கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஸ்கார்பரோவில் எழுத்தாளர் இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'!

Thursday, December 18, 2025

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின்  (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centreஎஇல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக ,  மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது.  'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

Uploaded Image

நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட்  இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார்.  வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரனின் இயக்கத்தில் மேடையேறிய இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். 

ஜயகரன் தனது உரையைப் பொதுப்பட வைத்து, மொழி , சிந்தனை பற்றிய தொடர்புகளை மையமாக வைத்தும் , இடையில் இளங்கோவின் கதைகளைக் குறிப்பிட்டும்  ஆற்றினார். முனைவர் மைதிலி  தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசித்ததாகவும், ஆனால் அவற்றில் இரண்டைத்  தவிர்த்து , மிகுதிப் பத்துக் கதைகளை மையமாக வைத்தே உரையாற்றப்போவதாகவும், ஜயகரனைப்போல்  பொதுப்பட்டதாகத் தனது உரை இருக்காதென்றும், விரிவாகவே இருக்கும் என்றும்  குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார். 

அரசி விக்கினேஸ்வரன் , முனைவர்  மைதிலி தயாநிதி தவிர்த்த இரு கதைகளை மையமாகவே வைத்துத் தனது உரை பெரிதும் இருக்குமென்று குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார்.  இறுதியில் வந்த 'காலம்' செல்வம் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வு ததும்பத் தன் உரையினை ஆற்றினார். அவ்வப்போது சபையோரைச் சிரித்துக் குலுங்க வைத்தார். அது மேலும் அவருக்கு உற்சாகம் தரவே மேலும் உத்வேகம் மிக்கவராக அவரது உரை தொடர்ந்தது. அவர் தனது உரையில் புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' சிறுகதையைக் குறிப்பிட்டு, இளங்கோவின் கதைகளிலும் புதுமைப்பித்தனின் கதைகளில் தென்படும் நுட்பங்கள் சில இருப்பதாகச் சிலாகித்தார்.

Uploaded Image

நிகழ்வின் நடுவில், பாராளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் நூலை வெளியிட்டு வைத்ததுடன், எழுத்தாளர் இளங்கோவின் புதிய இணையத்தளத்தையும் அறுமுகம் செய்தார்.  தான் இளங்கோவின் வாசகி என்றார். கூடவே அண்மையில் நடைபெற்றப்  பாராளுமன்றத் தேர்தலில்  தன் நண்பர்களுடன் வந்து ஆதரவு தேடிய இளங்கோவுக்கு நன்றியும் தெரிவித்தார்.  தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை இளங்கோவின் பெற்றோர்,  எழுத்தாளர் தமிழ்நதி, சமூக, அரசியற் செயற்பாட்டாளர் யோக வளவன், எழுத்தாளர் மணற்காடர் (ராஜாஜி ராஜகோபாலன்), காலம் செல்வம்  உட்படப் பலர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து தலைமை வகித்த இலங்காதாஸ் பத்மநாதன் நூல் பற்றிய தன் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார், முடிவில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், கேட்கும்போதெல்லாம் உணர்வுடன் ஒன்றி ,இழந்த மண் மீதான ஏக்கத்தை உணரவைக்கும் மலையாளத்திலிருந்து  தமிழுக்கு வந்த பாடலான 'அன்றங்கே ஒரு நாடிருந்ததே; அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே' பாடலை உணர்வு பூர்வமாகப் பாடினார் நிரோஜினி றொபேர்ட்.   தொடர்ந்து இளங்கோவின் நன்றி கூறலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

Uploaded Image


நிகழ்வின் இன்னுமொரு முக்கிய அம்சம். எழுநா இதழ்களின் வெளியீட்டுக்கு முக்கிய காரணகர்த்தாவான எழுத்தாளர்  'உரையாடல்' நடராஜா முரளிதரனுக்கு ஒரு மேசை வழங்கப்பட்டிருந்தது. எழுநா இதழ்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.  வழக்கமாக இவ்விதமான இலக்கிய நிகழ்வுகளில்  காலம் செல்வத்தின் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் இடம் பெறுவது வழக்கம்.  அவ்விதம் நடக்காததாலோ என்னவோ அவர் நிகழ்வின் முடிவில் பார்க்கிங் லொட்டில் நின்றபடி நூல்களை விற்றுக்கொண்டிருந்தார். அண்மையில் காலநதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரகேசரின் , எழுத்து வெளியீடாக வெளிவந்திருந்த 'வெளியேற்றம்' நாவலின் பிரதியொன்றினையும் கூடவே வாங்கிச் சென்றேன். 

இளங்கோவின் நூலை இன்னும் வாசிக்கவில்லை. அது பற்றி உரையாற்றியவர்கள் தம் உரைகள் காரணமாக அதனை விரைவில் வாசிக்கும் ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. வாசிப்பேன். கருத்துகளையும் பகிர்ந்துகொள்வேன்.

நிகழ்வுக்காட்சிகளை அலெக்ஸ் வர்மா, 'தடயத்தார்' கிருபா கந்தையா ஆகியோர் எடுத்துக்கொண்டிருந்தனர்.  கிருபா கந்தையா நிகழ்வுக் காணொளியையும் எடுத்துக்கொண்டிருந்தார். நானும் சில காட்சிகளை என் அலைபேசிக்குள் அகப்படுத்தி வைத்தேன்.

***
நன்றி: வ.ந.கிரிதரன் முகநூல் பக்கம்

 

0 comments: