கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அருந்ததி ரோயின் 'தாயார் மேரி என்னிடம் வருகிறார்'

Thursday, December 11, 2025

 

Mother Marry Comes to Me | Arundhati Roy


ருவர் மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போது தந்தை  கைவிட்டு விலகிச் செல்கிறார். அவரையும், அவரின் சகோதரரையும் தனித்த பெண்ணாக அவரின் தாயார் வளர்க்கத் தொடங்குகின்றார். அஸாமில் பிறந்து மேற்கு வங்காளத்தில் கொஞ்சக் காலம் இருந்து, தந்தையால் கைவிடப்பட்டு தாயுடன் ஊட்டிக்கு வந்து வாழும்போது, இந்த வீடும் எங்களுடையது என்று அவரின் மாமாவாலும், அம்மம்மாவாலும் அங்கிருந்தும் துரத்தப்படுகின்றனர். ஓரிடத்தில் நிலைத்து வாழ முடியா அவதியும், உறவுகளால் புறக்கணிக்கப்படுவதும் மட்டுமில்லை,  வெறுப்பை வெளிப்படையாகவும், அன்பை மறைமுகமாகவும் காட்டும் ஒரு 'வன்முறை'யான அம்மாவோடு வளர்ந்த ஒரு பெண், இன்று உலகமே அவரின் ஒவ்வொரு எழுத்தையும் வாசிக்க ஆவலாகக இருக்கின்ற ஓரிடத்திற்கு வந்திருக்கின்றார் என்பதை நம்பமுடியுமா? ஆம், அதுதான் அருந்ததி ராயுக்கு நிகழ்ந்திருக்கின்றது.

Uploaded Image
 
அருந்ததி ராயின் முதலாவது நாவல் வெளிவந்து அது அவரே எண்ணிப் பார்க்க முடியாத திசைகளில் பரவி புகழையும், மரியாதையும் கொணர்ந்தது எப்படி ஒரு தற்செயலான நிகழ்வாக இருந்ததோ, அப்படியே அவரின் வாழ்வு முழுவதுமே இப்படியான தற்செயலான இனிய தருணங்களாலும், நாம் நினைத்தே பார்க்கமுடியாத அவதிகளாலும் நிறைந்திருந்திருப்பதையும் அவரின் அம்மா குறித்த நனவிடைதோய்தலாக விரியும் 'தாயார் மேரி என்னிடம் வருகிறார்' (Mother Mary Comes to Me) என்ற நூலை வாசிக்கும்போது அறிகின்றோம்.

இந்த நூலை முதலில் வாசிக்கத் தொடங்கியபோது -வழமையான அருந்ததியின் நாவல்களுக்கு நிகழ்வது போல- என்னை அதிகம் கவரவில்லை. இதில் ஒரு அத்தியாயமான 'நக்சலைட்டுக்களை' தற்செயலாக எடுத்து வாசிக்கும்போதே இந்த நூல் என்னை ஈர்த்திருந்தது. அதிலிருந்து ஒரு நாளில் 'ஒரே மூச்சில்' வாசித்து முடித்திருந்தேன்.  அருகிலிருக்கும் நண்பர் கூட, 'என்னைக் கொஞ்ச நேரம் கூடக் கவனிக்காது, அப்படியே அருந்ததியில் மூழ்கிவிட்டாய்' என்று சலிக்கும்வரை நான் நாள் முழுதும் அருந்ததியின் உலகில் இருந்தேன்.

தொடக்க அத்தியாயங்களில் அருந்ததியினதும், அவரின் சகோதரனதும் குழந்தைப் பருவங்கள் வருகின்றன.  அதில் அவர்களும், அவர்களின் தாயாரும் பட்ட அவமானங்கள் விரிவாகப் பேசப்படுகின்றன. ஒரு தாயை இந்தளவுக்கு எவ்வித உயர்வு நவிற்சியோ, அவமானங்களின் நிமித்தம் தாழ்த்தவோ செய்யவோ அருந்ததி எழுதியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது. அது அவரின் தாயாராக இருந்தாலும் ஓர் அந்நியரைப் போல விலத்தியிருந்து ஒரு தாயைப் பார்த்திருந்தால் மட்டுமே இப்படி எழுதுதல் சாத்தியமாகியிருக்கும்.

து தாயின் நினைவுகள் என்று வெளிப்படையாக இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் இது அருந்ததியின் ஒரு குறிப்பிட்ட கால சுயசரிதை எனச் சொல்லலும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு இந்நூலில் அருந்ததியை நாம் நெருங்கிப் பார்க்க முடிகின்றது. இன்றைய அருந்ததியின் 'கலகம் செய்யும் தன்மை'யை, அவரின் 'வெறுப்பான' தாயால் அவரையறியாமலே அருந்ததிக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது என்பதை நாம் காண்கின்றோம். அதுபோலவே எதன் மீது சமரசம் செய்யாத தன்மையையும் தாயிடமிருந்து அருந்ததி  கற்றுக் கொண்டிருக்கின்றார் என்பதை இங்கே அறிகின்றோம். அதுவே பின்னர் காலத்தைய அருந்ததிக்கு உறவுகள் மீது கூட அதீத நம்பிக்கை வைக்காது, தனது காதலர்கள்/கணவர்களைக் கடந்து செல்வற்கு உதவி செய்வதையும் காண்கின்றோம்.

அருந்ததியின் தாயார் கோட்டயத்தில் ஒரு பிரபல்ய வாய்ந்த பாடசாலைக்கு சொந்தமானவர் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். ஆனால் அது அந்தத் தாயின் தனியுழைப்பால் மட்டுமே சாத்தியமாகியிருக்கின்றது. தாய் அவருக்கு விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்ததிலிருந்து அவர்களின் குடும்பத்தாலும், உறவாலும், ஏன் திருச்சபையாலும் கூட புறக்கணிக்கப்படுகின்றார். இதன் நிமித்தமே, இவ்வளவு பிரபல்யம் வாய்ந்த அருந்ததியின் தாயிற்கு அவரின் மரணத்தின்போது, அவர்களின் திருச்சபை அவருக்குரிய கல்லறையைக் கூடக் கொடுக்க மறுக்கின்றது. ஆனால் இறப்பிலும் அவரின் தாயார் ஒரு கலகக்காரிதான் இருந்திருக்கின்றார். என்னை எங்கேயும் புதைக்கவேண்டாம், தகனமூட்டுங்கள் என்று கூறிவிட்டுத்தான் சாகின்றார்.

ஒருகாலத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒற்றைத் தாயாக (Single Mother) இருந்த மேரி ராய், ஒரு பாடசாலையை தனித்துத் தொடங்குவது மட்டுமின்றி, அதை இன்று கேரளாவின் மாற்றுக்கல்விக்கான மிகப்பிரபல்யமான பள்ளிக்கூடமாகவும் ஆக்கிச் சென்றிருக்கின்றார். அதுமட்டுமின்றி மிகப் பிரபல்யமான லாரி பேக்கர் (Laurie Baker) என்கின்ற மாற்று கட்டட வரைபடக் கலைஞரைக் கொண்டு அந்தப் பாடசாலையைக் கட்டியுமிருக்கின்றார்.

லாரி பேக்கரைச் சந்தித்ததையும், அவர் எப்படி அன்றைய 15 வயது அருந்ததியை ஈர்த்தார் என்றும், தனது மேற்படிப்புக்காக எதற்காக கட்டடிடக் கலையை அருந்ததி ராய் தேர்ந்தெடுத்தார்  என்பதையும் இந்த நூலில் விரிவாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.. கட்டடக்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே அருந்ததி தனது காதலரைச் (பின்னாளில் முதல் கணவன்) சந்திக்கின்றார்.

பதின்மத்தில் அம்மாவோடு முரண்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி படிப்பதற்காக டெல்கிக்குச் சென்ற அருந்ததி அவரின் தாயாரோடு கிட்டத்தட்ட 7 வருடங்கள் எந்தத் தொடர்பும் இல்லாது இருக்கின்றார். அதுபோலவே மூன்று வயதில் தங்களைக் கைவிட்டுச் சென்ற தகப்பனை, அருந்ததியும் அவரின் சகோதரனும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின் கண்டுபிடிக்கின்றனர். குடிக்கு அடிமையாகிவிட்ட அருந்ததியின் தந்தையாரின் செய்கைகள் பெரும்பாலும், எனக்கு எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் தமிழ்த் தந்தையாரை நினைவுபடுத்தியபடி இருந்தன. இவ்விரு தந்தையர்களும் எப்படி அசலில் இருந்தார்களோ தெரியாது, ஆனால் ஒண்டாச்சியினதும், அருந்ததியினதும் எழுத்துக்களால் மறக்கமுடியாத, வெறுக்க முடியாத வேடிக்கை நிறைந்த மனிதர்களாக மனதில் நிறைகின்றார்கள்.

Uploaded Image


இந்தப் பிள்ளைகளாவது தந்தையை இருபது வருடங்களுக்குப் பின்னர் சந்தித்து அளாவளாவுகின்றனர்.  அவரோடு இறுதிக் காலம்வரை தொடர்பில் இருந்திருக்கின்றனர். ஆனால் இவர்களின் தாயோ கணவர் விட்டுப் பிரிந்தபின் அவரை இறுதிவரை சந்திக்கவே இல்லை. அவரின் இறப்பை பிள்ளைகள் சொல்லும்போது கூட, எப்போதும்போல 'ஒன்றுமில்லாத மனிதன் (nothing man) போய்விட்டார்' என்று சொல்வதோடு மட்டும் தாய் நிறுத்திவிடுகின்றார். அதுபோலவே அருந்ததியின் தாய், அவரின் தாயை (அருந்ததியின் அம்மம்மா) கூட மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை என்பதால், தாயின் இறப்புக்கூட மேரி போகாது இருக்கின்றார். அருந்ததியும், அவரின் சகோதரும் மட்டுமே செல்கின்றனர்.

அருந்ததியின் தாயிற்கு அவரின் தாயோடு நீண்டநாள் முரண் இருந்தது. ஒரு பெண்ணான தனக்கும் குடும்பச் சொத்தில் சமபங்கு தரவேண்டும் என்று கேட்பதற்காக -கேரளத்தில் சிரியன் கிறிஸ்தவர்களிடையில் பெண்களுக்கு சொத்தில் பங்கில்லை என்றிருந்த சட்டத்தை- டெல்கிவரை உயர்நீதிமன்றம் சென்று அருந்ததியின் தாயார் மாற்றி சட்டத்தை எழுத வைத்திருக்கின்றார். எப்படி ஒரு சிறந்த மாற்றுப் பாடசாலையைக் கட்டி மேரி கேரளத்தில் பிரபல்யமானவரோ அப்படியே இந்த சட்டத்தைத் திருத்திய வழக்காலும் அவர் கேரளத்தில் அன்று அதிகம் பேசப்பட்டவர்.

இப்படி பிள்ளைகளோடு வெஞ்சொல் பேசுகின்றவராகவும் எப்போதும் 'வீட்டை விட்டு வெளியே போ', 'காரை விட்டு வெளியே இறங்கிப் போ' (அருந்ததி, தாயாரோடு லாரி பேக்கரை திருவனந்தபுரத்தில் சந்தித்துவிட்டு வரும்போது, அருந்ததி ஒழுங்காகப் பேசவில்லை என்ற கோபத்தில் அவரை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுப் போகின்ற மூர்க்கமான தாய் மேரி ரோய்) என்று எப்போதும் பிள்ளைகளைத் துரத்துகின்றவராகவும்,  சொந்தத் தமையன்/தாய் என்று  உறவுகளில் பகை வளர்த்துக்கொண்டும், தனித்த பெண்ணாக இருந்த மேரி ராய் இன்னொரு பக்கத்தில் கோட்டயத்தில் ஒரு மிகச்சிறந்த ஆளுமையுள்ள பெண்மணியாகவும் விசுவரூபம் எடுத்திருக்கின்றார் என்பதைப் பார்க்கும்போது, அதை தாயோடான நேசத்தோடும்,அதேவேலை ஒருவகை விட்டுவிலகலோடும் அருந்ததி  முன் வைத்திருக்கும் எழுத்தின் நேர்மையில், நாம் இதுவரை காணாத ஒரு தாயின் விம்பத்தைக் காண்கின்றோம்.

நீங்கள் இந்தத் தாயை நெருங்கி நேசிக்கவும் முடியாது, அதைபோல அவ்வளவு எளிதாக வெறுக்கவும் முடியாது. எனக்கு இப்படியொரு தாயார் வாய்த்திருக்கின்றார், அவரையும் பாருங்கள் என்று அருந்ததி தனது எழுத்தின் வழியே அழைத்துச் செல்வது அவ்வளவு அழகாக இருக்கின்றது.

ந்த நூலில் அருந்ததியின் வறிய தனித்த வாழ்வையும், அதேபோல அவரின் முதல் நாவலால் கிடைக்கும் மில்லியன் கணக்கான பணத்தால், தான் யார் என்கின்ற தேடலையும், அந்தப் பணத்தின் பெரும்பகுதியை தனக்காக சேமித்து வைக்காமல், குடும்பத்துக்குள்ளும், தன் கணவர்/காதலர்களுக்கும், சமூகத்துக்கும் எனப் பகிர்ந்து கொடுக்கும் ஒருவராகவும் உள்ள அருந்ததியை நாம் காண்கிறோம், நெகிழ்கிறோம்.

திரைப்படங்களில் நடித்தும், திரைகதையை எழுதிக் கொண்டும், ஒரளவு நல்ல வருமானத்தையும் பெற்றுக்கொண்டிருந்த அருந்ததி, சேகர் கபூர்  பூலான் தேவியின் வாழ்வை முன்வைத்து எடுத்த 'பண்டிட் குயின்' எப்படி மோசமான வன்புணர்வுத் திரைப்படமாக இருக்கின்றது என்று எழுதுவதில் அவரின் திரைப்பட வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது. எனக்கு வருமானமா அல்லது இப்படி மோசமான திரைபபடத்தைப் பற்றி பேசாமல் இருப்பது முக்கியமா என வருகின்றபோது, அவர் 'அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல்' என்கின்ற எழுத்தின் அறத்தை தனக்கான வழியாக எடுத்துக் கொள்கிறார்.

இதன்பின்னரே, கிடைத்த கொஞ்சக்காசை வைத்து அருந்ததி 'சின்ன விடயங்களின் கடவுளை' (The God of Samlla Things) எழுதத் தொடங்குகின்றார். அது அருந்ததியை இதுவரையே நினைத்துப் பார்க்காத திசைகளில் எடுத்துச் செல்கிறது. அவர் இந்தப் புகழுக்குப் பின்னும் அந்தத் திசையில் இழுபட்டுச் செல்லாது, நர்மதா ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்படும் அணைகளுக்கு எதிராகப் போராடும் மக்களோடு கைகோர்த்து நடக்கத் தொடங்குகின்றார். அது அவருக்கு நீதிமன்ற விசாரணை, ஜெயில் வாசம் என்கின்ற அபாயத்தின் சிவப்புக் கம்பளத்தை விரிக்கின்றது. அப்படி ஜெயில் இருக்கும்போதே பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தபோது இதற்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் கர்ப்பிணியான மனைவியைச் சந்திக்கின்றார்.

அந்தப் பெண்ணுடனான நட்பு அருந்ததியை காஷ்மீருக்கு அழைத்துச் செல்கின்றது. காஷ்மீரின் உண்மையான நிலவரத்தைப் பார்த்து நீண்ட கட்டுரைகளாக எழுதுகின்றார். அதன் நிமித்தம் கொலைமிரட்டல்கள், ஊடகங்களில் வெறுப்புப்பேச்சு என்று அனைத்தையும் எதிர்கொள்ளும் அருந்ததியை, மாவோயிஸ்டுக்கள் எங்கள் வாழ்வைப் பார்க்க காட்டுக்கு வாருங்களென அவரின் அடுக்கமாடியின் கதவடியில் ஒரு அழைப்பு மடலை விட்டுச் செல்கின்றனர். பிறகு அந்தத் தோழர்களோடு பெருங்காட்டில் வாரக்கணக்கில் நடந்து அவர்களோடு கழித்த நாட்களை 'தோழர்களோடு நடத்தல்' (Walking with the Comrades) என்று  ஒரு தொடராக எழுதுகின்றார்.

இப்படியாக ஒரு வாழ்வை வாழும்  தன்னை எழுத்தாளர் + செயற்பாட்டாளர் என்று பிரித்து எழுதுவது எவ்வளவு அபத்தம் என்று அருந்ததி மறுக்கின்றார். ஒரு எழுத்தாளராக இருப்பது என்பதே செயற்பாட்டாளராகவும் இருப்பதுதானே? ஒரு எழுத்தாளர் அரசியலைப் பற்றிப் பேசாமல் இருந்துகொண்டு எப்படித் தன்னை ஒரு எழுத்தாளர் என்று சொல்லமுடியும் என்று நம்மிடம் கேள்வி கேட்கின்றார் (தமிழ்ச்சூழலில் தம்மை எழுத்தாளர்கள் என்று அழைத்துக்கொள்வோர் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் இது).

Uploaded Image

அதுபோலவே ஒரெயொரு எழுத்தாளர் மட்டுமே தனது புனைவைப் போலவே புனைவில்லாதவையும் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டியிருக்கின்றார் என்று சொல்கின்றார்.  இதைக் குறிப்பிடுவதன் மூலம் அருந்ததி புனைவு/புனைவல்லாதவை என்று பொருள்பிரிப்புக்களில் அக்கறையில்லாது படைப்பு என்பதையே முதன்மையாகக் கொள்கிறார் என்பதை நாமறியமுடியும். மேலும் அருந்ததியின் புனைவு/புனைவல்லாதவை இரண்டையும் வாசிக்கும் நம்மால் அவரின் மொழி எவ்வளவு படைப்பூக்கமாக/ புத்துணர்ச்சியுள்ளதாக இருப்பதை உணரமுடியும். ஏன் இந்த நூல் கூட ஒருவகை தன்வரலாற்று நூல்தான். ஆனால் விழுந்து விழுந்து சிரிக்க எத்தனை இடங்கள் இதில் இருக்கின்றது. அப்படி ஒரு வலியான வாழ்க்கைக்குள்ளும் இப்படி நம்மை புன்னகைக்க வைக்கின்ற எழுத்தை அருந்ததியால் எழுதமுடிவதுதான் அழகானது.

நான் இந்த நூலை இன்றைய காலத்தில் பல்வேறு சிக்கல்கள்/நெருக்கடிகளுக்குள் சென்று மனம் அழுந்திக் கொண்டிருக்கும் அனைவரையும் வாசிக்கப் பரிந்துரைப்பேன். அருந்ததி போன்ற மிகக் கடுமையான குழந்தைப் பருவத்தைக் கொண்ட ஒருவரால், இன்றைக்கு அவரது மனவடுக்களைத் தாண்டி நமக்கு ஒரு கதையை சொல்லமுடிகின்றதென்றால், இப்போது நீங்கள் எத்தகைய மனநெருக்கடிகளுக்குச் சென்று கொண்டிருந்தாலும் கடந்துவரக்கூடியது என்ற நம்பிக்கையை இந்த நூல்  தரக்கூடியது மட்டுமின்றி, அருந்ததியே தனது சிக்கலான தாயை இவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்ள முடியுமென்றால், நமக்குப் பிரச்சினைகளைத் தந்துகொண்டிருப்பவர்களைக்கூட, ஏதோ ஒரு புள்ளியில் புரிந்துகொண்டு நமக்கான ஓர் அமைதியான வாழ்வை உருவாக்க முடியும் என்பதையும் நாம் கண்டுகொள்வோம்.

***

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2025)

 

0 comments: