நேற்று (ஜூலை 19, 2025) மாலை, இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பாகிய 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'  வெளியீடு ஸ்காபுரோவில் நடைபெற்றது. பா.அ.ஜெயகரன், அரசி விக்னேஸ்வரன், மைதிலி தயாநிதி, இலங்கதாஸ் பத்மநாதன், செல்வம் அருளானந்தம் ஆகியோர் நூல் குறித்து செறிவாக உரையாற்றினர்.   சிறுகதையொன்றின் ஒரு பகுதியை நிரோஜினி வாசித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன், நூலையும் இளங்கோவின் படைப்புகளைப் பதிவேற்றப்பட்டிருந்த இணையத்தளத்தையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதற் பிரதி நூலாசிரியரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
Uploaded Image

நீண்ட நாட்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.  'காலம்' செல்வத்தார், சிறுகதை நூலைக் குறித்தல்லாமல் இளங்கோவைப் பற்றியே சிரிப்பலைகளினூடே உரையாற்றிக் கொண்டிருந்தார். நான் நெடுந்தூரம் செல்லவேண்டியிருந்த்தால், இருளத் தொடங்கவும் (ஒன்பது மணிக்கு சாவதானமாக இருள்கிறது) இளங்கோவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். 

அதன் பிறகாவது செல்வம் அண்ணா புத்தருக்குள் வந்தாரா அறியேன். ஆனால், உரையினிடையில் என்னைப் பற்றி 'புத்தகப் பிசாசு' என்று அவர் குறிப்பிட்டதாக பிறகு கேள்விப்பட்டேன்.  

Uploaded Image

செல்லவேண்டிய பேருந்தை சில நொடி தாமதத்தால் தவறவிட்டு, நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த என்னை நண்பர் மீராபாரதி வ.க.செ யும் அவரது இணையரும் தமது காரில் ஏற்றிக்கொண்டு வந்து வீடு சேர்த்தனர். நன்றி.

மனவருத்தம் என்னவென்றால், "இனிமேல் இங்குதான் இருக்கப்போகிறேன்" என நான் கூறியதை, என்னோடு கதைத்த யாருமே நம்பவில்லை என்பதுதான். 

கேசரியும் வடையும் சுவையாக இருந்தன. கூட்டங்களுக்குப் போய் வெகுநாட்களாகிவிட்டன ஆதலால் அவற்றைச் சாப்பிட இடைவேளை விடுவார்கள் என்பதை மறந்து இடையிலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டேன். இனி கவனமாக இருக்கவேண்டும்.

கூட்டம் முடியும்வரை இருந்திருந்தால் நிரோஜினி (Nirojini Robert)  பாடுவதைக் கேட்டிருக்கலாம்.  'மிஸ்' பண்ணிவிட்டேன்.  இளங்கோவின் புத்தகத்தை விரைவில் வாசித்துவிட்டு அதுபற்றி எழுதுகிறேன்.

***