமக்குப் பழக்கமான நிலப்பரப்பில் இருந்து பிரித்தெடுக்காமல் அதன் இயல்போடு இயக்கியிருப்பதால்தான் நாம் அதனிலிருந்து விலகிவிடாமல் ஒன்றிப் போக முடிகின்றது.
கிஸ்மத்தின் கதை முழுதுமே கிட்டத்தட்ட ஒரு பொலிஸ் ஸ்டேசனில் ஒருநாள் முழுதும் நடக்கும் விடயங்களே. ஆனால் எவ்வளவு அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். ஒரு சிக்கலான காதல் இணை மற்றும் அதிகாரமும் அதைத்தாண்டி அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மனிதாபிமானமும் பொலிஸ் - அவ்வளவுதான் கதை. ஆனால் படம் முடியும்வரை என்னதான் நிகழப்போகின்றது என்கின்ற ஒரு சிறிய ஊரின் பொலிஸ் ஸ்டேசனில் கதையைக் கொண்டு செல்கின்றார்கள். காதல் இருக்கின்றதென்றாலும் கதையை அது நிகழும் சூழலுக்கு வெளியே கொண்டு செல்லாமல் மிகச்சாதாரணமாக இதுதான் நிகழ்ந்தது, இவ்வளவுதான் காதல் எனக் காட்டிவிட்டு கதையை பொலிஸ் ஸ்டேசனுக்குள் கொண்டு வந்தும் விடுகின்றனர்.
இந்த நான்கு கதைகளிலும் காதல் மெல்லியதாக இருக்கின்றதே தவிர காதலைப் பற்றிய படங்களில்லை என்பதுதான் இன்னுமொரு ஆச்சரியமான ஒற்றுமை. ஒரு வடக்கன் செல்பி, தற்செயலாக ரெயினில் எடுக்கும் ஒரு செல்பிதான் கதை முழுவதற்கான காரணமென்றாலும், முக்கிய பாத்திரங்களுக்குள் எந்தக் காதலும் இருப்பதில்லை. ஜக்கோபின்ரை சுவர்கராஜ்ஜியத்தில் ஆரம்பக்காட்சியில் காதலி இருக்கின்றார் எனக்காட்டிவிட்டு படம் முடிவில் அவரைக் கேரளாவில் சந்திக்கும் சிறுகாட்சிதான் காதலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நிவின் பாலி நடித்த Action Hero Bijuவில் கூட கவனித்துப் பார்த்தோமானால் ஒரேயொரு பாடலில் மட்டுமே காதலி வருவதும் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவது மட்டுமே நிகழ்ந்திருக்கின்றது. அனுராக கரிக்கின் வெள்ளத்தில் காதலி இடமாறுவதாக இருந்தாலும், இளம் ஜோடிகளுக்கு வரும் காதலை மாண்டேஜ் காட்சிகளால் காட்டிவிட்டு கடந்துபோயிருப்பார்கள்.கிஸ்மத்தில் சாதி, மதம் மற்றும் வயது வித்தியாசமுள்ள காதலென்றாலும் அவர்கள் காதலித்தமாதிரியுடனான பெரிய காட்சிகளே இல்லை. ஆக இந்த நான்கு திரைப்படங்களில் காதலே இல்லாமலே காதலைப் பற்றிய கதையைச் சொல்கின்றார்கள் என்பதுதான் நாம் அவதானிக்கவேண்டியது.
நம் தமிழ்ச்சூழலில் நாயகன் அறிமுகமாவது, பிறகு காதலி அறிமுகம், துரத்தலும் ஊடலுமான காதல் பின்னர் பாடல்கள் என அநேக திரைப்படங்களில் அரைவாசி நேரம் இந்தக் காதலிற்கே போயிருக்கும். நமக்கு இருக்கும் பெரும் பிரச்சினை என்னவென்றால் காதல் இல்லாமல் வேறு எதையும் சிந்திக்கமுடியாது என்பதுதான். காதல் இல்லாவிட்டால் ஒரு கதையை உருவாக்கமுடியாதென நாம் கற்பிதங்களால் கோட்டைகளை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை உடைக்கவோ, மேலும் புதிதாய் அதிலிருந்து உருவாக்கவோ முடியாது திணறிக்கொண்டிருக்கின்றோம்.

இன்றைய வினீத் சிறினிவாசன், நவின் பாலி, துல்கர் மற்றும் ஃபகத் ஃபாசில் போன்றவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும்போது அவர்கள் எப்படி நண்பர்களுக்குள் மாறி மாறி நடிக்கின்றார்கள் என்பதோடு, தமது திரைப்படங்களைத் தங்களுக்குள் பேசிச் செழுமைப்படுத்துகின்றார்கள் என்பது குறித்தும் வியக்காமல் இருக்கமுடியாது. வினீத்தின் கதைதான் ஒரு வடக்கன் செல்பி. ஆனால் அதில் நடிக்கின்றாரே தவிர இயக்குநரில்லை. அதுபோலவே வினீத் தனது நண்பர் ஒருவரின் சொந்தவாழ்க்கையில் நிகழ்ந்த கதையை ஜக்கோபின்ரை சுவர்கராஜ்ஜியமாக மாற்றியிருக்கின்றார். பிரேமம் போன்ற வசூலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தைத் தந்த நவின் பாலி, அவரது தகப்பன் மற்றும் தாயின் பாத்திரங்களுக்கு முக்கியமிருக்கும் இத் திரைப்படத்தில் நடிக்கின்றார். தமிழ்ச்சூழலில் இப்படி பிரேம் போன்ற மிகப்பெரும் வெற்றிபெறும் திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்கள் அடுத்து அடைக்கலமாகும் திரைப்படங்கள் எவையாக இருக்குமென ஒருகணம் சூர்யா, விக்ரம், கார்த்தி போன்றவர்களின் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.
கிஸ்மத்தில் பெரிதாக நமக்கு அறிமுகமான பெரிய நடிகர்களுமில்லை. ஆனால் அத்தனைபேரும் நம்மால் மறக்கமுடியாதவர்களாய் மாறிப்போகின்றார்கள். ஒரு தலித் பெண் எல்லா வழிகளிலும் ஒடுக்கப்படுவதையும், எதையும் மீறி செயற்படமுடியா அவதிகளோடும் அவரின் ஒரு நாள் நகர்வதன் பதற்றத்தை எவ்வளவு எளிதாக எங்கள் மீது பற்றவைக்கின்றார்கள். ஒரு உபகதையாக அந்தப்பொலிஸ் ஸ்டேசனின் வந்து சேரும் அசாம் இளைஞனின் இயலமையில் தம் சொந்த நிலங்களை விட்டு அலைகின்ற அகதிகளின் துயரமும் அல்லவா சேர்ந்திருக்கின்றது. இப்படி ஒரு பொலிஸ் ஸ்டேசனில் ஒருநாள் பதற்றத்தோடு நகர்கையில் அதையிட்டு எந்த துலங்கமிலாது தெருவில் நடந்துபோகின்ற மக்களாகவும் நாம் பலவகையில் இருந்திருக்கின்றோம் அல்லவா?
பொலிஸ் தனது திருட்டு/இலஞ்சங்களை மறைப்பதற்காய் பலியாகின்ற ஓர் அப்பாவி இளைஞன், அம்மா என்னால் இன்று மீன் வாங்கிக்கொடுக்க முடியாது என்றும், பின்னர் பொலிஸ் ஸ்டேசனில் சித்திரவதைக்கு ஆளாகும்போது அம்மா நானின்று வீட்டுக்குச் சாப்பிடமுடியாதெனச் சொல்கின்றபோதும் நம்மையறியாமல் நமக்குள் ஏதோ செய்கின்றதல்லவா? ஒரு காதல் கதையைச் சொல்லப்போகின்ற தொடங்கின்ற கதையில் நாம் மறந்தோ கடந்தோ போகமுடியாத எத்தனை பேர் வருகின்றனர். இறுதியில் அந்த தலித் பெண் தேர்ந்தெடுக்கின்ற வாழ்வு எத்தகை நம்பிக்கையை வரச்செய்கின்றது. நமக்குப் பிடித்த தகழியால் கூட `தோட்டியின் மகனில்` தரமுடியாத நம்பிக்கையை இந்தப் பெண் தருகின்றபோது அவரை அப்படியே அரவணைத்துவிடவல்லவா தோன்றுகின்றது.

தமிழ்ச்சூழல் கதைகளின் வறட்சியில் அண்மைக்காலமாய்ச் சிக்கிக்கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்வில் மட்டுமில்லை, எழுத்துக்களாகவும் நிறையக் கதைகள் நம் முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றில் இருந்து திரைக்கதையைப் பொறுமையாகப் பின்னும் திறன் இன்னும் கைவரப்பெறாமையே இன்னுமின்னும் ஒன்றையே திருப்பச் திருப்பச் சொல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் என இருக்குமெல்லாப் பெயர்களும் தங்களுக்கு வரவேண்டுமென பலரின் பேராசைகளும் ஒரு காரணம். மேலும் கதையெழுதுபவர்கள் சிறந்த திரைக்கதை எழுதுவார்கள் என்பதில்லை. ‘நள்ளிரவின் குழந்தைகள்’ எழுதிய சல்மான் ருஷ்டி எப்படி திரைக்கதை எழுதும்போது காணாமற்போனார் என்பதை தீபா மேத்தாவின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ திரைப்படத்தைப் பார்த்தவர்க்கு நன்கு புரியும்.
ஆனால் மலையாளச் சினிமா இதை அழகாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சுவிகரீத்திருக்கின்றது. எம்.டி.வாசுதேவநாயரிலிருந்து தற்காலத்தைய உண்ணி (ஆர்) வரை அவர்களை சரியாகப் பாவித்திருக்கின்றது. ஒரு கதையிலிருந்து திரைக்கதையை உருவாக்கவும்,, அதிலிருந்து நெறியாள்கையும் செய்வதற்கும் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அண்மைய நேர்காணலில் கெளதம் வாசுதேவனிடம், 'ஏன் ஒரேமாதிரியான பின்புலத்தில் மீண்டும் மீண்டும் திரைப்படம் எடுக்கின்றீர்களெனக் கேட்கும்போது ‘ஒருவன் தியேட்டருக்கு நிறைபோதையில் வந்தால்கூட தன் படத்தை உடனேயே கண்டுபிடித்துவிடும் அடையாளங்கள் இருப்பதே தனக்குப் பெருமை’ என்கின்றார். இதிலென்ன பெருமை இருக்கின்றது?
ஒருவன் நிறைபோதையில் வந்தாலும், ஆகா இவ்வளவு அருமையாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கின்றாரே, யாரிந்த இயக்குநர் எனத்தேடும்போது அல்லவா கிடைப்பது மிகப்பெரும் மரியாதை? இத்தனைக்கும் கெளதம் வாசுதேவனின் மீது மதிப்பு வைத்திருக்கும் வினீத் ‘தட்டத்தின் மறையது’விலிருந்து ‘ஜக்கோவின்ரை சுவர்கராஜ்ஜியம்’ வரை இயக்கிய/எழுதிய/நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலிருந்தும் வித்தியாசமானவை. அந்த வித்தியாசங்களிலிருந்துதான் வினீத் தனித்து மிளிர்கின்றாரே தவிர, ஒன்றை மீண்டும் மீண்டுமாய் ஒரேமாதிரியாக நகலெடுத்துக்கொண்டிருப்பதால் அல்லவென கெளதமிற்கு ஏன் புரியவில்லை?

மலையாளச் சூழல், அவ்வப்போது கீழிறங்கியும் மேல்நோக்கியும் போய்க்கொண்டிருந்தையும் கடந்தகாலத்தை வைத்து அவதானிக்கமுடியும். ஒருகாலகட்டத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த மம்முட்டியும், மோகன்லாலும் சரிவின் விளிம்பில் போய்க்கொண்டிருந்தபோது, புதிய இளைஞர்களான வினீத், ஃபாகத், துல்கர், நிவின் போன்றவர்கள் வந்து வேறொரு தளத்திற்கு மலையாளச் சினிமாவை நகர்த்துகின்றார்கள். இந்த மாற்றம் புதிய அலைகளைக் கொண்டு வரும்போது, சரிவில் இருந்த மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களையும் மீட்டு விடுகின்றது. இன்று அங்கே முன்னணியில் நிற்கும் நாயகர்கள் பிற புதிய அலைவரிசைப் படங்களை தயாரிக்கச் செய்கின்றனர். அனுராக கரிக்கின் வெள்ளத்தை பிருத்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன் போன்றோர் தயாரிக்கின்றனர். கிஸ்மத்தை வினீத் வாங்கி வெளியிடுகின்றார்.
இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி, தமக்கென நாயக விம்பங்களில் சிக்கிக்கொண்ட நாயகர்கள் தாங்கள் வித்தியாசமான படங்களில் நடிக்கவிட்டாலும் அவ்வாறு இயக்கப்படும் படங்களை ஆதரவளிக்கலாம். திரைக்கு வெளிவர முடியாது சிக்கித்திணறும் படங்களை வாங்கி வெளியிடலாம். கதாநாயக விம்பங்களுள்ள படங்களும் வரட்டும். ஆனால் அதேசமயம் நமது நிலப்பரப்பை, கலாசாரத்தை, அசல் மனிதர்களை, நமது முக்கிய பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்களும் வருவதாலும் நாம் எதையும் இழக்கப்போவதுமில்லை.

(நன்றி: 'அம்ருதா' - தை/2017)

இந்த ஆண்டு வெளிவந்த சில நூல்கள் - சிறு அறிமுகம்

Wednesday, February 01, 2017


2016ம் ஆண்டு முடிவடைகின்ற இந்த நேரத்தில் ஈழத்து/புலம்பெயர்  இலக்கியச்சூழலை வைத்துப் பார்க்கையில் ஒரளவு நல்ல படைப்புக்கள் வந்திருக்கின்றதெனச் சொல்லவேண்டும். கடந்த ஆண்டில் ஷோபா சக்தியின்  'Box கதைப் புத்தகம்', சயந்தனின் 'ஆதிரை', குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' மற்றும் *ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி'  என்பவை வெளிவந்து நம்பிக்கையளித்துமிருந்தன.

2016ம் ஆண்டில் குணா கவியழகனின் 'அப்பால் ஒரு நிலம்' போராளியான ஒரு உளவுக்காரரின் கதையைச் சொல்கின்றது. இந்த நாவல், முற்றுமுழுதாகப் புலிகளைப் பற்றிய நாவல்தான். இன்னும் சுருக்கமாய்ச் சொன்னால் புலிகள் கிளிநொச்சி முகாமை ஓயாத அலைகள்-02ன் மூலம் கைப்பற்றுவதற்கு முன்னர் நிகழும் சம்பவங்களைப் பற்றியது.  இதில் பால்ராஜும், தீபனும் வெவ்வேறு பெயர்களில் முக்கிய பாத்திரங்களாவதை ஈழப்போராட்டம் பற்றி அறிந்த எவரும் இலகுவில் அறிவர். சூரியக்கதிர் மூலம் யாழை இராணுவம் கைப்பற்றியது, பிறகு தோல்வியில் முடிந்த சில வலிந்த தாக்குதல்களுக்குப் பிறகு பால்ராஜ் பதவியிறக்கம் செய்யப்பட்ட காலம். அவர் போராளிகளுக்கும் தலைமைக்கும் தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்ட வேண்டிய பொழுதுகளிருந்து நீள்கிறது இந்த நாவல்.

இதேபோன்று  புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த தமிழினியின் தன் வரலாற்று நூலான 'ஒரு கூர்வாளின் நிழலும்' இந்த ஆண்டு வெளியாகின்றது. தமிழினி இந்த நூலில் போரின் பின் சிறைக்குள் அடைபட்டிருந்த அனுபவங்களிலிருந்து தன் கடந்தகால இயக்க வாழ்வைப் பதிவு செய்தபடிபோகின்றார். இது ஒருவகையில் ஒரு முன்னாள் போராளி தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்வதோடு, நம் போராட்ட செல்நெறிகள் மீதும் கேள்விகளை எழுப்பியதால் இந்த ஆண்டில் வந்த நூற்களில் மிகச் சர்ச்சைக்குரிய நூலாகவும் அமைந்திருந்தது.  இந்த நூலிற்கு வந்த விமர்சனங்களைத் தொகுத்து பதில் சொல்லியிருக்கவேண்டியவரும், இன்னும் சொல்லப்படாத பல கதைகளைச் சொல்லவேண்டியவரான தமிழினியை இதே ஆண்டு நாம் மரணத்திற்குக் காவுகொடுத்ததும் கவலைக்குரிய  ஒரு விடயம். இந்த நூல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்' வெளிவருகின்றது. செல்வம், பாரிஸிலிருந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களை மிகுந்த சுவாரசியத்துடன் ஒரு கதைசொல்லியின் நுட்பத்துடன் இத்தொகுப்பில் பதிவு செய்கின்றார். பாரிஸ்ற்குத் தமிழர்கள் அவ்வளவு செல்லத்தொடங்காத 80களின் தொடக்கம் மற்றும் மொழி தெரியாத் திண்டாட்டத்துடன் ஒரு புதிய வாழ்வைத் தொடங்கும் நம்மவர்களின் ஆரம்பச் சுவடுகளை நாம் இந்தப் புத்தகத்தில் அறிந்துகொள்ளமுடியும்.

கனடா-இலங்கை-இந்தியா என பல்வேறு நாடுகளில் மாறி மாறி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலும் இந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றது. சயந்தனின் 'ஆதிரை'யைப் போல நிறையப் பக்கங்கள் கொண்ட நாவல் இது. இதன் முக்கிய பின்னணியாக இந்திய இராணுவம் இலங்கையில் வந்திறங்கிய காலம் இருக்கின்றது. பரணி வானதி என்கின்ற இரண்டு முக்கிய பாத்திரங்களுக்குள் முகிழும் காதலினூடாக,  அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களைப் பற்றி இந்த நாவல் பேசுகின்றதாயினும், அன்றைய காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த  முக்கிய சில சம்பவங்கள் ஏன் பேசப்படவில்லை என்கின்ற விமர்சனம் இந்த நாவலின் மீது வைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இவற்றைத்தாண்டி 'அப்பால் ஒரு நிலம்' போல, 'பார்த்தீனியமும்' ஒரு முக்கிய நாவலாக பலரால் விதந்து உரைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலை'ப்போல, இன்னொரு முன்னாள் போராளியான வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' என்ற போருக்குப் பின்பாய் சிறைவைக்கப்பட்ட கால அனுபவங்களின் தொகுப்பாய் வந்திருக்கின்றது. இந்த நூல், முற்றுமுழுதாக சிறைக்குள் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுகின்றது. போர்களத்திலும் மற்றும் அரசியல் தளத்திலும் நின்ற பெண்போராளிகளின் உளவியலையும், பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையிற்குத் தம்மைத் தயார்ப்படுத்தவதையும் மிகுந்த வலிகளுடன் இது பதிவு செய்கின்றது. இன்னமும் சிறைக்குள் சென்ற பெண் போராளிகள் பற்றி புறம் கூறுவதையும், சிறையால் வெளிவந்தபின்னும் அவர்களை அக்கறையுடன் கவனிக்காத நம் தமிழ்ச்சமூகம் இந்த நூலை கட்டாயம் நிதானமாக வாசித்துப் பார்க்கவேண்டும்.

இதே ஆண்டு, 'கனவுச்சிறை', 'கதா காலம்' போன்ற நல்ல நாவல்களை எழுதிய தேவகாந்தனின் 'கந்தில் பாவை'யும் வெளிவந்திருக்கின்றது. சில நூற்றாண்டுகளில் ஒரு குடும்பத்தில் நிகழும் கதையை கனடாவிலிருந்து கந்தரோடை வரும் நீள்கின்றபடி சுவாரசியமாக தேவகாந்தன் எழுதிச்செல்கின்றார். மேலும் தமயந்தியின் 'ஏழு கடல் கன்னிகள்', ந.மயூரரூபனின் 'மரத்தில் தொங்கும் பாம்பு' மற்றும் இளையவரான அனோஜனின் 'சதைகள்' போன்ற கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

அத்துடன் ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த எல்லாளன் எழுதிய 'ஒரு தமிழீழ போராளியின் நினைவுக் குறிப்புகள்' எனும்அனுபவங்களின் தொகுப்பும்,  NLFT மற்றும் PLFT அமைப்புக்களைக் கட்டியமைத்தவரான விசுவானந்த தேவனைப் பற்றி அவரின் நண்பர்கள் எழுதி தொகுத்த நூலும்,  'தாங்கொண்ணா துன்பம்' என்ற NLFT ஐச் சேர்ந்த அன்ரனைப் பற்றி வெளிவந்த தொகுப்பும்,  நாம் தவறவிடாது வாசிக்கவேண்டிய புத்தகங்களாகும்.

இவை இந்த ஆண்டில் வெளிவந்து என் கைகளுக்குக் கிடைத்த சில நூல்களாகும். இதைவிட வேறு பல புத்தகங்கள் பல்வேறுபகுதிகளிலிருந்து வெளிவந்திருக்கும்.  இதை ஓர் ஆரம்பக்குறிப்பாக வைத்து, விடுபடல்களை பிறரும் எழுதத் தொடங்கினால் இன்னும் நன்றாகவிருக்கும்.

(நன்றி: 'பிரதிபிம்பம்')
* பிரதிபிம்பத்தில் வெளிவந்தபின், லெனின் சின்னத்தம்பி 2015ல் வெளிவந்தது என்பதை நண்பரொருவர் நினைவூட்டினார். திருத்தவேண்டிய குறிப்பு.

Genius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..

Friday, January 20, 2017

தமிழ்ச்சூழலில் இன்னும் படைப்புக்களைச் செம்மையாக்கும் எடிட்டருக்கான தேவை உணரப்படவேயில்லை. எத்தனையோ சுமாரான நாவல்களை நல்ல நாவல்களாக்குவதற்கும், நல்ல படைப்புக்களை சிறந்த படைப்புக்களாக்குவதற்கும் ஒரு எடிட்டர் அவசியம் தேவைப்படுகின்றார். படைப்பாளிக்கும் எடிட்டருக்குமான உறவு என்பதும் கத்திமுனையில் நடப்பது போலத்தான். படைப்பவருக்கு தான் கஷ்டப்பட்டு எழுதியதை கத்தரிக்கின்றார் என எடிட்டர் மீதும், தேவைக்கு அதிகமின்றி இருப்பதை வெட்ட ஏன் இவரேன் தயங்குகின்றாரென படைப்பாளி பற்றி எடிட்டரும் நினைப்பதால் வரும் மனவருத்தங்கள், இரண்டு பேருக்குமான நல்ல பரஸ்பரப்புரிந்துணர்வால் மட்டுமே கடந்துபோகக்கூடியவை.
Genius என்கின்ற இந்தப்படம் Max Perkins என்கின்ற எடிட்டரைப் பற்றிய படம். அவர் Ernest Hemingway, Scott Fitzgerald, Thomas Wolfe போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் சில நூற்களை திருத்திச் செம்மையாக்கி வெளியிட்டிருக்கிறார். பல்வேறு பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு தமது முதற்படைப்பை வெளியிடத் திணறிய Scott Fitzgerald, Thomas Wolfe போன்றவர்களை Max Perkinsயே முதன்முதலில் கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.
இந்தப் படத்தில் எர்னஸ்ட், ஸ்கொட் போன்றவர்கள் இருந்தாலும் அவர்கள் உபபாத்திரங்களாய் இருக்க, Thomas Wolfeற்கும் Max Perkinற்கும் இடையிலான படைப்பாளி-எடிட்டர் உறவே இதில் முக்கியப்படுத்தப்படுகின்றது. எர்னஸ்ட்டும், ஸ்கொட்டும் மிகக் கச்சிதமான சொற்களில் சிறிய நாவல்களை எழுதிக்கொண்டிருக்க, தோமஸோ சொற்கள் வழிந்தோட பெரும் நாவல்கள் எழுதுகின்றார். எப்போதும் எழுதிக்கொண்டிருப்பதில் பித்துப்பிடித்தவரோ என்று நினைக்குமளவிற்கு தோமஸ் நிறைய எழுதித் தள்ளுகின்றார். அதன்பொருட்டு தன் காதலியை, இன்னபிற வாழ்வின் உன்னதமான விடயங்களைக் கூட இழக்கின்றார். ஒருவகையில் எழுத்தைத் தவிர வேறொன்றுமே அவருக்குப் பெரும் விடயங்களாகத் தெரிவதேயில்லை. முதல் நாவலில் ஏதோ ஒருவகையில் அவரது குடும்ப உறவினர்களையும், அவர் வாழ்ந்த நகரையும் பிழையாகச் சித்தரித்து அவமானப்படுத்திவிட்டார் எனக் கோபத்தில் இருந்த அவரது நகர மக்கள், இரண்டாவது நாவலில் அவர் தமது நகரத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை என்றும் கோபித்திருக்கின்றனர் என்பது ஒரு முரண்நகை.
Look Homeward, Angel மற்றும் Of Time and the River ஆகிய தோமஸின் இரண்டு நாவல்களும் மக்ஸால் மிக நுட்பமாகத் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் புகழை தோமஸ் வாழ்ந்த காலத்திலே பெற்றிருக்கின்றன. பின்னர் மக்ஸோடு ஏற்பட்ட முரண்பாடுகளாலும், பெரும் பதிப்பகங்கள் தேடி வந்ததாலும் தோமஸ் வேறு பதிப்பகங்கள் மூலம் தன் படைப்புக்களை வெளியிட்டாலும், அவரது நாவல்கள் முன்னரைப் போல அந்தளவு பிரபல்யம் அடையவில்லை. மேலும் தோமஸ் தனது இளவயதில்(37) காசநோயால் மரணமடைய, அவரின் இறப்பின் பின்னாலே அவர் எழுதிமுடித்த பல படைப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தோமஸின் எழுத்து, அவருக்குப் பின்னால் வந்த பல படைப்பாளிகளில் ( Jack Kerouac, Ray Bradbury) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. காசநோய் முற்றி, மரணம் நெருங்கிவிட்டதென்பதை அறியும் தோமஸ், சில காலம் தொடர்புகளின்றி இருக்கும், தனது தொடக்க எடிட்டரான மக்ஸிற்கு எழுதும் இறுதிக் கடிதம் மிகவும் உருக்கமானது.
இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது சென்ற ஆண்டு வாசித்த நாவல்களான தேவிபாரதியின் 'நட்ராஜ் மகராஜ்'ஜையும், தேவகாந்தனின் 'கந்தில் பாவை' பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். இவ்விரு நாவல்களுக்கும் நல்ல எடிட்டர்கள் கிடைத்திருந்தால் 50-100 பக்கங்களைக் கறாராகக் கத்தரித்து, சில மாற்றங்களை உட்புகுத்தி செம்மையாக்கியிருந்தால், தமிழில் மிகச்சிறந்த நாவல்களாக இவற்றை ஆக்கியிருக்கலாம் போலத் தோன்றியது.

அல்லிப்பூ குறிப்புகள்

Tuesday, January 17, 2017

இன்குலாப் அவர்கள் காலமானபோது, அவரது கவிதைகளில் பிடித்த ஒரு கவிதையான 'பவுர்ணமி இரவில் வந்தவரே' கவிதையைப் பகிர்வதற்காய் 'இன்குலாப் கவிதைகள்' தொகுப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். வீடு மாறியபின் ஐந்தாறு பெட்டிகளில் திறக்கப்படாது புத்தகங்கள் இருட்டறைக்குள் பதுங்கியிருக்கையில் அவற்றுள் பொறுமையாய் இதைத் தேடி எடுக்கவும் முடியவில்லை. அத்தோடு ஒவ்வொருமுறையும் எதையோ தேடப்போய் எவற்றையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவேன். அசதா மொழிபெயர்த்த 'வீழ்த்தப்பட்டவர்களும்' பிரேம்-ரமேஷின் 'மகாமுனி'யும், ஷோபா சக்தியின் 'எம்.ஜி.ஆர்.கொலைவழக்கு'ம் மீள்வாசிப்பிறகாய் வெளிச்சத்திற்கு வந்ததுதான் மிச்சம்.

இன்குலாப் கனடாவிற்கு 2000களின் தொடக்கத்தில் வந்தபோது, அவரை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும் அந்த நிகழ்வில், 'ஈழத்தில் உங்களுக்கென ஒரு நாடு கிடைத்தாலும் போராட்டம் முடிந்துவிடாது. அதற்குப்பிறகு சாதிக்கு எதிரான போராட்டம் உங்களுக்காய்க் காத்திருக்கிறது' என அவர் அன்றைக்குச் சொன்னதைக் கேள்விப்பட்டபோது, ஓர் அசலனான போராட்டக்காரர் இப்படித்தான் இருக்கவேண்டுமென மகிழ்ந்திருக்கின்றேன்.

இப்போது நான் தேடிய கவிதையை ரசூல் தன் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டேன்.

"பவுர்ணமி இரவில் படகில் வந்தவரே
நதியலை மோதும் நாணல் புதரின் மறைவில்
வெண்மலர் விரிப்பில் நான் இருந்தேன்.
தண்ணீரில் உறங்கும் தாமரையின் கனவுகளாய்
அல்லிகள் விழிக்கும் தடாகத்தின் அருகில் தங்கள்
இதழ்களின் தீண்டுதலை எதிர்பார்த்திருந்தேன்.
உயிரின் ராகங்கள் உதடுகளில் உருகின.
புல்லாங்குழல் நான் புல்லரித்துப் போனேன்
வானத்தின் மீன்கள் வான முந்தானை சோர தங்கள்
கீத லயங்களில் கிறங்கிக் கிடந்தன.
இரவின் கனவுகள் ஓய்ந்து போகும் கருக்கலில்
தங்கள் கானம் நின்றது.
பவுர்ணமி இரவின் படகுக்காரரே
நதி நுரை அலைக்கும்
நாணல் புதர்களை விலக்கிச் செல்கையில்
மெதுவாய் செல்லுங்கள்
வழியில் தண்ணீர் வாத்துகள் அடைகாத்த
முட்டைகள் கிடக்கலாம்.
கால்கள் மோதிவிடாதிருக்கட்டும்"

இதில் வருபவன் சாதாரணக் காதலனாகவோ அல்லது ஒரு தலைமறைவுப் போராளியாகவோ இருக்கலாம். ஆனால் காதலி, வழியில் தண்ணீர் வாத்துக்கள் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம், கவனமாக அதை விலத்திச் செல்லுங்கள்' எனச் சொல்கிறார். நீயெனக்குத் தந்த காதலின் அற்புதமான அனுபவத்தைப் போல, பிற உயிர்களின் மீதும் அன்பும் கவனமும் வையெனச் சொல்லும் நெகிழ்வான கவிதை. பத்து வருடங்களுக்கு முன் வாசித்தபோதும், இன்றும் நினைவில் வைத்துத் தேடினேனென்றால் அது ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கின்றதெனத்தானே அர்த்தம்.
-------------------------

அளவெட்டி என்னும் அழகான ஊர்

அளவெட்டியோடு எனக்கு முதலில் பந்தம் ஏற்பட்டது எப்போது என்றால், இந்திய இராணுவகாலத்தில் பாடசாலை மூடப்பட்ட காலங்களில் அம்பலவாணர்(?) வீதியில் இருந்த வீடொன்றில் தங்கியிருந்த கணித ஆசிரியரின் வீட்டில் போய்ப் படித்ததோடு என்று நினைக்கின்றேன். கணிதமும் ஆங்கிலமும் படித்ததுபோக, மிகுதி நேரங்களில் அவரின் மகளோடான crushலில் பொழுதுபோக அளவெட்டி மறக்கமுடியாத ஊரானது. பத்து வயதிற்குள்ளேயே crush ஆ என வாய் பிளக்கக்கூடாது. 15/16 வயதுகளில் இயக்கத்திற்குப் போவதென்பது அன்றைய காலங்களில் சாதாரண நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.

பின்னர் இந்திய இராணுவம் போனபின், இலங்கை இராணுவம் பலாலி, காங்கேசந்துறை, கீரிமலை என எல்லாப் பகுதிகளிலுமிருந்து வலிகாமம் வடக்கின் இடங்களைப் பிடிக்கத் தொடங்கிய காலத்தில், இரவுகளில் வீட்டில் தங்கப் பயந்து இரவில் சாப்பிட்டுவிட்டோ அல்லது சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு நாமெல்லோரும் போய் அளவெட்டியில் தெரிந்த ஒரு வீட்டில் போய் இரவில் தூங்கிவிட்டு விடிகாலையில் வருவோம்.
பின்னர் போர் முற்றி வீட்டு முற்றத்திற்கு வந்தபின், ஊரில் இருக்கமுடியாதென்று சங்கானை அங்கே இங்கேயென்று அலைந்துவிட்டு, அக்கா கற்பித்துக்கொண்டிருந்த அளவெட்டியிலிருந்த பாடசாலைக்கருகில் வந்து தங்கியிருந்தோம்.

அந்த வீட்டின் முன் சிறுவிறாந்தையும் ஒரு அறையும் எங்களுக்குக் கிடைத்திருந்தது. சமைப்பதற்கான குசினியாக முன்பு ஆடு, மாடுகளில் கொட்டிலாய் இருந்த இடத்தை வீட்டின் மறுகரையில் தந்திருந்தார்கள். அம்மா, மரத்தூளினால் நிரம்பிய அடுப்பில் ஊதியூதி சமைத்ததும், மழைக்காலங்களில் உணவை வீட்டிற்குள் எடுத்து வரக் கஷ்டப்பட்டதும் இன்றும் நினைவிலிருக்கிறது.
அப்போது எங்களது பாடசாலையும் மாலை நேரமாக அருணோதயாக் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தமுறை அதைக் கடந்தபோனபோதும் நாங்கள் மதியத்தில் பாடசாலை தொடங்கக் காத்திருக்கும் அந்தப் பெருமரமும் கோயிலும் இப்போதும் அப்படியே நிற்பது தெரிய காலம் ஏதோ உறைந்துபோனது போலத் தோன்றியது.

அளவெட்டி எனக்கு மிகப்பிடித்த ஊர். இயற்கை வளங்களுக்கு மட்டுமில்லை, கலைகளுக்கும் குறைவில்லாத ஊர். மகாஜன சபையிற்கு அருகிலிருந்த சங்கக்கடையில் நிவாரணங்கள் வாங்கியதும், அதற்கருகில் இருந்த ஒரு கட்டடத்தில் தெல்லிப்பளை நூலகம் இடம்பெயர்ந்து இயங்கிய காலத்தில் நிறையப் புத்தகங்களை அங்கேயே வாசித்து முடித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள். சுன்னாகத்திற்கு சென்று மிருதங்கம் பழகிய ஆசிரியர் அளவெட்டிக்கு வந்து வகுப்பெடுக்க, அவரின் மிருதங்க வகுப்பைக் கற்றத்தைவிட, கும்பிளாவளைக் கோயிலுக்கு வந்த பிள்ளைகளில் மனம் அலைபாய்ந்ததுதான் அதிகம்.

இதையெல்லாவற்றையும் விட எனது முதற்காதலியும் அளவெட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊருக்குத் நன்றி கூறாதிருத்தல் அழகில்லை. இது எத்தனையாவது 'முதற்காதல்' எனக் கேட்கக்கூடாது. வழமையான என் ஒருதலைக்காதல்களைப் போலவில்லாது (நன்றி மடலேறும் நிலைக்கு கொண்டுவராமையிற்கு) அவருக்கும் ஏதோ 'பேய்' பிடித்து என்னை ஒருகாலத்தில் நேசித்திருந்தார். பொன்னொச்சி மரங்கள் பூச்சொரிய மறந்தாலும் அவரின் அந்த அழகிய சிரிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.

ஒரு புகைப்படம், இவ்வளவு நினைவுகளைக் கிளர்த்துமா தெரியாது; நினைவூட்டிற்று நண்பனின் இந்த அளவெட்டிப் படம்.
(photo- Dinesh)
------------------

'அச்சம் என்பது மடமையடா' எடுத்து, எங்கள் தலையையும் அச்சமின்றி சுவரில் மோதவைத்த கெளதம் வாசுதேவனிற்காய் 2 குறிப்புகள்.

(1) வேலைத்தளங்களில் conflict of interest என்ற ஒருவிடயம் இருக்கின்றது. அதாவது வேலையிடங்களில் ஒருவருக்கு இருக்கும் தகுதியை வைத்து அதன் மூலம் மற்றவர்களில் advantage எடுக்கக்கூடாது என்று சுருக்கமாக இப்போது வைத்துக் கொள்வோம். அதில் ஒருவிடயம் எவ்வகையான தனிப்பட்ட உறவிற்கும் அங்கே இடமில்லை என்பது. அதுபோலவே உங்களின் படங்களில் இனி தயவு செய்து மேல்வீடு, கீழ்வீடு, பக்கத்து வீடு மட்டுமில்லாது அந்தத் தெரு முழுதும், வந்து தங்கும் எந்தப் பெண்ணோடும் காதல் வந்து எங்களைக் கழுத்தறுக்காது விடவேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.

(2) உங்களின் படங்களில் பொலிஸை glorify செய்வது, என்கவுண்டர் செய்வதை நியாயப்படுத்துவது என அலுக்கும் வரை மட்டுமல்ல எங்களுக்கு எரிச்சல்வரும்வரை சொல்லிக்கொண்டேயிருக்கின்றீர்கள். இதிலும், கெட்டவர்களாயிருந்ததால் எல்லாரையும் போட்டுத்தள்ளுகின்றீர்கள், ஆனால் பொலிஸ் மட்டும் கெட்டவராக இருக்கும்போது அவரைப் போட்டுத்தள்ள, 4 வருடங்கள் காத்திருந்து (எங்களுக்கும் கொட்டாவி வரச்செய்து) பொலிஸாகிப் போட்டுத்தள்ளுகின்றீர்கள். அது என்ன பொலிஸுக்கு மட்டும் விதிவிலக்கு. ரெளடியாக இருந்தாலும் அவர்கள் மனிதர்களில்லையா? அல்லது பொலிஸாக இருந்தாலும் அவர் ரெளடியில்லையா?

