நேற்று midnight mass இற்கு, தேவாலயத்துக்கு நத்தாரின் பொருட்டு சென்றிருந்தேன். தேவாலயத்துக்குள் சனம் நிரம்பி வழிந்தது.

இவ்வளவு விசுவாசமுள்ள ஊழியர்கள் கர்த்தருக்கு இருக்கின்றார்களா என எனக்கு வியப்பு வந்தது. அதுவும் நள்ளிரவில், -1 டிகிரி செல்சியஸ் பனிக்குளிருக்குள் இத்தனை இளைஞர், யுவதிகள் தொலைபேசியை வெளியே எடுக்காது பிரார்த்தனைகளில் ஊன்றித் திளைத்தது, 'இன்ஸ்டா' காலத்து அதிசயந்தான்.

திருப்பலி, கரோல் பாடல்கள் எல்லாம் முடிய ஃபாதர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ஆரத் தழுவுங்கள் என்று சொன்னார்.

எனக்கு இடதும் வலதும் பெண்கள் இருந்ததால், மிகுந்த கூச்சத்தால் 'எந்திரன்' ரோபோ ரஜினி போல இறுக்கமாக இருந்து தலையை மட்டும் இடதும் வலதும் அசைத்தேன்.

நான் வெளியே இருக்கும் உறைபனியை விட இன்னும் இறுக்கமாக இருப்பதைப் பார்த்தோ என்னவோ, யாரோ ஒருவர் 'நத்தார் வாழ்த்துகள், மகனே' என்றார். திருப்பி அவரை வாழ்த்துவதற்கு முன்னர் குரல் எங்கேயிருந்து வருகின்றது என்று சுற்று முற்றும் பார்த்தேன்.

அப்படி ஒருவர் பக்கத்தில் இருக்கும் அசுமாத்தம் தெரியவில்லை. அண்ணாந்து கூடப் பார்த்தேன். என் தேடலைப் பார்த்து அதே குரல், 'மகனே இங்கேதான் இருக்கின்றேன்' என்றது.

அப்போதுதான் தெரிந்தது, அது சிலுவையில் அறையப்பட்ட தேவகுமாரனிடமிருந்து வந்தது என்பது .

எனக்கு இப்போது எப்படி இயேசுவை திருப்பி வாழ்த்துவது என்று குழப்பம் வந்தது. எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமென, 'கடவுளின் பெயரால் உங்களை நானும்  வாழ்த்துகின்றேன் தேவகுமாரனே' என்றேன்.
Uploaded Image
இந்தப் பொழுதில் அவர் இரட்சகராக மாறவில்லைத்தானே. இப்போதுதானே பிறந்திருக்கின்றார். அவரை ஒரு குழந்தை போல ஆராதிக்கலாந்தானே. எனவே நான் திரும்பவும் 'கடவுளிள் பெயரால் குழந்தை இயேசுவே உங்களை ஆசிர்வதிக்கின்றேன், இந்த முறையாவது நீங்கள் சிலுவையில் அறையப்பட்டாது நல்லுலகில் பிறந்து வளரவேண்டும், முக்கியமாக பெத்லஹம் பக்கம் மட்டும் போகவேண்டாம், அந்தப் பகுதியில் இப்போதும் போர் நடந்து கொண்டிருக்கின்றது' என்றேன்.

'மகனே, என் பிறப்பு குறித்து நீ கவலைப்பட வேண்டாம். நான்  பிறந்து 2000 ஆண்டுகள் ஆனபின்னும் ஏன் நான் ஒவ்வொரு காலத்திலும் தேவையாக இருக்கின்றேன் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றாயா? ஏன் என்றால் இந்த அற்ப மானிடர்கள் இன்னும் திருந்தவே இல்லையே. அதனால்தான் திருப்பத் திருப்பப் பிறந்து கொண்டிருக்கின்றேன்.'

'அப்படியெனில், அந்த மூன்றாம் நாளில் திருப்பி உயிர்த்தெழுந்தது?' என்று இழுத்தேன்.

'அது, ஈஸ்டர் பெருநாளில் கேட்க வேண்டியது. எல்லாக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான்  என்ன உங்களின் 'கடல்' எழுதிய ஆசிரியரா?' என்றார் இயேசு.

தேவகுமாரனே இலக்கியம் பேசத் தொடங்கினால், இது பிறகு ஆபத்தாகப் போய் முடிந்துவிடும் என்று எண்ணி கதையை வேறு பக்கம் திருப்ப முடிவு செய்தேன்.

'இயேசுவே, இந்த நன்னாளில் உங்களிடம் இந்த வருடத்தில் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு, உங்களைப் போன்று ஒரு மாசற்ற குழந்தையின் மனதோடு வரும் புதுவருடத்தை அனுபவிக்க விரும்புகின்றேன். என் பாவங்களிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள்' என்றேன்.

அவரோ மிகுந்த ஆதூரத்துடன் அறையப்பட்ட சிறையில் இருந்து இறங்கி வந்து என் தலையைக் கோதி, 'மகனே உன் பாவங்கள் அனைத்திலிருந்தும் நீ விடுதலை அடைந்தாய்' என்று ஆசிர்வதித்தார்.

அப்படி ஆசிர்வதித்து விட்டு, 'இனி அடுத்த வருடத்திலிருந்து நீ பாவமன்னிப்புக் கேட்க என் தேவாலயம் வரத் தேவையில்லை' என்றார்.

'கர்த்தரே, நீங்களுமா என்னைக் கைவிட்டு விட்டீர்கள், இது நியாயமா' என்று நான் அலறினேன்.

'இல்லை மகனே, உன்னைப் போன்ற ஒரு விசுவாசியை நான் எப்படிக் கைவிடுவேன். பிறகு எப்படி எனக்குப் பொழுது போகும்?'

'அப்படியாயின், ஏன் பாவமன்னிப்புக் கேட்க இனி வரக்கூடாது என்கின்றீர்கள்?'

'அதுவா, என் பாவமன்னிப்புப் பட்டியலில் இருக்கும் எல்லாப் பாவங்களையும் நீ செய்துவிட்டாய். இனி நீ எந்தப் பாவத்தைச் செய்தாலும் அது பழைய பாவமாகத்தான் இருக்கும். அதற்கு மன்னிப்புத் தேவையே இருக்காது. அதுதான் பாவமன்னிப்பு உனக்கு இனி தேவை இல்லை என்கின்றேன்' என்றார் இயேசு.

எனக்கு இப்போது 'அப்பாடா', என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அப்படியே எனக்குள் தோன்றிய சந்தேகத்தையும் கேட்டேன். 'தேவகுமாரனே, நான் அவ்வப்போது தியானம் என்று புத்தரிடமும், என்னை அறியாமலே என் வாய் 'பால் காவடி சுமந்து ஓடினேன்' என்று முருகனைப் பாடுவதும் உங்களைத் தொந்தரவுபடுத்தாதா என்று கேட்டேன்.

'இல்லை மகனே, நீ எது செய்தாலும் ஒரு விடயத்தில் நீ மாறமாட்டாய் என்பதில் எங்கள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்'

'எதைச் சொல்கின்றீர்கள்?'

'எங்கு போனாலும் எதைப் பாடினாலும் நீ ஒருபோதும் திருந்தப் போவதில்லை, உனக்கு மீட்சி கிடைக்கப் போவதில்லை'

கர்த்தர் இப்படிச் சொன்னபோது என் மனம் கலங்கினாலும், அதுதானே உண்மையென்று பிறகு தெளிந்துவிட்டிருந்தேன்.

இதற்குள் இயேசுவும் திரும்பவும் அவர் அறையப்பட்ட சிலுவையில் ஏறுவதற்காக நடக்கப் போனார்.

அப்போதுதான், அப்பமும் வைனும் ஃபாதரிடமிருந்து வாங்குவதற்காக நமது 'காலம்' செல்வத்தார் எழும்பிப் போவதைக் கண்டேன்.

'கர்த்தரே, எனக்கு பாவமன்னிப்பு அளித்ததுமாதிரி நமது 'காலம்' செல்வத்தாருக்கு ஏன் நீங்கள் விடுதலை அளிக்கக் கூடாது. ஒரு தீவிர கத்தோலிக்கரான அவரை நீங்கள் இந்த வயதிலும் இப்படி வருத்தி எடுக்க வேண்டுமா?'

'அவர் செய்த பாவங்களில் பெரும் பாவம் எதுவென்று தெரியுமா?' என்று கேட்டார் இயேசு.

'தெரியாதே?'

'அந்தப் பெரும் பாவம் அவர் இப்போதும் 'காலம்' என்கின்ற சஞ்சிகையை வெளியிட்டு வாசிப்பவர்களைச் சித்திரவதை செய்து கொண்டிருப்பதுதான்'

'இயேசுவே, நானும் அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் என்பதால் அந்தக் கொடுஞ்செயலின் பாரத்தை உணரமுடிகிறது. ஆனால் செல்வத்தார் பாவம். எனக்கு இந்த வருடத்தோடு பாவமன்னிப்பு இனி வேண்டாம் என்று விலக்கு அளித்ததுபோல, செல்வத்தார் மீதும் பரிதாப்பட்டு அவருக்கும் பாவமன்னிப்பிலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும்' என்றேன்.

'என்னாலும் ஒருகட்டத்தில் முடியாமல், மிஸ்டர் செல்வம், உங்களுக்கு இனி பாவமன்னிப்புத் தேவையில்லை. நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு இதழ் என வெளியிடும் காலம் இதழையும் மன்னித்துவிட்டேன். இனி தேவாலயத்துக்கு வரத் தேவையில்லை என்றேன். ஆனால்...'

'என்ன கர்த்தரே,  எல்லாம் செய்ய முடியும் நீங்களே ஆனால் என்று இழுக்கின்றீர்கள்'

'இல்லை. இவர் 'காலம்' இதழை ஒவ்வொரு முறையும் வெளியிட அதில் எழுதுகின்றவர்கள் செய்யும் புதிய பாவங்களும் இவரின் கணக்கில் எழுதப்படுகின்றது. அதை என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஒவ்வொரு வருடமும் அவர் பாவமன்னிப்பு கேட்கத்தான் வேண்டும்' என்று சொல்லிவிட்டு இயேசு விடுவிடுவென்று சிலுவையில் போய் தன்னை அறைந்து கொண்டுவிட்டார்.

*