அண்மையில் இன்னொரு நகருக்கு ஒரு நிகழ்வுக்காகப் பயணித்தபோது தற்செயலாக நண்பரொருவரைச் சந்தித்திருந்தேன். சில வருடங்களுக்கும் முன் அவர் ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்திருந்தார். அவரோடு சமகால புலம்பெயர்/ஈழத்துத் திரைப்பட முயற்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். புலம்பெயர் இலக்கியம் போல, புலம்பெயர் திரைப்பட முயற்சிகளும் தொடக்கத்தில் தந்த நம்பிக்கை போலவன்றி இப்போது உறைந்துபோய் விட்டதன் துயரம் நோக்கி நம் பேச்சு குவிந்தது.
நமது அசலான கதைகளை விட்டு நகர்ந்து, ஒரு 'மேற்கத்தைய' பார்வையாளர்களுக்கு விளங்குவதற்கு திரைப்படங்களை எடுக்கத் தொடங்கியபோது நமது திரைப்படங்கள் ஆட்டங்காணத் தொடங்கிவிட்டது. இது நான் ஒரளவு மதிக்கும் சில நெறியாளர்களின் அண்மைக்கால திரைப்படங்களை முன்வைத்து கிடைத்த அவதானம் எனலாம். இன்னொருபக்கத்தில் எப்போதும் போல புலம்பெயர் தேசங்களிலும்/ஈழத்திலும் தென்னிந்திய திரைப்படங்களை மாதிரியாக வைத்து கதாநாயக விம்பம்/வன்முறை/ஆபாசம் என்றெல்லாம் ஒரு கதம்பமாக அளிக்கின்ற ஒரு வகையினர் இருக்கின்றனர். அவ்வாறு எடுப்பதை மட்டுமே திரைப்படமென உறுதியாக நினைக்கவும் செய்கின்றனர். அவர்களாக வெவ்வேறு திசைகளை பரிட்சித்துப் பார்க்காதவரை அதற்குள்ளேயே தேங்கிவிடுகின்றவர்கள் அவர்கள்.
திரைப்படங்களை எடுக்கும் இன்றைய நம் தலைமுறை தமிழகத் திரைப்படம் சம்பந்தமாக எதைப் பார்க்கின்றதோ தெரியாது, ஆனால் பல நெறியாளர்களின் நேர்காணலைக் கேட்டால்/பார்த்தால், இன்று எல்லாமே தொழில்நுட்பத்தால் சுருங்கிவிட்டதால், நீங்களாகவே குறும்படங்களை எடுத்துக் கற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எல்லா இடங்களிலும் வலியுறுத்துவதைக் கேட்கலாம் . நீங்களாகவே இயக்கி, எடிட் செய்யத் தொடங்க, திரைப்படம் எடுப்பதன் நுட்பங்கள் மெல்ல மெல்லப் புலப்படும் என்று அவர்கள் உற்சாகமூட்டுவதை அவதானிக்கலாம். நல்ல திரைப்படங்களை மட்டுமில்லை, நல்ல கதைகளை வாசிக்கும்போதும் உங்களுக்குள் ஒரு திரைப்படம் ஓடுவதைக் காணலாம்.
இன்றைக்கு ஈழத்திலும்/புலம்பெயர் சூழலிலும் நிறையக் கதைகளை எழுதப்பட்டு இருக்கின்றன. சமகாலத்துக் கதைகளை கதை/திரைக்கதையாக்கி எடுக்கத்தான் நமது ஈகோக்கள் விடாதென்று ஒரு கதைக்காக வைத்துக் கொண்டாலும், காலமாகிவிட்ட நம் முன்னோடிகளின் கதைகள் பல இருக்கின்றன. அதைக் கதையாக்கி பரிசோதனை முயற்சிகளை குறும்படங்களாக எடுத்துப் பார்க்கலாம். அந்த இறந்த ஆத்மாக்கள் நம்மை வந்து ஒருபோதும் பலிவாங்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தாங்கள் இன்னமும் மறக்கப்படவில்லை என்று ஆசிர்வாதங்களை அளிக்கவே செய்வார்கள்.
தொடக்கத்தில் கதை/திரைக்கதை/இயக்கம் என்று எல்லா கீரிடங்களையும் தலைமேல் ஏற்றி பாரம் எல்லாம் சுமக்கத் தேவையில்லை. உண்மையில் இவை எல்லாமே வெவ்வேறு துறைகள் எனச் சொல்லலாம். திரைப்படம் என்பதே கூட்டுழைப்பின் உச்சத்தில் திரண்டு வருகின்றபோது அந்தத்த துறையில் மிகச்சிறந்த உழைப்பை/உதவியைப் பெற்றுக்கொள்வதில் எந்த வெட்கமும் கொள்ளத் தேவையில்லை. மேலும் கதை/திரைக்கதை விவாதங்களில் எழுத்தாளர்களை/திரைப்பட விமர்சகர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நல்லதொரு குழு அப்படி அமைந்துவிட்டால் அது நம்மை அழைத்துச் செல்லும் பயணம் அருமையாக அமைந்துவிடக்கூடும். ஆனால் எல்லாம் திரண்டு வந்தபின் இயக்குநர் என்கின்ற மீகாமனை நம்புவதற்கு முழு அணியையும் தகவமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல திரைப்படங்களை எடுத்தவர்களின் நேர்காணலை/காணொளிகளைப் பார்க்கும்போது அவர்கள் ஒரு துறை நல்லதைக் கொடுத்ததைப் பார்த்தபின், அதைப் போட்டியாக வைத்து தமது துறையிலும் நல்லதைக் கொடுக்கவேண்டும் என்ற இயல்பான 'போட்டி' மனது தங்களுக்கு ஒரு திரைப்படத்துக்குள் அமைந்துவிடுவதைக் கூறுவதை நாம் அவதானித்திருக்கலாம்.
மேலும், கிளிஷேக்களை/ பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிகளைத் தருகின்றோம் என்றெல்லாம் அதிகம் கற்பனை செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏதோ புரட்சி செய்கின்றோம் என்று கதைக்குத் தேவையில்லாத எதையும் திணிக்காதீர்கள். அது சிறுபிள்ளைத்தனமாகப் போய்விடும். இதை விட மிக முக்கியமானது உணர்ச்சிகளோடு அளவுக்கு அதிகமாக விளையாடாதீர்கள். அதைப் போன்ற ஆபாசம் மனித வாழ்வைத் திரைப்படத்தில் கொண்டுவரும்போது இருக்கப் போவதில்லை.
இப்போது இதையெல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால், ஒரு திரைப்படத்தின் கதை என்னவென்று தெரிந்தும் (அதனால்தான் நான் ஒரு திரைப்படம் குறித்து எதையும் கேள்விப்படாமல்/வாசிக்காமல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவேன்), அந்தத் திரைப்படம் அதைத்தாண்டியும் என்னை படம் பார்த்த முழுநேரமும் உள்ளிழுத்தது வைத்திருந்தது. அது உணர்ச்சிகளோடு அதீதமாய் விளையாடமல் கதையை அதன் இயல்போடு முன்வைத்ததால், இரண்டு சந்தர்ப்பங்களில் என்னையறியாமலே விழிகளில் நீர்த் திரையிட்டது. இத்தனைக்கும் இதைவிட ஆபத்தானதும், நீண்டநாட்கள் எடுத்த சிலியில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களையும், தாய்லாந்தில் மாட்டிக்கொண்ட சிறுவர்களையும் காப்பாற்றிய திரைப்படங்களை எல்லாம் பார்த்திருக்கின்றேன்/எழுதியிருக்கின்றேன். ஏன் - ஒரு நாளுக்குள்ளேயே காப்பாற்றப்பட்ட- இந்த ஒரு உயிரியின் கதை நம்மைப் பாதிக்கின்றது என்றால் நாம் அத்திரைப்படத்தில் வரும் நண்பர்களில் ஒருவராக ஆகிவிடுகின்றோம். சாதாரண மனிதர்கள் எல்லாம் எப்படி அசாதாரண மனிதர்களாக ஒரு சம்பவத்தின் மூலம் மாறுகின்றார்கள் என்பதை நுட்பமான திரைக்கதையின் மூலம் இது காட்சிக் கோவைகளாக்கியிருக்கின்றது. அத்துடன் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படச் செய்வதற்கு, இன்னும் எத்தனையோ இங்கே சேர்ப்பதற்கு இடங்கள் இருந்தபோதும், உணர்ச்சிகளோடு விளையாடாமல் அதன் எல்லைகள் தெரிந்து கதையின் கடிவாளத்தை நிறுத்திவைத்திருக்கவும் இத்திரைப்படக்குழுவுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.
சாதாரணமாக எளிய மனிதர்களுக்கு ஒரு பயணத்தின்போது நிகழ்ந்த கதை எனத் தாண்டிச் செல்லக்கூடியதை, கலையின் அத்தனை கூருருணர்வும் ஒன்று சேரும்போது நாமே அந்தக் குகைக்குள் மாட்டிக் கொண்டவனாகவும், காப்பாற்றி விடத் துடிக்கின்ற நண்பனாகவும் ஒரே நேரத்தில் இருக்கின்றோம். இதைத்தான் கலை மானிடர்க்கு அளிக்கின்ற ஆற்றுப்படுத்தலும், அரவணைப்பும், அற்புதமும் என்பேன்.
(Manjummel Boys)