ஸிஸான் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தபோதும், அவரது காலத்தில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு ஓவியராகவே இருந்திருக்கின்றார். பாரிஸின் மதிப்பு வாய்ந்த ஓவியக்கண்காட்சிக் கூடத்தில் அவரது ஓவியங்கள் ஒவ்வொருமுறையும் தகுதி வாய்ந்தவில்லையென நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்று அவர் பிரான்ஸின் ஓவியக்கலையின் முன்னோடிகளில் ஒருவராக மாறி, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
'Cézanne and I' என்கின்ற திரைப்படமானது ஓவியரான ஸிஸானுக்கும், எழுத்தாளரான எமிலி ஸோலாவிற்கும் இடையிலான நட்பைப் பற்றிப் பேசுகின்றது. இவர்கள் இருவரும் பாடசாலை நண்பர்கள். எமிலி மிக வறுமையான குடும்பத்திலும், ஸிஸான் செழிப்பான குடும்பத்திலும் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் ஓவியம்/எழுத்து மீதிருந்த பித்தின் காரணமாக, பின்னர் பாரிஸிற்கு குடிபெயர்ந்து செல்கின்றார்கள். காலம் ஸிஸாணை ஒரு தோற்ற ஓவியனாகவும்,ஸோலாவை பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளனாகவும் மாற்றிவிடுகின்றது. இப்போது வறுமையும் செழிப்பும் மாறி இருவருக்கிடையில் நுழைந்துவிடுகின்றது.
ஸோலாவின் ஆடம்பர வீட்டில் நிகழும் இரவு விருந்துகளில், அன்றைய கால பிரபல ஓவியர்கள் கலந்துகொள்கின்றார்கள். ஸிஸான் மட்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியவராக, பிறரோடு எப்போதும் சச்சரவுகளில் ஈடுபடுகின்றவராக, எவராலும் நேசிக்க முடியாத ஒருவராக மாறிவிடுகின்றார். ஆனால் எமிலி மட்டும் அவரை அரவணைத்துக்கொள்கின்றார். ஸிஸான் ஒரு சிறந்த ஓவியன், அதியற்புத ஓவியங்களை ஒருநாள் வரைவான் என அவர் நம்புகின்றார்.
Emile Zola and Paul Cezanne |
இறுதிக்காலங்களில், ஒருவர் மற்றவரைச் சந்திக்க விரும்பாத, ஒரு பெரும் இடைவெளியுள்ள உறவாக அது மாறிவிடுகின்றது. பழைய காலங்களுக்கு இருவரும் போக விரும்பினாலும் அவர்கள் அதற்குள் நுழைய முடியாத் துயரத்தோடு அவர்களுக்கான காலம் முடிந்துவிடுகின்றது. ஸோலா ஒரு நாள் நித்திரையின்போது காபன்மொனொக்சைட் வாயுவின் காரணமாக இறந்துபோகின்றார். அது இயல்பாய் நடந்ததா அல்லது திட்டமிட்ட ஒரு கொலையா என்ற சந்தேகம் இன்றுவரை எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
யதார்த்தவாதக் கதைகளை ஸோலா எழுதியபோதும் அதிகமான பொழுதுகளில் அதிகாரத்திற்கு எதிராகக் குரலை எழுப்பியபடி இருந்தபடியால் அவருக்கு நிறைய எதிரிகளும் அன்றைய காலத்தில் இருந்திருக்கின்றனர். குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தீவொன்று அனுப்பப்பட்ட ஒருவருக்காய், அது தவறென்று ஒரு பத்திரிகையில் குரல் கொடுத்த காரணத்தால், ஸோலாவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் விருதை அன்றையகால பிரான்சு அரசு திருப்பி வாங்கியுமிருக்கின்றது. ஏழ்மையிலிருந்து வந்த ஸோலா பின்னர் வசதியான வாழ்வு வாழ்ந்தபோதும் அவர் விளிம்புநிலையில் இருந்த மனிதர்களின் பக்கமே நிற்க விரும்பியிருக்கின்றார் என்பது இந்நிகழ்வின் மூலம் நமக்குப் புலப்படுகின்றது.
Musée d'Orsay, Paris |
இப்படி 'Cézanne and I' திரைப்படத்தைப் போல அதே காலகட்டத்துப் பிற படைப்பாளிகள் பற்றி வந்த நூல்களையோ அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது கூட வித்தியாசமான இருக்குமென நினைத்துக்கொண்டேன்.
எல்லாப் படைப்பாளிகளும் தமது சமகாலக் கலைஞர்களோடு நட்புப் பேணவும், தமக்கிடையில் விவாதிக்கவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளவுமே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் காலமும் சூழலும் அவர்களுக்கிடையில் விரிசலை ஏதோ ஒருவகையில் கொண்டுவருகின்றது. பின்னர் அவர்கள் அந்த இனிமையான காலங்களை தமக்கான தனிமையில் இருந்து ஸோலாவும், ஸிஸானும் போல நனவிடைதோய்ந்தபடி பெரும்பாலும் வாழ்ந்தும் முடித்துவிடுகின்றனர் என்பதுதான் சோகமானது.
(நன்றி: 'அம்ருதா' - தை, 2018)
0 comments:
Post a Comment