இங்கேதான் குசும்புத்தனம் அல்ல, வாழைப்பழத்தில் விஷத்தை ஊற்றுவதைப் போன்ற விசமத்தனம் உங்களிலிருக்கின்றது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகின்றோம்.. தமிழர்கள் என்றாலே மலையாள மேனன், நாயர்மார்களுக்கு கண்ணிலே அவ்வளவு காட்டக்கூடாது என்று உளவுத்துறையில் இருப்பவர்களைப் பார்த்தாலே (அவர்கள் செய்வது/எழுதுவதைப் பார்த்தாலே) தெரியும். அதுவும் மலையாள ரா ஆசாமிகளுக்கு ஈழத்தமிழர்கள் என்றாலே உச்சிமோர்ந்து முத்தமிடுகின்ற அளவுக்கு அந்தளவு அன்பிருக்கின்றது.

சீமான் போன்றவர்களே 'நான் தமிழன்டா' என்று ஒரு வார்த்தையை அவர்களின் படங்களில் வைத்ததாய் நினைவினில்லை. நீங்கள் மட்டும் இந்திபேசும் பொலிஸ்காரனிடம் 'நான் தமிழண்டா' என்று ஒரு டயலாக்கை வைக்கும்போது ஆகா, அடடா எங்களுக்குப் புல்லரிப்புத்தான் வருகின்றது. சரி 'நான் தமிழண்டா' என்று சொல்லி பெருமைகொள்வது உங்களின் விருப்பெனவே வைத்துக்கொள்வோம். அப்படிச் சொல்ல வரும்போது நீங்களும் அந்த வாசுதேவ 'மேனனை' எடுத்துவிட்டு வரலாமே அன்பரே.
---------------------

கனகாம்பரம்பூ குறிப்புகள்

Thursday, January 12, 2017

Rezeta

மெக்ஸிக்கோப் படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். மெக்ஸிகோவிற்கு தன் இருபதுகளில் வருகின்ற மொடலிங் செய்கின்ற ஒரு பெண்ணுடைய கதை. அல்பேனியாவில் பிறந்து (அமெரிக்காவிற்கு பதின்மங்களில் அகதியாகப் புலம்பெயர்ந்த) இந்தப் பெண் மெக்ஸிகோவிற்கு வரும்போது சந்திக்கும் புதிய காதல்கள்/காதலர்களைப் பற்றிய படமிது.

இந்தப் பெண்ணின் காதலர்களில் ஒருவர் அறிவுஜீவியாக இருப்பார். அவரின் நண்பர்கள் கூட எந்த நேரமும் அரசியல் பேசிக்கொண்டிருப்பவர்களும் கூட. நெருக்கமாய் இருவரும் இருக்கும் ஒரு சமயத்தில் இவர் அந்தப் பெண்ணோடு அல்பேனியா/கொசோவா நிலவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, Rezeta அதிகம் அக்கறை காட்டாதிருப்பார். ஒருகட்டத்தில் அந்தக்காதலர் பொறுமையிழந்து உனக்கு உனது நாட்டில் நடப்பது குறித்து அக்கறையில்லையா என வினாவுவார். அப்போது Rezeta , எனக்கு அதுகுறித்து அக்கறையிருக்கிறது, ஆனால் கடந்தகாலத்தில் எப்போதும் வாழ்வதில் பிடிப்பதுமில்லை. எனக்கு பலருக்குக் கிடைக்காத பயணஞ்செய்வதற்குக் கிடைத்திருக்கின்றது. அதனால் நான் வாழ்வைக் கொண்டாட விரும்புகின்றேன் என்பார். சிலவேளைகளில் ஒருவர் மீது எவ்வளவு அக்கறையிருந்தாலும், அவர்களின் கடந்தகாலத்தை/துயரத்தை அவர்கள் செளகரியமாக உணராத வேளைகளில் நாங்கள் பேசுவதோ அல்லது கேள்வி கேட்பதோ அவ்வளவு நல்லதில்லை என்பதை உணர்த்துகின்ற ஓரிடமிது.

காதல், அதுவும் மொழிகளை/கலாசாரங்களை கடக்கின்றபோது இன்னும் அழகாகின்றது. பிரிதலின் வலிகளென்பதும் அது நாடுகளை/எல்லைகளைக் கடந்தபின்னும் மனதிலிருந்து எளிதில் இல்லாமற் போவதென்பதும் இல்லை.

இத்திரைப்படத்தைப் பார்த்தபின், இது குறித்துத் தேடிய விடயங்கள் இன்னும் சுவாரசியமானவையாக இருந்தன. இதில் நடித்தவர் மொடலிங் செய்பவர் என்பதோடு, அல்பேனியாவில் பிறந்த அவரின் உண்மைக்கதையுமாகும். மெக்ஸிக்கோவிற்கு மொடலிங்கிற்கு வந்து மெக்ஸிக்கோவின் மீது ஈர்ப்பு வந்து இப்போது அங்கே வசிக்கத் தொடங்கியுமிருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்த இந்த மொடல் மட்டுமில்லாது இதில் நடித்த அனைவரும் புதியவர்கள் என்பதோடு, இயக்குநருக்கும் இதுவே முதற்படம். மெக்ஸிக்கோ சிட்டியில் Rezetaவை சந்தித்தபோது அவர் தனது கதையைச் சொல்ல, அந்தப் பாதிப்பில் இதைப் பின்பு இந்த இயக்குநர் படமாக்கியிருக்கின்றார்.


Divines

பிரான்சிற்கு கலைகளின் தேசம் என்ற ஒரு முகமிருப்பதுபோல, இன்னமும் விளிம்புநிலை மனிதர்களை எட்டிவைத்துப் பார்க்கும் பக்கமொன்றும் அதற்கு உள்ளது. 'Divines' என்கின்ற திரைப்படம் இரண்டு முஸ்லிம் பதின்மப்பெண்களின் வாழ்வைப் பின் தொடர்ந்தபடி செல்கின்றது. குடிக்கு அடிமையாகிய single motherல் வளர்க்கப்படும் பெண், பாடசாலையிலும் ஒழுங்காக தன்னை தகவமைத்துக்கொள்ளாது தவிர்க்கின்றார். அதன் நீட்சியில் போதைமருந்து விற்கும் கும்பலோடு சேர்ந்து, அவரின் வாழ்வு எங்கெங்கோ எல்லாம் அலைகின்றது. பாரிஸின் புறநகர்ப்பகுதியில், புறாக்கூண்டுகளைப் போன்ற வீடுகளில் மனிதர்கள் இப்படியா வாழ்கின்றார்கள் என்பதை மேற்குலகக் கனவிலிருக்கும் பலரால் அவ்வளவு எளிதாக நம்பமுடியாது.

ஒரு கனவு வாழ்க்கையிற்காய் எல்லாவற்றையும் துச்சமாக உதறித்தள்ளும் இந்தப் பதின்மப்பெண்ணினதும், அவரது தோழியினதும் வாழ்க்கை என்னவாகியது என்பதை ஒருவித விறுவிறுப்புடன் படமாக்கும்போது நமக்கு பிரான்ஸின் இன்னொருமுகம் தெரிகின்றது. இதில் பதின்மப் பெண்ணாக நடிக்கும் Oulaya வின் நடிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. பெண் நெறியாளரால் இயக்கப்பட்ட இப்படம் கான்ஸ் திரைப்படவிழா, ரொறண்டோ திரைப்பட விழா போன்றவற்றில் தேர்தெடுக்கப்பட்டு இவ்வாண்டில் திரையிடப்பட்டிருக்கின்றது.


Dangal

நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதுவும் ஒரு விளையாட்டை முக்கியபொருளாகக் கொண்டு இறுக்கமான திரைப்படத்தை எடுத்தலென்பது எளிதில்லை. அதுவும் இந்தியா/இலங்கை போன்ற கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற பிரமை இருக்கின்ற நாடுகளில் வேறு விளையாட்டைப்பற்றி ஒரு திரைப்படம் எடுப்பதென்பதே பெரும் சிரமமானது. மேலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு விளையாட்டுச் சம்பந்தமான படங்கள் வருவது எளிதுமன்று. அவ்வாறு ஏற்கனவே வந்த இறுதிச்சுற்று ஒரு முக்கியமான படமென்றால் அமீர்கான் என்கின்ற பெரும் நாயகன் இருந்தாலும் அவர் அடக்கிவாசித்து பெண் பாத்திரங்களுக்கு முக்கியம் கொடுத்து வந்திருக்கின்றது Dangal.

அமீர்கான் National Champion ஆன, முன்னாள் மல்யுத்தவீரர் என்றாலும் அவருக்கான பகுதிகளை சில காட்சிகளில் கூறிவிட்டு முக்கியமான பாத்திரங்களான இரு பெண்களையும் பின் தொடர்ந்தபடி இப்படமிருக்கின்றது. அமீர்கானின் அந்தத் தந்தைப் பாத்திரம், பயிற்றினராக இருப்பதா அல்லது ஒரு தந்தையாக இருப்பதா என்கின்ற குழப்பம், பெண்பிள்ளைகளை ஒருசிறு கிராமத்திலிருந்து மல்யுத்த வீரர்களாய் ஆக்குவதாய் அவரும் அந்தப் பெண்பிள்ளைகளும் பெறுகின்ற அவமானம், ஒருகட்டத்தில் வெளியே உலகம் தெரியும்போது பிள்ளைகள் தந்தையிடமிருந்து விலகிப்போகும் கட்டமென எல்லாவற்றையும் மிகச் கச்சிதமாய் அமைத்திருக்கின்றனர். அப்பாவிற்கும் பெண்பிள்ளைகளுக்குமான நெருக்கம் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டப்படாவிட்டாலும், அதை மிகநுட்பமாக சில காட்சிகளால் கொணரும்போது நம்மையறியாமலே ஏதோ ஒருவகை உணர்ச்சியிற்குள் விழுந்துவிடுகின்றோம்.

இப்படத்தின் சில காட்சிகள் மட்டுமில்லாது இறுதிக்காட்சி கூட ஒருவகையில் இறுதிச்சுற்றை நினைவுபடுத்தினாலும், மல்யுத்தப்போட்டிகளை படமாக்கியவிதத்தில் நாமும் அதை நேரே பார்க்கின்ற பார்வையாளரைப் போல ஆகிவிடுகின்றோம். அண்மைய ஒலிப்பிக்கில் இந்தியாவிற்கான பதக்கங்களைப் பெண்களே பெற்றுக்கொடுத்து நாட்டின் மரியாதையைக் கொஞ்சமாவது காப்பாற்றியிருந்தார்கள். நம் நாடுகளில் பெண்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான ஒரு சுதந்திரமான வெளியை நாம் கொடுத்தாலே போதும், அவர்கள் தாம் விரும்பிய துறைகளில் நிறையச் சாதித்து நம்மையும் பெருமை கொள்ளச் செய்வார்கள் என்பதை உணர்த்துகின்ற/உதாரணமாக இருக்கக்கூடிய ஒரு படம் Dangal .


Adi Kapyare Kootamani

ஆண்களின் ஹொஸ்டலுக்குள் ஒரு பெண் தற்செயலாக வந்துவிடுகின்றார். அவரை அங்கிருந்து எப்படி மற்றவர்க்குத் தெரியாது வெளியே கொண்டு செல்ல சில நண்பர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதே இதன் கதை. . இடையில் அப்பெண்ணின் தமிழ்க்குடும்பம், அவருக்கிருக்கும் காதலனோடு சேர்ந்துதான் இந்த பெண் ஓடிவிட்டாரென அடியாட்களுடன் தேடுகின்றனர். இந்த இரண்டு சிறிய விடயங்களை வைத்து சிரிக்க சிரிக்கச் சுவாரசியமாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். யட்ஷி என்ற விடயத்தை முதலில் நகைச்சுவையாக கையாண்டு அது இருக்கா இல்லையா என இறுதியில் ஒரு மர்மத்தை எழுப்பியபடி முடிக்கின்றார்கள்.

இதில் நடிக்கும் Namitha Pramod ஐ வினீத்தின் 'ஒர்மாயுண்டே ஈ முகம்' என்ற படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்கின்றார் ஆனால் எதற்கு இப்படி மிகையாக மேக்கப் போட்டிருக்கின்றார் என நினைத்திருக்கின்றேன். அந்தப்படம் 50 datesன் மலையாள தழுவலெனச் சொல்லலாம். அந்தப்பெண்ணுக்கு ஒருநாள் மட்டும் நினைவில் நின்று அடுத்தநாள் எல்லாமே மறந்துபோகும் ஞாபகமறதியை, 50 dates/கஜினி படங்களினது பெயர்களைச் சொல்லி மூலத்தை மறைக்காமல் இருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்..
குணச்சித்திர /நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் அயூ வாகீசின் நடிப்பிற்கு நானொரு இரசிகனாகிக்கொண்டேயிருக்கின்றேன்.
------------------------------

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

Tuesday, January 10, 2017

1.
இந்தத் தொகுப்பின் முன்னட்டையில் கூறப்பட்டதுபோல சுதா குப்தா துப்பறிகின்ற கதைகளே இந்நூலினுள் இருக்கின்றன. மூன்று வெவ்வேறு வழக்குகளை தமிழ் பேசுகின்ற சுதா எடுத்துக்கொள்கின்றார். அதன் முடிச்சுக்களை எவ்வாறு அவிழ்க்கின்றார் என்பது பற்றியும் இந்த விடயங்களோடு நிகழும் வேறு விடயங்கள் பற்றியும் சுவாரசியமாக அம்பை எழுதிப் போகின்றார்.
முதல் கதையான 'மைமல் பொழுதில்' சிக்கலைத் தீர்த்து முடிக்கும்போது, பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சிலவேளைகளில் நேரத்தில் கிடைக்காத நீதி பின்னர் காலம் பிந்தி கிடைக்கும்போது அது பலனற்றுப்போய்விடுகின்றதோ, அப்படி கடந்தகாலத்தில் நடந்த சம்பவம் ஒன்று மூடிமறைக்கப்படுவதால், அது மீளவும் நிகந்து, நிகழ்காலத்தில் பலரைப் பலிகொடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது. சுதா தன் துப்பறியும் செய்யும் வேலை செய்பவர் என்றாலும், பொலிசும் தன் உதவியை அவ்வப்போது நாடுகின்றது. சுதாவின் பாத்திரத்தினூடு அம்பை காவல்துறையில் நடக்கும் நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு விமர்சனம் செய்கின்றார்.
ஒரு வியாபாரியின் பிள்ளைகள் கடத்தப்பட்டு போலிஸ் தேடத்தொடங்குகின்றது....
'பரவாயில்லை கோவிந்த். வேகமாகத்தான் செயல்பட்டிருக்கீங்க." (சுதா)
"நாங்கள் அவ்வளவு மோசமில்லை தீதி." (இன்ஸ்பெக்டர் கோவிந்த்)
"யாராவது பெண் பலாத்காரம் செய்யப்பட்டா மட்டும் அவள் நடத்தை சரியில்லைன்னு சொல்லி பலாத்காரம் செய்தவனை விருந்து வைச்சு அனுப்பிடுவீங்க" (சுதா)
(ப 25-26)
இன்னோரிடத்தில்,பிள்ளைகள் காணாமற்போனதன் பிற்பாடு, அவர்களின் தாயார் தனியே இருந்தால் ஏதாவது அசம்பாவிதமாய்ச் செய்துவிடுவாரோ என்ற அச்சத்தில் சுதா, கோவிந்திடம் அவருக்குத் துணையாக பொலிஸொருவரை அனுப்பக் கேட்கின்றார். கோவிந்த அப்படியொருவரை ஏற்கனவே அனுப்பியாயிற்று எனச் சொல்லும்போது,
"இந்த பொலீசுக்கு இல்லாத நல்ல குணமெல்லாம் உங்க மனைவிகிட்ட இருந்துதான் வந்திருக்கு கோவிந்த்." (ப 39)
என பொலீஸ் மீதான விமர்சனங்கள் ஆங்காங்கே தெளித்தபடி அம்பை எழுதிச் செல்கின்றார்.

2.
'காகிதக் கப்பல் செய்பவன்' கதையில், ஒரு திருமணம் செய்யப்போகும் ஆணின் நடத்தை எப்படியென துப்பறியப்போகும்போது பல சுவாரசியமான விடயங்கள் நடக்கின்றன. அந்த ஆண் ஒரு தமிழனாகவும், எழுதுவதில் பித்துப்பிடித்தலைகின்றவனாகவும் இருக்கின்றான். அதேசமயம் சுதாவிடம் வரும் இன்னொரு வழக்கோடு இந்த ஆணின் தாயார் சம்பந்தப்பட்டிருப்பதால் கதை இன்னும் சுவாரசியமாகின்றது. எந்தப் பெண்ணுக்கு மணம் செய்ய சிங்காரவேலு என்ற ஆணைத் துப்பறிய சுதாவும் அவரின் உதவியாளருமான ஸ்டெல்லாவும் போகின்றரோ, அதே சிங்காரவேலு பிறகு ஸ்டெல்லாவிற்குப் பிடித்த ஒரு துணையாகிப் போவது கதையின் இன்னொரு முக்கிய திருப்பமாகின்றது.
அதுபோலவே சிங்காரவேலுவின் அம்மாவிற்கு நிகழ்கின்ற இன்னொரு உறவைக் கூட, மிக எளிமையாகக் காட்டிவிட்டு அம்பை கடந்துசெல்லும் விடயத்தை, ஆண் எழுத்தாளர்களால் தேவைக்கதிகமாக எழுதாது இப்படி விபரிக்கமுடியுமா என்பதை யோசித்தும் பார்க்கவேண்டும். எவரும் எவரையும் குற்றஞ்சாட்டாது, அந்த நேரத்தில் அவ்வாறு நிகழ்ந்ததென, மிக இயல்பாய் எடுத்துக்கொண்டு போயிருந்தால் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வன்மத்தையும், கோபத்தையும் காவிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை அழகாக இந்தக்கதையில் அம்பை கொண்டுவந்திருப்பார்.

மூன்றாவது கதையான 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' வீட்டை விட்டு வெளியேறிய 60களில் இருக்கும் பெண்ணின் ஒரு சிக்கலான விடயத்தைப் பற்றிப் பேசுகின்றது. தன் சகோதரியோடு கிராமத்தில் அழகான வாழ்க்கை வாழ்ந்த இந்தப்பெண் திருமணம் செய்து நகரத்திற்கு வருகின்றார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் வளர்ந்து திருமணம் செய்துவிடுகின்றனர். சட்டென்று ஒருநாள் இவை எல்லாவற்றையும் விடுத்து தனது சொந்தக் கிராமத்திற்கு செல்ல அந்தப் பெண்மணிக்கு ஆசை பெருகுகின்றது. ஆனால் கணவரும் பிள்ளைகளும் இது நடக்காத கனவு என்று சொல்வதோடு, ஒருகட்டத்தில் அவருக்கு மனோநிலை பிறழ்ந்துவிட்டதெனவும் கூறத்தொடங்குகின்றனர். சுதாவின் உதவியுடன் இந்தப்பெண்மணி தனக்கு விரும்பியதை சாதிக்கின்றாரா இல்லையா என்பதே இந்தக் கதை.
இறுதியில் எவரையும் குற்றஞ்சாட்டாது
அந்தப் பெண்மணி எழுதுகின்ற கடிதம் அருமையானது. அதில் ஓரிடத்தில் ' இந்த அன்னம் பறக்க ஆரம்பித்தாகிவிட்டது. உடன் இருப்பது எல்லையில்லாத விசும்பு மட்டுமே' என்கின்ற வார்த்தைகள் நம் எல்லோருக்கும் பொருந்துகின்றதும் அல்லவா? நாம் நமக்குப் பிடித்தவர்களை/பிடித்த இடங்களை எங்கள் வாழ்க்கையின் இன்னொரு மாற்றத்திற்காய் இழக்கவேண்டியிருக்கின்றது. நமக்கு விரும்பியதைச் செய்வதற்காய் சிலவேளைகளில் நமக்கு நெருக்கமானவர்களை எல்லாம் விட்டு விலகவும் தேவையாயிருக்கிறது. ஆனால் அதன் அர்த்தம் அவர்களை வெறுத்தோ/கோபித்தோ வெளியேறுகின்றோம் என்பதல்ல.
இந்தப் பெண்மணி கூறுவதுபோல அன்னம் பறக்க ஆரம்பிக்கும்போது அதற்கான உலகமும் விரிந்துபோய்விடுகின்றது. விசும்பைத் துணையாகக் கொண்டு பறக்கவேண்டியதுதான். பறத்தலில் பல தடுமாற்றங்கள்/தடங்கல்கள் வரலாம். ஆனால் பறத்தல் என்பது என்பது நம் எல்லோரினதும் மிகப்பெரும் விருப்பல்லவா?

3.
இந்தத் தொகுதியில் அம்பை, மராத்தியைச் சில உரையாடல்களில் பாவிக்கும்போதோ அல்லது இந்திப்பாடல்களை(?) பயன்படுத்தும்போதோ, அர்த்தம் விளங்காது அவ்வப்போது சற்றுத்திகைத்து நிற்கவேண்டியிருக்கின்றது. அதைப் பாவிப்பது தவறென்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அவையின்னும் விளங்கியிருந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றியது. அம்பையின் இந்தத் தொகுதியில் என்றில்லை, அம்பையின் மற்றச் சிறுகதைத் தொகுப்புக்களிலும் இப்படிப் பல இடங்களில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் இவை அம்பையின் தனித்துவம் எனக்கூடச் சொல்லலாம் போலும்.
அம்பையின் இந்தத் தொகுப்பு என்றில்லை ஏனைய தொகுப்புக்களிலும் பிடித்த மிக முக்கிய ஒருவிடயம் என்னவென்றால், தமிழ் பேசாத நிலப்பரப்புக்களில் இருந்துகொண்டு அம்பையின் கதைசொல்லிகள் கதையைத் தமிழ்ச்சாயலில் சொல்வதுதான். என்னைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுடைய நிலையும் அம்பையின் கதைசொல்லிகளைப் போன்ற ஒருவகை நிலைதான். தமிழால் சிந்தித்தபடி, தமிழ் சூழ்ந்த நிலப்பரப்புக்களை கற்பனை செய்தபடி, இவற்றுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அந்தவகையில் பிறர் சொல்லும் கதைகளைப் போலவல்லாது தமிழ்மனதோடு இயைந்தும் அவ்வப்போது விலகியும் செல்லும் அம்பையின் கதைகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின்றன.
சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்களை தொடர்ந்து அம்பை எழுதவேண்டும். ஆர்ப்பாட்டமாய் இல்லாது, ' கெட்டிலைப் போட்டு லவங்கப்பட்டை தேநீர்ப்பைகளை கோப்யையில் நிரப்பி அதன் நறுமணம் மேலெழும்பி வருவதை' நம்மையும் உணரவைத்து, துப்பறியும் கதைகளைச் சொல்லும்போது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?