போர்கள் என்பது மானிடர்கள் அவமானத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டிய பேரவலம் தருகின்ற ஓரிடம். ஆனாலும் யுத்தங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நிகழ்த்தபட்டுக் கொண்டேயிருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கா நாடுகள் பல காலத்துக்காலம் தமக்கான விடுதலைக்கான போராட்டங்களைக் கொண்டிருந்தன. அவ்வாறு 1970களின் பிற்பகுதியில் ஆர்ஜெண்டீனாவின் ஜனாதிபதியாக இருந்த பெரோனின் மனைவியைத் துரத்திவிட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 1983 வரை கொடுமையான ஆட்சி நிகழ்கின்றது. நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருக்க, இடதுசாரிகளும், தொழிலாளர் சங்கங்களும் அரங்கின் முன்னணியில் போராட்டங்களில் இருக்கின்றனர். ஆர்ஜெண்டீனிய இராணுவ ஆட்சி இவர்களைத் தடைசெய்து மோசமான கொலைகளும், சித்திரவதைகளும் செய்கின்றது.
1983இல் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். கடந்த ஏழாண்டுகளில் இராணுவச் ஆட்சியில் நடந்த படுகொலைகளுக்கும், காணாமற் போதல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் நியாயம் கேட்க இராணுவ ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தில் 1985 இல் விசாரிக்கப்படுகின்றது.
இது ஆர்ஜெண்டீனாவில் Trial of the Juntas என அழைக்கப்படுகின்றது. இந்தக் கொடுமைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய இராணுவ ஜெனரல்கள், தாங்கள் இராணுவ நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படவேண்டும், பொது நீதிமன்றத்துக்குத்தாங்கள் வரமாட்டோம் என்று முதலில் மறுக்கின்றார்கள். இராணுவ நீதிமன்றங்களுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட இராணுவத்தினர் எவ்வாறு தப்பினர் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. இராணுவத்தினரே நீதிவான்களாக இருந்து தீர்ப்பை வழங்கும்போது அங்கே எந்த நீதி கிடைக்கும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்ஜெண்டீனிய ஜனாதிபதியும், மக்களும், கடந்தகால இராணுவ ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அரச தரப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து சாட்சி கூறுகின்றார்கள். வழக்கு நான்கைந்து மாதங்களாகத் தொடர்கின்றது. மக்கள் சார்பாக நிற்கும் வழக்கறிஞர்கள் மீது கொலை மிரட்டல்களும், அரச அலுவலங்களில் குண்டு வைப்போம் என்ற எச்சரிக்கைகளும் செய்யப்படுகிறன. அதை மீறியும் இராணுவம் நீதிமன்றத்தில் ஏற்றப்பட்டு முக்கிய ஜெனரல்களுக்கு ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இந்தக்காலத்தில் எழுந்த அமைதியின்மையினால் ஆர்ஜெண்டீனா ஜனாதிபதி கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக அவசரகால நிலைமையையும் பிரகடனப்படுத்தியிருந்தார்.
சில ஜெனரல்கள் தப்பியிருந்தாலும், அந்த ஆட்சியில் இருந்த ஜெனரல்களுக்கு தண்டனை வழங்கப்படுகின்றது. இதன் நிமித்தம் இன்னுமின்னும் இராணுவத்தின் வெவ்வேறு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் தண்டனை வழங்கப்படப் போகின்றது என்ற அச்சத்தில், இராணுவத்தில் இருக்கும் எவரையும் இனி விசாரிக்கக்கூடாதென்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வர இராணுவம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. ஒருகட்டத்த்தில் அழுத்தம் தாங்காது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இராணுவத்தின் சார்பாக அது போகின்றது.
எனினும் இந்த 'Trial of the Juntas' வழக்கு வரலாற்றில் முக்கியமானது. 2ம் உலகமகாயுத்தத்தின் பின், ஜேர்மனிய நாஸிகளை சட்டத்தின் முன் நிறுத்திய நூரம்பேர்க் வழக்கின் பின், ஒரு நாடு தனது இராணுவத்தையே நீதியின் முன்னிறுத்தி விசாரித்து தண்டனை கொடுத்தது என்ற சிறப்பை இந்தத் தீர்ப்பு பெற்றிருக்கின்றது.
வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருக்கவும், அது இராணுவமாயிருந்தாலென்ன தனது அதிகாரத்தை மக்கள் மீது பாவிக்காது தடுப்பதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு நல்லதொரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது. அதாவது இன்று நீங்கள் உங்களுக்கு பெரும் அதிகாரம் இருக்கின்றது என்று ஆட்டம் போட்டால் நாளை நீதி உங்களை நியாயத்தின் பொருட்டு விசாரிக்கும் என்கின்ற எச்சரிக்கைதான் இது.
இந்த விசாரணையின்போது சித்திரவதைக்கு உள்ளான இறந்தவர்களோ, காணாமற்போனவர்களோ திரும்பி வரவில்லை, வரப்போவதில்லை. ஆனால் உயிரோடு இருந்த அவர்களின் பெற்றோர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு இது ஒரு சிறிய ஆறுதலைக் கொடுத்திருக்கும். ஒருவகையில் இது ஒரு வகையான ஆற்றுப்படுத்தல் எனலாம். இன்னொருவகையில் இவ்வாறு காணாமல் போனவர்கள் இன்யொருபோதும் திரும்பி வரமாட்டார்கள் என்பதை acknowledged செய்வதாகும். அத்துடன் இப்படியான சம்பவங்கள் மீண்டும் வரலாற்றில் நடப்பதை தடுப்பதற்கும் இது உதவலாம்.
இலங்கையிலும் இப்படித்தான் காலத்துக்காலம் காணாமற்போதல்களும், கொலைகளும், சித்திரவதைகளும் நடைபெற்றிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை, ஜேவிபியின் கிளர்ச்சியின்போது இரண்டு தடவைக்கு மேலாக சிங்கள மக்களுக்கும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இவ்வளவு வரலாற்றுக் கொடும் சம்பவங்கள் நடந்தபின்னும் அதற்குரிய கொடுமையாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் போரின்/கிளர்ச்சியின்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கள் எல்லாம் இந்த இராணுவ ஜெனரல்களை தூதுவர்களாகவும், உயர் ஸ்தானிகர்களாகவும் உலகெங்கும் அனுப்பி பெருமைப்படத்தான் செய்திருக்கின்றது. தமது தோழர்களை அநியாயமாகப் பலிகொடுத்த ஜேவிபி இன்னொரு இனவாதக் கட்சியாக மாறி காலத்துக்காலம் சிங்கள இனவாதிகளின் பக்கம் நின்றுமிருக்கின்றது. இன்னொருபக்கம் நமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும், மாஜி இயக்கத்தவர்களுக்கும் உலக அரங்குகளில் இருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம் என்கின்ற தெளிவோ, புரிதலோ அவ்வளவாக இருப்பதில்லை.
சில வருடங்களுக்கு முன் இலங்கைக்குப் போனபோது காணாமற்போன பிள்ளைகளுக்காய் தாய்மார்கள் நடத்திய போராட்டத் திடல்கள் சிலவற்றுக்குப் போயிருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனிப்பட எம்முடன் பேசும்போது, 'இவர்களின் பிள்ளைகள் உயிரோடு இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்' என்று அன்றைய ஜனாதிபதி/இராணுவ ஜெனரல்களின் குரலில் சொன்னார். உண்மையோ/யதார்த்தமோ அவர்களின் பிள்ளைகள் உயிரோடு இல்லையென்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தாய்மார்களின் உள்மனதுக்கும் அது தெரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் சலிக்காது செய்து கொண்டிருந்த இந்தப் போராட்டம் என்பது, அவர்களின் பிள்ளைகள் போரின் நிமித்தம் உயிரோடு கொண்டுபோய் கொல்லப்பட்டுவிட்டார்கள், அதை நிகழ்த்தியவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்பதன் மறைமுகமான கோரிக்கையாகக் கூட இருக்கலாம்.
அத்துடன், ஆம் இவ்வாறான கொடுமை நிகழ்ந்தது உண்மைதான் என்று ஆர்ஜெண்டீனாத் தாய்மார்களுக்கு வேண்டுமாயிருந்த acknowledgement தான் இவர்களுக்கும் வேண்டியும் இருந்திருக்கலாம்.. இது தமிழ்ப்பெற்றோர்களின் போராட்டம் மட்டுமில்லை ஜேவிபியினரின் போராட்டங்களின் போது காணாமற்போன பிள்ளைகளின் தாய்மார்களின் கோரிக்கையும் கூடத்தான். அதனால்தான் இன்னமும் காணாமற்போன தனது பத்திரிகையாளக் கணவன் குறித்து பிரகீத் எக்னெலிகொடாவின் மனைவி நியாயங்கேட்டபடி வெள்ளையாடையுடன் நாடெங்கும் அலைந்து கொண்டிருக்கின்றார்.
**********
(Dec 09, 2023)
0 comments:
Post a Comment