கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடல்புறாவும் பொன்னியின் செல்வனும் இன்னபிறவும்

Wednesday, November 02, 2022

1.

முகநூலில் ஏதேனும் காணொளிகளை நண்பர்கள் பார்க்க இணைப்பு அனுப்பும்போது, அது அடுத்தடுத்த காணொளிகளுக்குத் தாவிச் செல்லத் தொடங்கி விடுவதுண்டு. அவ்வாறு தற்செயலாக வாலியின் 80 வயது நிறைவில் அவரோடு பலர் உரையாடிய காணொளிகளைத் துண்டு துண்டுகளாகக் காட்டின. வாலியை நான் அவ்வளவாகப் பின் தொடர்ந்து சென்றவனில்லை. கண்ணதாசன் காலத்திலிருந்து கடைசிக்காலம் வரை வாலி அவருக்கான ஓரிடத்தை தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தவர் என்கின்ற மாதிரியான மேலெழுந்த தகவல்களே நானறிந்தவை. அவ்வப்போது அவர் வெகுசன இதழ்களில் எழுதிய கவிதைகள், அவை போன்ற கதைசொல்லல்களை வாசித்தபோதும் அவரைத் தொடந்து செல்ல வசீகரமான காரணங்கள் இருந்ததில்லை. மேலும் எமக்கு ஒருவர் மீது அதீத பற்றிருக்கும்போது அவரோடு போட்டியிடும் ஒருவரை தூர விலக்கிவைக்கும் மனோநிலையாகவும் இது இருக்கலாம். நான் என்னை ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தவனாகச் சொல்பவன். அவரின் இசைக்கு வைரமுத்துவே அன்றைய காலங்களில் நிறைய‌ப் பாடல்களை எழுதியதால் வைரமுத்துவைப் பின்தொடர்பவனுக்கு, வாலி அவ்வளவு ஆகாது போயிருக்கலாம்.


இந்த எதிர்நிலைப்பாடு பலருக்குள் அவர்களை அறியாமலே ஊன்றிப் போயிருக்கும். பாலகுமாரனை என் 11/12 வயதுகளிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டதால், சுஜாதா எனக்கு எதிர்முனையானவர். அதுபோல அந்தக்காலத்தில் சாண்டியல்னை வாசித்து அவரின் நூல்களுக்குள் மூழ்கியதால் கல்கி எதிர்முனையில் நின்றார்.. பிற்காலத்தில் ரஹ்மானுக்காய், வைரமுத்து ஒரு பாடலாசிரியராகப் பிடித்து விட்டதென்றாலும், கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய‌ பதின்மத்தின் முற்பகுதியில் மு.மேத்தாவே எனக்குப் பிடித்தவர் என்பதால் வைரமுத்துவின் கவிதைகளின் பக்கமே போனதில்லை. ஆனால் 15/16 வயதில் ஈர்ப்புற்ற பெண்களுக்கு வாங்கிப் பரிசளித்தது மேத்தாவினதோ, அவருக்கு அடுத்ததாக பிடித்த அப்துல் ரஹ்மானினதோ புத்தகங்கள் அல்ல, வைரமுத்துவின் புத்தகங்களைத்தான். அது ஏனெனில் நமக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட பெண்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்தால்தான் காதல் முகைக்கும் என்கின்ற ஆரம்பப் பாடத்தைக் கற்றுக்கொண்டுவிட்டதால் போலும்.


ஆனால் பிற்காலத்தில் எனக்குப் பிடித்த பாடலாசிரியர் வைரமுத்து என்பதை சின்மயி உள்ளிட்ட பெண்கள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்களால்  கைவிட்டிருக்கின்றேன். அது வைரமுத்துக்கு மட்டுமில்லை, பாப்லோ நெரூடா வெள்ளவத்தையில் வைத்து ஒரு தமிழ்ப்பெண்ணுக்குச் செய்தததை 15 வருடங்களுக்கு முன் அறிந்தபோதும் அதுவரை பிடித்தமான‌ நெரூடா எனக்குத் தொலைவில் போனதைக் கண்டிருக்கின்றேன். இதில் யார் சரி, அதையதை அந்தக் காலத்தில் வைத்துப் பார்க்கவேண்டும் என்கின்ற விவாதங்களுக்குப் போவது இரண்டாம்பட்சம். ஆனால் அவர்கள் என்னியல்பிலே என் விருப்பப்பட்டியலில் இருந்து உதிர்ந்து போய்விட்டார்கள். இன்றைக்கும் எனக்குப் பிடித்த வைரமுத்து எழுதிய ரஹ்மான் பாடலையோ, நெரூடாவின் கவிதையையோ பொது வெளியில் பகிரத் தயங்குபவனாகவே இருக்கின்றேன். நான் இவர்கள் மீது வைத்திருக்கும் தயக்கங்கள்/விமர்சனங்களை நன்கறிந்த நண்பர்களிடம் மட்டும்  அவற்றைப் உள்வட்டத்திற்குள் பகிர்ந்துகொள்வேன். அவ்வளவே.


இந்த விலகல் இப்படி பிரபல்யம் வாய்ந்த நபர்களிடம் மட்டுந்தான் வருகின்றது என்பதில்லை. எனக்கு நேரடியாகவோ/ சமூக வலைத்தளங்கள் மூலமோ அறிமுகமான நண்பர்களைப் பற்றியும் இவ்வாறான விடயங்கள் சார்ந்து அறியும்போது என்னியல்பிலே விலகி வந்திருக்கின்றேன். அதற்காய் இவ்வாறானவர்களைப் போன்று ஆகும் agency என்னிடம் இல்லையென்றும் அர்த்தமாகாது.


வாலியின் காணொளியை துண்டு துண்டாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வாலி ஒரு குதூகலமான 'இளைஞராக‌' மட்டுமின்றி ஒரு genuine மனிதராகவும் தெரிந்தார். சிலரை நேரடியாகச் சந்திக்கும்போதோ அல்லது இப்படி காணொளியில் பார்க்கும்போதோ எந்தத் தயக்கமுமில்லாது தமது பலவீனங்கள் உட்பட எல்லாவற்றையும் தன்னியல்பிலே மனந்திறந்து பேசுவதைப் பார்க்கலாம். அவர்களே வாழத் தெரிந்த மனிதர்கள்; வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களை விளங்கிக்கொண்டவர்களென நினைப்பதுண்டு.


சர்ச்சைகள் வருவதற்கு முன்னர்கூட வைரமுத்துவை இப்படியொரு மனந்திறந்த மனிதராகப் பார்த்ததில்லை. அன்றைய காலங்களில் வைரமுத்து ஒருவிதமாக‌ இறுக்கமான உடலையும், குரலையும் வைத்திருந்தபோது, எங்களாலேயே இதைத் தாங்க முடிவதில்லை.. அவரின் மனைவி பாவம் எப்படித்தான் தாங்குவாரோயென‌  நகைச்சுவையாக எங்களுக்குள் பேசுவதுண்டு. எழுத்தில் கூட இப்படி தம் எழுத்தை தன்போக்கில் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் படைப்பாளிகள் இருக்கின்றார்கள் இல்லையா என்ன?


2.


சாண்டில்யனின் ஒரு தீவிர இரசிகர் என்பதால் கல்கி எதிர்முனையில் இருந்தார். சுஜாதாவின் சொற்ப படைப்புக்களை வாசித்ததுபோல கல்கியினதும் 'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' போன்றவற்றை வாசித்தேனே தவிர பொன்னியின் செல்வன் போன்றவற்றைத் தேடி வாசித்ததில்லை. பின்னரான காலங்களில் இதை வாசிக்க விரும்பியபோதும், அந்த மொழி நடையில் இருந்து விலகி வந்ததாலும் அதன் ஐந்து பாகங்களாலும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. 


இப்போது பொன்னியின் செல்வன் படமாக்கப்படும் ஆரவாரம் இருப்பதால் அதை வாசித்த நண்பரிடம் பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டு திரைப்படம் பார்ப்பது நல்லதா அல்லது இல்லையா எனக் கேட்டேன். முழுதாக வாசிக்காவிட்டாலும்  சுருக்கமான பொன்னியியின் செல்வன் இப்போது இணையத்தளங்களில் கிடைக்கிறது, வாசிக்கலாம்/கேட்கலாம் என்றார். அதனால் 1 மணித்தியாலம் எடுத்து பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டேன். அது எந்தளவுக்கு என்றால் ஆதித்த கரிகாலனை எந்த சந்தேகமும் இல்லாமல் நந்தினிதான் கொன்றிருப்பார் என்று நண்பரிடம் சொல்லி, அவரைத் திகைக்க வைக்கும் அளவுக்கு அது போய்விட்டது.


என்னதான் பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் வாசித்தாலும், அது எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், எங்கள் சாண்டியல்னை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. ஆகவே நண்பரிடம் என்ன பொன்னியின் செல்வனின் ஒரு நல்ல யுத்த விபரணையும் இல்லைப் போலிருக்கின்றதே, எங்கள் கடல்புறாவைப் பாருங்கள், கடல்புறா கடலில் அதன் சிறகை விரிக்கும்போது வீரர்கள் அது கடலாக இருந்தாலும் எதிரிக்கலங்கள் மீது பாய்வார்கள், நாணேற்றி அம்புகளை எய்வார்கள், எரியம்புகளை அள்ளியெள்ளி வீசுவார்கள். உங்கள் பொன்னியின் செல்வனில் எல்லாமே சூழ்ச்சியும் வாதுமாக இருக்கின்றதே தவிர‌  தமிழ் மறவர்களின் தோள் துடிக்கும் போர்க்காட்சிகளே இல்லை, அவமானம் என்றேன். 


இல்லை, இலங்கையில் அருண்மொழியும், வந்தியத்தேவரும் சண்டைபிடிக்கும் ஒரு காட்சி இருக்கின்றதென்றார். நானோ கடல்புறாவின் முதல் பாகத்தில் இளையபல்லவனும் காஞ்சனாதேவியும் கலிங்க மன்னனிடம் இருந்து தப்பும் ஒரு காட்சிக்கு இது கால் தூசிக்கும் வராதென்றேன். இளையபல்லவன் வாள் வீச, பாரசீக வீரன் அமீரும், சீன மறவன் அகூதாவும் துணையிருக்க, காஞ்சனாதேவி நாணேற்ற நடக்கும் சண்டைக்கு (அப்படி நடக்கும்போதுகூட‌ நம் சாண்டில்யன் காஞ்சனாதேவியின் மார்புக்கச்சையை விபரிக்கும் இடம், தமிழ் மரபில் வீரமும் காதலும் இரண்டறக் கலந்திருப்பதை எப்படி இலாவகமாய்க் கொண்டு வந்திருக்கின்றார், கவனிக்க) கிட்டவாகக் கூட பொன்னியின் செல்வனின் ஒரு யுத்தகளத்தை உதாரணத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பொன்னியின் செல்வனை முழுதாக வாசிக்கின்றேன் என்றேன். 


அவ்வளவுதான். அத்தோடு அந்த நண்பர் இனி பொன்னியின் செல்வன் படம் வரும்வரை என்னோடு பேசுவதில்லையெனப் போய்விட்டார். ஒரு நட்பா, கடல்புறாவா முக்கியமென்றால், எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சாண்டில்யன் எங்களுக்கு அன்றே சொல்ல்விட்டார். என்னதான் ஈர்ப்பு இருந்தாலும் மஞ்சளழகியை கைவிட்டு காஞ்சனாதேவியிடந்தானே இளைய பல்லவன் சரணடைக்கின்றார். பிறகு அநபாயச் சோழன் போன்ற நல்ல உள்ளங்கள்தான் ஒரு வீரனுக்கு இரண்டு தோளும் துடித்தால்தான் அழகு, ஒற்றைத் தோள் துடிக்க காஞ்சனாதேவியோடு மட்டும் இருப்பது நல்லதில்லை என்று மஞ்சளழகியையும் இளையபல்லவனுக்குத் திருமணஞ் செய்து கொடுக்கின்றனர். பொன்னியின் செல்வனில் என்ன நடக்கின்றது? ஆதித்த கரிகாலனின் காதலையும் கைவிட்டு பழுவேட்டரையும் திருமணம் செய்துவிட்டு, நந்தினி அவனின் உயிரையும் அல்லவா எடுக்கின்றார். 


இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு காஞ்னாதேவியும், மஞ்சளழகியும் சேர்ந்து வாழ்வை இரசித்த எங்கள் கருணாகரத் தொண்டமான் வேண்டுமா, இல்லை நந்தினிக்காக உயிரையை இழந்த ஆதித்த கரிகாலன் வேண்டுமா?


***********************

(Aug 04, 2022)

புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு!

Monday, October 31, 2022


ழமையாக நடக்கும்போது நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பதுண்டு. இடையில் ஓய்வெடுத்து/இரசித்து/தரிசித்து/படங்காட்டிப் போனால் கூட ஒன்று/ஒன்றரை மணித்தியாலங்கள்தான் எடுக்கும். இன்று சூரிய ஒளியோடு தொடங்கிய நடையை முடித்து வருவதற்குள் இருண்டு நேரமாகிவிட்டது. 


அப்படி ஆனதற்கு, நான் நடந்தபடி கேட்கத் தொடங்கிய அலன் வாட்ஸின் 'The way of Zen' என்னை அமைதிக்கு அழைத்துச் சென்று, அது தற்செயலாக புத்த பூர்ணிமாகவும் இருந்து எனக்கும் புண்ணியம் கிடைத்திருந்தால் கூட,  பரவாயில்லை என்றிருந்திருப்பேன்.


ஆனால் நடந்தது அதுவல்ல!


நடந்து கொண்டிருக்கும்போது 'காலம்' செல்வத்தார் அழைத்து, 'என்னடா செய்கிறாய்' என்றார். "நடந்தபடி 'மான்'களை இரசித்துக் கொண்டிருக்கின்றேன்" என்றேன் நான். 

இந்தப் பாதையில் அவ்வப்போது மான்கள் தென்பட்டாலும், நான் சொன்னது அந்த 'மான்'களை அல்ல. செல்வத்தாரும் பாரிஸ் தெருக்களிலே 'மான்'களைத் தேடித் திரிந்த அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு இந்தவகையான code words நன்கு விளங்கும்.


'நானொருத்தன்  என்ன செய்வதென்ற பதைபதைப்பில் இங்கே இருக்கிறேன், உனக்கு இப்போது மான்கள்தான் தேவைப்படுகிறதா' என்றார் செல்வத்தார். 'அப்படி என்ன நடந்தது? அடுத்த இயல்விருதை முத்துலிங்கத்தார் ஞாபக மறதியில் தனக்குத்தானே அறிவித்து விட்டாரோ?' என்று கேட்டேன்.


ஏன் நான் அப்படிக் கேட்டேன் என்றால், ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவுக்கு இயல்விருது கொடுத்துவிட்டு, இப்போது அ.மு தமிழ் விக்கி என்று அதே பெயரில் ஏதோ தொடங்குகின்றார்கள் என்று அதற்கும் வாழ்த்துமேல் வாழ்த்து எழுதி அனுப்பிக்கொண்டிருப்பதை அவதானித்திருந்தேன்.

 

சிலவேளை இலக்கிய உலகில் முதலில் விருதைக் கொடுத்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் நித்திரையில் இருந்து விழித்தமாதிரி 'இப்போது தொடங்கியதற்கு' வாழ்த்து எனச் சொல்வார்களோ தெரியாது. 


'உந்த விசர்க்கதைகளை விட்டிட்டு, நான் சொல்லுறதை கேளடா?' என்று செல்வத்தார் கொஞ்சம் கோபத்தோடு சொன்னார்.


'சரி சொல்லுங்கள்' என்றேன்.


'இல்லையடா. நான் சியா-60 இற்கு ஒரு வாழ்த்து அனுப்பியதிலிருந்து எனக்கு சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் என எல்லா இடத்திலிருந்தும் நிறைய வாசகிகள் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். என் துணைவியார் இதைப் பார்த்துவிட்டால் என்னவாகும் என்று எனக்கு  ஒரே பதட்டமாயிருக்கிறது' என்றார்.



த்து வருடங்களுக்கு முன் செல்வத்தார் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அதன் நிலவறையை ஒரு பெண்மணிக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். என் வீட்டை விற்கப்போகின்றேன், நீங்களும் காலி செய்யவேண்டும் என்று செல்வத்தார் சொன்னபோது, அந்தப் பெண்மணி ஆயிரம் law கதைத்து வீட்டை விட்டுப் போகமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பெயர் சியாமளா. 


சியாமளாவை எப்படி துரத்துவது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்ததில் இறுதியாய் செல்வத்தார் கண்டடைந்த ஒரே வழி, தன்னிடம் விற்காமல் இருந்த புத்தகங்களை அவரின் கதவுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாய் அடுக்கிவிடுவதுதான். அவை அப்படியே உயர்ந்து உயர்ந்து ஒருநாள் சியாமளாவால் கதவைத் திறக்க முடியாமல் யன்னலை உடைத்து  தப்பி ஓடிவிடுவார் என்பதாக செல்வத்தாரின் திட்டமிருந்தது.


ஆனால் எத்தனையோ புத்தகங்கள் அடுக்கியும் அசையாத சியாமளா, ஒரேயொரு புத்தகத்தைக் கண்டு வெருண்டு, அடுத்தநாளே அறையைக் காலி செய்துவிட்டு போய்விட்டார். அது என்ன புத்தகம் என்றால், பின் தொடரும் நிழலின் குரல். அதை வாசித்துத்தான் சியாமளா பயந்து போனார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர் அந்தப் பெயரை முன்னட்டையில் பார்த்தவுடனேயே ஏதோ மலையாள மாந்தீரிகத்தில் ஆயிரம் பக்கத்தில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்று கிலி பிடித்துத்தான் ஓடியிருக்கின்றார்.


என்றாலும் ஏன் செல்வத்தார் இப்போது பதைபதைக்கின்றார் என்பது எனக்கு இன்னும் சரியாக விளங்காததால்,


' கனடாவில் இருக்கின்ற சியாமளாக்காவுக்கு 60 என்று நீங்கள் வாழ்த்து எழுதினால் ஏன் உங்களுக்கு வாசகிகள் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் கடிதம் எழுதுகின்றார்கள்' என்று கேட்டேன்.


'நாசமாய்ப் போறவனே. நான் சியா-60 என்று ஸ்டைலாகச் சொன்னது சியாமளாவுக்கு 60 வயதாகியதை அல்ல, சியமந்தகம்-60 என்று ஜெயமோகனுக்கு வாழ்த்தெழுதியது பற்றி' என்று செல்வத்தார் மறுமுனையில் இருந்து ஆக்ரோஷமாகக் கத்தினார்.


'இப்படிக் கத்தினால் இப்போது அமெரிக்காவில் நிற்கின்ற உங்கள் நண்பர் ஜெமோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு,  நயாகரா நீர்வீழ்ச்சியால் எம்பிக் குதித்து உங்களுக்கு ஏதோ ஆபத்தென பறந்து வந்துவிடுவார், கவனம்' என்றேன். உடனே செல்வத்தார் 'ஓம் சாந்தி ஓம் சாந்தி' என்று தன்னை அமைதிப்படுத்தத் தொடங்கவும் அவரது துணைவியார் அருகில் வரவும் சரியாக இருந்தது.


'அங்காலை இருந்து ஒருத்தன் சியாமளா சியாமளா என்கின்றான். இங்காலை இருந்து நீங்கள் சாந்தி சாந்தி என்கிறீர்கள். எந்த வயதில்தான் திருந்தப்போகின்றீர்கள்' என்று திட்டு விழுவதும் எனக்கு நன்கு கேட்டது.


'இல்லையப்பா சியாமளாவுக்கு வாழ்த்தெழுதியது பற்றி..ச்ச்சீ..சியமந்தகத்திற்கு பதிவெழுதியது பற்றி நாங்கள் இரண்டு பேரும் கதைத்துக் கொண்டிருந்தம்' என்று செல்வத்தார் மறுமுனையில் பம்மத் தொடங்கினார்.


இதுக்குப் பிறகும் இனி வாசகிகள் கடிதங்களை எழுத, செல்வத்தார் வாசிப்பார் என்று நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டது. 


என்றபோதும் நான் நம்பிக்கை இழக்காமல், 'இஞ்சை போனை கட் செய்யமுன்னர், எனக்கும் உங்களுக்கு அனுப்பியதுபோல, வாசகிகள் கடிதம் எழுதுவது எப்படி என்று ஜடியா தாருங்கள்' எனக் கேட்டேன்.


'உன்னுடைய கொழுப்புக்கு,  உனக்கு அறுபது வயசானாலும் ஒருத்தியும் எழுதமாட்டாள்கள், இருந்து பார்' என்று போனை அவர் நிலத்தில் கோபத்தில் எறிந்தது கேட்டது.


அப்போது நிலவு வானில் எழுந்ததைப் பார்த்தேன். புத்தர் ஞானமடைந்தபோது பார்த்த அதே நிலவு. 


புத்தருக்கு ஞானம் அவரின் 35 வயதில் கிடைத்ததென்கின்றனர். எனக்கு 60இல் இல்லாவிட்டாலும், என் 61வது வயதிலாவது யாரேனும் சியாமளாவோ, சாந்தியோ ஒரு வாசகர் கடிதம் எழுதாமலா போய்விடுவார்கள் என்று என்னைத் தேற்றியபடி நடக்கத் தொடங்கினேன்.


ஓம் சாந்தி, ஓம் சாந்தி!


*********************


(May 16, 2022)

இளங்கோவின் மொழிபெயர்ப்பில் “சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்”

Saturday, October 29, 2022

-அரசி விக்னேஸ்வரன்


1.


சில மாதங்களுக்கு முன்னர் இளங்கோ தனது புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுக உரையொன்றை ஆற்றுமாறு என்னைக் கேட்கும் வரை, ப்யூகோவ்ஸ்கியை ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு தடவைகூட நான் வாசித்திருக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு மூலமாக கொரோனாத் தடைகள் தளர்ந்திருந்த ஒரு வேனிற்காலத்தில் எனக்கு ப்யூகோவ்ஸ்கி அறிமுகமானார். ப்யூகோவ்ஸ்கி தமிழுக்கும் புதியவரல்லர், அவரது ஆக்கங்கள் ஏலவே சிலரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்று அறிகிறேன். ஆனால், இலங்கைத் தமிழ்க் கவியுலகுக்கு அவர் புதியவராகவும் புதுமையானவராகவும் எனக்குத் தெரிகிறார். ப்யூகோவ்ஸ்கியை ஏன் இவ்வளவு நாள் நான் அறியாமல் இருந்தேன் என்று என்னை நானே கேட்க வைத்தது இளங்கோவின் இந்தத் தொகுப்பு. 


அறிமுகமில்லாத கவிஞர் என்றாலும் எனது வாசிப்புக்கு இளங்கோவின் முன்னுரையே பெரும்பாலும் என்னைத் தயார்படுத்திவிட்டிருந்தது. அந்தக் கவிஞரின் தனித்துவமான ஆளுமையை சுருக்கமாக முன்னுரையில் இளங்கோ பதிவிட்டிருந்தார். எழுத்தாளரையும் அவரது எழுத்துக்களையும் தனித்தனியே நோக்க வேண்டும் என்று சில வேளைகளில் நான் நினைத்திருக்கிறேன். எழுத்துக்களை எழுத்தாளரின் வாழ்க்கைப் பின்னணியில் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள முடியும் என்றும் பிறகு நான் தெரிந்து கொண்டேன். ப்யூகோவ்ஸ்கியைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களை அவரது ஆளுமையில் இருந்து பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது கவிதைகள் முழுவதும் அவரது ஆளுமை வியாபித்திருந்தது. அவர் தன் கவிதைகளில் மறுக்கமுடியாத பாத்திரமாக இடம்பெற்றிருக்கிறார். எனவே இளங்கோவின் முன்னுரை மிகவும் தேவையானதும் பயனுள்ளதாகவும் அமைந்தது. 


இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் ப்யூகோவ்ஸ்கியின் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரு வகைமாதிரியாக அமையக்கூடிய தெரிவா அல்லது இளங்கோவைக் கவர்ந்த கவிதைகளின் தெரிவா என்று தெரியவில்லை. இவற்றை இளங்கோ எப்படித் தெரிவு செய்திருந்தார் என்று அவர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கலாம். இந்தக் கேள்வி என்னுள் எழக் காரணம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒருசிலர் இளங்கோவையும் ப்யூகோவ்ஸ்கியையும் ஆளுமை ரீதியில் ஒப்பிட்டுப் பேசியமையே. 


இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளை மூன்று வகையான கருப்பொருட்கள் அடிப்படையில் பிரித்து நோக்க முடியும். ஒன்று காதல், காமம் மற்றும் ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைகள். இரண்டாவது நகர வாழ்க்கை, அதில் உழலும் மக்களின் தனிமை, அதில் கவிஞர் அவதானிக்கும் பொதுப்படையான விடயங்கள் தொடர்பான கவிதைகள். மூன்றாவது ப்யூகோவ்ஸ்கி ஒரு எழுத்தாளனாகத் தன்னைத் தானே எப்படிப் பார்த்தார் என்கிற கருப்பொருளுக்குரிய கவிதைகள். 


முதலாவது வகைக் கவிதைகளை வாசிக்கையில் ப்யூக்கோவ்ஸ்கி எவ்வளவு தூரம் ஆண்-பெண் உறவின் ஆழத்தையும் அகலத்தையும் உணர்ந்திருக்கிறார், இரசித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. காமம், கலவி என்பன பற்றி வெளிப்படையாகவே கவிதை எழுதும் அதேவேளை காதல் என்கிற நுண்ணுணர்வினையும் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், புரிந்து கொள்ளல், பிரிவு என்கிற பல விடயங்களையும் ஆழமாகவே தன் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார்,  உறவு என்பது வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்பது பொய் என்று கருதும் அதேவேளை, பிரிவு என்பதன் வேதனையையும், குற்ற உணர்வையும் பேசுகிறார். பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஒருவராக தன் கவிதைகளில் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அந்த ஒவ்வொரு பெண்ணினதும் உடலுடம் மட்டுமன்றி ஆன்மாவுடனும் இணைந்த உறவையே நாடுகிறார். 


இரண்டாவது வகைக் கவிதைகள் வாழ்க்கையின் ஒரேமாதிரியான ஓட்டத்தில் ஓடும் நகர வாசிகள் அதற்காகக் கொடுக்கும் விலை அதிகம் என்பதை உணர்த்துகிறார். தனிமை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல் நகர வாசிகளின் ஒரு பொது அனுபவமாகிறது. எல்லோருமே தனிமையில் உழல்கிறார்கள். வாழ்க்கையில் எதையோ ஒன்றிறைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்.  அவரது “தனித்து எல்லோருடனும் இருத்தல்” என்கிற கவிதை மிகப் பிரபலமானது. அதில் 


“பெண்கள் பூச்சாடிகளை சுவர்களில் 

எறிந்து உடைக்க 

ஆண்கள்  அளவுக்கதிகமாகக் குடிக்கிறார்கள்” என்கிறார். 


வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல ஒரு குடும்பத்தில் நடக்கும் தனிப்பட்ட சச்சரவாக யாரும் கருதக்கூடிய ஒரு நிகழ்வு எப்படி எல்லாருக்கும் பொதுவான ஒரு நிகழ்வாகவும் இருக்கிறது என்பதை மூன்றாம் மனிதராக, ஒரு அவதானியாகப் பதிவிடுகிறார். இதனை ஒரு முதலாளித்துவ, தனிமனிதவாத, நகர வாழ்க்கையின் மீதான ஒரு விமர்சன ரீதியான அவதானமாக அவர் வெளிப்படுத்துகிறார். 


மூன்றாவது வகைக் கவிதைகள் ப்யூகோவ்ஸ்கி என்கிற ஒரு எழுத்தாளனைப் பற்றியது. அவன் திட்டமிட்டு காற்றோட்டமான, வெளிச்சமான அறையொன்றில் இருந்து சிந்தித்து தன் எழுத்துக்களை உருவாக்கவில்லை. கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையின் விளிம்பில் இருந்துகொண்டே உருவாக்குகிறான். அவனது எழுத்துக்கள் அவனுக்கு வடிகாலாகின்றன, துணையாகின்றன, மனோதத்துவ நிபுணர் ஒருவரின் வேலையையும் அவ்வெழுத்துக்களே அவனுக்குச் செய்கின்றன. துன்பத்திலிருந்து நல்ல எழுத்துக்கள் பிறப்பதாக அவன் நம்புகிறான். ஒரு சில நல்ல வரிகளைத் தான் எழுதுவதற்காகவே கடவுளர்கள் தன்னைத் தீயில் உழல விடுகிறார்களோ என்றும் எண்ணுகின்றான். இந்த எழுத்தாளன் பிரபலமற்றவனாக இருந்து காணும் இடங்களில் அழகான பெண்களால் அடையாளம் காணப்படும் அளவுக்குப் பிரபலமானவன் ஆகிறான். ஆனால் அந்த பிரபலமான எழுத்தாளன் என்கிற அடையாளம் அவனைக் கூசச் செய்கிறது. அதை எப்படித் தன் போலியற்ற ஆளுமையுடன் ஒத்துபோக வைப்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை. 


இந்த மூன்றாம் வகைக் கவிதைகளுள்  ப்யூக்கோவ்ஸ்கி கையால் எழுதியவை, தட்டச்சுப்பொறியால் எழுதியவை மட்டுமன்றி பிற்காலத்தில் தன் எழுபதுகளில் மக்கிண்டோஸ் கணிணியில் எழுதியவையும் அடங்குகின்றன.  அவர் நீண்ட காலம் வாழ்ந்து தன் படைப்புக்களைத் தொடர்ந்து வந்திருப்பதனால் தான் அவரை 

“நிகழ்ந்துவிட்ட அதிசயம்” என்று குறிப்பிடுகின்றார் இளங்கோ.


இந்தத் தொகுப்பில் கவிதைகள் எழுதப்பட்ட ஆண்டை ஒவ்வொரு கவிதைக்கும் அடியில் சேர்த்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் காலத்திற்கேற்ப கவிதைகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். 



2.


மொழிபெயர்ப்பு என்பது ஒரு புதிய படைப்பு. அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளரது தனிப்பட்ட இரசனை, தெரிவுகள் என்பவற்றின் பாற்பட்டது. உண்மையில் இந்தத் தொகுப்பினை ப்யூகோவ்ஸ்கி, இளங்கோ ஆகிய இரண்டு கவிஞர்கள் இணைந்து எழுதிய ஒரு தனித்துவமான படைப்பாகவே நோக்க வேண்டும். 



