நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

மஹாகவியின் 'பொருள் நூறு'

Saturday, January 27, 2018

ஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் மிகவும் கவனத்தைப் பெற்றவை. அன்றைய காலத்தில் குறும்பாக்கள் நிறைய எழுதி பிரசுரமாவதற்குத் தயாராக இருந்த நிலையில், இன்னொரு வகைமையான 'பொருள் நூறு' என்ற பெயரிலும் மஹாகவி எழுதி வைத்திருந்ததாக எஸ்.பொ இந்நூலின் முன்னீட்டில் கூறுகின்றார். 'குறும்பா' அன்றைய காலத்தில் பிரசுரமானபோதும், ஏதோ ஒருவகையில் 'பொருள் நூறின்' கையெழுத்துப் பிரதி தவறவிடப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப்பிறகு சிற்பியின் சேகரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.பொவினால் 'மித்ர' ஊடாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. சிற்பி தன்னிடமிருந்து கையெழுத்துப் பிரதி 'வானம்பாடி'களை தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் பத்மநாப ஐயரினால் தரப்பட்டதாக இந்நூலின் தொடக்கத்தில் நினைவுகூறுகிறார்.
மஹாகவியின் குறும்பாவிற்குள் ஊடாடும் எள்ளலே இதிலும் கரை புரண்டோடுகிறது. நமக்குப் பழக்கமான/நம்மிடையே இருந்து மறைந்து போன பல்வேறு பொருட்களின் தலைப்புக்களில் நூறு பாடல்கள் இந்நூலில் இருக்கின்றன. நூல் வித்தியாசமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. கவிதைகளோடு வந்திருக்கும் படங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வழமையாக எஸ்.பொ 'பரணி' பாடும் கைலாசபதி, சிவத்தம்பி பற்றி இதில் இருந்தாலும், எஸ்.பொவின் முன்னீடு சுவாரசியமாக வாசிப்பதற்கான விடயங்களைக் கொண்டிருக்கிறது. அண்மையில் எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தபோதும் அதிலும் எஸ்.பொவின் முன்னீடு ஈர்த்திருந்தது. முன்னீட்டை எப்படிச் சுவாரசியமாகவும் சர்ச்சையாகவும் எழுதுவதுமென ஆசானிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்,
வடை
--------
படைப்புப் பல படைத்துப் பலருக் கூட்டும்
கடைப் பொது இடத்திலும் கடித்துச் சுவைக்கக்
கிடைப்பன வடைகள் ஆயினும், உள் வீட்டு
அடுப்படி
நெருப்பின் எதிர் நின்று தன் இடுப்பை
ஒடித்தவள் ஒருவனுக் காகச்
சுடச் சுடக் கிடைப்பதன் சுவையே தனித்ததே.
கமரா
--------
கமரா ஒன்றவன் கையில் இருந்ததால்
அமரா வதியைப் படமெடுத் திட்டான்
அவளின்
சிரிப்பினைத் தன் சிறை செய்தே, விருப்பொடு
தலையணை யடியில் வைத்துப் பலபல
கனவுகள் கண்டு களித்தான்.
'இன்பம் எங்கே உளது?' என்றால்
'என் பழந்தலையணைக் கீழ்'! என்றானே.
கோப்பி
--------
மண்ணில் ஏன் பிறக்கிறோம் மறுபடி மறுபடி?
இன்னும் ஏன் இறவாதிருந்தோம்? பண்ணிய
புண்ணியத்திலே போதாக் குறையோ?
-எண்ணி ஏங்கிக் கண்ணீர் உகுத்தே
இப்படிப்
பேசுவோர் எல்லாம் பெரியோர் ஆவர்!
ஆசைகள் கடந்த அந்நியர்! அவர்க்குக்
கோப்பியைப் பாலொடு கலந்து
சாப்பிடக் கொடுத்திடிற் சஞ்சலம் தீருமே!
துப்பாக்கி
--------
'திடும் திடும்'! என்று சுடும் சுடும் என்பார்.
விடும் விடும், இந்த வீண் கதை விளம்பல்,
வேண்டாம்.
அடுப்படி இடத்திலே ஆரணங்குகள்
அப்பளம் சுடுவதற் குதவத்
துப்பும் உளது கொல் துப்பாக்கிக்கே?
பிளா
-------
பிளாவினைப் பிடித்தேன். பெருங்கள் வார்த்தான்.
கள்ளில் அக் காரிகை கதிர் முகம் தெரிந்தது -
கண்டேன்.
பிளாவினை முடித்தேன். பெருங்கள் வார்த்தான்
கதிர் முகம் காசினி முழுதும்
எதிரிலே தெரிய என் ஏற்றம் விழுந்ததே.
பூசுமா
--------
வாஞ்சை யோடெதிரில் வந்தமர்ந்துள்ளாய்.
மூஞ்சியைப் பூசுமா முழுதும் மறைத்தது.
வாயினைப் பூசிய வண்ணம் மறைத்தது.
கண்ணை மை மறைத்ததென் காதலி! இவற்றைக்
கழுவுக!
முகத்திலே ஓவியம் தீட்டும் இம்முயற்சிகள்
சுகப்படா, சுய உருக் காட்டி,
அகப்படு கைக்குள், என் அன்பைப் பெறுகவே.

0 comments: