நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஜெயமோகனிற்கான ஓர் எதிர்வினை

Friday, January 26, 2018


இதற்கு முன்பான பதிவுகள் 

(1) மதிப்பீடுகளின் வீழ்ச்சி

(2) மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினைஜெயமோகன் எனக்கெனக் கூறும் சில விடயங்கள் முக்கியமானவை. அதுவும் ஒரு படைப்பாளியாக இருந்து கொண்டு அவர் வைக்கும் விமர்சனம் எனக்கும் உவப்பானவை. அந்தவகையில்தான் எனக்கு எஸ்.பொவும், மு.தளையசிங்கமும் முக்கியமானவர்கள். படைப்பாளிகளாய் இருந்துகொண்டு அந்த மனோநிலை ஊடறுத்துச் செல்லும் விமர்சனத்தையே நானும் அதிகம் கவனத்தில் கொள்கின்றவன்.

நிற்க.
ஜெயமோகன் உரையை வைத்து, நானெழுதிய பதிவு 'ஒரு அறைகூவல்' என ஜெமோ சொன்னாலும், அதன் முக்கிய பகுதியிற்கு அவர் இன்னும் வரவில்லை. வேறொரு திசையில் உரையாடலை நகர்த்துகின்றார். என்னுடைய முக்கியமான கேள்வியே தமிழகத்தில் இருந்து அண்மையில் வந்த முக்கிய நாவலை முன்வையுங்கள். உரையாடுவோம் என்கின்றேன்.

அவர் ஷோபாவின் 'பொக்ஸ் கதைப் புத்தகத்தை'ப் பற்றி ஓரிரு வார்த்தைளில் நிராகரிப்பதோடு முடிக்கின்றார். சயந்தனின் 'ஆதிரை'யை முக்கியமான நாவலென அவர் சொன்னபோதும், அன்றே கேட்டிருக்கின்றேன். எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுதும் ஜெமோ ஏன் அது குறித்து, எதனால் அது முக்கியமாகின்றதென விரிவாக எழுதவில்லை என்பது குறித்து. இன்றும் 'ஆதிரை' பற்றி உருப்படியாக அவர் எதையும் விரிவாக எழுதவில்லை.

அதேபோல் அவரது வாசிப்பு ஈழம்/புலம்பெயர்வு சார்ந்து எங்கே இருக்கின்றது என்பது குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. த.அகிலன் இப்போது புனைவு சார்ந்து எழுதுவதையே குறைத்துவிட்டார் (முற்றாகவே எனச் சொல்லலாம்). அவரது 'மரணத்தின் வாசனை' (2009) வந்தே ஏறத்தாழ 10 வருடங்கள் ஆகப்போகின்றன. ஆனால் ஜெமோ சயந்தன், அனோஜன் போல தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரில் அவரும் ஒருவர் என்கின்றார். இது பெரிய முரண் அல்லவா? மேலும் புதியவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கதைகளை அனுப்பச் சொல்லியபோது ஜெமோவின் தீவிர வாசகரான அனோஜன் தன் ‘அசங்க’ கதையை அனுப்பியபோது மட்டுமே அது பற்றிக் கருத்துக் கூறினாரே தவிர, இன்றுவரை அனோஜனின் ‘சதைகள்’ தொகுப்புக் குறித்தோ அவரது பிற கதைகள் பற்றியோ எதையும் பொதுவெளியில் கூறியதை நானறியேன்.

ஆகவேதான் நான் கேள்வி எழுப்புகின்றேன். குணா கவியழகன் பற்றிய ஜெமோவின் பார்வை என்ன? என்னை அவ்வளவு கவராதபோதும், தமிழ்ச்சூழலில் ஒருபகுதியினரால் பெரிதும் பேசப்பட்ட தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' குறித்த அவரது கருத்தென்ன? நம் சூழலில் அதிகம் கவனிக்காது, போரை முன்வைத்து பொதுமக்கள் சார்பில் பேசிய தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' வாசித்தாரா (கவனிக்க ஊழிக்காலத்தையும் அவரது நண்பரின் தமிழினி பதிப்பகம் தான் வெளியிட்டது)?  அதைவிட ஜெயமோகனைப் போல தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் தேவகாந்தனின் நாவல்கள் பற்றி என்னவிதமான அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றார்? இலக்கியம் என்பது உவத்தல் காய்த்தல் இன்றி பேசுவதாயின் ஜெமோ இவையெல்லாம் குறித்து விரிவாகப் பேசவேண்டும் அல்லவா? ஆகக்குறைந்தது இவற்றை நிராகரிப்பதாக இருந்தால்கூட, ஏன் அவற்றை நிராகரிக்கின்றேன் என்பது குறித்தாவது அவர் பேசியிருக்கவேண்டும்.

ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவல் என் வாசிப்பில் இப்போது பின் தங்கிவிட்டதா இல்லையா என்று ஜெமோ யோசிப்பதைவிட, ஏன் அவரால் நான் முக்கியமாய் முன்வைக்கும் ஷோபாவினது 'பொக்ஸ் கதைப்புத்தகத்திற்கு' நிகராய் தமிழகச் சூழலில் வேறு நாவல்/களை முன்வைக்க முடியாதிருக்கின்றது என்பதே என்னுடைய கேள்வி.

தேவிபாரதியின் 'நிழலின் தனிமை' எப்போது வெளிவந்தது? அதற்குப் பிறகு அவரின் 'நட்ராஜ் மகராஜ்' வந்து தமிழ்ச்சூழலில் உரையாடல் நிகழ்ந்தும் முடிந்துவிட்டது. இப்போது விஷ்ணுபுரம் வட்டம் தேவிபாரதியிற்கு பொன்னாடை போர்த்தியவுடன் அவருக்குத் தேவிபாரதி நினைவுக்கு வருகின்றார். அதுசரி ஜெமோ இதுவரை எங்கே ''நிழலின் தனிமை' குறித்து விரிவாக எழுதியிருக்கின்றார்? எனக்கு 'நிழலின் தனிமை'யை, அது வந்த காலத்திலேயே நல்லா நாவலடா, வாசித்துப் பாரென்று எப்போதோ செல்வம் அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஜெயமோகன் எப்போதும் நான் இவ்வாறான உரையாடலைத் தொடங்கும்போது, வேறு திசையில் கொண்டு போகின்றார். கடந்துமுறை அவரின் அறம் கதைகள் பற்றிய என் பார்வையை வைத்தபோது, நீயொரு காழ்ப்புணர்வு உள்ள, சிங்களவர்களையே விளங்கிக்கொள்ளமுடியாத ஒருவன் என 'ஈழ எழுத்தாளனுக்கு...' என எழுதினார்

நாஞ்சில்நாடன் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவராக என் பெயரை விகடனில் குறிப்பிட்டது,  என் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ தொகுப்பை வாசித்தபின்தான். ஜெமோ என் தொகுப்பை நிராகரிக்கின்றார் என்றால் கூட அது குறித்து எதுவும் எழுதியதாய்க் கூடத் துலங்கல் இல்லை. அதுவல்ல இப்போது இங்கே பிரச்சினை.

இன்றும் அவர் நான் புனைவில் மற்றதைவிட அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறுவதையும், நாவலோடு வாவென்று அழைப்பதையும் நிதானமாய்க் கேட்டுக்கொள்கின்றேன். ஆனால், இந்தப் பதிவில் நான் என் எழுத்தை முன்வைத்து எழுதியதல்ல. தமிழ் நாவல்களைப் பற்றியல்லவா சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஓர் எதிர்வினை புரிவதுதானே நியாயம். அதைத்தாண்டி ஏதேதோ எழுதுவது உருப்படியான ஓர் உரையாடலை ஒருபோதும் வளர்க்கப் போவதில்லை.

(Jan 02, 2018)

0 comments: