கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பரிசுத்தக் கண்ணீர்!

Wednesday, March 06, 2024

 
நேற்று ஒரு நண்பர் திரைப்படமொன்றைப் பார்த்துவிட்டு அதில் வரும் முக்கியபாத்திரம் என் சாயலை ஒத்திருந்தது என்றார் (Saw this amazing movie and the actor reminded me of your features). என்னைப் போல ஒருவரையெல்லாம் திரையில் காட்டுவார்களா என்று வியப்பிருந்தாலும், எப்படியோ தேடி அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டிருந்தேன். எப்போதுமே எதிர்ப்பார்ப்பின்மைகளின் அழகியலே என்னை வசீகரிப்பதுண்டு. அது பயணமாகவோ, புத்தகமாகவோ, திரைப்படமாகவோ, இசையாகவோ இருந்தாலென்ன, எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்கும்போது அது தரும் அனுபவம் அசலானது.

நான் பெருவில் மச்சுப்பிச்சுவைப் பார்க்கப் போனபோது,  அங்கே தங்கி நின்ற நகரில்,  இன்கா மக்களின் ஒரு கலாசார விழாவைப் பார்த்தபோது அந்த 'எதிர்பாராததன் முழுமை'யை உணர்ந்திருக்கின்றேன். என் எதிர்பார்ப்போ மச்சுபிச்சுவைப் பார்ப்பது. அதற்காய்த்தான் அவ்வளவு தூரம் பயணித்துப் போயிருந்தேன். அது ஏற்கனவே மனதில் பதிந்துவிட்ட இடம். ஆனால் அங்கே எதிர்பாராமல் நிகழ்ந்தது இந்தக் கலாசார விழா. இவ்வாறுதான் 'மகேஷின்டே பிரதிக்காரம்' திரைப்படத்தையும் எதையும் அறியாமல் தற்செயலாகப் பார்த்தபோதும் நிகழ்ந்தது. அந்தத் திரைப்படந்தான் என்னை ஒருமுறை தொடுபுழா, இன்னொருமுறை இடுக்கி எனப் பயணிக்க இழுத்துக் கொண்டு சென்றிருந்தது. அவ்வாறு எத்தனையோ புத்தகங்களை/திரைப்படங்களை உதாரணத்துக்குச் சொல்ல முடியும்.

மனித உறவுகள் எவ்வளவு எவ்வளவுக்கு சிக்கலாக இருக்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அழகாகவும் இருக்கின்றது. சில வருடங்களுக்கு முன் நான் சந்தித்த ஒருவர், வாழ்க்கையில் தனக்கு நிகழ்ந்த சம்பவமொன்றைச் சொல்லியிருந்தார். அது ஒரு சிறுகதைக்குரிய விடயம். என்றேனும் ஒரு நாள் அதன் முழுமை கெடாது எழுதவேண்டும்.

அந்த நண்பருக்கு ஒரு காதலி இருந்தார். வழமையான பல காதல்களுக்கு நிகழ்வது போல அது காலத்தின் நீட்சியில் தேய்ந்து கரைந்து போயிருந்தது. பின்னர் அந்த நண்பர் அதே (முன்னாள்) காதலியை ஒரு பயணத்தின்போது சந்தித்திருக்கின்றார். அந்தக் காதலி இப்போது இன்னொருவருக்கு engaged ஆகிவிட்டார். நீண்ட நாட்களின் பின் தனது முன்னாள் காதலனை அந்தப் பெண் ஒரு விடுதியில் சந்திக்கின்றார். 'இந்த நாள் நானுன்னை முழுமையாக உன்னிடம் தருகின்றேன், எடுத்துக் கொள்' என்று சொல்லும் அந்தக் காதலியோடு படுக்கையறையில் இருக்கும்போது சட்டென்று இவர் ஏதோ ஒருகணத்தில் உடைந்து அழுகின்றார். அதைப் பார்த்து அந்தக் காதலியும் அழுகின்றார். அவ்வளவு பரிசுத்தமான கண்ணீரை, தான் தன் வாழ்வில் இதுவரை ஒருபோதும் உணர்ந்ததில்லை என்றார் அந்த நண்பர்.



த்தனைக்கும் தனக்கு இந்த கலாசாரம்/விழுமியம் குறித்தெல்லாம் பெரிதாக எந்த அக்கறையும் அவ்வளவு இருந்ததில்லை. காலமும், சூழலும், சம்மதமும் பொருந்தி வரும் இவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவறவிடாத தனக்கு ஏன் அன்று மட்டும் அப்படிக் கண்ணீர் வந்தது?  எதையும் அதற்கு மேல் தொடராது அன்று அவளை அணைத்துத் தூங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றேன் என்பதற்கான காரணம் இன்றுவரை வியப்பாக இருக்கிறது என்றார். இந்த சம்பவத்தை வேண்டுமெனில் 'எதிர்பாராமையின் பரிசுத்த கண்ணீர்' எனப் பெயரிட்டுக் கொள்ளலாம்.

இதை நாம் பகுத்தறிவின் பொருட்டோ, அறிவியலில் பொருட்டோ ஒரு எல்லைக்குள் வைத்து வகுத்துப் பார்க்கவும் முடியாது. இதே மாதிரி இன்னொரு சம்பவம் வந்தால் அதே நண்பர் இப்படித்தான் அதை எதிர்கொள்வார் என்று நாம் சொல்லவும் முடியாது. அன்று அப்படி  'பரிசுத்தமான கண்ணீரால்'  அவருக்குரிய நாள் ஆசிர்வதிக்கப்பட்டது என மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

'Swathi Mutthina Male Haniye' கிட்டத்தட்ட இப்படியொரு 'எதிர்பார்ப்பின்மையின் காதலை' விரைவில் இறக்கப்போகும் ஒரு நோயாளியினூடு, அங்கே கவுன்சிலராக வேலை செய்யும்  பெண்ணுக்குக் கொடுக்கின்றது. அதுவரை தனது திருமண வாழ்வின் எல்லா அபத்தங்களையும், துரோகங்களையும் சகித்துக்கொண்டிருந்த இந்தப் பெண்ணுக்கு இந்தக் காதல் ஒரு (தற்காலிக) விடுதலையை அளிக்கின்றது. அதனால்தான் அவள் தனது தாயிடம் மட்டுமில்லை, தான் வேலை செய்யும் வைத்தியரிடமும், ஏன் தனது கணவரிடங் கூட இந்தக் காதலை வெளிப்படையாக எவ்விதத் தயக்கமுமில்லாமல் முன்வைக்கின்றாள்.  அவள், இறந்துவிட்ட தனது காதலனின் அஸ்தியை பேரூந்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் விசிறும்போது அங்கே அவளிடமும் இந்தப் 'பரிசுத்தமான கண்ணீரே' நிச்சயம் இருந்திருக்கும். அந்தக் காதலன் தன் இறப்பு நிச்சயமாகிவிட்டபின் எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டே இந்த இடத்திற்கு வந்து அடைக்கலமாகின்றான். அது மரணத்தை எதிர்கொள்ளும் அவனது தனித்துவமான வழி.

ஆகவே எதிர்பார்ப்பின்மைகள் உங்கள் வாழ்வில் நிகழும்போது அவற்றைக் கொண்டாடுங்கள். சிலவேளை அவையே நாம் வாழ்வதற்கான அர்த்தங்களை கணப்பொழுதில் 'பரிசுத்தமான கண்ணீரோடு' கொண்டுவரும் ஆசிர்வாதங்களாய் இருக்கவும் கூடும்.

*************

 

ஓவியம்: இயல்
(Jan 07, 2024)

0 comments: