கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹென்றி மில்லர் என்னும் எதிர்க்கலாசாரவாதி - 03

Thursday, March 14, 2024

 3.

‘இளமையில் இருக்கும்போது தத்தளிப்புக்களுடனும், பதற்றங்களுடனும் எல்லாவற்றோடும் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருப்போம். மத்திய வயதுக்கு வந்தவுடன் எதற்காக ஓடிக்கொண்டிருக்கும் என்கின்ற கேள்விகள் மனதில் எழும். வயது முதிர்கையில் இவை எல்லாமே எவ்வளவு முட்டாள்தனமாவை என்பது விளங்கியிருக்கும். அப்போது மரணம் அல்லது மரணத்திற்குப் பிறகு எப்படி இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. நான் மறுபிறப்பை நம்புகின்றேன். அது உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை நம்புகின்றேன்' என்று ஹென்றி மில்லர் கூறுகின்றார்.

பசுபிக் கடற்கரையோரம் ஒரு வீடற்றவனாக அலைந்தபோது எனக்கு இந்த நகரின் அழகு தெரியவில்லை. ஒரளவு வசதிகள் வந்தபின் இது அமைந்திருக்கும் இயற்கையின் பேரழகு புரிந்தது என்று கூறிய ஹென்றி கலிபோர்ணியாவில் Big Sur இல் காலமாகும்வரை வாழ்ந்திருக்கின்றார். இதே பெயரில் ஹென்றியினால் பாதிக்கப்பட்ட, பீட் எழுத்தாளரான ஜாக் கீவ்ரோக் ஒரு நாவலை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹெர்மன் ஹெஸ்ஸேயைப் போல இயற்கையாலும், புத்தரினாலும் அதிகம் ஈர்க்கப்பட்ட ஹென்றி மில்லர் ஹெஸ்ஸேயைப் போல ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுடையவராக இருந்திருக்கின்றார்.

தன்னில் உள்ள கெட்டவனை நல்லவனாக்கும் மனோநிலை ஓவியங்களை வரையும்போது இருக்கின்றது என்கின்றார் ஹென்றி. இதையே ஹென்றி மில்லரின் ஆவணப்படத்தில், நிஜத்தில் நல்லவராகத் தோன்றமளிக்கும் நீங்கள் எப்படி மிக மோசமான பாத்திரமாக உங்களை புனைவுகளில் முன்வைத்தீர்கள் எனக் கேட்கும்போது, நான் புனைவுகளில் எனக்குள் இருக்கும் விலங்கு நடத்தைகளையே முன்வைத்தேன். எந்தளவுக்கு மோசமாக என்னை முன்வைக்க முடியுமோ அதை முன்வைக்கும்போது எனக்கு அதில் திருப்தி இருந்தது என்று ஹென்றி கூறுகின்றார்.

பெண்ணிய அலை 60-70களில் அமெரிக்காவில் எழுச்சி பெற்றபோது, ஹென்றி மில்லரின் நாவல்களும், டி.எச்.லோரன்ஸின் எழுத்துக்களைப் போல பேசு பொருளாகின. பெண்களை மோசமாகவும், பாலியல் ரீதியில் கீழானவர்களாகவும் ஹென்றி, (எனக்குப் பிடித்தமான ப்யூகோவ்ஸ்கி உட்பட) பலர் எழுதியிருக்கின்றனர். அப்போதும் பெண்ணியவாதிகளில் ஒரு பகுதி, ஹென்றி மோசமாகப் பெண்களைச் சித்திரித்தாலும் அதில் நேர்மையும்,வெளிப்படைத் தன்மையும் இருக்கின்றது. இது வாழ்விலே நாம் சந்திக்கும் எத்தனையோ ஆணாதிக்கவாதிகளை விடப் பரவாயில்லை. ஒருவகையில் இது இன்னொரு உருமாற்றத்திற்கு ( transformation) வழிவகுக்கும் எனச் சொல்லியிருக்கின்றனர்.

இது பெண்ணியம் சார்ந்து மட்டுமில்லை, அரசியல், கலை பேசப்படும் எல்லா வெளிகளுக்கும் பொருந்தக்கூடியதே. அப்படி நம்மை நாம் திறக்கையில் அது எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாம் ஒரு அசலான நல்ல மாற்றத்தை விரும்புகின்றோம் என்றால், நம்மை இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியே இருக்கின்றது. அந்தவகையில் ஹென்றி மில்லர் தன் அசல்தனத்தை (அவரின் வார்த்தைகளில் தனக்குள் இருக்கும் மிருக நடத்தைகளை) முன்வைத்திருக்கின்றார். அப்படி ஹென்றி வெளிப்படையாக இருந்ததால்தானோ என்னவோ அவரது வாழ்க்கையில் கடைசி எல்லைவரை பெண்கள் ஹென்றியைப் பின் தொடர்ந்து இடைவிடாது வந்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

