கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நான் வாரணாசிக்குப் போகும் கதை!

Tuesday, March 05, 2024


னது வங்கியில் அவ்வப்போது ஒரு Financial Advisor ஐ சந்திப்பேன். அவர் காசியைச் சேர்ந்தவர். இம்முறை சந்தித்தபோது இங்கே பிறந்த தனது மகளை நாளாந்தாவுக்குக் கூட்டிச் சென்றேன், இப்படியொரு பல்கலைக்கழகம் அந்தக் காலத்திலேயே இருந்ததா என மகளுக்குத் திகைப்பாக இருந்தது என்றார். அவர் இந்துவாகப் பிறந்தாலும் புத்தர் மீது அதிக ஈர்ப்புடையவர் என்பதால் அவரோடு உற்சாகமாக உரையாடல் போகும். அவரின் பிள்ளைகளில் ஒருவர் பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்திருக்கின்றார். இன்னொரு மகள் விரைவில் இலங்கைப் பின்னணியில் பிறந்த ஒருவரைத் திருமணம் செய்யபோகின்றார் என்றார். 'நீங்கள் தென்னாசிய நாடுகளையே உங்கள் வீட்டுக்குள்ளே வரச் செய்துவிட்டீர்கள்' எனச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.


அவரிடமிருந்து காசியைப் பற்றி அறிய ஒவ்வொருமுறையும் ஆவல் இருக்கும். ஆனால் பெரும்பாலும் புத்தரையும், கனடாவையும், காலனித்துவத்தையும் பேசிப் பேசியே, எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அவருடனான ஒரு மணித்தியாலம் முடிந்துவிடும். இம்முறை திருக்குறளை அறிந்திருக்கின்றேன் என்று சொல்ல அது பற்றிப் பேச்சு நீண்டது. ஒவ்வொருமுறையும் நான் அவரின் அறிவுரையைக் கேட்டு மில்லியனராகி விட வேண்டுமென்றும், அப்படியான பின் கனடாவின் நான்கு காலங்களைப் போல வருடத்தில் நான்கு புது நாடுகளுக்குச் சென்று வாழவேண்டும் என்கின்ற கனவும் இப்படியான 'வெட்டி'ப் பேச்சால் ஒவ்வொரு முறையும் மறந்து போய்விடும்.

இப்படியே போனால் கல்லறைக்குப் போனாப்பிறகும் செல்வந்தனாக முடியாது போகுமென்பதால், நான் இம்முறை வரும்போது ஒரு உண்மையைச் சொல்லிவிட்டேன். எனக்கு இப்படியே கனடாவில் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க முடியாது. எனக்குப் பிடித்தது வாசிப்பும், எழுத்தும். பிற லெளதீகப் பிரச்சினைகள் இல்லாது அவற்றில் திளைப்பதற்கு எப்படிப் பணத்தைச் சேமிப்பது என்று சொல்லித் தாருங்கள் எனக் கறாராகச் சொல்லிவிட்டேன்.

அடுத்தமுறை சந்திக்கும்போது அவர் என்னை மில்லியனராக மாற்றிவிடுவார். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக நான் அவர் பிறந்த ஊரான காசிக்குப் போவேன். அப்போது பா.வெங்கடேசனின் 'வாராணசி'யை வாசித்தபோது காசியில் ஊறித் திளைத்த மாதிரி ஒவ்வொரு இடங்களையும் வியந்து பார்ப்பேன்.



"வாரணாசி" புதினம் காசியையும், ஓசூரையும் பின்னணியாகக் கொண்டு கைவிரல்களுக்கு வரும் பாத்திரங்களை மட்டுமே பேசுகின்றதென்றாலும் அது மொழியில் செய்யும் பரிட்சார்த்தங்கள் மறக்க முடியாதவை. கடந்தகாலத்தில் ஒரு பெண் ஓசுரிலிருந்து திருமணப்பந்தத்திலிருந்து வெளியேறி காசியை அடைந்து அங்கு ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரனுக்கு நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பவளாக மாறுகின்றாள். அவள் இறந்தபின் அந்த உண்மை தெரியவர அவளின் கணவனும், அவளின் (பெறா) மகளும் சமகாலத்தில் அவளோடு சம்பந்தப்பட்டவர்களையும், அவள் இருந்த இடங்களையும் தேடிப் போவதே கதை எனலாம்.

இவ்வாறு மொழியின் வசீகரங்களுக்கு அழைத்துச் செல்லும் ( மொழியின் சிடுக்குகளுக்கு அல்ல) அழைத்துச் செல்லும் ஒருவராக ரமேஷ் பிரேதனை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் 'நிலவொளி இரகசியம்' , நகுலனின் 'நவீனனின் டயரி'/'நினைவுப்பாதை'  போல ரமேஷினதும் ஏதாவது தொகுப்பு என் கண்களில்படுமாறு எப்போதும் வைத்துக் கொள்வேன். இவற்றை ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து வாசித்துக் கொள்ளத் தொடங்குவேன். அதுவும் அண்மைக்காலமாய் சுவாரசியமாக வாசிக்க எந்த நூலும் கையில் கிடைக்காமல் அவதிப்படுகையில் இவர்களே எனக்குத் துணைபுரிவார்கள். இப்போது ரமேஷின் அருகன்மேட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வாறு கதைக்களங்களின் சுவாரசியத்தை விட மொழியின் வசீகரத்தால் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் அழைத்துச் செல்லும் பிரதிகளைப் பற்றி நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதனின் 'அருகன்மேடு', 'நீல அணங்கு' 'ஐந்தவித்தான்' மூன்றையும் ஏற்கனவே வாசித்துவிட்டேன்.  அவை மூன்றும் சேர்ந்து இப்போது 'பொந்திஷேரி'  டிரையாலஜியாக வருகின்றது. ரொபர்தோ பொலானாவும் '2666' எழுதியபோது 5 தனித்தனி நூல்களாகவே கொண்டுவர விரும்பியிருந்தார். ஆனால் அவரின் சடுதியான மரணத்தால், அவை ஐந்தும் சேர்ந்து ஒரு நாவலாக பின்னர் வெளிவந்திருந்தது.

ரமேஷின் 'அருகன்மேட்டில்' ஒருபோதும் தீர்ந்துவிடாத‌ மொழியின் வனப்பை நான் சிலாகிக்க, நண்பர் இப்போது வாசிக்கும் ஜெயமோகனின் வெண்முரசுத்தொடரின் 'நீலம்' அழைத்துச் செல்லும் கற்பனையைச் விபரித்துத்துக் கொண்டிருந்தார்.  'நீலம்' தொடராக இணையதளத்தில் வந்தபோது எனது அக்கா தினம் வாசித்துவிட்டு சிலாகித்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தது. நான் எப்படியெனினும் அதை வாசித்துத் தீர்த்துவிடவேண்டும் என்று சில அத்தியாயங்களை வாசித்தபின் அதீத அழகியல் என் வாசிப்புக்கு ஆகாதென்று என் முயற்சியை இடைநடுவில் கைவிட்டிருந்தேன். எத்தனை காதல்களைக் கண்டால் என்ன, வருகின்ற காதலிகள் எல்லோருமே ஜெமோவின் தீவிர இரசிகைகளாக இருப்பார்கள் என்பது எனக்கு எப்போதோ எழுதப்பட்டு விட்டது போலும். ஒரு பொல்லாப்புமில்லை, சும்மா இரு மனச்சனியனே!

இனி என் நண்பர்களோடு (பெண்களோடுதான், ஆண்கள் இதில் சேர்த்தியில்லை) இவ்வாறான விடயங்களில் சச்சரவு பிடிப்பதில்லையென முடிவெடுத்துவிட்டேன். எனது வங்கி அட்வைஸர் என்னை மில்லியனராக்கா விட்டால் எனக்கிருக்கும் கடைசி நம்பிக்கை இவர்கள்தான். காசிக்கு எப்படியெனினும் அவர்கள் அனுப்பிவிடுவார்கள். எனது காதலிகளில் ஒருவர் இப்படித்தான் தன் முன்னாள்  துணையை -அவர் விரும்புகின்றார் என்பதற்காய் தன் சொந்தச் செலவில்- தொலைதூரத்திலிருக்கும் புனித தலமொன்றுக்கு அனுப்பிவைத்தவர். இப்போது இதை இங்கே எழுதினால் அவர் கோபிப்பார். ஆனால் மில்லியனராகும் கனவுக்காய் இப்படிச் சில அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும்.

நானும் ஒருநாள் காசிக்குப் போவேன். வாரணாசி என்றும் பனாரஸ் (சேலை அல்ல) என்றும் விதந்தேந்தப்பட்ட அந்நகரின் படிக்கட்டுக்களில் இருந்து இதை இப்போது வாசிக்கும் உங்களை அப்போதும் நினைத்துக் கொள்வேன். அதற்காய் காசிக்குப் போய்த் திரும்பி வரமாட்டேன் என்றெல்லாம் அதீதமாய் நீங்கள் கற்பனை செய்யக்கூடாது. கே.ஆர்.மீராவின் 'கபரி'ல் வருகின்ற யோகீஸ்வரன் மாமா போல, நான் திரும்பி வரும்போது இரண்டு பெண்களையாவது அங்கிருந்து அழைத்து வருவேன். அப்படியில்லாதுவிடின் நான் காசிக்குப் போனதற்கே அர்த்தமில்லாது போய்விடும்.

*************

 

 ஓவியம் : Chamila Gamage

( Jan 05, 2024)

0 comments: