கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இனியொரு பொழுதுமில்லா வாழ்வு..!

Monday, March 11, 2024

 

சிலவேளைகளில் சற்று நிதானித்து காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் அது எவ்வளவு வேகமாய் விரைந்து செல்கின்றது என்கின்ற திகைப்பு வரும். கடந்த‌காலம் ஒரு சிறு கடுகைப் போலச் சுருங்கி நம் உள்ளங்கையில் மிதப்பது போலத் தோன்றும். ஒருகாலத்தில் எவையெல்லாம் முக்கியமென்று கடுமையாகப் போராடியவையும், மன்றாடியவையும் இப்போது அதன் சுவடுகளேயில்லாது கரைந்து போயிருக்கும். அவ்வாறுதான் நிகழ்காலத்தில் நாம் உழல்பவையும் நம்மை உழக்குபவையும் எதிர்காலத்தில் அவசியமற்றுப் போய்விடுமென்று தெரிந்தாலும் நாம் கண்களுக்கு அகப்படாத பொறிகளுக்குள் சிக்கியிருப்போம்.


வாழ்வில் எது அவசியம்/அவசியமற்றது என்பதை விளக்கிச் சொல்ல எத்தனையோ புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எந்தளவுக்கு சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து விலகி, எளிய விடயங்களில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பெறுவதை மட்டுமின்றி, 'சும்மா இருத்தல்' என்பதே ஒரு தத்துவார்த்த விடயமாக விவாதிக்கப்படுவதையும் பார்த்திருப்போம். 'தீதும் நன்றும் பிறர் தர வரா' என்று நம் சங்ககாலத்து கவிஞனிடமும், 'நமக்கான தேர்வுகளுக்கு நாமே பொறுப்பு' என்று சென்ற நூற்றாண்டு சார்த்தர் வரை சொல்லக் கேட்டுமிருக்கின்றோம்.


முதலீட்டிய நாடுகளில் உழைப்பை உறிஞ்சி இயந்திரமாக பிழிந்தெடுக்கும் ஒரு வாழ்க்கையில் அங்கமாகி உழைப்பிலிருந்து அந்நியமாகி தத்தளிப்பது ஒருபுறம் என்றால், மூன்றாமுலக நாடுகளில் (அல்லது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்) எளிமையும், ஓய்வுமாக இருந்த வாழ்வை உலகமயமாதலும் நுகர்வுக் கலாசாரமும் தன் இராட்சதக் கரங்களால் இறுக்கி 'வறுமை'க்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. ஒருவகையில் அன்று எப்படி காலனித்துவ‌ம் செய்ததை, நகாசுத்தனமாக‌ இன்றைய உலகமயமாதல் 'கனவு வாழ்வு' எனக் கட்டியமைத்துச் சுரண்டிக் கொண்டிருக்கின்றது.

இவையெல்லாம் பொதுவில் விவாதிக்கப்பட்டதும், நமக்கு ஏற்கனவே தெரிந்த விடயங்கள்தான்.

ன்னும் கடுமையாக‌ உழைத்தால் சொகுசான விடயங்களை அனுபவிக்கலாம் என்றும், இன்னும் கொஞ்சம் நேரத்தை வேலைக்காய் ஒதுக்கினால் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழலாம் என்றும் எல்லாப் பக்கங்களிலும் இருந்து பரப்புரை செய்யப்படுகின்றன. ஆனால் நாமறியாதது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இதே சமாந்திரமான காலத்தில் பலர் இவ்வாறான திணித்தல்களை ஒதுக்கிவிட்டு தமக்கு எது தேவையானது என்று தேடிப் புறப்பட்டபடி இருக்கின்றார்கள் என்பதாகும்.. சிலர் தமக்கு விரும்பிய கலைகளில், இன்னும் பலர் தமக்கான பயணங்களில், வேறு சிலர் எளிமையான வாழ்வுக்குத் திரும்புதல் எனச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர்.

வருடம் முழுவதும் இருக்கும் உழைப்பிலிருந்து, சில வாரங்கள் நீங்கள் விடுமுறை எடுத்து எங்கேனும் உங்களுக்குப் பிடித்த இடத்தில் இருக்கும்போது, முக்கியமான ஒன்றை அவதானித்திருக்கின்றீர்களா? நீங்கள் களிப்புறும் அந்த அழகான வாழ்க்கை எப்போதுமே அங்கே இருந்து கொண்டிருக்கின்றதென்பது நன்கு புரியும்.. நீங்கள் இதேயிடத்தில் இல்லாதபோது உங்களுக்கான அவசரகதியான‌ வாழ்க்கையில் மூழ்கியிருப்பீர்கள். ஓய்வு எடுத்திருக்கும் அந்த ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ வாழும் வாழ்க்கையை ஏன் உங்களால் வருடம் முழுவதும் வாழ முடியவில்லை என்று நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா? வேலையே செய்யாமல் வாழ்வதைப் பற்றியல்ல நான் இங்கே உரையாடுவது. அப்படியொரு வாழ்க்கை கடலில் அள்ளியெடுக்கும் நீரைப் போல உள்ளங்கையில் இருந்து நழுவிக் கொண்டிருப்பதைக் காண்போம். ஆனால் நமக்கு தெரிந்ததும், சொல்லிக் கொடுக்கப்பட்டதும் ஒன்றேயொன்றுதான். இப்படியொரு அழகான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமென்றால் கடுமையாக உழைத்து பணத்தைச் சேமி, பிறகு அந்த வாழ்க்கை உன்னைத் தேடி வரும் என்பதாகும்.

ஆனால் நீங்கள் வாழ்வதோ மிகவும் செலவு கூடிய நகராக இருக்கும். உங்களுக்கென்று குடும்பம் இருக்கும். ஒரு ஆணாகவோ/பெண்ணாகவோ நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்று சமூகம் சொல்லியவற்றை நிறைவேற்ற வேண்டிய ஒருவராகவும் இருப்பீர்கள். அப்படியெனில் நீங்கள் எந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். மெளனி கேட்டது போல, நாம் யார்? எவற்றினதோ நடமாடும் நிழல்கள்தானோ? அந்த தெரியாத நிழல்களின் வாழ்வைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா என நம்மை நாமே கேட்க வேண்டியதாகின்றது.

நாம் சலிப்பிலோ, துயரத்திலோ, வறுமையிலோ சிக்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய இந்த வாழ்வுக்கு சமாந்திரமாக பல்வித வாழ்வுப் பாதைகள் சுழித்துக் கொண்டிருப்பதையே நாம் நமக்கு நினைவூட்ட வேண்டியிருக்கின்றது. ஒரு காதலை இழக்கும்போது இன்னொரு காதல் காத்திருப்பதைப் போல, ஒரு வேலை இல்லாதபோது இன்னொரு வேலை கிடைப்பதைப் போல, ஒரு ஊர் பிடிக்காதபோது இன்னொரு ஊருக்குப் போய்த் தங்கிவிடுவதைப் போல, நமது இந்த வாழ்க்கையைப் போல இன்னொரு வாழ்க்கை நமக்கு ஒருபோதும் வாய்க்கப் போவதில்லை.

ஆகவேதான் புத்தர் ஒரு புதிய வாழ்க்கையை நீங்கள் விரும்பினால் உங்கள் வாழ்நாளில் எந்தக் கணத்திலும் எப்போதெனினும் தொடங்கிவிட முடியுமெனச் சொல்கின்றார். ஒரு கொலைகாரனாக இருந்த ஆமிரபாலி புத்தரின் அரவணைப்பினால் ஞானமடைந்தார். அவ்வளவு அட்டூழியக்காரராக இருந்த அருணகிரிநாதர் ஒரு சித்தருக்கு நிகராகப் பின்னாட்களில் மாறினார். ஒரு மைனரைப் போல சுகவாசியாக வாழ்ந்த ராமசாமி ஒரு பெரியாராக தமிழ்ச்சூழலின் முன் வந்து நின்றார்.

அதற்கு ஏற்கனவே நமக்கு கற்பிக்கப்பட்டவைகளில் இருந்து மட்டுமில்லை, நமக்கான‌ அச்சங்களிலிருந்தும், நமக்கு உவப்பில்லாத‌ சலிப்பான வாழ்வு முறையிலிருந்தும், முதலில் நாம் விடுதலையடைய வேண்டியிருக்கின்றது.

*************

(Jan 25, 2024)

0 comments: