கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

விழிகளில் உறைந்து போகும் காலம்..!

Wednesday, March 20, 2024


னிக்காலம் இன்னமும்  முடிவடையவில்லை. ஆனாலும் வசந்தகாலத்துப் பறவைகள் வந்து பாடத் தொடங்கிவிட்டன. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் புதுத்துளிர்கள் மழைத்துளிகள் போல அரும்புகின்றன. சாம்பல் வானத்தைப் போர்த்தியபடி சுணங்கிக் கிடந்த‌ சூரியன் கூட பிரகாசமாக எட்டிப் பார்க்கின்றது.  இளமை கடந்தபின் காதல் ஓர் ஆம்பலாய் நீருக்குள் மிதப்பது போல, சூரியனின் வெளிச்சம் இருக்கின்றதே தவிர வெம்மையின் துளிக் கதகதப்பைத்தானும் உணர  முடியவில்லை.

 

அந்த விகாரை இந்தத் தெருவில் இருக்கின்றது என்று அறிந்தபோதும், ஒவ்வொருமுறை தேடும்போதும் அது எங்கோ தன்னை ஒளித்து வைக்கின்றதோ என எண்ணுமளவுக்கு என் கண்பார்வையிலிருந்து அது காணாமற் போவதுண்டு. இந்த விகாரை சில வருடங்களுக்கு முன் தீயுக்கு இரையாகியதும் அறிந்திருக்கின்றேன். அப்போது ஈழத்தில் இறுதி யுத்தத்தின் உச்சக்கட்டம். யாரோ, உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள்தான் இந்த விகாரையைக் கோபத்தில் எரித்தார்கள் என்கின்ற ஓர் கதையும் அன்றைய காலங்களில் உலா வந்திருந்தது. அனைத்து மானுடச் சிறுமைகளுக்கு அப்பாலும் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கின்ற புத்தரால் முடியும். இல்லாவிட்டால் அவர் உதித்த நாட்டிலே முற்றாக 'மறக்கப்பட்ட'போதிலும், 2500 ஆண்டுகள் கடந்த‌ பின்னும் நாம் ஒவ்வொருவரும் வியந்து, நெருங்கிப் பார்க்கப் பிரியப்படுகின்ற ஒருவராக புத்தர் எப்போதோ இல்லாது போயிருப்பார்

 

உங்களுக்கான சரியான காலம் அமையும்போது, உங்களுக்குரிய ஆசிரியர்கள் தன்னியல்பிலே வந்து வழிகாட்டுவார்கள் என்பது ஸென்னில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது. அதுபோலவே இம்முறை சரியான நேரம் அமைந்து எனக்கு அந்த விகாரை தன்னிருப்பைக் காட்டியது. முதல் நாள் பூரணை. புத்தருக்குப் பிரியமான பெளர்ணமி நாள். நேற்றைய நிலவொளி வீசிய இரவில் காரை தெருவின் இடையில் நிறுத்தி நிலவை இரசித்திருந்தேன். இவ்வாறான ஒரு பூரணையில் புத்தர் ஞானமடைந்தார் என்றால், அன்று அவ்விரவும், நிலவும் என்ன மாதிரியாக புத்தருக்குள் உருமாற்றமடைந்திருக்கும் என யோசனை எழுந்தது. அவர் அதுவரை அலைந்து தேடிக் கொண்டிருந்த எல்லாக் கேள்விகளும் சட்டென்று உதிர்ந்து போய் நிசப்தத்தில் உறைந்து போயிருக்குமா? நம்மைப் போன்ற மனிதர்கட்கு அகப்படாத‌ எந்த வாழ்க்கை அதற்குப் பிறகு அவருக்குள் தோன்றியிருக்கும்?

 

விகாரைக்கு  வந்த எல்லோரும் வெள்ளையாடையுடன் இருந்தார்கள். பூரணை வரும்  நாட்களில் விரதமிருந்து மடாலயம் வந்து பிரார்த்தித்த பின் உணவுண்டு நோன்பு துறப்பார்கள். சடங்குகளில் அவ்வளவு நம்பிக்கை எனக்கு இருப்பதில்லை. அதேபோன்று அவரவர் நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்காதவரை அவற்றை மதித்தலும் மானுட மேன்மையின் ஒரு சிறுதுளி என்பேன். புத்தர் பிரமாண்டமாய் விரிந்திருந்த பிரார்த்தனை மண்டபத்தில் ஒரு பிக்கு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். சுற்றி இருந்தும், நின்றும் அவரின் உரையை பலர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த 'உறைந்த நிலை'யிலும் ஒரு வயதான் பெண்மணி தன் தலையைச் சீப்பால் பின்னால் இருந்து வாரிக் கொண்டிருந்தார். நான் இந்தக் கணத்தில் அவ்வளவு பிரக்ஞையுடன் இருக்கின்றேன் என்று புத்தருக்கே சவால்விடும் ஒருவராகத்தான் அவர்  நிச்சயம் இருப்பார். எல்லோரும் பயபக்தியுடன் இருக்க, இவர் மட்டும் விளையாட்டுத்தனமாக புத்தரின் சந்நிதியில் நின்றது எனக்குப் பிடித்திருந்தது.

