அன்பின் இளங்கோ,
தங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்கினேன். சென்ற ஞாயிறு அந்த சிற்றிதழ் கிடைக்கப்பெற்றேன். வடிவம் புதுமாதிரியாக கொஞ்சம் அகலம் அதிகமாக பாடபுத்தகம் போலிருந்தது வசீகரித்தது, உள்ளடக்கங்கள் எல்லாமே அருமை எனினும் தங்களின் துவக்க கட்டுரை ஒரு பிரியமான கவிதையை வாசிக்கும் உணர்வையும், தொட்டிச்செடியின் முதல் மலரொன்று அளிக்கும் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்தது, எனவே உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நிச்சயம் என்னை விட இளையவராக இருப்பீர்கள் என்றெண்ணுகிறேன் எனவே வாழ்த்துகிறேன்.
மொழிநடை அழகு நெடுங்கவிதையொன்றினை வாசிக்கும் உணர்விலேயே இறுதிவரைக்கும் இருந்தேன்.
எளிய வாசகரகளின் பாராட்டுக்களையெல்லாம் கடந்துவந்திருப்பீர்கள் என்றெண்னுகிறேன். இருப்பினும் எனக்கு மனமார பாராட்ட வேண்டும் என தோன்றுவதால் சொல்லிக்கொள்கிறேன்.
என் முகனூல் பக்கத்தில் அகநாழிகை குறித்து பதிவிட்டதில் உங்களின் கட்டுரையினைக்குறித்த பகுதிகளை உங்களுக்கு திரும்பவும் எழுதுகிறேன்..
’’விரியும் மலரைப்போல ஒரு பொழுதைப்பழக்குதல் ’’ இதழின் தொடக்க கட்டுரைக்கான சகல அந்தஸ்துடன் இருந்ததென்றே சொல்லலாம்,
அந்த நாள் அந்தப் பொழுது நம் கண் முன்னே மிக மிக அழகாய் மலர்ந்துவருவதை உணர்ந்தபடியே வாசிக்க முடிந்தது. உண்மையில் அது ஒரு நெடுங்கவிதை வாசிப்பனுபவம்.
தினப்படி வாழ்வின் சாதாரண நிகழ்வுகளை அசாதாரண அழகுடன் அருமையான் மொழிநடையுடன் லாவகமாக சொல்லிச் செல்கிறார், வாகன நெரிசலை மறக்கசெய்யும் பரிச்சயமான பெண்கள், ,இருக்கையை விட்டுத்தருவதின் குழப்பங்கள், உளப்போராட்டங்கள், கர்ப்பிணிப்பெண்ணின் நன்றி உண்டாக்கிய மகிழ்வில் சக பணியாளருக்கான பாராட்டொன்றை தயங்கியபடியென்றாலும் சொல்லிவிடுவது, இப்படி சாமான்யனின் ஒரு நாளை சொல்லிக்கொண்டு போகிறது கட்டுரை ஒரு கதையைபோலவே.
ஒரு நாள் என்பது எதிர்பாரா எதனையுமே தன்னகத்தே வைத்திருக்கலாம் என்பதையும் தோழியுடன் காலைஉணவிற்கு செல்கையிலும் அவளை சந்திக்கும் விழிகளை அவசரமாய் இடைமறித்து அந்த நாளை ஆசிர்வதிக்கப்பட்டநாளாக மாற்றிவிடும் சாமார்த்தியமும், பின்னர் அது அவனின் சாமர்த்தியத்தினால் அந்த அருளப்பட்ட நாள் நிகழவில்லை என்றும் தன்னியல்பிலேயே விரியும் மலரைப்போல அது இயல்பானதென்றும் சொல்வதும் பிரியமான கவிதையொன்றினை வாசிக்கும் உணர்வில் புன்னகைக்க செய்கின்றது.
அந்த அழகிய உணர்விற்கு முரணாக திடீரென் வரும் மாறுபட்ட தொலைபேசி அழைப்பொன்று விரும்பத்தகாத செடியொன்றினை போல வாசிக்கும் நம் மனதிலும் பரவி சட சடவென வளருகிறது.
காரணமின்றி தண்டித்தும், பின்னர் தோள் கோர்த்து இன்பங்களை அறிவித்தும், ரணப்படுத்தியும்,இதயத்தை நசுக்கி கூன் விழச்செய்தும்,வாழ்வு நம்முடன் குரூரமாய் எந்த முடிவிற்கும் நாம் வந்துவிட முடியாதபடிக்கு விளையாடிக்கொண்டிருப்பினும், நேசித்தல் எனும் அற்புதம் அவை எல்லாவற்றிலிருந்தும் நம்மை எழவைத்து விடுகின்றதென்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
நமக்கான ஒருவர் எங்கேனும் இருக்கிறார் என்னும் நம்பிக்கை, சில வார்த்தைகள், ஏன் நமக்காக தயாரிக்கப்பட்டு காத்திருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதுமல்லவா மூழ்கிக்கொண்டிருக்கும் நம்மை முடிசுழற்றி மீண்டும் கரையில் இழுத்துப்போட?
துவக்க கட்டுரை மூலம் இவ்விதழை மிக அழகானதொன்றாக்கிய இளங்கோவிற்கும் சேர்த்து இதோ துவங்கி விட்டிருக்கிறேன் உண்மையிலேயே என் வீட்டுத்தோட்டத்தின் மலர்களுடனும் முன் காலையின் வெம்மையுடனும் கொல்லும் வார்த்தைகளுக்கும் ஆரத்தழுவிக்கொள்ளும் கணங்களுக்கும் இடையே எதிர்ப்பும் கலப்பும் இன்றி இயல்பாய் எனக்கு கையளிக்கப்பட்ட ஒரு அழகிய விடியலோடான நாளொன்றினை இயல்பாக எதிர்கொள்ளவும் என் அன்பினை எனக்கானவர்களென்று நான் நினைக்கும் எல்லாருக்குமாய் அனுப்பி வைக்கவும்.
மிக்க அன்புடனும் வாழ்த்துக்களுடனும்
லோகமாதேவி
|
ஒரு வாசகர் கடிதம்
In அனுபவப்புனைவுSunday, January 28, 2018
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment