1.
ஹென்றியின் பிரபல்யம் வாய்ந்த முதலாவது நாவலான ‘Tropic of Cancer’ பிரான்ஸில் 1934 இல் வெளிவந்தபோது, அது அமெரிக்காவில் வாசிக்கத் தடை செய்யப்பட்டது. இந்த நாவல் மட்டுமின்றி அவர் அடுத்தடுத்து எழுதிய ‘Black of Spring’,’ Tropic of Capricorn’ போன்றவையும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டன.
ஹென்றி ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். தையல் தொழில் செய்யும் தந்தையின் வருமானத்தையுடைய நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியைக் கொண்ட ஹென்றி கல்லூரி படிப்பைச் சலிப்புடன் இடையில் நிறுத்திவிட்டு பல்வேறு உதிரி வேலைகளைச் செய்கின்றார். எழுத்தாளராகும் கனவு ஹென்றிக்கு இருந்தபோதும் அவரது நூல்கள் எதுவும் அவரது 40 வயதுகள் வரை வெளிவரவில்லை. அதற்குள் அவர் இரண்டு திருமணங்களையும் செய்துவிட்டார்.
ஹென்றிக்கு பாரிஸ் பல அமெரிக்க எழுத்தாளர்களைப் போலப் பிடித்துவிடுகின்றது. அந்தப் பயணம் செய்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு (1930களில்) ஹென்றி தனித்துப் பாரிஸுக்குப் போகின்றார். அப்படிப் போகும் ஹென்றி கிட்டத்தட்ட 10 வருடங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வராது பிரான்ஸிலேயே வாழ்கின்றார். அந்த பத்து வருடங்களே ஹென்றியின் படைப்பாளுமையின் முக்கியமான காலம் எனச் சொல்லலாம். ஹென்றியின் அநேக நாவல்கள் அவரது சொந்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. ஹென்றியின் பெரும்பாலான படைப்புக்களில் அவரது இரண்டாவது மனைவியான ஜூன் வெவ்வேறு புனைபெயர்களில் வருகின்றார். அடுத்த இருபது வருடங்களுக்குப் பின் எழுத வருகிற சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி இதே நிலையில் நின்று தன் சொந்த அனுபவங்களை நாவல்களாக எழுதியது நமக்கு நினைவுக்கு வரலாம்.
ஹென்றி பாரிஸுக்கு வந்தபோதும், அவரிடம் போதிய பணமிருக்கவில்லை. அவர் விடுதிகளில் தங்கி நிற்பதற்காக தனது உடைமைகளை விற்கின்றார். ஒருகட்டத்தில் விடுதிகளில் தங்கமுடியாது பாலங்களுக்கு அடியில் கூட உறங்கி இருக்கின்றார். அப்போதுதான் தற்செயலாக Anaïs Nin என்கின்ற பிரெஞ்சுப் பெண்ணைச் சந்திக்கின்றார். அவர்தான் ஹென்றியின் வாழ்க்கையை மாற்றுகின்றார். அனாஸிஸ் இல்லாதுவிடின் ஹென்றியின் எழுத்துலக வாழ்க்கை இந்தளவுக்குப் பிரபல்யமாக பின்னாட்களில் போயிருக்குமா என்பதும் சந்தேகமே.
அனாஸ்ஸூம் ஒரு எழுத்தாளர். அதுவரை எந்தப் புத்தகமும் பிரசுரிக்காத ஹென்றியைப் புதிய நாவலொன்றை எழுத அவர் உற்சாகப்படுத்துகின்றார். ஹென்றி தனது பிரான்ஸ் வாழ்க்கையையும், எழுத்தாளனாகும் தத்தளிப்புக்களையும், அவரது மனைவியான ஜுன் உள்ளிட்ட பல பெண்களுடனான காதல்/காம வாழ்க்கையையும் கலந்து எழுதியதுதான் ‘Tropic of Cancer’ என்கின்ற அவரது பிரசித்தி பெற்ற முதலாவது நாவல்.
அனாஸ் ஹென்றியின் வறுமையான பாரிஸ் வாழ்க்கைக்கு நிதியுதவி செய்பவராக மட்டுமின்றி, ஹென்றியின் முதல் நாவல் வெளிவருவதற்கும் பணவுதவி செய்கின்றார். அனாஸின் பங்களிப்புடன் வெளிவருகின்ற ‘Tropic of Cancer’ பெரும் வரவேற்பை பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் பெறுகின்றது. அமெரிக்காவில் அதன் காம எழுத்து (Pornography) எனச் சொல்லித் தடை செய்யப்படுகின்றது. ஆனாலும் அமெரிக்காவில் இது இரகசியமாக வாசிக்கப்படுகின்றது. அதன் பின்னரான பத்து வருட பாரிஸ் வாழ்க்கையில், ஹென்றி ஆறுக்கும் மேற்பட்ட நாவல்களை அங்கிருந்து எழுதுகின்றார்.
ஹென்றியும் அவரது மனைவியான ஜூனும் பிரான்ஸில் சில காலம் வாழ்ந்தாலும், திருமணமான அனாஸிற்கும், ஹென்றிக்கும், ஜூனுக்கும் இடையில் இருந்த பாலியல் உறவு என்பது மிகவும் சிக்கலானது. அனாஸ் அன்றைய காலத்தில் (1930களில்) இருபாலுறவுக்காராக ஹென்றியோடும், ஜூனோடும் உறவில் இருந்திருக்கின்றார். சிறுவயதுகளில் இருந்தே ஜேர்னல் எழுதும் அனாஸ் இன் ஜேர்னல் பின்னர் பதிப்பிக்கப்படுகின்றது. தனது கணவர் உள்ளிட்ட எவரும் உயிரும் இல்லாதபோதே இவை பதிக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்த அனாஸின், ஜேர்னல் 1980களில் -இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் காலமான பின்- பதிப்பிக்கப்படுகின்றது.
(இன்னும் வரும்..)
நன்றி: 'காலம்' இதழ் 60
0 comments:
Post a Comment