மொழி என்பது வெறும் தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்ல. அது கலாசாரக் காவி. அந்த மொழிக்குரிய கலாசாரம், பண்பாடு, வரலாறு என்பவற்றினூடாக ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தங்கள் பல ஒவ்வொரு மொழிக்கும் வேறுபட்டிருக்கும். புனைவிலக்கியத்தை மொழிபெயர்க்கும் போது இந்த விடயத்தை இருவேறு விதங்களில் கையாள முடியும். ஒன்று மூலத்தை முழுமையான ஒரு தமிழ்ப் படைப்பாகுவது. தமிழ்க் கவிதை மரபுக்குரிய, தமிழ் வாசகர்களுக்குப் பழகிய இயல்பான மொழியில் முழுமையான ஒரு தமிழ்க் கவிதையாக எழுதுவது இந்த வகைப்படும். இந்த முறையில் மூலத்தின் உணர்வோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவத்தில் தமிழுக்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்படும்.  


இரண்டாவது வகை மூல மொழியின் கலாசார, மொழி வடிவங்களை அண்மித்திருக்கக் கூடியவாறான ஒரு மொழிபெயர்ப்பு. இந்த வகை மொழிபெயர்ப்பு தமிழில் மட்டும் வாசிப்பவருக்கு இடறுவது போல இருப்பினும், தமிழுக்கு புதிய எழுத்து வடிவங்களையும், கலாசார நுண்ணம்சங்களையும் கொண்டு வருவதில் முக்கிய பங்கினை ஆற்றும். இளங்கோவின் கவிதை மொழிபெயர்ப்பு எனக்கு இந்த இரண்டாம் வகைப்பட்டதாகவே தோன்றியது. இக்கவிதைகளை  ஆங்கிலத்தில் வாசித்தேனா தமிழில் வாசித்தேனா என்று கூட மறந்து கருப்பொருள் மட்டும் மனதில் நின்றது. 


முன்னுரையில் இளங்கோ தான் மௌன வாசிப்புக்குரிய கவிதைகளையே கூட விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் மௌன வாசிப்புக்குரியவை அல்ல என்று ஆரம்பத்தில் அபிப்பிராயப்பட்டதாகவும் கூறுகிறார். தமிழ்க் கவியுலகைப் பொறுத்தவரை, கவிதையும் ஓசையும் காலங்காலமாகப் பின்னிப்பிணைந்தவை. எதுகை மோனையெதுவுமற்ற புதுக்கவிதைகளில் கூட உரத்து வாசிக்கும் போது வெளிப்படும் உணர்வு கவிதைக்கு புதிய பரிணாமத்தைத் தரவல்லது. ஒரு கவிதை  மௌன வாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உகந்ததாக ஒரே நேரத்தில் இருக்கக்கூடும். இவ்விரண்டு வாசிப்பு முறைகளும் வெவ்வேறு அனுபவங்களைத் தரவும் கூடும். 


மூலக்கவிதையின் ஒரே வரியைத் திரும்பத்திரும்பக் கூறுதல் போன்ற உரத்த வாசிப்புக்குரிய அம்சங்களை இந்த மொழிபெயர்ப்பிலும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழியாக்கும் போது வரிகளைப் பிரிக்கும் இடங்கள், அவற்றின் வரிசைக்கிரமம் என்பவற்றில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் இக்கவிதைகளை மேலும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். 


புலம்பெயர் தமிழ்க் கவிதை உலகுக்கு மிக அண்மித்த கருப்பொருட்களைக் கொண்ட இக்கவிதைகளைத் தமிழில் கொண்டு வந்ததற்கும் அவற்றை வாசித்து அபிப்பிராயம் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பினை அளித்ததற்கும் இளங்கோவிற்கு நன்றி. 


*************************


(பி.கு: தொரொந்தோவில் 2022 மே மாதம் நடந்த இளங்கோவின் புத்தக வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிமுக உரையின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவமே இக்கட்டுரையாகும்)


நன்றி: 'அம்ருதா' - புரட்டாதி, 2022

சமூகப் போராளியின் வர்ணங்கள் – ரதன்

Monday, October 10, 2022

 உதிரும் நினைவின் வர்ணங்கள் – இளங்கோவிலை  ₹150; வெளியீடு: அகநாழிகை, 26 ஜெயமன் தெருகோகுலபுரம்செங்கல்பட்டு – 603001, இந்தியாமின்னஞ்சல்: aganazhigai@gmail.com, கைபேசி: +91 999 454 1010


வ்வருடம் ‘கான்’ திரைப்பட விழா உக்ரேன் அதிபரின் பேச்சுடனேயே ஆரம்பமானது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விழாவின் அரசியல் நோக்கம் பற்றி சமூகவலைத் தளங்கள் கேள்வி எழுப்பின.


2015இல் ‘தீபன்’ படம் திரையிடப்பட்டதுடன் ‘கான்’ திரைப்பட விழா பற்றி கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. ஒரு சமூகத்துக்கு எதிரான திரைப்படம், அதன் பிரதான திரையிடலில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட விருதும் வழங்கப்பட்டது. சமூக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக இனங்களுக்காக எதிர்க் குரல் எழுப்பிய ஷோபாசக்தி இதன் கதாநாயகன். கடந்த 28 வருடங்களாக எந்தவொரு இந்தியத் திரைப்படமும் ‘கான்’ விழாவில் திரையிடப்படவில்லை என பலர் கவலைப்பட்டனர். ஆனால், ‘தீபன்’ படத்தின் இறுதி 15 நிமிடங்கள் தெலுங்கு மசாலாப் படங்களையே ஒத்துள்ளது.


இன்று உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் நல்ல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்று கூறினால் அது தவறானது. திரைப்பட விழாக்களுக்கெனத் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே சமயம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படும் பல படங்கள் பார்க்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. கொரோனா ஒரு மாற்றத்தை இங்கு ஏற்படுத்தியுள்ளது. இணைய வழியில் பல விழாக்கள் நடைபெறுகின்றன. பல தளங்களில் கவனிக்கப்படாத பல படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன.


இதனை இங்கு கூறுவதற்கு காரணம், இளங்கோவிற்கும் திரைப்பட விழாக்களுக்கும் ஒரு உறவுப் பாலம் உள்ளது என்பதற்காகவேயாகும். ரொரன்ரோவில் நடைபெற்ற பல தமிழ்க் குறும்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களைப் பற்றிய தனது விமர்சனத்தையும் அறிமுகத்தையும் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் இளங்கோ எழுதியுள்ளார். பல விழாக்களில் நடுவராக இருந்திருக்கின்றார். இத் திரைப்பட விழாக்கள் புதிய படைப்பாளிகளுக்கான களத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. இங்கு கருத்தியலும் திரைமொழியும் கவனத்திற் கொள்ளப்படும். புதிதாக படமெடுப்பவர்களுக்கு இது ஒரு பயிற்சிக் களமாகக் கூட மாறும். இளங்கோ தனது விமர்சனங்களில் இதனைக் கருத்திற் கொண்டுள்ளார். பல படைப்பாளிகளுடன் உரையாடல்களை மேற்கொண்டுள்ளார். ரொரன்ரோ தமிழ் திரைப்பட உலகை நன்கறிந்தவர்ளில் ஒருவர் இளங்கோ என்றால் மிகையாகாது.


 

‘உதிரும் நினைவின் வர்ணங்கள்’ என்கின்ற இந்நூலில் பல வகையான (36) படங்களைப் பற்றி இளங்கோ எழுதியுள்ளார். ஒரு சிறந்த நாவலாசிரியர், சிறந்த கதைசொல்லியாக, தனது பார்வையில் இப் படங்களை பதிவு செய்துள்ளார். ஒரு பயணியாக இயற்கையை நேசிக்கும் ஒரு இயற்கை போராளியாக, காதல்-பாச உணர்வு கொண்ட ஒரு சக காதலனாக, நண்பனாக, போரின் பாதிப்புக்களிலிருந்து மீள முடியாத ஒரு சமூகப் போராளியாக இப் படங்களுடன் இளங்கோ பயணிக்கின்றார்.


ஒரு அரசியல் சினிமா விமர்சகனாக, நான் இந் நூலில் உள்ள மூன்று படங்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்த மூன்று படங்களும் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படங்களாகும்.


முதல் படம், ‘போராளிக்கு இட்ட பெயர்’: சில வருடங்களுக்கு முன்னர் சதா பிரணவனின் ‘போராளிக்கு இட்ட பெயர்’ என்ற குறும்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவர் துரோகியாக்கப்பட்டவர். மற்றவரால் சித்திரவதை செய்யப்படுகின்றார். தனது நண்பனின் நெருங்கிய நண்பனை சென்னையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் நீண்ட நாட்களின் பின், பேருந்து ஒன்றில் சந்தித்துள்ளான். ஆனால் ஒருவருடன் ஒருவர் கதைக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் யார், எந்த இயக்கம், இவர் யார், எந்த இயக்கம் எனத் தெரியாது எதிரிகள் போல் பிரிந்து செல்கின்றனர்.


அடுத்து, ‘லைப் ஒப் அதேர்ஸ்’: இந் நூலில் உள்ள இரு படங்கள் கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி இணைந்த பின்னர் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளன. அதில் ‘லைப் ஒப் அதேர்ஸ்’ (Life of Others) என்ற படம் மிக முக்கியமானது. இப் படம் இடதுசாரிகள் மேல் விமர்சனங்களை முன்வைக்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு உளவாளி உள்ளார் என்ற விமர்சனங்கள் மேற்கால் முன்வைக்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் மனிதாபிமானவை போன்ற போக்கை இவ்வாறான இடதுசாரி எதிர்ப்பு படங்கள் முன்வைக்கின்றன.


என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் அழகியலை அல்லது திரைமொழியை விட, அது முன்வைக்கும் கருத்தியல் முக்கியம். படம் எந்த பார்வையாளர்களை குறிவைத்து எடுக்கப்படுகின்றது, இதன் பின்னணி என்ன போன்ற விடயங்கள் என்பது எனக்கு முக்கியம். ஒரு அரசியல் படத்தை என்னால் மேலோட்டமாக பார்த்து விட முடியாது. பல படங்கள் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றன. சரித்திரத்தையே மாற்றிவிடுகின்றன. அண்மையில் வெளிவந்த ‘மேதகு’, மற்றும் சுமதி சிவமோகனின் ‘ஒரு தம்ளர்’ படங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. ‘ஒரு தம்ளர்’ படம் பற்றி அ. யேசுராசா திரைப்பட விழாவிலேயே தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். கடந்த ‘நிழல்’ இதழிலும் இப் படம் பற்றிய விமர்சனக் கட்டுரை இடம்பெற்றிருந்தது. மணிரத்தினத்தின் தேசியத்துக்கும் அமெரிக்காவின் துப்பாக்கி ஜனநாயகத்துக்கும் நெருக்கமான உறவுள்ளது.


‘லைப் ஒப் அதேர்ஸ்’ படமும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சிக்கின்றது. அதற்கப்பால் ஒரு கிழக்கு ஜேர்மனி அதிகாரி ஒருவர், இப்பொழுது சாதாரண வாழ்க்கைக்கு நுழைந்துவிட்டவர். அவரால் பாதிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் சந்திக்கும் பொழுது எழும் உணர்வுகள் போன்ற பல விடயங்களை படம் பதிவு செய்துள்ளது. (இப் படத்தை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், ஒரு தடவை கட்டாயம் பாருங்கள்)


‘அதிகாரப் போதை கூடக்கூட மனிதாபிமானம் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து விடுகின்றது’ என்று இளங்கோ இக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.


இதே அதிகாரப் போர்வையைக் காப்பாற்ற முயலும் பொழுது, நாங்கள் மிக மோசமானவர்களாக மாறிவிடுகின்றோம். ‘கோல்ட் வோர்’ (பனிப் போர்) முடிவுக்கு வந்த பின்னர், மேற்கு நாடுகள் சுதந்திரமாக எதிரிகளற்று இயங்கிக் கொண்டிருந்தன. மீண்டும் ருசியா தனது எழுச்சியை உறுதிப்படுத்தத் தொடங்க, ஸ்பில்பேர்க் களத்துக்கு ‘பிரிட்ஜ் ஒப் ஸ்பைஸ்’ என்ற படத்துடன் வருகின்றார். இதுவும் பழைய சோவியத் யூனியனைப் பற்றிய படம். அரசியல் கைதிகள் பரிமாற்றம் என்றாலும் சோவியத்தை விமர்சிக்கும் படம். மீண்டும் ருசியா எழுச்சி பெறும் போதே இப்படி என்றால், சோவியத் யூனியனில் லெனினின் பின்னர் ஸ்டாலின் ஆட்சிக் காலங்களில் என்ன செய்திருப்பார்கள்.


“1919-ல் இடம்பெற்ற பல வேலை நிறுத்தங்கள் அமெரிக்காவை ஆட்டம் காணவைத்தது. இக் காலகட்டம் ‘First Red Scare’ (1917-1920) எனக் கூறப்படுகின்றது. 1929-1939 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பாரிய பொருளாதார வீழ்ச்சியானது பல அமெரிக்கர்களை இடது சாரிகளாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக ‘Second Red Scare’ (1947-1957) உருவானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் உருவானது. இக் காலகட்டத்தில் இடதுசாரிகள் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என அமெரிக்க அரசு கருதியது. விளைவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கிய House Committee on Un-American Activities (HCUA) உருவாக்கப்பட்டது. 1945இல் இவ் விசாரணைக் குழு நிரந்தரமாக்கப்பட்டது. பின்னர் 1969இல் House Committee on Internal Security என பெயர்மாற்றம் பெற்றது.


HCUAஇன் காலத்தில் பல இடதுசாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அமெரிக்க அரசு மிக மோசமான வன்முறையை இடதுசாரிகள் மீது பிரயோகித்தது. இந்த விசாரணைக் குழு கலை இலக்கியவாதிகளையும் விசாரணைக்கு அழைத்தது. ஒருவர் சற்று முற்போக்காக உரையாடினால் அல்லது எழுதினால் அவர் மீது அமெரிக்க அரசு அச்சம் கொண்டது. முற்போக்கு சிந்தனை என்பதனையே பயங்கரவாதம் எனக் கருதியது.


இவ் விசாரணைக்குழு ஹொலிவூட் படைப்பாளிகள், கலைஞர்கள் மீதும் விசாரணையை மேற்கொண்டது. குறிப்பாக திரைக் கதையாசிரியர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நடிகர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து ஹொலிவூட்டில் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. ‘ஹொலிவூட் 10’ எனப்படும் ஹொலிவூட்டின் மிக முக்கிய பத்து படைப்பாளிகளுக்கு எதிராக தடைவிதிக்கப்பட்டது. இவர்களில் பலர் சிறைவாசத்தையும் அனுபவித்தார்கள். இவர்கள் பதினொரு பேர். ஒருவர் ஐரோப்பாவில் குடியேறியமையால் பத்து பேர்கள் ஆனார்கள். இவர்களில் ஒருவர் Dalton Trumbo.


இந் நூலில் ‘ரம்போ’ (Trumbo) படத்தைப் பற்றிய கட்டுரையும் உள்ளது.. தமிழில் பல கட்டுரைகள் ஹொலிவூட் அரசியலைப் பற்றி வெளிவந்துள்ளன. ‘படச்சுருள்’ இதழ் சிறப்பிதழ்களையும் கொண்டுவந்துள்ளது. ‘நிழல்’ ஜூன் இதழில் மிக நீண்ட கட்டுரை ஒன்றும் வெளிவருகின்றது.


தடைசெய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் வாழ்க்கையே அமெரிக்க அரசின் சார்பில் இயங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். Screen Actors Guildஇன் தலைவராகவிருந்த முன்னால் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன் பல இடதுசாரிக் திரைக் கலைஞர்களை பற்றிய விபரங்களை அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக, தடைசெய்யப்பட்ட மற்றும் தலைமறைவான பல கலைஞர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.


இளங்கோ, ரம்போவை ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் ஆக நூலில் பதிவு செய்துள்ளார். உண்மையும்கூட. விசாரணையின் போது ஒருவரையும் இவர் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றிய பல விடயங்களை பலர் காட்டிக்கொடுத்தன் மூலமே அறிந்துகொண்டார்கள். Elia Kazan போன்றவர்களை இன்னமும் இடதுசாரிகள் மன்னிக்கத் தயாராகவில்லை


ஹொலிவூட் எடுக்கும் அரசியல் படங்கள் அனைத்தையுமே மிக நுணுக்கமாக பார்க்க வேண்டியுள்ளது. ‘கிறீன் புக்’ என்ற படத்துக்கு ஒஸ்கார் சிறந்த படத்துக்கான விருதை வழங்கியிருந்தது. இதனைக் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான ஆதரவுப் படம் என பலரும் கருதினர். உண்மையில் இதன் பின்னால் உள்ள நுண் கருத்தியல், அரசியல் என்பவை மிக மோசமானது.


எனவே, ‘ரம்போ’ போன்ற படங்களைப் பார்ப்பதன் மூலம் அமெரிக்க ஜனநாயக வெளியின் எல்லைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


அமெரிக்கா தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டுக்குள் உலக நாடுகளை வைத்திருந்தது. மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரிகள் அரசமைப்பதை எவ்வாறேனும் தடுத்து வந்தது. ஃபிடல் கஸ்ரோவை கொல்வதற்கு பல தடவைகள் முயற்சி செய்தனர். அவ்வாறே சிலியிலும் அமெரிக்கா தனது கைவரிசையைக் காட்டியது.


இவ் வருடம் மார்ச் மாதம் சிலியில் Gabriel Boric புதிய ஜனாதிபதியாக பதவியேற்கின்றார். 49 வருடங்களுக்குப் பின்னர் சிலியில் ஒரு இடதுசாரி அதிபர் பதவிக்கு வந்துள்ளார்.


சல்வடோர் அலண்டே 9-11-1973இல் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் சிலி மக்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். சுமார் 49 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு இடதுசாரி கப்ரியல் பொரிக் அதிபராகின்றார். இதற்கிடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட சர்வாதிகார ஆட்சியைப் பற்றி பப்லோ லைறைன், ‘ரையோலஜி’ என மூன்று படங்கள் எடுத்தார். இவற்றுள் என்னைப் பாதித்தது ‘போஸ்ட் மோர்ட்டம்’. ஆனால், இளங்கோ இந்நூலில் எழுதியிருக்கும் ‘நோ’ (NO) படமும் மிக முக்கியமானது.


இப் படம் 1988இல் பினாச்சேயின் சர்வாதிகார ஆட்சி தொடர்வதா இல்லையா என்ற வாக்கெடுப்பை மையப்படுத்தியது. ‘நோ’ பிரச்சாரம் எவ்வாறு தன்னை நிலைநிறுத்தியது என்பது இங்கு முக்கியம். இப் படத்தைப் பார்த்திருக்காவிட்டால் தயவு செய்து இளங்கோவின் கட்டுரையை வாசித்துவிட்டு ஒரு தடவை படத்தைப் பாருங்கள்.


 


னி நபர் கொலைகள் மூலமாக சமூகத்திலோ நாட்டிலோ அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாது என்ற கருத்தியலை அலண்டேயின் கொலை மாத்திரமல்ல, பல கொலைகள் உலக வரலாற்றில் நிரூபித்திருக்கின்றன.


இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். தனது இணையத்தளத்தில் பல நூல்களை விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளார். இவற்றில் பல அச்சிலும் வெளிவந்துள்ளன. இந் நூலிலும் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார். ஒவ்வொரு படத்தைப் பற்றி வாசிக்கும் பொழுதும் நாமும் அவரது பார்வையுடன் இணைந்து பயணிக்கின்றோம்.


***********


நன்றி: 'அம்ருதா' - ஆடி, 2022

'மெக்ஸிக்கோ' பற்றிய காணொளி

Tuesday, August 23, 2022

 ஒரு படைப்பு அதற்கான வாசகர்களைத் தன்னியல்பிலே கண்டடைந்துகொள்ளும்.




நன்றி: சாந்தி

வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 03

Sunday, August 14, 2022

 எழுத்து

.

ரொபர்த்தோ பொலானோவின் 'Savage Detectives'  நாவல் பதின்மங்களில் இருக்கும் இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். மெக்ஸிக்கோவில் இதுவரை இருந்த கவிதை முறையை மாற்றுகின்றோம் என்று தங்களுக்குள் அறைகூவல் விடுத்து ஒரு புதிய குழுவை (Visceral Realists) அமைத்து இவர்கள் இயங்கத் தொடங்குவார்கள். இந்த நாவல் கிட்டத்தட்ட பொலானோவின் இளமையில் நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டதென்றாலும், இந்த நாவலின் கதைசொல்லி பொலானோ அல்ல. 


Visceral Realists அமைப்பைச் சேர்ந்த கார்ஸியா மாதரோவினாலே சொல்லப்படுகின்றது. அவ்வாறு சொல்லப்படும் கதையில் பொலானோவின் Alter egoவான, Arturo Belano ஒரு பாத்திரமாக வருகின்றது. இவ்வாறே தான் சம்பந்தப்பட்ட இளமைக்காலக் கதையைச் சொல்லுகின்றபோதும், தன்னையொரு உபபாத்திரமாகக் கொண்டு ஹெமிங்வே  'A Moveable Feast'ஐ எழுதியிருப்பார்.


எனக்கு பொலானோவை ஹெமிங்வேயும், ப்யூகோவ்ஸ்கியும் இடைவெட்டும் புள்ளியில் வைத்துப் பார்ப்பது பிடிக்கும். பொலானோ தனது 15 வயதில் சிலியிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு புலம்பெயர்ந்தவர். பின்னர் ஒரு காதல் பிரிவின் நிமித்தம் மெக்ஸிக்கோவை விட்டு தனது இருபதுகளில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்தவர். பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் உணவகங்களில் கோப்பை கழுவுகின்றவராகவும், இரவுநேரக் காவலாளியாகவும் வேலை செய்து ஒரு நாடோடியாக அலைந்து திரிந்தவர். அந்தக் காலத்தில் குடிக்கும் போதைமருந்துக்கும் அடிமையாகி இருந்தவர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பலரால் வியந்து பாராட்டப்பட்ட மார்க்குவெஸ், பாப்லோ நெருடா, இஸபெல் அலண்டே போன்றவர்களை எள்ளலாக பல இடங்களில் விமர்சனம் செய்தவர். அதேவேளை போர்ஹேஸ்ஸையும், அக்டோவியா பாஸையும் தனக்குரிய ஆதர்சமாகக் கொண்டவர். ஆகவேதான் இந்த நாவலிலும் (Savage Detectives) ஒரு பாத்திரமாக அக்டோவியா பாஸை கொண்டுவருகின்றார்.


ளமை கொப்பளிக்கும்போது எழும் கனவுகள்தான் எத்தகை அழகானது. இந்த உலகையே புரட்ட பெரும் புரட்சி செய்யவும், கலை இலக்கியங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்றும், கற்பனை செய்யாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்ன? அவ்வாறு மாற்றங்களைக் கொண்டுவர புறப்பட்ட ஒரு குழு எப்படி சிதைவுண்டு போகின்றது என்பதை நாம் இந்த நாவலில் பார்க்கின்றோம். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான ஒன்று நிகாரகுவாவிற்கு புரட்சி செய்யப்போய், இறுதியில் வெறுமை சூழ, ஒரு பூங்காவில் அக்டோவியா பாஸை சந்திக்கும். 


அக்டோவியா பாஸ் இந்த இளைஞர்களுக்கு ஒரு ஆதர்சமாக இருந்தவர். ஆனால் அந்தக் குழு உடைந்து போனது மட்டுமின்றி, இந்தப் பாத்திரத்திற்குள் எந்த பெரும் நெருப்பும் கனன்று எரிவதில்லை. ஒரு இடத்தில் யூலிஸஸ் லிமா என்கின்ற இந்தப் பாத்திரம், 'ஒருவருக்கு இருப்பதற்கு ஓரிடமும், செய்வதற்கு ஒரு வேலையும் நிச்சயம் வேண்டும்' என்று சொல்லும். ஆனால் துயரம் என்னவென்றால் யூலிஸஸ் லிமா என்கின்ற இந்தப் பாத்திரம் இந்த இரண்டும் இல்லாது தத்தளிப்பில் அலைந்து கொண்டிருக்கும்.


எழுபதுகளின் நடுப்பகுதியில் தொடங்கும் இந்த நாவலை ரொபர்த்தொ பொலானோ 1998 எழுதி முடித்து வெளியிடுகின்றார். அந்த நாவல் வருகின்ற காலப்பகுதியில்தான் இந்த நாவலில் வருகின்ற யூலிஸஸ் லிமா என்கின்ற இளமையில் அவ்வளவு துடிப்புமிக்க இருந்த நண்பரை, கார் விபத்தில் இழக்கின்றார். அந்த நண்பரின் உடலம் எவரும் அனுமதி கோராது மூன்று நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் இருந்த கொடுமையும் நிகழ்ந்திருக்கின்றது. 


வாழ்க்கையெனும் பரம்பதத்தில் நாம் எங்கெங்கு எல்லாம் எடுத்துச் செல்லப்படுவோம் என்பது எவருக்கும் தெரிவதில்லை. ஆனால் இலக்கியம் அதை இன்னொருவகையில் இவ்வாறான உதிரிகளாக அடையாளமற்றுப் போகும் மனிதர்களை நினைவுகொள்ளும். ரொபர்த்தோ பொலானவை வாசிக்கும் என்னைப் போன்ற வாசகர்கள், நிஜவாழ்வில் எவருக்குமே தேவையற்று அநாதரவாய் இழந்து போன மனிதனை, யூலிஸஸ் லிமா என்ற பாத்திரத்தினூடாக உயிர்ப்புடன் வைத்துக் கொள்வோம். 


இந்த Visceral Realists இளைஞர்களுக்கு அக்டோவியா பாஸ் போல, இன்னொரு எழுத்தாளரான ஸிசாரோ டினாஜாரோ என்கின்றவரும் ஆதர்சனமானவர். அவரையே தங்கள் குழுவின் தாயைப் போன்றவர் என்கின்றனர். ஆனால் டினாஜாரோ இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படாதவர். அதேபோல அவரின் வாழ்வும் மர்மமானது. ஒரு பாலைவனத்தில் காணாமற்போனவர் எனச் சொல்லப்படுகின்றது.  அதன்பின் அவரைப் பற்றி எவருக்கும் தெரிவதில்லை. ஒருவகையில் இந்த நாவலின் முதற்பாகமே அந்தப் பெண்ணைத் தேடி இந்த இளைஞர்கள் அந்தப் பாலைவனத்துக்குப் போவதற்கான முயற்சிகளைப் பற்றியதுதான்.


ஆக, இந்த நாவல் வரலாற்றில் காணாமற்போனவர்களை, எளிய மனிதர்களாக காலத்தின் அபத்தத்தினால் விழுங்கப்பட்டவர்களை கண்டடைகின்ற ஒரு எத்தனம் எனக்கூடச் சொல்லலாம். இன்னொருவகையில் உலகின் ஒரு மூலையில், எவராலும் அதிகம் பேசப்படாத ஒரு குழு இளைஞர்களின் பெருங்கனவுகளை எழுபதுகளின் பின்னணியில்  நாம் வாசித்துப் பார்க்கின்றோம். போதைமருத்துக்குள் அகப்பட்ட பொலானோ அவரின் நாற்பதுகளில் பார்சிலோனாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்தபின் வேறொரு மனிதராக மாறுகின்றார். எவ்வாறு போதையிலிருந்து மீண்டேன் என்பதை ஒரு கட்டுரையாகக் கூட எழுதியிருக்கின்றார். ஆனால் இன்று அவை முக்கியமில்லை.

ஒருவர் எவற்றில் வீழ்ந்தார், மீண்டார், எழுந்தார் என்பதெல்லாம் ஒரு கலைஞனைக் குறித்து யோசிக்கும்போது வாசகர்கள் அவ்வளவு கவலைப்படுவதுமில்லை. ரொபர்தோ பொலானோ போன்ற எழுத்தாளர்கள் எவ்வகையான படைப்புக்களை நமக்குத் தந்திருக்கின்றார்கள் என்பதே நமக்கு முக்கியமானது. ஒருவகையில் தன் சமகாலத்து பெரும் எழுத்தாளர்களை எள்ளல் செய்து, நோபல் பரிசு போன்றவற்றை கடுமையாக விமர்சித்த பொலானோ இன்றைக்கு மார்க்குவெஸ், போர்ஹேஸ் போல இலத்தீன் அமெரிக்க உலகில் மிக முக்கியமான எழுத்தாளர். ஆனால் பொலானோ வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு உதிரி;  பலரால் அவ்வளவு கவனிக்கப்படாத ஒரு எளியபடைப்பாளி.


தனது கலைக்கு நேர்மையாக இருந்த பொலானோ அவரது ஐம்பதாவது வயதில் (2003) காலமாகிப் போனாலும், இன்றைக்கு அவரே கற்பனை செய்திராத எல்லைக்கு அப்பாலும் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றார். 


அது காலம் அவருக்கு மனம் உவந்தளித்த சிறந்தவெகுமதியாகும்.


****************


நன்றி: 'அகநாழிகை' ‍- ஆடி, 2022

வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 02

Thursday, August 11, 2022

 

வாசிப்பு

 

“great writers are indecent people

they live unfairly

saving the best part for paper.

                                           

good human beings save the world

so that bastards like me can keep creating art,

become immortal.

 

if you read this after I am dead

it means I made it.”

 

~Charles Bukowski

 

 

நண்பரொருவர்  'நீங்கள் எப்படி எழுதுகின்றீர்கள்?' என ஒருநாள் சடுதியாகக் கேட்ட்டார். சில வருடங்களுக்கு முன் இலங்கைக்குச் சென்றபோது இன்னொரு நண்பரினூடாக இந்த நண்பர் அறிமுகமாயிருந்தார். பின்னர் அவர் கனடாவுக்கு வந்த தொடக்க காலங்களில் அவரோடு ஒரளவு தொடர்பிருந்தது. பின்னர் தேய்பிறை போல அந்த நட்பு மங்கிப் போயிருந்தது.

 

திரும்பவும் அவர் தொடர்பில் வந்தபோது, அவர் இந்த இடைப்பட்ட காலங்களில் பெற்ற மாற்றங்கள் நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவை. இலங்கையில் அவருட்பட்ட நண்பர்களோடு ஹிக்கடுவைக்கு ரெயினில் போனபோது  -வழமையாக  நான் ஒரு கால் விரலை இன்னொரு விரலுக்குள் மடித்து வைக்கும் பழக்கம் உள்ளவன் ஐயோ இவனுக்குக்கு ஒரு கால்விரல் இல்லையே என கவலைப்பட்ட மிகுந்த அப்பாவியாக இருந்தவர். அவர் கனடா வந்ததன்பிறகும் ஒருவகையான அப்பாவித்தனத்தோடு இருந்தது நினைவினிலுண்டு. அத்தோடு கொன்வென்ட் பாடசாலைகளில் படிக்கும் அநேக பிள்ளைகளுக்கு இருக்கும் பணிவு/கருணை என்பதும் அளவுக்கதிகமாக அவருக்கு இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இப்போது அவரைப் பார்த்தபோது முற்றிலும் வேறொரு நபராக மாறியிருந்தார்.

 

இடையில் எவையவை நடந்து, அவர் இந்த மாற்றங்களுக்கு ஆளானார் என்பது என்னளவில் முக்கியமில்லை. ஆனால் நான் பார்த்த பல பெண்கள் (ஆண்களை விட) அவ்வளவு சடுதியாக மாற்றங்களுக்கு உள்ளாகி நம்மை விஞ்சிப் போகின்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த நண்பர் இப்போது (அவர் சார்ந்த மதம் வேறெனினும்) புத்தருக்குள் ஆழப் போனவராக, ஒரு யோகா ஆசிரியராக மாறியிருந்தார். அதைவிட மிகச் சிறந்த பயணியாக மாறியிருக்கின்றார். ஒரளவு பயணங்கள் செய்து பயங்களை உதறித்தள்ளியவன் என்கின்ற எனக்கே தயக்கமாயிருக்கும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகள், வட ஆபிரிக்கா என பல இடங்களுக்குத் தனித்து அவர் பயணித்திருக்கின்றார் என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது.

 

இப்போது என்னிடம் வந்து எப்படி எழுதுவது என்று கேட்டதற்கு, அவருக்கு இருக்கும் பயண அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலில் இருந்து எழுந்ததென நினைக்கின்றேன்.

 

 

ந்த நண்பருக்குச் சொன்னது போலவே இங்கேயும் எழுதுவது என்பது எப்படியென்று நான் எதையும் பகிரப் போவதில்லை. ஏதோ இது நன்கு எனக்குத் தெரிந்து அதை இரகசியம் போல பதுக்கி வைத்திருக்கின்றேன் என்பதல்ல  இதன் அர்த்தம். வேண்டுமெனில் எல்லாமே 'விடாது முயற்சி' செய்வதில் இருக்கிறதென ஒர் எளிமைக்காகச் சொல்லிவிடலாம்.

 

ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கும்போது வரும் எல்லாத் தயக்கங்களும் எழுதத் தொடங்கும்போதும் இருக்கும். ஆகவே நண்பருக்குச் சொன்னேன்; 'எது வருகின்றதோ எல்லாவற்றையும் தயக்கமின்றி எழுதிக் கொண்டு செல்லுங்கள். அதுதான் எழுதுகின்றபோது முக்கியமானது. பின்னர் எழுதி முடித்தபின் நீங்களே ஒரு விமர்சகராக இருந்து அதை வெட்டிக் கொத்தி திருத்திக் கொள்ளலாம்' என்றேன். எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் உடனே வரும் தயக்கம், நான் நன்றாக/சரியாக எழுதுகின்றேனா இல்லையா என்பது. அது எந்தக் கலையாயினும், அதில் ஈடுபடுகின்றவர்க்கு வருகின்ற அச்சமே. ஆனால் நினைவில் வைத்திருக்கவேண்டியது, உங்களை விட சிறந்த எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இருந்தாலும், உங்கள் அனுபவங்களையும், உங்கள் வாழ்வையும் எழுத உங்களை விடச் சிறந்த எவரும் இல்லை. ஆகவே தயக்கமின்றி எழுதிப் பாருங்கள் என்று சொன்னேன்.

 

அதேசமயம் எழுத்து ஒரளவு கைவந்தபின், 'போலச் செய்யும் பாவனை'களை நாம் தொடர்ந்து களைந்து வந்தபடியே இருக்க வேண்டும். ஒரு தேர்ந்த வாசகர் எமது பாவனைகளை/போலச்செய்தல்களை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். வாசகர்களை விட எழுதும் எமக்கு,  நாம் உண்மையில் எழுத்தின் ஊற்று பொங்க எழுதுகின்றோமா அல்லது பாலை நிலத்தில் இல்லாத ஊற்றைத் தேடி வறட்சியாக எழுதுகின்றோமா என்பது இன்னும் நன்கு தெரியும்.

 

இன்னொரு புள்ளி பலர் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் என்னளவில் முக்கியமானது.  அது நீங்கள் தொடர்ந்து வாசிப்பவராக இருக்கவேண்டும். எழுதுவதற்கு, வாசிப்பது ஒரு முன் நிபந்தனை அல்ல. ஆனால் ஒருவர் தொடர்ந்து எழுதப்போகின்றார் என்றால் வாசிப்பு முக்கியமானது. ரொபர்தோ பொலானோ போன்றவர்கள் பாடசாலைப் படிப்பை இடைநடுவில் நிறுத்தினாலும், பெரும் வாசிப்பாளராக இருந்திருக்கின்றனர். வாசிப்பு உங்களுக்கு மிகப்பெரும் வெகுமதியை எழுத வரும்போது தரும்.

 

எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் பெரும் வாசிப்பாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் எழுதுவதில்லை. ஒரு காலத்தில் அவர்கள் எழுத்துக்கு வந்தால் நம்மையெல்லாம் மிஞ்சிச் செல்லும் எழுத்தைத் தருவார்கள் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.எழுதித்தீரா பக்கங்கள்எழுதிய 'காலம்' செல்வம் போன்றவர்கள் நீண்டகாலம் வாசிப்பவர்களாக இருந்தவர்கள்;  சமகாலத்தில் இலக்கியத்தில் நடைபெறுவதை அறிந்துகொண்டே வந்தவர்கள். ஆகவேதான் காலம் பிந்தி புனைவெழுத்தில் நுழைந்தாலும், அந்த வரவு கனதியாகவும் ஆழமாகவும் இருந்தது. அதேவேளை தொடக்க காலத்தில் நல்ல படைப்புக்களை தந்த எழுத்தாளர்களில் பலர் பிற்காலத்தில் அதை தக்கவைக்க முடியாமைக்கானகாரணங்களில் முக்கியமானது அவர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டமையெனக் கண்டிருக்கின்றேன்.

 

மேலும் இன்றைக்கு நல்ல எழுத்துக்கள் என்று சொன்னவற்றை நாளை காலம் கருணையின்றி தள்ளிச் சென்றுவிடவும் கூடும். அப்படிப் பலரின் எழுத்துக்களுக்கு நம் கண்முன்னாலே நிகழ நாங்கள் சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுமிருக்கின்றோம். ஆகவேதான் எழுதுவதென்பது ஒருவகையில் நம்மோடு நிகழும் அந்தரங்கமான உரையாடல் என்கின்றேன். அதற்கப்பால் நிகழ்வதும், நமக்குக் கிடைப்பதும் மேலதிக வெகுமதிகள் என்பேன்.

 

எழுத்தை எந்தவகையிலும் உயர்வுநவிற்சியாக்காத ப்யூகோவ்ஸ்கி தன்னால் ஒருபோதும் எழுதாமல் இருக்கமுடிவதில்லை என்கின்றார். ஒருவாரம் தன்னால் எழுதமுடியவில்லையெனில் தனக்கு நித்திரை வராது, வாந்தி வந்து, அந்த நாட்களெல்லாம் சோர்வாக இருக்கின்றனஎன்று சொல்கின்றார். 'இது கூட ஒருவகையில் நோய்தான், ஆனால் மற்ற நோய்களைப் போல அல்லாது நல்லதொரு வியாதி' என்கின்றார் ப்யூகோவ்ஸ்கி.

 

எனக்குத் தெரிந்த அளவில் எல்லாச் சிறந்த எழுத்தாளர்களும் (ஜெயகாந்தன் போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும்) தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். ரொபர்தோ பொலானோ தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததால்தான் அவர் காலமாகின்ற காலத்தில் கவிதைகளை விட்டு புனைவுக்குள் பிரவேசித்தபோது, அது பெரும் பாய்ச்சலாக நிகழ்ந்திருக்கின்றது. ஹெமிங்வே போன்றவர்களின் ஆரம்பகால எழுத்துக்களை வாசித்தால் அவர்கள் புத்தகக் கடைகளையும், புத்தகங்களையும் தேடி எப்படியெல்லாம் அலைந்திருக்கின்றார்கள் என்று தெரியும். பொலானோ புத்தகங்களை களவெடுக்கும் ஒரு திருடராக நீண்டகாலம் இருந்திருக்கின்றார். அவ்வளவு ஒரு வெறி வாசிப்பதில் அவருக்கு இருந்திருக்கின்றது.

 

இவ்வாறு சிறுவயதிலிருந்தே வாசிப்பில் தோய்ந்து இன்னும் புத்தகங்களை வாங்கி வாசிப்பது அலுக்காத  என்னுடைய ஒரு தோழிக்கு புனைவுலகத்திற்கு வரக் கொஞ்சம் தயக்கமிருந்தது. அவரைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தினேன். அவரிடம் அவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றது. இப்போது கிட்டத்தட்ட auto fiction வகையில் எழுதியெழுதி அவ்வப்போது எனக்கு வாசிப்பதற்கு அனுப்பி வைப்பார். அந்த வகை எழுத்தை அவரால் மட்டுமே எழுதமுடியும் என்பது வாசிக்கும் எவராலும் எளிதாக உணரமுடியும். சில பகுதிகளை வாசிக்கும்போது மிகவும் அவதிப்பட்டேன். வாசிப்பவரைத் தொந்தரவுபடுத்தும் அத்தகைய அனுபவங்கள்.

 

ஒருவகையில் அவர் தொடர்ந்து இப்படி எவ்விதத் தயக்கமில்லாமமலே எழுதி முடித்து, நல்லதொரு எடிட்டிங்கும் செய்வார் என்றால், பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவள்' போலவோ, பா.கண்மணியின் 'இடபம்' போலவோ வரும் எல்லாச் சாத்தியங்களும் அவரின் எழுத்துக்கு இருக்கின்றது.

 

இப்போது இதையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால், இதுவும் நாளை ஏதேனும் நன்றாக நான் எழுதிவிடக் கூடும் என்பதற்கான -இன்னமும் கைவிட்டு விடாமல் இருக்கும்-  எழுத்துப் பயிற்சிக்குத்தான்.


*****************

நன்றி: 'அகநாழிகை' ‍- ஆடி, 2022


 


வாசித்து, அலைந்து, எழுதுபவனின் சில குறிப்புகள் - 01

Wednesday, August 10, 2022

 

1. பயணம்

 

ழை பெய்து மரங்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தகாலையின் அமைதியில் நடக்கையில் மனது குளிர்ந்துவிடுகின்றது. முதல்நாள் இரெயினுக்குள் இருந்து குபுகுபுவென இறங்கிய கூட்டம் அவனுக்கு அவ்வளவு அச்சத்தைத் கொடுத்திருந்தது. இப்படி நாளாந்தம் வேலைக்குப் போய்வரும் ஒருவனாக நாட்களைக் கழித்து, வாழ்வின் எல்லைக்குக்கோடும் வந்துவிடுமோ என்ற யோசனையில் நேற்றைய பொழுது வீணே கழிந்தது. தினசரிகளைப் போல இணையமும், எப்போது திறந்தாலும் மனதைச் சோர்வடைய வைக்கும் சம்பவங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.

எல்லாமே கடந்துபோகும் மேகங்கள்தானெனநேற்றைய சுவடை மறைத்து, இன்றைய காலை அவ்வளவு அழகாக புலர்ந்துகொண்டிருந்தது. குருவிகள் கரைந்தபடி இருக்க, சூரியன் இன்னமும் வெப்பமுறாக் கதிர்களை மிகுந்த தண்மையாக வீசிக்கொண்டிருந்தது. கோடைகாலத்து வர்ண ஆடைகளை அணிந்து, நேர்த்தியானதமது வளைவுகளுடன் பெண்கள் நடந்துபோகையில் வாழ்தல் அவ்வளவு சலிப்பானதல்ல என்பதும் புரிந்தது.

பயணங்களைச் செய்யவேண்டும் என்றும், கோடை வந்துசேர்ந்தபின் அதை முழுமையாக இரசிக்கவேண்டும் என்றும் எண்ணங்கள் பெருகி வழிந்தோட, அவற்றை அசட்டைசெய்து, அறையிற்குள் முடங்கியபடி சூரியன் மறைய, பறவைகளின் மாலைநேரத்து இசையைக் கேட்டபடி புத்தகங்களுக்குள் அமிழ்ந்துவிடுகின்ற பிறிதொரு மனதும் அவனுக்கு வாய்த்து விடுகிறது.

சிறிய படகில் உலகைச் சுற்றிவரப் புறப்பட்ட பெண்ணெழுதிய பயண நூலொன்றில், புதிதாக மனிதர்கள் வசிக்காத தீவொன்றில் போய் இறங்கும்போது, அவள் தான் விட்டுவந்த மனிதர்களையும், வாகனங்கள் நிரம்பிய தெருக்களையும், சாம்பல்நிற அலுவலக அடுக்குகளையும் நினைத்துக்கொள்வாள். எல்லாவற்றுக்கும் நிகராக எப்போதும் சமாந்திரமான உலகங்கள் சென்றுகொண்டிருக்கின்றன, நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்பது எங்களைப் பொறுத்தது என்பாள்.

 அதுபோலத்தான் இன்னொரு உலகம் வெளியில் விரிகையில் தனக்கான  தனி உலகில் இப்போது இருக்கின்றேன் என எண்ணிக்கொண்டான். கடந்த வருடம் இதே கோடையில் உலகின் இன்னொருபகுதியில், வேலை, இன்னபிற  பற்றிய பிரக்ஞையின்றி அலைந்துகொண்டிருந்தான் என்பதும் அவன் நினைவில் பிறகு  எழுந்துபோனது.

 பயணங்கள் என்பது பலருக்குப் பலவித அர்த்தங்களைக் கொடுக்கலாம். அவனுக்கு அது தெரிந்த வாழ்வு முறையிலிருந்து வெளியேறி இன்னொரு சமாந்தரமான உலகை வாழ்ந்து பார்ப்பதற்கான வழியென விளங்கிக்கொண்டான்.

 

ருநாள் நண்பருடன் இத்தாலியில் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது, தெருவில் விற்க வைத்திருந்த கிளிம்டின் 'முத்த' ஓவியமொன்றைப் பார்த்துவிட்டு அவள் அதை வாங்கி தனது வீட்டுச் சுவரில் அலங்கரிக்கஆசைப்பட்டாள்.  மியூசிதியத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது வாங்கலாமென்று நினைத்து அதேயிடத்துக்கு  மீண்டும் வந்தபோது அந்தத் 'தெருவோரக்கடையை' பொலிஸ் துரத்தி துடைத்துவிட்டிருந்ததில் ஏமாற்றமே அவளுக்கு மிஞ்சியது. "இதற்கெல்லாம் வருந்தாதே, என்னைப் போல ஒருநாள் கிளிம்டின் முத்தத்தை நேரே போய்ப் பார்ப்பாய்"என இவன் ஆறுதல்படுத்தினான். பின்னொருநாள் அவள் வியன்னாவிற்குப் போய் கிளிம்டின் அசலான இதே ஓவியத்தைப் பார்த்தபடி இவனுக்குத் தொலைபேசினாள். அவளுக்கான இன்னொரு உலகம் கிளிம்டிலிருந்து விரியத்தொடங்க, இப்போது ஆர்ஜென்ரீனாவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கின்றாள். அவ்வளவு தொலைவுக்கு ஏன் இப்போது அவசரமாகப் பறக்கிறாய் என்றால், டாங்கோ கற்க என்கின்றாள்.


இன்னொருத்தி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே தனியே போகப் பயப்பிடுகின்றவள். அப்பாவின் துணையின்றி அவளுக்கு ஒருபோதும் வெளியுலகம் விரிந்ததில்லை. அவன் தொடர்ந்து அவளோடு கேரளாவின் இயற்கையை வியந்து பேசியபடியே இருப்பான். ஒருநாள் நீங்கள் உங்கள் பயணங்களை விரும்பியபடி தொடங்குவீர்களென்று கூறி அவளுக்கு உற்சாகமூட்டியபடியே இருப்பான். குடும்பத்தில் ஒரு நெருங்கிய உறவின் இழப்பு அவளை எல்லாத் தடைகளையும் தாண்ட வைத்தது. ஒருநாள் கொச்சினில் நின்றபடி நீ அன்று கேட்கஅனுப்பிய 'அன்னையும் ரசூலின்' காயல்பட்டணத்து பாட்டை நிஜமாக்கிவிட்டேன் என மின்னஞ்சல் அனுப்பினாள். பிறகு எண்ணற்ற பயணங்களை ஆசியாவெங்கும் செய்யத் தொடங்கினாள்.

இப்படியாக வேறொருத்தி  சிலபுத்தகங்களை அறிமுகப்படுத்து என்றபடி வந்தபோது, அவன் காஃப்காவையும், குந்தேராவையும், ஹெஸேயையும் வாசிக்கப் பரிந்துரைத்தான். இவர்கள் இருவரையும் அவள் ஒருவகைப் பைத்தியக்காரத்தனத்துடன் வாசித்து முடித்தாள். அதுமட்டுமில்லாது அவன் அறிந்திராத காஃப்காவினதும், குந்தேராவினதும் எழுத்தின் நுட்பமான திசைகளையும் இவனுக்குத் துல்லியமாகக் காட்டினாள். ஒருநாள் அவளும் செக்கிற்குப் போய் காஃப்காவினது மியூசியத்தில் முன் சிரித்தபடி நின்ற புகைப்படங்களை அனுப்பிவைத்தபோது அந்த நாள் இய்ல்பாகவே வர்ணங்களைப் பூசிக்கொண்டது. 


யணங்கள் நாம் அறியாத இன்னொரு சமாந்திரமான உலகை மட்டுமில்லாது, பயணங்களைப் பற்றிப் பேசுவதாலும், எழுதுவதாலும் கூட பிறருக்கு வாழ்வதற்கான அர்த்தங்களையும் கொடுக்கலாமெனஅவன் உணர்ந்து கொண்டான்.

சற்சதுர அலுவலக கியூபிக்களில் சுருங்கிக்கொண்டாலும், வாழ்வின் தத்தளிப்புக்களில் சிக்கிக்கொண்டாலும் எதன் மீதோ நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பிறகு பழக்கமாயிற்று. மூன்று வருடங்களாக செலவுக்காகவும், சூழலியலுக்காகவும் சொந்தமாகக் காரை வைத்திருப்பதை விட்டொழித்தாலும், நேரந்தவறி அரைமணித்தியாலம் தாண்டி  வரும் பஸ்களுக்காய்க் காத்திருக்கும்போது ஏற்படும் சலிப்பை, பின்வளவில் காடென அடர்ந்திருக்கும் மரங்களின் சலசலப்பில் கரைக்க ஒரளவு கோடையில் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.

அவனுக்குப் பயணங்கள் மட்டுமில்லாது பயணங்கள் பற்றிய கனவுகளிலும் தொலைவது பிடித்தமாயிருந்தது. நேசத்தை அறிவதற்கு, நேசத்தைத் தொலைத்து அதன் வலியையும் பட்டுத் தெளியத்தான் வேண்டும். அதுபோலபயணங்களைச் செய்வதற்காக ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ‘செளகர்யமான’ வாழ்வையும் காணிக்கை செய்யத் தயாராக இருக்கத்தான் வேண்டும்.

இழந்து பெறுகின்றவைகளின் அருமை அளவிடமுடியாதவை. அவையே நினைவில் நிலைத்து நிற்கக்கூடியவையும் கூட.

*****************

நன்றி: 'அகநாழிகை' ‍- ஆடி, 2022