நான் மிருதங்கம் பழகப் போனது, என்னுடைய பன்னிரண்டாவது வயதில் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் இருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் எனது மிருதங்க ஆசிரியர் இருந்தார். மிருதங்கம் பழக ஆசை ஏன் வந்ததென்றால் கோயில்களில் மேளச்சமா பார்த்து மேளத்தின் மீது மோகம் வந்தது. மேளத்தின் உயரம் எல்லாம் நமக்குச் சாத்தியமில்லை என்று மிருதங்கம் பழகலாம் என்று விரும்பினேன். ஆனால் அப்போது எங்கள் குடும்பம் கொஞ்சம் கஷ்டத்துக்குள் இருந்தது.

பாடசாலையில் என் வயதில் பெரும்பாலனோர் சாரணர் (Scouts) வகுப்பில் சேர்ந்தபோது என்னால் சிறுவயதில் இணைய முடியவில்லை. சிறுவர்களாக சாரணரில் சேர்பவர்களை குருளைச் சாரணர்கள்  (Cub Scouts) என்று அழைப்பார்கள். ஏன் குவளைச் சாரணராக என்னால் முடியவில்லை என்றால், என்னிடம் சாரணர் அணிவதற்கான சீருடை வாங்குவதற்கான பணம் இருக்கவில்லை. ஆகவே அப்போது குருளைச் சாரணராக ஆக முடியவில்லை. பிறகு 12/13 வயதில் சாரணராகச் சேர்ந்தபோது எனக்கு பக்கத்து வீட்டு அண்ணாவின் சாரணர் சீருடை  இலவசமாகக் கிடைத்திருந்தது. 
 
 
எனவே இப்படியான நிலையில் மிருதங்கம் பழக ஆசை இருந்தாலும் எங்கள் வீட்டு பொருளாதார வசதி சரிப்படுமா என்று கேள்வி இருந்தது.  எனது ஆசையின் காரணமாக அக்கா 'நீ போய் மிருதங்கம் பழகு' என்று தனது செலவில் அனுப்பி வைத்தார். இந்த மிருதங்கம் பழகலை நீண்டகாலம் அப்பாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தேன். அவருக்குத் தெரிந்தால், இந்த நிலைமையில் மிருதங்கம் ஒரு கேடா என்று கேட்டு என்னை முடக்கியிருப்பார்.

மிருதங்கம் பழகுவது என்று தீர்மானித்தாயிற்று. என் வயதொத்த ஒருவன் மிருதங்கம் பழகுகின்றான் என்பதையும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் ஆசிரியர்தான் 6 கிலோமீற்றர் தொலைவில் சுன்னாகத்தில் இருந்தார். அவரிடம் எப்படிப் போவது என்றும் தெரியவில்லை. அப்போதுதான் எங்கள் பாடசாலையில் இருந்த அண்ணா ஒருவர் எனக்கு உதவ முன்வந்தார்.

அவரும் அப்போது அந்த ஆசிரியரிடம் மிருதங்கம் பழகிக் கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு அடுத்த கிராமமான அளவெட்டியில் இருந்தார். ஒருநாள் அவர் என்னை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்,  தன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் மிருதங்க ஆசிரியரிடம் சேர்த்துவிட்டார்.

Uploaded Image

நான் பிறகு வீட்டில் சைக்கிள் இருக்கும்போது சைக்கிளிலும் இல்லாதவேளைகளில் அந்தத் தூரத்தை நடந்தும் கடந்திருக்கின்றேன். அப்போது மட்டுமில்லை, மிருதங்கம் பழகிய காலம் முழுதும் என்னிடம் ஒரு மிருதங்கம் இல்லையென்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை. வகுப்புக்காக காசு கொடுக்கவே கஷ்டம் என்கின்றபோது எப்படி ஒரு மிருதங்கம் வாங்க முடியும்?

என் ஆசிரியர், நான் படிக்கும் மேசையின் லாச்சியைத் திறந்துவிட்டு இரண்டு பக்கமும் அடித்துப் பழகு என்று சொல்லித் தந்தார். அந்த மேசை லாச்சியில் அடித்துப் பழகலாம். ஆனால் அதற்கு எங்கே ஆதிதாளம் தெரியப் போகின்றது. தா, தீ, தொம், நம் என்று வெவேறு சப்தங்களில் ஒலிக்கும் இசையின் இலயம் விளங்கப் போகின்றது?

ஆனால் ஓர் ஆர்வமுள்ள மாணவனாக சுன்னாகத்தில் மிருதங்கம் பழகப் போயிருக்கின்றேன். நடந்து வருகின்றபோது யாராவது சிலவேளைகளில் சைக்கிள் 'ride' தருவார்கள். ஒருமுறை அப்பாவின் நண்பர், கேகேஎஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு அவரின் சைக்கிளில் சவாரி தந்தார்.