 

பிரார்த்தனைக் கூடத்தைத் தாண்டி வெளியே வந்து, எங்கேனும் அமைதியாக இருக்க இடம் இருக்கா என்று கேட்டபோது நூலகம் ஒன்று இருக்கின்றது, அங்கிருந்து வாசிக்கலாம், வேண்டுமெனில் தியானம்  கூடச் செய்யலாம் எனச் சொன்னார்கள். வாசிப்பா, தியானமா என்று கேட்டால் வாசிப்பை முதலில் தேர்ந்தெடுப்பவன் நானென்பதால் அங்கிருந்த நூல்களில் எனது ஆசிரியரான தாயின் நூலொன்றை எடுத்து அதில் அமிழத் தொடங்கினேன். தாய் தனது பிரபல்யமான கவிதையில் சொன்ன 'அதே வியட்னாமிய அகதிப் படகையும், அதில் கடற்கொள்ளையரால் வன்புணரப்பட்ட சிறுமி'யையும் இன்னும் விரிவாக அங்கே வாசிக்கத் தொடங்கினேன். அதில் அநியாயமாகக் கொல்லப்பட்ட சிறுமி மட்டுமில்லை, அந்த கடற்கொள்ளைக்காரனும் நாமாகவே இருக்கின்றோம் என்று அறிதலின் ஆழத்துக்கு தாய் அழைத்துச் செல்லத் தொடங்கியிருந்தார்.

 

எவரையும் எதன் பொருட்டு discriminate  செய்யாது இருப்பது குறித்து யோசிக்கத் தொடங்கியபோது  நூலகத்தின் இன்னொருபக்கத்தில் அந்நியமொழி பேச்சுக் கேட்கத் தொடங்கியது. எனக்குத்தான் அந்நியமே தவிர, அது (முன்பிருந்த) எனது நாட்டு மொழி. சட்டென்று இவர்களில் யாரேனும் இராணுவத்தில் இருந்திருப்பார்களா, என்னைப் போன்ற தமிழர்களைக் கொன்றிருப்பார்களா என் யோசனை போக, நான் அச்சூழலுக்கு அந்நியப்பட்டு அந்தரப்படத் தொடங்கினேன். எவ்வளவோ காலத்துக்கு முன் சொந்தநாட்டை விட்டு வந்தபின் ஏன் இப்படி அவர்களைப் பிரித்துப் பார்க்கின்றேன் என்பதும், அத்துடன் எனது ஆசிரியர் அந்தச் சிறுமியையும், கடற்கொள்ளைக்காரனையும் பிரித்துப் பார்க்காது ஒன்றெனப் பார்க்கச் சொல்வதை வாசித்தும் ஏன் இப்படி என் மனம் குழப்பித் தவிர்க்கின்றது என்பதும் புரியாமல் இருந்தது. எல்லாவற்றையும் அவ்வளவு எளிதாகக் கடந்து போக முடியவில்லை. அதனால்தான் புத்தர் பரிநிர்வாணமடைய முன்னர் எல்லாவித 'தீய'சக்திகளும் மனதில் ஒவ்வொன்றாக வந்து சேரச் சேர விடாது போராடினார் என்றும் சொல்கின்றார்கள்.

 

அங்கே நூல்களை இரவலாகப் பெற்று வரலாம் என்று சொல்ல,  நான் வாசித்த நூலை எடுத்து வெளியே வந்திருந்தேன். வெளியே ஒரு புத்தர் எனக்காக காத்திருந்தார். அவரோடு பனிக்காலத்து வெயிலும் கூடவே துணைக்கு நின்றது. இப்போது மூச்சு சீராகி நிதானமாக வரத் தொடங்கியிருந்த‌து.


புத்தராவதைப் பற்றிப் பிறகு யோசிக்கலாம், என் ஆசிரியரான தாய் அவரின் அகத்தில் வந்தடைந்த ஞானத்தின் ஒரு சிறுதுளியை நான் அனுபவிப்பது என்பது கூட அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. ஆனாலும் இந்த வாழ்க்கை நம்முன்னே ஒரு நதியைப் போல அள்ள அள்ளக் குறையாது எவருக்கும் வேறுபாடு காட்டாது ஓடிக் கொண்டிருக்கின்றது.

 

அதன் சுவையை ஏதோ ஒருவகையில் நான் உணர அன்பே நீயிருகின்றாய்.  மனம் சிலிர்த்து ஆரத்தழுவி உன் விழிகளில் முத்தமிடுகின்றேன். உறைந்து போகின்றது காலம்!

 

***********


(Feb, 2024)


0 comments: