கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

படுபட்சி: இறுதியாய்ச் சில குறிப்புகள்

Sunday, December 14, 2025

 

(1) அண்மைக்காலமாக வாசிக்கும் எந்தப் புத்தகத்துக்கும் எதிர்மறையான வாசிப்புக்களை எழுதக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். விமர்சனங்கள் தேவையல்ல என்பதற்காகவல்ல, நிறைய நல்ல நூல்கள் கவனிக்கப்படாது நாம் எதிர்மறையான திசைக்கு அதிக கவனம் கொடுக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டதாலாகும். அதேயே 'படுபட்சி'யை வாசித்து முடித்தபோதும் எண்ணிக் கொண்டேன். ஆனால் வாசித்து ஓரிரு நாட்களுக்குப் பிறகும், அது தொடர்ச்சியாக தொந்தரவுபடுத்தியதால், இது குறித்து எழுதித்தான் தாண்டமுடியும் என்பதாலே 'படுபட்சி' குறித்து எழுத வேண்டியிருந்தது.

(2) அந்த வாசிப்புக்கு  நான் வைத்த தலையங்கத்தை ஒருவர் கவனித்தாலே ('படுபட்சி: மோசமான மொழியில் எழுதப்பட்ட அசலான கதை' க்குத் தெரிந்திருக்கும், நான் இந்த நூலை முற்றாக நிராக்கவில்லை என்பது [1]. படுபட்சி நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஓர் அசலான கதை, ஆனால் அந்த அசலான கதைக்குச் சொந்தமான டிலுக்‌ஸனுக்கு இருக்கக்கூடிய ஒரு மொழியில் சொல்லப்படாததே என் முக்கிய விமர்சனமாக இருந்தது.

(3) எப்படி எனது வாசிப்பைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வெளி இருந்ததோ, அப்படியே அதை  கனடாவில் இருந்து விதந்து எழுதிய ஜயகரனினதோ, விக்கியினதோ பதிவுகளையும் நான் வாசித்திருக்கின்றேன். அவர்களின் பெரும்பாலான கருத்தில் ஏற்பும் எனக்கு இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் இருந்து இந்தப் பிரதியை அணுகின்றோம். அவ்வளவேதானே தவிர என் வாசிப்பு மட்டுந்தான் சரியென்று எந்த இடத்திலும் வாதிடவில்லை.

இந்த நூலில் எடிட் செய்தவரின் குரல் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டலும், இதனால் சொல்லப்பட வேண்டிய முக்கிய கதையான 'படுபட்சி'யின் வீரியம் நீர்த்துப் போகின்றது என்பதுந்தான் என் வாசிப்பின் முக்கிய பேசுபொருளாகும்.

 



(4) இந்த நூலைப் பற்றி இன்னொரு பகுதியையும் எழுத, தொடக்கத்தில் தீர்மானித்திருந்தேன். அதாவது இந்த நூலின் 'அசலான கதையின் ஆன்மா' எங்கே ஒளிந்திருக்கின்றது என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியுமாகும். இந்த நூலின் 'அசல் கதை' பற்றிய தேடலில் ஒரு சிக்கலான சித்திரமே எனக்குள் வந்ததால், அப்படியொரு நிலையில் அதை எழுதுதல் இப்போதைக்கு சாத்தியமில்லை என நினைக்கின்றேன்.

(5) இந்த நூலை வாசித்தபோதும், இதற்கான வாசிப்பை எழுதிய பின்னரும் 'படுபட்சி'யோடு ஆகவும் obessed ஆக நான் இருந்ததைப் பார்த்த நண்பர், 'உங்களுக்கு இதில் அதன் அசல் மொழி  மாற்றப்பட்டு இன்னொருவரின் குரல் ஒலிப்பது பிரச்சினையாக இருக்கின்றதா அல்லது autofiction எனச் சொல்லப்பட்டு அசல் மனிதர்களும், காலமும் மாற்றி எழுதப்பட்டது சிக்கலாக இருக்கின்றதா' எனக் கேட்டார்.

(6) இஃதொரு முக்கியமான கேள்வியாக என் முன்னால் இருந்தது. எது என் வாசிப்பில் துருத்தியது என்றால் இந்த இரண்டையும் சேர்த்துத்தான் எனச் சொல்ல வேண்டும்; ஆனால் இந்நூலை எடிட் செய்தவரின் மொழியும்/கதையாடலும் அதிகம் துருத்திக் கொண்டிருப்பதால் என்னால் கதைக்குள் சரியாக நுழையமுடியாத அவதி இருக்கின்றது என்பதையும் கண்டுகொண்டேன்.

(7) இந்த ஆட்டோபிக்சனின் மிக முக்கிய காலப்பிழையைப் பின்னர் கண்டுபிடித்திருந்தேன்.

இந்நூலில் கதைசொல்லி யுத்தம் நடக்கும் காலத்தில் இந்த விமானத்தைச் செய்து பிடிபட்டு இலங்கை இராணுவத்தின் முகாமில் இருந்து, புலிகள் அதைத் தாக்கும்போது அவர்களோடு  தப்பி வருவதாக முடிக்கப்படுகின்றது.

"காயப்பட்ட போராளிகளுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு படகு படுவான்கரையை நோக்கி இருளில் நகர்ந்தது. எழுவான்கரையைப் பார்த்தேன். மயிலாம்பாவெளி இராணுவ முகாம் தீப்பற்றி எரியும் வெளிச்சத்தில் அது ஒளிர்கிறது" ( 'படுபட்சி', ப 143).

(8 நிஜவாழ்வில் டிலுக்ஸன் யுத்தம் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே இப்படி விமானம் செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார் என்பதே 'தெளிந்த' உண்மையாகும்.

(9) டிலுக்‌ஸன் கனடாவில் கொடுத்த ஒரு நேர்காணலில், 'நான் எனது விமானம் செய்யும் திட்டத்தை, இராணுவம் முள்ளிவாய்க்கால் வெற்றியைக் கொண்டாடிய மேமாதத்தில் காட்சிப்படுத்தவே கேட்டேன். அதன் பிறகுதான் என்னை கைதுசெய்தார்கள், சித்திரவதை செய்தார்கள்' [2]. <<இந்த நேர்காணல் காணொளியை முழுதாகப் பார்க்க முடியாதவர்கள் தயவு செய்து 9.00 ஆவது நிமிடத்தில் இருந்தாவது பார்க்கவும்>>

இந்த நூலில் வாசகரை மிக ஏமாற்றிய பகுதியாக இதைச் சொல்லலாம். நான் நூலை வாசிக்கும்போதோ,  அது பற்றிய என் முதல் வாசிப்பை எழுதியபோதோ இந்த முக்கிய விடயத்தைக் கவனிக்கவில்லை. அது என்னவெனில்..

டிலுக்‌ஸன் விமானம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டது போர் முடிந்த 2009 ஆண்டுக்குப் பிறகே ஆகும். ஆனால் இந்த நூல் முழுவதுமே  யுத்தம் நடைபெறும்போது சமாந்திரமாக கதைசொல்லி விமானப் பொறியியல் படிப்பதாகவும், விமானம் செய்வதாகவும், அதன் நிமித்தம் கைது செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

(10) ஒரு கதையை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் (2009 முன்) சொல்வதற்கும், யுத்தம் முடிந்தபிறகு சொல்வதற்கும் (2009 பிறகு) பெரும் இடைவெளி இருக்கின்றது என்பதை  நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உதாரணத்துக்கு ஒருவர் 2009 யுத்தம் முடிந்தபின்   கனடாவில் இருந்து இலங்கை போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை ஏதோ ஒரு காரணத்தால் இலங்கையில் கைதுசெய்கின்றார்கள். அவர் அந்த நிகழ்வை யுத்தம் நடைபெறுகின்றபோது என்னைக் கைதுசெய்தார்கள் என்று யுத்தத்தின் பின்னணியில் ஒரு கதையை  ஆட்டோபிக்‌ஷனில் எழுதிவிட்டு இது எனக்கு நடந்த சம்பவம் என்று claim செய்தால் எவ்வளவு மோசமாக இருக்கும்.

அந்த மிகப்பெரும் தவறை, டிலுக்ஸன் 2010 இற்கு விமானம் தயாரிக்கப்பட்டதற்காக கைதுசெய்யப்பட்டதை, யுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது (நூலில் 2007 இல் எனச் சொல்லி), இப்படியெல்லாம்  நடைபெறுவதாக எழுதுவது எத்தகைய அறம் என நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம்.

(10) இது ஒரு ஆட்டோபிக்‌ஷன், புனைவும் கலந்திருக்கலாந்தானே. ஏன் இந்தக் கால வழுவை கேள்விக்குட்படுத்துகின்றீர்கள் என ஒருவர் கேட்கலாம். அது நாவலாக இருப்பின் நாம் எளிதில் கடந்துபோகலாம்.

ஆனால் நாவல் முன்னட்டையில் 'இலங்கையில் முதல் விமானத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழ் இளைஞனின் பயணமும் பாடுகளும்' என எழுதப்பட்டு டிலுக்ஷனின் புகைப்படத்தோடு விளம்பரப்படுத்துவது மட்டுமில்லை, டிலுக்‌ஷன் தனது ஒவ்வொரு நேர்காணல்/ மேடைப்பேச்சுகளிலும் இது தனது சொந்தக்கதை என்று claim செய்தபடியே இருக்கின்றார். அப்படி அவர் தனது சொந்தக்கதை என்று உரிமை கோருவதாலே நாம் இந்த காலவழுவை முன்வைத்து குறுக்கிட வேண்டியவராகின்றோம்.

இப்படி ஒரு காலவழுவோடு (யுத்தம் முடிந்தபின் நடக்கும் கதையை/ யுத்தத்தின்போது நடப்பதாக) எழுதுவது நமக்கு உறுத்துகின்றது. அதைப் பொதுவெளியில் இது இந்த நூலின் அடிப்படைத்தன்மையே சந்தேகிக்க வைக்கின்றதே என ஒரு கேள்வியாக நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

(11) மேலும் இது தொடர்பாக தேடியபோது, டிலுக்‌ஷனின் LinkedIn Profile கையில் அகப்பட்டது.  Facebook Profileஇல்  பொய் கூறலாம். ஆனால் LinkedIn Profile யில் கற்பனையைக் கலக்கமுடியாது. அது பிறகு உங்கள் வேலைக்கும், தனிமனித வாழ்க்கைக்கும் மேற்குலகில் 'ஆப்பு' வைத்துவிடும். அதில் டிலுக்‌ஷன் இலங்கையில் "Skyline aviation Sri lanka இல்,   Jan 2011- Jan 2014  இல் Associate's Degree - AirFrame Mechanics & Aircraft Maitenance Technology/Tehcnician செய்திருக்கின்றார் எனச் சொல்லியிருகின்றார் [3].

(12) அப்படியெனில் தன்னை இராணுவம் பிடித்துவிட்டு சித்திரவதை செய்தது, அதன் பிறகு இலங்கையில் எதையும் தொடர்ந்து படிக்கவில்லை, தப்பி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன் என்று கோருவது எப்படி முறையாகும். எனில் இந்த டிகிரி அசலானதா அல்லது போலியானதா? அசலாகவே இருக்கவே சாத்தியம். அப்படியெனில்  2011-2014  வரை டிலுக்ஸன் இலங்கையில்தானே இருந்திருக்க வேண்டும்?

(13) திருப்பவும் ஞாபகமூட்டுவது ஒன்றேயொன்றுதான் இதை நாவல் என்று எழுதிவிட்டு போயிருந்தால் பரவாயில்லை. சரி ஆட்டோபிக்‌ஷன் என்றும் தலைப்பிட்டுவிட்டு ஒரு 'கொரில்லா' எழுதியது போல எழுதிவிட்டு அவரும் தப்பிப் போயிருந்திருக்கலாம். ஆனால் 'படுபட்சி'யை தொடர்ச்சியாக தனது சொந்தக்கதை என்று claim டிலுக்ஸன் செய்யும்போது மட்டுமே இப்படி ஆழ அலசி இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது.

(14) டிலுக்‌ஷன் தனது கதையைத் திரைப்படமாக்க வேண்டுமென ஒரு (முன்னாள்) போராளியிடம் சொன்னபோது, அவர் இந்தக்கதையை வன்னியிலோ அல்லது வடமாகாணத்திலோ நடப்பது மாதிரி மாற்றி எழுதினால் அதிகப் பேர் தயாரிப்பாளராக வருவார்கள் என்றும், தான் அதை மறுத்து என் சொந்தக்கதையை என் சொந்த ஊரில் நடப்பதாக மட்டுமே எடுப்பேன் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பார். உண்மையில் அவர் இதை கன்டாப் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னபோது, இதுதான் ஒரு படைப்பாளிக்கு வேண்டிய நிமிர்வு என நினைத்தேன். அவரின் அந்த உரைக்கு மனம் விரும்பி கையும் தட்டியிருந்தேன்.

(15) ஆனால் இப்போது டிலுக்‌ஷனின் விமானத் தயாரிப்பும், கைது செய்யப்படுதலும்  ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து புலிகளும் அழிக்கபட்ட பின்னரே நிகழ்ந்தது என்று அறியும்போது, புலிகளின் காலத்தில் நடந்ததாய்க்  நூலில் காலம்  மாற்றித் திருகுதாளம் செய்யும்போது, அந்தப் போராளி கேட்பதில் என்ன அநியாயம் இருக்கிறது  என்று கேட்கவே இப்போது தோன்றுகின்றது.

அவரின் நூலில், நிஜத்தில் உயிரோடு இருக்கும் தகப்பன் தாய் தங்கை எல்லோரையும் இறந்தவர்களாகக் காட்டி, இன்னும் எத்தனையோ விடயங்களை மாற்றிக்காட்டும்போது,  கிழக்கின் செங்கலடிக்குப் பதிலாக வடக்கின் ஆனந்தபுரத்தை காட்ட ஏன் தயக்கம் என்று ஒருவர் கேட்டால் டிலுக்‌ஸனிடம் என்ன பதில் இருக்கும்?

(16) இத்தகைய குழப்பங்களிடயேயும், அவர் ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னரேதான் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும், டிலுக்‌ஷனின் இந்த அனுபவத்தை நாம் செவிகொடுத்து கேட்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழனாக இருந்ததால் விமானிக்குப் படிக்க இலங்கையில் மறுக்கப்பட்டதும், பின்னர் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினியங் படிக்கும்போது தனியொரு தமிழனாக இருந்ததால் இனவாதத்தால்  அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டிய விடயங்களே.

தமிழர் என்ற அடையாளத்தால் வந்த இந்த இன ஒதுக்கல்,  யுத்தத்தின் பின் ஒரு தமிழருக்கு நடந்திருக்கின்றது என்பதுதான் நாம் கவனப்படுத்த வேண்டியது.

ஆக தமிழர்க்கு இலங்கையில் யுத்தம் முடிந்தபின் கூட அவர்களுக்குப் பிடித்த ஒரு துறையில் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கவில்லை, அதன் நிமித்தம் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர் என்பது நமக்கு டிலுக்ஸனின் வாழ்க்கை சொல்லும் ஒரு முக்கிய சாட்சியமாகும்.

யுத்தம் முடிந்த பின்னர் இவையெல்லாம் டிலுக்ஸனுக்கு நிகழ்ந்தாலும், அதன் நிமித்தம் அவர் கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளானதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்தக் காரணங்களால் டிலுக்‌ஸனின் கதை நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்ற பக்கத்திலே நான்  உறுதியாக நிற்கின்றேன் என்பதையும் இன்னொருமுறை (என் படுபட்சி குறித்த முதல் வாசிப்பை சரியாக விளங்காது அலட்டும்  சில அரைகுறை  அறிவுஜீவிகளுக்கு) சொல்லிவிடுகின்றேன்.

அதேபோல டிலுக்ஸன் இதை தேசியத்தின் பேரில் திரைப்படமாக்க வேண்டும் என்று தன்முனைப்புக் கொண்டவர் என்று ஒருதரப்பார் வைக்கும் கதையாடல்களையும் நான் நிராகரிக்க விரும்புகின்றேன். ஒருவர் தனது வாழ்வில்பட்ட அல்லல்களைச் சொல்ல விரும்பினால், நாம் ஏன் அதற்கு தேசியம்/மார்க்ஸியம்/மண்ணாங்கட்டி என்கின்ற அடையாளங்களைச் சூட்ட வேண்டும். எவராயிலும் அவர்களின் கதைகளை அவர்கள் சொல்லட்டுமே!

பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் கற்ற ஓர் ஆரம்பநிலை மாணவன் என்றவகையில் ஒவ்வொவரின் குரல்களும் எனக்கு முக்கியமானவை. ஆகவே டிலுக்ஸன் என்கின்ற தனிமனிதன் தாண்டி வந்த,  அவரது சொந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு முக்கியமானது. அந்தக் கதை சொல்லப்படவேண்டியது என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை அவர் எந்த வடிவத்தில் சொன்னாலும்  என் தார்மீக ஆதரவு அவருக்கு எப்போதுமுண்டு.

ஆனால் அதை ஒரு எடிட்டரின் குரலிலோ, அந்த எடிட்டரின்'இன்னொரு நூலின் குரலைப் போன்ற பாவனையிலோ அல்ல, டிலுக்‌ஷனின் அசலான குரலில் அவர் அதைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பேன்.

*****


குறிப்பு 01: 
இயன்றளவு ஆதாரங்களைத் தேடி, தெளிவாக எனது கருத்துக்களை முதல் பதிவிலும், இந்தப் பதிவிலும் முன்வைத்திருக்கின்றேன் என்று நம்புகின்றேன். இத்துடன் நான் 'படுபட்சி'நூலின் வாசிப்பு/ உரையாடல்களிலிருந்து முற்றாக விலகிக் கொள்கின்றேன்.

குறிப்பு 02:  
இது குறித்த எனது முதல் கட்டுரையில் 'எடிட் செய்பவரின் துருத்திக் கொண்டிருக்கும் குரல்' பற்றிக் குறிப்பிட்டிருப்பேன். அதற்கு நீட்சியாக அதற்கு நீட்சியாக அ.யேசுராசா அவர்கள் ஒரு பின்னூட்டம் எனது பதிவில் எழுதியிருந்தார். அந்தப் பின்னூட்டத்தை எங்கிருந்து அது எடுக்கப்பட்டது, எந்தப் பதிவின் நீட்சியில் அது எழுதப்பட்டது என்று எதுவும் சொல்லாது, யேசுராசாவின் கருத்தை மட்டும் எடுத்து ஒருவர் யேசுராசாவின் புகைப்படத்தோடு, 'எடிட்டிங்' குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கின்றார். அந்தப் பின்னூட்டத்தை எங்கிருந்து அது எடுக்கப்பட்டது, எந்தப் பதிவின் நீட்சியில் அது எழுதப்பட்டது என்று எதுவும் சொல்லாது, யேசுராசாவின் கருத்தை  மட்டும் எடுத்து ஒருவர் யேசுராசாவின் புகைப்படத்தோடு,   'எடிட்டிங்' குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கின்றார்.

அப்படி அடியும் நுனியும் இல்லாமல் எழுதுவது என்பது சரியான உரையாடலுக்கு வழிகோலாது. அந்த பதிவில் விருப்பக்குறிகள் இட்டிருக்கும் கல்விபுலப் பின்னணியில் இயங்கிய/இயங்கும் பெருமாள் முருகனோ அல்லது ராஜன்குறையோ, இப்படி அவர்களின் ஒரு மாணவர், உரிய reference கொடுக்காது எழுதியிருந்தால் அந்த மாணவரின் கட்டுரையை உடனேயே நிராகரித்திருப்பார்கள். அதுவே குறைந்தபட்ச எழுத்து அறமாகும்.

