கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தியானமும், பயணங்களும், நூல்களும்...!

Saturday, March 09, 2024

 

சில நாட்களுக்கு முன் தியானம் செய்வதற்கு அமர்ந்திருந்தபோது ஒரு தெளிவான காட்சியொன்று ஓடியது. தியானத்தில் இருக்கும்போது நமது கடந்தகால Traumaக‌ள் மேலே மிதந்தபடி வரத் தொடங்கும் எனச் சொல்வார்கள். முக்கியமாக குழந்தமைக்கால‌ மனவடுக்கள் நமக்கு அவ்வளவு தெரிவதில்லை. நாம் நமது மனவடுக்களை மட்டுமல்ல, நமது பெற்றோர், அவர்களின் பெற்றோர், அதற்கு முன்னிருந்த நம் மூதாதையரின் மனவடுக்களையும் தாங்கிக் கொண்டிருக்கலாமென ஸென் வழிப் பெளத்தம் சொல்கின்றது.

எனக்கு அன்று வந்த காட்சியானது, ஈழத்தில் எங்கள் வீட்டை விட்டு முற்றுமுழுதாக யுத்தத்தின் நிமித்தம் வெளியேறிச் சென்ற கடந்தகாலம். அன்றைய நாளில் கோரமான எறிகணைத் தாக்குதல்களும், துப்பாக்கிச் சூட்டுக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. இராணுவம் முன்னேறி வரத் தொடங்கியதால் துப்பாக்கிச் சன்னங்கள் கிட்டவாக நெருங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் சைக்கிளில் ஏற்றிச் செல்லக் கூடிய சில பொருட்களைக் (ஆடைகளை) கட்டிவிட்டு இராணுவம் சிலவேளைகளில் திரும்பிப் பின்வாங்கிச் சென்றுவிடுவார்கள் எனக் காத்திருந்தோம்.. பக்கத்து வீட்டு வைக்கல்போரில் ஷெல்லொன்று விழுந்து அது எரியத் தொடங்கியபோது,  என்னையும் சகோதரியையும் வீட்டை விட்டுத் தப்பியோட எனது பெற்றோர் சொன்னார்கள்.

சைக்கிள் சீட்டில் ஏறி அமர்ந்தாலே துப்பாக்கிச் சன்னங்கள் தலையைச் சீவிவிடுமோ என்றவளவுக்கு துப்பாக்கித் தோட்டாக்கள் மேலே பறந்தபடி இருந்தன. எனவே சைக்கிளை மெல்ல மெல்ல‌ உருட்டியபடி தலையை எவ்வளவுக் குனியமுடியுமோ அவ்வளவுக்குக் குனிந்தபடி சென்றோம். ஒரு 200 மீட்டர் பதுங்கிச் சென்று பெரும் வீதியில் ஏறியபோது எதிரே சில போராளிகள் கைகளில் துப்பாக்கியும், கால்களில் செருப்பும் இல்லாது இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்க வந்துகொண்டிருந்தனர்.

இந்தக் காட்சியை  -அதாவது அப்படிச் சந்தித்த போராளிகளை- எனது மனம் புறவயமாகவே இதுவரை நினைவூட்டுவதுண்டு. ஆனால் இம்முறை தியானத்தின்போது நானே அந்தப் போராளியாக மாறியது போல ஒரு உணர்வுநிலை ஏற்பட்டது.  இராணுவத்தை நேரடியாகச் சந்திக்கப் போகும் போராளியின் உள்மனதினுள் என்னவிதமான உணர்நிலைகள் ஏற்பட்டிருக்குமென நானறியாமலே உணரத் தொடங்கினேன். அது சற்று வியப்பாகவும் திகைப்பாகவும் தியானத்தில் இருந்து வெளியே வந்தபோது தோன்றியது.


சென்ற வருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போக முன்னரே கே.ஆர்.மீராவின் 'கபர்' வாசித்திருந்தேன்.  மீராவின் கதைசொல்லும் முறை பிடித்துப் போனதால், மீராவின் அனைத்துப் புதிய நூல்களையும் ('ஆராச்சார்' தவிர்த்து) 'எதிர்' பதிப்பகத்தில் வாங்கினேன். அதன் பின்னர் சில மாதங்களாக இந்தியாவிலும், இலங்கையிலும் பயணித்துக் கொண்டிருந்தபோது அவற்றையெல்லாம் வாசித்து முடித்திருந்தேன். இடையில் கொச்சினில் ஒரு புத்தகக் கடைக்குப் போனபோது மீராவின் ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்து அவற்றைச் சில பக்கங்கள் தட்டி வாசித்தபோது அந்த மொழிபெயர்ப்பு அவ்வளவாக ஈர்க்கவில்லை. நினைவுக்காய் கமலாதாஸை மட்டும் அங்கே வாங்கிக் கொண்டு வந்திருந்தேன்.

வாசிப்பிலோ, பயணங்களிலோ நாம் இதுவரை அறியாத பக்கங்களையோ/இடங்களையோ (கற்பனை செய்யாதவைகள்) அனுபவிக்கும்போது வருகின்ற புத்துணர்ச்சிக்கு ஈடிணை இருப்பதில்லை. குமரகத்திலிருந்து இடுக்கிக்கு அது எங்கே இருக்கின்றது, எவ்வளவு கரடுமுரடான மலைப்பாதையாக இருக்கும் என்பதே அறியாமல்தான் இணையத்தில் பதிவு செய்து சென்றிருக்கின்றேன். அது ஒரு நெடும்பயணம். பதிவு செய்த இடமோ மலையுச்சியில் இறுதி வீடாக இருந்தது. தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தால், கதவைத் திறந்து விட்டால் அப்படியே மலையிலிருந்து கீழே குதிக்க வேண்டியதுதான். ஆனால் அந்த அனுபவம் புதிதாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. ஒரு நாள் தங்கலெனத் தீர்மானித்ததை மூன்று நாட்களுக்கு மேலாக நீட்டிக்கவும் அந்தப் பயணம் செய்தது. இடையில் மலைக்குளிரால், பல் வலி கூடி, மலையடிவாரம் இறங்கிப் போகவேண்டி ஏற்பட்டபோதும், இப்போதும் நினைவில் அந்த புத்துணர்வான மலைத் தங்கல் அனுபவவே மதுரமாக இனிக்கின்றது.

இந்த அழகிய இடத்தைப் போலவே கே.ஆர்.மீராவையும் நான் தற்செயலாகக்  கண்டுபிடித்தேன். கபரோடு அவரின் மற்ற நூல்களையும் வாசித்தபோது அவர் ஓர் அற்புதமான‌ படைப்பாளியாக எனக்குள் உருமாறினார். தமிழில் பெரும் பக்கங்களில் எழுதுவதே நாவல்களென வலிந்து நம்ப வைக்கப்படுகின்ற‌ சூழலில், மலையாளத்தில் மீராவும், ஸ்பானிஷில் அலெஜெந்திரோ ஸாம்பிராவும் (அவரையும் தற்செயலாகவே கண்டுபிடித்தேன்) எப்படி கொஞ்சப் பக்கங்களிலே நம்மைப் பாதிக்கும் நாவல்களை எழுதுகின்றார்கள் எனச் சொல்வதற்கு நம் முன்னே இருக்கின்றார்கள் எனபதை நினைத்து ஆறுதலடைய முடிந்தது. மீராவின் ஆங்கில நாவல்கள் மொழியில் மட்டுமிலை, அட்டை/வடிவமைப்புக்களும் ஏதோ பதின்மர்களுக்கான ஆங்கிலப் புத்தகங்களை எனக்கு நினைவுபடுத்தியிருந்தன‌. அந்த வகையில் 'எதிர்' வடிவமைத்த நூல்கள் மிகச் சிறப்பானவை. 

 

மீராவின் சிறுகதைகளை ஏற்கனவே (வம்சி) ஷைலஜாவும், 'அந்த மரத்தை மறந்தேன் மறந்தேன்' நாவலை சிற்பியும்  தமிழாக்கம் செய்திருக்கின்றன‌ர். நான் வாசித்த மிகுதி அனைத்து மீராவின் ஆக்கங்களும் மோ.செந்தில்குமார் செய்தவை. செந்தில்குமாரிடம் தனிப்பட்ட உரையாடலில் அவர் எப்படி இந்த மொழியாக்கங்களைச் செய்கின்றார் என வினாவியபோது,  நேரடியாக மலையாளத்திலிருந்தே செய்கின்றார் என்பதை அவர் சொன்னார். செந்தில்குமாரின் தமிழாக்கங்களை வாசிக்கும்போது அந்த நேரடி மலையாளம் -  தமிழ் மொழியாக்கம் எவ்வளவு அருமையாக இருக்கின்றதென்று உணரமுடியும். எனது வெளிவரவுள்ள புதிய அ‍புனைவுக் கட்டுரைத் தொகுப்பில், இந்தியாவின் ஒரேயொரு படைப்பாளியை மட்டுமே சேர்த்திருக்கின்றேன். அது மீரா மட்டுமே!

நண்பரொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம் பற்றிப் பேச்சு வந்தது. அதில் நமது ரஹ்மானின் கிளாஸிக் பாடல்கள் இருக்கின்றன, ஆனால் படம் உவப்பானதில்லை என்றேன். ஏன் எனக் கேட்டபோது, 'அது இந்திய இராணுவத்தின் பெருமிதத்தை மம்மூட்டி மூலம் திணிப்பதால்' என்றேன். இப்படித்தான் 'வாராணம் ஆயிரம்', 'காற்று வெளியிடை' போன்றவற்றிலும் அழகான காதல்கதைகளுக்குத் தேவையில்லாத தேசியப் பெருமிதங்களைச் சேர்த்ததால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று எனது உரையாடல் நீண்டது. அப்படி நல்ல இராணுவமோ/பொலிஸோ இருக்கமுடியாதோ என நண்பர் கேட்டார். இருக்கலாம், ஆனால் இவர்கள் முன்வைப்பது விமர்சனமில்லாத அதிகாரத்தரப்பான இராணுவ/பொலிஸ்களையே என்பதுதான் சிக்கல் என்றேன். 'ஓ...இப்போது எனக்கு ஏன் மீராவின் "யூதாஸின் நற்செய்தி" உனக்கு அவ்வளவு பிடித்திருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது' என்றார். அவரும் மீராவின் பெரும்பாலான நாவல்களை ஏற்கனவே வாசித்திருந்தார்.

இந்நாவலில்  நக்சல்பாரி 'யூதாஸ்' மீது காதல் கொள்கின்ற பெண்ணின் தகப்பன் ஒரு கொடூரமான பொலிஸ் சித்திரவதைக்கார‌ர். ஆனால் நாவலின் சிறப்பு என்னவென்றால் நம்மால் நக்சல்பாரி யூதாஸைப் போல, அந்தக் காதலியின் தகப்பனையும் அவரின் இயல்பில் வைத்து விளங்கிக் கொள்ள முடிகின்றது என்பதாகும். அதைத்தான் உண்மையான கலை செய்ய வேண்டும். மீராவின் 'யுதாஸின் நற்செய்தி'யைப் போல வெவ்வேறு எதிரெதிர் தரப்புக்களைப் புரிந்துகொள்ளும் முயற்சி அடிநாதமாய் இருப்பதை அருந்ததி ரோயின் 'The Ministry of Utmost Happiness' வாசிக்கும்போதும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.



நான் தியானத்தின் மூலம் தற்செயலாக உள்நுழைந்து உணரமுடிந்த போராளியைப் போல, எதிரே எதிரியாகக் கட்டமைக்கப்பட்டிருந்த இராணுவத்துக்கும் ஒர் உளநிலை இருந்திருக்கும். நமக்குத் திணிக்கப்பட்ட கருத்துக்களின் மூலமும், இருக்கும் சூழலுக்கும் ஏற்பவும் அவன் எதிர்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றானே தவிர, இன்னும் ஆழப் போய்ப் பார்த்தால் இருவருக்கும் வாழ்வதற்கான விருப்பும், ஏதோ ஒரு பெரும் நம்பிக்கைக்காய் உயிரை விடும் துணிவும் இருந்திருக்கவே செய்யும்.

அதையேதான் என் ஆசிரியரான தாய் ஓரிடத்தில், 'என்னை எனது அசல் பெயர்களால் மட்டுமே அழையுங்கள்; நானே வியட்னாமிய அகதிப் படகில் தப்பியோடி வந்த அந்தப் பதின்மச் சிறுமி, அதே நானே அப்படி உயிருக்காகத் தப்பியோடி வந்த சிறுமியைக் கடலில் வன்புணர்ந்து விட்டு கடலில் எறிந்த கடற்கொளைக்காரனும்' என்கின்றார். மேலும் 'நானே உகண்டாவில் பட்டினியால் மெலிந்து சாகக் கிடக்கின்ற குழந்தையும், அதே நானே உகண்டாவின் உள்நாட்டு யுத்தத்திற்காய் ஆயுதங்களை விற்கின்ற வியாபாரியும்' என்கின்றார்.

தியானத்தில் என்னை தன்னாக உணரச்செய்த அந்தப் போராளி(கள்) இன்று உயிரோடு இருக்கின்றாரோ, இல்லையோ நானறியேன். ஆனால் அவர் எனக்குச் சொல்ல விரும்பியது தாயின் ஒரு கவிதையில் வருகின்ற இந்தப் பகுதியாக இருக்கவும் கூடும்.

"Please call me by my true names,
so I can hear all my cries and laughter at once,
so I can see that my joy and pain are one."

***************

ஓவியம்: சின்மயா
(ஜனவரி 16 , 2024)

0 comments: