கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'நீர்வழிப் படூஉம்'மும், இன்ன பிறவும்..

Saturday, March 16, 2024

 

காலங்காலமாக மனிதர்கள் வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு, ஓடிப் போகின்றவர்களாக‌ இருந்திருக்கின்றார்கள். ஆதியிலே புத்தரும் இப்படி தன் மாளிகையை விட்டு எவருக்குந் தெரியாமல் சென்றிருக்கின்றார். வீட்டை விட்டு என்றென்றைக்குமாக நீங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் பல்வேறு அக/புறக் காரணங்கள் இருந்திருக்கின்றன. நமது ஈழப்போராடத்தில் இப்படி பலர் போராட்ட இயக்கங்களில் இணைவதற்காய், குடும்பத்திடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போயிருக்கின்றனர்.  அவ்வாறானவர்களில் பலர் மீண்டும் வீடடையாமல் இடைநடுவில் அகால மரணமும் அடைந்திருக்கின்றனர்.

 

அதுபோலவே தம் மன விடுதலைக்கென, தமக்குப் பிடிக்காத குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லவென‌ பலர் வீட்டை விட்டு நீங்கியிருக்கின்றார்கள். சமகாலத்தில் இப்படி வீட்டை விட்டு ஓடிப்போகின்றவர்களைப் பற்றி நிறையப் புனைவுகளை எழுதிய ஒருவராக இமையத்தைச் சொல்லலாம். எம். கோபாலகிருஷ்ணனின் 'தீர்த்த யாத்திரை',  ஒருவன் தன் தேடலுக்காய் வீட்டை விட்டு விலகிச் செல்கின்றவனாக இருந்தபோதும், கோபாலகிருஷ்ணனின் முதன்மையான படைப்புக்களில் ஒன்றாக அதை வைக்கமுடியாது. அதேவேளை பல வருடங்களுக்கு முன் காசிக்கு ஓடிப்போன ஒரு பெண்ணைத் தேடி, அவள் இறந்துபோனபின் பின்னோக்கிப் பார்க்கின்ற‌ பா.வெங்கடேசனின் 'வாராணசி'யில் இந்த ஓடிப்போதல் கச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கின்றது.

 

இவ்வாறான 'ஓடிப்போதல்' தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவலிலும் நிகழ்கின்றது. ஆனால் அது முக்கிய பேசுபொருளாக இல்லை. அதேவேளை அந்த ஓடிப்போதல் நிகழும்போது, ஓடிப்போனவரைப் பின் தொடராது, அவ்வாறு ஓடிப்போனவரால் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு என்ன நிகழ்கின்றது என்பதை நுட்பமாக அலசுகின்றது. நாவிதத் தொழில் செய்யும் காருமாமாதான் இங்கே முதன்மைப் பாத்திரம். காருமாமாவின் மரணத்தோடு தொடங்கும் நாவல் அவரின் மரணம் முடிந்து எட்டாம் நாள் 'தாலியறுப்புச் சடங்கோடு முடிவடைந்து விடுகின்றது. அந்த எட்டோ/பத்து நாட்களில் காருமாமாவின் வாழ்க்கை பற்றி மட்டுமில்லை, அவரோடு சம்பந்தப்பட்ட பலரது கதைககளும் இப்புதினத்தில் சொல்லப்படுகின்றன.

 

மனிதர்களுக்கு கலை இலக்கியம் எதற்கு அவசியமென‌  யோசிக்கும்போது, முதன்மையாக அது ஒருவர் வாழவோ கற்பனை செய்யவோ முடியாத‌ பிறிதான வாழ்க்கை முறைகளை அறிமுகப்படுத்துவ‌தென்று  நான் எண்ணிக் கொள்வதுண்டு. மேலும் அதிகாரப் பெரும்பரப்பில்  விலத்தப்பட்ட உதிரிகளாக/ கவனிக்கப்படாத உயிரிகளான மனிதர்களை, அவர்களுக்கும் வாழ்விருக்கின்றது, அவர்களுக்கென்று கொண்டாட்டங்களும்‍ சரிவுகளும் இருக்கின்றதென்று நம் முன்னே கலை நிகழ்த்திக் காட்டுக்கின்றது. அண்மையில் அலிஸ் வாக்கரின் Colour Purpleஐ தியேட்டரில் பார்த்தபோது, அலிஸ் அன்று அதை எழுதிப் பதிவாக்காவிட்டால் பல்வேறுவகையில் ஒடுக்கப்பட்ட மனிதர்களாயிருந்த‌ கறுப்பினத்தவர்களின் திமிர்தெழுதல்களும், கொண்டாட்டங்களும் நமக்கு ஒருபோதும் தெரிந்திராதென்றே ஒவ்வொரு காட்சிகளிலும் எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வாறே தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்'மில் விளிம்புநிலையாக்கப்பட்ட நாவிதக் குடும்பங்களில் ஊடாடிக்கொண்டிருந்த அற்புதமான வாழ்வு விரித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

 

 

நான் வாசிக்க வந்த 2000களின் தொடக்கத்தில், அப்போது வாசிக்க முடிந்த பெருமாள் முருகனின் 'கூளமாதாரி'யும், சோ.தர்மனின் 'கூகை'யும், கண்மணி குணசேகரனின் 'கோரை'யும் ஏன் இன்னும் மறக்க முடியாத நாவல்களாய் எனக்குள் தங்கியிருக்கின்றதென யோசிக்கும்போது, அவை எனக்கு அறிமுகமற்ற கதைப்பரப்புக்களை மட்டுமில்லை, அந்த கதையில் உலாவும் மனிதர்களை அவ்வளவு பரந்த தளத்தில் மனதில் தங்கும்படியாக விபரிக்கச் செய்ததும் முக்கிய காரணமென நினைக்கின்றேன். இன்றைக்கு எழுதப்படும் பெரும்பாலான‌ நாவல்களில் இந்தப் புள்ளிகள் தவறவிடப்படுவதால் அவை மட்டுப்படுத்தப்பட்ட வாசிப்பு மன எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுகின்றன.

 

'நீர்வழிப் படூஉம்' நான் முன்னே குறிப்பிட்ட நாவல்களின் வழி வந்துசேரக் கூடியதொன்றாகும். 'கூளமாதாரி'யில் வரும் சிறுவன் பாத்திரம் போல ஒருவனான கதைசொல்லியாலே இந்நாவலின் கதை பெரும்பாலும் சொல்லப்படுகின்றது. காருமாமாவின் மரணத்தின்போது அவன் திருமணத்துக்கு தயாராகிவிட்ட இருபதுகளில் இருக்கக்கூடிய ஓர் இளைஞன். ஆனால் நனவிடைதோய்தல் முழுதும் அவன் சிறுவனாக இருப்பதிலேயே சொல்லப்படுகின்றது. இந்த நாவலின் கதை, எங்கு வாழ்ந்தாலும் உறவுகளுக்கு இடையிலும்/கூட்டுக் குடும்பங்களில் நடுவிலும் நிகழக்கூடியதுதான். ஆனால் காருமாமா, பெரியம்மா, அம்மா, ராசம்மா அத்தை என்பவர்களைப் பற்றிச் சொல்ல தேவிபாரதியால் மட்டுமே முடியும். ஏனென்றால் அது அவருக்கு மட்டுமே நன்கு பரிட்சயமான வாழ்க்கை. அதை நம்மால் வாழ மட்டுமில்லை, கற்பனை செய்யவும் முடியாது. அவ்வாறு நாம் வாழவும் கற்பனை செய்யவும் முடியாத வாழ்வையும், மனிதர்களையும் நமக்கு நினைவூட்டத்தான் எழுத்துத் தேவையாகின்றது.

 

எந்த மிகச் சிறந்த நாவல்களாயினும் அதில் விடுபடுதல்கள் இருக்கும். அவ்வாறான குறைகள்தான் ஒரு நாவலை முழுமைபடுத்துகின்றதென நம்புகின்றவன் நான்.. இங்கே நாவிதர்கள், அவர்கள் சென்று தொழில் செய்யும் ஆதிக்கச் சாதியினர் குறைகளற்றே விபரிக்கப்பட்டிருக்கின்றனர். சிலவேளைகளில் தேவிபாரதி ஆதிக்கசாதிகள் அது எங்கு இருப்பினும் எவ்வாறு ஒடுக்கும் என்பது நமக்குத் 'தெரிந்த கதை'தானேயென அதை விலத்திச் சென்றிருக்கலாம்.  Colour Purple கறுப்பின மக்களின் வாழ்வைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் சட்டென்று விலத்தி கறுப்புப் பெண் தனது காருக்குப் பெற்றோல் அடிக்கும் இடத்தைக் காட்டும். அங்கே அந்தப் பெண்ணைச் சந்திக்கும் வெள்ளையினப் பெண் இந்தக் கறுப்புப் பெண்ணை தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வாவென்று அதே அடிமை மனோபாவத்துடன் அழைப்பார். இந்தக் கறுப்புப் பெண்ணோ ஏன் அங்கே வேலைக்கு வரவேண்டுமென வாய்காட்டுவாள். அது மட்டுமே அவள் செய்த ஒரே குற்றம். வசதி வாய்ப்புக்களில் எவ்வளவு முன்னேறினாலும் வெள்ளையினத்தவர்களுக்கு அன்று கறுப்பர்கள் அடிமைகள்தான்.

 

அந்த சிறு எதிர்ப்புக்காய் அந்தக் கறுப்புப் பெண், கணவர் பிள்ளைகள் முன்னால் பொலிஸால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாள். அவள் மாதக்கணக்கில், திருப்பி ‘வாய்காட்டி’யதற்காய் தண்டனைக்குள்ளாக்கப்படுவது மட்டுமில்லை, அந்தத் தண்டணை முடிந்தபின்னும் அதே வெள்ளையினப் பெண்மணியின் வீட்டில் வேலைக்குச் செய்வதற்காக அழைத்துச் செல்லப்படுவாள். இவையனைத்தையும் அவளின் கணவர்/பிள்ளைகளால் எதுவுமே செய்யமுடியாது, வேதனையுடன் பார்த்துக் கொள்ளவே முடிகின்றது. அவ்வளவுதான் இத்திரைப்படத்தில் வரும் வெள்ளையினத்தவர் சம்பந்தப்படும் காட்சி. ஆனால் படம் முழுவதும் அந்தப் பெண் செய்த குற்றந்தான் என்ன என்று நம் மனதை ஆழமாகப் பாதிக்கும் விடயமாக அது இருக்கும். இப்படியான திக்கசாதி மனோபாவத்தின் சுவடெதுவும் இன்றி தேவிபாரதி ஒடுக்கப்பட்ட சமூகமொன்றி வாழ்வைப் பற்றி எழுதியதற்கு படைப்பாளியாக‌ அவருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவும் கூடும். ஆனால் இற்றைக்கும் சாதிய சமூகமாகவே தமிழ்மனம் தன் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிரூபிக்கத் துடித்துக் கொண்டிருக்கும்போது 'இந்த விடுபடல்' ஒரு நெருடலாகவே வாசிக்கும் மனதுக்கு இருக்கும்.

 

ஆனால் இதன் நிமித்தம் 'நீர்வழிப் படூஉம்' தன் சிறப்பை இழக்கப்போவதில்லை. அது தன்னளவிலே ஒரு முழுமையான நாவல்தான். ஒரு படைப்பை வாசிக்கும்போது  வாசிப்புமனம் அதற்கு நிகரான ஏற்கனவே எழுதப்பட்ட படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்க்கும். இந்த நாவலில் முக்கிய கருப்பொருளில் ஒன்று அண்ணா - தங்கச்சி பாசம்: அது காருமாமாவுக்கும்  இந்தக் கதைசொல்லியின் அம்மாவுக்குமான உறவு. அதை தேவிபாரதி பொதுமனங்களுக்கு நன்கு பரிட்சயமான 'பாசமலர்' சிவாஜி- சாவித்திரி பாத்திரங்களை முன்வைத்து தன் நாவலில் காருமாமா X கதைசொல்லியின் அம்மா உறவை ஆழமாக எடுத்துச் செல்கின்றார். அது ஒரு படைப்பாளிக்குரிய சவால். வாசகரின் முன் அவர்களுக்கு நனகு ஏற்கனவே தெரிந்ததை வைத்து அதைத் தாண்டி என் எழுத்தால் செல்ல முடியும் என்பதால் வருகின்ற கம்பீரம். தேவிபாரதி அந்தச் சவாலை அதியற்புதமாகக் கையாண்டிருக்கின்றார். இதே போன்ற சவாலை, திருமணத்தின் பின் வருகின்ற உறவைச் சொல்லும் படைப்பான 'கமலி'யில் சி.மோகன் நமக்கு நன்கு அறிமுகமான ஜானகிராமனின் படைப்புக்களை அந்த நாவலுக்குள் வைத்தே அழகாக‌ மீறிச்சென்றிருப்பார். 

 

காரு மாமாவும், அவரை விட்டு தன் பிள்ளைகளோடு ஓடிப்போகின்ற ராசம்மா அத்தையும், காருமாமாவின் சகோதரிகளும் இந்தப் புதினத்துக்குள் வராது விட்டிருந்தால், வரலாற்றில் சும்மா வாழ்ந்துவிட்டுப் போயிருக்கக்கூடிய சாதாரண மனிதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் தேவிபாரதி அவர்களை காலத்தில் மறைந்து போகாதவர்களாக மட்டுமின்றி, நம்மைப் போன்று முற்றிலும் அந்நியமான ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடையும் முக்கியமான மனிதர்களாக அவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார். இவ்வாழ்வில் சாதாரணமானவர்கள் என்று சொல்லி பொதுப்பரப்பில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களுக்கு, அது கலை அளிக்கின்ற மாபெரும் மரியாதை எனச் சொல்லலாம்.

 

****************

 

( நன்றி: 'அம்ருதா' - பங்குனி/2024)

0 comments: