ஹருகி முரகாமியின் 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' நாவலில் பதின்மங்களில் ஐந்து நண்பர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். ஒவ்வொருவரின் பெயர்களும் நீலம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை என தொடர்புடையதாக இருக்கும். முக்கியபாத்திரமான Tsukuru மட்டும் எவ்வித நிறத்தோடும் தொடர்பில்லாத பெயரோடு இருப்பார். எனவே பிற நண்பர்கள் Tsukuruஐ, நீ நிறமற்றவன் எனக் கேலி செய்தபடியிருப்பார்கள்.
இப்படி நெருக்கமாய் இருக்கும் ஐந்து நண்பர்களும், அவர்களின் 20வது வயதில், சட்டென்று எந்தக் காரணமும் சொல்லாது Tsukuruஐ விலத்தி விடுகின்றார்கள். கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர் ஏன் அப்படி நண்பர்கள் திடீரென விலகினார்களெனக் காரணங்களைத் தேடி ஜப்பானிலிருந்து பின்லாந்துவரை போவதே கதையின் முக்கிய பகுதி.
அப்போது பழைய நண்பர்கள், நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கும்போது, அவர்களின் ஞாபகங்களை அலசுகின்றனர். ஒவ்வொருவரும் முன்பு எப்படியிருந்தனர், அவர்களை மற்ற நண்பர்கள் எப்படிப் பார்த்தனர் என்பது குறித்து விரிவாகக் கதைப்பார்கள்.
சோர்வான முகத்தையுடைய (boring face) , தன்னை யாருமே காதலிக்கமாட்டார்கள் எனத் தன்னைப்பற்றி நினைத்து வைத்திருக்கின்ற Tsukuru ஐ, கனிவான, பிறர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கின்ற நல்ல நண்பனாகவும், அவரை அந்தக் காலத்தில் நேசிக்க விரும்பியதாகக் கூட ஒரு தோழி கூறுவார்.
ஒருவர் தன்னைப் பற்றி நினைத்து வைத்திருப்பதற்கும், பிறர் அவரைப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என நினைத்துக்கொண்டு என் பதின்மங்களில் எப்படி நான் இருந்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். நம்மை அன்றைய காலங்களில் அறிந்திருக்கின்ற நண்பர்கள் மூலமாக விரிகின்ற நம்மைப் பற்றிய சித்திரம், சிலவேளைகளில் இன்னுஞ் சுவாரசியமாகக் கூட இருக்கும்.
என் பதின்ம காலத்து நண்பரொருவன் பதிவொன்றை இப்போது எழுதியிருக்கின்றான்.
Tsukuru போல... ஒரு நான்.
புனைவுக்கும் வாழ்க்கையிற்கும் அவ்வளவு தொலைவில்லைப் போலும்.
(Oct, 2014)
0 comments:
Post a Comment