இப்போதைக்கு இந்த விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. இது தொடர்ந்துசென்று நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் மீதான கவனத்தைக் கலைத்துவிடுமென நினைக்கிறேன். விமர்சனங்களுடன்தான் நான் ஒவ்வொருவரையும் அணுகுகிறேன். இளங்கோ [டி செ தமிழன்] உட்பட இலங்கையில் எந்தப்படைப்பாளி முக்கியமான கதைகளை எழுதினாலும் உடனடியாக அடையாளப்படுத்துகிறேன். இன்றைய சூழலில் சயந்தன், அகிலன், அனோஜன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அளவுக்குத் தீவிரமாக தமிழகத்தில்இளையோர் எழுதவேண்டிய அவசியம் உள்ளது என சொல்லமுடியும்தான் . என்னைப்பொறுத்தவரை நான் சாத்தியக்கூறுகளையே சுட்டிக்காட்டுகிறேன்.என்னால் இப்போதைக்கு எதிர்பார்ப்புகளை மட்டுமே முன்வைக்க முடியும்.
விஷ்ணுபுரம் இலக்கிய்வட்டம் இலக்கியத்தை உருவாக்குவதற்கான அமைப்பு அல்ல. நாங்கள் நடத்துவது பயிலரங்கும் அல்ல. இது வாசகர்களின் கூட்டம் மட்டுமே. எழுதுபவர்களுக்கு வாசகர்களின் தரப்பிலிருந்து ஒரு கைகுலுக்கல். என் வாசகர்களை இலக்கியத்திற்கான பொதுவாசகர்களாக ஒருங்கிணைப்பதே என் நோக்கம். இலக்கியம் அனைத்து தரப்பிலிருந்தும் கைவிடப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் இத்தகைய ஒரு வாசகர்விழா நம் ஊக்கத்தைத் திரட்டிக்கொள்ள தேவையானதாக உள்ளது.
மற்றபடி, அவருடைய வரிகளில் உள்ள கேள்வி ஒரு கறாரான விமர்சனம் , ஒர் அறைகூவலும்கூட. அதை நான் வரவேற்கிறேன். அதற்கு எதிர்வினையாற்றவேண்டியவர்கள் இங்கே அடுத்த தலைமுறையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே. அவர்கள் விமர்சனங்களற்ற சூழலில், சிறிய விமர்சனங்களைக்கூட நக்கலும் வசையுமாக எதிர்கொள்ளும் ஃபேஸ்புக் மனநிலையில், வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த குரல் கேட்கவேண்டும். .இந்த அறைகூவலை அவர்கள் சாதனை மூலம் எதிர்கொள்ளவேண்டும் என விழைவதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
Box கதைப்புத்தகம் ஷோபா சக்தியின் வீழ்ச்சியைச் சொல்லும் நாவல். அவர் இன்று மாட்டியிருக்கும் அனைத்து தேய்வழக்குகளும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன – ஈழம் கண்ட இரு மாபெரும் கலைஞர்கள் அ.முத்துலிங்கமும் ஷோபா சக்தியும்தான் என்பதை சொல்லியபடியே இதையும் கூறுகிறேன். டி.செ.தமிழன் இதை நல்ல நாவல் என்பதனால் தமிழிலக்கியச் சாதனைகளின் ஒன்றான கொரில்லாவை நன்றாக இல்லை என்று சொல்லியிருப்பார் என ஊகிக்கிறேன். வேறுநாவல் கோரும் டி செ தமிழன் ஒரு மாறுதலுக்காக தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை வாசித்துப்பார்க்கலாம்.மிகை மூலம் உலுக்காமல் எப்படி இலக்கியம் உள்ளத்தின் மொழிவடிவமாகச் செயல்படும் என்பதை காட்டும் படைப்பு அது. அவருக்கு ஒருவேளை கலை என்றால் என்ன என்று புரியவைக்கும்.
டி.செ.தமிழனிடம் நான் எப்போதுமே சொல்லிவரும் ஒன்றுண்டு. அவர் அடிப்படையில் புனைகதையாளர். ஈழ அரசியலின் ஒற்றைப்படையான மூர்க்கமும் கசப்புகளும் அவரை அலைகழியச்செய்கின்றன. எழுத்தாளனிடம் அரசியல்காழ்ப்புகளை மட்டுமே எதிர்பார்க்கும் கூட்டம் அங்கே அதிகம். அதற்கு ‘சப்ளை’ செய்ய ஆரம்பித்தால் அதுவாகவே முடியவேண்டியிருக்கும். கூடவே மொழிவழி அறிதலைவிட காட்சியூடகத்திற்கு அவர் அளிக்கும் மிகையான இடம் அவருடைய சிக்கல். காட்சியூடகம் இலக்கியவாதிக்கு பெரிதாக எதையும் அளிக்காதென்பது என் எண்ணம் – சம்பிரதாயமான கருத்தாகவும் இருக்கலாம். இலக்கியத்தை தீவிரமாக அணுகினால் அவரும் சயந்தனைப்போல முக்கியமான புனைவுகளை உருவாக்கமுடியும். வருக.
-மதிப்பீடுகளின் வீழ்ச்சி: http://djthamilan.blogspot.ca/2018/01/blog-post.html
-ஜெயமோகனின் எதிர்வினை: http://www.jeyamohan.in/105022#.WmjPl66nHIV
0 comments:
Post a Comment