எனக்கு இவர் நான் மிருதங்கம் பழகுகின்றேன் என்பதை அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ என்று பயம் வந்தது. மனுசன் நான் இருக்கும் ரென்ஷன் தெரியாமல், ' 5கிலோ உப்பு ஆறில் கரைந்தால் என்ன மிஞ்சும்?' என்று புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டுக் குழப்பியது, இன்றும் நினைவிருக்கின்றது. நான் 5 -6, ஆகவே -1 என்று ஏதோ சொல்ல, 'தம்பி ஆற்றில் 5 கிலோ என்ன 50 கிலோ உப்பைக் கரைத்தாலும் ஒன்றும் மிஞ்சாது' என்று சொல்லிவிட்டு சிரித்தார். எனக்கு வந்த கோபத்துக்கு சைக்கிள் மட்காட்டைப் பிடுங்கி ஒன்று அவரின் முதுகில் போட்டால் என்றமாதிரி இருந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டேன்.

இப்படி  மிருதங்க வகுப்புக்குத் தொடர்ந்து போனாலும் எப்படியாவது என் திறமையை நிரூபிக்க வேண்டுமல்லவா? அப்போது வடமாகாண சங்கீத சபை என்று ஒன்றிருந்து. அது, இப்படி இயல் இசை நாடகத்துக்கு பரீட்சைகள் என வைத்து சான்றிதழ்கள் வழங்கும். ஆகவே நான் மிருதங்கப் பரிட்சைக்கு -கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடந்திருக்க வேண்டும்- சென்றேன்.

ஆனால் பாருங்கள் என்னிடம் ஒரு மிருதங்கம் சொந்தமாக இல்லை. பழகியது எல்லாமே என் மிருதங்க ஆசிரியர் வைத்திருந்த மிருதங்கத்தில் மட்டுமே. அத்தோடு நாங்கள் எங்கள் சொந்த ஊரை விட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்திருந்தோம். வடலியடைப்புக்குக் கிட்டவாக உள்ளூர் அகதிகளாக இருந்தோம்.

இப்போது அப்பாவுக்கு நான் மிருதங்கம் பழகுவது தெரிந்திருந்தது. ஏனென்றால் இந்தக் காலத்தில் நாங்கள் சங்கானை, அளவெட்டி, வடலியடைப்பு என்று பல இடங்களில் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கியிருந்தோம்.

எனக்குச் சொந்தமாக மிருதங்கம் இல்லாவிட்டாலும் பரிட்சைக்குப் போவதற்கு ஒரு மிருதங்கம் வேண்டும். அப்பா, யாழ் நகரிலிருந்த யாரோ ஒருவரிடமிருந்து பரிட்சைக்காக மிருதங்கம் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். பரிட்சை நாளனறு மாமா என்னை சைக்கிளில் முன் பாரிலும், மிருதங்கத்தை பின் கரியரிலும் கட்டி அழைத்துச் சென்றார்.

நான் ஏதோ இதுவரை 'கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்கும்' மும்முரத்தில் அடிஅடியென்று அடித்தேன். ஆனால் நான் நினைத்த அளவுக்கு ஆதிதாளம் கூட வரவில்லை என்பது வேறுவிடயம்.  பரிட்சையில் தேர்வாவேனோ என்பதே சந்தேகமாக இருந்தது. அதிலும் என்னை பரிட்சிக்க வந்த ஒருவர், 'தம்பி பக்கத்துக் கடையில் எனக்கு கொஞ்சம் வெற்றிலை பாக்கு வாங்கி வா'வென்று அனுப்பிவைத்தார். முன்னர் காலத்தில், ஆச்சிரமத்தில் தங்கி கலைகளைக் கற்கும்போது குருவுக்குப் பணிவிடை செய்வது போல இதுவும் என்று அவருக்கு வெற்றிலை வாங்கிக் கொடுத்தேன். வெற்றிலையின் புண்ணியத்தாலோ என்னவோ நான் ஒருமாதிரியாக முதலாம்தர மிருதங்கப் பரிட்சையில் சித்தியடைந்திருந்தேன்.

ஆனால் எனது கனவு இன்னும் நிறைவேறாமலே இருந்தது. மேளத்தில் 'மாங்குயிலே பூங்குயிலே' போன்ற சினிமாப் பாடல்களை இசைப்பதைப் பார்த்தல்லவா மிருதங்கம் பழக ஆசைப்பட்டவன் நான். அப்படிப் பாடல்களுக்கு அடிக்கப் பழகுவது இரண்டாம் தரத்துக்குப் பிறகுதான் தொடங்கும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில் நான் என் மிருதங்க ஆசிரியரோடு, ஆசிரியர் - மாணவர் என்ற உறவைத்தாண்டி எதையும் கதைக்கும் ஒருவனாக மாறியிருந்தேன். நான் ஏதாவது நூலகத்தில் புத்தகத்தை எடுத்துவந்தால் அதைப் பற்றி அவர் கேட்பதும், நான் நூல் குறித்தும் பேசுவதாக, மிருதங்கத்தைத் தாண்டிய உலகிலும் நாம் இருந்தோம். அவரும், 'இவனுக்கும் மிருதங்கத்துக்கும் வெகுதொலைவு, பாவம் அவனுக்குத் தெரிந்த விடயத்தைப் பற்றிப் பேசுவோம்' என்று நினைத்து என்னோடு நூல்களையும், நடப்பு அரசியலையும் பேசும் ஒருவராக மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறு நான் இரண்டாவது தரம் மிருதங்கம் படிக்கும் காலத்தில் போர் இன்னும் உக்கிரமாகத் தொடங்க வகுப்புக்களுக்குப் போவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடத் தொடங்கினேன். அப்போது எங்கள் பாடசாலை மாலைநேரப் பாடசாலையாக இணுவில் சைவமகாஜனாவில் (இப்போது இணுவில் இந்துக்கல்லூரி) இயங்கத் தொடங்கியது. அந்தப் பாடசாலையும் பாவம். அதன் முன்பகுதியில் குண்டுவிழுந்து இடிந்த கட்டடத்தோடே இயங்கியது.

என்னை மிருதங்கம் பழக்குவதற்கு ஓர் அண்ணா கூட்டிச் சென்றார் என்று சொன்னேன் அல்லவா? அவருக்கு என்னை விட மூன்றோ நான்கு வயது கூடவாக இருக்கும். அவருக்கு பாடசாலையில் ஒரு மதிப்பு இருந்தது. நான் போன (அளவெட்டி) லக்கி ரியூட்டரியில் வாணி விழா கோலாகலாமாக இசை நிகழ்வுடன் நடக்கும். அங்கே இந்த அண்ணா ஒருமுறை 'பாதைகள் வளையாது பயணங்கள் முடியாது/ போகுமிடத்தை சேரும்வரைக்கும் எங்கள் பாதை வளையாது' என்ற இயக்கப் பாட்டை மிகுந்த உணர்ச்சிவசமாகப் பாடினார். உண்மையில் அன்றுதான் நான் Goosebumps என்ன என்பதை உணர்ந்தேன் - மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன.

அந்த அண்ணாவை நான் இணுவில் மாலைப் பாடசாலைக்குச் செல்லும்போது பாடசாலையின் மதிலடியில் பார்த்தேன். இப்போது அந்த அண்ணா இயக்கத்துக்குப் போய், விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தார். அவர் வயதொத்த நண்பர்கள் எல்லோரும் பாடசாலைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, இந்த அண்ணா ஒருவித ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். 'எப்படியடா நீங்கள் இருக்கின்றீர்கள்?' என்று கேட்டு எனது தலையில் கோதி பாடசாலைக்குள் அனுப்பிவைத்தார்.

இயக்கத்துக்குப் போய்விட்டால் பாடசாலை வளாகத்துக்குள் நுழைய முடியாது என்பது எழுத்தில் இல்லாத கட்டளை. எப்படி இந்த அண்ணா இப்போது வேறொரு அந்நிய ஆளாக மாறிவிட்டார் என்று எனக்குத் திகைப்பாக இருந்தது. சிறந்தொரு பாடகராகவும் அதைவிடச் சிறப்பாய் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த அந்த அண்ணா இனி பாடவோ மிருதங்கம் அடிக்கவோ மாட்டார் என்பதை என்னால் நம்ப முடியாததாக இருந்தது. என்னை மிருதங்க வகுப்புக்குக் கூட்டிச் செல்வதற்காக தங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாப்பாடும் சாப்பிட வைத்த அவரின் அம்மாவின் முகமும் என் நினைவில் நின்றாடியது.

பின்னர் மிருதங்கம் உள்ளிட்ட எமக்குப் பிடித்த எல்லாக் கவின்கலைகளும் எங்களை விட்டு வெகுதொலைவாகச் செல்லத் தொடங்கின. என்னைப் போன்றவர்களும் எங்களின் அப்பாவித்தனத்தைத் தொலைத்த ஒரு தலைமுறையாக விரைவில் மாறிப்போனோம்.

**

(இந்த மிருதங்கம் இப்போது, எனது தோழியொருவர் அன்பளிப்பாகத்  தந்தது. மிருதங்கம் பழகிய அவரின் தம்பி இப்போது என் தோழியைப் போல மருத்துவராகிவிட்டார். எனவே 'எவரும் தொடாமல் மிருதங்கம் வீட்டில் சும்மா கிடக்கின்றது, உனக்கு வேண்டுமென்றால், வந்து எடுத்துக் கொள்' என்றார். பார்த்தீர்களா,  இறுதியில் நான் ஒரு மிருதங்கத்துக்குச் சொந்தக்காரனாகி விட்டேன். வாழ்க்கை விசித்திரமானதுதான் அல்லவா?)