1.
விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் பற்றி நிறைய அறிந்திருக்கின்றேன். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது கோயிலையல்ல, யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது ஒருநாள் குறுகிய பயணமாக இருந்ததால் நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோது எந்தக் உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஏற்படவில்லை. அது நிறுவனப்பட்டதால் ரமணருக்கு நிகழ்ந்தது போல, ராம்சுரத்குமாருக்கும் நிகழ்ந்த சோகம் என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத் தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங் கொடுக்கக் கூடியது என்று 'அமரகாவியம்' பற்றி 2020களில் எழுதியுள்ளேன் .
இப்போது யோகி ராம்சுரத்குமார் பற்றிய நல்லதொரு அறிமுகத்தை முரளி அவரது 'சோக்கரட்டீஸ்' தளத்தில் தந்திருப்பதைப் பார்த்தேன். முரளி குறிப்பிடுவதைப் போல காஞ்சி காமகோடி விசிறி சாமியாரிடம் 'உங்கள் கோத்திரம் என்ன?' என்று கேட்டதும் அதற்கு விசிறி சாமியார் நகைச்சுவையாக ஒரு பதில் அளித்ததும் 'அமரபீடம்' நூலிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இருந்த விசிறி சாமியார் பின்னாட்களில் நிறுவனப்பட்டதால் (அது ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட, இல்லாவிட்டால் ஜே.கிருஷ்ணமூர்த்தி, நாராயணகுரு மாதிரி தமது பீடங்களைத் தாமே தயவு தாட்சண்யமில்லாது அவர்கள் வாழும் காலத்திலோ அல்லது தம் வாழ்நாளோடோ நிர்மூலமாக்கும் அதிதிடமும் வேண்டியிருக்கும்) இதே காஞ்சிபீடமே அவரது இறுதிக்கிரியைகளில் உள்நுழைந்து கொண்டது என்பதும் முரண்நகையானது.
என்றாலும் விசிறி சாமியாருடனான அந்தரங்கமான உரையாடல்கள் இன்றும் எனக்குள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றது.
2
.
Sudani from Nigeria, Argentina Fans Kaattoorkadavu ஆகிய மலையாளத் திரைப்படங்கள் கால்பந்தாட்ட வீரர்கள், இரசிகர்களைப் பின்னணியாகக் கொண்டவை என்றால், Sesham Mike-il Fathima ஒரு கால்பந்தாட்ட இரசிகை எப்படி ஒரு நேரலை கால்பந்தாட்ட வர்ணனையாளராக மாறுகின்றார் என்பதைப் பற்றியது. மலபுரத்தில், orthodox முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எவ்வாறு ஆண்களுக்கே மட்டுமே உரித்துடையதென்கின்ற நேரலை வர்ணணையாளர்கள் பட்டியலில் முதல் மலையாளப் பெண்ணாக இடம்பிடிக்கின்றார் என்பதை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கின்றார்கள்.
இதில் நடித்த அனைத்துப் பாத்திரங்களும் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கின்றனர். அதிலும் கல்யாணியின் அந்தத் துடிப்பும், கொண்டாட்டமும் கால்பந்தாட்ட இரசிகராக இல்லாதவர்களைக் கூட அவ்வளவு வசீகரிக்கும். இரசிகர்களையோ/வாசகர்களையோ தன்னோடு கூட அழைத்துச் செல்லாத எந்தப் படைப்பும் அவ்வளவு பரவலாகச் சென்று சேர்வதில்லை. அந்த magic மட்டும் நிகழ்ந்துவிட்டால் எந்தப் படைப்பும் தன் உயரத்தை அடைந்து ஒளிரும் நட்சத்திரமாகிவிடும். அந்த 'அதிசயம்' இங்கே நிகழ்ந்திருக்கின்றது.
3.
விருதுகளில் மீது தனிப்பட்டு எனக்கு அவ்வளவு உவப்பில்லாதபோதும், என் முன்னோடிகளை விருதுகளைத் தவிர அவர்களை மதிப்பளிப்பதற்கு வேறெந்த வழியும் இப்போதைக்கு தமிழ்ச்சூழலில் இல்லையென்கின்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆகவேதான் அவ்வப்போது இங்கிருக்கும் 'இயல் விருது', 'விளக்கு விருது' படைப்பாளிகளுக்கு அளிக்கும்போது ரமேஷ் பிரேதன் போன்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கின்றேன்/விரும்பியிருக்கின்றேன்.
இப்போது ரமேஷ் பிரேதனுக்கு 'பிரபஞ்சன் விருது' வழங்கப்படுவது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது. அதுவும் ரமேஷ் போன்றவர்கள் தங்கள் கவிதைக்குள்ளும், புனைவுகளுக்குள்ளும் கொண்டு வந்த, அவர்கள் மதிக்கும் அதே பிரபஞ்சனின் பெயரால் இந்த விருது வழங்கப்படுவது ரமேஷின் எழுத்துக்களை இன்னும் ஒருபடி மேலே சென்று மதிப்பளிப்பதைப் போன்றது.
ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துகள்.
***********
(மார்கழி, 2023/ தை, 2024)
(புகைப்படங்கள்: நன்றி முகநூல் )
0 comments:
Post a Comment