அத்துடன் அ.யேசுராசா அதைத் தனியே ஒரு பதிவாக தனது பக்கத்தில் எழுதவில்லை. எனது பதிவில் எழுதிய அவரது பின்னூட்டத்தை மட்டுமில்லை, யேசுராசாவின் புகைப்படத்தோடு சேர்ந்து எழுதுவது மிக மோசமான செயலாகும். ஒருவரின் personal space இற்குள் அத்துமீறுவதாகும்.

நானோ, யேசுராசாவோ ஒரு பிரதியை திருத்தும் எடிட்டர்களின் முக்கியத்துவத்தையோ அல்லது எடிட்டர்களின் அடிப்படைப்பண்புகள் என்னவென்றோ அறியாத 'பால்குடிக'ளோ அல்ல.  நானே தமிழில் எடிட்டர்கள் நமக்கு அவசியம் தேவை என்று சில பதிவுகளை எழுதியிருக்கின்றேன் [4].  ஒரு சிலரின் புனைவுகளை எடிட் செய்தும் கொடுத்திருக்கின்றேன்.

ஆனால் அந்தப் பதிவை  எழுதியவர் நமது இருவரின் கருத்தை வழமைபோல திருகி ஒரு 'டிப்ளோமட்'டிக்காக எழுதியிருக்கின்றார்.

ஒரு எடிட்டர் என்பவர் ஒரு பிரதியை முன்னுக்கு நிற்பவர் அல்ல, அவர் பிரதியின் திரைக்கு அப்பால் நின்று மறைமுகமாக வேலை செய்து ஒரு நூலைச் செம்மைப்படுத்துபவர். நானோ (யேசுராசவோ) சொல்வது, இந்த நூலில் உள்ள எடிட்டர் என்பவர், அந்த மூடுதிரையைத் தாண்டி  முன்னே துருத்திக்கொண்டிருக்கும் நிற்கின்ற அபாயத்தைப் பற்றியே ஆகும்.

நாங்கள் இருவரும் சொல்லவந்ததன் சரியான அர்த்தம், இப்படி 'பிய்த்து'க் கொண்டு போய் எழுதியவருக்குத் தெரியாதும் என்பதல்ல. அவர் அப்படித்தான் தனது நாசூக்கான ஆட்டத்தை எனக்குத் தெரிந்த காலத்தில் இருந்தே ஆடுபவர். ஆகவே நான் இந்த எடிட்டிங் குறித்து இனி எழுதுவது என்றால் மூன்றாம் தரப்போடு உரையாடல் செய்வதற்காக என்றால் மட்டும் எழுதுவேன்.

நிச்சயமாக என் பதிவில் இருந்து யேசுராசாவின் பின்னூட்டத்தை எந்த referenceம் இல்லாது எடுத்து போட்டு 'ஐயோ நான் படுபட்சியை எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக என்னைத் தாக்குகின்றனர்' என்று பாவனை காட்டுகின்றவருடன்  எனக்கு உரையாடல் சாத்தியமில்லை. இதை,  நான்  அவரோடு  கடந்தகாலங்களில் இவ்வாறான உரையாடல்களில் அனுபவங்களின் அடிப்படையில் வைத்துச் சொல்கின்றேன். நன்றி.

உசாத்துணைகள்:
[1]  படுபட்சி: மோசமான மொழியில் சொல்லப்பட்ட அசலான கதை:
https://www.facebook.com/elanko.dse/posts/10163083645923186

[2] டிலுக்ஸனின் கனடா நேர்காணல்:  https://www.facebook.com/reel/1367298351436228

[3] டிலுக்ஸனின் LinkedIn Profile: https://www.linkedin.com/in/deluxion-mohan-b00571101

[4] Genius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..
https://djthamilan.blogspot.com/2017/01/genius.html


(Nov 23, 2025)

 

0 comments: