(தமிழில்: இளங்கோ)
 

 
வாக்னரைக் கேட்கையில்
வெளியே இருட்டில் காற்று வீசுகிறது
குளிர்ந்த மழை மரங்களை மேவி அசைக்கிறது
விளக்குகள் அணைந்து எரிகின்றன
சுவர்கள் கிறீச்சிடுகின்றன
பூனைகள் கட்டிலின் அடியில் ஓடி மறைகின்றன

வாக்னர் வேதனைகளுடன் போராடுகிறார்
அவர் உணர்ச்சிவசப்படகூடியவர், ஆனால் உறுதியானவர்
அவரொரு மேன்மைமிகு போராளி
குள்ளர்களின் உலகில் அவரோர் இராட்சதன்,
அவர் துயரங்களை நேரடியாக எடுத்துச் செல்கிறார்,
தடைகளை வியக்கத்தக்க சப்தங்களின் சக்தியால்  தகர்க்கிறார்

இங்கிருக்கும் களிப்பாறைகள் எல்லாம்
கடும் சூதாட்டத்தில்.
விதிர்விதிர்க்கின்றன
வளைகின்றன
உடைகின்றன

ஆம், வாக்னரும் புயலும்,
மதுவோடு கலக்கையில்
இந்த இரவுகள்
எனது மணிக்கட்டுக்குள்ளால் ஓடி
என் தலைவரை ஏறி
மீண்டும் குடலுக்குள் இறங்குகின்றன.

சில மனிதர்கள்
ஒருபோதும் இறப்பதில்லை
சில மனிதர்கள்
ஒருபோதும் வாழ்வதில்லை

ஆனால் இன்றிரவு
நாம் அனைவரும்
உயிர்ப்புடன் இருக்கின்றோம்.

***

குறிப்பு: இந்தக் கவிதையில் தலைப்பு (1813-1883) ரிச்சர்ட் வாக்னரின் பிறப்பையும் இறப்பையும் குறிக்கின்றது.