‘நான் சாதாரண மனிதர்கள் என்று சொல்லப்படுவர்களிடையே இருக்க விரும்புகின்றேன். ஒரு நகரத்து மனிதனாக ப்ராக்ளினில் பிறந்து  பாரிஸில் பத்து வருடங்கள் கழித்தவன். பெரும்பாலும் விவசாயமும், எளிய வேலைகளையும் செய்தவர்களோடு பின்னர் நான் கலிபோர்ணியாவின் புறநகர்ப்பகுதியில் வாழ வந்தபோது இச்சூழல் எனக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் கொஞ்சக்காலத்திலே இவர்களே அருமையான மனிதர்கள் என்பதைக் கண்டறிந்தேன். இவர்கள் சாதாரண மனிதர்கள் எனச் சொல்லப்பட்டாலும் அசாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும்/கதைகளையும் கொண்டிருக்கின்றனர். இவர்களோடு இருப்பதில் நான் ஒருபோதும் அலுப்படைவதில்லை’ என்று ஹென்றி தன் Bel Sur வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஹென்றி இந்நகருக்கு வந்து வாழத் தொடங்கியபின், அவரைத் தேடி வாசகர்களும், பிரபலமானவர்களும் வரத் தொடங்கியபின் அவரின் வீடிருந்த அமைவிடம் இன்னும் கவனத்துக்குரியதாகியிருக்கின்றது.

ஹெ
ன்றி தனது வாழ்வில் மூன்று முக்கியமானவர்களை எப்போதும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார். அதில் ஒருவர் எழுத்தாளரான Lawrence Durrell. அவரோடுதான் ஹென்றி கிரேக்கத்திற்கு பயணிக்கின்றார். ஐரோப்பாவில் இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கி, பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்ப கையில் காசில்லாமலும், தற்கொலை எண்ணத்தோடும் இருந்த தன்னைக் காப்பாற்றியவர் லோரண்ஸ் என்கின்றார். மற்ற முக்கியமானவர் அனாஸ். ஹென்றியின் எழுத்தின் முக்கியமான காலத்தில் அருகில் ஒரு காதலியாகவும், பின்னர் ஒரு நீண்டகாலத் தோழியாகவும் இருந்தவர் அனாஸ். ஹென்றி ஒரு ஆவணப்படத்தில் அனாஸிடோடு பேசும்போது, 'நீங்கள் நான் எழுதிய நாவல்களைத் திருத்தி பக்கங்களைக் குறைக்க வேண்டும் என்று அடிக்கடி சண்டை பிடிப்பீர்கள். அப்போது அந்த வார்த்தைகளை கேட்டு நடந்திருந்தால் நான் சிறிய புத்தகங்களாக அவற்றையெல்லாம் எழுதியிருப்பேன்' என்று தன் எழுத்துக்களை மீளச் சென்று பார்க்கவும் செய்கின்றார் ஹென்றி.

ஹென்றியின் வாழ்க்கை ஒருவகையில் நாளாந்த நிகழ்வுகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது போன்று தோன்றும். நியூயோர்க்கில் 'வெஸ்டர்ன் யூனியன்'இல் வேலையை விட்டு விலகுவதிலிருந்து அவர் எந்தப் பணியையும் பிறகு செய்யவில்லை; முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டிருந்தார். அவரது வேலையற்ற வாழ்க்கை தொடக்ககாலத்தில் அவரது நண்பர்களாலும், பின்னர் அவர் எழுதிய நூல்களின் ராயலடியாலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றது.

ஒருவகையில் ஹென்றியின் முதலாவது நாவலான Tropic of Cancer கவனிக்கப்படாது விட்டிருந்தால் ஹென்றி என்னவாக மாறியிருப்பார் என்பது கேள்விக்குரியது. அவர் வசதியற்றவராக,  வீடற்றவராக தெருக்களில் அலைந்து திரிபவராக இருந்திருந்தால் கூட,  அப்போதும் ஒரு எழுத்தாளராக மட்டுமே இருக்க முடியும் என்பது ஹென்றிக்கு நன்கு தெரிந்திருக்கும்.

அந்த வேட்கைதான் ஹென்றியை புறச்சூழல்களின் வேதனைகளைத் தாண்டி எழுத வைத்திருந்தது. எழுத்து மீதான் நேசிப்புத்தான் ஹென்றியை அணைந்து விடாத தீயாக வாழ்க்கையை நேசிக்கவும் வைத்திருக்கின்றது. அந்தத் தீவிரத்திலும் அர்ப்பணிப்பிலும் முகிழ்ந்த ஹென்றியின் எழுத்துக்களை நாம் இன்றும் பேசிக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை இந்தக் கணமே முக்கியமே தவிர, தன் எழுத்துக்கள் தன் இறப்பின் பின் என்னவாகும் என்பதைப் பற்றி தான் அதிகம் கவலைப்படுவதில்லை என்று சொன்னவரும் ஹென்றிதான்.

***************


(நன்றி: 'காலம்' - இதழ்/60)


0 comments: