கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புன்னைப்பூ குறிப்புகள்

Tuesday, December 16, 2025

 

Eden

1930 களில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். முதலாம் உலகப்போர் நடந்து முடிந்த வெறுமையில் மனித இருப்பின் சாத்தியங்களைத் தேடி ஜேர்மனியிலிருந்து இருந்து கலாநிதிப் பட்டத்தை வைத்திருக்கும் ஒருவர் தனது துணையோடு ஆளற்ற தீவுக்குச் செல்கின்றார். இது தென்னமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் தீவு. மகிழ்ச்சியும் அமைதியும் நிரம்பிய மனித வாழ்வு இங்கே துளிர்க்குமென தனது கட்டுரைகளை தங்கள் வாழ்வை முன்னிட்டு எழுதுகின்றார்.

Uploaded Image

இந்தக் கட்டுரைகளில் பாதிப்பில் வேறு சிலர் குடும்பமாகவும், நண்பர்களாகவும் சேர்ந்து அத்தீவுக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்கள், மனிதர்கள் எங்கு போனாலும் 'மனிதத்தன்மை'களோடே இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. ஆனால் அதற்காக இவ்வளவு விலை கொடுக்கவேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

இது நான் இங்கே எனது பதினொராம் வகுப்பு ஆங்கிலப் படத்தில் படித்த 'Lord of the Flies' ஐ நினைவுபடுத்தியது. அதில் ஒரு விமான விபத்தால் ஒரு சிறுவர்கள் கூட்டம் ஒரு ஆளற்ற தீவில் சிக்கிவிடுகின்றார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் குழந்தை இயல்புகளை இழந்து 'வளர்ந்தவர்'களின் மனோநிலையான கொலை செய்யுமளவுக்குப் போய்விடுவார்கள்.

நாம் குழந்தைப் பருவத்திலேயே -கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால்- இப்படித்தான் சகமனிதர்களோடு உறவாடுவோமா என்று என்னை அந்தக் காலத்தில் யோசிக்க வைத்த ஒரு நாவலது. அது திரைப்படமாகவும் பின்னர் எடுக்கப்பட்டிருந்தது.

'Eden' திரைப்படத்தில் இப்படி அங்கே போன ஒரு குடும்பத்தினரின் சந்ததியினரே இன்றும் அத்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மற்ற அனைவரும் அந்தக்காலத்தில் கொல்லப்பட்டோ, வெளியேற்றப்பட்டோ செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு அத்தீவுக்குச் சென்ற முதல் தலைமுறைப் பெண் ஒருவர் எழுதிய நூலை வைத்தே இத்திரைப்படம் படமாக்கப்படவும் செய்யப்பட்டிருக்கின்றது.

*

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில மொழிபெயர்ப்பு

Uploaded Image


ஐந்து தனித்தனி நாவல்களாக 12 வருட இடைவெளியில் வெளிவந்த தேவகாந்தனின் படைப்புக்கள் பின்னர் "கனவுச்சிறை" என மொத்தமாகத் தொகுக்கப்பட்டு ஒரு பெரும் நாவலாக வெளியிடப்பட்டது. இப்போது ஆங்கிலத்தில் ஐந்து தனித்தனி நாவல்களாக நேத்ராவினால் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த ஆங்கில நாவல்களுக்கான வெளியீட்டு விழா இன்று இனிதாக நடைபெற்றது. நூலாசியரிடமும், மொழிபெயர்ப்பாளரிடமும் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டேன்.

இன்று இது தமிழ்ச்சூழலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உடைய நிகழ்வல்ல. ஆனால் எதிர்காலத்தில் இந்நூலை ஆங்கிலத்தில் வாசிக்கப்போகும் ஒரு தலைமுறை கடந்த காலத்தில் தம் மூதாதையர் வாழ்ந்த  வாழ்வின் வேர்களைப் பதுக்கி வைத்த ஒரு படைப்பென கனவுச்சிறையை நிச்சயம் கொண்டாடச் செய்யும் என்பது என் நம்பிக்கை.

தேவகாந்தனுக்கும், நேத்ராவுக்கும் வாழ்த்துகள்!

*

Mango

Uploaded Image

ஓர் எளிமையான காதல் கதையென இதைச் சொல்லலாம். டென்மார்க்கிலிருந்து ஸ்பெயினில் இருக்கும் ஒரு மாமரப் பண்ணை உள்ள நிலத்தை வாங்க ஒரு நிறுவனத்தால் அனுப்பப்படும் பெண்ணின் கதை. எனக்கு மாம்பழம் பிடிக்கும் என்பது மட்டுமில்லை, ஸ்பெயினின் மலேக்காவும் பிடித்த நகரம் என்பதால் சுவாரசியமாக இந்தப் படத்தைப் பார்த்தேன். சிலவேளைகளில் நாம் தேடும் சந்தோசத்தை, நாம் துயரத்தில் தத்தளிக்கும் பொழுதுகளிலும் கண்டடைய முடியுமென்று நம்பிக்கை தரும் எளிமையான திரைப்படம். காதல் என்பது ஓர் அழகான உணர்வு, வாழ்க்கையின் எந்தப் பருவத்திலும் மலரக்கூடியது என்று நம்பக்கூடிய என்னைப் போன்ற மென்னிதயம் கொண்டவர்களை மட்டும் இப்படத்தைப் பார்க்கப் பரிந்துரைப்பேன்.

*

A House of Dynamite

நாம் வாழும் உலகில் அணுகுண்டுப் போர் தொடங்கினால் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியது இத்திரைப்படம். ஆனால் இங்கே அணுகுண்டு வெடிப்பதோ அதன் அழிவோ அப்படிப்பட்ட எதுவோ காட்டப்பட்டிருக்காது. ஓர் அணுகுண்டு அது எங்கிருந்து அனுப்பப்படுகின்றது என்று தெளிவில்லாது அமெரிக்காவின் சிகாகோவை நோக்கி வரத் தொடங்குகின்றது. அமெரிக்காவின் அனைத்து ஏவுகணைத் தடுப்பு அரண்களையும் தாண்டி அந்த அணுகுண்டு ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்புக்குள் நுழைகின்றது. அதை எப்படி அமெரிக்கா எதிர்கொள்கின்றது என்பதைப் பற்றிய படம்.

Uploaded Image


நாம் எல்லோரும் பாதுகாப்பான வீட்டில் இருக்கின்றோம், ஆனால் எம்மைச் சுற்றி எப்போதும் என்றாலும் வெடிக்கக்கூடிய வெடிமருந்துக் குவியல்தான் இருக்கின்றது, அதை மறந்துவிடாதீர்கள் என்று நம்மை எச்சரிக்கின்ற ஒரு திரைப்படம்.  'The Hurt Locker', 'Zero Dark Thirty'  திரைப்படங்களை எடுத்த Kathryn Bigelowவின் நெறியாள்கையில் வந்திருக்கின்ற ஒரு படம்.

***

0 comments: